
தெய்வ மனுஷிகள்வெ.நீலகண்டன் - படங்கள் : ம.அரவிந்த், உ.பாண்டி
அந்த ஊர்ல கீழத்தெரு, மேலத்தெருன்னு ரெண்டு தெருக்கள் உண்டு. கருப்பாயி வீடு கீழத்தெருவுல. பாப்பா வீடு மேலத்தெருவுல. பாப்பா குடும்பம் ரொம்ப ஆசாரம். அப்பன் ஊர்க்கோயில்ல குருக்கள். யாரு வீட்டுலயும் அன்னம் தண்ணி புழங்க மாட்டாக. யாரையும் தொட்டுப் பேச மாட்டாக. குறிப்பா, கீழத்தெரு ஆட்கள் கூட பேச்சு வார்த்தையே இருக்காது.

கருப்பாயியோட அப்பன், மரம் வெட்டுற தொழிலாளி. காலையில கோடரியை எடுத்துக்கிட்டுக் காட்டுக்குப்போனா, ராத்திரிதான் திரும்புவாரு. கூடவே சாராய நாத்தமும் வரும்.
வெவசாயம்தான் அந்த ஊருக்கு ஜீவாதாரம். எல்லாம் வானம் பார்த்த பூமி. அப்பப்போ கொஞ்சம் மழைத்தண்ணி மேலயிருந்து விழுந்தாத்தான் வெவசாயம். இல்லேன்னா, எல்லாரும் காட்டுக்கு வெறகு வெட்டப்போக வேண்டியதுதான். பாப்பா அந்தூர்ல இருக்கிற பள்ளிக்கூடத்துல படிச்சா. கருப்பாயிக்குப் படிப்பு வாய்க்கலே. வீட்டுல ஏழெட்டு ஆட்டுக்குட்டிக இருந்துச்சு. அதைக் காட்டுப்பக்கம் விட்டு மேச்சுக்கொண்டு வருவா.
ஊர்க்கோயிலு, காட்டுக்குப் பக்கத்தாலே இருக்கு. பள்ளிக்கூடம் இல்லாத நேரத்துல கோயில் குருக்களா இருக்கிற அப்பங்காரனோட கோயிலுக்கு வந்திருவா பாப்பா. கருப்பாயி ஆட்டுக்குட்டிகளை காட்டுக்குள்ள பத்தி விட்டுட்டுக் கோயிலுக்குப் பக்கத்தால இருக்கிற ஆலமர நிழல்ல உக்காந்திருப்பா.
அப்படி வர்ற நேரங்கள்ல, மரத்தடியில உக்காந்திருக்கிற கருப்பாயிகூட பாப்பாவுக்கு சிநேகமாகிப்போச்சு. ரெண்டு புள்ளைகளும் மரத்தடியில உக்காந்து கள்ளங்கா, சில்லுக்கோடு வெளையாடுவாக. சாமிக்குப் படைச்ச சாதத்தைக் கொண்டுவந்து கருப்பாயிக்குக் குடுப்பா பாப்பா. சில நாள் கருப்பாயி ஊறவெச்ச பச்சரிசி கொண்டு வருவா. ரெண்டு புள்ளைகளும் உக்காந்து திங்குங்க.
ஊர்க்கோயிலுக்குள்ள கீழத்தெரு ஆட்கள் யாரும் நுழைய மாட்டாக. கருப்பாயிக்கு, `அந்தக் கோயிலுக்குள்ள என்ன இருக்கும்'னு பாக்க ஆசையா இருக்கும். ஒருநா, பாப்பாக்கிட்ட அந்த ஆசையைச் சொல்ல, அப்பங்காரன் இல்லாத நேரத்துல ஒருக்கா அந்தக் கோயிலுக்குள்ள கூட்டிக்கிட்டுப்போய் சாமி யைக் காட்டுனா. ரெண்டு புள்ளைகளும் அவ்வளவு அன்பா, அந்நியோன்யமா இருந்துச்சுக. ஆனா, இவுக நட்பு ஊருக்குள்ள யாருக்கும் தெரியாது. மேலத்தெருப் புள்ள, கீழத்தெருப் புள்ளக்கிட்ட சவகாசம் வெச்சுக்கிறதை யாரும் ஏத்துக்க மாட்டாகல்ல.

