மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 18

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 18
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 18

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 18

பெயருக்கு ஏற்றபடி வீடு போலத்தான் இருந்தது அந்த நர்சிங் ஹோம். சுமார் 60 ஆண்டு அடையாளங்கள் தெரிந்தன. இன்றைய கருத்தரிப்பு ஸ்பெஷலிஸ்ட், சிசேரியன் ஸ்பெஷலிஸ்ட் போன்ற ஆடம்பரங்க ளற்ற எளிய கட்டடம். வீட்டைச் சுற்றி மரங்கள் அடர்ந்திருந்தன. ராஜ்மோகன், ஒரு டாக்டர் நண்பருடன் வந்து விஷயத்தைச் சொல்லிவிட்டுக் காத்திருந்தான். சில அம்மாக்கள் வயிற்றில் குழந்தைகளுடன் டாக்டருக்குக் காத்திருந்தனர். ‘சாருலதா என்பவர் உருவாக்கிய நர்சிங் ஹோம். அவர் இருந்தவரை, அவர்தான் பிரசவம் பார்த்திருக்கிறார். அவரின் ஒரே பையன் இப்போது நிர்வாகத்தைக் கவனிக்கிறார். இப்போது இருப்பவர்கள் சம்பள டாக்டர்கள்...’ போன்ற விவரங்களை ராஜ்மோகன் கூட்டிவந்த டாக்டர் சொன்னார். இப்போது பணியாற்றும் டாக்டரின் நண்பர் அவர். நட்புரீதியாகப் பேசி உதவிசெய்யும்படி கேட்டுக்கொண்டார்.

25 வருஷ விவகாரம் என்பதால், அப்போது பிரசவம் பார்த்த டாக்டர் இப்போது இல்லை என முதல் வரியிலேயே ஆர்வம் இல்லாமல் பதில் சொன்னான் மருத்துவமனை அக்கவுன்டன்ட். ‘‘டாக்டர் தேவையில்லை சார்.’’

‘‘அந்த பில் புக்... அந்த லெட்ஜர் எதுவும் இப்பத் தேவைப்படாதுன்னு உள்ள தூக்கிப் போட்டு வெச்சிருக்காங்க.’’ இதுவும் ஆர்வம் இல்லாத பதில்தான். ஆனால், அந்த லெட்ஜர்கள் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது.

25 வயதுக்குள்ளே இருந்தான் அக்கவுன்டன்ட். ‘‘லெட்ஜர் எல்லாம் இங்கேதான் இருக்கின்றன’’ எனத் தன் இருக்கைக்குப் பின்னாலிருந்த தூசுபடிந்த ஓர் அறையை பால்பாயின்ட் பேனா முனையால் காட்டினான்.

அவர்களின் சிரமத்தைக் குறைப்பதாக, ‘‘அந்த வருஷத்து லெட்ஜர் மட்டும் கொடுங்க. நான் பாத்துக்குறேன்’’ என்றான் ராஜ்மோகன்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 18

இருந்த இடத்தைவிட்டு எழுந்திருக்காமல், ‘‘வருஷம் போட்டிருக்கும். பாத்துக்கங்க’’ என அந்த அறையின் சாவியை மட்டும் தனியே எடுத்துப் போட்டான். தடி தடியான நோட்டுகள்... முதுகில் வருஷம் ஒட்டப்பட்டிருந்தது. 1992-க்கான நோட்டைத் தேடி எடுத்து மெதுவாகப் புரட்டியதில் சராசரியாக வாரத்துக்கு ஒரு குழந்தை வீதம் குழந்தைகள் பிறந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இப்போதுபோலவே அப்போதும் நிதானமாகச் செயல்பட்டது தெரிந்தது. டிசம்பர் 24-ம் தேதி பக்கத்தைப் புரட்டியபோது... அந்தப் பக்கம் கிழிக்கப்பட்டிருந்தது. அன்று யார் அட்மிட் ஆனார்கள்... அவர்களுக்குப் பிறந்த குழந்தை விவரம்... எதுவுமே இல்லை.

ராஜ்மோகன் பதற்றத்துடன், ‘‘அந்தப் பக்கத்தையே காணோமே?’’ என்றான் அக்கவுன்டன்ட் இளைஞனிடம்.

