
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

ஹிப்பாலஸ் வஞ்சி நகரை அடைந்து ஒரு வாரத்துக்குப் பிறகுதான் கால்பா புகார் நகரைச் சென்றடைந்தான். இருவரும் குலசேகரபாண்டியனின் திட்டத்தை இரு பெருவேந்தர்களிடமும் விளக்கினர். பறம்பிடம் தோற்றதால் இருவருமே அவமானப்பட்டுக் குறுகிக்கிடந்தனர். செங்கணச்சோழன் கால் எலும்பு முறிந்து உயிர் பிழைத்ததே பெரும்பாடாகிப்போனது. வலதுகாலை இழுத்து இழுத்து, கோலின் துணைகொண்டே நடக்கும் நிலையில் இருந்தான். ஆனால், பறம்பை அழித்தொழிக்கும் வாய்ப்பு பாண்டியனின் மூலம் கிடைக்கிறது எனத் தெரிந்த கணமே வெகுண்டெழுந்தான். தந்தை சோழவேலன், `சற்றே நிதானித்து முடிவெடுப்போம்’ என்று சொல்வதற்கான இடமே அன்றைய அரசவையில் எழவில்லை. சோழப்படையின் அத்தனை ஆற்றல்களையும் கொண்டுவந்து குவிக்க ஆயத்தநிலையில் உள்ளதாக அறிவித்தான்.
உதியஞ்சேரல் சட்டென முடிவெடுத்துவிடவில்லை. `மலைப்பகுதியில் இவ்வளவு திறன்மிகுந்த ஏற்பாடுகளைச் செய்துமே நம்மால் தாக்குதலில் வெற்றிகொள்ள முடியவில்லை; சமவெளிப் போரில் பாரியை வீழ்த்த முடியுமா?’ என்று சிந்தித்தபடியே இருந்தான். ஹிப்பாலஸ், பொறுமையாகப் பல விளக்கங்களைக் கொடுத்தான். சேரனும் சோழனும் என்ன காரணத்துக்காகப் பறம்பின் மீது படை யெடுத்தார்களோ, அந்தச் செல்வங்களை அவர்களே எடுத்துக்கொள்ளட்டும்; தனக்குத் தேவை பறம்பின் வீழ்ச்சி மட்டுமே என குலசேகரபாண்டியன் தெளிவுபடுத்திவிட்டான் என்பதை மீண்டும் மீண்டும் கூறினான்.
தேவாங்கு, கொல்லிக்காட்டு விதை, பாழிநகர் மணிக்கற்கள் என அனைத்தின் மீதும் ஹிப்பாலஸின் கனவு நிலைகொண்டிருந்தது. அதனால்தான் பாண்டியனின் போர்த் திட்டத்தோடு மற்ற இரு பேரரசுகளையும் இணைக்கும் வேலையில் முனைந்து ஈடுபட்டான்.
சேரனும் சோழனும் பாரியிடம் தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்நிலையில், அவனை எப்படியாவது அழிக்க வேண்டும் எனத் தீவிரத்தோடு போர்புரிவர். அதுமட்டுமன்று, தனது தலைமையில் நடக்கும் ஒரு போரில் அவர்கள் பங்கெடுப்பதே பாண்டியப் பேரரசின் முதன்மையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் செயல்தானே! ஒரு போர் தொடங்கும்போதே மறைமுகமாக உயர்வை வழங்குவதை எண்ணி மகிழ்ந்தார் குலசேகரபாண்டியன். அதனால்தான் ஹிப்பாலஸை இந்தச் செயலை நோக்கித் தூண்டினார்.

மூன்று பேரரசுகளும் அவை உருவான காலம்தொட்டு தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டதில்லை. உள்ளுக்குள் எரியும் பகையெனும் நெருப்பை அவை ஒருபோதும் அழித்துக்கொண்டதில்லை. சிற்றரசுகளையும் சிறுகுடிகளையும் வீழ்த்துவதில் இன்றளவும் பேரரசுகளின் படைகளுக்கிடையான மோதல் தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கிறது. ஆனாலும் யவன வணிகத்தால், கடந்த சில தலைமுறைகளாக மூன்று பேரரசுகளும் பெருஞ்செல்வச்செழிப்பை எட்டியுள்ளன. அரசின் வலிமையை ஆளும் நிலப்பரப்பு மட்டும் தீர்மானிப்பதில்லை; அதனிடமிருக்கும் செல்வங்களும் முக்கியமானவை என்பதை உணர்ந்துள்ளன. அதனால்தான் முத்துகள் கொழிக்கும் கடல்வளத்தையும், மிளகு தொடங்கி எண்ணிலடங்காத வாசனைப் பொருள்களும் மருத்துவப்பொருள்களும் விளைந்துகிடக்கும் மலைவளத்தையும் தனதாக்கிக்கொள்ள விடாமல் முயல்கின்றனர். ஹிப்பாலஸின் இந்த முயற்சிக்கு மூன்று பேரரசுகளும் இசைவு தெரிவித்தது இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியே. இத்தனை காலங்களாக எந்த வளத்துக்காக இந்த மூவரும் தனித்தனியே போரிட்டார்களோ, அதே நோக்கத்துக்காகத்தான் இப்போது மூவரும் இணைந்து போரிட முடிவுசெய்துள்ளனர். இந்தப் போர், வெளிப்படையாக எதிரியை நோக்கியது. ஆனால், ஆழத்தில் உடன் இருப்பவரின் இழப்பைக் கண்டு மகிழக்கூடியது.
