கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஆபுக்குட்டி எனும் அபூர்வ மலர்

ஆபுக்குட்டி எனும் அபூர்வ மலர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபுக்குட்டி எனும் அபூர்வ மலர்

ஆபுக்குட்டி எனும் அபூர்வ மலர்

தகை வரை போய், ஒரேயொரு தேநீர் அருந்திவிட்டுத் திரும்ப வேண்டும். பொள்ளாச்சி போகும் வழியில், மர நிழலில் பாய் விரித்து உட்கார்ந்து பேச வேண்டும் என்றெல்லாம் தோன்றும். தோன்றுவதைச் செய்துவிடுவதும் உண்டு . அப்படி இசையும் சாம்ராஜும் சாம்சனும் செந்திலும் உடனிருக்க, ஆனைகட்டியை நோக்கிய பயணத்தில் பாபுவின் சமீபத்திய கவிதையைப் பற்றி பேச்சு வந்தது.

‘கட்டிங்கைத் தண்ணீரில்லாமல்
ஓரே மடக்கில் குடிப்பவருக்கு
இரண்டு வெள்ளரித் துண்டுகள்
கொடுங்கள் தோழர்
ஏழு வருடங்களுக்கு முன்
5 லாரிகளுக்கு
ஓனர் அவர்.’

“அ… ஏன் ஜான்ஜி… பாபுவைப் பார்க்கலாமா?” என்றார் சாம்சன்.

“இப்பவா?”

“இப்போதான்!”

எப்போதும் குளங்கட்டியிருக்கும் அந்தக் கண்களைப் பார்க்கத்தான் வேண்டும்.

 “ஓ போலாமே.”

“ரெண்டு துண்டு வெள்ளரி வாங்கிட்டுப் போவமா?”

போய்க்கொண்டிருந்த சாலையிலேயே லாடத் திருப்பமிட்டு, சேலத்தை நோக்கி சாம்சன் காரைத் திருப்பிய தருணம் பொற்கிரணங்களால் ஆனது.

``ஹூய்” என்றொரு சந்தோஷக் கூச்சல் பொள்ளாச்சி சாலையெங்கும் எதிரொலிக்க, போனோம். மாலை உள்ளன்பின் கனத்தைத் தாங்கிய அந்த இரண்டு துண்டுகளையும் பாபுவுக்கு ஊட்டிவிட்டுத் திரும்பினோம். அவ்வளவேதான்... திரும்பிவிட்டோம்!

ஆபுக்குட்டி எனும் அபூர்வ மலர்

கண்ணாடி வழியே பார்த்தபோது, விழுங்கிய வெள்ளரித் துண்டுகளின் கனம் தாங்காது, பாபு அப்படியே நின்று கொண்டிருந்தார்.

‘நள்ளிரவு 1.40
யாரிடமாவது
இரண்டு வார்த்தைகள் பேச
எண்களைத்
துழாவுகிறது

அம்மு
தொடர்பு எல்லைக்கு
வெளியே இருக்கிறாள்

அசந்து உறங்கும்
நண்பர்களே

நள்ளிரவு 1.40
உங்கள் எண்ணை அழைக்கும்போது
எடுத்துப் பேசுங்கள்
அந்த இரவில்
நள்ளிரவு 1.40 ஐ
தற்கொலையிலிருந்து
காப்பாற்றியவர்
நீங்களாகவும் இருக்கலாம்.’


 இ
ந்தக் கவிதையைப் படித்ததும் பாபுவிடம் பேச வேண்டும் போலிருந்தது. பாபு போனை எடுத்ததும், “பாபு உங்க தொகுப்பைத்தான் படிச்சுட்டு இருந்தேன்” என்று சொல்லச் சொல்ல, எதுவோ  குரல்வளையைக் கவ்வ, “பா…பு” என்று குரலுடைந்தேன். மறு முனையிலிருந்த பாபு வேடிக்கையாக “ஒண்ண்ண்ணும் கவலைப்பட வேண்டாம் ஜான்! சேலமே உங்க பின்னால நிக்கும். ஒரு பய உங்கள தொட மாட்டான்!” என்று, தமிழ்ப் பட ‘பஞ்ச் டயலாக்’ பாவனையில் உரக்கப் பேசினார். பயங்கரமாகச் சிரித்துவிட்டேன்.