காலம் ஆக ஆக அந்தப் புள்ளை களைப்போலவே, அதுக நட்பும் வளர்ந்துச்சு. பாவாடை சட்டை போட்டு உலாவிக்கிட்டுத் திரிஞ்ச பிள்ளைக பெரிய மனுஷியாகி தாவணிக்கு மாறுச்சுக. பாப்பா, கோயிலுக்குப் போறேன்னு சொல்லிட்டுக் காட்டுப்பக்கம் வருவா. கருப்பாயி ஆடு மேய்க்கப் போறேன்னு சொல்லிட்டு வருவா. ரெண்டு புள்ளைகளும் காட்டு நெல்லி, எலந்தைப் பழம்னு பழங்களைப் பறிச்சுத் தின்னுட்டு ஆலவிழுதுல ஊஞ்சல் கட்டி விளையாடித் திரியுங்க.
ஒருக்கா, பாப்பாவும் கருப்பாயியும் விளையாடிக்கிட்டிருக்கிறதை பாப்பாவோட அப்பங்காரன் பாத்துப்புட்டான். பாப்பாவை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயி, முற்றத்துல நிறுத்தி தண்ணி ஊத்திக் குளிப்பாட்டி, `இனிமே, கீழத்தெரு புள்ளக்கிட்ட பேச்சு வார்த்தை வெச்சுக்கிடப்புடாது’னு சத்தியம் வாங்கிக்கிட்டான்.
தன்னோட சாதி சனத்துக்கிட்டுச் சொல்லி, கருப்பாயி அப்பங்காரனைக் கூப்பிட்டு, `இனிமே ஒம்பொண்ணு எங்க பொண்ணுக்கிட்ட பேச்சுவார்த்தை வெச்சுக்கப்புடாது’ன்னு சொல்லி மிரட்டி அனுப்பிட்டாக. அவன், சாராயத்தைக் குடிச்சுப்புட்டு, `மேலத்தெரு புள்ளக்கிட்ட உனக்கென்னடி சவகாசம்’னு கருப்பாயியைப் போட்டு அடிச்சான்.
ஆனாலும், பாப்பாவால கருப்பாயியைப் பாக்காம இருக்க முடியலே. கருப்பாயிக்கும் பாப்பாவப் பாக்காம பொழுது ஓடலே. அப்பப்போ, ஆள் அசந்த நேரத்துல ரெண்டு புள்ளைகளையும் சந்திச்சுப் பேசிக்கிடுச்சுக.
ஊருக்குள்ள அஞ்சாறு வருஷமா மழை பேயல. கீழத்தெரு ஆட்கள் மாரியம்மனுக்கு தீச்சட்டி எடுத்தாக. மேலத்தெரு ஆட்களும் பூசை, புனஸ்காரம்னு ஏதேதோ செஞ்சு பாத்தாக. ஆனா, அந்த வருணன் கண்ணைத் தெறக்கலே. காத்துலகூடப் பொட்டு ஈரமில்ல. கம்மாயெல்லாம் வறண்டு தரை காஞ்சுகிடக்கு. வயக்காடெல்லாம் புல்லு, பூண்டு இல்லாம தரிசா மாறிப்போச்சு. காடுகள்ல மரங்கெல்லாம்பட்டு, மக்கி விழுகுது. எந்த எடத்துலயும் பச்சையில்லை. காட்டுக்குள்ள இருந்து விலங்குகள்லாம் வெளியில வந்து, தீனி தேடுதுக. ஆடு, மாடுகளுக்கு காஞ்சுபோன வைக்கோல் கூட கிடைக்கலே. ஒண்ணு, ரெண்டா செத்துச்செத்து விழுக ஆரம்பிச்சுச்சு. குடிக்கத் தண்ணி பஞ்சமாகிப்போச்சு. ஊருவிட்டு ஊருபோயி நூறடி கெணத்துல கஷ்டப்பட்டுக் குடம்போட்டு இழுத்துக் கொண்டுவந்து சேத்தாக பொம்பளைக. ஒருக்கா, `எங்களுக்கே தண்ணியில்ல... இனிமே வராதிய’ன்னு அந்த ஊரு ஆட் களும் சொல்லித் தடுத்துட்டாக. இருந்த இருப்பெல்லாம் கரைய, அடுத்த நாள் சாப்பாட்டுக்கு என்ன செய்யறதேன்னு மக்களெல்லாம் தவியா தவிச்சு நின்னாக.

