
நம் வழி... குறள் வழி


அன்று போகர் தன் கரத்தில், குறிப்பாக இடதுகரத்தின் உள்ளங்கை பாகத்தில் உலோக உருண்டை ஒன்றை விரல்களை விடுவித்த நிலையில் எல்லோருக்கும் காட்டினார். சீடர்கள், அதைக் கூர்ந்து கவனித்தனர்.
``என்ன பார்க்கிறீர்கள்... இதுகுறித்து யாருக்காவது தெரியுமா?’’ என்றும் கேட்டார். இந்தக் கேள்விக்கும் அஞ்சுகனே பதில் கூறிட வாயைத் திறந்தான்.
``குருவே, இது ரசமணிபோல் தெரிகிறது... சரிதானே?’’
``சரியாகச் சொன்னாய்... ரசமணியேதான்! ரசமணி என்று கூற முடிந்த உனக்கு, இது எந்த வகை ரசமணி என்று கூற முடியுமா?’’
``அதைத் தாங்கள் எனக்குத் தந்தால் அதன் கனத்தை முதலில் உணர்ந்தும், பிறகு என் உடலில் நுட்பமாய் ஏற்படும் மாற்றங்களை வைத்தும் கூற முயல்வேன்.’’
``நல்லது... அதற்கு முன் என் கேள்விக்குப் பதில் கூறு. சரியான பதிலைக் கூறினால், அவர்களுக்கே இந்த ரசமணியைத் தந்துவிடுவேன்.’’
``குருவே, தங்களுக்கு எதனால் இந்த மண் மிகவும் பிடிக்கும் என்பதற்குக் காரணம் கூற வேண்டும். அவ்வளவுதானே?’’ - ஒரு சீடன் இடையிட்டுக் கேட்டான்.

``ஆம்... அவ்வளவேதான்! ஒரு நாகணவாய்ப்பட்சியாக நான் மாறி விண்ணில் பறக்க முனைந்தால் கிழக்கில் தொடங்கும் என் பயணம் மேற்கில் நான் திரும்பிவருவதில் முடிவடையும். அவ்வாறு நான் பறந்து திரும்பி வர, ஒண்ணரை மண்டல காலம் ஆகும். அவ்வளவு பெருஞ்சுற்றளவு உடையது இந்தப் பூமி. அதாவது 72 நாள்கள்... இந்த 72 நாள்களும் இரவு பகல் நான் நில்லாது பறந்தாலே இது சாத்தியம். இந்தப் பூமி எவ்வளவு பெரியது என்பதை நீங்கள் உணர்வதற்காக இவ்வாறு கூறினேன். இவ்வளவு பெரிய பூமியில் பலவகை நிலக்கூறுகள் இருந்தாலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அதைத் துல்லியமாகப் பகுத்தவர்கள் தமிழர்களே! அதில் இந்தப் பொதினி மட்டும் எனக்கு ஏன் அதிகம் பிடித்திருக்கிறது... காரணம் கூற முடியுமா?’’ - போகர் சற்று விரிவாகச் சில கற்பனைகளைத் தன் சீடர்களுக்குள் உண்டாக்கி, அவர்களுக்குள் ஒரு சிணுப்பலை ஏற்படுத்தியவராகக் கேட்டு முடித்தார்.
அவர்களும் தீவிரமாய் யோசித்தனர். சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு பரிதி என்பவன் ``மூலிகை வளம்மிகுந்த மலைகள் சுற்றி இருப்பதனாலா குருவே?’’ என்று கேட்டான்.
அமைதியாக அதை மறுத்தார் போகர்.
``தட்டை நிலப்பரப்பு - அதேசமயம் கடலோடு நேராகத் தொடர்பில்லாத நதிகள் உள்ள பரப்பு. அதனாலா?’’ என்று கேட்டான் மல்லி என்பவன்.
அதற்கும் மௌனத்தையே பதிலாக வைத்தார்.
``சேர சோழ பாண்டிய நாட்டு ஊர்களுக்குப் பொதுவானதாக, கிட்டத்தட்ட சமதூரத்தில் இருப்பதனாலா?’’ அகப்பை முத்து என்பவனின் கேள்வி இது.
போகர் அவனைச் சற்றுக் கனிவாகப் பார்த்துச் சிரித்தார். கிட்டத்தட்ட அவன் சரியான விடைக்கு வந்துவிட்டான் என்று அதற்குப் பொருள்.
