மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 27

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 27
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 27

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 27

ந்த ரிசப்ஷனிஸ்ட் இன்டர்காமை எடுத்த பாவனையில் சற்றே உஷாரானான் ராமநாதன். ‘யாரையோ அழைக்கப் போகிறாள்... அது செக்யூரிட்டியா, இவளுக்கு சீஃப் பொறுப்பில் இருக்கிற இன்னொரு பெண்ணா, பெரிய டாக்டரா, அடியாளா அல்லது வினோத்தா?’

யாருடைய வருகையையோ கவனமாக எதிர்பார்த்தான். ஆறு அடிக்குக் குறைவில்லாத ஓங்குதாங்கான உயரத்தில் குண்டாக ஒருவன் விறைப்பாகவும் வேகமாகவும் தன்னை நெருங்குவது தெரிந்தது. ராமநாதன் ஆயத்த மானான். அந்த குண்டனின் அசைவுகள் தன்னை நோக்கியதாக இருப்பதை முழுமையாக உணர்ந்தான். அவன் அருகில் வந்து நின்று கொண்டு, பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுக்கவிருப்பதைக் கவனித்தான் ராமநாதன். எதையோ யூகித்து, ரிசப்ஷனிஸ்ட் பெண்ணைக் கவனித்தான். அவளும் ஏதோ நடக்கப் போவதை எதிர்பார்ப்பது புரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஜிம் பாயின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்துவிட்டான் ராமநாதன். அவன் நிலைதடுமாறிக் கீழே விழுந்தான். ‘எப்படியும் அவன் எழுந்திருக்க ஐந்து நொடிகள் ஆகும், அது தனக்குப் போதும்’ என்பதைப் புரிந்துகொண்ட ராமநாதன், ஒரே ஓட்டமாக வாசலை நெருங்கினான். ஓடும்போதே, ‘‘போலீஸுடன் வர்றேண்டா’’ என அச்சுறுத்தவும் தவறவில்லை. கீழே விழுந்த குண்டன், ‘‘செக்யூரிட்டி... அவனைப் பிடி’’ எனக் கத்தினான்.

ஏதோ திருடிவிட்டு ஓடுபவன் என்பதுபோல ராமநாதனைப் புரிந்துகொண்ட செக்யூரிட்டி, ஓடிவந்து பின்பக்கமாக இறுக்கி னான். ‘‘டேய், விடுடா... இந்த ஆஸ்பத்திரியில ஏதோ மர்மம் இருக்கு. இங்க என்னமோ நடக்குது’’ எனக் கத்தியபடி ராமநாதன் திமிறினான். அதனால் செக்யூரிட்டியும் அவனும் சேர்ந்தே கீழே விழுந்தனர். அதற்குள் அந்த குண்டன், ராமநாதனை நெருங்கிவந்து காலரைப் பிடித்து இழுத்து நிறுத்தினான். ‘‘விடுடா... விடுடா...’’ எனக் கதறக் கதற அவனைக் கழுத்தில் கைவைத்து இழுத்துச் சென்றான். ‘ஹாஸ்பிடலில் ஏதோ தகராறு செய்ய வந்தவனையோ, திருடிய வனையோ தண்டிக்க அழைத்துச் செல்கிறார்கள் போல’ என எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க... ராமநாதனை அதே அறையில் இழுத்துப்போய் இன்னொரு நாற்காலியில் பிணைத்தான் அந்த குண்டன்.

வினோத், லக்ஷ்மி என இருவருமே அங்கு அடைத்துவைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உண்மையிலேயே ராமநாதனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

‘‘எதுக்கு இவங்களை அடைச்சு வெச்சிருக்கீங்க இங்க?’’ என்றான் ராமநாதன். லக்ஷ்மி பயத்தில் அழுதபடி இருந்தாள். வினோத், ‘‘நானும் நேத்திலருந்து அதைத்தான் கேக்கிறேன்... ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாங்க. வேளா வேளைக்கு சாப்பாடு போடறாங்க. ரெஸ்ட் ரூம் போகணும்னு சொன்னா, ஜிம் பாய் பாதுகாப்போட அவுத்துவிடறாங்க... ஒண்ணும் தெரிய மாட்டேங்குது’’ என்றான்.