இனிமே, இந்த ஊர்ல இருந்து பிழைக்க முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. கீழத்தெரு ஆட்கள்லாம், `மருதைப் பக்கம் போயி பிழைச்சுக்கலாம்’னு முடிவு செஞ்சாங்க. கருப்பாயியோட ஆயி, அப்பன் மிஞ்சியிருந்த ஆட்டுக்குட்டிகளை ஓட்டிக்கிட்டு மருதைக்குப் புறப்படத் தயாரானாக. கருப்பாயிக்குப் பாப்பாவை விட்டுட்டுப் போக விருப்பமில்லை. `பாப்பாவை விட்டுட்டு வரமாட்டேன்... நான் இங்கேயே இருந்திடுறேன்’னு அழுதா... ஆனா, அவ பேச்சை யாரும் கேட்கலே.
கருப்பாயி ஊரைவிட்டுப் போப்போ றான்னு தெரிஞ்சதும் பாப்பாவால தாங்க முடியலே. `நானும் கருப்பாயியோட மருதைக்குப்போறேன்’னு அழுதா. அவளை அடிச்சு வீட்டுக்குள்ள அடைச்சு வெச்சுட்டாக.
`மக்களுக்கெல்லாம் மண்ணை விட்டுப் போறோம்’னு வருத்தம். `கருப்பாயிக்கு பாப்பாவை விட்டுப்போறோமே’னு வருத்தம். மாட்டு வண்டியில சாமான் செட்டை யெல்லாம் ஏத்திக்கிட்டு கருப்பாயி குடும்பம் கிளம்பிருச்சு. மாட்டு வண்டி முன்ன நடக்க, எல்லாரும் பின்ன நடக்குறாக. கருப்பாயி காலுதான் நடக்குது. மனசு, பாப்பாத்தியைத் தேடித்தேடி ஓடுது.
ராத்திரியாயிருச்சு. காடு மலையெல்லாம் கடந்து வந்த அசதி... இன்னும் தொலைதூரம் போவணும். ஒரு மரத்தடியில மாட்டு வண்டியை நிறுத்தி எல்லாரும் ராத்தங்குனாக. கருப்பாயியோட ஆத்தாகாரி, கல்லெடுத்து வெச்சு அடுப்பை மூட்டி கொஞ்சம் கேவுரு மாவைப் போட்டுக் களி கிண்டுனா. எல்லாரும் சாப்பிட்டு முடிச்சாக. `விடியக் காத்தால கிளம்புவோம்... இப்போ எல்லாரும் கொஞ்சநேரம் கண்ணசருங்க’னு சொன்னான் கருப்பாயி அப்பன். ஆளுக்கொரு பக்கமா படுத்துட்டாக.
கருப்பாயிக்கு உறக்கம் வரலே. பாப்பா ஞாபகமாவே இருந்துச்சு. பிழைப்பு நாடி போயிட்டா, திரும்பவும் சொந்த ஊருக்கு வரப்போக ஒண்ணுமில்லே... இனிமே வாழ்க்கையில பாப்பாவை பாக்கவே முடியாதே..? தவிச்சுப்போனா கருப்பாயி.
நடுச்சாமம் ஆச்சு. சுத்தும் முத்தும் பாத்தா. நடந்துவந்த களைப்புல அப்பனும் ஆத்தாளும் அசந்து தூங்குனாக. மெள்ள எழுந்திரிச்சா. வந்த திசையை நோக்கி ஓட ஆரம்பிச்சா. அந்த வனத்துக்குள்ள பயமே இல்லாம ஓடுறா. `பாப்பா... பாப்பா'ன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது.
பாப்பா நிலமையும் அப்படித்தான். வீட்டுக்குள்ள அவளால இருக்க முடியலே. `கருப்பாயியை இனிமே பாக்கவே முடியாது’னு நினைச்சுக்கூடப் பாக்க முடியலே. அப்பனும், அம்மாவும் அசந்த நேரத்துல வீட்டை விட்டுக் கிளம்பிட்டா. கிளம்பி கருப்பாயி போன திசையில ஓடியாறா.
விடிஞ்சிருச்சு. `கருப்பாயியைக் காணோம்’னு எல்லாரும் பதறிப்போய் தேடுறாக. இங்கே பாப்பாவையும் காணோம். அவுக ஆயி அப்பனும் அலறி அடிச்சுக்கிட்டுத் தேடித்திரியுறாக.
