Published:Updated:

நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்?

த.ஜீவலட்சுமி

நாம் எல்லோரும் சாட்சிகளெனப் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். அவர்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்கள். அவள் அப்பா தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டார். இரு உயிர்களின் பரஸ்பர அன்பு, ஊடகங்களில் பரபரப்பு செய்தியானது. பெண்ணின் தாய்  நீதிமன்றம் செல்கிறார். அப்பெண் தன்  கணவருடன் வாழ்வதையே விரும்புவதாகக் கூறுகிறாள். அடுத்த கேட்புகைக்கு வழக்கு வருவதற்குள் அவ்வளவு மிரட்டல்கள், தலையீடுகள். அப்பெண் தன் அம்மாவுடன் போக விரும்புவதாகக் கூறுகிறாள். அவன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஊடகங்களில் விவாதங்கள் நடக்கின்றன. உறுதியோடு ஊடகங்களில் பேசிய அந்த இளைஞன், ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தி வெளியாகிறது. அந்த மரணத்தின் பின்னால் ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. என்னை இன்றுவரை அலைக்கழிப்பது, பொதுச்சமூகம், ஊடகங்கள் என எல்லோரும் பார்த்திருக்க ஒருவனைச் சாதி பலிகொண்டுவிட்டது என்பதுதான். அப்படியானால், இங்கே அனைத்திலும் வலிமையான கருத்தியலாக பௌதீக சக்தியாக ‘சாதி’ இருக்கிறது என்கிற அழுத்தம் மனதைத் துளைத்தபோது, எது பற்றி எழுத வேண்டும் என்கிற தெளிவு கிடைத்தது. இங்கே மனித குல விடுதலைக்குச் சாதியொழிப்பு முன் நிபந்தனையாக இருக்கிறது. சாதி நிகழ்த்தும் இழிவுகளை மட்டுமல்ல, அதன் பேரில் கொள்ளும் பெருமிதம் எவ்வளவு அருவறுக்கத்தக்கது என்பதை எழுதிட வேண்டும். வலிகள் எழுதப்படுவதுபோலவே, சுயசாதி ஆணவம் பற்றியும் அது எவ்வளவு தூரம் நாகரிகமற்றவர்களாக மனிதர்களை மாற்றி வைத்திருக்கிறது என்பதும் எழுதப்பட வேண்டும். அதை நோக்கித்தான் என் எழுத்து பயணிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

நான் ஏன் எழுதுகிறேன்?

ஆனால், எல்லாக் கவிஞர்களையும்போலவே ஆரம்பத்தில்  காதல் கவிதைகள் எழுதினேன். 2010-ல், என் கல்லூரி நான்காம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் கவிதைத் தொகுப்பு ‘காதல் அமரும் கிளை’.  முழுவதும் காதல் கவிதைகளைக் கொண்டது. ‘சுதந்திரமாகச் சிந்திக்கிற பெண்ணொருத்தியின் காதலை, உணர்வு நெகிழ்விலும் அறிவு விழிப்போடும் கவிதைகள் பேசுவதாக’ கவிஞர் அறிவுமதி அணிந்துரையில் குறிப்பிட்டிருந்தார். முன்னுரையில் கவிஞர் அ.வெண்ணிலா, ‘இன்னும் என் கவிதைவெளி, சமூகம் நோக்கி விரிய வேண்டும்’ என்ற அறிவுரையைத் தோழமையோடு சுட்டிக் காட்டியிருந்தார். நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களை, அதன் காரணங்களை, விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கவும் எழுதவும் எனக்குக் கற்றுக் கொடுத்தது நான் சார்ந்திருக்கிற இடது அரசியல்தான். கல்லூரி முடித்து, சென்னை வந்த பிறகு கிடைத்த தோழமைகள் என் வாசிப்பை நவீன இலக்கியத்தின் பக்கம் திருப்பின. ஞானக்கூத்தன், கந்தர்வன் என அரசியல் பேசும் நவீன கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். கவிஞர் இன்குலாப்பை வாசித்தேன். மேலும், கலையும் இலக்கியமும் மக்களுக்கானவை. அவற்றை அதன் வடிவ வரையறைக்குள்ளிருந்தே அரசியலாக வெளிப்படுத்த முடியும் என யவனிகா ஸ்ரீராம், குட்டி ரேவதி, சுகிர்தராணி, சமயவேல், மனுஷ்யபுத்திரன் ஆகியோரது கவிதைகள் மூலமும் நன்கு  உணர முடிந்தது. கவிஞர் குட்டி ரேவதியுடனான சந்திப்பும் உரையாடலும் நவீன கவிதை முயற்சிகளுக்குப் பெரும் ஊக்கமாக இருந்தது. ஆதிக்கத்தின் பேரில்  அன்றாடம் கொலைவிழும் இந்தச் சமூகத்தில் கவிதைக்கான பொருளுக்காகப் பெரிய எத்தனங்கள் எல்லாம் கொள்ளத் தேவையில்லை. ஆக இந்த வாழ்வை, இந்தச் சமூத்தின் அரசியல் நம் வாழ்வின்மீது திணித்திருக்கிற அபத்தங்களையெல்லாம் தாண்டி, நாம் கொண்டாடும் காதலை, உறவுகளைக் கவிதையாக்கிக் கொண்டிருக்கிறேன்.