‘‘இப்ப புரிஞ்சிடும்.’’ என்றான் ஜிம்பாய். ‘‘சீஃப் டாக்டர் வந்து சொல்வாரு.’’

‘‘என்னது, சீஃப் டாக்டரா? அவர்தான் செத்துட்டாரே!’’

‘‘உஷ்!’’

அதற்கு மேல் ராமநாதன் பேசவில்லை.

ஜிம் பாய் சொன்னபடியே ஒருவர் வந்தார். அவர் டாக்டர் மாதிரி இல்லை. நகைக்கடை அதிபர் போல இருந்தார். லக்ஷ்மியைப் பார்த்தார்... ‘‘இவளா?’’ என்றார் ஜிம் பாயிடம். அவன் தலையசைத்தான். ‘‘இவங்க யார்?’’ என்றார் வினோத்தையும் ராமநாதனையும் பார்த்து.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 27

‘‘இந்தப் பொண்ணைத் தேடி வந்தவங்க.’’

‘‘எதுக்குடா தேடி வந்தீங்க?’’

வினோத், ‘‘இந்தப் பொண்ணை நீங்க ஏன் அடைச்சு வெச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கத்தான் நாங்க தேடி வந்தோம்’’ என்றான்.

‘‘என் அண்ணனைக் கொன்னது இவதான்னு சொன்னாங்க. அப்புறம் இவ இல்லைனு ரிலீஸ் பண்ணிட்டாங்க. எங்களுக்கு இவ மேல டவுட். அதனாலதான் இங்க அடைச்சுவெச்சுக் கண்காணிக்கச் சொல்லியிருக்கேன்.’’

‘‘சார்... சொன்னா கேளுங்க. இவ அப்பாவி. கர்நாடகாவுல தக்காளி பயிர் செஞ்சு சாப்பிடற சாதாரண பொண்ணு. தெரியாம இவளை அரெஸ்ட் பண்ணிட்டாங்க... அதனாலதான் அப்பவே ரிலீஸ் பண்ணி அனுப்பிவெச்சுட்டாங்க.’’

‘‘நீ யாரு?’’

‘‘நான் அட்வகேட்...’’

‘‘யாருக்கு?’’

‘‘இந்தப் பொண்ணோட அக்காவுக்கு... அவங்களுக்கும் இந்தக் கொலையில சம்பந்தம் இல்லனு ப்ரூவ் ஆகிடுச்சு.’’

‘‘அப்ப என் அண்ணனைக் கொன்னது யாரு? அந்தப் பொண்ணு கிடைக்கிறவரைக்கும் இவளைவிட மாட்டோம். உங்களையும்தான்’’ எனக் கோபமாகச் சொல்லிவிட்டுக் கதவை நோக்கி நகர்ந்தார் அந்த நபர். டாக்டர் குமரேசனை போட்டோஷாப்பில் கொடுத்துக் கொஞ்சமாக மாற்றம் செய்த மாதிரி இருந்தார். ‘‘சார்... இது தப்பு. நீங்க செய்யறது சட்டவிரோதம்’’ என ராமநாதன் கத்தியதை அவர் காதில் வாங்கவே இல்லை. 