பாரி வேட்டுவன்பாறைக்கு வந்ததிலிருந்து போர்ச்சூழலைப் பற்றிய உரையாடல்கள் நாள்தோறும் நடந்தபடியே இருந்தன. ``தாக்குதலுக்கு எல்லா வகையிலும் நாம் ஆயத்தமாக வேண்டும்’’ என, தொடர்ந்து வற்புறுத்தப்பட்டது.
``நாம் இறங்கிப்போய்த் தாக்கப்போவதில்லை; எதிரி மலையேறி வந்தால் நாம் தாக்குவதற்குப் புதிதாய் எதுவும் தேவையில்லை. பிறகு ஏன் பதற்றமடைகிறீர்கள்?” என்றான் பாரி.
பாரியின் கருத்தை மறுத்து உரையாடுதல் எளிய செயலன்று. தேக்கன் மட்டுமே மிக எளிதாக அதைக் கைக்கொள்வான். சற்றே தயங்கி, ஆனால் உறுதியாகப் பேசக்கூடியவன் முடியன். வேட்டூர் பழையன் பாரியின் கூற்றுக்கு மறுப்பாகத்தான் பேசத் தொடங்குவார். ஆனால், அவன்மீதுள்ள வாஞ்சையால் எப்போது திசைமாறினோம் என்பதை அறியாமலேயே பாரியின் கருத்துக்கு உடன்பட்டுப் பேசிக்கொண்டிருப்பார். இவர்கள் எல்லோரிலும் ஒரேயொரு விதிவிலக்கு வாரிக்கையன் மட்டும்தான். அவருடன் பேசும்போது பாரியிடம் ஏற்படும் மாறுபாட்டை மற்றவர்கள் எளிதில் உணர முடியும். ஏனெனில், பாரியின் தந்தையே அவரின் சொல்கேட்டு வளர்ந்தவர்தான். வாரிக்கையன் இன்னும் எவ்வியூரில்தான் இருக்கிறார். போர்க்களம் பற்றிய தற்போதைய உரையாடலில் அவர் கருத்துகள் ஊடாடவில்லை.
மழைக்காலம் தொடங்கியது. பாண்டியர் படையின் பாடிவீட்டுக் கூடாரங்கள் தென்திசை நோக்கி இடமாறத் தொடங்கின. ஆயிரக்கணக்கான பொருள்களின் இடப்பெயர்வு நடந்தது. எண்ணற்ற யானைகள் இந்தச் செயலில் ஈடுபடுத்தப்பட்டன. இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதைப் பறம்புவீரர்கள் மலையின் மீதிருந்து கவனித் தபடியே இருந்தனர். வெள்ளடிக்குன்றிலிருந்து நெடுங்குன்று வரை கூடாரம் அமைத்திருந்த படை, இப்போது முழுமுற்றாக நெடுங்குன்றி லிருந்து தென்புறமாக இடமாறிக்கொண்டிருந்தது. வேட்டுவன்பாறை என்பது பறம்பின் மிக முக்கியமான இடம் என்பதால், தங்களின் இருப்பிடத்தை மிகவும் தள்ளிக்கொண்டு போகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
மயிலா கருவுற்றிருந்ததால் அவளுக்குக் கனிகளைக் கொடுத்து உபசரிக்க ஆதினியை வரச்சொல்லியிருந்தான் பாரி. அவளும் தன் தோழிகளோடு வேட்டுவன்பாறைக்கு வந்திருந்தாள். சில நாள்கள் அங்கேயே தங்கியிருந்தான் பாரி. அடைமழை முடிவுற்ற மறுநாள் பறம்பின் வீரன் ஒருவன் பாரி இருந்த குடில்நோக்கி ஓடிவந்தான். அவன் சொன்ன செய்தி கேட்டு எல்லோரும் குன்றின் மேல் ஏறி நின்று பார்த்தனர். தென்திசையிலிருந்து பெரும்படை ஒன்று அணியணியாய் வந்துகொண்டிருந்தது. படையின் முன்னணி வீரன் ஏந்தியிருந்த பதாகையில் சேரனின் வில் பொறிக்கப்பட்டிருந்தது. அடுத்த பத்தாம் நாள் வடதிசையிலிருந்து வந்த படை அணியினர் புலிக்கொடி ஏந்திய பதாகையைச் சுமந்துவந்தனர். இதுவரை காரமலையின் அடிவாரம் இருந்த மூன்று குன்றுகளின் மேலிருந்து பறம்புவீரர்கள் கண்காணித்து க்கொண்டிருந்தனர். இப்போது ஆறு குன்றுகளின் மேலிருந்து கண்காணிக்கவேண்டியிருந்தது. வந்து குவியும் படைவீரர்களின் எண்ணிக்கை எல்லையில்லாத விரிவை எய்திக்கொண்டிருந்தது.
