
தேவிபாரதி, படங்கள் : ரமேஷ் கந்தசாமி

தனது முதல் காதல் பற்றி, மாக்சிம் கார்க்கி நெடுங்கதை ஒன்றை எழுதியிருப்பார். புரட்சியின் புயல்பறவையாக அறியப்பட்டிருக்கும் கார்க்கிக்கு, காதல் பற்றிச் சிந்திக்க அவகாசம் இருந்திருக்கும் என நினைப்பது அவரது வாசகர்களுக்குச் சற்று சங்கடமான விஷயம். கார்க்கியைப்போலவே இவான் துர்க்கனேவ் தன் முதல் காதல் பற்றி நெடுங்கதை ஒன்றை எழுதியிருக்கிறார். பொதுவாகவே ருஷ்ய இலக்கியத்தில் காதலுக்கு மிகச் சிறப்பான இடம் இருந்துவந்திருக்கிறது. டால்ஸ்டாயும் தாஸ்தாயெவ்ஸ்கியும் மிகச் சிறந்த காதல் கதைகளை எழுதியிருக்கிறார்கள். அவை காதலின் அர்த்தத்தையும் அர்த்த மின்மையையும் பற்றிய மகத்தான படைப்புகளாக உலக இலக்கியத்தில் நிலைபெற்றிருப்பவை. உதாரணம், `அன்ன கரீனினா’வும் ‘இடியட்’டும்.
சங்ககாலம் தொட்டுத் தமிழ் இலக்கியத்துக்கும் காதலே முக்கியமான பாடுபொருளாக இருந்துவந்திருக்கிறது. திருக்குறளில் அதற்கென்று ஓர் இயல் ஒதுக்கப்பட்டிருக்கிறது அல்லவா? புனைவுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. விதவிதமான நாயகன்-நாயகிகள், விதவிதமான காதல்கள். கவிதை பிறந்ததே காதலைப் போற்றுவதற்காகத்தான் எனக் கருதும் அளவுக்குத் தமிழில் காதல் கவிதைகள் கோலோச்சியிருக்கின்றன. எல்லாவற்றையும்விட முக்கியமானதாகக் குறிப்பிடப்பட வேண்டியது தமிழ் சினிமா. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் சினிமா கட்டியெழுப்பியுள்ள காதல் கோட்டைகள் எண்ணிலடங்காதவை.
என்னுடைய முதல் காதலை வடிவமைத்தவை, கவிதைகளும் கதைகளும் சினிமாக்களுமாகத்தான் இருக்க வேண்டும் என இப்போது தோன்றுகிறது.
1970-களின் நடுப்பகுதி, பதின்ம வயதின் தொடக்கத்தில் இருந்த நான், அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் எட்டாவதோ, ஒன்பதாவதோ படித்துக்கொண்டிருந்தேன். அப்பா, தொடக்கப் பள்ளி ஆசிரியர். அப்போதைய ஈரோடு மாவட்டத்தின் சிறு கிராமம் ஒன்றில், ஆள் உயரமே உள்ள ஓட்டுவீடு ஒன்றில் வசித்துவந்தோம். எதிரே சாலையின் மறுபுறத்தில் பெரிய தொட்டிக்கட்டு வீடு. செல்வாக்கும் பாரம்பர்யப் பெருமிதமும்கொண்ட மிராசுதார் வீடு. அந்த வீட்டின் இளவரசி என் பால்யகாலத் தோழி; காதல் பற்றியக் கற்பிதங்களை உருவாக்கிக்கொள்ளக் காரணமாக இருந்தவள்; என்றென்றும் மறக்க முடியாத கற்பனையாக என் மனதில் வேரூன்றிவிட்ட சிறு பெண்.

நான் படித்த அதே உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது படித்துக்கொண்டிருந்த 12 வயதுப் பெண். இருவரும் சேர்ந்தேதான் பள்ளிக்கூடத்துக்குப் போவோம். எதையாவது பேசிக்கொண்டே கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடை. போகும் வழியில் தென்படும் சாலையோர மரங்களில் சுற்றித் திரியும் பறவைகளையும், பட்டாம்பூச்சிகளையும், அணில்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டும், புளியம்பழங்களையும் நாவல் பழங்களையும் கோவைப்பழங்களையும் பிட்டு வாயில் அதிக்கிக்கொண்டும் நடந்த நடையினூடே வளர்ந்த பால்யத்தின் இனம்புரியாத நட்பு.
