
தமிழ்ப்பிரபா, படம்: ஜெ.வேங்கடராஜ்
``ஒரு புத்தகத்தை நாம படிச்சு முடிச்சுட்டாலே அது நமக்குச் சொந்தமில்லைங்கிறது என் கருத்து” என்று சொல்லும் மகேந்திரகுமார், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் இருந்த நூல்களை எல்லாம் சிறிய பீரோவில் வைத்துத் தெருவோரத்தில் கொண்டுவந்து வைத்தார். அவர் ஆரம்பித்துவைத்த ‘ஆள் இல்லா நூலகம்’, தற்போது தமிழகம் முழுவதும் மொத்தம் 67 இடங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறது.
நூலகம் தொடங்கிய நோக்கத்தைப் புகைப்படங்களுடன், தெரிந்த எழுத்தாளர்கள், நண்பர்கள் அனைவரிடமும் தகவலாக அனுப்பியிருக்கிறார். விளைவு, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சேர்ந்திருக்கின்றன. மகேந்திரகுமார் செய்துவரும் இந்தப் பணி, சுற்றுவட்டாரத்தில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. அவர் செய்வதுபோன்றே தங்கள் வசிப்பிடங்களில் செய்ய மற்றவர்களுக்கும் ஆசை. ஆனால், அவர்களிடம் புத்தங்கள் இல்லை எனத் தெரிந்தவர் தன்னிடம் உள்ளவற்றை கட்டைப்பையில் போட்டு வெயில், மழை பாராது கையோடு கொண்டுசேர்க்க... அப்படித்தான் பரவலானது இந்த ஆள் இல்லா நூலகம்.

இந்த நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை யார் வேண்டுமானாலும், எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்; எப்போது வேண்டுமானாலும் திருப்பி அளிக்கலாம். தொகையாக எதுவுமே செலுத்தத் தேவையில்லை, ஓர் இடத்தில் எடுத்த புத்தகத்தை அங்கேயே வைக்க வேண்டும் என்றுகூட அவசியமில்லை, நாம் வசிக்கும் இடத்தில் ஆள் இல்லா நூலகம் எங்கு இயங்குகிறதோ அங்கே கொடுத்தாலே போதும் எனப் பல வித்தியாசமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது மகேந்திரகுமாரின் ஆள் இல்லா நூலகம். இவற்றை ஒன்றிணைக்கும் இணையதளத்தையும் அவரே உருவாக்கியிருக்கிறார். www.rfllibrary.com என்ற இணையதளத்தில் இந்த வகை நூலகங்கள் எங்கெங்கு செயல்படுகின்றன என்ற தகவல் இருப்பதுடன், மாணவர்கள் தங்களுக்கு எந்தப் புத்தகம் தேவை என்பதை அதில் குறிப்பிட்டால், சீனியர் மாணவர்கள் அந்தப் புத்தகங்களை அளிக்கிறார்கள்.
``கல்வியறிவு, புத்தக வாசிப்பு இதையெல்லாம் அதிகமாக்கணும் என்பது ஆள் இல்லாத இந்த நூலகத்தின் அடிப்படை. மேலும் யாரும் இல்லாத இடத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்று நம்மை நாமே கவனிக்கவும், கண்காணிக்கவும் இது உதவும். இன்னிக்கு சக மனிதர்கள் மேல நம்பிக்கையில்லாத சூழல் நிலவுது. அந்த நம்பிக்கையை மீட்டெடுக்கிற சின்ன முயற்சியாத்தான் இதைத் தொடங்கினேன்” என்று சொல்லும் மகேந்திரகுமாருக்கு வயது 69.
``புத்தகத்தை வீட்டுல அடுக்கிவெச்சுட்டு அழகு பார்த்துட்டு மட்டுமே இருக்கிறது, அந்தப் புத்தகங்களுக்கும் அதை எழுதினவங்களுக்கும் நாம செய்ற மிகப்பெரிய துரோகம்னு நான் நினைக்கிறேன். இந்தத் துரோகம் என்னைச் சுற்றி நடக்காம பார்த்துக்கிறேன்” என்று புன்னகைக்கிறார் மகேந்திரன். இது மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தப்படும் நூலகம் என்பதால், தன் காலத்துக்குப் பிறகும் இது செயல்படும் என்று உறுதியாக நம்புகிறார் மகேந்திரன்.
நம்பிக்கை தொடரட்டும்!