
மனுஷ்ய புத்திரன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி
சூரியகுமாரா...
இருண்ட நிலங்களிலிருந்து
காலத்தின் நீண்ட இரவுகளிலிருந்து
வாராது வந்த உதயமாய் வந்தாய்
வெளிச்சமற்ற தலைமுறைகளின்
வரலாற்றுத் துயரங்களின்மீது
ஒரு மகத்தான விடியலாய் வந்தாய்

சூரியகுமாரா...
பசித்த மானுடத்தின் கூக்குரல்
உன் இதயத்தில் கனல் மூட்டியது
சாதியத்தின் அடிமைச் சங்கிலிகள்
புரளும் ஓசை
உன்னை அமைதியிழக்க வைத்தது
சிதைக்கப்படும் உன் மொழியின் விம்மல்
உன்னை சினமுறச் செய்தது
பதினான்கு வயதில் ஏந்திய
எதிர்ப்பின் கொடியை
பிறகு ஒருபோதும் நீ கீழே வைக்கவில்லை
எண்பதாண்டு காலமாக
நீ மூட்டிய நெருப்பு
அன்னியர் நுழையவியலா
அக்னி வளையமாய்
இந்த நிலத்தின் மேல்
எரிந்துகொண்டிருக்கிறது
ஐந்து முறை ஆட்சியில் இருந்ததல்ல
உன் சாதனை
ஐந்து தலைமுறைகளை
வழி நடத்திய தலைவன் நீ
எளிய மனிதனுக்குக் கண்ணொளி வழங்கியதல்ல
உன் பெருமை
கோடானு கோடி மனிதர்களின் கண்களை
நீ கல்வியால் திறந்தாய்
கை ரிக்ஷாவை ஒழித்ததல்ல
உன் புரட்சி
வரலாற்றின் தேர்ச் சக்கரங்களைச்
சேரிகளுக்குள் ஓடச் செய்தவன் நீ

ஆதிக்கத் திமிரின் திண்ணைகளைத் தாண்டி
உள்ளே வர முடியாதவர்களுக்கு
அரியாசனங்களையும்
சரியாசனங்களையும்
உத்தரவாதப்படுத்தினாய்
மேல் சட்டை மறுக்கப்பட்டு
மெளனமாய் நடந்து சென்றவர்களை
தோளில் துண்டணிவித்து
சபைகளில் முழங்கச் செய்தாய்
அரசியலின் சதுரங்கக் கட்டங்களில்
வெட்டும் காய்களை
எப்போதும்
சாதுர்யமாக நகர்த்தியவன் நீ
உன் காய்கள் வெட்டுப்பட்டபோது
வெல்ல முடியாத தலைவன் என்பதை
மீண்டும் மீண்டும் நிரூபித்தாய்
என் மொழி
என் நாடு
என் மக்கள்
இதுவே உன் முக்கால் நூற்றாண்டு முழக்கம்
காலத்தின் அழியாத முழக்கம்
இன்று
எல்லைகளைத் தாண்டியும் உயிர்த்தெழுகிறது
உன் கரகரத்த குரல்
உழவனின் ஏர் முனையில் கேட்கும் குரல்
அது தொழிற்சாலைகளில்
தடதடக்கும் எந்திரங்களின் குரல்
அது லட்சோப லட்சம் சிலேட்டுகளில்
கேட்கும் சாக்பீஸின் குரல்
அது அய்யன் திருவள்ளுவனின் அறத்தின் குரல்
அது நீதி கேட்ட இளங்கோவடிகளின் குரல்
அது கவிப்பித்தேறிய கம்பனின் குரல்
அது வேலைக்குச் செல்லும் பெண்களின்
பருத்திப் புடவைகளின் சரசரக்கும் குரல்
அது அரவாணிகளுக்காகவும் கேட்ட உரிமைக் குரல்
அது மரண தண்டனையை மறுதலித்த குரல்
டெல்லியின் அதிகாரத்துக்குக் கிலியைத் தந்த குரல்
அது ஏழைகளின் உலைகளில் கொதிக்கும் அரிசியின் குரல்
அது தெய்வத்தின் கருவறை வாசலை
கடைக்கோடி மனிதனுக்கும் திறந்த குரல்
எல்லாவற்றுக்கும் மேலாக
அதுவே குரலற்றவர்களின் குரல்
சூரியகுமாரா...
எங்கும் நீ நிறைந்திருக்கிறாய்
ஒரு சிறுமி பாடுகிறாள்,
‘உலகெலாம்
உலகெலாம் சூரியன்’
ஓய்வற்றுச் சுழலும் சூரியன்
ஆயிரம் ஆயிரம் சூரியன்களை
உருவாக்கும் சூரியன்
சூரியகுமாரா...
நாங்கள் இருக்கிறோம்
சூரிய வம்சம் எங்கும் தழைக்க
நாங்கள் இருக்கிறோம்!