மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 24

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 24
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 24

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 24

வினோத், எல்லோரையும்விட அதிகமாக பயந்துபோனான். மற்றவர்களுக் கெல்லாம் ‘ஒருவேளை லக்ஷ்மிதான் கொலைகாரியோ’ என்ற எண்ணம் மட்டும்தான் எழுந்தது. ஆனால், ‘லக்ஷ்மி சிக்கும்வரை ரம்யாவை விடமாட்டார்களே’ என்பதுதான் வினோத்தின் அதீத அச்சத்துக்குக் காரணம். அதோடு, இந்தமுறை விசாரணை கடுமையாக இருக்கும். அந்த இன்னொரு ரம்யா வந்து பழிவாங்குவாள் என்ற தயக்கமும் இப்போது விலகிவிட்டது போல இருந்தது. கடந்த இரண்டு வாரங்களாகக் கொலைகள் எதுவும் நடக்கவில்லை.

மஜூம்தார், ராம்சிங் இருவருமே லக்ஷ்மியைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்பதிலும், அவளை உடனே பிடித்து மொத்த உண்மையையும் கக்கவைக்க வேண்டும் என்பதிலும் கரன்ட் மாதிரி இருந்தார்கள். கைக்கு எட்டிய ஆதாரம் நழுவிப்போனதால் போலீஸ் எரிச்சலில் இருந்தது. ஒரு மாதத்தில் ஏழு கொலைகளைச் செய்துவிட்டு ஒரு பெண் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதுதான் மக்களுக்குத் தெரியும். அவள் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தாளா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ‘என்னடா அவெஞ்சர் பார்த்துட்டு காதுல பூ சுத்துறீங்களா?’ என ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் கழுவி ஊத்துவார்கள். சோஷியல் மீடியாவில் ஒவ்வொரு கொலைக்கும் காரணம் கேட்டு ஏற்கெனவே கிழித்துக்கொண்டி ருந்தார்கள். நல்லவேளையாக கமல், ரஜினி இருவரும் தனிக்கட்சி ஆரம்பித்து மீம்ஸ் கிரியேட்டர்களின் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள். ஹெச்.ராஜா மட்டும் இல்லையென்றால், இந்தக் கொலைக்காகத் தமிழ்நாட்டு போலீஸின் மானம் கப்பல் ஏறியிருக்கும். அவர், அவ்வப்போது எதையாவது சொல்லி அனைவரையும் கவன ஈர்ப்பு செய்துகொண்டிருக்கிறார். 

லக்ஷ்மியைப் பிடிப்பதன் மூலம் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் இருந்தது டி.ஜி.பி அலுவலகம். தனிப்படை அமைத்து நகரின் எல்லாப் பகுதி களிலும் தேட ஆரம்பித்தனர். தேடுதல் வேட்டை யில் இறங்கிய எல்லோரிடமும் லக்ஷ்மியின் புகைப்படம் இருந்தது. அவள் தன் குழந்தை யுடன்தான் போயிருக்கிறாள் என்பதால், பிடித்து விட முடியும் என்பதில் போலீஸுக்கு நம்பிக்கை அதிகமாக இருந்தது. ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம் எல்லாவற்றிலும் சாதாரண உடையில் போலீஸ் நடமாட்டம் அதிகம் இருந்தது. வாக்கி டாக்கிகளில் அனைவரும் தொடர்பில் இருந்தனர். டோல்கேட்களில் லக்ஷ்மியின் படம் ஒட்டப்பட்டிருக்க, கட்டணம் வசூலிப்பவர்கள் அனைவரும் ஒவ்வொரு பில்லுக்கு இடையிலும் கார்களில் இருப்பவர்கள்மீது கவனம் செலுத்தினர். குறிப்பாக, பெங்களூரு செல்லும் பஸ்களில் போலீஸார் கூட்டமாக ஏறி திடீர் சோதனைகள் நடத்திக் கொண்டிருந்தனர். ஓசூர் வரை இருந்த எல்லா டோல்கேட்களிலும் கான்ஸ்டபிள்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 24