பாப்பாவைத் தேடி ஓடிவந்த கருப்பாயியும் கருப்பாயியைத் தேடி ஓடிவந்த பாப்பாவும் ஒரு இடத்துல சந்திச் சுக்கிட்டாக. ரெண்டு புள்ளைகளும் கட்டிப் பிடிச்சு அழுகுதுக... `நான், சாவுல கூட உன்னைவிட்டுப் பிரியமாட்டேன்’னு கருப்பாயி சொல்றா... `நீ எங்கே போறியோ அங்கேயே நானும் வந்திடுறேன்’னு பாப்பா சொல்றா... `எப்படியும் நம்மைத் தேடி வந்து கண்டுபுடிச்சுருவாக. அவுக கண்படாத இடத்துக்குப் போயிறணும்’னு ரெண்டு புள்ளைகளும் கைகோத்துக்கிட்டு கால் போன திசையில வேகவேகமா நடக்குதுக.
பாப்பாவைத் தேடி ஊருக்குத்தான் போயிருப்பான்னு கருப்பாயியோட ஆயி அப்பன் தெரிஞ்சுகிட்டாக. பாப்பா வீட்டுலயும் கருப்பாயியைத் தேடித்தான் போயிருப்பானு முடிவு பண்ணி ரெண்டு குடும்பமும் தேடி வாராக. காடு, மலையெல்லாம் தேடியும் கண்டுபிடிக்க முடியல.
ஓர் இடத்துல, பெரிய கெணறு. அங்கே ஊர் சனமெல்லாம் கூடி நிக்குது. பாப்பா குடும்பமும் கருப்பாயி குடும்பமும் கூட்டத்தை விலக்கிட்டுப் போய் பாக்குறாக. ஏரிக்குள்ள ரெண்டு புள்ளைகளும் பொணமா மிதக்குதுக. `இனியும் எங்களைப் பிரிச்சுடாதீங்க’னு சொல்ற மாதிரி கையக் கோத்துக்கிட்டுக் கிடக்குதுக.
ரெண்டு குடும்பமும் நிலை குலைஞ்சு போச்சு. எல்லாரும் அழுது புலம்புறாக. ஊராளுக எல்லாம் சேந்து, `ரெண்டு புள்ளைகளையும் பிரிக்கக் கூடாது’னு உறுதி வாங்கிக்கிட்டாக. ரெண்டு குடும்பமும் ஒண்ணாச்சேந்து கருப்பாயி யையும் பாப்பாவையும் ஒரே இடத்துல தகனம் செஞ்சாக.
கொஞ்சநாள் போச்சு... திடீர்னு ஊர்ல மழை பேஞ்சுச்சு. அஞ்சாறு வருஷ மழையை ஒண்ணாச் சேத்துக் கொட்டுச்சு வானம். வெடிச்சுக்கிடந்த ஏரி, குளமெல்லாம் தண்ணியால நிறைஞ்சுபோச்சு. வயக்காடு, கொல்லைக்காடெல்லாம் பசுமை பூத்து ஊரே புதுசா மாறிப்போச்சு. பிழைக்கப் போன சனங்கல்லாம் திரும்பவும் ஊருக்கே வந்துட்டாக. `எல்லாம் கருப்பாயி - பாப்பா வோட கருணைதான்’னு எல்லாரும் நம்பி னாங்க. ரெண்டு புள்ளைகளுக்கும் பீடம் வெச்சு புதுசா அறுத்த நெல்லரிசியில படைப்புப் போட்டு சாமியாக் கும்பிட ஆரம்பிச்சாக.
புதுக்கோட்டை மாவட்டத்துல இலுப்பூர் பக்கமா ஈஸ்வரன்கோவில்னு ஓர் ஊரு இருக்கு.அங்கே பீட வடிவத்துல உக்காந்திருக்காக பாப்பா. அவளை, பாப்பாத்தியம்மா, பாப்பாத்தியம்மான்னு ஊரே கொண்டாடுது. `அதுதான் கருப்பாயியும் பாப்பாவும் பிறந்து வாழ்ந்த ஊரு’ன்னு சொல்றாக.
ராமநாதபுரம் மாவட்டம், மேலசிறு போதுங்கிற ஊர்ல உக்காந்திருக்கா கருப்பாயி யம்மா. கருப்பாயியும் பாப்பாவும் ஓடிவந்து சந்திச்சுக்கிட்டது அந்த ஊருலதானாம்.
கருப்பாயியம்மா முகத்துல அன்பும் நேசமும் ஏக்கமும் நிரம்பி வழியுது. வழமை மாறாம, ரெண்டு புள்ளைகளுக்கும் வருஷா வருஷம் புத்தரிசி பொங்கல் வெச்சு படைப்பு போட்டுக்கிட்டுத்தான் இருக்காக.
- வெ.நீலகண்டன்
படங்கள் : ம.அரவிந்த், உ.பாண்டி