வாய்க்கால்களும், கிணறுகளும், காடுகளும், தோட்டங்களும், புதர்களும் நிரம்பிய அழகிய அந்த ஊரில், நாங்கள் சுற்றித் திரிந்தோம். பொன்வண்டுகளையும் கிளிக்குஞ்சுகளையும் தேடி அலைந்தோம். வாய்க்கால் கரையில் ஏதாவதொரு மரத்துக்குக் கீழே உட்கார்ந்துகொண்டு என் அம்மா எனக்குச் சொன்ன கதைகளை நான் அவளுக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன். தன் வீட்டிலிருந்து அவள் அம்மா செய்து வைத்திருக்கும் கச்சாயத்தையும் முறுக்கையும் சீடையையும் மடியில் கட்டிக்கொண்டு வந்து தருவாள். பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பேசியபோது, அவள் எனக்காகக் கைதட்டினாள். மாறுவேடப் போட்டி ஒன்றில் பெண் வேடமிட்டு நடித்தபோது, அவள் தன் பாவாடை-தாவணியையும், கண்ணாடி வளையல்களையும், ஜிமிக்கி -கம்மல்களையும் தந்தாள். வீட்டாருக்குத் தெரியாமல் ஊரின் எல்லையில் இருந்த வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கும் மலையடிவாரத்தில் இருந்த முப்பாட்டுக் கருப்பணன் கோயிலுக்கும் போனோம். எனக்காக அவளும் அவளுக்காக நானும் தெய்வங்களிடம் வேண்டிக்கொண்டோம்.
என்னைக் காணும்போதெல்லாம் அவளது கண்கள் விரிந்ததையும் உதடுகளில் ஒரு புன்னகை அரும்பியதையும் நான் கவனித்தேன். அப்போது ஓவியங்களில் தீவிர ஈடுபாடு. சாக்பீஸ்களாலும் கரித்துண்டுகளாலும் சுவர்களில் எதையாவது வரைந்துவைப்பேன். பென்சில்களைக்கொண்டு கணக்கு நோட்டில் கிறுக்கிவைப்பேன். காந்தி, காமராஜர், பெரியார், அண்ணா, இயேசு கிறிஸ்து, எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள். அதை அவளுக்குக் காட்டுவேன். அவள் அவற்றை ஆசையாகத் தொட்டுப்பார்ப்பாள்; உயிரை வருடுவதுபோல் அந்தத் தாள்களை வருடுவாள். “இத எனக்குக் குடுக்கிறியா?” எனக் கேட்பாள்.

பிறகு, நான் வரைந்த ஓவியங்கள் அவளுக்கானவையாக மாறின. எனது கணக்கு நோட்டுப் புத்தகங்களையும் மேப் டிராயிங் நோட்டுப் புத்தகங்களையும் ஓவியங்களால் நிறைத்தேன். அதற்காக ஆசிரியர்களிடமும் அப்பாவிடமும் பிரம்படி வாங்கினேன். பிறகு, அவளுடைய உருவத்தை வரையத் தொடங்கினேன். நீலநிறப் பாவாடை, தாவணி, வெள்ளை நிற ரவிக்கை, நெற்றியின் நடுவில் சிறிய பொட்டு, நீண்டு தொங்கும் கூந்தலில் வாடாமல்லிப் பூக்கள், கழுத்தில் செயின், வளையல்கள். அந்தத் தாள்களை அவள் எடுத்துச் சென்றுவிடுவாள். அவளது பெரிய தொட்டிக்கட்டு வீட்டின் ஏதாவது ஒரு மறைவிடத்தில் அவற்றைப் பாதுகாத்து வைத்திருப்பாள்.
இப்படித்தான் அவளைக் காதலிக்கத் தொடங்கினேன்.
காதல் என்றால் என்ன என்பதையும், எப்படிக் காதலிக்க வேண்டும் என்பதையும் எங்கள் ஊரின் டென்ட் கொட்டகையில் பார்த்தத் திரைப்படங்கள் சொல்லிக் கொடுத்தன. கனவுகளில் மூழ்கவும் கற்பனைகளில் திளைக்கவும் எத்தனையோ திரையிசைப் பாடல்கள் இருந்தன. அவள் வளர்ந்துகொண்டிருந்தாள். அவளுடைய நடமாட்டங்களை வீடு கண்காணிக்கத் தொடங்கியது, கட்டுப்படுத்தவும் முற்பட்டது. சந்திப்புகளுக்கான வாய்ப்புகள் குறைந்துபோயின. நான் தவித்துப்போனேன். காதலைச் சொல்லிவிடுவதற்கான தருணம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தேன். அதற்கான சொற்களைக் கண்டடைய முயன்றுகொண்டிருந்தேன்.
