
சரவணன் சந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்
கசப்பைத் தாண்டி அடியாழத்தில் இனிப்பைப் பொதித்துவைத்திருக்கும் வேப்பம்பழங்களை அருளும் மரம் ஒன்றின் உச்சாணியில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆடியபடி அவரது கதையைச் சொன்னார். அந்தக் கதையைச் சொல்லும்போது, அவருடைய தன்னம்பிக்கையை உடல்மொழி ஊஞ்சலின் ஆட்டத்தை மீறி வெளிப்படுத்தியபடி இருந்தது. நாற்பது வயது ஆன அந்த நண்பரை, அதற்கு முன் நண்பர்களின் கூடுகைகளில் சந்தித்திருக்கிறேன். ஒரு நிமிடம்கூட அவரை ஓர் இடத்தில் இழுத்துப் பிடித்து அமரவைக்க முடியாது. துறுதுறுவெனச் சுற்றிக்கொண்டிருப்பார்.
`துக்கமே இல்லாத நபர்’ என்றுதான் அவரைப் பற்றி எண்ணியிருந்தேன். ஆனால், அவருக்குப் பின்னே கருமையின் நிழல் படிந்த கதையும் இருந்தது. அந்தக் கருமையை, துடுப்பு போட்டு அவர் கடந்து வந்த அடர்பாதையும் இருந்தது.
அவருக்கு `லுகேமியா’ என்கிற ரத்தப் புற்றுநோய் இருப்பது 2008-ம் வருடம் தெரியவந்தது. `மரணம்தான்’ என உள்ளூர் மருத்துவர்கள் அனைவரும் கைவிரித்துவிட்டனர். இயல்பிலேயே வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். இந்தச் செய்தியை அவர் தன் குடும்பத்தினர் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. இரண்டு மாதங்கள் தோட்டத்தில் இருக்கும் அறைக்குள் போய் அமர்ந்துகொண்டு தனித்திருந்தார்.

மனைவி, குழந்தைகளைப் பற்றி யோசிக்க யோசிக்க, வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற வெறி அதிகமானது. தனக்கு வந்த நோய் குறித்து, தேடித் தேடிப் படித்திருக்கிறார். தான் வாழ்வதற்கான மருந்து இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டார். ஆங்கிலத்தில் இருந்தவற்றைத் தட்டுத்தடுமாறிப் படித்து விளங்கிக்கொண்டார். உயிர் வாழ்வதற்கான எத்தனங்கள், கண்டங்களைக்கூடத் தாண்டச் செய்யும்.
`க்ளைவிக்’ என்ற மாத்திரையின் துணையோடு எஞ்சியிருக்கிற காலத்தை நல்லபடியாகவே வாழ்ந்து முடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கைக்கும் வந்துவிட்டார். மருத்துவமனை அலைச்சல்களின்போது, தான் பார்க்க நேர்ந்த சம்பவம் ஒன்றையும் சொன்னார். 16 வயதுடைய பையன் ஒருவனுக்கு இதேபோன்ற நோய் வந்தபோது, விவரம் தெரியாத மருத்துவர்கள் சிலர், முகத்துக்கு நேராகவே கைவிரித்தனராம். வீட்டுக்குப் போன உடனேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான் அவன். உண்மையில் அவனால் இதுபோன்ற மாத்திரைகளின் துணையோடு வாழ்ந்திருக்க முடியும். ``பயம், முதலில் மனக்க ட்டுப்பாட்டில்தான் கை வைக்கிறது. மனதைக் கைவிடுவதுதான் இருப்பதிலேயே ஆகக் கொடூரமானது என்பதை அந்தச் சம்பவம் எனக்குச் சொல்லித்தந்தது” என்றார்.
மரணத்தின் விளிம்பில் நின்று மீண்டவர்களின் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். பயணங்களில் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும்போதெல்லாம் இக்கட்டான காலகட்டங்களில் ஒரு வார்த்தையை அழுத்தமாக மறுபடி மறுபடி சொல்லக் கேட்கிறேன்.