‘‘இந்த வம்பெல்லாம் வேணாம்னுதான் நான் யாரையும் உள்ள வுட்றதில்ல. போதும் சார்... நீங்க கிளம்புங்க’’ என்றான்.

‘‘வேற யாராவது இப்படித் தேடி வந்தாங்களா?’’

‘‘அந்தப் பக்கம் யாருமே போக மாட்டோம். எப்பவாவது பெருக்கிச் சுத்தம் பண்றவங்கதான் போவாங்க.’’

‘‘அது யாரு?’’

‘‘அவன் ரெண்டு நாளா வர்ல. எதுக்கு சார் வம்பு? இதோட விட்டுடுங்க.’’

ராஜ்மோகன் வெறுப்புடன் வெளியே வந்து, ராமநாதனுக்கு போன்போட்டு விஷயத்தைச் சொன்னான்.

தமிழக டி.ஜி.பி சண்முகநாதன் தலைமையில், டெல்லி ஏ.சி சுரேந்தர் சிங், பெங்களூரு ஏ.சி உன்னி மேனன் இருவரும் அடுத்தகட்ட நடவடிக்கையில் தீவிரமாக இருந்தனர். டேபிளுக்கு எதிரே ஏராளமான ஏ.சி-க்கள், இன்ஸ்பெக்டர்கள் சவாலை எதிர்கொள்ளும் மனநிலையில் சற்றே சோகத்துடன் அமர்ந்திருந்த னர். சோகத்துக்குக் காரணம் ராஜேஸ்வரியின் அகோர மரணம். நிமோஷ், டாக்டர் குமரேசன், ஆசிரம சாமியார், சயின்டிஸ்ட் சுசீந்திரன், ஜஸ்டின், அமைச்சர் சுப்ரமணி ஆகியோரைத் தொடர்ந்து அதே பாணியில் செத்துக்கிடந்தார் ராஜேஸ்வரி. ரத்தம் கொப்பளித்த நிலையில் இறந்திருந்தார்.

‘‘என்கிட்ட கடைசியா பேசினாங்க... ரம்யா அங்க நிற்கிறதா சொன்னாங்க... நான் ஜாக்கிரதையா இருக்கச் சொன்னேன்’’ என்ற சுரேந்தர் சிங் கைக்கெட்டும் தூரத்தில் ஆட்டம் காட்டும் பெண்ணை நினைத்துப்பார்த்தார்.

‘‘என் கிட்டயும் பேசினாங்க. அதற்கப்புறம் நான் பந்தோபஸ்துக்கு ஆள் அனுப்பினேன். பத்திரமா இருக்கச் சொன்னேன். காவலுக்குப் போனவங்க பார்த்துட்டு, ராஜேஸ்வரி இறந்து கிடக்கிற விஷயத்தைச் சொன்னாங்க’’ என்றார் சிட்டி கமிஷனர் ராம்சிங்.

‘‘விஷயம் ரொம்ப கிரிட்டிக்கல். மூணு ஸ்டேட் சம்பந்தப்பட்டது.’’

‘‘இல்லை மேனன். இது சர்வதேச விவகாரம். விஞ்ஞானியின் மரணம், ஜெனீவா வரைக்கும் போயிருக்கிறது.’’

‘‘ஆமாம்.’’

‘‘நாம் வழக்கைத் திசைதிருப்ப ஓர் அப்பாவியைப் பிடித்துவைத்திருப்பதாகச் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கிறார்கள், மிஸ்டர் ராம்சிங்.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 18

‘‘சிறையில் அந்தப் பெண் இருக்கும்போதும் கொலைகள் நடப்பது குறித்து நீதிபதியும் கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்தப் பெண்ணை பெயிலில் எடுப்பதற்கு இனி தடையிருக்காது.’’

‘‘அதைத்தான் எதிர்பார்த்தேன். அதன் பிறகுதான் அந்தப் பெண்ணைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்’’ என்றார் சுரேந்தர் சிங்.

‘‘ஏன்?’’ என்றார் மேனன்.