``குருவே... நிலக்கூறு கடந்து புறக்கூறு ஒன்றே பெருங்காரணம் என்று கருதுகிறேன். அது அநேகமாய் தெய்விகமானதாய்... குறிப்பாக `திரு ஆவினன்குடி’ எனும் இறைத்தலம் சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்’’ என்று அஞ்சுகன் கூறவும், அவனை நெருங்கியவர் தீர்க்கமாய் அவனைப் பார்த்து ``பீஜாட்சர தியானம் உன்னை ஒளிமிகுந்தவனாக்கிவருவது நன்றாகத் தெரிகிறது அஞ்சுகா... நீயே சரியான பதிலை உரைத்தாய்!’’ என்றார்.
பிறகு அதற்கு விளக்கமும் அளிக்கத் தொடங்கினார்.
``சீடர்களே... இது முருக பூமி. கோளாதிபத்தியத்தில் செவ்வாயின் கதிர்வீச்சு செவ்வனே படும் பூமி. செவ்வாயின் குணங்களும் முருகனின் குணங்களும் ஒன்றுக்கொன்று நேர்மறையானவை. முருகனின் பீஜாட்சரமான `குமரா’ எனும் சொல்லின் அதிர்வலைகள், செவ்வாயின் கதிர் அலைகளின் போக்கைக் கட்டுப் படுத்திடவல்லவை. இதை யோகசக்தியால் ஞானக்கண்களைத் திறப்பிக்கச்செய்து வளிமண்டலத்தில் பார்த்தே உணரலாம். ஆனால், அதற்குப் பேராற்றல் வேண்டும்.
அந்த வகையில் முருகனுக்குள் அவனது பீஜாட்சரமான `குமரா’வுக்குள் இருப்பதே `ராமா’ என்னும் நாமம். இதில் `ரா’ அஷ்டாட்சரமான நாராயணாவின் ஆத்மசக்தி, `மா’ நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்தின் ஜீவசக்தி. இதனுள் `குமரா’ எனும் பீஜாட்சரம் முருகனின் சஷ்டாட்சரம் ஆகும். இப்படி பஞ்சாட்சர, சஷ்டாட்சர, அஷ்டாட்சர சக்திகளை ஒற்றைச் சொல்லில்கொண்ட மந்திரச்சொல்லே `ராம’ எனும் சொல். இதனாலேயே இதை ஓயாது ஜெபித்திட, இந்த மூன்று வகை அட்சரங்களைச் சொன்ன பலனை இது வழங்கிடும் என்பர். இந்தப் பயனை `குமர’ என்னும் முருகனும் வழங்கவல்லவன். அந்த முருகன், இங்கே பழமாய் விளங்குகிறான். எப்படிப்பட்ட பழமாக என்று கூற முடியுமா?’’ போகர் அப்படிக் கேட்ட மாத்திரத்தில் ``ஞானப்பழமாய்...’’ என்று ஒருமித்த குரலில் சீடர்கள் உரைத்தனர்.

``அந்தக் கதை தெரியுமா?’’ என்றும் கேட்டார்.
``தெரியும்’’ என்றனர் கூட்டுக்குரலில்.
``நல்லது... அதன் சாரத்தை, குறைந்த சொற்களில் யாரால் கூற முடியும்?’’ -போகர் கேட்க, அஞ்சுகனே இந்த முறையும் முன் வந்தான் ``நான் கூற முயல்கிறேன் குருவே!’’
``நல்லது. கூறு பார்ப்போம்.’’
``பழம் என்பது, முதிர்ந்து தித்திக்கும் நிலை; பூ, பிஞ்சு, காய் எனும் நிலை கடந்த பரிமாணம். பூவோ, பிஞ்சோ, காயோ, மரத்தைப் பிரிய நேரும்போது பால் கசியும். அது மரத்தின் கண்ணீர். பழுத்த நிலையில் தானாய் உதிர்ந்திடும். பாலும் கசியாது... மரமும் வருந்தாது.
மனித வாழ்விலும் முதுமை என்பது, பழுத்ததன் அடையாளம். அவர் கருத்துகள் தித்திக்கும் - அவர் பிரிவோ முக்திக்கும் உரியதாகும். அத்தகு பழுத்த நிலைப் பாட்டை பாலகனாய் இருந்தபோதே அடைந்தவன் முருகன். அதை உலகம் உணர நிகழ்த்தப்பட்ட நாடகமே முருகன் உலகைச் சுற்றியதும், கணபதி உலகனாரைச் சுற்றிய சம்பவமும். நாடகத்தின் உச்சம் அவனது துறவுக்கோலம். இதன்மூலம் துறவோர்க்கடவுளாக ஞானம் தருபவனாய் அவன் விளங்குகிறான். எங்கே அந்த ஞானப்பழம் என்று அவன் இறையனாரிடம் கேட்க, அதற்கான பதிலை ஒளவைப்பிராட்டி தந்தாள்.
