
ரீவைண்ட்

வெடிகுண்டு வைத்த நாய்கள்.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் ராணுவத்தினர் ஏகப்பட்ட நாய்களை வளர்த்தனர். அந்த நாய்களுக்கு ராணுவப் பயிற்சியும் கொடுத்தனர். Anti-tank Dog என்று அந்த ராணுவ நாய்களை அழைத்தனர். சரி, அந்த நாய்களின் வேலை என்ன?
வெடிகுண்டை எடுத்துச் சென்று, யாருக்கும் தெரியாத வண்ணம் எதிரியின் ராணுவ டாங்கிகளுக்கு அடியில் வைத்துவிட்டு வந்துவிட வேண்டும். அந்த வெடிகுண்டில் டைம் செட் செய்யப் பட்டிருக்கும். குறித்த நேரத்தில் குண்டு வெடிக்க, எதிரியின் டாங்கி டமார்!

இரண்டாம் உலகப்போரில் எதிரி நாடான ஜெர்மனியின் டாங்கிகளை அழிக்க, சோவியத் இவ்விதமாக தனது ராணுவ நாய்களை வெடிகுண்டுகளுடன் ஏவிவிட்டது. ஒன்று நாய்கள் சொதப்பின. சரியாகக் குண்டுகளை வைக்கவில்லை. அல்லது டைமிங் சொதப்பியதில் குண்டுகள் வெடித்து, பாவம்... நாய்களே செத்துப்போயின. அல்லது அந்த நாய்கள் சோவியத்தின் டாங்கிகளுக்குக் கீழேயே வெடிகுண்டுகளை வைத்துவிட்டு வந்தன. காரணம், நாய்களுக்குப் பயிற்சி கொடுக்கும்போது சோவியத் டாங்கிகளைத்தான் பயன்படுத்தியிருந்தனர். அந்த நினைப்பில் ‘நன்றி கெட்ட நாய்கள்’, சொந்த டாங்கிகளையே தகர்த்தன.
இப்படி Anti-tank Dog திட்டம் பலத்த தோல்வியையே தழுவியது. வேறு சில நாடுகளும் இதே போன்று நாய்களை வைத்து முயற்சி செய்து பார்த்திருக்கின்றன. என்றைக்குமே இந்தத் திட்டம் வெற்றி பெற்றதில்லை.