திடீரென அப்பாவுக்குப் பணியிட மாறுதல். சுதாரித்துக்கொள்வதற்கான சிறு அவகாசமும் இன்றி, அந்தக் கிராமத்திலிருந்து எங்கள் குடும்பம் இடம்பெயர்ந்தபோது நான் சிதறிவிட்டேன். வீட்டுச்சாமான்களை எல்லாம் பாரவண்டி ஒன்றில் ஏற்றி அனுப்பிவிட்டு, சொல்லிக்கொள்வதற்காக அந்தத் தொட்டிக்கட்டு வீட்டுக்குப் போன அம்மாவுடன் நானும் போனேன்.

மற்றவர்களைக் கடந்து, திண்ணையில் தன் புத்தகம் ஒன்றைப் பிரித்துவைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவளிடம் போய் நின்றேன். அவளது முகத்தில் ஒரு பரிதவிப்பு தென்பட்டதாகக் கற்பனை செய்து கொண்டேன். தழுதழுத்த குரலில் விடைபெற்றுக்கொள்ளும் விதமாக இரண்டொரு வார்த்தைகளைச் சொன்னேன். அவளிடம் கைகுலுக்க வேண்டும்போல் இருந்தது. ஒரு கணம் அருகில் உட்கார்ந்து அவளது மூச்சுக்காற்றைச் சுவாசித்துவிட்டுப் போக வேண்டும் என நினைத்தேன். எதுவும் கைகூடாமல் வெளியேறி, அம்மாவைப் பின்தொடர்ந்தேன்.
பிறகு வேறோர் ஊர், வேறொரு பள்ளிக்கூடம், புதிய நண்பர்கள். யாரோடும் ஒட்ட முடியவில்லை. மனம் தவித்துக் கிடந்தது. கிடைத்த நண்பன் ஒருவனிடம் அவளைப் பற்றிச் சொன்னேன். அவளுடனான நாள்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன். காதலைப் பற்றிய புனிதமான கற்பிதங்களை உருவாக்கிக்கொண்டேன். அவளைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். வாழ்வின் தீராத அலைக்கழிப்புகளுக்கிடையே அழிவற்றதாய் என் மனதை நிரப்பியிருந்தது பால்யத்தின் அந்தக் காதல்.
நான்கைந்து வருடத்துக்குப் பிறகு, ஒரு கல்லூரி மாணவியாகப் பேருந்து நிறுத்தம் ஒன்றில் அவளைப் பார்த்தேன். அப்போது நான் சாயப்பட்டறை ஒன்றில் வேலைசெய்து கொண்டிருந்தேன். வேலை முடிந்து, வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்த அந்தத் தருணத்தில், நான் அழுக்கேறிய கைலி ஒன்றையும் கசங்கிய சட்டை ஒன்றையும் உடுத்திக்கொண்டிருந்தேன். எண்ணெய்ப்பிசுக்கு மண்டிய என் முகம், வதங்கிக் கிடந்திருக்கக்கூடும். அவள் தன் தோழியருடன் பேருந்துக்காகக் காத்திருந்தாள். எந்தவிதத் தயக்கமுமில்லாமல் நான் அருகில் சென்றேன். பெயரைச் சொல்லி அழைத்தபோது, என் குரல் தடுமாறுவதை உணர்ந்தேன். அவள் முதலில் குழம்பினாள். பிறகு, அவளது கண்கள் விரிந்தன. மறுகணம் அவளுடைய கருத்த முகத்தில் ஒருவிதச் சங்கடம் படர்ந்தது. நான் உடனடியாகப் பின்வாங்கினேன். அவமானத்தாலும் சுயபச்சாதாபத்தாலும் துரத்தப்பட்டு ஓடினேன், மூச்சிரைத்தது. வியர்வை ஆறாகப் பெருகி வழிய, சாலையோரப் பூங்கா ஒன்றை அடைக்கலம் கொண்டேன். புகைப்பிடித்துக்கொண்டே அங்கு இருந்த சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு யோசனையில் மூழ்கினேன். அது ஒரு கற்பிதம் எனத் தோன்றிய முதல் கணம் அது. அபத்தமான கற்பிதம், ஒருபோதும் கைகூடச் சாத்தியமற்ற கனவு.