``நீயே பழம்... உனக்கு எதற்கு இன்னொரு பழம்? பழம் நீ என்றதால், அது மருவி `பழநி’ என்றும் இப்பொதினி சிந்திக்கப்படுகிறது’’ - அஞ்சுகனின் விளக்கத்தைத் தொடர்ந்து ``கையை நீட்டு!’’ என்றார் போகர். அவனும் நீட்டினான். அவன் உள்ளங்கையில் அந்த ரசமணியை வைத்தார். பிறகு ``இது ஞானமணி என்னும் ரசமணியாகும். இதை நீ சிறு வெள்ளிப்பேழைக்குள் வைத்துக் கழுத்தில் கட்டிக்கொள். ஜனவசியம் மட்டுமன்றிக் கொடிய மிருகங்களும் உன்னைக் கண்டால் ஒதுங்கிச் செல்லும். நீ அழைத்தால் பறக்கின்ற பறவைகள்கூட உன் மேனிமேல் வந்து அமரும். எங்கே, வானில் பறக்கும் அந்த வல்லூறை அழைத்து உன் கரத்தின் மேல் நிறுத்து பார்க்கலாம்’’ என்றார் போகர்.
கையை மூடி ரசமணியை இறுகப் பற்றிக்கொண்டு விண்ணைப் பார்த்து, வட்டமிடும் வல்லூறை அஞ்சுகனும் மானசீகமாய்ச் சிந்தித்தான். என்ன ஆச்சர்யம்! அந்த வல்லூறு தாழப் பறந்து அவனை நோக்கி வரத் தொடங்கியது!
இன்று அந்தப் பெண் பயமின்றி எடுத்துப் போட்ட அந்தப் பாம்புச்சட்டையைப் பார்த்த துரியானந்தமும் குமரேசனும் கண்களை அகட்டினார்கள். அவர்கள் கன்னக்கதுப்புகளிலும் வீணை நரம்பின் மேல் விரல்பட்டதுபோல் ஓர் அதிர்வு. ஆனால் வயதானவரோ, அந்தப் பாம்புச்சட்டை முன் எழுந்து நின்றவராய் தன் நடுங்கும் இரு கைகளைக் கூப்பி வணங்கத் தொடங்கினார்; முணுமுணுக்கவும் செய்தார்.
``சாமி... நடமாடிக்கிட்டுத்தான் இருக்கீங்களா? சந்தோஷம் சாமி. ஆனா, உங்களோட இந்தக் கோட்டையை இடிச்சுக் கட்டி என்னென்னவோ பண்ணப்போறாங்கன்னு கேள்விப்பட்டு நான் முடங்கிட்டேன் சாமி. உங்க வாரிசுங்களே இந்த இடத்தோட மதிப்பு தெரியாம நடந்துக்கும்போது நான் மட்டும் என்ன பண்ண முடியும்?
என்னையும் `இடத்தை காலிபண்ணு’ன்னு சொல்லிட்டாங்க. தினமும் நாலு பேர் வர்றாங்க. அங்கங்க அளக்குறாங்க. அப்புறம் அப்படி இப்படின்னு ஏதேதோ பேசிக்கிறாங்க... இதோ இப்பகூட ரெண்டு பேர் வந்து எகத்தாளமா பார்த்துக்கிட்டு நிக்கிறாங்க’’ - வயதான அந்த மனிதர், தெய்வ சந்நிதியில் நின்று மனமுருகப் பிரார்த்தனை செய்வதுபோல் பேசியதில் சில விஷயங்கள் துரியானந்தத்துக்கும் குமரேசனுக்கும் புரியவந்தன. அந்தப் பங்களாவினுள் கட்டடத்தைக் கடந்து மர்மமான ஏதோ ஒன்று இருப்பதும் அவர்களுக்குள் அர்த்தமாகியது. அந்தப் பெண்ணும் இருவரையும் பார்த்து சன்னமாய்ச் சிரித்தாள்.
``சரி கண்ணு... நீ இந்தச் சட்டையக் கொண்டுபோய் ஊட்ல... வேணாம் வேணாம் - நீ போய் ஒரு குவளையில பால் கொண்டு வா. காச்சினதில்ல... பச்சப்பால்’’ என்றார்.

