கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

கவிதையின் கையசைப்பு - 7 - அமெரிக்க நவீனக் கவிதையின் முகம்

கவிதையின் கையசைப்பு - 7 - அமெரிக்க நவீனக் கவிதையின் முகம்
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதையின் கையசைப்பு - 7 - அமெரிக்க நவீனக் கவிதையின் முகம்

கவிதையின் கையசைப்பு - 7 - அமெரிக்க நவீனக் கவிதையின் முகம்

வீன அமெரிக்கக் கவிதையின் நாயகர்களாக டி.எஸ்.எலியட், எஸ்ரா பவுண்ட், ஆலன் கின்ஸ்பெர்க் ஆகிய மூவரும் கொண்டாடப்படுகிறார்கள். இவர்களின் முன்னோடியாக வால்ட் விட்மன் அமெரிக்கக் கவிதையின் நவீனக் குரலாக ஒலித்தார். அவரிடமிருந்தே புதுக்கவிதை உருவாகியது. அமெரிக்கக் கவிதையின் தனிக்குரலாக அறியப்பட்டவர் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ். அவரது கவிதைகள் அன்றாட வாழ்வின் உன்னதங்களை அடையாளம் காட்டின. உரைநடையிலும் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் முக்கிய எழுத்தாளராக விளங்கினார். இவரது பாணியில் எழுதக்கூடிய கவிஞர்கள் இன்று தனித்த வகையானவர்களாக அறியப்படுகிறார்கள்.

கவிதையின் கையசைப்பு - 7 - அமெரிக்க நவீனக் கவிதையின் முகம்

சமகால அமெரிக்கக் கவிதையில் மிக முக்கியமான கவிஞர் ரான் பேட்ஜெட் (Ron Padgett). இவர் 20 கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். இவையன்றி மூன்று கட்டுரைத் தொகுப்புகளும் இரண்டு தொகை நூல்களும் இரண்டு மொழியாக்க நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்.

ரான் பேட்ஜெட் 1942-ல், ஓக்லஹோமாவின் ‘துல்சா’வில் பிறந்தார், ஆரம்பக் கல்வியைப் பொதுப்பள்ளிகளில் கற்றார். ரானின் தந்தை, கள்ளச் சாராயம் விற்பவர். தாயும் இதற்கு உதவிசெய்பவர். ஆகவே, குற்றவுலகோடு நேரடியான தொடர்பு சிறுவயதிலே ஏற்பட்டது. தனது 13-வது வயதில், ரான் தனது நோட்டுகளில் தனது எண்ணங்களையும் கவிதைகளையும் எழுதத் தொடங்கினார்.

கவிதையின் கையசைப்பு - 7 - அமெரிக்க நவீனக் கவிதையின் முகம்

1960-ம் ஆண்டில், இலக்கியம் பயில்வதற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கே அவருக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் பிரபல இலக்கிய விமர்சகர்களான கென்னத் கோச், மற்றும் லயோனல் டிரில்லிங். அவர்களே கவிதையின் ஆதாரங்களை ரானுக்கு அறிமுகம் செய்துவைத்தவர்கள். அத்துடன் அமெரிக்கக் கவிதையின் வரலாற்றையும் மரபையும் புரியவைத்தவர்கள்.

கவிதை, உயர்தட்டு மக்களின் ரசனைக்குஉரியதாக இருக்கிறது. அதை எளிய மக்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும். சிம்மாசனத்தில் இருக்கிற கவிதையைத் தரையிறங்க வைப்பதே நவீனத்துவத்தின் வேலை என இளம்கவிஞர்கள் ஒன்று சேர்ந்து புதிய பாணி கவிதைகளை எழுதத் தொடங்கினார்கள். குறிப்பாக நியூயார்க் நகரத்தில் வசித்த கவிஞர்கள், இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டுவந்த காரணத்தால் இவர்கள் ‘நியூயார்க் கவிஞர்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள்.

இயற்கையைப் பாடுவதும் உணர்வுகளைப் பிரதானப்படுத்தி எழுதுவதுமே மரபான அமெரிக்கக் கவிதையின் உலகமாக இருந்தது. நகரம் சார்ந்த வாழ்க்கையிலிருந்து உருவான கவிதைகளை இலக்கிய விமர்சகர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, அவை அர்த்தமற்ற உளறல்கள் என்று புறக்கணித்தார்கள். இன்னொரு புறம்,  ‘கச்சிதமான படிமத்தை உருவாக்கி, அரூப ஓவியம்போலக் கவிதை எழுதப்பட வேண்டும். கவிதையில் வெளிப்படும் அனுபவங்கள் நேரடி வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்கத் தேவையில்லை’ என்று படிமக் கவிஞர்கள் புதுவகைக் கவிதைப் போக்கினை முன்னெடுத்தார்கள். குறிப்பாக எஸ்ரா பவுண்ட், ஜப்பானிய சீனக் கவிதைகளின் தூண்டுதலால் புதுவகைக் கவிதைப் போக்கினை உருவாக்க முயன்றார்.