‘‘அவளைப்போலவே இன்னொரு பெண் இருப்பதாகப் பல்வேறு குழப்பங்கள் ஓடின. இப்போது அதற்கு விடை கிடைத்துவிட்டது. அந்தப் பெண் இரட்டைப்பிறவி.’’ சுரேந்தர் சிங் சொல்லிவிட்டு நிறுத்தினார். அனைவரும் அவரையே ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

‘‘அவளின் பெற்றோரிடம் விசாரித்தோம். அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் இல்லை என்றார்களே?’’

‘‘ஆமாம். அது அவளுடைய பெற்றோருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.’’

‘‘என்னது... அவளுடைய பெற்றோருக்கே தெரியாதா?’’

சுரேந்தர் சிங் ஒரு ஃபைலை எடுத்து அவர்களின் பார்வைக்கு வைத்தார். பழுப்பேறிய பழைய காகிதம். சாருலதா நர்சிங் ஹோம் என பிரின்ட் செய்யப்பட்ட ஒரு தாளில் சில விவரங்கள் இருந்தன.

24.12.92 எனத் தேதியிட்ட தாள். ஊன்றிப் படித்ததில் அன்று இரண்டு பிரசவங்கள் பதிவாகியிருந்ததைக் கவனிக்க முடிந்தது.

‘‘பாருங்கள். அவள் பிறந்த நர்சிங் ஹோமுக்குச் சென்று விசாரித்தோம். அந்த நர்சிங் ஹோம் முதலாளி சரியாக ஒத்துழைக்கவில்லை. நர்சிங் ஹோமில் பணம் கட்டிய ரசீதை மட்டும் கொடுத்து, இதுதான் எங்களிடம் இருக்கிறது என மழுப்பினார்கள். அங்கு பணியாற்றும் ஒரு சாதாரணப் பணியாளை வைத்து அந்தப் பெண் பிறந்த அந்த நாளின் ரெக்கார்டுகளை அப்படியே கிழித்து எடுத்துவரச் செய்தோம்.’’

‘‘ஓ!’’

‘‘கவனித்தீர்களா? அன்று அந்த ஹாஸ்பிடலில் இரண்டு பேருக்குப் பிரசவம். ரம்யாவின் அம்மாவுக்குப் பிறந்து இறந்தது ஓர் ஆண் குழந்தை.’’

‘‘அப்படியா?’’ என்றார் மேனன்.

‘‘ஆமாம். அதே நாளில் இன்னொரு பெண்மணிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இரண்டும் பெண் குழந்தைகள்.’’

‘‘புரிகிறது’’ என்றார் டி.ஜி.பி.

‘‘எனக்குப் புரியவில்லை.’’ மேனன் ஆர்வமாக நெருங்கி வந்தார்.

‘‘ஒரு முன்கதை இருக்கிறது. இரட்டைக் குழந்தைப் பெண்மணிக்கு, அதற்குமுன் நான்கு குழந்தைகள். அத்தனையும் பெண்கள். அடுத்து ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றால் அவள் கணவன் வேறு ஒரு திருமணம் செய்துகொள்ளத் தயாராகியிருந்தான். அந்த நேரத்தில் இரட்டைக் குழந்தையும் பெண்... டாக்டரிடம் கண்ணீர்விட்டுக் கதறியிருக்கிறாள் அந்தப் பெண்.’’

‘‘ஓ!’’

‘‘அந்தப் பெண்ணுக்குப் பரிதாபப்பட்டுச் சிறிய மாற்றம் செய்தார்.’’

மேனன், ‘‘புரிந்தது... ரம்யாவுடன் பிறந்த இன்னொரு பெண் குழந்தை எங்கே?’’ என்றார்.