``எதுக்கு தாத்தா?’’
``போய்க் கொண்டு வா சொல்றேன்’’ - அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அவள் அங்கிருந்து நகரவும் அவர் இருவரையும் பார்த்தார்.
இருவரிடமும் ஒருவகை ஸ்தம்பிப்பு.
``என்ன பார்க்கிறே... நீ இந்தக் கட்டடத்தை இடிக்க வந்தவன்தானே?’’ அவர் கேள்வியில் ஒரு கோபம் தெரிந்தது.
``நாங்க இடிக்க வரலை.. மரச்சாமானை எல்லாம் அப்படியே எடுத்துக்கிட்டுப் போய், பயன்படுத்திக்கப்போறோம்.’’
``இந்த மரம் அவ்வளவும் பர்மாவுல இருந்து வந்த தேக்கு. இது கப்பல்ல வந்து இறங்கினப்ப எனக்கு ஆறு வயசு.’’
``ஓ! அப்ப, இப்ப உன் வயது?’’

``சொன்னா நம்புவியா?’’
``என்ன... ஒரு 80, 85 இருக்குமா?’’
``கூட, ஒரு 35 சேர்த்துக்கோ...’’
``நூற்றிருபதா?’’
``நம்ப முடியலியா?’’
``சத்யமா நம்ப முடியல. அப்ப இந்தக் கட்டடம் கட்டி 114 வருஷம் ஆவுதா?’’
``ஆமா.. அதுல ஒரு திருத்தம் இருக்கு.’’
``என்ன திருத்தம்?’’
``இது முந்நூறு வருஷக் கட்டடம்; அஞ்சு தலைமுறை வாழ்ந்த கட்டடம்! இதுல தேக்குமரங்களைக் கொண்டு ஒரு புது வடிவத்தை உருவாக்கினவர்தான் பிரமாண்ட ராசய்யா!’’
``பிரமாண்ட ராசய்யாவா, இது என்ன பேரு..?’’
``அதான் பேரு... பிரமாண்டம் ஜமீன்னு நீ கேள்விப்பட்டதில்லையா?’’
``பெருசு... நீ இப்ப என்ன சொல்ல வர்றே?’’
``மதிப்பு தெரியாம பேசறீங்க... இது கட்டடம் இல்லை... கோட்டை! கோட்டைகூட இல்ல... கோயிலு!’’
``கோயிலா?’’ - குமரேசன் கொஞ்சம் அதிர்வோடுதான் கேட்டான்.
``சித்தன் வாழுற இடம் கோயில்தானே?’’ - அவர் கேள்வி கேட்டபடியே எழுந்து நின்று தன் இடுப்பு வேட்டியை ஒருமுறை அவிழ்த்து உதறிக் கட்டிக்கொண்டார். அப்போது உள்ளாடையாகக் கோவணம் கட்டியிருப்பதும் அரைஞாண்கயிற்றில் சில தாயத்துகளும், குட்டிப் பேழைகளும்கூட சில விநாடி குமரேசன் கண்களிலும் துரியானந்தம் கண்களிலும் பட்டன.
அவரோ அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டுக்குள் நுழைந்து ஒரு சிறு களைக்கொத்தியோடு வெளியே வந்தார். நடையில் லேசானதொரு தடுமாற்றம் இருந்தது. இருந்தும் விழாமல் நடந்தவர் ஒரு மரத்தின் அடியில் அதன் தண்டையொட்டி தன் கையால் மூன்று சாண் என்கிற ஓர் அளவெடுத்து அங்கே குழியை வெட்டத் தொடங்கினார்.
``பெருசு... எதுக்கு இப்ப குழி தோண்டுறே?’’ என்று அருகே சென்று கேட்டான் குமரேசன்.
``என் ஐய்யன் சட்டைய புதைக்கத்தான்...’’ என்று ஓர் அடி அளவுக்குத் தோண்டிவிட்டு வந்து, அந்தப் பாம்புச்சட்டையைக் கையில் எடுத்து அதன் வால்பாகத்தைப் பிடித்தார். 12 அடி நீளம்! 6 அடி அவர் பிடியிலும் மீதம் 6 அடி தரையிலுமாகக் கிடந்தது அந்தச் சட்டை. அதை அப்படியே பதவிசாகச் சுருட்டி, கண்களில் ஒற்றிக்கொண்டவராய் அந்தக் குழி அருகே சென்று அதனுள் போட்டுத் திரும்பவும் மண்ணைப் போட்டு மூடி, ஒரு சிறு மேட்டை உருவாக்கி அந்த மேட்டின் மேல் பாத்திரம்போல் ஒரு பள்ளத்தை உருவாக்கினார். அதற்குள் அந்தப் பெண் பாலோடு வந்துவிடவும், அதை அந்தப் பாத்திரம் போன்ற பள்ளத்தில் விடவும் அது மண்ணோடு கலந்து குழிக்குள் இறங்கி மறைந்தும்போனது.