மாலை முடிந்து இரவும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. லக்ஷ்மியின் நிலை பற்றி யாருக்குமே எதுவுமே தெரியவில்லை. ஒரு தடயமும் கிடைக்கவில்லை. இத்தனை போலீஸாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எந்த இடத்தில் லக்ஷ்மி இருப்பாள் என வினோத் குழம்பிவிட்டான். சென்னையிலேயே யாருடைய வீட்டிலாவது பதுங்கியிருக்கிறாளா? இவளைச் சந்தேகப்படுவதா, பரிதாபப்படுவதா என முடிவு செய்வதற்கு ஒரு பாக்கெட் சிகரெட் வரை ஊதித் தள்ளிவிட்டான்.
ரம்யா, போலீஸாரிடம் சொன்ன எல்லாத் தகவல்களையும் வினோத்திடமும் சொன்னாள்.

‘‘போலீஸ் மறுபடி வந்து பிடிச்சுட்டுப் போயிடுவாங்களான்னு பயந்துக்கிட்டே இருந்தா... மறுபடியும் ஜெயில்ல போட்டுடப் போறாங்கன்னு பயந்துதான் எங்கயோ போயிட்டா. அவளின் கணவர் வந்து கூட்டிட்டுப் போயிருப்பாரோன்னு எனக்கு டவுட். காலையில எல்லோரும் தூங்கிக் கிட்டு இருந்தபோதே அவ காணாமப் போயிட்டா.’’

எத்தனை பேர் எத்தனை முறை கேட்டபோதும் இதையேதான் ரம்யா சொன்னாள். லக்ஷ்மி அதிகாலையிலேயே கிளம்பிச் சென்றிருக்க வேண்டும் என வினோத் நினைத்தான். சென்னை அவளுக்குச் சுத்தமாகத் தெரியாது. அவளின் கணவரும் அப்படித்தான். போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஓடி ஒளிந்துகொள்கிற அளவுக்கு அவர்களிடம் சாமர்த்தியமோ, எண்ணமோ இருந்திருக்க நியாயமில்லை.

ஓடி ஓடித் தேடுவதைவிட, யோசித்துத் தேட வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்தான் வினோத். லக்ஷ்மி வந்ததிலிருந்து நடந்த அனைத்தையும் முன்னும் பின்னுமாக ஓட்டிப் பார்த்தான். அவள்மீது சந்தேகமே வரவில்லை. அவள் அப்பட்டமான கிராமத்துப் பெண். அவளைச் சந்திக்க யாரும் வரவில்லை. ஒரே ஒரு முறை அவளின் கணவன் அவளிடம் போனில் பேசினான். அப்போதுகூட அவள் எதுவும் பதிலுக்குப் பேசவில்லை. பதிலுக்கு அழ மட்டுமே செய்தாள். வேறு யார்? வேறு யார்?

ஹோட்டலில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சற்றுத் தள்ளி ஒரு பெண் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. பேப்பரில் பார்த்த முகமாக இருக்கிறதே என அப்போதே வினோத்துக்குத் தோன்றியது. அவள் யதேச்சையாகப் பார்ப்பதாகத் தான் அப்போது நினைத்தான். இப்போது..? சிந்தனை அவன் மூளையைக் கிளறியது. அவள்..? அவள்..? அவளை அதற்கு முன்னர் எங்கேயோ பார்த்திருந்தான். வட்ட முகம். எடுத்ததற்கெல்லாம் புன்னகைக்கும் சுபாவம். ஆனால், அவள் உடனே ஹோட்டலைவிட்டு வெளியேறிவிட்டதுபோல இருந்தது. அவள் யார் என நினைவின் இடுக்குகளில் தூண்டில் போட்டுக் காத்திருந்தான். ஒரு யூகம்தான். ஒருவேளை அவள் யார் என்னத் தெரிந்துவிட்டால், லக்ஷ்மி எங்கே போனாள் என்பது தெரிந்துவிடும். சாதாரணமாக ஹோட்டலில் சாப்பிட வந்துவிட்டுப் போனவ ளாகவும் இருக்கலாம். வினோத் தூண்டில் வீசிவிட்டு, தொப்பியால் முகத்தை மூடிப் பொறுமையாகக் காத்திருந்தான்.