கவிதையின் கையசைப்பு - 7 - அமெரிக்க நவீனக் கவிதையின் முகம்

1960-களின் அமெரிக்க வாழ்க்கை, அரசியல் குழப்பமும் பண்பாட்டு சிக்கல்களும் கொண்டதாக இருந்தது, குறிப்பாக போதைமருந்து உட்கொள்வது, கட்டற்ற சுதந்திரத்தை நாடுதல், ஆன்மிகத் தேடலைப் பிரதானப்படுத்துதல் என்று இளம்தலைமுறை கொந்தளித்துக் கொண்டிருந்தது. அந்த உலகின் பிரதியாகவே அன்றைய எழுத்தாளர்களும் கவிஞர்களும் உருவானார்கள். முழுமையான இன்பமே முழுமையான சுதந்திரம் என்ற போக்கு இலக்கியத்தின் பிரதானக் குரலாக ஒலிக்கத் தொடங்கியது. இந்தச் சூழலில்தான் ரான் பாட்ஜெட் எழுத ஆரம்பித்தார். இவரது கவிதைகள் வெறுமையும் குழப்பமும் நிறைந்த தனது சககவிஞர்களிலிருந்து மாறுபட்டு, தினசரி வாழ்வின் இனிமையை அடையாளம் காட்டத் தொடங்கின.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த ரான், பாரீஸில் ஓராண்டு தங்கி, பிரெஞ்சு இலக்கியம் கற்றார்.

அந்நாளில் போத்லெர், ரைம்போ அப்போலினர் போன்றவர்களின் கவிதைகளை விரும்பி வாசித்தார். பின்பு, அமெரிக்கா திரும்பி, கவிதைகள் போதிப்பவராகவும் கவிதைகள் எழுதுபவராகவும் நியூயார்க்கில் வாழத் தொடங்கினார். அந்நாள்களில் தனது விருப்பத்தின் பேரில், நிறைய உலகக் கவிதைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டார் ரான். நியூயார்க் கவிஞர்கள் என அழைக்கப்பட்ட குழுவின் முக்கியக் கவிஞராக அறியப்பட்டார் ரான். ஃபிராங்க் ஓ ஹாரா, ஜேம்ஸ் சுய்லர், ஜான் அஷ்பரி மற்றும் கென்னத் கோச் ஆகியோர் நியூயார்க் பள்ளியின் முதல் தலைமுறைக் கவிஞர்களாக அறியப்பட்டார்கள். இதில், பிராங் ஓ ஹாராவைத் தனது ஆதர்சமாகக் கொண்டார் ரான் பேட்ஜெட். 1970-களில் ரான் பேட்ஜெட்டும் டேவிட் ஷாபிரோவும் இணைந்து ‘நியூயார்க் நகரக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு’ என்றொரு நூலினை வெளியிட்டுள்ளார்கள். “உலகத்துக்காகக் கவிதை எழுதாதீர்கள். உங்களுடன் வசிக்கும் சக மனிதருக்காக எழுதுங்கள். நண்பருக்கான கடிதம்போலவே அந்தரங்கமான டைரிக் குறிப்புபோலவே உண்மையாகக் கவிதையை எழுதுங்கள்” என்றார் கவிஞர் பிராங்க் ஓ ஹாரா, இதைத்தான் ரான் பேட்ஜெட் பின்பற்றினார்.