அவர்கள் இருவருக்கும் ஓரளவு புரிந்துவிட்டது. துரியானந்தம் மனைவி, ஆடி மாசம் வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்குப் பால் தெளிப்பவள். அது ஒரு வழிபாடு! ஆனால், பாம்பு பால் எல்லாம் குடிக்காது. அதன் உணவு புழு, பூச்சி, தவளைதான் என்பது ஒரு பழைய புத்தகக் கடைக்காரனாய் பலரோடு பழகப்போய் தெரியும்.

இருந்தும் ஒரு கூட்டம் இந்தப் பால் தெளிப்பதில் துளியும் பின்னடைவின்றி இன்று வரை அதைப் பின்பற்றி வருவதும் தெரியும். இதில் எது சரி, எது தவறு போன்ற கேள்விக்கோ, ஆராய்ச்சிக்கோ இடமில்லாத ஒரு சோத்துக்குச் செத்த வாழ்க்கை அவன் வாழ்க்கை.
அந்த வயதானவர் திரும்பப் போய் கட்டிலில் அமர்ந்துகொண்டார். அப்படியே அவர்கள் இருவரையும் பார்த்தவர், திரும்பி அங்கு வளர்ந்திருக்கும் பெரிய பெரிய மரங்களை ஒரு பார்வை பார்த்தார். பெருமூச்சும் வெளிப்பட்டது. கூடவே ஆதங்கமும்!
``இந்த மரங்களை எல்லாமும் வெட்டப்போறாங்களாம். இதெல்லாம் குற்றாலமலைக்கு மேல இருந்து கொண்டுகிட்டு வந்து பூசைபோட்டு நட்ட மரங்கள். இத்தினி வருஷத்துல ஒரு பருவத்துலகூட இதுங்க பொய்யாகல! பூத்தும் காச்சும் தந்துக்கிட்டேதான் இருக்குங்க.’’
``அதுக்கென்ன பண்றது... ஊரும் மக்களும் அப்படியேவா இருக்காங்க... பெருகிட்டேல்ல போறாங்க...’’ - குமரேசன் அதற்கொரு பதிலைச் சொன்னான். அவன் பதில் அந்தப் பெரியவருக்குப் பிடிக்கவில்லை என்பது பதிலுக்கு அவர் பார்த்த பார்வையில் தெரிந்தது. அது குமரேசனுக்கும் புரிந்தது.
``நைனா... இவர் பார்வையே சரியில்ல - விட்டா பழைய கதையா எதையாச்சும் சொல்வார். நாம வந்த வேலைய பார்ப்போம்’’ என்றபடியே அவரை விட்டு விலகி அந்தத் தோட்டத்தின் மற்ற பாகங்களைப் பார்க்க நடந்தான். `ஏராளமான இலைச்சருகுகள்... பசுமையான அடப்பம்... மயிற்தோகை விசிறலாய்க் காற்று... வடு பிடித்த மாமரம்... நாவல்பழம்போல் காய்களை உதிர்ப்பித்திருக்கும் நெட்டிலிங்கம்... கொழுத்த கொழிஞ்சி... இடையில் ஓடிய சில உடும்புகள்...’ பார்த்தபடியே நடந்த அவர்கள் ஓர் அரசமரத்தின் கீழ் பிருந்தாவன மாடத்தோடுகூடிய அந்தச் சமாதியையும் கண்டனர். மாடத்தில் விளக்கு எரிந்தபடி இருந்தது.
வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்றனர்.
சமாதி முகப்பில் கடப்பைக்கல்லில் `பிரமாண்டராஜ உடையார் 1832-1932’ என்ற காலப்பதிப்பு. சரியாக நூறு வருடம் வாழ்ந்த ஒருவரின் சமாதி.
