
மெய்ப்பொருள் காண் - மேடு
தமிழகத்தில் பல ஊர்களின், இடங்களின் பெயர்கள் ‘மேடு’ என்ற சொல்லோடு முடிகின்றன. ‘மேடு’ என்றதும் நமக்குள் தோன்றுவது என்ன? மண்ணாலும் கற்களாலும் ஆன குவியல். அதாவது பள்ளம், உயரம் என்ற எதிர்மறைகளில் உயர்ந்த பகுதியே மேடு. இந்தவகையில் ‘மேடு’ என்பதை நிலப்பரப்பின் ஒரு வடிவமாக மட்டுமே புரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், அது பண்பாட்டு அர்த்தம் ஒன்றையும்கொண்டிருக்கிறது. ஆனால், அப்படியான அர்த்தம் சார்ந்த புரிதல் இல்லாமேலேயே அச்சொல்லை நாம் இப்போது வழங்கிவருகிறோம். அதாவது ஓர் ஊரோ, கட்டடமோ, குடியிருப்புகளோ அழிந்து மண்மேடாகிப்போன இடத்தையே நாம் பெரும்பாலும் மேடு என்றழைத்திருக்கிறோம். அந்த வகையில், அச்சொல், ‘மண்குவியல்’ என்ற பொதுவான அர்த்தத்திலிருந்து நீண்டு, ‘அழிவு’ என்பதைக் குறிப்பதாகவே இருக்கிறது.
மண்குவியல் எனும்போது, ‘இயற்கையான நிலப்பகுதி’ போன்று பொருள்பெறுகிறது. ‘அழிவு’ எனும்போது இயற்கையான காரணங்களாலோ மற்ற காரணங்களாலோ நடந்த சேதாரங்களைக் குறிக்கிறது. அதாவது, அழிவுக்கு முன்னர் ஏதோ ஒன்று அங்கிருந்தது என்றாகிறது. இவ்விடத்தில் ‘மேடு’ என்ற சொல் ஒரு வரலாற்றுப் பண்பை அடைந்துவிடுகிறது. அதற்கடுத்து ஏன் அழிந்தது? எது அழிந்தது? என்கிற கேள்விகள் உண்டாகிவிடுகின்றன.

அழகன்குளம், கொடுமணல் போன்ற இடங்களில் நடந்த தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம், அது மனிதர்கள் வாழ்ந்து மண்மூடிய இடம் என்பதை அறிகிறோம். அண்மையில் திண்டுக்கல் அருகே ‘பாடியூர்’ என்ற ஊரில் தொல்லெச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. சொல்லிவைத்தாற்போல இம்மூன்று ஊர்களிலும் இத்தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்த பகுதிகள் ‘கோட்டைமேடு’ என்ற பெயரால் அமைந்துள்ளன. இதன்படி அழிந்த இடத்தைக் குறிக்கும் பொதுச்சொல்போல ‘மேடு’ ஆகியிருப்பதைப் பார்க்கிறோம். புதுச்சேரியில் அகழ்வாய்வு நடத்தப்பட்ட ‘அரிக்கமேடு’ என்ற ஊர்ப்பெயரிலும் மேடுதான் இருக்கிறது. இந்த எல்லா மேடுகளுக்குள்ளும் புதையுண்ட ஊர் இருந்ததை அறிகிறோம்.எனவே ‘மேடு’ என்ற சொல் அழிவைக் குறிக்கும் பண்பாட்டுக் குறியீடு ஆகிறது. பெயரில் மேட்டை கொண்டிராவிட்டாலும், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்தது புதைமேடு இருந்த இடத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிந்து சமவெளி அகழாய்வு இடமான ஹரப்பா என்பதற்கு ‘புதையுண்ட நகரம்’ என்றே பொருள். இதைவிட மொகஞ்சதாரோ என்பதற்கு சிந்தி மொழியில் ‘இடுகாட்டு மேடு’ என்பதே பொருளாகும்.
அதேவேளையில் இந்தச் சொல் நம்முடைய கிராமப்புறங்களில் இதே பொருளில் நெடுங்காலம்

புழங்கிவருகிறது என்பதுதான் இதில் சுவாரஸ்யமானது. அதாவது, கிராமப்புறங்களில் பண்படுத்தப்படாத தரிசு நிலப்பகுதி ‘நத்தமேடு’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதே பெயரில் பல கிராமங்கள் உள்ளன. வேறு சில கிராமங்களில் ஊரின் பகுதியாக அமைந்து, ஊராரால் மட்டுமே வழங்கப்படுவதாகவும் இப்பெயர் உள்ளது.
இதுவரையிலும் 30-க்கும் மேற்பட்ட நத்தமேடுகளுக்குக் களஆய்வு கருதி சென்றுவந்திருக்கிறேன். இந்த எல்லா நத்தமேடுகளிலும் சில குறிப்பான விசயங்கள் ஒத்த தன்மையில் இருப்பது வியப்பை ஏற்படுத்தியது. அதாவது, ‘நத்தமேடு’ என்று சொல்லப்படும் பகுதிகளில் பழைய பானை ஓடுகள், எலும்புக்கூடுகள் மண்ணோடு கலந்து கிடப்பதைப் பார்க்கமுடிந்தது. பல நத்தமேடுகளில் மண்சுவர், உரல், இரும்பாலான கருவிகள் உள்ளிட்டவை கிடைத்ததாக மக்கள் கூறுகிறார்கள். மேலும், அந்தக் காலத்தில் மனிதர்கள் வாழ்ந்து அழிந்துபோன இடமாகவே மக்கள் நம்புகிறார்கள். வெகுசில ஊர்களில், கதையாடல் அம்சம் கலந்து சாபத்தாலோ போராலோ அழிந்த பழைய ஊராகவும் கூறுகின்றனர். இவ்விடத்தில்தான், இந்த ‘மேடு’ என்ற சொல் மக்கள் வழக்காற்றிலும் அழிவு என்பதோடு இணைவதைப் பார்க்கிறோம்.நத்தம் என்ற சொல், பாலிக்கும் தமிழுக்கும் பொதுவான சொல். ‘அழிந்த’ அல்லது ‘அழிக்கப்பட்ட’ என்பது பாலி மொழியில் இதற்கான அர்த்தம். இதன்படி, நத்தமேடு என்பது அழிந்துபோனதாலோ, அழிக்கப்பட்டதாலோ உருவான மண்மேடு என்றாகிறது. 2015-ம் ஆண்டு, தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு அருகிலுள்ள ரோசல்பட்டியில் ஒன்பதாம் நூற்றாண்டு புத்தர் சிலை ஒன்று கண்டறியப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட இடத்தின் பெயர் நத்த(த்தி)மேடு.
இவ்விடத்தில் மக்களின் வழக்காறு, தொல்லியல் துறையின் அகழாய்வு நடந்த ஊர்ப்பெயர்களின் அர்த்தத்தோடு சேர்வதைப் பார்க்கலாம். நந்தனார் என்று எழுத்துப் பிரதியின் சொல்லாடலுக்கு மாறாக, மண்மேடிட்டு அழிந்துபோன ‘நந்தன்’ என்ற வழக்காற்றுக் கதையாடலின் அர்த்தத்தோடு இப்பண்பாட்டுக் குறியீடு ஒருவிதத்தில் இணைவுசெய்கிறது.
- ஸ்டாலின் ராஜாங்கம்