மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள் - பிச்சாயி - 5

Pechi amman: Divine human Gods stories - Aval Vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
Pechi amman: Divine human Gods stories - Aval Vikatan

தெய்வ மனுஷிகள் வெ.நீலகண்டன் - படங்கள் : ம.அரவிந்த், உ.பாண்டி

வீரையா இருக்காரே... பெரிய கோவக்கார மனுஷன். ஆளு மோட்டாவா இருப்பாரு. முகத்துல பெரிய முறுக்கு மீசை. கண்ணு எப்பவும் செக்கச்செவேல்னு செவந்துபோய்க் கெடக்கும். பாதி டவுசரு வெளியில தெரிய வேட்டியை மடிச்சு வவுத்துக்கு மேல கட்டியிருப்பாரு.  கையக்கால வீசி நடந்தா பத்தடிக்கு யாரும் கூடப் போக முடியாது. அப்படியோர் உடல்வாகு. ஊருக்காட்டுல எந்த நல்லது கெட்டது நடந்தாலும் வீரையா இல்லாம நடக்காது. தாமதம் பொறுக்க மாட்டாரு. தப்புன்னு தெரிஞ்சா யாராயிருந்தாலும் படக்குன்னு கை நீட்டிப்புடுவாரு. அதனால, ஊருக்குள்ள எல்லாருக்கும் அவர் மேல பயம். வீரையா தலைபணிஞ்சு நிக்குற ஒரே ஆளு அந்தப் பெருமாள்தான். பெருமாள் பக்தர். திருநாமம் இல்லாம வெளிய வரவே மாட்டாரு மனுஷன். பெருமாள் மலையைக் கையெடுத்துக் கும்பிடாம சாப்பிடகூட மாட்டாரு.  

வீரையாவுக்கு ரொம்பக்காலம் கல்யாணமே ஆவலே. இந்தக் கோவக்கார மனுஷனுக்கு எவன் பொண்ணு கொடுப்பான்? ஆளு தனிமரமாத்தான் திரிஞ்சாரு. பாத்த பொண்ணுங்கள்லாம் அவரோட நடை, உடை, பாவனைகளைப் பாத்து பயந்துபோச்சுக. ஊரு, உறவெல்லாம் கைவிரிச்ச பிறகு, ‘கல்யாணமே வேண்டாம்டா பெருமாளே’ன்னு மனசைத் தேத்திக்கிட்டு வாழப் பழகிட்டாரு.

அதுக்குப் பெறவு மொரட்டுத்தனம் அதிகமாப் போச்சு. யாரைப் பாத்தாலும் கைநீள ஆரம்பிச்சிச்சு. ஒருக்கா, ஊர்த்திருவிழாவுல அருவாமேல ஏறிச் சாமியாடும்போது, பிச்சாயியை ஓரக்கண்ணால பாத்தாரு வீரையா. நாக்கைத் துருத்திக்கிட்டு இவரு ஆடுன ஆட்டத்தை மிரண்டு போய் பாத்துக்கிட்டு நின்னா பிச்சாயி. வாகாவும் வாளிப்பாவும் இருந்த பிச்சாயி அப்படியே அவர் மனசுல பதிஞ்சிட்டா. திருவிழா முடிஞ்சதும் பிச்சாயியைத் தேடி அலைஞ்சாரு. அவ, அந்தூரு மணியக்காரர் வீட்டுக்குச் சம்பந்திபுரத்துலேர்ந்து வந்த உறவுக்காரின்னு தெரிஞ்சபிறகு, அந்த வீட்டுப்பக்கமே உலாத்திக்கிட்டுத் திரிஞ்சாரு. பிச்சாயிக்கு அவரைப் பாக்க, முதல்ல பயமாத்தான் இருந்துச்சு. அவரைப் பத்தி மணியக்காரர் பொண்டாட்டி சொன்ன கதைகளையெல்லாம் கேட்டபிறகு அவரு மேல இரக்கம் வந்திருச்சு. இரக்கம் காதலாவும் மாறிப்போச்சு.