மூவேந்தர்களும் படையை ஒரு முனையில் குவிக்கின்றனர் என்ற செய்தி உறுதிப்பட்ட பிறகு, பறம்பின் எல்லா திசைகளிலிருந்தும் வீரர்கள் கீழ்த்திசைக்கு அழைக்கப்பட்டனர். வாரிக்கையனும் கூழையனும் சில நாள் இடைவெளியில் வேட்டுவன்பாறைக்கு வந்துசேர்ந்தனர்.
கருவூலப் பொறுப்பாளர் வெள்ளி கொண்டாரைத் தவிர மதுரையின் அரண்மனை நிர்வாகப் பொறுப்பிலிருந்த அனைவரும் வெங்கல்நாட்டுக்கு வந்துசேர்ந்தனர். குட்டநாட்டு அமைச்சன் நாகரையன் வந்துசேர்ந்தான். ஆயிமலையில் நடைபெற்ற தாக்குதலில் குடநாட்டுத் தளபதி எஃகல்மாடன் தலைமையிலான படை மட்டுமே முழுமுற்றாக அழிவுற்றது. குட்டநாட்டுத் தளபதி துடும்பன் தலைமையிலான படை பறம்புக்குள் நுழையாமலேயே நின்றுவிட்டது. இதன் பின்னணியில் உதியஞ்சேரலின் துரோகமும் அடங்கியுள்ளதாக நினைத்த குடநாட்டு வேந்தன் குடவர்கோ இன்னொரு கூட்டுப்போரில் பங்கெடுக்க விரும்பவில்லை. எனவே, குட்டநாட்டுப் படை மட்டுமே போர்க்களம் வந்தது. சேரநாட்டின் அமைச்சராக நாகரையனே விளங்கினான். சோழநாட்டு அமைச்சன் வளவன்காரியும் வந்து சேர்ந்தான். பாண்டியப் பேரரசின் தலைமை அமைச்சர் முசுகுந்தர் எல்லோரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
அமைச்சர்களின் சந்திப்பு நடந்த பிறகுதான் வரப்போகும் படைகளின் தன்மையும் எண்ணிக்கையும் முழுமையாகத் தெரியவந்தன. அந்தப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள், அவற்றைச் செப்பனிடுவதற்கும் புதிதாக உருவாக்குவதற்கும் தேவையான ஏற்பாடுகள், உணவு ஏற்பாடுகள், பண்டகச்சாலைகள், மருத்துவர்கள், சிகிச்சைக்கான பகுதிகள், குதிரைகளுக்கும் யானைகளுக்குமான கட்டுத்தறிகள், போர்க்களத்துக்கான தேர்கள், அவற்றுக்கான பராமரிப்பாளர்கள், பிற கருவிகள், போர் விலங்குகளுக்கான தானியங்கள், கூலங்கள் ஆகிய எல்லாவற்றையும் செம்மையுறக் கணக்கிட்டனர்.
பறம்பின் தரப்பில் ஆயத்தங்களைத் தொடங்கவேண்டியதைப் பற்றிய உரையாடல் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. பாரி ஒப்புதல் வழங்கிய பிறகு சிறுபாழி நகரில் ஆயுதங்களை உருவாக்கிக்கொண்டிருந்த அத்தனை பேரும் கீழ்த்திசைக்கு இடம் மாறினர். மூவேந்தர்களின் போர்ப்பாசறை, வேட்டுவன் பாறையிலிருந்து பலகாதத் தொலைவில் இருப்பதால் தங்களின் இருப்பிடத்தையும் மாற்ற முடிவுசெய்தனர்.
வேந்தர்களின் படைக்கலக் கொட்டில் செம்மையுற வடிவமைப்பதற்கான வேலைகள் தொடங்கின. மதுரையிலிருந்து தலைமை அமைச்சர் முசுகுந்தர் வரும்போதே அவருடன் அரண்மனையின் தலைமைக் கணியன் அந்துவனும் வந்திருந்தான். மூலப்படைப் பாசறை அமைக்கப்போகும் நிலப்பகுதிக்கு, மூன்று நாட்டு அமைச்சர்களும் அந்துவனும் மாணாக்கர்கள் சிலரும் புறப்பட்டுப் போயினர். அவர்கள் சென்று சேரும்போது மையூர்கிழார் வரவேற்க நின்றுகொண்டிருந்தார். உடன் பூசகர்களின் குழு ஒன்றும் இருந்தது. முசுகுந்தர் அந்தப் பெரும்நிலப்பரப்பைக் குதிரையில் இருந்தபடியே பார்த்தார். காரமலையின் அடிவாரத்தில் சற்றே திமில் முறுக்கியிருக்கும் பெரும்மேடாக அந்த இடம் இருந்தது. மேட்டின் நடுப்பகுதியில் இறங்கி நின்றனர். மழைநீரை எவ்வளவு குடித்தும் நெகிழ்ந்து கொடுக்காத இறுக்கத்தோடு மண் இருந்தது.