ரான் பேட்ஜெட் மற்றும் பிராங் ஓ ஹாரா இருவருக்கும் ஆதர்சமாக இருந்த கவிஞர், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ். இவர் ஒரு மருத்துவரும்கூட. ‘பாசாக்’ பொது மருத்துவமனையில், 1924-ம் ஆண்டிலிருந்து இறுதிவரை குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகள், நாடகங்கள், நாவல்கள், கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் பகலில் மருத்துவராகவும் இரவில் தனது எழுத்துப் பணிகளையும் செய்துவந்தார் வில்லியம்ஸ். ஆரம்பக் காலங்களில்  ‘இமேஜிஸ்ட்’ இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்த வில்லியம்ஸ், பின்பு கருத்து வேற்றுமை காரணமாக அதிலிருந்து விலகினார். தனக்கென ஒரு தனித்த கவிதை மொழியை உருவாக்கிக்கொண்டார். இவரது அம்மா ஓர் ஓவியர். ஆகவே, வில்லியம்ஸ் சிறுவயதில் முறையான ஓவியப் பயிற்சி பெற்றார். அதுவே, பின்னாளில் காட்சிகளைக் கச்சிதமாகக் குறைவான சொற்களில் கவிதைகளில் வெளிப்படுத்தக் காரணமாயிற்று. கார்லோஸின் கவிதை உலகம் அவரது அன்றாட நிகழ்வுகளிலிருந்து உருவானது. இசைத்துணுக்குகள்போல அவர் காட்சிகளைச் சிறு துண்டுகளாக்கி அவற்றை ஒன்றோடு ஒன்று இணைக்கவும் விலக்கவும் மோதவும் செய்வதன் வழியே கவிதையினைச் சாத்தியப்படுத்தினார். ‘போர்முரசு ஒலிப்பதைப்போல, கவிதை உச்ச ஸ்தாயிலில் ஒலிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு மழைத்துளியைப்போல அதன் சப்தம் எதன்மீது விழுகிறதோ அதுவாக மாறட்டும்’ என்றார் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ். அவரைக் கவிதை எழுதத் தூண்டியது, அவரைப் பற்றி பெற்றோர் கொண்டிருந்த கனவுகள் உருவாக்கிய அச்சம். பொறுப்பான, தலைமைப் பண்புகள்கொண்ட, மிக நல்லவனாக அவர் உருவாக வேண்டும் என அவரது பெற்றோர் நினைத்தார்கள். இந்தக் குழப்பத்திலிருந்து விடுபடவே வில்லியம்ஸ் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

வில்லியம், கவிஞர் கீட்ஸைக் கவிதையின் கடவுளாகக் கருதினார். உணர்ச்சிபூர்வமான வெளியீட்டு முறையைக் கீட்ஸிடமிருந்தும் சிந்தனைகளை வால்ட் விட்மனிடமிருந்தும் தான் பெற்றுக்கொண்டதாக வில்லியம்ஸ் கூறுகிறார். இவரது சமகாலக் கவிஞர்களில் எலியட் பெற்றிருந்த வெற்றியும் அவரது கவிதையுலகமும் வில்லியம்ஸை நிலைகுலையச் செய்தன. கவிதையை ஏன் இத்தனை சிக்கல் உடையதாக மாற்றுகிறார்கள் என்று அவர் உள்ளூர வேதனைகொண்டார். எளிமையும் துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடும் தேவையற்ற அலங்காரங்களும் இல்லாமல் எழுதப்பட்டதே வில்லியம்ஸின் கவிதைகள்.

இந்தக் கவிதைகளைத் தனது ஆதர்சமாகக் கொண்டே ரான் பேட்ஜெட் உருவானர். அவரும் வில்லியம்ஸ் வசித்த அதே நியூயார்க்கின் புறநகரான பேட்டர்சன் பகுதியில் பிறந்து வளர்ந்தவர்தான். அதே விதமான வாழ்க்கையை எதிர்கொண்ட வர்தான். ஆகவே, அவருக்கு வில்லியம்ஸ் ஒரு மூத்த சகோதரனைப்போலத் தோன்றினார். சிறுநகர வாழ்வின் இயக்கத்தைக் கொண்டாடிய வில்லியம்ஸின் ‘பேட்டர்சன்’ கவிதைகளைத் திரும்பத் திரும்ப வாசித்த ரான் பேட்ஜெட், அந்த இடங்களை, மனிதர்களை, பொருள்களைத் தனக்கும் தெரியும்தானே என்று வியந்தபடியே கவிதையின் வழியே தன் முன்னிருந்த புறஉலகை மதிப்பீடு செய்ய ஆரம்பித்தார். கவிதையின் வழியாகவே தனது நகரை அதன் கிளர்ச்சியூட்டும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டார்.