தன் பயணத் திட்டத்தில் சின்ன மாற்றம் செய்தான் கவின். டெல்லி சென்று பேராசிரியர் ராகுலையும் தீபாவையும் பார்த்துவிட்டு ஜெனீவா செல்வது. அதில் ஒரு நன்மை இருக்கும் என நினைத்தான். அவன் நம்பர் போட்டு எழுதி வைத்திருந்த பல விஷயங்கள் அர்த்தமற்றவை யாகிவிட்டன. டெல்லி ஏர்போர்ட்டில் இறங்கியதும் வழக்கப்படி தீபா கைகுலுக்கி வரவேற்றாள். தீபா, ‘‘எந்தப் பக்கம் போனாலும் மடை கட்றாங்களே’’ என்பதை ஹிந்தியில் சொன்னாள். ‘‘என்ன சொல்றே தீபா?’’ எனத் தமிழில் கேட்டான் கவின்.

‘‘ஸாரி... ஸாரி... இங்கிலீஷ்லயே பேசிக்குவோம்’’ என வழிக்கு வந்தாள். ‘‘இன்னைக்கே போயா கணுமா?’’ என்றாள்.

‘‘நான் போலீஸ்காரன் இல்ல. ஆனா, ஏதாவது லிங்க் கிடைக்கும். புரொபஸர் சொன்னபடி இருந்தா, குவாண்டம் என்டாங்கல்மென்ட்... அப்படி இப்படினு யோசிச்சேன். எதுவும் நடக்கல. போலீஸுக்கு ஏதாவது க்ளூ கிடைக்கட்டும். அப்புறம் வர்றேன். அதுக்கு முன்னாடி, ராகுல் சாரை இன்னொரு தரம் பார்க்கணும்.’’

தீபா புரொபஸர் ராகுலுக்கு போன் போட்டாள். ‘‘கொஞ்சம் நேர்ல வர முடியுமாம்மா’’ என அவரே அழைத்தார். ஏதோ அவசரம் தெரிந்தது.

‘‘சார்... கவினும் வந்திருக்கார். அழைச்சுட்டு வர்றேன்.’’

‘‘ரொம்ப நல்லதா போச்சு.’’

பேராசிரியரின் குரலில் இருந்த பரபரப்பு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. மெல்லிய நகைச் சுவை இழையோட நிதானமாகப் பேசக்கூடியவர் அவர். ஐ.ஐ.டி குவாட்டர்ஸில் அவருக்கு அழகான தோட்ட வீடு ஒதுக்கியிருந்தார்கள்.

அவர் வீட்டு வாசலருகே கார் நின்றபோது, தோட்டத்து ஊஞ்சலில் இருந்தபடி, ‘‘இங்க வாங்க’’ எனக் குரல் கொடுத்தார். எதிரே இரண்டு மூங்கில் நாற்காலிகள், நடுவே டீப்பாய், அதிலே ஸ்நாக்ஸ் எனத் தயாராக இருந்தார்.

‘‘ரெண்டு பேரும் வந்தது ரொம்ப சந்தோஷம். அந்த இன்னொரு பொண்ணு சம்பந்தமே இல்லாம இருந்தாள்னு சொன்னாங்க. எனக்கென்னவோ அவ மேல கொலைப் பழியைப் போட்டு கேஸை முடிச்சுடுவாங்களோன்னு யோசனையா இருக்கு.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 24

நாற்காலியில் அமர்ந்து குஜியா ஸ்வீட்டையும் வறுத்த முந்திரியையும் சுவைக்க ஆரம்பித்தாள். ‘‘நீங்களும் சாப்பிடுங்க’’ என்றார் கவினை நோக்கி.