``என்ன நைனா இது வில்லங்கம்? ஜமீன்தாருங்க செத்தா சுடுகாட்டுக்குக் கொண்டுபோக மாட்டாங்களா? அவங்க இடத்துலேயே புதைச்சிடுவாங்களா?’’ என்று குமரேசன் துரியானந்தத்திடம் கேட்க, துரியானந்தமும் ``யாருக்குடா தெரியும்... ஆனா ஒண்ணு, இது சகஜமான இடம் இல்லை. வா போவோம்’’ - என்று அங்கிருந்து நழுவப்பார்த்தான். அப்போது யாரோ சிலர் வரும் அரவம். அரசமரத்துக்குப் பின்னால் பத்து அடி தொலைவில் அந்த பங்களாவின் பின்பக்க மதில்சுவர். அதன்மேல் மூன்று அடி உயரத்துக்கு கிராதி முள்கம்பிவேலியும் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தும் அந்த வேலியை வெட்டி அறுத்து ஓர் ஆள் புகுந்துவரும் அளவுக்குத் திருட்டுத்தனமான ஒரு வழித்தடம் உருவாகியிருக்க, அதனுள் சிலர் நுழைந்தபடியிருந்தனர். அதில் சில குடும்பப் பெண்களும் இருந்தனர். அவர் கையில் ஒயர்க்கூடை. அதில் பூ, எலுமிச்சம்பழம், ஊதுபத்தி போன்ற பூஜைப் பொருள்கள்.
குமரேசனும் துரியானந்தமும் விதிர்ப்புடன் பார்த்தபடி இருக்க ``மளமளன்னு கும்புட்டுக் கிளம்புவோம். அந்த இன்ஜினீயர் பார்த்துடப்போறான்...’’ என்றார் அவர்களில் ஒருவர். அதற்கேற்ப விறுவிறுவென சமாதி மேல் பூக்களைத் தூவி ஊதுவத்தி ஏற்றி எலுமிச்சம் பழத்தை நறுக்கிப் பிழிந்து அதைத் தலையைச் சுற்றி வீசிவிட்டு சமாதியின் கல்வெட்டுக்கு முன் திட்டாய் கறுப்பாய் இருக்கும் இடத்தில் கற்பூரத்தை ஏற்றி அது எரியத் தொடங்கவும் சுற்றி வரத் தொடங்கினர்.
துரியானந்தத்தையும் குமரேசனையும் அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இருவரிடமும் அடுத்தகட்ட ஆச்சர்யம்.
``ஆமா, இது என்ன இப்படித் திருட்டுத்தனமா வந்து கும்பிட்டுக்கிட்டு?’’ என்று கேட்டான் குமரேசன்.
``அப்ப நீங்க கும்பிட வரலியா?’’ என்று பதிலுக்குக் கேட்டார் அவர்களில் ஒருவர்.
``அது சரி... நாங்க ஏலம் எடுக்க வந்தவங்க.’’
``ஆமால்ல... பங்களாவை இடிக்கப்போறதா சொன்னாங்க. அதான் எங்களை எல்லாமும் முன் வழியா உள்ளே விடறதில்லபோல!’’
``அதுக்காக இப்படியா வந்து கும்பிடுவீங்க... அதுவும் ஒரு சமாதிய..?’’
``பார்த்துப் பேசுங்க அப்பு... சித்தர் சாமி காதுல விழுந்து உங்கள சபிச்சிடப்போறாரு.’’
``சித்தர் சாமியா?’’
``பொறவு... நாங்க நேர்லயே பார்த்தவங்க. கும்புட்டு உழுந்தா கோடி கொடுப்பாரு... இல்லாட்டி உங்களுக்குத்தான் கஷ்டம்’’ - என்றவர்கள், மளமளவென சமாதி அருகே இருந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு வந்ததுபோலவே திரும்பியும் சென்றனர்.
துரியானந்தமும் குமரேசனும் மலங்க மலங்கப் பார்த்தபடியே திரும்ப முற்பட, துரியானந்தம் மட்டும் திரும்பி வந்து சமாதி முன் நின்று கும்பிடத் தொடங்கினான்.
``ஐய்ய... என்ன நைனா பயந்துட்டியா?’’
``பயப்படலடா... இது ஒரு மரியாத. செவுரு ஏறிக் குதிச்சுக் கும்பிட்டுட்டுப் போறாங்கன்னா சக்தி இல்லாமலா கும்புடுவாங்க?’’ என்று கேட்டபடியே, எதற்கு வம்பு என்பதுபோல் சமாதி மண்ணை எடுத்துத் தன் நெற்றியில் இட்டுக்கொண்டே நடந்தான் துரியானந்தம். ஆனால், குமரேசன் தன் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டதோடு சரி!