அதே சமயம் பாபு, சாம்சனுக்கு போன் செய்து, ``ஜான் ஏதோ தொந்தரவாயிட்டாப்ள போல… கூட இருங்க...” என்று சொல்லியனுப்ப, சாம் வந்து,

“அ… ஜான் ஜி… அ... சும்மாத்தான் வந்தேன்… அ… என்ன வாசிச்சீங்க?” என்றதும் நான்,  “பாபு போன் பண்ணினாரா?” கண்ணீர்த்தாரைகள் காயாமல் சிரித்தபடியே கேட்க, சாம்சனுக்கு ஒரே குழப்பம்.
``அட போங்கப்பா ஒண்ணுமே புரியலியே?” என்று குழம்பிக் கொண்டிருக்கையில், சாம்சனுக்கு போன் வந்தது, பாபுதான். சாம்சனிடம் விசாரித்துவிட்டு என்னிடம் கொடுக்கச் சொல்லி, நான் வாங்கி, “பாபு...” என்றதும்,

``ஒண்ண்ண்ணும் கவலைப்பட வேண்டாம் ஜான்” என்று  மீண்டும் அதே பாணியில் தொடங்க, நான் “பின்னால சேலமே நிக்கும்! அதானே?” என்றேன்.

பாபு அலட்சியமாக, ``ம்ஹூம்...! இப்ப வேற ஏற்பாடு பண்ணியிருக்கு, செவ்வாய் கிரகமே உங்க பின்னால நிக்கும்” என்றார்.

துயரம் பீறிடும் நகைச்சுவைத் துணுக்குகளை கைவசம் நிறைய வைத்திருந்தார் பாபு!

‘யாரோ
நுழைகிறார்கள்
யாரோ
வெளியேறுகிறார்கள்
தாழிட்டபடி
இருக்கிறது
கதவு
நம் கைகளில்
இல்லை
நுழைவதும்
வெளியேறுவதும்.’


ன்னோடு நல்ல தொடர்பிலிருந்த நண்பர் கவிஞர் தியாகு  தனது முப்பத்தாறு வயதில் மரணித்துவிட்ட விரக்தியில், “இனி எவனாவது வந்து ‘ஜான்குட்டி’னு கூப்பிட்டுப் பாருங்க, அப்புறம் இருக்கு” என்று முகநூலில் பதிவிட்டேன். அடுத்த நிமிடமே அலைபேசியில் வந்த பாபு, “ஜான்குட்டி... ஜான்குட்டி’ என்று சீண்டிக்கொண்டே இருந்தார்.

பாபு இறந்துவிட்டதாகச் சொல்லி, படுக்கவைத்திருந்தார்கள். நான் கண்ணதாசன் செய்ததுபோல “யாரெல்லாம் துடிக்கறீங்கனு பார்த்தேன்” என்று  சொல்லி எழுந்து சிரிக்கப் போகிறார் பாபு என்று பார்த்துக்கொண்டேயிருந்தேன். பாபு சிரிப்பை அடக்க முடியாமல் படுத்திருப்பது போலவே தெரிந்தது. அவரது தம்பியின் மகன்கள் தாமரைக் கண்ணனும் கதிரவனும்  ‘ஆபுக்குட்டி ஆபுக்குட்டி’ என்றே அரற்றிக் கொண்டிருந்தார்கள். மஞ்சளில் நனைத்த தூளியில்வைத்து தேரில் ஏற்றி, ஆபுக்குட்டியை மயானத்துக்குச் சுமந்துபோனோம். நெருப்புவைக்கும்வரை நம்பாமல் பார்த்துக்கொண்டேயிருந்தேன். இந்தமுறையும் ஜான்குட்டி ஏமாந்தான். ஆபுக்குட்டிதான் ஜெயித்தான். ஆபுக்குட்டியின் வீட்டுக்கு எதிரிலிருந்த மரத்துக் காகம், தன் எச்சத்தை ஜான்குட்டியின் சட்டையின் மீது தெளித்து  “ஏப்ரல் ஃபூல்… ஏப்ரல் ஃபூல்...” என்று கரைந்தது.

இசைக்குறிப்புகள் எழுதும் மூலப்பிரதியின் பின்னணியில், ராஜா தனது தாடையை இடது கைவிரல்களில் தாங்கியிருக்கும் சித்திரம் மங்கலாக  பதியப்பட்டிருக்கும். தக்கை கூட்டங்களில் பாபு அப்படித்தான் உட்கார்ந்திருப்பார்.உன்னிப்பாகக் கவனிக்கிறாராம். நான் சீண்டுவேன். சமயங்களில் கட்டைவிரலை மடித்து, மீத விரல்களால் வாயை மறைத்து ஞானகுருவிடம் உபதேசம் கேட்டுக்கொள்ளும் சீடன் போல முகத்தை வைத்துக்கொண்டு தன் தோழர்களுக்குத் தேவையான சாப்பாடு உள்ளிட்ட விஷயங்களைத் தருவிக்கக் கட்டளையிட்டுக் கொண்டிருப்பார். கடும் விமர்சனங்கள், காரசாரமான விவாதங்களுக்கிடையே தளும்பாது மிதந்துகொண்டிருக்கும் அந்த தக்கை.