ஞாபக மறதியும் ஐன்ஸ்டீனும்..!
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலகப்புகழ் பெற்ற அறிவியல் அறிஞர். அவரது ஞாபக மறதி அவரைவிட புகழ்பெற்றது. ஒருமுறை டாக்ஸியில் ஏறிவிட்டு, ‘உங்களுக்கு ஐன்ஸ்டீனின் வீடு தெரியுமா?’ என்று அவர் கார் ஓட்டுநரிடம் கேட்க, ‘அவர் உங்களுக்குத் தெரிந்தவரா?’ என்று பதிலுக்கு ஓட்டுநர் கேட்க, ‘இல்லை, நான்தான் அது’ என்றார் ஐன்ஸ்டீன். அவருக்கு தன் வீடு எங்கிருக்கிறது என்பதையே மறந்து போயிருந்தார்.
இன்னொரு முறை தான் வசித்துவந்த அமெரிக்காவின் நியு ஜெர்ஸி மாகாணத்திலிருந்த பிரின்ஸ்டன் பகுதியிலிருந்து ரயில் ஏறினார் ஐன்ஸ்டீன். ஒவ்வொருவரிடமும் டிக்கெட் கேட்டு, அதில் துளையிட்டு வந்த பரிசோதகர் ஐன்ஸ்டீனிடமும் வந்தார். ஜன்ஸ்டீன் முதலில் தன் கோட் பாக்கெட்டில் டிக்கெட்டைத் தேடினார். இல்லை. அடுத்து பேன்ட் பாக்கெட்டில். அடுத்து சட்டை பாக்கெட்டில். பின் தான் வைத்திருந்த சிறு பெட்டியில் தேடினார். எதிலும் இல்லை. கீழே விழுந்துவிட்டதோ என்று சுற்றியும் தேடிப்பார்த்தார்.
‘டாக்டர் ஐன்ஸ்டீன், நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும். நீங்கள் டிக்கெட் வாங்கியிருப்பீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். பரவாயில்லை. பதறாதீர்கள்’ என்று கனிவு காட்டினார் பரிசோதகர். ஐன்ஸ்டீனும் நன்றியுடன் அவரைப் பார்த்து புன்னகை செய்தார்.
பரிசோதகர் அடுத்தடுத்த நபர்களிடம் டிக்கெட் பரிசோதிக்கச் சென்றுவிட்டு, சில நிமிடங்கள் கழித்து மீண்டும் ஐன்ஸ்டீன் இருக்குமிடத்துக்கு வந்தார். அப்போதும், ஐன்ஸ்டீன் மும்முரமாகத் தன் டிக்கெட்டைத் தேடிக்கொண்டிருந்தார். அதுவும் குனிந்து, நிமிர்ந்து, சீட்டுக்குக் கீழ் படுத்தெல்லாம் தேடிக் கொண்டிருந்தார். ஒரு பெரிய அறிவியல் அறிஞர் இப்படித் தேடுவதைக் கண்டு பொறுக்காத பரிசோதகர், ‘டாக்டர் ஐன்ஸ்டீன், நான்தான் டிக்கெட் வேண்டாம் என்று சொல்லிவிட்டேனே. விட்டுவிடுங்கள்’ என்றார்.
ஐன்ஸ்டீன் பணிவாக பதில் சொன்னார். ‘இளைஞனே, உனக்கு டிக்கெட் வேண்டாம். ஆனால், எனக்கு வேண்டும். அதைப் பார்த்தால்தான் நான் எங்கே போக வேண்டும் என்பதே எனக்குத் தெரியும் என்றார்!’

ஃபுட்பால் ஆடிய நாய்!
1962 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் சிலியில் நடைபெற்றன. இங்கிலாந்துக்கும் பிரேசிலுக்கும் இடையே காலிறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மைதானத்துக்குள் கறுப்பு நிற நாய் ஒன்று புகுந்துவிட்டது. வீரர்கள் ஓடும் திசையெல்லாம் அதுவும் ஓட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் வீரர்கள் பந்தைத் துரத்துவதை விட்டுவிட்டு நாயைத் துரத்த ஆரம்பித்தனர். கோல் கீப்பர், பந்தைப் பிடிக்கிறோமோ இல்லையோ எப்படியாவது நாயையாவது பிடித்துவிட வேண்டுமென்று அதைப் பிடிக்க நினைத்து தோல்வி கண்டார். யாராலும் நாயைப் பிடிக்க முடியவில்லை. இங்கிலாந்து வீரர்களுக்கு பிரேசிலின் நட்சத்திர வீரர் பீலேயைச் சமாளிப்பதைவிட அந்த நாயைச் சமாளிப்பது கஷ்டமாகத் தெரிந்தது. ஆட்டம் தடைபட்டு நேரமும் வீணாகிக் கொண்டிருந்தது.
இந்தச் சமயத்தில் மைதானத்தின் நடுவில் இங்கிலாந்து வீரர் ஒருவர் தரையில் முட்டி போட்டு தவழ்ந்தபடி, செல்லமாகச் சத்தம் எழுப்பி நாயை எதிர்கொண்டார். நாய் அவர் மீது நம்பிக்கை வைத்து, அவரை நெருங்கியது. சட்டென அதைப் பிடித்துத் தூக்கினார். பின்னர் நாய் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. அந்த நாயின் பெயர் என்னவென்று தெரியவில்லை. அதை லாகவமாகப் பிடித்து வெளியேற்றிய வீரரின் பெயர் ‘ஜிம்மி’ என்ற ஜிம்மி கீரிவ்ஸ்.
- முகில்