இந்தத் தலைமுறைக் கவிஞர்களான வெய்யில், நரன், சபரிநாதன், இளங்கோ கிருஷ்ணன் ஆகியோரின் தொகுப்புகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன். அவர்களுடைய கவிதைகளின் படிமங்களும் அடர்த்தியும் மொழியும் கவிதையில் மேற்கொள்கிற பரிசோதனைகளும் உண்மையில்  கொஞ்சம் அச்சத்தையும் கூடுதல் பொறுப்புணர்வையும் தருகின்றன. அரிதாகவே கவிதைகள் எழுதுகிறேன். அலைக்கழிப்புகள்தான் பெரும்பாலும் கவிதைக்கான உந்துதலாக இருக்கிறது. அடுத்த கவிதைத் தொகுப்பை 2019, ஜூன் மாதம் வெளியிடும் திட்டமிருக்கிறது.

றாம் சந்தோஷ்

னதில் பட்டதை உடனடியாக வெளிப்படுத்திவிடும் இயல்புடையவன் நான். ஆனால், குழந்தைப் பருவம் தொடங்கி இன்றைய தேதிவரை அது எனக்குப் பிரச்னைக்குரியதாகவே இருந்து வந்துள்ளது. துரத்தும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட எண்ணி, பள்ளிக் கல்வி முடிந்தவுடன், வெளியூருக்குப் படிக்கச் சென்றேன். இங்குதான் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பவர்களே கிடைக்கிறார்கள். ஆனால், அவர்களும் ஏனோ போதுமானவர்களாக இல்லாமல்போக, புத்தகங்களைக் கைக்கொண்டேன். வாசிக்க, வாசிக்க விரிபட்ட உலகம், நான் லேசாகிப் பறக்க ஏதுவான முடிவற்ற வானத்தை எனக்குத் தந்தது. பேச்சு, நாடகம் என அரங்கங்கள் ஏறிய என்னைப் பலர் அங்கீகரிக்கும்விதமாகக் கைதட்டல்கள் தந்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்போதுதான் பிரசுரமாகாத நூற்றுக்கணக்கான ‘கவிதைகள் போன்றவற்றை’ எழுதினேன். இது முதற்கட்டம்.

நான் ஏன் எழுதுகிறேன்?

