
“எனக்குள்ளும் ஆணாதிக்கம் இருக்கலாம்!”
ஹாலிவுட்டில் கிளம்பிய ‘MeToo’ சுனாமி, கோடம்பாக்கத்தையும் சுருட்டி எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது...
வைரமுத்துமீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறி இணையத்தை அதிரவைக்கிறார் என்றால், ‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை’யின் தலைவர் சுப.வீரபாண்டியன் சின்மயியைக் கிண்டலடிக்கும் விதமாக ட்விட்டரில் ஜோக் ஒன்றைப் பதிவிட்டு எகிறவைக்கிறார்...
‘என்னதான் ஆச்சு...?’ என்ற கேள்வியோடு சுபவீயைச் சந்தித்துப் பேசினேன்...

‘‘14 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குற்றச்சாட்டை முன்வைப்ப தென்பது எப்படி நியாயமாகும்... என்ற கேள்வி எனக்குள் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், ‘எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன... எங்களுடைய வலி - வேதனையை நாங்கள் எப்போது சொன்னால் என்ன...’ என்று நான் சார்ந்திருக்கிற இயக்கத்துப் பெண்களே தங்களது எதிர்ப்பை என் முகத்துக்கு எதிராகப் பதிவு செய்தபோதுதான், ‘நான் அப்படிக் கேட்டிருக்கக்கூடாது’ என்பதைப் புரிந்துகொண்டு அந்தப் பதிவையும் உடனடியாக நீக்கினேன்!’’
‘‘MeToo இயக்கச் செயல்பாடுகளைத் தவறு என்கிறீர்களா... அல்லது இதனால் பயனேதும் இல்லை என்கிறீர்களா?’’
‘‘நான் எதையும் தவறு என்று சொல்லவில்லை. அவரவர் கோபத்தை எந்த வகையில் வேண்டுமானாலும் அவர்கள் காட்டலாம். இத்தனை நாள்களாகத் தங்களுக்குள் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளை வெளிக் கொணர்வதற்கு MeToo என்ற ஓர் இயக்கம் பெண்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. அடுத்ததாக, ‘தவறு செய்யவேண்டும்; தவறு செய்யலாம்’ என்று கருதுகிற ஆண்களுக்கு இது ஓர் எச்சரிக்கையாகவும் இருக்கிறது. இவற்றை நானும் ஏற்கிறேன். அதே சமயம், ‘யார் வேண்டுமானாலும் யார்மீது வேண்டுமானாலும் எந்தவித ஆதாரமுமே இல்லாமல், எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் புகார் சொல்லலாம் என்றால், இதை அரசியலாகப் பயன் படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்!’’

‘‘எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?’’
‘‘MeToo இயக்கத்தைப் பெயரிடப்படாமலே தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர் எழுத்தாளர் அனுராதா ரமணன்தான். ‘ஜெயேந்திரர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்’ என்று அவர்தான் முதன்முதலில் வெளிப்படையாகச் சொன்னார். ஆனாலும் அந்தக் குற்றச்சாட்டு இவ்வளவு பெரிதாக்கப்பட வில்லை. காரணம், ‘யார் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது?’ என்பது மட்டும்தான் இங்கே பார்க்கப் படுகிறதே தவிர, ‘குற்றச்சாட்டு என்ன?’ என்பது பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
இணையதளங்களில் தன்னை இழிவாக எழுதிப் பதிவிட்ட இளைஞர்கள் இருவரைப் பற்றி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரடியாகப் புகார் கூறி, இருவருக்குமே சிறைத்தண்டனை வாங்கித் தந்தவர் சின்மயி. இப்போது அவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டையும் அன்றைக்கே ஜெயலலிதாவிடம் நேரடி யாகக் கூறி நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.
அடுத்ததாக, ‘ஆண்டாள் நாச்சியார்தான் இந்த வடிவத்தில் வந்திருக்கிறார்’ என்று ஹெச்.ராஜாவும் தமிழிசையும் சொல்கிறபோதுதான், இதற்குள் அரசியல் இருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. ஆண்டாள் நாச்சியார்தான் சின்மயி வடிவத்தில் வந்தார் என்றால், அனுராதா ரமணன் வடிவத்தில் வந்தவர் யார் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.’’
‘‘சின்மயியின் புகாரில் அரசியல் இருப்பதாக நீங்கள் சந்தேகக் கேள்வி எழுப்பும்போதே, வைரமுத்து வுக்கு ஆதரவான உங்களது நிலைப்பாடும் ‘ஆணாதிக்கச் சிந்தனையின் அடிப் படையிலான ஆதரவோ...’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே?’’
‘‘பெரியாரின் உயிர்நாடிக் கொள்கைகளான ‘சாதி ஒழிப்பு, பெண் விடுதலை’யைப் பின்பற்றி வருபவன். எனவே, ஒருநாளும் நான் ஆணாதிக்க சக்தியாக மாறமாட்டேன். அதே நேரத்தில், பல தலைமுறைகளாகப் பதிந்துகிடக்கிற ஆணாதிக்கச் சிந்தனையின் மிச்சம் மீதி எனக்குள்ளும் இருக்கலாம்... அப்படி இருந்தால், அதனை நானே தேடித்தேடி அழிப்பேன்! நான் அறிந்தவரையில், வீட்டிலும் வெளியிலும் ஆணாதிக்கச் சிந்தனையோடு நான் நடந்துகொண்டதாக நினைவு இல்லை. மற்றபடி, ஆணாகப் பிறந்ததால், பெறக்கூடிய சலுகைகள் சிலவற்றை வீட்டிலும் வெளியிலும் நானும் பெற்றிருக்கிறேன் என்பது உண்மைதான்... இருப்பினும் என் பாதை பெண் விடுதலையை நோக்கியே இருக்கும்!’’
‘‘ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களேகூட தற்போது மௌனம் காக்கிறார்கள். ஆனால், நீங்கள் மட்டும் தற்போதைய பிரச்னையிலும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்திருக்கிறீர்களே?’’
‘‘இது வைரமுத்துவுக்கு ஆதரவு - எதிர்ப்பு என்று நான் பார்க்கவில்லை. ஆண்டாள் பற்றிய விவகாரம் வந்தபோது நான் வைரமுத்துவுக்கு ஆதரவாக இருந்தேன். ஆனால், இப்போதைய பிரச்னை என்பது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்தது; பிரச்னையில் தொடர்புள்ளவர்களுக்கு மட்டும்தான் உண்மை தெரியும். எனவே, நான் வைரமுத்துவுக்குத் தரச் சான்றிதழையோ, பழிச்சான்றிதழையோ கொடுக்க முடியாது.’’
‘‘வைரமுத்து விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன் என்று தமிழிசை கேட்கிறாரே?’’
‘‘தி.மு.க என்ற பேரியக்கத் துக்குத் தலைவராக இருப்பவர் மு.க.ஸ்டாலின். அவருக்கென்று ஏராளமான அரசியல் வேலைகள் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், இதுபோன்ற தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவர் பதில் சொல்ல நேரும். அது அவருடைய இடத்துக்குப் பொருத்தமானதாக இருக்காது. எனவே, தற்போது அவர் எடுத்திருக்கும் நிலை சரியானது என்றே நான் கருதுகிறேன்.’’

