Published:Updated:

கருணாநிதி பற்றி கருணாநிதி...

கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
கருணாநிதி

விகடனில் வெளியான நேர்காணல்களிலும், கேள்வி - பதில்களிலும் தன்னைப் பற்றி அவர் சொன்னவை இதோ...

ருணாநிதி பற்றி எழுதப்பட்ட எழுத்துகளும் பேசப்பட்ட உரைகளும் ஏராளம். ஆனாலும் கருணாநிதியைப் பற்றி அவரே சொல்வது, வரலாற்றின் ஆவணம் அல்லவா? விகடனில் வெளியான நேர்காணல்களிலும், கேள்வி - பதில்களிலும் தன்னைப் பற்றி அவர் சொன்னவை இதோ...

கருணாநிதி பற்றி கருணாநிதி...

“ஒரு மகனாக, கணவனாக, தந்தையாக, சினிமா வசனகர்த்தாவாக, பத்திரிகை ஆசிரியராக, கட்சித் தலைவராக, முதல்வராக... இப்படி ஒவ்வொரு பரிமாணத்திலும் உங்களை நீங்களே விமரிசியுங்களேன்...”

“மகனாக அல்ல; தாய்க்கும் தந்தைக்கும் பக்தனாக, கணவனாக அல்ல; என்றும் காதலனாக - தந்தையாக அல்ல; கட்சித் தலைவனாக - சினிமா வசனகர்த்தாவாக அல்ல; சீர்திருத்த சிற்பியாக - பத்திரிகை யாசிரியராக அல்ல; பகுத்தறிவு பிரசாரகனாக - கட்சித் தலைவனாக அல்ல; உடன்பிறப்பாக - முதல்வராக அல்ல - மக்களின் ஊழியனாக.”

‘’அண்ணா, பெரியாருக்கு அடுத்தபடியாக உங்களை பாதித்த தலைவர் யார்?”

“தன் இன மக்களின் அடிமைத்தளை அறுப்பதற்காக 27 ஆண்டுகள் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா.”

“அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்களை பாதித்த மனிதர் யார்?”


“கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.”

“நண்பர் எம்.ஜி.ஆர். - எதிரணியில் எம்.ஜி.ஆர்., - எம்.ஜி.ஆர். இல்லாத உங்கள் அரசியல் - இந்த மூன்று கட்டங்களையும் வகை பிரித்துச் சொல்லுங்களேன்?”

“முறையே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.”

“தி.மு.க. கழகப் போர்வாள் வைகோ! ம.தி.மு.க. தலைவர் வைகோ! நெருங்கி வந்து பேசும்போது என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?”

“இரு நிலைகளுக்குமிடையே வித்தியாசம் காணாமல்தான் பழகுகிறேன்.”

கருணாநிதி பற்றி கருணாநிதி...



“முரசொலியில் நீங்கள் எழுதிய உடன்பிறப்புக் கடிதங்களிலேயே உங்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்திருப்பது எது?

“நெருக்கடி காலத்தில் வள்ளுவர் கோட்டத் திறப்புவிழாவின்போது எழுதப்பட்ட கடிதம்.”

“உங்களிடம் தலைசிறந்தது என்று நீங்கள் கருதும் அரிய பொக்கிஷம் ஒன்றை, உங்களைத் தூக்கி நிறுத்திய விஷயம் ஒன்றை ஸ்டாலினுக்குத் தரச் சொன்னால் எதைத் தருவீர்கள்?”

“உழைப்பு.”

“நீங்கள் அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா?”

“அம்மா பிள்ளைதான்.”

“உங்களின் முதல் சிநேகிதன் பற்றி..?”

“தென்னன், டி.வி. நமசிவாயம் இருவருமே என் பள்ளிநாள் தோழர்கள். நமசிவாயம் பெரிய சங்கீத வித்வான், சின்ன வயதிலேயே பாகவதரோடு ‘அம்பிகாபதி’ படத்தில் நடித்திருக்கிறார். ஒரு விழாவில், சங்கீத வித்வான் ஒருவருக்கு மாலை போட்டுக்கொண்டிருக்கும்போது இறந்துபோனார் நமசிவாயம். நான், தென்னன், நமசிவாயம் மூவருமாகச் சேர்ந்துதான் திருக்குவளை கிராமத்தில் பள்ளி நாட்களிலேயே ‘சிறுவர் சீர்திருத்த சங்கம் ஆரம்பித்தோம். ஒரு பைசா அந்த சங்கத்துக்குச் சந்தா! சங்கத்தின் மூலம் ஒழுக்கத்தை போதிப்போம்; படிப்பகம் நடத்துவோம்.”

“முதன்முதலாகப் பார்த்த நாடகம், சினிமா நினைவிருக்கிறதா?”

“முதன்முதலாக, திருக்குவளையிலிருந்து திருவாரூருக்கு வண்டி கட்டிக்கொண்டு சென்று பார்த்தது ‘பகவக்கீதை’ நாடகம்தான். அதில், பிரமாண்ட மேடை அமைப்பைக் கொண்டு வருவார்கள். ஒரு காட்சிகூட நினைவிருக்கிறது... அரசனும் அரசியும் ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டுவிட்டுத் தோலைக் கீழே போடுவார்கள். அதை ஒரு பிச்சைக்காரன் எடுத்துச் சாப்பிடுவான். உடனே அரசி, ‘பாருங்கள், நாம் போட்ட தோலை எடுத்து அவன் சாப்பிடுகிறான்’ என்பாள். உடனே அரசன் அவனைச் சவுக்கால் அடிப்பான். அடி விழ விழ பிச்சைக்காரன் சிரித்துக்கொண்டே இருப்பான். அரசன், ‘எதற்காகச் சிரிக்கிறாய்?’ என்று கேட்பான். உடனே, ‘`தோலைத் தின்ற எனக்கே இத்தனை அடி என்றால் பழத்தைத் தின்ற உங்களுக்கு?’ என்பான் பிச்சைக்காரன், இன்னும் என் நினைவில் நிற்கிற காட்சி இது. அதேபோல் நான் பார்த்த முதல் படம் சரஸ்வதி பாய், ரத்னாபாய் நடித்த ‘நல்லதங்காள்.’ அடுத்த நாள் படம் மாறிவிட்டது! பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்த ‘நவீன சாரங்கதாரா’ பேசாப்படம் பார்த்தது இன்னும் நினைவில் நிற்கிறது.