அந்தநேரத்தில், திடீரென கதவு தானாகத் திறந்து... இவ்வளவு நாளும் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்த அந்த வேற்றுகிரக ரம்யா சர்வ இயல்பாக உள்ளே வந்தாள். வினோத்துக்கும் ராமநாதனுக்கும் ‘அடுத்து ரத்தம் கக்கப் போவது அந்தத் தம்பி டாக்டர்தான்’ எனத் தெளிவாகத் தெரிந்தது. அவள் நிதானமாக அந்த இடத்தை ஒருமுறை கண்களைச் சுழலவிட்டுக் கவனித்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஜிம் பாயின் ஸ்பைக் தலைமுடியைப் பிடித்து அவனை அசையவிடாமல் நிறுத்தி, அதே வேகத்தில் அந்தத் தம்பி டாக்டரை இழுத்தாள். இருவரையும் அங்கிருந்த ஜன்னல் திரைச் சீலையால் சேர்த்துக் கட்டினாள். அவர் ஏதோ கத்த முயற்சி செய்வதையும் அவதானித்து, திரைச் சீலையின் இன்னொரு பகுதியால் அவர்கள் வாயில் அடைத்தாள். அவர்களை, சுருட்டிய பாய் போல உருட்டிவிட்டவள், மற்ற மூவரையும் பார்த்தாள். வினோத்தை அடையாளம் கண்டதுபோல அவனை நெருங்கி வந்தாள். நாற்காலியுடன் கட்டப்பட்ட நிலையிலும் அவன் எழுந்திருக்க முயன்று, முடியாமல் அச்சம் காட்டினான். அவள், அவன் முகத்தருகே வந்து ‘ரத்தம் குடிக்கப்போகிறாளோ’ என அச்சத்தின் உச்சத்தில் இருந்தபோது, அவனது கைக் கட்டுகளை அவிழ்த்துவிட்டாள். வினோத் மெல்ல எழுந்து நின்றான். ‘‘தேங்க்ஸ்’’ என்றான்.

வேற்று மாநிலம்... வேற்றுகிரகம்... எல்லாவற்றுக்கும் ஆங்கிலம்தான்.

அவள் தன் லெதர் ஜெர்கின் ஆடையின் மார்புப் பகுதியில் கையை நுழைத்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினாள். அது, வியர்வை ஈரம் எதுவும் இல்லாமல் சூடாக இருந்தது.

சற்றே குழப்பத்துக்குப் பிறகு கொஞ்சம் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி மீண்டும் பிரஸ் மீட்டைத் தொடர்ந்தார் டெல்லி கமிஷனர்.

‘‘சார், இங்க என்ன நடக்குது? வந்தது அந்த பேரலல் யூனிவர்ஸ் பொண்ணுன்னு சொல்றீங்களா?’’ எல்லா நிருபர்களும் ஒரே குரலில் கேட்டனர்.

பேராசிரியர் ராகுல் அமைதியாக இருந்தார். ‘‘அது என் பிரமை என்றே இருக்கட்டும்... கேள்வி கேளுங்கள்’’ என்றார்.

‘‘சிம்பிளா சொல்லுங்க சார்... பேரலல் யூனிவர்ஸ்னா என்ன?’’

‘‘இங்கு எத்தனை பேருக்கு விஸ்வாமித்திரர் கதை தெரியும்?’’

‘‘புராணங்களில் வருகிற ரிஷி?’’

‘‘’ஆமாம்.’’

‘‘அவருக்கும் இந்த பேரலல் யூனிவர்ஸுக்கும் என்ன சம்பந்தம்?’’

‘‘சிம்பிளா புரியவைக்கச் சொன்னீர்களே... அதற்காகக் கேட்டேன். கடவுள்மீது கோபம் கொண்டு விஸ்வாமித்திரர், இதே போல இன்னொரு பிரபஞ்சத்தைப் படைத்தார் என்பது புராணக்கதை. உலகில் ஒன்று போலவே இன்னொன்று இருப்பதற்கு அவர்தான் காரணம் என்பார்கள். புலி போலவே பூனை, நரி போலவே நாய், காக்கை போல அண்டங்காக்கை... இப்படியெல்லாம் அவர் படைத்த உலகம்தான் திரிசங்கு சொர்க்கம்.’’

நானே கடவுள் என்ற ஆணவத்தில் விஸ்வாமித்திரர் இன்னொரு உலகத்தைப் படைத்ததாகச் சொல்லப்பட்டது சிலருக்கு நினைவிருந்தது.

‘‘திரிசங்கு சொர்க்கம்தான் பேரலல் யூனிவர்ஸா?’’