பங்களாவினுள் திரும்ப நுழைந்தபோது கடப்பாரை, கொத்துகருவி, திருப்புளி, ரசமட்டம், டிரில்லிங் மெஷின் என்கிற ஐட்டங்கள் வேன் ஒன்றிலிருந்து சுகாடியா சேட்டால் அனுப்பப்பட்டிருந்தன.
``ஜாமான்லாம் வந்துடுச்சி பார்... சேதாரமில்லாம சூதானமா ஒவ்வொரு ஜன்னலா முதல்ல கழட்டுவோம்’’ என்று தாங்கள் எதற்கு வந்தார்களோ அந்த வேலையைப் பார்க்கத் தொடங்கினர். அப்போது உச்சிக்கூரையின் முக்கோண மரச்சட்டம் ஒன்றின்மேல் அவர்களைப் பார்த்தபடியே லேசாக தன் படம் விரித்த தலையை உயர்த்தியிருந்தது அந்தப் பன்னிரண்டு அடி நீள நாகம்!
குளித்து முடிந்தவளாய் பெர்முடாஸ்-டீஷர்ட் என கேஷுவல் ஆடையோடு டைனிங்டேபிளுக்கு பாரதி வந்தபோது, முத்துலட்சுமி சிலைபோல்தான் அமர்ந்திருந்தாள். அவளைக் கலைத்து அவள் புலம்பப்போவதைக் கேட்கும் விருப்பமின்றி பாரதியே தனக்குத்தானே உணவைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினாள். பாத்திரச் சத்தம் முத்துலட்சுமியைக் கலைத்தது. சற்றே உதறிக்கொண்டவளாய் ``கூப்பிட மாட்டே...’’ என்று சப்பாத்திக்கான குருமாவை விடத் தொடங்கினாள்.

பாரதியும் சாப்பிட்டபடியே... ``என்ன பாட்டி அப்பாவுக்கு... இப்படி ஆயிடிச்சேங்கிற கவலையா?’’ என்று ஆரம்பித்தாள்.
``உனக்கு இல்லையா பாரதி?’’ - மிக இயல்பாய் திருப்பிக்கேட்டாள் முத்துலட்சுமி.
``பெருசா இல்லை பாட்டி.’’
``எனக்கும் அப்படித்தான்’’ - பதிலுக்கு ஆச்சர்யமாகப் பார்த்தாள் பாரதி.
``அந்தச் சமயத்துக்கு அந்தச் சாவு வீட்டு விஷயத்தை நீ மறைச்சிட்டாலும் பின்னால எல்லாத்தையும் கணேசபாண்டி சொல்லிட்டான். எனக்கும் பொக்குன்னு ஆயிடிச்சு. உன் அப்பன் உன் தாத்தா மாதிரி... அவரு தூங்கப்போகும்போதுகூட சலவை பண்ணுன வேட்டி சட்டையோடுதான் தூங்கப் போவாரு, தான் ஒரு ராசாங்கிற நினைப்பு... இந்தத் துவையல போடட்டுமா? பிரண்டைத் துவையல்... எலும்பு நரம்புக்கெல்லாம் நல்லது.’’
``இப்ப நமக்கு வேற நல்லதெல்லாம்தான் பாட்டி தேவையா இருக்கு.’’
``சரியா சொன்னே... உன் அப்பன் கொஞ்ச நாளைக்கு எதுவும் பண்ண மாட்டான். இந்த நொட்டாங்கையனையும் லீவைக் கொடுத்து மதுரைக்கு அனுப்பிட்டா, அக்கடான்னு வீட்லதான் கிடந்தாகணும். நீயும் அந்தக் குடும்பத்துக்குச் செய்ய நினைக்கிற நல்லதை செஞ்சுடலாம். பாவம் அந்தப் பொண்ணு... +2 படிக்குதாமே! நல்லா படிச்சா நாமளேகூட மேல் படிப்பெல்லாம் படிக்கவைப்போம். உன் அப்பன் காசு பணமே வேண்டாம். என் அட்டிகை ஒட்டியாணம்லாம் டிவி-யில அடகு விளம்பரத்துல சொல்ற மாதிரி பெட்டிக்குள்ள கைதி மாதிரி அடைஞ்சுதானே கிடக்கு?’’ -முத்துலட்சுமியின் விஸ்தாரமான மனதை எண்ணி மகிழ்ந்தபடியே பாற்குமிழியாய்ச் சுழித்துச் சிரித்தாள்.
``அப்புறம், நான் ஒண்ணு சொல்வேன் - கோவிச்சுக்க மாட்டியே?’’ - வெள்ளி டம்ளரில் தண்ணீர் விட்டபடியே பீடிகை போட்டவளை ``என்ன, பழநிக்குப் போகலாமான்னுதானே கேட்கப்போறே?’’ என்றாள்.