‘‘அழகிரியைத் தி.மு.க-வில் சேர்க்கலாமா, கூடாதா என்ற கேள்விக்கு, ‘நோ கமென்ட்ஸ்’ அல்லது ‘கட்சிதான் முடிவு செய்யும்’ என்பதுபோன்ற பதில்களைத் தவிர்த்து உங்கள் கருத்தினைத் தெரிவிக்க முடியுமா?’’
‘‘தி.மு.க-வின் ஓர் அங்கமாகத்தான் என்னை நான் உணர்கிறேன். ஆனாலும்கூட தி.மு.க-வின் தலைமை எடுக்கக்கூடிய முடிவை, ‘இப்படிச் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது’ என்று சொல்கிற தகுதி எனக்கு இல்லை. இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்தக் கருத்து இருக்கவே செய்யும். அந்த வகையில், அழகிரியைத் தி.மு.க-வில் சேர்ப்பது தி.மு.க-வில் ஒரு குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பது என் சொந்தக் கருத்து!’’
‘‘இலங்கை இறுதிப்போரில், இந்தியாவின் பங்கு குறித்து ராஜபக்ஷே வெளிப்படையாகப் பேசுகிறார். அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க தார்மிக அடிப்படையில்கூடப் பதவி விலகாமல், ‘எங்களைப் பதவியிலிருந்து நீக்குவதுதான் எதிரிகளின் சதி’ என்றே தொடர்ந்து கூறிவருவது நியாயம்தானா?’’
‘‘2009 ஆம் ஆண்டு மே மாதத்தின்போது, ஒரு மிகப்பெரிய பின்னடைவு விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு நிகழ்ந்தது. அதற்கு தார்மிகப் பொறுப்பேற்றுக்கொண்டு தி.மு.க பதவி விலகியிருக்க வேண்டும் என்று சொல்வது, தி.மு.க-வைப் பதவி இழக்க வைப்பதைத் தவிர, எந்தவிதத்திலும் அணு அளவுகூட அது ஈழப் போராட்டத்துக்கு உதவியிருக்காது. ஏனெனில், உலக வல்லரசுகளே ஒன்று சேர்ந்து நடத்திய போர் அது. அதுகுறித்து விரிவாகப் பேசுவதற்கான உதாரணங்கள் நிறைய இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், ஒரு நாட்டின், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அந்தப் போரைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று சொல்வதோ அல்லது தி.மு.க பதவி விலகியிருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும் என்று சொல்வதோ... உண்மைக்கு மாறான செய்திதான். ஈழத் தமிழர்கள்மீது அன்றைய முதல்வர் எவ்வளவு பரிவோடு இருந்தார் என்பதை நான் அறிவேன். அவரால் அன்றைய சூழ்நிலையில் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பதுதான் உண்மை!’’