கவின் சம்பிரதாயமாக ஒரு முந்திரியை எடுத்து வாய்க்குள் எறிந்துவிட்டு, ‘‘அவ மறுபடி காணாமப் போயிட்டா. போலீஸ் தீவிரமா தேடிக்கிட்டு இருக்காங்க’’ என்றான்.

‘‘அவ புள்ளப் பூச்சி. அவ நிச்சயம் கொலை செய்றவ இல்ல.’’

‘‘அவ மேல உங்களுக்குக் கொஞ்சமும் சந்தேகம் வரலையா?’’

‘‘இல்ல.’’

‘‘எனக்கும் இல்ல.’’ என்றாள் தீபா.

‘‘அது போலீஸுக்கும் தெரிஞ்சாலும் டெம்பரவரியா ஓர் உருவம் தேவையா இருக்கு.’’

பேராசிரியர் ஆழ்ந்த பார்வையுடன் நிதானமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘நான் இப்ப சொல்லப்போறது உங்களுக்கு ஒருவேளை அதிர்ச்சியா இருக்கலாம். சுசீந்திரன் என்ன சொல்ல வந்தாரோ, அது இதுவாத்தான் இருக்கும்.’’

தீபா, கடித்த ஸ்வீட்டை அப்படியே தட்டில் வைத்துவிட்டு, ‘‘என்ன சார் சொல்றீங்க?’’ என்றாள்.

‘‘கொலை நடந்த பாணி. எல்லாரையும் வாய் வழியா உறிஞ்சிக் கொன்னுருக்கா... இது பூமியில இருக்கிற பொண்ணுங்க செய்ற வேலை இல்லை.’’

‘‘ஆமா.’’ கவின் சொல்வதற்கு முன் தீபா சொன்னாள்.

‘‘ஓர் இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு ட்ராவல் பண்றது அவளுக்கு ஈஸி. சென்னையிலிருந்து டெல்லி... டெல்லியிலிருந்து பெங்களூரு... எல்லாமே!’’

‘‘எக்ஸாக்ட்லி’’ என்றான் கவின்.

‘‘இது எதுவுமே மனுஷங்க செய்ற வேலையா தெரியலை. அதுவும் லக்ஷ்மி மாதிரி ஒருத்தி செய்ற வேலையாத் தெரியலை.’’

‘‘லக்ஷ்மி கிடைக்கிற வரைக்கும் குவான்டம் என்டாங்கல்மென்ட் தியரியை நம்பினோம். ரம்யாவுடன் பொறந்த அந்த இன்னொரு பொண்ணுகிட்ட அந்த எக்ஸ்ட்ரா பவர் இருக்கும்னு நினைச்சோம். அதுவும் இல்லைனு ஆகிடுச்சே.’’

டாக்டர் எதையோ முக்கியமாகச் சொல்ல அவர் களைத் தயார்படுத்துகிறார் எனத் தெரிந்தது. தண்ணீர் குடித்து நிதானப்படுத்தினார். ‘‘சுசீந்திரன் அவரது கட்டுரையில எங்கயும் நான் சொல்லப் போறதைச் சொல்லல. ஆனா, அவர் கிட்டத்தட்ட யூகிச்சிருக்கார். அந்தக் கட்டுரையை அவர் ‘பி.யூ’ என சேவ் செஞ்சு வெச்சுருக்கார்.’’

‘‘உண்மையிலயே எனக்கு ஒண்ணும் புரியலை சார்!’’

‘‘கவின் உனக்குமா?’’

‘‘பி.யூ... ‘பேரலல் யூனிவர்ஸ்?’’ என்றான் சந்தேகமாக.

‘‘ஆமாம்.’’

தீபா இரண்டு பேரையும் மிரண்டு போய்ப் பார்த்தாள். இன்னொரு பிரபஞ்சமா?

(தொடரும்...)