
News
வேல் கண்ணன், ஓவியம் : மணிவண்ணன்

துன்ப மெல்லிசை சலனமற்று ஊடுருவும் அந்தப் பொழுதில்
பக்கவாட்டத்தில் பெய்யத் தொடங்கும் மழையின்
முதல்துளி நிலம் தொடுகையில் மலைக்காடு ஆதியாய்த் துளிர்க்கும்
பறை வண்ணமாய் மினுமினுக்கும் மண்
மடி கிடத்தும் ஆழியோ
நெளிவிளிம்புகளை நுரைத்துத் தழுவும்
வடிவ வெளியற்ற வான்
தலைகோதும்
தொன்மத்தின் ரகசியத்தை விண்மீன் பிடித்தெழும்
கானகத்தின் கனவில் பறவை விதை எச்சமிடும்
மென்று விழுங்கி ஜீரணக்காற்றை வேட்டை மிருகம் வெளித்தள்ளும்
மேலானவற்றை
நின்று நிதானித்து உள்வாங்கு
அவசரமாய் ஓடாதே
நமக்கான சொல்லை
மென் அழுத்தமாய் உதிர்த்துவிட்டுச் செல்
ஒரேயொரு முறை.