
அழியக்கூடாத மனிதப் பண்பின் பேரடையாளம்! - வீரயுக நாயகன் வேள்பாரி நூலின் முன்னுரை
1990-ம் ஆண்டில் இளங்கலை வணிகவியல் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, மதுரை தியாகராயர் கல்லூரி ஆய்வுக் கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. ‘மாமூலனார்’ என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. சங்கப் புலவர் மாமூலனாரின் படைப்புகளைத் தெரிந்துகொள்ள தொகைநூற்களுக்குள் நுழைந்தேன். மாமூலனாரின் கவிதைகளின் தனித்துவத்தைக் கண்டறியும் தேடல் நெடுநாள் நீடித்தது. சுமார் 120 பக்க ஆய்வுக் கட்டுரையை எழுதி அனுப்பினேன். அக்கட்டுரையே பரிசினைப் பெற்றது.
பரிசும் அது ஏற்படுத்திய மகிழ்வும் சிறிது காலத்திலேயே உதிர்ந்துவிட்டன. ஆனால், சங்க இலக்கியத்துக்குள் முழுமையாக மூழ்கிக்கிடந்த அந்த நாள்களும் அது உருவாக்கிய மனஉலகமும் தழைத்துக்கொண்டே இருந்தன. கடலைச் செடியைப்போல ஒவ்வொரு கவிதைக்குள்ளும் எத்தனையோ கதைகள் செழித்துக் கிடக்கின்றன. கதைகளின் பேருலகமே சங்கக் கவிதைகள்தாம் என்று தோன்றியது.
சுமார் பத்தாயிரம் ஆண்டுக் கால நினைவுகளின் தொகுப்பு சங்க இலக்கியம் என்று மானுடவியலாளர்கள் கூறுகின்றனர். இப்பெரும் நினைவுப் பரப்புக்குள் நுழைந்தால், வெளிவருதல் எளிதல்ல. நீர் எவ்வளவு விரைவாக ஓடினாலும் மண்ணுக்குள் உறிஞ்சப்படுதல் அதன் விதி. அப்படித்தான் சங்க இலக்கியத்துக்குள் நாம் ஓடி மறைவதும்.

நீண்ட இடைவெளிக்குப்பின், மீண்டும் சங்க இலக்கியத்தைப் படித்துக்கொண்டிரு ந்தபோது, ஆச்சர்யமான குறிப்பொன்று கண்ணிற்பட்டது. ‘சங்கக் கவிதைகளில் அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைப் பயன்படுத்திய புலவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் மாமூலனார்; மற்றொருவர் பரணர்’.
சங்க இலக்கியம் சார்ந்த எனது பயணத்தில் இலக்கியம், வரலாறு, ஆய்வு எனும் மூன்று புள்ளிகளும் தற்செயலாக இணைந்தே தொடங்கியுள்ளன. கல்லூரிக் காலத்தில் தொடங்கிய இப்பயணம், வெவ்வேறு கோணங்களில் விரிவடைந்தது. சங்க இலக்கியம் பற்றிய மிகச்சிறந்த ஆய்வுகள் எனது சிந்தனையை மேலும் வளர்த்தெடுத்தன. அவற்றில் முதன்மையாகச் சொல்லப்பட வேண்டியவர்கள்
பேரா.கைலாசபதியும் பேரா.சிவத்தம்பியும் ஆவர். சங்க இலக்கியத்தை அணுக வேண்டிய அடிப்படைப் பார்வையை என்னுள் உருவாக்கிய மூலவர்கள் இவர்களே.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இவ்விலக்கியம், 1887-ம் ஆண்டில் சி.வை.தாமோதரனார் கலித்தொகையைப் பதிப்பித்ததிலிருந்து அச்சு யுகத்துக்குள் நுழைந்தது. அடுத்த சில பத்தாண்டுகளில் சங்க இலக்கியம் அனைத்தும் அச்சேறின. அஃது அன்றைய அறிவுலகத்தில் பெருந்தாக்கத்தை உருவாக்கியது. குறிப்பாகச் சங்க இலக்கியத்தில் பாடப்பட்ட மன்னர்கள், புலவர்கள் பற்றிய செய்திகள் முதன்முறையாகப் பொதுச்சமூகத்துக்குத் தெரியவந்தன. இந்தப் பின்னணியில்தான் 1906-ம் ஆண்டு ரா.இராகவைய்யங்கார் ‘பாரி என்ற வள்ளலின் வரலாறு’ எனும் தலைப்பில் செந்தமிழ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றினை எழுதினார். பாரியைப் பற்றி எழுதப்பட்ட முதல் கட்டுரை இதுவே.
சங்க காலத்திலிருந்து தொடர்ந்து பல்வேறு புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் பாடப்பட்ட பாரி, நவீன கால உரைநடைக்குள் வந்துசேர்ந்தான். அடுத்த சில ஆண்டுகளில், திருக்கோவிலூரில் பெண்ணையாற்றங்கரையிலுள்ள வீரட்டானேச்சுரர் கோயிலில் கல்வெட்டு ஒன்றை கோபிநாதய்யர் கண்டறிந்தார். அதுவும் ‘செந்தமிழ்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டது. பாரி மகளிரை மணமுடித்துக் கொடுத்த பின், கபிலர் தீப்பாய்ந்து இறந்த செய்தியைச் சொல்லும் கல்வெட்டு அது. ராஜராஜ சோழன் காலத்தில் பொறிக்கப்பட்டது.