ரான் பேட்ஜெட்டின் கவிதைகள், உரசியதும் பற்றிக்கொள்கிற தீக்குச்சிகளைப் போல இருந்தன. வாசகன் அவற்றை வாசிக்க வேண்டும் அவ்வளவுதான், வெளிச்சம் தானே உருவாகிவிடும். தீக்குச்சிகளைப் பற்றியும் ரான் கவிதைகள் எழுதியிருக்கிறார். அதில் ஒரு கவிதையில் தீக்குச்சிகளின் மௌனம் பற்றிக் குறிப்பிடுகிறார். ‘தன்னை அழித்துக்கொள்ளும் தீக்குச்சிகள் சத்தமில்லாமல் இருக்கின்றன. எந்த நேரமும் எரிந்துபோகத் தயாராக இருக்கின்றன. ஒரு முணுமுணுப்பும் அதற்குக் கிடையாது. தன்னால் ஒளி பெறும் பொருளிடம் அது நன்றியை எதிர்பார்ப்பதில்லை’ என நீளும் ரானின் கவிதை, தீக்குச்சியின் வாழ்க்கையை மட்டும் பேசுவதில்லை, மாறாக அது கவிஞனின் இயல்பைப் பேசுகிறது. தன் வாழ்க்கையை அழித்துக்கொள்வது குறித்த புகார் இல்லாத கவிகளின் வாழ்க்கையைப் பேசுகிறது.

கவிதையின் கையசைப்பு - 7 - அமெரிக்க நவீனக் கவிதையின் முகம்

‘தீப்பெட்டிகளின் பிராண்ட் பெயர்களுக்கும் தீக்குச்சிகளுக்கும் ஒரு தொடர்பும் இருப்பதில்லை. தீக்குச்சிகள் தன்னளவில் முழுமையானவை. அவற்றின் தலைதான் எரியும் பொருள். அவை தன்னை மோதி அழித்துக்கொள்வதில் சந்தோஷம் காண்கிறவை.’ இந்தக் கவிதை அன்றாட உலகிலிருந்து தீப்பெட்டியை வெளியே எடுக்கிறது. நாம் இதுவரை காணாத ஒரு மலரைப்போல மாற்றுகிறது. கவிஞன் இந்த உலகுக்குத் தன்னால் வெளிச்சம் தர முடியும் என நம்புவதை இக்கவிதை முன்னிலைப் படுத்துகிறது. எவ்வளவு சிறிய அனுபவத்திலிருந்தும் ஒரு கவிஞனால் முழுமையை உருவாக்கிவிட முடியும் என்பதை இந்தக் கவிதை நிரூபணம் செய்கிறது.

இன்னொரு கவிதையில், தாவோயிஸக் கதை ஒன்றில் சாங் சூ என்ற துறவி, ‘தான் கனவில் பட்டாம்பூச்சியாக மாறிப் பறந்துகொண்டிருந்ததாகவும் கண்விழித்த போது, தான் பட்டாம்பூச்சியாக மாறியிருந்தேனா அல்லது ஒரு பட்டாம்பூச்சி மனிதனாக மாறியிருந்ததா’ எனச் சந்தேகம் கொண்டதாகவும் குறிப்பிடுவதை நினைவுகூர்ந்து, ‘நான் ஒருபோதும் அப்படிப் பட்டாம்பூச்சியாக மாறமுடியாது. எனது அடையாளங்கள் யாவும் சமூகங்கள் கொடுத்தவை. ஆனால், எனக்குள் பட்டாம்பூச்சியின் ஏதோவொரு சிறிய அம்சம் இருக்கிறது. அது தன் மென்சிறகுகளை அசைத்துப் பறக்க முயல்கிறது’ என்று கூறுகிறார் ரான். தனக்குள் இருக்கும் பட்டாம்பூச்சியை அடையாளம் காண முயலும் பேட்ஜெட்டின் முயற்சியே இன்றைய வாழ்க்கையின் நிஜம்.

ரான் எழுதிய உரைநடைக் கவிதைகள் டைரிக் குறிப்புகள்போலவே இருக்கின்றன. ஆனால், அந்தக் குறிப்புகள் வழியாக அவர் வெளிப்படுத்தும் காட்சிகளும் அது தரும் பரவசமும் தனித்துவமிக்கக் கவிதைகள் என்று உணரச் செய்கின்றன. அதுதான் ரானின் வெற்றி.

நாள் முழுவதும் மரத்தைக் கொத்திக் கொண்டிருக்கும் மரங்கொத்திக்கு ஏன் தலைவலி வருவதில்லை என்று ரானின் ஓர் உரைநடைக் கவிதை தொடங்குகிறது. அதில், மரங்கொத்திக்கான ஹெல்மெட் ஒன்றை உருவாக்குகிறார் கவிஞர். ‘கண்களால் உலகைக் காண முடியும். ஆனால், அது தன்னைத் தானே பார்த்துக்கொள்ள முடியாது. சொற்களும் அப்படிப்பட்டவையே. சொற்களைக்கொண்டு உலகைக் காட்ட முடியும். ஆனால், தன்னைக் காட்டிக்கொள்ள முடியாது’ என்கிறார் ரான்.