‘‘எனக்கு இவ்வளவு தகவல்களையும் சொன்னவர் அங்கு வேலை பார்த்த ஒரு நர்ஸ். இப்போது 70 வயது. இதற்குமேல் அவருக்குத் தகவல் எதுவும் தெரியவில்லை. குழந்தை இல்லாத யாருக்கோ அந்த இன்னொரு குழந்தையைக் கொடுத்து விட்டதாகச் சொன்னார். இவை அடுக்கடுக்கான குற்றங்கள். ஆனால், ஒரு வகையில் மனிதாபிமானம். இறந்துபோன ஆண் குழந்தையுடன் அந்தக் கணவன் சந்தோஷமாகப் போய்விட்டான். தன் குழந்தை இறந்துபோனது தெரியாமல் சந்தோஷமாக ரம்யாவுடன் இன்னொரு குடும்பம் புறப்பட்டது. அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை தேவையா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள் மேனன். இப்போது நம் தலைவலி, ரம்யாவுடன் பிறந்த அந்த இன்னொரு பெண் எங்கே என்பதுதான்.’’

‘‘அவளைப் பற்றி எதுவும் தெரியவில்லையா?’’

‘‘தெரியவில்லை... ஆனால், அவள்தான் இவ்வளவையும் செய்கிறாள் என்பது மட்டும் தெரிகிறது.’’ சிங் தாடியைத் தடவினார்.

‘‘பிறந்ததுமே பிரிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, தனக்கு இப்படி ஒரு சகோதரி இருப்பது எப்படித் தெரிந்தது மிஸ்டர் சிங்?’’ தனக்குத் தானே விளக்கம் பெறுவதுபோலக் கேட்டார் டி.ஜி.பி சண்முகநாதன்.

‘‘இப்படித் தனித்தனியாக இருந்த இரட்டைப் பிறவிகளின் எண்ணங்களை இணைக்கிற ஏதோ விபரீதம் நிகழ்ந்திருக்கிறது. ஒருத்தியின் கோபம் இன்னொருத்திக்குக் கடத்தப்பட்டுப் பழி தீர்க்கப்படுகிறது.’’

‘‘சயின்ஸ் கதை மாதிரி இருக்கிறதே?’’

‘‘சயின்ஸ் கதை இல்லை... கொல்லப்பட்ட சயின்டிஸ்ட் எழுதிவிட்டுப்போன சந்தேகம்.’’

‘‘இரட்டைப் பிறவி பற்றியா?’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 18

‘‘குறிப்பாக, இரட்டைப் பிறவி பற்றிச் சொல்லவில்லை. மனித சமூகத்தில் ஏதோ குழப்பம் நடக்கும் என எழுதியிருக்கிறார்.’’

‘‘ஆனால், ரம்யா சாந்தமான பெண். அவளுடைய ஆத்திரங்களை இன்னொருத்தி பழிவாங்குகிறாள் என்பது..?’’

‘‘அவளுக்குள் சப்கான்ஷியஸில் அமிழ்ந்திருந்த ஆத்திரம்தான் அந்த வீடியோ கேம். அவளால் கிராஃபிக்ஸ் மூலம்தான் பழிவாங்க முடிந்தது. இன்னொரு ரம்யா வந்து நிஜமாக்கியிருக்கிறாள்.’’

‘‘இது பேசுவதற்குச் சுவாரஸ்யமாக இருக்கிறது... கோர்ட் ஏற்றுக்கொள்ளாது’’ என்றார் டி.ஜி.பி.

சுரேந்தர் சிங், ‘‘சயின்டிஸ்ட் இறந்தது ஏன் என லிங்க் செய்து பாருங்கள். அவர்தான் இந்த விஞ்ஞான விபரீதத்தைச் சொல்லி எச்சரித்தவர். அது வெளியில் வருவதற்குமுன் கொல்லப்பட்டார். அவருடைய எச்சரிக்கையை விரும்பாதவர் வேறு யாராக இருக்க முடியும்... அந்த இன்னொரு ரம்யாவைத் தவிர?’’ என்றார்.

‘‘அதிர்ச்சியாகவும் நம்ப முடியாமலும் இருக்கிறது.’’ சண்முகநாதன் சோர்ந்துபோனார்.

‘‘கடவுள் துகள் ஆராய்ச்சியால் ஏதோ விபரீதம் இது’’ சுரேந்தர் சிங் சொன்னார்.

‘‘இந்த லட்சணத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சியைத் தொடங்கப் போவதாகச் சொல்கிறார்களே?’’ நிஜமாகவே வருத்தப்பட்டார் சண்முகநாதன்.

(தொடரும்...)