Pechi amman: Divine human Gods stories - Aval Vikatan
Pechi amman: Divine human Gods stories - Aval Vikatan

வீரையாவால தூங்க முடியலே. சாப்பிட முடியலே. பிச்சாயி ஞாபகமாவே இருந்துச்சு. இதுவரைக்கும் எத்தனையோ பொண்ணுகளைப் பாத்திருக்காரு. ‘ஏதாவது ஒரு பொண்ணு நம்மள கல்யாணம் கட்டுனாப் போதும்’னுதான் நினைச்சாரே ஒழிய, இந்தளவுக்கு யாரும் மனசைப் பாதிக்கலே. இவ மனசுக்குள்ள உக்காந்துகிட்டு குடையுறா. நேரா மணியக்காரர் வீட்டுக்குப் போனாரு. ‘ஏய்யா மணியக்காரரே... உங்க வீட்டுக்கு வந்திருக்கிற பிச்சாயியை எனக்கு மணம் முடிச்சுக் குடுப்பீரா?’ன்னு கேட்டாரு. மணியக்காரருக்குப் பயம். ‘முடியாது’ன்னு சொன்னா கைநீட்டிருவாரோன்னு. ‘எதுவா இருந்தாலும் அந்தப்புள்ளையோட ஆயி அப்பனைக் கேட்டுச்சொல்றேன்பா’னு சொல்லி அனுப்பிட்டாரு. வீரையா வீட்டை விட்டு வெளிக்கிளம்பின உடனேயே, வண்டி மாடு கட்டி பிச்சாயியை அவ ஊருக்கு ஏத்திவுட்டு, ‘எங்கூரு முரட்டுப்பய ஒருத்தன் கண்ணு உம் பொண்ணுமேல பட்டுருச்சு. புள்ளைய பாதுகாப்பா வெச்சுக்கோய்யா’ன்னு வண்டிக்காரங்கிட்ட தகவலும் சொல்லி அனுப்பிட்டாரு.    

‘எப்படியும் மணியக்காரர் பிச்சாயியோட ஆயி அப்பன்கிட்ட கேட்டு நல்ல சேதி சொல்லுவார்'னு அஞ்சாறு நாளு காத்திருந்து பாத்தாரு வீரையா. தகவல் வரலே. நேரா அவர் வீட்டுக்குப் போயி,  ‘என்னய்யா சேதி’ன்னு கேட்டாரு. ‘இதுவரைக்கும் ஒண்ணும் தகவல் வல்லப்பா... எதுவாயிருந்தாலும் அவுக ஊருக்குள்ள போயி பேசிக்க’ன்னு சொல்லிட்டு துண்டை உதறி தோள்ல போட்டுக்கிட்டு விறுவிறுன்னு வீட்டுக்குள்ளாற போயிட்டார் மணியக்காரர்.

வீரையாவுக்கு கோவம் வந்திருச்சு. ஆளு சும்மாவே முரடன். இப்போ காதல் வேற வந்திருச்சு. நேரா வீட்டுக்கு வந்தாரு. ஈட்டிக்கம்பை எடுத்துக் குதிரை வண்டியில செருகுனாரு. பத்திவிட்டாரு குதிரைகளை. வேகமெடுத்து ஓடுதுக குதிரைக.

நேரா பிச்சாயி வீட்டுக்கு முன்னாடி குதிரை வண்டி நின்னுச்சு. கையில ஈட்டிக்கம்பை எடுத்துக்கிட்டு வீட்டுக்குள்ளாற போனாரு. பிச்சாயி அப்பத்தான் குளிச்சு முடிச்சு புதுத்துணியுடுத்தி, பனியில நனைஞ்ச பூ மாதிரி நின்னுகிட்டிருந்தா. அவளைத் தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு வெளியில வந்தாரு. பிச்சாயியோட அம்மா கூப்பாடு போடுறா. ஊருக்கார இளவட்டங்கள்லாம் வந்து வண்டிய மறிக்கிறாக. ஈட்டியைச் சுழற்றி ஒரு வீச்சு வீசுனாரு. எல்லாப் பயலும் பின்னாடி ஓடிட்டாங்கே. குதிரையைக் கிளப்பி பிச்சாயியைச் சிறையெடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டாரு.

பிச்சாயிக்கு எல்லாமே கனவு மாதிரி இருக்கு. திருவிழாவுல பாத்த முகம் அப்படியே அவ மனசுக்குள்ள பதிஞ்சு கிடந்துச்சு. என்ன வீரம்... என்ன வேகம்... எல்லாத்தையும் தாண்டி வீரையாக்குள்ள இருந்த குழந்தைத்தனம் அவளுக்குப் புடிச்சிருந்துச்சு.

பிச்சாயியோட அப்பங்காரன் ஊராளுகளையெல்லாம் கூட்டிக்கிட்டு வந்து பஞ்சாயத்து வெச்சான். வீரையா மேல இருந்த பயத்துல “ஆனது ஆயிப்போச்சு... மருமவனை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி முறை செஞ்சு அனுப்புய்யா”னு பஞ்சாயத்தை முடிச்சுட்டாக பெரியவுக.