தேவனின் கோவில்
மூடிய நேரம்
நானென்ன கேட்பேன் தெய்வமே

எங்கேயும் செருகலாம்
பிடுங்கலாம்
ஒண்டிக்கட்டையை

தற்கொலை
இரங்கல் கூட்டம்
விவாகரத்து
எல்லாமே
விளையாட்டு
பேரானந்தம்
அதற்கு

என்ன இப்படிப் பண்றீங்க
டாக்டர் குரலுக்கும்
அவ்வளவு குதூகலம்

உனக்கென்ன
குடும்பமா
குழந்தையா
எனும்போது மட்டும்
ஏய்ய்ய்... ஏஹேய்...
தந்தனா தந்தனா தந்தனா ஆஆ...
தந்தானத் தனனானத்தானன்னா அஅஅஅ ஆ
தந்தானா தந்தானா... ஹேய்...


தொண்டைக்குள் எப்போதும் அழுந்திக் கொண்டிருக்கிற நெருஞ்சி முள்ளை விழுங்க முடியாமல் துப்பவும் விரும்பாமல்  கசியுங்குருதியை அருந்தி வாழ்ந்த அந்தப் பறவை, எங்கள் கைகளிலும் கொஞ்ச நாளிருந்தது.
மயானத்து மரத்தடி இரங்கல் கூட்டத்தில் மோகனரங்கண்ணன், “பாபு என்னிடம் மட்டும்தான் இவ்வளவு நெருக்கமாக ஆத்மார்த்தமாக இருக்கிறான் என்று நினைத்தேன். ஒவ்வொருவரிடமும் அப்படித்தான் இருந்திருக்கிறான் என்பது இப்போது தெரிகிறது” என்று கலங்கிச் சொன்னார்.

உண்மையில் எல்லோரிடமும் அப்படி அன்யோன்யமாகத்தான் இருந்தார் பாபு. ஆனால், தன் உடல் உபாதைகளைச் சொல்லும்போது மட்டும் அந்நியர்போல  “கொஞ்சம் தொந்தரவாயிடுச்சு ஜான்” என்பார். ‘தலைவலி’ தொந்தரவாயிடுச்சு என்றால் சரி, ரத்தவாந்தியும் வெறுமனே “தொந்தரவாயிடுச்சு”தானா பாபு?

லிபி ஆரண்யா ஒருமுறை  “இப்பல்லாம் காதல் தோல்வின்னா பசங்க, வெறியில பொண்ணுங்கமேல அமிலத்தை ஊத்திடறாங்க, பாபு மாதிரி ஆள்கள் மட்டும்தான் அன்பு மிகுதில அதைத் தன் மேலேயே ஊத்திக்கிறாங்க” என்றார்.

சேலம் சிவா லாட்ஜின் சிறு அறைக்குள், எட்டுப்பட்டி சொந்தமும் கூடி,  கறி விருந்தும் குலவைச் சத்தமும் பாட்டுக் கச்சேரியும் ரத்தக்களறியுமாகத் திருவிழா நடக்கும். உற்சாகத்தில் பாடும்போது, நண்பர்களின் களியாட்டத்தில் உற்சாகமாகி விட்டால், பாபு வெளியே பயங்கர மகிழ்ச்சியில் திளைப்பதாக, அதீதனாகக் காட்டிக்கொள்வார். பொய்... பொய்... அத்தனையும் பொய் என்று அவரது எப்போதும் காயாத விழிகள் சொல்லும். உண்மையில் பாபு உள்ளுக்குள் வலி தின்னும் வினோதன். போதும்! என்னால் எழுத முடியவில்லை,

லட்சத்தில் ஒருவனுக்குத்தான்
அபூர்வமலர் கிடைக்கிறது
அது
உதிரும் தருவாயில்.

இதுவும் ஆபுக்குட்டியின் வரிதான். நான் லட்சத்தில் ஒருவன்போலும்!

- ஜான் சுந்தர், ஓவியம் : மணிவண்ணன்