அவர்கள் வந்த சிறிது நேரத்தில் பாண்டியப் பேரரசின் சிறப்புமிக்க முதுயானையை அழைத்துவந்தனர். தாழம்பூ நிறத் தந்தமும் வட்டமாய் அகன்று நடுவில் குழிந்த கும்பங்களும் நீண்டுநெளியும் அழகான வாளும் நாண்பூட்டிய வில்லினையொத்த முதுகெலும்பும் உடைய `பவளவந்திகை’ எனும் பெயர்கொண்ட அந்த யானை, பாசறை நிலத்துக்கு வந்துசேர்ந்தது. உடன் மதுரையின் யானை கட்டுத்தறிப் பொறுப்பாளர் அல்லங்கீரனும் கோட்டைத் தளபதி சாகலைவனும் வந்தனர்.
வண்ணத்தட்டில் வைக்கப்பட்டிருந்த பூக்களையும் கனிகளையும்கொண்டு அந்த இடத்தில் சிறு வழிபாடு ஒன்றை பூசகர் நடத்தினர். பிறகு அந்துவன் கையசைத்து உத்தரவிட்டான். அதுவரை கீழே நின்றிருந்த பாகன், யானையின் மீதேறி அமர்ந்தான். பவளவந்திகை நடக்கத் தொடங்கியது. பாகன் தன்னுடைய கால்கள் பவளவந்திகையின் காதுகளின் பின்புறத்தைத் தொட்டுவிடாமல் மடக்கி வைத்துக்கொண்டான். எந்தத் திசைக்குப் போகவேண்டும் என்ற குறிப்பேதும் பாகனின் கால்கள் சொல்லாததால் யானை அதன் விருப்பத்துக்கு நடந்தது. அந்தப் பெருமேடு முழுவதும் குறுக்கும்நெடுக்குமாக நடந்த பவளவந்திகை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வந்துசேர்ந்தது.
இப்போது அந்துவன் தன் மாணாக்கர்களை அழைத்துக்கொண்டு யானையின் காலடிகளைப் பார்த்தபடியே உள்ளே போனான். யானையின் காலடி, ஆமையின் ஓடு போன்ற வடிவம் கொண்டது. வெளிவட்டம் மட்டுமல்ல, உள்ளேயும் ஆமையின் ஓட்டில் இருப்பது போன்று விண்மீன்களின் வடிவம்கொண்ட கோடுகள் இருக்கின்றன. யானையின் பாதத்தில் இருக்கும் ரேகைக்கோடுகள் அவை. யானையின் நான்கு காலடிகளும் நான்குவித ரேகைகளைக் கொண்டவை. பவளவந்திகையின் காலடிகள் அந்தப் பெருமேடெங்கும் பதிந்துகிடக்க அவற்றைக் கூர்ந்து கவனித்தபடி அந்துவனும் அவன் மாணாக்கர்களும் நடந்து கொண்டிருந்தனர்.
காலடியின் அச்சில் அசையாமல் பதிவுகொண்ட விண்மீன்களின் வடிவு எந்தத் திசைநோக்கி அமைந்திருக்கிறது என்பதைக் கணித்தபடி ஒவ்வொரு தடத்தையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
மழையின் ஈரம் காயாமல் இருந்ததால் காலடித்தடத்தின் உட்கோடுகள் மண்புழுக்களைப் போல் எங்கும் நெளிந்து கிடந்தன. மாணாக்கர்கள் தேர்வுசெய்த காலடிகளை அந்துவன் போய்ப் பார்த்தபடியிருந்தான். நெடுநேரமானது. ஆனாலும் காலடியின் உள்வடிவங்களை உற்றுப்பார்த்து ஒன்றொடு ஒன்றை ஒப்பிட்டுக் கொண்டிருந்தான் அந்துவன். இறுதியாக மூன்று காலடிகளைத் தேர்வுசெய்தான். பெருமேட்டின் உச்சிப்பகுதியில் அமைந்த காலடித்தடத்தில் பாண்டியப் பெருவேந்தனுக்கான பாசறையை அமைக்க இடம் குறித்தான். அதிலிருந்து மிகத்தள்ளித் தென்புறக் காலடித்தடத்தில் சேரவேந்தனுக்கான இடத்தையும் வடகிழக்குப் பகுதியில் சோழனுக்கான இடத்தையும் அந்துவன் தேர்வுசெய்து தந்தான்.