‘‘அந்த மாதிரின்னு சொல்ல வந்தேன். இது உதாரணம் மட்டும் தான்... நம்ம வேதத்திலேயே எல்லாம் இருக்கு என ஆரம்பித்துவிடப் போகிறார்கள்.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 27

‘‘பக்கத்தில்தான் பி.ஜே.பி ஆபீஸ். எப்படியும் அவங்க காதில் விழுந்திருக்கும்’’ எனச் சிரித்தார் ஒரு நிருபர்.

‘‘திரிசங்கு அளவுக்கு இது ஈஸி மேட்டர் இல்லை. அந்த யூனிவர்ஸ் நமது போட்டோ காப்பி போல இருக்கலாம் என்பது அறிவிய லாளர்கள் கணிப்பு. இதே மாதிரி ஒரு பிரஸ் மீட் அங்கே இப்போ நடக்கலாம் என்கிற அளவுக்கு...’’

‘‘அப்படின்னா... இங்க ஒரு ரம்யா வந்த மாதிரி, இங்க இருந்து அங்க யாராவது போயிருக்க வேண்டும், இல்லையா?’’ - லாஜிக்கான கேள்வி கேட்டான் ஸ்டார் டி.வி ரிப்போர்ட்டர்.

ராகுல் சந்தோஷமாகச் சிரித்தார். ‘‘இருக்கலாம்.’’ சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். ‘‘விசும்பு என நாம் சொல்கிற இந்த வெளியில் சில துளைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்வார்கள். அதாவது, காலத்தில் விழுந்த ஓட்டை. இந்த ஓட்டையில் நுழைந்தால் வேறு வேகத்தில் வேறு ஓர் இடத்தில் பிரவேசிக்க முடியும். டைம் மெஷின் சினிமா எல்லாம் பார்த்திருப்பீர்களே?’’

‘‘வார்ம் ஹோல்.. அதன் வழியாகப் பிரவேசிப்பது எப்படிச் சாத்தியம்?’’

‘‘செர்ன் அமைப்பில் நிகழ்ந்த கடவுள் துகள் ஆராய்ச்சியில் வெளிப்பட்ட மிகச் சிறிய பார்ட்டிகிள்... அதுதான் இந்த இரண்டு பிரபஞ்சங்களையும் இணைத்திருக்க வேண்டும். அந்த வார்ம் ஹோல் வழியாகப் பிரவேசித்த பார்ட்டிகிள் அதுதான். அந்தக் கடவுள் துகள். அது பேரலல் யூனிவர்ஸில் ஏதோ பாதிப்பை ஏற்படுத்தி...’’

‘‘இது யூகமா, நம்பிக்கையா, நிஜமா?’’ தெளிவாகக் கேட்டார் ஓர் அமெரிக்க நிருபர்.

‘‘இப்போதைக்கு மூன்றும்தான். உலக விஞ்ஞானிகள் கவனத்துக்கு இது போக வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். விஞ்ஞானிகள் விளக்கத்துக்குப் பிறகு, நீங்கள் கேட்ட மூன்றில் முதல் இரண்டு இருக்காது. மூன்றாவது மட்டும் மிஞ்சும்.’’

கமிஷனருக்கு ஏதோ அவசர போன். கூட்டத்திலிருந்து விலகி, பரபரப்பாகப் பேசிவிட்டு வந்தார். அவருக்கு வியர்த்திருந்தது. கமிஷனர் மெல்ல ராகுலின் காதில், ‘‘அந்த ஏலியன் பெண் ஒரு கடிதம் கொடுத்திருக்கிறாள்’’ என்றார்.
ராகுல் அவசரமாக, ‘‘கடிதமா... யார்கிட்ட... அதில் என்ன எழுதியிருக்கிறது?’’ எனப் பதறினார்.

‘‘தமிழில் எழுதப்பட்டிருக்கிறது... ஆனால், அது யாருக்கும் புரியவில்லையாம்.’’

(தொடரும்...)