இப்போது எனது இலக்கியச் செயல்பாடுகள், திட்டவட்டமான ஒரு புள்ளியை அடையத் தொடங்கியிருந்தன. கூடவே அரசியல், சமூகச் செயல்பாடுகள். சில சிறுகதைகளும் கவிதைகளும் பிரசுரம் பெற்றன. அப்போது நாங்கள் வசித்துவந்த நகரம் பிடிபடத் தொடங்கியிருந்தது. ஆசிரியராக இருந்த அப்பா, இரண்டு தங்கைகளையும், தம்பியையும், அம்மாவையும் கையளித்துவிட்டுப் போய்ச் சேர்ந்திருந்தார். சுமைகள் கூடிக்கொண்டிருந்தன. மனம் தெளிவடைந்துகொண்டிருந்தது. எனினும், பால்யத்தின் அந்த முதல் காதல் பற்றிய கற்பிதங்களிலிருந்தும் தத்தளிப்பு களிலிருந்தும் மனம் விடுபட மறுத்தது. அந்தரங்கமான ஓரிரு நண்பர்களிடம் ஓயாமல் அந்தக் கற்பிதத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்தேன். நல்லதாக ஏதாவது நடக்கும் என்னும் நம்பிக்கையை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டிருந்தேன். என் முதல் சிறுகதை பிரசுரமானபோது, அவளுடைய பெயரின் பாதியைப் புனைபெயராக வைத்துக்கொண்டேன்.
என் பால்ய நண்பர்களில் ஒருவனைச் சந்தித்து அவளைப் பற்றி அறிந்துகொள்ள முயன்றேன். அவள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டாள். நாங்கள் வசித்துக் கொண்டிருந்த நகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்.
நான் அந்தப் பள்ளிக்குப் போனேன். மனப்பிறழ்வுக்கு உள்ளானவனைப்போல எதிரே இருந்த பேருந்து நிறுத்தத்தில் ஒளிந்துகொண்டு, அவள் தென்படுவாளா எனக் காத்திருந்தேன். என் நடத்தைக் குறித்து எனக்கே அவமானமாக இருந்தது. பிறகு, அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். என் முதல் காதலிக்கு எழுதிய முதலும் கடைசியுமான கடிதம்.
என் அவள்மீது நான் கொண்டிருந்த மகத்தான காதலை, அது பற்றிய கற்பிதங்களை, கைகூடச் சாத்திமற்றக் கனவுகளைப் பற்றி அவளுக்குச் சொன்னேன். அவளைச் சந்திக்க வேண்டும் என்னும் தவிப்பைப் பற்றிச் சொன்னேன். இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ அல்ல, என்றாவது ஒரு நாள், ஒரு வேளை நம் முதுமையில், அப்போது இருவருக்குமே தலை நரைத்திருக்கும். முகம் சுருங்கி, நினைவுகள் வற்றிப்போய் நிற்கும் ஒரு தருணத்தில் ஒரே ஒருமுறை சந்தித்தால்கூடப் போதும்.
கவித்துவமான அந்தக் கடிதத்தை அவளால் நிராகரிக்க முடியாது எனக் கருதினேன். உள்நாட்டு அஞ்சல் உறை ஒன்றில் எழுதி, அவளுடைய பள்ளி முகவரிக்கு அஞ்சல் செய்தேன். அதோடு எல்லாமே முற்றுப்பெற்றுவிட்டன. என்றுமே மறக்க முடியாததாக மாறிவிட்ட அந்த முதல் காதல், என் பெயரின் ஒரு பகுதியாக இப்போது நிலைத்திருக்கிறது. முன்பிருந்த தவிப்பு இப்போதில்லை; ஆற்றாமை இல்லை. 60 வயதைக் கடந்துவிட்ட நிலையில் அந்தக் கடிதம் பற்றி நினைத்துக் கொள்கிறேன். அது பற்றிய நினைவுகள் தோன்றி மறையும் அபூர்வமான தருணங்களில், என் உதடுகளில் ஒரு புன்னகை அரும்பி உதிர்கிறது. மகத்தான அந்த முதல் காதலின் எஞ்சிய அடையாளம் அதுதான் எனத் தோன்றுகிறது.