மூன்று பேரரசர்களும் தங்கப்போகும், அவர்களைச் சுற்றிப் பல்லாயிரம் வீரர்கள் மொய்த்துக்கிடக்கப்போகும் அந்த இடத்துக்கு `மூஞ்சல்’ எனப் பெயரிட்டார் முசுகுந்தர். மூலப்படை நிலைகொள்ளப்போகும் படைக்கலக் கொட்டில் மூஞ்சலில் உருவாகத் தொடங்கியது. பேரரசர்களின் பாசறைக் கூடாரம் மிகப் பெரியதாகவும் வசதிமிக்கதாகவும் உட்பாதுகாப்பு அரண்கொண்டதாகவும் அமையத் தொடங்கியது. அவர்களைச் சுற்றி இளவரசர்களும் முக்கியமான சிற்றரசர்களும் தங்குவதற்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன.
குவிக்கப்படும் படைகளை விட்டு மிகத்தள்ளி, பெருமேடு ஒன்றில் விரிவுகொண்ட கூடாரங்கள் எண்ணற்றன அமைக்கப்படுவதை, குன்றின் மேல் நின்று பறம்புவீரர்கள் பார்த்தபடியிருந்தனர். எதிரிப்படைகள் குவிக்கப்ப ட்டிருக்கும் இடத்தை நோக்கி அதற்கு நேரெதிர்த் திசையில் தங்களுக்கான இடத்தைத் தேக்கன் தேர்வுசெய்தான். காரமலையின் சரிவில் நாகக்கரடு இருக்கிறது சில காதத்தொலைவுக்கு நீண்டுகிடக்கும் கரட்டுமேடு இது; வேட்டுவன்பாறை யளவே உயரம்கொண்டது. பறம்பின் வீரர்கள் நிலைகொள்ள இது ஏற்ற இடம் என்று தேக்கன் முடிவுசெய்தான்.
அவற்றுக்குச் சற்று மேலே காரமலையில் இருபது பனை உயரத்தில் இரலிமேடு இருக்கிறது. எண்ணற்ற குகைப்பாறை களைக்கொண்ட இடம் அது. ஆயுதங்களை வைக்கவும் மருத்துவப் பயன்பாட்டுக்கும் ஏற்ற இடமாகவும் அது இருக்கும் எனக் கருத ப்பட்டாலும், அந்த இடத்தைத் தேர்வுசெய்யச் சற்றே தயங்கினான் தேக்கன். வாரிக்கையனோ துணிந்து தேர்வுசெய்யச் சொன்னான். காரணம், அந்தக் குகைகளின் தன்மை. வேர்க்கொடியைப்போல ஒன்றையொன்று இணைத்துச் செல்லும் எண்ணற்ற குகைகளைக்கொண்ட இடம் அது. மிக நன்கு பழக்கப்பட்டவர்களால் மட்டுமே அதற்குள் போய் வெளிவர முடியும். போரின்போது வீரர்கள் விரைவாக வந்து திரும்பும் தன்மையுடன் அமைவிடம் இருக்க வேண்டும் என்று தேக்கன் தயங்கினான். ஆனால் வாரிக்கையனோ, ``இதுதான் போருக்குப் பொருத்தமான அமைவிடம்’’ என்றான்.
இரலிமேட்டின் இடதுபுறம் இருந்த சமதளமான பகுதிகளிலும் மலைச்சரிவுகள் முழுமையும் குடில்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின. பறம்புவீரர்கள் எல்லா திசைகளிலிருந்தும் இரலிமேட்டுக்கு வரத் தொடங்கினர். ``இவ்விடம்தான் நாம் முகாமிட்டுள்ள இடம் எனத் தெரிந்த கணத்திலிருந்து, எதிரிகள் நம்மைக் கண்காணிப்பார்கள். மையூர்கிழார் ஆள்கள் அவர்களுக்கு நன்கு உதவிசெய்யக்கூடும். எனவே, பறம்புவீரர்கள் இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் வந்து சேர்வதையே எதிரிகளால் கணிக்க முடியாதபடி இருக்க வேண்டும்” என்றார் வாரிக்கையன்.
``இரவு அடிக்கடி மழை பெய்வதால், சுளுந்துக் கம்பை வெட்டி, பந்தம் ஏற்றுங்கள்’’ என்றார். சுளுந்துக் கம்பைக் கூராக வெட்டி பந்தம் ஏற்றினால் அது அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும். கீழே போட்டு மண் அள்ளிக்கொட்டினால்தான் அணையும். மற்றபடி மழைத்துளிக்கெல்லாம் எளிதில் அணையாது.
சமதளத்திலிருந்து பார்த்தால் குகையின் தன்மையை எளிதில் மதிப்பிட முடியாது. ஒவ்வொரு குகைக்குள்ளும் எண்ணிலடங்காத வீரர்கள் தங்கியிருக்க முடியும். குகைகளின் தன்மை, நீர்க்கசிவுகொண்ட குகைகள், நன்கு காற்றோட்டம் உள்ள குகைகள், மாட்டு மந்தைகளையே அடைக்கக்கூடிய பரப்பைக் கொண்ட குகைகள் என அத்தனையையும் வகை பிரித்து வீரர்களுக்கு விளக்கினார் வாரிக்கையன்.