உடைந்து அமர்ந்திருந்த தருணம் ஒன்றில் பாட்டி ஒருவர் ஆதரவாகப் பக்கத்தில் அமர்ந்துகொண்டு, ``மனசை மட்டும் விட்டுராத கண்ணு. மத்தத ஆண்டவன் பாத்துக்குவான்” என்றார். எனக்குத் தெரிந்த தோழி ஒருத்திக்கும் இதேபோல காலில் புற்றுநோய் வந்தது. காலை எடுக்கலாம், எடுக்காமலும் இருக்கலாம் என்கிற விவாதங்கள் மருத்துவமனை வட்டாரங்களில் ஓடிக்கொண்டிருந்தன. உறவினர்கள் காலை எடுத்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலைக்கு அந்தத் தோழியை நகர்த்திக்கொண்டிருந்தனர். இத்தனைக்கும் அவருக்கு எட்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன்கூடத் தன் தாய்க்கு நம்பிக்கை வார்த்தைகளை விதைத்திருக்கிறான். எந்த நம்பிக்கையும் அவரைக் கரை சேர்க்கவில்லை. ஒருநாள் அதிகாலை குளியலறைக்குள் போய்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் அந்தத் தோழி. சாவுக்கு வந்த அனைவருமே, ``மனசை விட்டுட்டா அவ. அதுக்குமேல யாராலயும் தாங்கிப் பிடிக்க முடியாது” என்றார்கள்.
வளர்ந்துவரும் தலைமுறையை மனம், உடல் என இரண்டு விஷயங்களிலும் நோஞ்சான் தலைமுறையாகத்தான் வளர்த்துவருகிறோமோ என்கிற ஆழமான அச்சம் எனக்குள் இருக்கிறது. முக்கியமாக அவர்கள் உடல்வலு இல்லாத தலைமுறையாக இருக்கிறார்கள். உடல்வலுவுக்கும் மனவலிமைக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. ஓடி ஆடி உடல்வலுவைப் பெருக்கியுள்ளவர்களைப் பக்கத்தில் போய்ப் பார்த்தால் மற்றவர்களைக் காட்டிலும் அவர்களுக்கு மனவலிமை ஒரு நூல் அளவாவது மிகுதியாக இருக்கிறது. ஓடவே ஓடாத இந்தத் தலைமுறை, பாதையில் சிறு தடங்கல் வந்தால்கூடத் தலைகுப்புறத் தங்களைக் கவிழ்த்துக்கொள்கின்றனர். மரணம் தாண்டிய மற்ற விஷயங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
மூன்று வருடங்களில் நான்கு தொழில்களை நடத்தி, இழுத்து மூடிய இளைஞர் ஒருவரைச் சந்தித்தேன். எந்த வணிகமாக இருந்தாலும் அது வெற்றியடைவதற்கு அதற்கான காலத்தை எடுத்துக்கொள்ளத்தான் செய்யும் என்கிற எளிய உண்மையைக்கூட அவர் அறிந்துகொள்ள விரும்பாதவராக அல்லது கற்பிக்கப்படாதவராக இருந்தார். பணம் கொடுக்க வீட்டில் தயாராக இருக்கிறார்கள் என்பதற்காக, கைமுதலைப் போட்டு நஷ்டங்களை உருவாக்கிக்கொண்டிருந்தார். என்ன காரணம் என ஆழமாகத் தோண்டியபோது, ``முடியலைன்னா விட்டுருன்னுதான் இதுவரை எங்க வீட்டுல சொல்லியிருக்காங்க. விரட்டிப் பிடின்னு சொன்னதேயில்லை. அதனால எதையும் விரட்டிப் பிடிக்கத் தோண மாட்டேங்குது சார். பிரச்னைகள் வர்றப்ப, தப்பிச்சுப் போயிடலாம்னுதான் தோணுது” என்றார்.