அதாவது, சங்க காலத்தில் வாழ்ந்த பாரி, கபிலரைப் பற்றி அவர்கள் மறைந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் ராஜராஜ சோழன் காலத்தில் பொறிக்கப்பட்டது. அதற்குப் பின், ஆயிரம் ஆண்டுகள் கழித்து அது கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்பானது, தமிழ் அறிஞர்களுக்குப் பேரூக்கத்தைக் கொடுத்தது. பாரி, கபிலர் ஆகியோர் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரலாற்று ஆதாரமாக இக்கல்வெட்டு பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1913-ம் ஆண்டு வேளிர் வரலாற்றை மு.இராகவையங்கார் எழுதினார். 1915-ம் ஆண்டு, வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சியை நா.மு.வேங்கடசாமி நாட்டார் வெளியிட்டார்.
அதன்பின், கபிலரின் வரலாற்றை 1921-ம் ஆண்டு நா.மு.வேங்கடசாமி நாட்டாரும் 1936-ம் ஆண்டு வேங்கடராஜுலு ரெட்டியாரும் எழுதினர். இப்படியாக பாரி, கபிலரின் வரலாறுகள் எழுதப்படத் தொடங்கின.
தொடக்கக் காலத்தில் ரா.இராகவையங்கார், கி.வா.ஜகந்நாதன், ஐயன்பெருமாள், கு.ராஜவேலு, அ.மு.பரமசிவானந்தம் ஆகியோர் பாரியைப் பற்றிய நூல்களை எழுதினர். இந்நூல்கள் அனைத்தும் 1960-ம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்டவை. இவர்கள் காலத்தில் சங்க இலக்கியம் பற்றி விரிவான ஆய்வுகள் வெளிவரவில்லை. சங்க இலக்கியம் பொதுவெளியில் அறிமுகமாகத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்ட அறிமுக நூல்களே இவை. ரா.இராகவைய்யங்காரின் படைப்பு மட்டுமே இவற்றில் விதிவிலக்கு.
அதன்பின், ஐம்பதாண்டுக் காலம் உருண்டோடிவிட்டது. இக்காலத்தில், சங்க இலக்கியம் பற்றி எண்ணற்ற ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அகராதிகளும் பொருட் களஞ்சியங்களும் வெளிவந்துள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில் தொல்லியல், மானுடவியல் ஆய்வுகள் சங்கப் பாடல்களைப் புதிய பரிமாணத்துக்கு இட்டுச் செல்கின்றன.

இனக்குழு சமூகவாழ்வு முடிந்து, உடமைச் சமூகம் மேலெழுகின்ற காலத்தை மிகத் துல்லியமாகவும் மிக விரிவாகவும் பதிவு செய்துள்ளது சங்க இலக்கியம். எண்ணற்ற இனக்குழுக்கள், அவற்றின் அடையாளங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பேசும் சங்க இலக்கியமானது, ஒருகட்டத்தில் வேந்தர்கள், வேளிர்கள் என்ற இரு புள்ளியில் வந்து நிற்கிறது. அதன்பின், வேளிர்களை வென்று மூவேந்தர்கள் மட்டுமே நிலைகொள்கின்றனர்.
இரு சமூக அமைப்புகள், அவை உருவாக்கிய இரு வகையான விழுமியங்கள் இவற்றுக்கு இடையில், பல நூறு ஆண்டுகள் நடந்த மோதல்களைச் சங்க இலக்கியப் பரப்பெங்கும் பார்க்க முடியும். இம்முரண்பாடுகள் உக்கிரத்தோடு மோதிய நிகழ்வின் பேரடையாளம்தான் வேள்பாரி. ஒருவகையில் வேள்பாரி, சங்க இலக்கியக் காலத்தின் மையக் குறியீடு என்றே சொல்ல முடியும்.
இரு சமூக அமைப்புகளும் அதனதன் குணத்துடனும் தன்மையுடனும் அதனதற்கேயுரிய விழுமியங்களுடனும் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. இம்மோதல், தமிழ் நிலமெங்கும் நடக்கிறது. இம்மோதலின்மூலம் அடுத்தகட்டத்துக்குச் சமூகம் தன்னை உருமாற்றிக்கொள்கிறது. அம்மாற்றம் நிகழும்போது, தன்மீது ஒட்டியிருந்த பொன்துகள்களையும் உதிர்த்துவிட்டுத்தான் நகர்கிறது.
சமூக வரலாறு உதிர்த்துவிட்டு நகர்ந்த அந்தப் பொன்துகள்கள், அப்படியே மண்ணுள் புதையுண்டு மங்கிவிடுவதில்லை. ஒளிமின்னும் அந்தப் பொன்துகள்களை இலக்கியம் தனதாக்கிக்கொள்கிறது. மானுட அறிவுச் சேகரத்தின் வசீகர ஒளியை அது என்றென்றும் மங்கவிடாமல் பாதுகாக்கிறது. சமூக அசைவியக்கங்களையெல்லாம் கடந்து, காலத்தின் நெற்றிப்பட்டயத்தில் அதைப் பொறித்துவைத்து அழகுபார்க்கிறது.
அதனால்தான் பாரி, அழிந்த சமூக அமைப்பின் அடையாளமாக இல்லாமல், அழியக் கூடாத மனிதப் பண்பின் பேரடையாளமாக என்றென்றும் போற்றப்படுகிறான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்றில், நூறு, இருநூறு ஆண்டுக்கால இடைவெளியில் ஏதாவது ஒரு புலவன் பாரியைப் பற்றிய பாடலைப் பாடிக்கொண்டே இருந்திருக்கிறான்.
இவ்வறிவு மரபின் தொடர்ச்சிதான் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’.
- சு.வெங்கடேசன், ஓவியம் : பிரேம் டாவின்ஸி