குகைகளுக்குள் உரிய இடங்களில் விளக்குகளை அமைத்து, குறியீடுகளை உருவாக்கினார். பறம்புவீரர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். சிறுபாழியில் இருந்த தொழிற்கூடங்கள் அத்தனையும் இரலிமேட்டுக்கு இடம்பெயர்ந்தன. பெரும்பான்மையான குகைகள் ஆயுதக்கூடங்களுக்காக மட்டுமல்லாமல் உலைக்களங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டன. மிகவிரிந்த நிலவமைப்பும் காற்றோட்டமும் கொண்ட குகைகள் உலைக்களங்களால் நிரம்பின. அவை மட்டுமல்லாமல் வெளிப்புறத்திலும் எண்ணற்ற உலைக்களங்களை அமைத்துக் கொண்டிருந்தனர்.

குதிரைகளுக்கான கட்டுத்தறிகள் இரலிமேட்டின் தென்புறச் சரிவில் அமைக்கப் பட்டுக்கொண்டிருந்தன. குகைகளுக்கும் கட்டுத்தறிகளுக்கும் இடையில் உணவுக் கூடங்களை அமைத்தனர். மருத்துவக்கூடங்கள் அமைப்பது பற்றிப் பேசப்பட்டது. ``இந்தப் போரில் மருத்துவர்களின் பணி மிக முக்கியமானதாக இருக்கப்போகிறது. எனவே, முறியன் ஆசானை அழைத்துவர வேண்டும்’’ என்றார் பழையன்.
நோய்க்கான மருந்தைத் தருவதில் வல்லவர்கள் எண்ணற்றோர் உள்ளனர். ஆனால், போரில் ஏற்படப்போவது காயங்களும் முறிவுகளும்தான். அவற்றுக்கு மருந்தளிப்பதில் மிக வல்லவர் முறியன் ஆசான்தான். பச்சைமலையின் வடதிசையில் ஓடும் மறையாற்றின் கரையில் அவர் இருக்கிறார். ``வயதாகி மிகத் தளர்ந்த அவரை இவ்வளவு தொலைவு வரவழைக்க வேண்டுமா?” எனத் தயங்கினான் தேக்கன்.
வாரிக்கையனோ, ``கட்டாயம் அவர் இங்கு நம்மோடு இருக்க வேண்டும்” என்றார்.
சிவிகையில் உட்காரவைத்துத் தூக்கிவரும் எண்ணத்தோடு செய்தி அனுப்பப்பட்டது. முதலில் தயங்கிய முறியன் ஆசான், பிறகு ஒரு நிபந்தனையோடு வர ஒப்புக்கொண்டார். “எனது சிவிகையைத் தூக்கிவர இருவரை மட்டுமே அனுப்ப வேண்டும். அவர்களும் என்னைக் கொண்டுவந்து சேர்க்கும் வரை உணவேதும் உண்ணக் கூடாது.”
தேக்கன் உள்ளிட்ட எல்லோரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ``பத்திலிருந்து பன்னிரண்டு நாள் பயணத் தொலைவை எப்படி உணவின்றிக் கடக்க முடியும்? அதுவும் சிவிகையைத் தூக்கிக்கொண்டு!” எனப் பலரும் தயங்கியபோது வாரிக்கையன் சொன்னார், ``மலைப்பாதையில் உணவு ஏதுமின்றி சிவிகையைத் தூக்கிவரும் வீரர்கள் இரண்டு அல்லது மூன்று நாள்கள் வர முடியும். அதற்குப் பிறகும் அவர்கள் ஓடிவந்தால் மயக்கமடைந்து வீழ்வார்கள். அவர்களை குணப்படுத்தி மீண்டும் சிவிகையைத் தூக்கவைப்பது மருத்துவராகிய அவருடைய வேலை. நாம் ஏன் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்?” என்றார்.
சரியென ஒப்புக்கொண்ட தேக்கன், வலிமை மிகுந்த போர்வீரர்கள் இருவரைத் தேர்வுசெய்தான். ஆனால் வாரிக்கையனோ, ``அவர்கள் வேண்டாம்” என்று சொல்லி, தோற்றத்தில் எளிமையான இருவரை அனுப்பிவைத்தார்.