படித்து முடித்தவுடன் ஒரு கவிதைப் புத்தகத்தை மூடிவைப்பது எளிதானது. ஆனால், அதில் படித்த கவிதையைக் கடந்துபோவது எளிதானதில்லை. கவிதைகள் உணர்வுபூர்வமாக நம்மோடு கலந்துவிடுகின்றன. வாசிப்பவன் மனதில் கவிதை ஆழமாகப் பதிந்துவிடுகிறது. கவிதையே ஒரு மனிதனை பிரபஞ்ச ஜீவியாக மாற்றுகிறது. கவிதையின் வழியாகவே உயிரற்ற பொருள்கள் இயங்கவும் பேசவும் தொடங்குகின்றன. கவிஞன் பிரமாண்டங்களை விடவும் எளிய துகள்களையே விரும்புகிறான். அதில் முழுமையைக் காணுகிறான்.

தன் கவிதைகள் உலகை மாற்றிவிடும் என்றோ, சமகால அரசியல் பிரச்னைகளுக்குத் தீர்வு தந்துவிடும் என்றோ ரான் பேட்ஜெட் பாவனை செய்வதில்லை. என்னைச் சுற்றிய உலகை எப்படிப் பார்க்கிறேன், எப்படிப் புரிந்துகொள்கிறேன், எப்படி எதிர்வினை செய்கிறேன் என்பதையே முதன்மைப் படுத்துகிறார். குறிப்பாகக் கவிதையில் வெளிப்படும் குரல், வாசகனுக்கு மிகுந்த நெருக்கத்தைத் தருகிறது. ரானின் கவிதைகள் திடீரெனச் சந்தித்துக்கொண்ட பழைய நண்பனைப்போல நெருக்கம் தருகின்றன.

ரான் பேட்ஜெட், தினசரி வாழ்க்கையை ஏன் கொண்டாடுகிறார்... தினசரி வாழ்க்கை என நாம் நினைப்பது நிகழ்வுகளின் தொகுப்பை மட்டுமே. வீடு, வேலை, சம்பாத்தியம், அதற்கான மெனக்கெடல், குடி, ஓய்வு, உறக்கம், புணர்ச்சி இவைதான் தினசரி வாழ்க்கையா... தினசரி வாழ்க்கை என்பது, ஓராயிரம் கண்ணிகள்கொண்டது. ஒவ்வொன்றும் ஒரு விசேச நூலிழையால் உருவாக்கப்பட்டது. ரான் அதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ரான் பேட்ஜெட்டின் கவிதை ஒன்றில், ஒரு நாய்க்குட்டி முதன்முறையாகக் காரில் பயணம் செய்கிறது. ‘நடந்து போகாமல் எப்படி இடம்விட்டுப் போகமுடிகிறது’ என்று அந்த நாய்க்குட்டி திகைப்படைகிறது. காரின் கண்ணாடி வழியாக உலகைப் பார்க்கும் அனுபவத்தை அன்றுதான் முதன்முறையாகப் பெறுகிறது. அந்தப் பயணம் நாய்க்குட்டிக்குப் பெரும் புதிராகவும் விளங்கமுடியாத சந்தோஷமாகவும் இருப்பதாகக் கவிதை முடிகிறது. தினசரி வாழ்வில் இதுபோன்ற காட்சியைக் கடந்துசெல்லும் ஒருவன், எவ்விதமான கிளர்ச்சியும் அடைவதில்லை. ஆனால், இதே காட்சிகள் கவிதையில் இடம்பெறும்போது நாய்க்குட்டியின் அனுபவம் நாம் அறியாத உணர்வாக அடையாளப்படுத்தப்படுகிறது.