கல்லூரிப் படிப்பு முடிந்ததும், இரவு நேர வேலைக்குச் சென்றேன். உடம்புக்குக் கிஞ்சித்தும் முடியாத நிலையில், ஆந்திர மாநில பல்கலைக் கழகத்தில் ‘தமிழ்’ கல்வி இலவசமாகப் போதிக்கப்படுகிறது என்ற தகவலை அறிந்து, ‘வேதியியல்’ படித்த நான், ‘ஹில்ரூட்’ என்ற எனது ஆங்கில ஆசிரியையின் மோதிரத்தை அடகுவைத்து அங்கு போய்ச் சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகள் சோற்றுக்கு உத்திரவாதம் கிடைத்தபோதிலும், தமிழ் பேசுபவர்களே அங்கு இல்லாமல் போனது எனக்கு வருத்தத்தையே தந்தது. (அப்போது துறையில் எனக்கு சீனியர் இல்லை. வகுப்பிலோ இருவர் மட்டுமே. நான், மற்றும் ஒரு பெண்.) மீண்டும் பேசுவது – தொடர்பாடுவது எனக்குச் சிக்கலாகிப்போகவே, தெலுங்கை நண்பர்களிடமும், கன்னடத்தை ஒரு பாடமாக எடுத்தும் கற்றுக்கொண்டு அவர்களின் நட்பைப் பெற்றேன். இச்சூழலில், பல்கலையில் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட கோட்பாடுகள், ‘சிற்றேடு’ இதழ், அதன் ஆசிரியரான தமிழவன் எனக்கு இனாமாய்க் கொடுத்த புத்தகங்கள், நூலகங்கள், மற்றோர் ஆசிரியரான கோ.பாலசுப்ரமணியம் செய்த பேருதவி போன்றவற்றின் வழி, முற்றிலும் வேறான திசைவழிப் பயணிக்கத் தொடங்கினேன். இதன் காரணமாக, அதுவரையிலும் எழுதிய யாவற்றையும் காணாமல்போகச் செய்துவிட்டேன்; புதிதாக எழுதத் தொடங்கினேன். இது இரண்டாம் கட்டம்.

இப்படித்தான் முற்றிலும் எனக்காக மட்டுமே எழுதத்தொடங்கி, சமூகம் சார்ந்தும் எழுத ஆரம்பித்தது. வாழ்க்கைப் பாட்டிற்கான துறையும் வாசிப்பு, எழுத்தோடு தொடர்புடையது என்பதால் கவிதை மட்டுமின்றி, சிறுகதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என யாவற்றையும் தைரியத்துடன் பயிற்சிசெய்து வருகிறேன். நாவல் ஒன்றையும் எழுதிவைத்துள்ளேன். முன்கூறிய, பேசுவது தொடர்பாக எனக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுதான் ‘பகடி’ என் மொழியாகிப் போனதற்கான காரணம் என்றும் வாழ்க்கை குறித்தான என் சிந்தித்தலின் வெளிப்பாடுதான் பின்நவீனத்தோடு என் எழுத்துகள் ஒன்றிப்போவதன் பின்னணி என்றும் புரிந்து வைத்திருக்கிறேன்.

றாம் சந்தோஷ். இயற்பெயர் சண்முக.விமல்குமார். தனது இரண்டு பெயர்களிலும் எழுதிவரும் இவர், ஆய்வு மாணவர். வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தில் பிறந்த றாம், கடந்த ஐந்தாண்டுகளாக ஆந்திர மாநில திராவிடப் பல்கலை விடுதி அறைகளில் தனது பாட்டியின் நினைவு, தென்மாநில நண்பர்களின் நட்பு மொழிகள், புத்தங்கள், உதவு மடிக்கணினிகள், தனக்கு அன்பளிக்கப்பட்ட ‘புத்த கற்பாவை’ ஆகியவற்றோடு வசித்துவருகிறார். ‘சொல் வெளித் தவளைகள்’ என்ற கவிதைத் தொகுப்பும்,  ‘கண்ணீரின் நிறங்கள்’ என்ற (மூலம்:தெலுங்கு) மொழிபெயர்ப்பு நூலும் வெளிவந்துள்ளன.

- படம் : தி.விஜய்