``எங்கற்பூரம்... அதேதான்!’’
``போயிட்டு வந்தா எல்லாம் சரியாயிடுமா பாட்டி?’’
``இப்படிக் கேட்டா எப்படிம்மா... திமிர்பிடிச்ச உன் தாத்தாகூட முருகன்னா மறுபேச்சு பேச மாட்டாரும்மா..’’
``தாத்தாவ விடு... உன் முருகனைப் பார்த்துட்டு வந்துட்டா, என் அப்பா பரிசுத்தமான அரசியல்வாதியா மாறிடுவாரா?’’
``அது...’’
``பதில் சொல்ல முடியலல்ல..?’’
``அப்படி இல்லம்மா... நல்லது கெட்டதுன்னு ரெண்டும் கொண்டதுதான் வாழ்க்கை. கெட்டது பளிச்சின்னு தெரிஞ்சா நல்லது பலமா இல்லைன்னு அர்த்தம். அதை பலப்படுத்திட்டா கெட்டது நிச்சயம் அடங்கிடும்மா.’’
``நல்லதுன்னு நீ எதைச் சொல்றே... அங்க போய் அந்த முருகன் சிலை முன்னால நின்னு என்னைக் காப்பாத்துன்னு சொல்றதையா?’’
``அப்படித்தான்னு வெச்சுக்கையேன்.’’
``அப்ப உன் சாமி எல்லா இடத்துலயும் இருக்கான்கிறதெல்லாம் பொய்யா?’’
``விதண்டாவாதம் பண்றியே கண்ணு. அது நம்ம குலதெய்வம். அங்க உன் அப்பன், தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா, அந்தத் தாத்தாவுக்குத் தாத்தாவெல்லாரும் நின்னு நீ சிலைன்னு சொன்ன கல்லைக் கும்புட்டிருக்காங்க. அவங்கள்ள இருந்து வந்தவதான் நீ. ஆகாயம் ஒண்ணும் உன்னைத் துப்பலை! வம்சம் விளங்கணும் எது மாறினாலும் உன்னைக் கும்புடற எங்க பக்தி மாறக் கூடாதுன்னு கும்புட்டதோட பலன்தான் நீ! நீ இப்படிப் பேசலாமா?’’
``சத்யமா நான் திமிர்பிடிச்சுப் பேசலை பாட்டி. எனக்கு இதெல்லாமே முட்டாள்தனமா படுது. நான் கும்புட்டாதான் அந்தச் சாமி நல்லது செய்யும்னா அது என்ன சாமி? அது சாமி இல்ல... அது இன்னொரு மனுஷன்... அரசன்! அரசன்தான் அவனைப் புகழ்ந்து கவிதை பாடினா பரிசு தருவான். திட்டினா தூக்கி ஜெயில்ல போடுவான்.’’
``தா பாரு... நீ புரிஞ்சிக்காம பேசறே! கோயில்ங்கிறது குளம் மாதிரி. நாம போய்க் குளிச்சா அழுக்கு போகும். குளம் கூப்பிடாது. சாமியும் கூப்பிடலை. மனசோட அழுக்கு போகவும், அகங்காரமில்லாம இருக்கவும்தாம்மா இதெல்லாம்!’’ - முத்துலட்சுமியின் கருத்துக்கு, சட்டென ஒரு கருத்தை பாரதியால் கூற முடியவில்லை.
இருந்தும் யோசித்து முடித்தவளாக, ``எனக்கு அகங்காரமெல்லாம் இல்லை பாட்டி... எனக்குத் தெரிஞ்சு என் மனசுல அழுக்கும் இல்லை. அதனால உன் முருகன் எனக்குத் தேவையுமில்லை. நீ வேணும்னா போயிட்டு வா. உன்னை எப்படி என்னால மாத்த முடியாதோ, அப்படித்தான் உன்னால என்னையும் மாத்த முடியாது!’’ - அவள் அப்படிச் சொன்னபோது அவள் கைப்பேசியில் அழைப்பொலிப் பாட்டு. காதைக் கொடுத்தவள் முகத்தில் பலத்த அதிர்ச்சி.
கணேசபாண்டியன்தான் பேசினார், ``பாப்பா... வேங்கையன்கிற அந்த ரெளடிய, அவன் எதிரிங்க...’’
- தொடரும்
இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியங்கள்: ஸ்யாம்