பள்ளி வயதிலே கவிதைகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று கருதிய ரான் பேட்ஜெட், ஐந்தாம் நிலை மாணவர்கள் வாசிப்பதற்காக, தானே கவிதைகளைத் தேர்வுசெய்து கொடுத்திருக்கிறார். “எதைக்கொண்டு கவிதைகளைத் தேர்வு செய்தீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, “எந்தக் கவிதையில் உணவுப் பொருள்கள். டவுன்பஸ், நாய்க்குட்டிகள், காலி டின்கள் இடம்பெற்றதோ அதையே தேர்வுசெய்தேன். பிராங் ஓ ஹாராவின் கவிதை ஒன்றில் சீஸ்பர்கர் பற்றிய வரி இடம்பெற்றிருக்கிறது. இதை வாசிக்கும் ஒரு மாணவன் கவிதை என்பது நம் அன்றாட உலகோடு சம்பந்தமுடையது என்று நம்புவான். தானும் அதுபோன்ற கவிதை ஒன்றை எழுத முற்படுவான். இதை விடுத்து, சிக்கலான கவிதைகளை அவனுக்கு அறிமுகம் செய்தால், அவன் கவிதை என்பது தனக்குத் தொடர்புடைய விஷயமில்லை. அது அறிவாளிகளுக்கானது என்று விலகிவிடுவான். ஒருவன் கவிதையைவிட்டு விலகுவது என்பது மதிப்பிடமுடியாத இழப்பு என்றே சொல்வேன். மாணவர்களைக் கவிதை வாசிக்கவைக்கப் புதுவகைக் கவிதைகள் தேவைப்படுகின்றன. அந்தக் கவிதைகளில் குறைவான சொற்களே இடம்பெற்றிருக்க வேண்டும். காட்சிகள் உடன் இணைக்கப்பட்டிருக்கலாம். ஒரு புதிர் விளையாட்டுபோல அவனுடன் இணைந்து அந்தக் கவிதை தன் புதிரை விரிக்கலாம். அர்த்தமற்ற சொற்களை மாணவர்கள் விரும்புகிறார்கள். அதன் ஓசையே அதற்கான காரணம். இசையோடு சேர்ந்து வெளிப்படும் சொற்களே மாணவர்களுக்கு விருப்பமானவை. அதையே நான் மாணவர்களுக்கான கவிதைகளில் முயன்றேன்” என்று கூறுகிறார் ரான்.

ரான் பேட்ஜெட்டின் கவிதைக்கான வரவேற்பும் அங்கீகாரமும் மிகப்பெரியது. இன்றும் அமெரிக்காவின் கொண்டாடப்படும் கவிகளில் ஒருவராகவிருக்கிறார். அமெரிக்காவின் பிரபல இயக்குநரான ஜிம் ஜார்முர்ஷ் இயக்கிய ‘பேட்டர்சன்’ படத்தில் இவரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ரான் பேட்ஜெட் படித்த அதே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தவர் ஜார்முர்ஷ். கவிதைகளை நேசிப்பவர், சிறந்த இசைக்கலைஞர்.  ‘பேட்டர்சன்’ படம், ஒரு கவிஞனின் வாழ்க்கையை விவரிக்கும் அற்புதமான திரைப்படம். அவன் எழுதுகிற கவிதைகளாக ரான் பேட்ஜெட்டின் கவிதைகளே படத்தில் இடம்பெற்றுள்ளன. கவிஞன் எப்படி உருவாகிறான் என்பதை ஜார்முர்ஷ் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் கடைசிக் காட்சியில் வரும் ஜப்பானியக் கவிஞன், ‘தனது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவில்லை’ என்று கூறிவிட்டு, “Poetry in translations is like taking a shower with a raincoat on” என்று சொல்கிறான். கவிஞர்கள் பேசுவதும் கவிதையாகவே ஒலிக்கிறது.

ரான் பேட்ஜெட்டின் தேர்வுசெய்யப்பட்ட கவிதைகள் 500 பக்கங்களுக்கும் மேலாக உள்ளன. தியானம் செய்பவர்கள் நீலவெளிச்சத்தின்முன் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு மனதை ஒருமுகப்
படுத்துகிறார்கள். ரானின் கவிதைகளை வாசிக்கும்போதும் அதுபோன்ற தியான அனுபவமே ஏற்படுகிறது.