பன்னிரண்டு நாளில் வந்து சேரவேண்டிய அவர்கள் எட்டாம் நாள் காலையிலே வந்துசேர்ந்தனர். இதுதான் நடக்கும் என வாரிக்கையனுக்குத் தெரியும். எனவே, அவர் வியப்பேதுமடையவில்லை. ஆனால், மற்ற அனைவரும் வியப்பால் கிறங்கிப்போனார்கள். சிவிகையைத் தூக்கிவந்த இருவரும் புறப்பட்ட இடத்திலிருந்து இப்போதுவரை உணவு ஏதும் உண்ணவில்லை; முழுவேகத்தோடு வந்துசேர்ந்துள்ளனர் என்ற செய்தி வீரர்கள் எல்லோருக்கும் பரவியது. எப்படி இது நடந்தது எனப் பலரும் பேசிக் கொண்டிருக்கையில் மருத்துவர்களிடமிருந்து உண்மை வெளிவந்தது, ``முறியன் ஆசான் செய்து வைத்துள்ள திங்கள் மூலிகையை உட்கொண்டால், பல நாள்களுக்குப் பசியெடுக்காது; ஆற்றலும் குறையாது” என்று.
மருத்துவனின் வருகை மருத்துவத்தால் அறியப்பட வேண்டும். முறியன் ஆசானின் வருகை அப்படியே அறியப்பட்டது. பறம்பின் அனைத்து வகையான மருத்துவர்களும் முன்னரே இரலிமேட்டுக்கு வந்துசேர்ந்தனர். மருத்துவப் பேராசானோடு பணிசெய்யும் வாய்ப்புக்காகப் பல காலம் காத்திருந்தவர்கள் அவர்கள்.
போர் என்பது, எதிரிகள் இருவருக்கிடையில் நடப்பது மட்டுமன்று; வீரர்களுக்கும் மருத்துவர்களுக்கு மிடையில் நடப்பதும்கூட. எதிரிகளுக்கு மருத்துவனால் குணப்படுத்த முடியாத காயங்களை உருவாக்கவே ஒவ்வொரு வீரனும் நினைக்கிறான். `எதிரிகள் எவ்வளவு காயத்தை உருவாக்கினாலும் குணப்படுத்தி மீண்டும் வீரனை வாள் ஏந்தவைப்பேன்’ என்றே ஒவ்வொரு மருத்துவனும் மூலிகைச்சாற்றைப் பிழிகிறான்.
மருத்துவனின் சிகிச்சை மீதிருக்கும் நம்பிக்கையே வீரனின் துணிச்சலைப் பல நேரங்களில் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு நாளும் போர் முடியும் கணத்தில்தான் போரை அறிந்துகொள்ளுதல் தொடங்குகிறது. அன்றைய இரவின் காட்சிகள்தாம் மறுநாள் அவனது மனஉறுதியைத் தீர்மானிக்கிறது. மரணமெய்தியவர்கள் மரணத்தின் மீது அச்சமூட்டுவதில்லை. உடல் சிதைக்கப்பட்டு, மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாமல், எங்கும் கதறிய ஓசையோடு இழுபட்டுக் கிடப்பவர்கள்தாம் ஒவ்வொரு போர்வீரனையும் நிலைகுலையச் செய்கிறார்கள். அதனால்தான் போர்க்களத்தில் தாக்குண்டவர்களை மருத்துவசாலை நோக்கித் தூக்கிவரும் வேலையை வீரர்கள் செய்யக் கூடாது எனப் பேரரசுகள் விதிசெய்துள்ளன; அதைச் செய்வதற்குத் தனிப்படையை அமைத்துள்ளன. போரின் விதியை வீரனின் வாளும் மருத்துவனின் பச்சிலைகளும் இணைந்தே தீர்மானிக்கின்றன.
பறம்புவீரர்கள் இணையற்ற நம்பிக்கையோடு வாளினை ஏந்தவும் நாணினை இழுக்கவும் எதிரிப் படையைச் சிதைத்து முன்னேறவும், மருத்துவர்களும் முக்கியக் காரணம். அதுவும் முறியன் ஆசான் களம் நோக்கி வந்துள்ள செய்தி பறம்புவீரர்களுக்குக் கட்டற்ற வேகத்தைக் கொடுத்தது. மரணத்தை மிதித்து நடக்க ஒவ்வொரு வீரனும் ஆசைப்பட்டான்.
முறியன் ஆசான் இரலிமேட்டுக்கு வந்த அன்றுதான் மூஞ்சலில் வேந்தர்களுக்குக் கூடாரங்கள் அமைக்கும் பணி முடிவுக்கு வந்தது. மூஞ்சல் பகுதிக்கு மட்டும் தனித்துவமான பாதுகாப்பு அரண்கள் உருவாக்கப்பட்டன. மூவேந்தர்களுக்கு மூன்று பெருங்கூடாரங்கள். மூவரும் சந்தித்து உரையாட மாளிகை வடிவிலான பெருங்கூடாரம் ஒன்று. வேந்தர்களுக்கான பணியாளர்கள் மருத்துவர்கள், உணவுச்சாலைகள் ஆகியவற்றுக்காக மூன்று கூடாரங்கள். போரில் பங்கெடுக்கும் அரச குடும்பத்தினர் தங்குவதற்காக ஐந்து கூடாரங்கள் என்று மொத்தம் பன்னிரு கூடாரங்கள், ஆயுதப்பயிற்சிக்கான களம் என அனைத்தும்கொண்ட விரிவான அமைப்போடு மூஞ்சல் நகர் தயாரானது.