‘‘ஹெச்.ராஜாவின் பேச்சு அநாகரிகம் என்று சொல்லும் நீங்கள், கருணாஸ் பேச்சைக் கண்டித்துப் பேசவில்லையே?’’
‘‘கருணாஸ் பேச்சை நான் கண்டிக்கவில்லை என்று யார் சொன்னது? ‘கருணாஸ், இப்படி முறையற்றுப் பேசியிருக்கக்கூடாது’ என்று மேடையிலேயே பேசியிருக்கிறேனே..!
‘உணர்ச்சிவசப்பட்டு நான் பேசியது தவறு’ என்று தனது பேச்சுக்கு கருணாஸ் வருத்தம் தெரிவித்தபிறகும்கூட அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், ஹெச்.ராஜாவோ, ‘நான் நீதிமன்றத்தைப் பற்றி அப்படி அவமரியாதையாகப் பேசவே இல்லை’ என்று பொய் சொல்கிறார். ஆனாலும் அவர்மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

‘நான் அப்படிப் பேசவேயில்லை’ என்று ஹெச்.ராஜா சொல்வது உண்மை யானால், அப்படி அவர் பேசியதாக வீடியோவைத் திரித்து வெளியிட்டது யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லி இதுவரை அவர் காவல்துறை யில் புகார் செய்யாதது ஏன்? தொடர்ந்து இதுபோல் அநாகரிகமாக அவர் பேசிவருவதை அவர் சார்ந்த கட்சியும் அனுமதிக்கிறது; மறைமுகமாக ஏற்றுக் கொள்கிறது! மற்றபடி, ‘கட்சியி லிருந்து விலகி அவர் அப்படிப் பேசுகிறார்’ என்பதெல்லாம் ஊரை ஏமாற்றுகிற வேலை!’’
‘‘சபரிமலையில் பெண்கள் அனுமதியை ஆதரித்துப் பேசுகிற நீங்கள், மசூதியில் பெண்களை அனுமதிக்கச் சொல்லிக் குரல் கொடுப்பீர்களா?’’
‘‘கண்டிப்பாக, வெளிப்படையாக நான் ஆதரவுக் குரல் எழுப்புவேன்... ஏற்கெனவே இதுகுறித்துக் குரல் எழுப்பியுமிருக்கிறேன்.
இன்றைக்கும் மெக்கா, மெதினாவில் உள்ள மசூதிகளில் பெண்கள் சென்று வழிபடுவதற்கு அனுமதி இருக்கிறது. எனவே, அவர்களது நடைமுறையில் அப்படி இருக்கிற தடைகள் நீக்கப்பட வேண்டியவை. பெண்களின் உரிமைகள் எல்லா மதங்களிலும் போற்றப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாகவே இருக்கிறேன்!’’
‘‘விநாயகர் சதுர்த்தி, புஷ்கரணி, துர்கா ரத யாத்திரை என இந்துமத பிரசாரங்கள் அடித்தட்டு மக்களைக் குறிவைக்கின்றன. ஆனால், தி.க இயக்கங்களின் பிரசாரங்கள் நகர்ப்புற அளவில் - படித்த இளைஞர்களோடு மட்டுமே நின்றுவிடுகிறதே?’’
‘‘திராவிடர் கழகம் போன்ற பெரிய அமைப்புகள் இன்றைக்கும் பட்டிதொட்டிகளிலும் கிராமங்களிலும் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எனவே, உங்கள் கேள்வி என்னைப் போன்றவர் களுக்குப் பொருந்தும். படித்த, நடுத்தர மக்களைத்தான் என் மொழி போய்ச் சேர்ந்திருக்கிறது... அதை நானும் உணர்ந்திருக் கிறேன். கிராமத்து மக்களுக்குப் புரிகிற வகையில் எனக்கு இன்னமும் பேசத் தெரிய வில்லை. அவர்களிடமும் என் பரப்புரை போய்ச் சேர வேண்டும் என்ற உந்துதலை உங்கள் கேள்வியின் மூலம் பெற்றுக்கொள்கிறேன்.
மதச் சார்பான கருத்துப் பரப்புரைகள் என்பது ஆற்றின் போக்கில் நீந்துவது; ஆனால், பகுத்தறிவுப் பரப்புரை என்பது எதிர்நீச்சல் போடுவது. எனவே அது அத்தனை எளிதன்று. ஓர் உதாரணம் சொல்கிறேன்... பிள்ளையார் பால் குடித்த செய்தி, ஒரே நாளில் உலகெங்கும் பரவிற்று. ஆனால், 2000 ஆண்டுகளாகத் திருக்குறளைச் சொல்லிவருகிறோம்... இன்னும் குறள் அந்தளவுக்குப் பரவவில்லை. எனவே அறிவைப் பரப்புவது கடினம். ஆனால், மக்களை ஏமாற்றுவதென்பது எளிது! எளிதான பணியைவிட அரிதான பணியாக இருந்தாலும் சரியான பணியைச் செய்யவேண்டும் என்று கருதுவதால், சில தாமதங்கள் நிகழத்தான் செய்யும்!’’
த.கதிரவன் / படங்கள்: ப.சரவணகுமார்