- எஸ்.ராமகிருஷ்ணன் ஓவியம் : பிரேம் டாவின்ஸி

கவிதையின் கையசைப்பு - 7 - அமெரிக்க நவீனக் கவிதையின் முகம்

ரோமானிய எண்கள்

பெருக்கல் செய்வது ரோமானியர்களுக்கு
மிகக் கடினமானதாக இருந்திருக்க வேண்டும்
- நான் இனவிருத்தி செய்வதைக் குறிப்பிடவில்லை,
ஆனால், அந்தக் கணக்கிடுதலைச் செய்வதற்கு.
ஒரு கணத்திற்கு, ஒரு ரோமன் எண்ணுக்குள்
நுழையுங்கள், MDCCLIX போன்ற
நீண்ட ஒன்றுக்குள். பாருங்கள்
நிரல்களை, முக்கோண முகப்புகளை
மேலும் விதானத்து வளைவுகள்: உங்களால்
அவற்றை நகர்த்த முடியாது, 
ஆனால், அவை எவ்வளவு அழகாகவும்
கம்பீரமாகவும் இருக்கின்றன! எவ்வாறாயினும்
MDCCCLXIVஐ  MCCLVIII கொண்டு பெருக்க முயலுங்கள். 
அவர்கள் எவ்வாறு இதைச் செய்தார்கள்?
இந்தக் கேள்வியைச் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் கேட்டேன்
மேலும் ஒரு விடையை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை
ஏனெனில் ஒரு விடையை நான் ஒருபோதும் தேடவில்லை,
ஆனால், இது இனிமையானது,
இந்தக் கேள்வியுடன் வாழ்தல். 
ஒருவேளை ரோமானியர்கள் கணக்கில் வல்லவர்களாக இல்லாமல் இருந்திருக்கலாம்
அராபியர்கள்போல அல்லாமல், அவர்கள்
இலக்கங்களின் கூடைகளுடன் வந்து சேர்ந்தார்கள் ஒவ்வொருவருக்கும்
ஏராளமாகக் கிடைக்குமாறு. இன்று நமக்குத் தேவைப்படும்
அளவுக்கும் மேலாக இன்னும் நம்மிடம் இருக்கின்றன. 

வண்ணத்துப்பூச்சி

தான் ஒரு வண்ணத்துப்பூச்சி எனக் கனவு கண்ட
மனிதனைப் பற்றி சுவாங்சூ எழுதினார் 
மேலும் அவன் விழித்தபோது
அவன் ஒரு மனிதனாக இருந்ததாகக் கனவு காணும்
ஒரு வண்ணத்துப்பூச்சி இல்லையா இப்பொழுது
என்று அவன் வியந்தான். 
இந்த எண்ணத்தை நான் நேசிக்கிறேன்
தான் ஒரு வண்ணத்துப்பூச்சி என ஒரு மனிதன் நினைக்கக் கூடும்
என சுவாங்சூ உண்மையில் எண்ணினாரா என்பதை
நான் சந்தேகிக்கிற போதிலும், 
இரவில் ஒரு கனவிலிருந்து
விழித்தெழுதல் என்பது ஒரு விஷயம்
மேலும் நீங்கள் ஒரு மனிதன் எனக் கனவு கண்டவாறு
உங்கள் முழு வாழ்க்கையையும் செலவழிப்பது என்பது இன்னொரு விஷயம்.
நான் எனது முழு வாழ்க்கையையும் செலவு செய்தேன்
நான் ஒரு பையன் என நினைத்துக்கொண்டு, பிறகு ஒரு மனிதன், 
மேலும் ஓர் ஆள் மற்றும் ஓர் அமெரிக்கன்
மேலும் ஒரு பௌதிகப் பண்டம் மற்றும் ஓர் ஆவி
மேலும் கொஞ்சம் வண்ணத்துப்பூச்சியாக இருந்திருக்கலாம்.   
நான் கூடுதலாக வண்ணத்துப்பூச்சியாக இருந்திருக்க வேண்டி இருக்கலாம்
அதாவது, ஓர் அறைக்குள் பதுங்கியிருப்பது
வீங்கிப் புடைத்த கண்களுடனும் பெரிய சிறகடிக்கும் றெக்கைகளுடனும்
ஒரு மூச்சுத் திணறவைக்கும் பொடியை அது
மக்கள்மேல் வீசுகிறது அவர்கள் கதறுகிறார்கள் மேலும் செத்து விழுகிறார்கள்.

இறவாப் பறவையாகக் கவி

ஒரு க்ஷணத்துக்கு முன்பு எனது இதயம் துடித்துப்போனது
மேலும் நான் நினைத்தேன், ‘இது ஒரு கெட்ட நேரமாக இருக்க வேண்டும்
ஒரு கவிதையின் நடுவில்
மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது என்பது.’ பிறகு நான், பறவைகள்
பறந்துகொண்டிருக்கும்போது ஒருபோதும் இறப்பதில்லைபோல
ஒரு கவிதை எழுதிக்கொண்டிருக்கும்போது நடுவில் 
யாரும் இறந்ததாக நான் ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லை 
என்னும் எண்ணத்தால் நான் ஆசுவாசம் அடைந்தேன்.
நான் யோசிக்கிறேன்.