இதற்கு நேர் எதிரான மனநிலையைச் சொத்தாக வரித்துக்கொண்ட இன்னொரு தலைமுறையைச் சேர்ந்த ஒரு மனிதரைச் சந்தித்தேன். இவர் தொழிற்சாலை ஒன்றில் அதன் உரிமையாளருக்கு எல்லாமுமாக இருந்தார். கணக்குவழக்குகள் எல்லாவற்றையும் இவர்தான் பார்த்துக்கொண்டிருந்தார். வியாபாரம் நொடிந்து உரிமையாளரின் தோளில் பெருங்கடன் ஏறி அமர்ந்துவிட்டது.
ஒருநாள் உரிமையாளர் கடன் பயத்தில் ஊரை விட்டே குடும்பத்தோடு ஓடிப்போய்விட்டார். கடன்காரர்கள் அத்தனை பேரும் கையில் கத்தி கம்புகளுடன் வந்து நின்றிருக்கிறார்கள். அதற்கடுத்து நடந்ததுதான் அதிசயம். கணக்குவழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதர், தொழிற்சாலையை எடுத்து நடத்த ஆரம்பித்தார். ஓர் ஆலை மூன்று ஆலைகள் ஆகின. தொழிற்சாலையின் கடன்கள் எல்லாம் வட்டியோடு அடைக்கப்ப ட்டன. இன்றைய நிலையில் அவர் கோடீஸ்வரர். அவரை நம்பி, பல நூறு பேர் வாழ்க்கையை நடத்திக்கொண்டி ருக்கின்றனர்.
விஷயம் கேள்விப்பட்டு, ஓடிப்போன பழைய உரிமையாளர் வந்து நின்றிருக்கிறார். அவரும் நல்ல மனிதர்தான். தனக்கெனச் சிறிய தொகை ஒன்றை மட்டும் வாங்கிக்கொண்டு தொழிற்சாலையை இவர்வசமே முழுவதுமாக ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார். எப்படிச் சாத்தியமானது என்று அவரிடம் கேட்டேன்.
``என்னோட ஓனர் ஓடிப்போன அன்னிக்கு எல்லாருமே கோபமா வந்து நின்னாங்க. கொல்லக்கூட அவங்க தயங்க மாட்டாங்கங்கிற நிலைமை. நான் நினைச்சா சுவர் ஏறித் தப்பி ஓடியிருக்கலாம். என்ன ஆனாலும் பயப்படக் கூடாதுனு உடனடியா முடிவெடுத்தேன். எல்லோரையும் கூப்பிட்டு, `நீங்க அடிக்கலாம். குத்தலாம். ஒரு விஷயத்தை மட்டும் தெரிஞ்சுக்கோங்க. அவர் ஓடிட்டார். இப்ப நானும் இந்த ஃபேக்டரியும் மட்டும்தான் மிச்சம். இதையும் உடைச்சுட்டீங்கன்னா உங்க காசு உங்களுக்குத் திரும்ப வரவே வராது. அதுக்குப் பதிலா, எனக்கு இன்னும் கொஞ்சம் காசு கொடுத்து உதவுனீங்கன்னா, இதை நான் மீட்டெடுத்துடுவேன். உங்க காசும் பேங்க்ல போட்ட மாதிரி வட்டியோடு திரும்பி வந்துடும்’னு அவங்ககிட்ட பொறுமையா சொன்னேன். கூட்டத்துல இருந்த ஒருத்தர், `சரி, செஞ்சுதான் பாப்போம்’னு ஒரு கால முன்ன எடுத்துவெச்சார். மத்ததை நான் முடிச்சுக் காட்டிட்டேன்” என்றார் பெருமிதமாக.
எதைத் தொட்டாலும் பயமும் தயக்கமுமாக நடைபோடும் இந்தத் தலைமுறையை, அச்சமில்லாத, மனதை விட்டுவிடாத பாதையை நோக்கி நகர்த்தவேண்டியிருக்கிறது.
- அறம் பேசுவோம்!