கல்யாணத்துக்கப்பறம் வீரையாக்கிட்ட கொஞ்சம் மாற்றம் வந்துச்சு. பொண்டாட்டியை ஒரு சுடுசொல் சொல்ல மாட்டாரு. பிச்சாயி, அவரு திட்டுற மாதிரி நடந்துக்கவும் மாட்டா. புருஷனை பாத்துப்பாத்து வெச்சுக்கிட்டா. ஊருக்குள்ள கோவக்காரரா இருந்தாலும் பிச்சாயிக்கிட்ட கைநீட்டுனதில்லை வீரையா.

பிச்சாயியும் தங்கமான மனுஷி. புருஷன் மேல அவ்ளோ மரியாதை. முகத்துல கருணை பொங்கிவழியும். ‘ஒருவா தண்ணி தா தாயி’ன்னு யாராச்சும் வந்து நின்னா, சோறுபோட்டு பசியாத்தி அனுப்புற மகராசி.

கொஞ்சம் வயக்காடு கிடந்துச்சு. அதை உழுது கம்பு, கேவுருன்னு தானியங்களை விதைச்சு விவசாயம் செஞ்சுகிட்டாக. மத்தபடி ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையா வாழ்ந்தாக. கலியாணமாகி நாலைஞ்சு வருஷம் குழந்தைப் பாக்கியம் வாய்க்கலே. வாரத்துல மூணு நாளு பெருமாளுக்கு வெரதம் கிடந்தா பிச்சாயி. வீரையாவுக்கும் அது பெரிய மனக்குறையா இருந்துச்சு. தினம் ஒருக்கா பெருமாள் மலைக்குப் போயி அவன்கிட்ட வேண்டிக்கிட்டு வருவாரு.

பெருமாளு கண்ணுத் திறந்துட்டாரு. பிச்சாயி முழுகாம இருந்தா. ‘தனக்கொரு வாரிசு வரப்போகுது’னு ஆனவுடனே வீரையாவுக்கு சந்தோஷம் தாங்கலே. உறவுக்காரங்களையெல்லாம் கூப்புட்டு விருந்து வச்சாரு. பொண்டாட்டியை ஒரு வேலை பார்க்க விடலே. தண்ணி தூக்குறதுல இருந்து, சோறாக்குறது வரைக்கும் எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுச் செஞ்சாரு. வீட்டு வேலையை முடிச்சுட்டு வயக்காட்டுக்குப் போயி அங்கேயும் கடுமையா உழைப்பாரு.

வழக்கமா வீரையா வயலுக்குப்போனா, மத்தியானம் சாப்பாடு எடுத்துக்கிட்டு போவா பிச்சாயி. கூடவே நாமக்கட்டியும் எடுத்துட்டுப் போவணும். வேலையை முடிச்சுட்டு, பக்கத்துல ஓடுற ஓடையில குளிச்சுட்டு, பிச்சாயி கொண்டு வர்ற நாமக்கட்டியில நாமம் இழுத்துக்கிட்டு, பெருமாள் மலை இருக்கிற பக்கம் இருக்கிற திசைபாத்துக் கும்பிட்ட பிறகுதான் சாப்பாட்டுல கை வைப்பாரு வீரையா.

அது பிச்சாயிக்கு நிறைமாசம். வயிறு கனத்துப்போச்சு. வேலை வெட்டி செய்ய முடியலே. பிரசவம் இன்னிக்கா, நாளைக்கான்னு இருக்கு. அன்னிக்குன்னு பாத்து வெயிலு கொளுத்துது. வயலுல அறுப்பு நடக்குது. விடியக்காத்தால கிளம்பி வயலுக்குப் போயிட்டாரு வீரையா. பிச்சாயிக்கு லேசா இடுப்புவலி வந்திருச்சு. இருந்தாலும் வயக்காட்டுக்குப் போயிருக்கிற புருஷன் பட்டினியா கிடப்பாரேன்னு குருணையைக் கொட்டிக் கஞ்சி காச்சிட்டா. அதை ஒரு தூக்குவாளியில ஊத்திக்கிட்டு தட்டுத்தடுமாறி வயலுக்குப் போறா.

