Published:Updated:

மெய்ப்பொருள் காண் - முக்கு

மெய்ப்பொருள் காண் - முக்கு
பிரீமியம் ஸ்டோரி
News
மெய்ப்பொருள் காண் - முக்கு

ஏக்நாத், படங்கள் : க.பாலாஜி

பிழைப்புக்கு நகரம் வந்து வருடங்கள் பல ஆகியும், பிறந்த ஊரின் வழக்கு, மொழியில் இன்னும் பிடிவாதமாக அமர்ந்துகொண்டு வெளியேற மறுக்கிறது. எங்கேனும் பேசிக்கொண்டிருந்தால், “உங்களுக்கு திருநவேலியா?” என்று கேட்டுவிடுகிறார்கள் எளிதாக. “எப்படி?” என்று ஆச்சர்யம் பொங்க விசாரித்தால், “இந்த வார்த்தைய அங்கதான சொல்வாங்க” என்பார்கள். அறியாமலேயே வந்து விழுந்துவிடுகிற வார்த்தைகள் அவை.

அந்த வட்டார வார்த்தைகள் எனக்கு ஆச்சர்யம் அளித்தாலும், அதுபற்றிய ஆராய்ச்சிக்குள் செல்லவில்லை. ஆயினும், என்னை அதிகமும் அலைக்கழித்த வார்த்தை `முக்கு’. ஊரில் சர்வ சாதாரணமாகப் புழங்கப்படும் வார்த்தை இது. “மாமா எங்கழா இருப்பாரு?” என்று அம்மாவிடம் கேட்டால், “அவன் இந்த முக்குல இல்லனா, கடை முக்குல நிப்பான்’ என்பாள். முக்கு, ஏதாவது சந்திப்புப் பகுதியைக் குறிக்கிறது.

“முக்குக்கு முக்கு நின்னு என்னதான் பேசுவானுவளோ, இந்தப் பயலுவோ?”, “காலைல இருந்து ராத்திரி வரை, அந்த முக்குலதாம் நிய்க்கானுவோ” என்று பேசும் அளவுக்கு ‘முக்கு’ முக்கியமான ஒன்று. எங்கள் ஊரில் ‘கருவேலப்பிறை முக்கு’ பிரபலமான ஒன்று. காலையில் மாடு மேய்க்கச் செல்பவர்கள், வயற்காடுகளுக்குச் செல்பவர்கள், விறகுக்குச் செல்பவர்கள் என அனைவரும் மாலையில் கூடும் இடம் அதுதான். அருகிலேயே சுக்குக் காபி, இட்லிக் கடை. உலக அரசியலிலிருந்து உள்ளூர் கிசுகிசுக்கள் வரை பேசும் இடமும் அந்த முக்குதான்.

“அந்த முக்குக்குப் போவாம இருக்க முடியல பாத்துக்கெ, காலு தன்னால இழுத்துருதுல்லா?” என்பார்கள். மூலை, ஓரம் என்பதுதான் முக்கு. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களின் கூடல் என்றும் சொல்வார்கள். இந்த முக்குகளின் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு வளைவு, காதலர்கள் சந்திக்கும் இடமாக இருக்கும். பெரும்பாலும் முக்குகளை அடுத்துள்ள சூழல், அதிகம் வெளிச்சம் இல்லாத பகுதிகளாகவே இருந்திருக்கிறது, ஊரில்.

மெய்ப்பொருள் காண் - முக்கு

தண்ணீர் எடுக்கச் செல்லும் காதலிகளை, இப்படி ஏதாவது ஒரு முக்கில் நின்றுதான் சந்திப்பார்கள், காதலர்கள். கல்யாணப் பத்திரிகை அடித்துவந்தால், அதை விநியோகிக்கும் முன், “நாலு முக்குலயும் மஞ்சளைத் தடவிக் கொடுடே” என்பார்கள். நான்கு முனைகள் / ஓரம் என்பதாகப் பொருள். திருநெல்வேலியில், ‘சந்திப் பிள்ளையார் முக்கு’ அதற்கு எதிரில் ‘வகையடி முக்கு’, ‘லாலா சத்திர முக்கு’ எனச் சில முக்குகள் இருக்கின்றன, இவை சந்திப்புப் பகுதிகள். ஜங்ஷன் என்பதும் முக்குதான்.

“என்னல, இந்த வெறவ வெட்டறதுக்கா இந்த முக்கு முக்குத?” என்றும் சொல்வார்கள். எளிதாகச் செய்யவேண்டிய வேலை, கஷ்டப்பட்டுச் செய்யப்படும்போது, ஏளனமாகக் குறிப்பிடவும் இந்த வார்த்தைப் பயன்படுகிறது. “ஒரு தொழுவைத் தூத்து அள்ளுததுக்குள்ள முக்கி முனங்கிட்டா, பாதவத்தி. நாங்கள்லாம் அந்தக் காலத்துல...” என்று மாமியார்கள், மருமகளைக் குறைசொல்வதிலும் முக்குக்கு முக்கியத்துவம் உண்டு. “வாய்க்காலுக்குப் போனா, துணியள முக்கிட்டு வா’ என்பார்கள் வீட்டில். நாய்க்குட்டிகள், கன்னுக்குட்டிகள் இருந்தால், அதைக் குளிப்பாட்ட, “இதையும் தண்ணில முக்கிக் கூட்டியா” என்பார்கள். நீரில் நனைப்பதற்கும் முக்கு என்கிற வார்த்தைப் பயன்படுகிறது.

“முக்காம, முனங்காம ஒரு நாளும் போவமாட்டெ, னா?” என்று கோபத்தில் சொல்வதற்கும் முக்கு முன்னால் வந்து நிற்கிறது. மூச்சுவிட முடியாமல், ‘ம்க்கும்... ம்க்கும்’ என்றபடி யாராவது வந்தால், “ஏம் இப்படி முக்குதாம், உடம்பு சரியில்லயோ?”

என்று கேட்பதும் உண்டு. குழந்தைகள் ஆய் போகும்போது, “ஏம்ட்டி, பிள்ள முக்கி முக்கிப் போவுது. டாக்டரைப் போயி பாருட்டி” என்பார்கள். இப்படி முக்கு பல்வேறு இடங்களில் பல பொருள்களைத் தந்து நிற்கிறது. கேராளாவிலும் முக்கு, ஓரம் என்ற பொருள்கொண்டு பயன்பாட்டில் இருக்கிறது.

‘முடுக்கு’ என்பதுதான் மருவி, ‘முக்கு’ ஆனது என்பது சில தமிழ்ப் பேராசிரியர்களின் கருத்து. சிறு தெருதான் ‘முடுக்கு’. சென்னையில் இதைச் சந்து என்கிறார்கள். ‘சந்தி’ மருவி சந்து ஆகியிருக்கலாம். ஆனால், சந்திக்குள் முக்கு எப்படி முங்கிப்போனது என்பது தெரியவில்லை.  ‘முக்கு’ என்பது வட்டார வார்த்தைதான்.  இலக்கியங்களில் இதுபோன்ற வார்த்தைகள் இல்லை. ஆனால், ‘சிலப்பதிகார’ த்திலும்  ‘திருமுருகாற்றுப் படை’யிலும் சந்தி என்ற வார்த்தை வருகிறது’ என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன்.