“பிடித்த புராணக் கதை எது?”

“மகாபாரதம்தான். என் தந்தை சமஸ்கிருதத்தில் புலமைபெற்றவர். தேவாரம், திருவாசகம் எல்லாம் அவருக்கு அத்துப்படி. கவிதைகள் எழுதுவார். நல்ல வித்வான். அவர் பல முறை பாரதக் கதை சொல்லியிருக்கிறார். பாரதக் கதை பல முறை படித்துமிருக்கிறேன். மேலும் கிராமப்புறங்களில் பாரதக் கதைகள் அதிகமாக நடத்துவார்கள். விரும்பிக் கேட்பேன்.

“ ‘அடேங்கப்பா..!’ என்று வாய்விட்டுப் பாராட்டிய விஷயம் ஏதும் உண்டா?”

“இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கு முன் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.’ எங்கள் ஊரில் பெரியவர் ஒருவர். அவரை ‘அடேயப்பா...’ என்று அழைத்தால், நம்மைத் துரத்திக்கொண்டு ஓடி வருவார். குறும்புக்காரச் சிறுவர்களுக்கு இது ஒரு வாடிக்கை...

உண்மையில் நான் ‘அடேங்கப்பா..!’ என்று வியந்த ஒரு சம்பவம் உண்டு. பேரறிஞர் அண்ணா மறைந்தபோது, வானொலியில் நான் கவிதை படித்தேன். அதில், ‘இதயத்தை இரவலாகத் தந்திடண்ணா! நான் வரும்போது கொண்டு வந்து சேர்ப்பேன்...’ என்று எழுதியிருந்தேன். அதைக் கேட்ட அமரர் எஸ்.எஸ்.வாசன் போனில் என்னைப் பாராட்டினார். பிறகு எனக்கொரு கடிதமெழுதினார். ‘இதயத்தை இரவலாகக் கேட்டிருக்கிறீர்கள். இது எந்தக் கவிஞருக்கும் தோன்றாத கற்பனை’ என்று பாராட்டியிருந்தார். அந்தக் காலத்தில் வாசன், ஒருவரை மனந்திறந்து பாராட்டுகிறார் என்றால் அது மிகவும் மகிழத்தக்க விஷயம். அவருடைய பாராட்டில் அப்படி வியந்ததுண்டு.”

“ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா?”

“எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. அவர்களாகவே வந்து ஆர்வமாகச் சொல்லும்போது அவர்களைப் புண்படுத்துவதில்லை.”

“உங்கள் வீட்டு விருந்துக்கு அழைக்க விரும்பும், விரும்பிய ஐந்து நபர்..? (இறந்தவர்களாகக்கூட இருக்கலாம்)”

“பெரியார், ராஜாஜி, அண்ணா, காமராஜ், காயிதே மில்லத்.”

“ஒரு வாரம் ஓய்வு கிடைத்தால் எங்கு சென்று எப்படிக் கழிக்க விரும்புவீர்கள்?”


“மைசூர். முன்பெல்லாம் அங்குள்ள பிருந்தாவன் ஓட்டலில் தங்கிதான் நிறைய படங்களுக்குக் கதை, வசனம் எழுதியிருக்கிறேன். ஓய்வெடுக்கவும், காலை நேரங்களில் வாக்கிங் போகவும் உகந்த இடம்.”

“இன்றும் தங்கள் நினைவில் இருக்கும், சட்டசபையில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லுங்களேன்...”

“நான் முதல்வராக இருந்த நேரம்... எதிர்க்கட்சி வரிசையிலிருந்த ஹண்டே அடிக்கடி எழுந்து உரக்கப் பேசிக் காரசாரமாக விவாதிப்பார்.

அவரை, ‘உட்கார்ந்திருந்தால் ஹண்டே... எழுந்தால் சண்டே’ என்றேன்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்து திருச்செந்தூர் நடைப்பயணம் சென்றேன். ஆளுங்கட்சி அ.தி.மு.க. உறுப்பினர், ‘கருணாநிதி திருச்செந்தூர் போனார். முருகனே அவரைப் பார்க்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டார். இப்போது முருகன் சிலை அங்கில்லை’ என்றார்.

நான் எழுந்து, ‘திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் களவாடப்பட்ட விஷயம் இப்போதுதான் தெரிகிறது’ என்றேன்.

- இவையெல்லாம் இன்றும் நன்றாக நினைவிருக்கிறது.

“தங்களுக்கு மிகவும் எரிச்சலூட்டக் கூடிய சம்பவம் எது?”

“நிலைமைகளையெல்லாம் உணர்ந்த மிக வேண்டியவர்கள் சிலர், சில பதவிகளுக்கு ஆசைப்பட்டு வற்புறுத்தும்போது, நாம் இந்தப் பதவியில் இருப்பதால்தானே அவர்களுக்கு இப்படிக் கேட்கத் தோன்றுகிறது என்கிற வேதனை ஏற்பட்டு, நான் வகிக்கும் பதவிமீதே சலிப்பும் எரிச்சலும் ஏற்படுவதுண்டு.”