வீரையாவுக்கு நல்ல பசி. வெயிலு வேற உடம்புல இருக்கிற தண்ணியையெல்லாம் உறிஞ்சிக்குடிக்குது. மயக்கம் அடிச்சுத் தள்ளுது. வீரையாக்குள்ள தூங்கிக்கிட்டிருந்த மிருகம் கொஞ்சம் கொஞ்சமா முழிக்குது. `இந்தக் கழுதையை இன்னும் காணுமே'ன்னு மனசுக்குள்ள வையறாரு. ரொம்ப நேரம் கழிச்சு நடக்க மாட்டாம, தள்ளாடித் தள்ளாடி வயலுக்கு வந்து சேர்றா பிச்சாயி. வெயிலு... பசி... கோபம்... மயக்கம்... வீரையாவோட கண்ணெல்லாம் செவந்துபோச்சு. ஆனாலும், பிச்சாயியோட முகத்தைப் பாத்தவுடனே கொஞ்சம் தெளிஞ்சாரு மனுஷன். வேகவேகமா ஓடையில விழுந்து குளிச்சாரு. கரையேறி வந்து பிச்சாயிக்கிட்ட கை நீட்டினாரு. அப்போதான் பிச்சாயிக்கு உரைச்சுச்சு, நாமக்கட்டி எடுத்து வராதது. ‘நாமக்கட்டியை எடுத்து வர மறந்துட்டேன்'னு சொன்னா பாருங்க.வீரையாவுக்குக் கோவம் மண்டைக்கேறிருச்சு. வவுத்துப்புள்ளகாரின்னுகூட பாக்கலே. கைகெட்டுன தூரத்துல இருந்த கல்லையெடுத்து ஒரே எறி... உடம்போட அத்தனை பலத்தையும் சேர்த்து எறிஞ்சாரு. பிச்சாயியோட தலையிலபட்ட கல்லு ரத்தத்துல குளிச்சு கீழே விழுந்துச்சு. ‘புருஷன் இப்படியொரு காரியத்தைப் பண்ணுவான்’னு நினைச்சுக்கூடப் பாக்காத பிச்சாயி அப்பிடியே மயங்கி விழுந்தா. அவ தலையில இருந்து வழியிற ரத்தம் ஓடையில கலந்து, தண்ணியெல்லாம் செவப்பா மாறிப்போச்சு.

லேசா கால்தடுக்கினாகூட நோவு முன்னு பாத்துப் பாத்து பாதுகாத்த பொண்டாட்டி இப்படி ரத்த வெள்ளத்துல மயங்கிக்கிடக்கிறதைப் பாத்து படிப்படியா நிதானத்துக்கு வந்தாரு வீரையா. மூளைக்குள்ள குடியிருந்த பேய் இறங்கிருச்சு.

‘அய்யோ... என்ன காரியம் செஞ்சுட் டோம்’னு பொண்டாட்டியை மடியில தூக்கி வெச்சுக்கிட்டு ‘பிச்சாயி, பிச்சாயி’ன்னு கதறி அழுகுறாரு மனுஷன். பிச்சாயிக்கிட்ட அசைவேயில்லை. மவராசி போய்ச் சேந்துட்டா.

வீரையாவுக்கு தாங்கலே. ‘கண்ணுமண்ணு தெரியாத கோவத்துக்கு பொண்டாட்டிய மட்டுமில்லாம, அவ வயித்துல வளர்ந்த நம்ம வாரிசையும் பலி கொடுத்துட்டமே’னு துடிக்கிறாரு. ‘அய்யோ... பிச்சாயி... நீயில்லாத உலகத்துல நான் எப்பிடி இருப்பேன்’னு சொல்லிக்கிட்டே, பக்கத்துல கிடந்த ஈட்டிக்கம்பை எடுத்துத் தனக்குத் தானே வவுத்துல செருகிக்கிட்டாரு. வயக் காடெல்லாம் ரத்தக்காடா ஆகிப் போச்சு.

மறுநா, அந்தப் பக்கமா வந்தவுக, வீரையாவும் பிச்சாயியும் இறந்து கெடக்குறதைப் பாத்து சாதி சனத்துக்கெல்லாம் சொல்லி அனுப்புனாக. ஊரு, உறவெல்லாம் கூடி பெருமாள்மலைக்கு எதிர்லயே ரெண்டு பேத்தையும் தகனம் செஞ்சாக. பிச்சாயி வவுத்துல இருந்த ஜீவனும் சேந்து தகனமாயிருச்சு.

இது நடந்து நெடுநாளுவரைக்கும் அந்தப் பக்கம், ராத்திரி நேரத்துல வீரையாவும் பிச்சாயியும் கைகோத்துக்கிட்டு நடமாடுறதா சொல்லக் கேள்வி. மக்கள் கிராமத்தோட எல்லைக்காவலர்களா கருதி ரெண்டு பேத்தையும் கும்பிட ஆரம்பிச்சாக.

- வெ.நீலகண்டன்

படங்கள் : ம.அரவிந்த், உ.பாண்டி