மூஞ்சலின் பாதுகாப்புக்குத் தனித்த அரண் அமைக்கப்பட்டது. பெரும்பெரும் மரத் தூண்களாலும் ஆயுதங்களாலும் அமைக்கப்பட்ட அரண் அது. அரணுக்கு வெளியில்தான் படைகள் பலகாதத் தொலைவுக்குப் பரவியிருந்தன. இரவில் கடுங்குளிர் இருந்தாலும் பகற்பொழுதின் வெயில் இன்னும் சூடேறாமல்தான் இருந்தது. மூஞ்சலின் அரண்காவலர்கள் நான்கு முனைகளிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மேடையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர். தென்திசையில் நின்றிருந்த படை வீரர்களிடமிருந்து உற்சாகப் பேரோசை மேலேறிவந்தது.
கடல்போல் பரவிக்கிடந்த படைவீரர்களின் வாழ்த்தொலி முழங்க உதியஞ்சேரலின் தேர் தென்திசையிலிருந்து மூஞ்சல் நோக்கி வந்துகொண்டிருந்தது. தேருக்கு முன்னால் சேரநாட்டுத் தளபதி துடும்பன் குதிரையில் வந்துகொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் கவசவீரர்கள் அணிவகுத்து வந்தனர். நாணேற்றப்பட்ட வில்லைப் பதாகையில் தாங்கிய வீரன் முதலாவதாக வர, அவனைத் தொடர்ந்து அணியணியாய் சேரவீரர்கள் வந்து கொண்டிருந்தனர்.
மூன்று பேரரசுகளின் அமைச்சர்களாகிய முசுகுந்தரும் நாகரையரும் வளவன்காரியும் உதியஞ்சேரலை வரவேற்க மூஞ்சலின் வாயிலில் காத்துநின்றனர். முசுகுந்தர், பாண்டிய முறைப்படி அவருக்கான வரவேற்பை வழங்கினார். உதியஞ்சேரல் மூஞ்சலுக்குள் நுழைந்தான். அரசகுல முதுயானை பவளவந்திகை மாலை சூட்டி, வணங்கி, தனது முதுகின் மேலிருந்த அம்பாரியில் ஏற்றிக்கொண்டது.
மூஞ்சலின் வீதியெங்கும் நிறைந்துள்ள பாதுகாப்பு வீரர்களின் வாழ்த்தொலிகளை ஏற்றபடி தனக்கான பாசறைக் கூடாரத்துக்குள் நுழைந்தான் உதியஞ்சேரல்.
தான் நினைத்ததைவிட உதியஞ்சேரல் இளமையோடு இருக்கிறார் என்று கருதிய முசுகுந்தருக்கு, அவனுடைய தோளின் மேல் கருங்குரங்குக்குட்டி ஒன்று உட்கார்ந்திருப்பது ஏன் என்பது புரியவில்லை.

உதியஞ்சேரல் வந்த மறுநாள் சோழப் பேரரசனுக்கான வாழ்த்தொலிகளால் படைக்கலக்கொட்டில் குலுங்கியது. புலிக்கொடி ஏந்திய பதாகையை யானையின் மீது தாங்கிப்பி டித்த வீரன் முன்வர அவனைத் தொடர்ந்து பேரரசரின் தேர் வந்துகொண்டிருந்தது. தேருக்குள் தந்தையும் மகனும் இருந்தனர். செங்கணச்சோழனுக்குக் கால் முறிவுகொண்ட தால் அவனால் நின்று போரிட முடியாது. மற்ற இரு பேரரசர்களும் போரில் நேரடியாக ஈடுபடும்போது சோழப்பேரரசர் மட்டும் நேரடிப்போரில் ஈடுபடாமலிருந்தால் அது சோழநாட்டுக்குப் பேரவமானமாகும். எனவே, ``மகனின் சார்பில் நான் போரில் பங்கெடுப்பேன்” என்று கூறி, சோழவேலன் உடன்வந்தார்.
அன்று மாலை வீரமுண்டா வாத்தியம் இடியென முழங்கத் தொடங்கியது. பேரிகையின் ஓசையோ எல்லையில்லாத அதிர்வை உருவாக்கியது. எங்கும் போர்க்களத்துக்குரிய கருவிகள் இசைக்கப்பட்டன. அணிவகுத்து வந்த யானைகளின் மணியோசை பேரிகையை விஞ்சிக்கொண்டிருந்தது. வீரர்கள், விண்ணைப் பிளப்பதைப்போல முழக்கமிட்டனர். வெடிப்புற்ற தந்தமும் விளைந்த நகமும், முதுகினில் சங்கு வடிவப் புள்ளிகளையும்கொண்ட பாண்டியநாட்டுப் பட்டத்துயானையின் மீது அமர்ந்தபடி மூஞ்சலுக்குள் நுழைந்தார் குலசேகரபாண்டியன்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...