
பாஸ்கர் சக்தி - படம்: புதுவை இளவேனில்
இந்த ஆண்டின் தொடக்கமும் முடிவும் இப்படி இருந்திருக்க வேண்டாம். ஜனவரியில் ஞாநியை இழந்தோம். டிசம்பரில் பிரபஞ்சனை இழந்திருக்கிறோம். நம்மை ஈர்த்தவர்கள், வழிகாட்டியவர்கள், நம் ஒட்டுமொத்த சமூகத்தையும் நேசித்தவர்கள் ஒவ்வொருவராக விடைபெறுகிறார்கள். அவர்கள் நம் மனதிலிருந்து எதையோ தம்முடன் கொண்டுபோய் விடுகிறார்கள். அவர்கள் கொண்டுபோனதை இனி ஒருபோதும் நாம் பெற முடியாது என்கிற உணர்வு உள்ளிருந்து திரண்டு கலங்கடிக்கிறது.

பிரபஞ்சன் அன்பானவர், பேரழகன், அழகிய சிரிப்பை சொத்தாகத் தன்னுடனேயே வைத்திருந்தவர். நண்பர்களும் தோழமைகளும் எப்போதும் அணுகிப் பேசக் கூடிய இதமான மனிதர். பெண்களை அவர்களுக்குரிய மரியாதையுடன் கொண்டாடியவர். தன் எழுத்துகளில் மனித மாண்புகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தவர்.
கல்லூரி நாள்களில் பிரபஞ்சனை வாசிக்கத் தொடங்கினேன். மனிதர்களை நேசிப்பதைத் தன் எழுத்துகளில் வலியுறுத்திக்கொண்டே இருந்தன அவரது கதைகள். பின்னர் அவரை நேரில் சந்தித்தபோது அவரது எழுத்துகளில் வெளிப்பட்ட அத்தனை அம்சங்களையும் தன்னுள் கொண்ட மனிதராக இருந்தார். முதல் சந்திப்பிலேயே அவ்வளவு சிரிப்பு... அவ்வளவு சினேகம் அதுதான் பிரபஞ்சன்.
அவர் கே.கே நகருக்குக் குடிவந்த பிறகு அவரை அடிக்கடி சந்திப்பது வழக்கமானது... மிகவும் தனிமையை உணர்வதாக அடிக்கடி சொல்வார். எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடன் போய்ப் பேசிக்கொண்டிருப்பேன். ஆனால் அவர் சொன்ன தனிமை வேறு. அதை ஒருபோதும் சரி செய்ய இயலாது என்பது இருவருக்குமே தெரிந்திருந்தது... இருந்தாலும், அவர் உரையாடலை மிகவும் விரும்பினார்... அவர் கே கே நகரில் முதலில் குடிவந்த வீடு அவருக்குப் பிடிக்கவில்லை என்றார். ஏன் சார் என்று கேட்டபோது சொன்னார், “இந்த வீடு என்னுடன் உரையாட மறுக்கிறது பாஸ்கர்.” நான் வியப்புடன் “என்ன சார் சொல்றீங்க?” என்றதும், தன் அழகான புன்னகையுடன் சிகரெட் பிடித்தவாறே சொன்னார், “வீடு என்னைப் பொறுத்தவரை ஜடப்பொருள் கிடையாது. அதுகூட உங்களுக்கு ஒரு சினேகிதம், உரையாடல் இருக்கும். அது இருந்தாத்தான் உங்களால அதில இருக்க முடியும்” என்றார். அந்த வீட்டை விரைவிலேயே காலிசெய்து வேறு வீட்டுக்குப் போய்விட்டார். “இந்த வீடு என்னோடு பேசுகிறது” என்றார் அதே சிரிப்புடன்.
ஆண் சமூகம் பெண்கள்மீது ஆண்டாண்டுக்காலமாக நிகழ்த்திவரும் கொடுமைகள் குறித்த குற்ற உணர்ச்சியை அவர் தனது தனிப்பட்ட கவலையாகவே என்னிடம் பகிர்ந்திருக்கிறார். பெண்கள் மீதான அவரது ஆதுரம் ஓர் உயரிய மனநிலையில் விளைந்தது.
அவர் சில மாதங்களுக்கு முன்னால் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்கள் சிலருடன் பார்க்கப்போயிருந்தேன். அவருக்குச் சிலரை அடையாளம் தெரியவில்லை. ஆள் தெரிகிறது. ஆனால் இன்னார் என்பது குழப்பமாக இருக்கிறது என்பது போன்ற நிலை. என்னைக்கூட உத்தேசமாகத்தான் புரிந்துகொண்டார்...அப்போது நண்பர் பி.என்.எஸ்.பாண்டியன், கண்மணி குணசேகரன், கவிஞர் தமிழ்மொழி ஆகியோர் உடனிருந்தனர். பிரபஞ்சனிடம் வேடிக்கையாக `இவரு யாருன்னு தெரிகிறதா..?’ என்று தமிழ்மொழியைக் காட்டிக் கேட்க, அவர் `தெரிகிறதே’ என்று சமாளித்தார். பேர் சொல்லுங்க என்று கேட்டபோது சிரித்து சமாளித்தார். ‘‘இவங்க தமிழ்மொழி சார். மறந்துட்டீங்களா?” என்று சொன்னதும் கிண்டல் சிரிப்புடன் சொன்னார் பிரபஞ்சன், “என்ன இது? தமிழ் மொழியை என்னால் எப்படி மறக்க முடியும்?” அனைவரும் வெடித்துச் சிரித்தோம்...
அதன்பின் கீமோதெரபி செய்ததில் அவரது உடல்நிலை சற்று மேம்பட்டது. எனக்கு போன் செய்து உற்சாகமாகப் பேசினார்...
பிரபஞ்சனும் விடைபெற்றுவிட்டார்.அவருடன் பேசிய பொழுதுகளும் நினைவுகளும் என்றும் இருக்கும். அனைத்துக்கும் மேலாக அவருடைய எழுத்துகளும்...