கவிதையின் கையசைப்பு - 7 - அமெரிக்க நவீனக் கவிதையின் முகம்

இன்னும் ஒருவர்

ஒரு குழந்தையாக நீங்கள் இருக்கும்போது
நீங்கள் கற்கிறீர்கள்
இங்கு மூன்று பரிமாணங்கள் இருக்கின்றன:
நீளம், அகலம் மற்றும் ஆழம்,
ஒரு காலணிப் பெட்டிபோல.
பின்னர் நீங்கள் கேள்விப்படுகிறீர்கள்
இங்கு ஒரு நான்காவது பரிமாணம் இருக்கிறது:
காலம்.
ம்ம்.
பிறகு சிலர் சொல்கிறார்கள்
இங்கு ஐந்து, ஆறு, ஏழு....கூட இருக்க முடியும் என்று.
நான் வேலையை உதறுகிறேன்,   
குடியகத்தில்
ஒரு பீர் அருந்துகிறேன்.
கீழே உள்ள தம்ளரைப் பார்க்கிறேன்
மேலும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். 

வரி

இங்கு ஒரு பழம்பாடல் இருக்கிறது
எனது தாத்தா பாடுவது வழக்கம்
அதில் ஒரு கேள்வி இருக்கிறது,
“அல்லது நீ ஒரு மீனாக இருப்பதற்கே பெரிதும் விரும்புகிறாயா?”
அதே பாடலில் இருக்கிறது
அதே கேள்வி
ஆனால், ஒரு கோவேறு கழுதையுடனும் ஒரு பன்றியுடனும்.
சரியாக அந்த ஒரு வரி.  
நீ ஒரு மீனாக இருப்பதற்கே பெரிதும் விரும்புகிறாயா?
பாடலின் மீதிப் பகுதிகள் எல்லாம்
அங்கு இருந்திருக்கவே வேண்டாம் என்பதுபோல.

பெல்ஜியத்தில் இறப்பது அல்லது உயிருடன் இருப்பது 

இறந்துவிட்டதாக நீங்கள் நினைக்கும் யாரோ ஒருவர் உயிருடன் இருக்கிறார்
மேலும் உயிருடன் இருப்பதாக நீங்கள் நினைக்கும் யாரோ ஒருவர் இறந்துவிட்டார்

சில சமயங்களில் ஒரு மகிழ்ச்சியான ஆச்சர்யமாக அது வருகிறது 
மேலும் சில சமயங்களில் நீங்கள் ஆச்சர்யம் அடைகிறீர்கள்

அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது ஒரு சில நாட்கள், ஒருவேளை மணிகள்
இப்பொழுது அவள் பலமுள்ளவளாகவும் ஏன் அழகானவளாகவும் கூடத் தெரிகிறாள்

உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் அவருக்கு அப்படி அப்படித்தான்
இப்பொழுது அவர் பெல்ஜியம் செல்கிறார்

அது பலத்தை எடுத்துக்கொள்கிறது, வெறும் நினைப்பே
--அத்தகைய விஷயங்களை ஏன் நான் கூறுகிறேன்?

ஏனெனில் எனக்குள் அங்கு ஒரு பிரஞ்சுக்காரன் இருக்கிறான்
அடிக்கொரு முறை அவன் வெளியே குதித்துவிடுகிறான்

ஹலோ! இங்கே, அருமையான காபி இருக்கிறது!
பிறகு அவன் வெளியே குதிப்பதை மறந்துவிடுகிறான்

அல்லது நான் அவனுக்கு முன்னால் குதித்து நிற்கிறேன்
அவனைவிடவும் நான் மிகப் பெரியவனாக இருக்கிறேன் 

அவன் பெல்ஜியம் போவதற்கு விரும்புவதில்லை
அல்லது பெல்ஜியம் பற்றி நல்லவிதமாக எதையும் சொல்வதுகூட இல்லை

நான் பெல்ஜியம் போவதற்கு விரும்புவதில்லை
ஹென்ட் ஆண்ட்வெர்ப் மற்றும் பிரஸ்ஸல்ஸ்

ப்ருஹெஸ்சுக்குச் செல்ல விரும்பினாலும்
மேலும் அங்குள்ள ஓவியங்களின் உட்புறம் செல்வதற்கு
  
மேலும் கன்னி மரியாளுக்கருகில் நிற்க
மிகப் பரிசுத்தமானதும் பெரியதுமான அவளது நெற்றி

மேலும் அங்கு அவளுடன் மீண்டும் உயிருடன் இருப்பதற்கு
பெல்ஜியத்தில் பலகைமீது தைல வண்ண ஓவியம்.

- தமிழில்: சமயவேல்