
தம்பிச்சோழன் - படங்கள்: கே.ராஜசேகரன்
சிறுகதை, நவீன நாடகம் ஆகிய களங்களில் குறிப்பிட்ட சாதனைகளை நிகழ்த்திய ந.முத்துசாமி தமிழ் சினிமா விற்கு சிறப்பான நடிப்புக் கலைஞர்களையும் (பசுபதி, ஜெயக்குமார், குமரவேல், ஜார்ஜ், கலைராணி, குரு சோமசுந்தரம், அபர்ணா கோபிநாத், ஆனந்த் சாமி, விமல், விதார்த், விஜய் சேதுபதி) தந்திருப்பவர். எழுத்தாளர் பாலகுமாரனை இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்தவர்.

மயிலாடுதுறை, புஞ்சையில் 1936-ல் பிறந்த ந.முத்துசாமி 82 வயதில் காலத்தில் கலந்தார். மாணவப் பருவத்தில் தி.மு.க-வோடு இணைந்து செயல்பட்டவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். காதல் திருமணத்திற்குப் பிறகு சென்னையில் குடியேறினார். சி.சு. செல்லப்பாவின் அறிமுகத்திற்குப் பிறகு நவீன இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு நவீன தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் கடுமையான உழைப்பில் தனக்கென்று ஒரு கதை சொல்லல் பாணியைக் கண்டெடுத்தார்.
‘பிரக்ஞை’ வீராசாமி, ஓவியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ‘கூத்துப்பட்டறை’ நாடகக் குழுவைத் தொடங்கினார். தனித்துவமான உடல்மொழியைக் கேட்டு நின்ற, புதிய தமிழ் அரங்கச் சூழலில் சுரணையை உண்டாக்க நினைத்த அவரின் நாடகப் பிரதிகளை நடிப்பதற்குப் பயிற்சி பெற்ற புதிய நடிகர்கள் தேவைப்பட்டார்கள். ஆர்வத்தின் அடிப்படையில் ஒன்றுதிரண்டு, கிடைக்கும் இடத்தில் ஒத்திகை நடத்தி, தமிழ் அரங்கப் பார்வையாளர்களுக்குப் புதிய புதிய நாடகங்களை வழங்கினார்.
‘மரபும் தனித்துவமும்’ என்கிற டி.எஸ். எலியட்டின் பார்வையும் ‘இந்திய வழியில் சிந்தித்தல்’ என்கிற ஏ.கே.ராமானுஜத்தின் கட்டுரையும் ந.மு-வின் இலக்கியப் பார்வைக்கு ஆதர்சமாக இருந்திருக்கலாம். குருஜீஃப், ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மீது அபிமானம் கொண்டிருந்தார்.

‘முழுமையான நடிகர் என்பது முழுமையான மனிதன்தான்’ என்று சொல்பவர். `நடிகன் என்பவன் இயக்குநர் சொன்னதைச் செய்பவன் மட்டுமல்ல, அவனும் ஒரு படைப்பாளி’ என்றவர். ‘சொல்லின் உள்ளர்த்தம் தொனியில் ஏற’ வேண்டும் என்பதற்காக நடிகனுக்குள் ஒரு ‘அக்னிக்குஞ்சை’ வைக்க, பல்துறை ஆளுமைகளை, பல நாடுகளிலிருந்தும் அழைத்து வந்து, நடிகர்களோடு வேலை செய்ய வைப்பார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் இசைக்கருவிகளுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் அரங்க இசையில் முன்னுரிமை வழங்கியவர். துடும்பாட்டத்தைப் பொது வெளிக்குக் கொண்டுவந்து கூத்துப்பட்டறை நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத அம்சமாக வைத்திருந்தவர். அவரது இறுதி ஊர்வலத்திலும் துடும்பிசைதான் இசைக்கப்பட்டது.
‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ திரைப்படத்திற்கு அனந்துவோடு இணைந்து வசனம் எழுதியுள்ளார். மணிரத்னம், கஸ்தூரி ராஜா போன்ற இயக்குநர்கள் கேட்டபோதெல்லாம் மறுத்தவர் சீமானின் ‘வாழ்த்துகள்’ திரைப்படத்தில் நடித்தார். அவருக்கு நினைவுத்திறன் இழப்பு தொடங்கியிருந்த சமயம் அது. நடிகர் நாசர்தான் டப்பிங் பேசினார்.
தமிழ் நவீன நாடகத்தின் திசை வழிகளின் மய்யமாக ந.முத்துசாமி இருந்திருக்கிறார். கல்விப் புலங்களிலும் குறிப்பிடும்படியான அரங்கக்கலைஞர்களை உருவாக்கியிருப்பவர். நாளைய தமிழ் அரங்கத்தைக் குறித்தும், அரங்க நடிகர்களைக் குறித்தும் தன் ஆசைகளை ஒரு அரங்கக்காரராகவும் ஆசிரியராகவும் தன்னிடம் உரையாட வருபவர்களிடம் பேசியபடியே இருப்பார்.
மாநகரத்தில் நாடகச் செயல்பாடுகளுக்கு நிரந்தரமாக ஓர் அரங்கம் வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில், பள்ளிகளில் நாடக ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பது அவருடைய நெடுநாள் ஆசைகள். அவரின் மூன்று தலைமுறை மாணவர்கள் தங்களுடைய ஆக்கபூர்வமான அரங்கச்செயல்பாடுகள் வழியாக ந.முத்துசாமியின் ஆசைகளுக்கு நடைமுறைச் சாத்தியங்களைக் காண வேண்டும். சாத்தியங்களைக் கண்டடைந்து செயல் வடிவம் கொடுப்பதே தமிழ் நாடகச் சமூகம் ந.மு-வுக்குச் செலுத்தும் அஞ்சலி.