தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் பெயர் மழை!

அவள் பெயர் மழை!
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பெயர் மழை!

பெண் எழுத்துஹேமி க்ருஷ்

ன்று பேய் மழை... பேருந்தின் கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தபோது, தென்னை மரங்கள் எல்லாம் பேயாட் டம் ஆடிக்கொண்டிருந்தன. ஏதோ ஒரு பேர் தெரியாத ஊருக்கு நடுவில் கரும்பாம்பு போல இருந்த நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்த பேருந்து, மேற்கொண்டு செல்லமுடியாமல் யானைபோல அசைந்து கொண்டிருந்தது. தூரத்தில் மின்மினிப் பூச்சிகளாக ஊரின் வெளிச்சங்கள் தெரிந்தன.

`ம்ம்ம்ம்ம்ம்’ என்று என் அருகில் அமர்ந்திருந்த பெண் ஹம்மிங் செய்து கொண்டேயிருந்தாள். முழங்கால் வரை இருந்த முடியை பின்னலிட்டு முன்னே போட்டிருந்தாள். கன்னத்துக்கு கையை முட்டுக்கொடுத்து, ஜன்னலைப் பார்த்தபடி ஹம் செய்துகொண்டிருந்தாள். நான் போர்த்தியதும் அவளும் போர்த்திக் கொண்டாள். மெதுவாக என் தோள்பட்டையைத் தொட்டுக் கூப்பிட்டாள்.

``உங்களுக்கு மழை பிடிக்குமா?’’ - சிறிய கண்களை விரித்தபடி கேட்டாள்.

``ஹ்ம்ம்... பிடிக்கும்’’ என்று சொல்லிச் சிரித்தேன்.

அவள் பெயர் மழை!

``ஆக்சுவலி எனக்கு மழைன்னா உயிர். மழையில எப்பவும் விளையாடுவேன்; பேசுவேன். எனக்கும் அதுக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கிற மாதிரி தோணும். ஒண்ணு தெரியுமா... நான் `மழையே வா’ன்னு கூப்பிட்டா அது வந்துடும். என் ஃப்ரெண்ட்ஸ்லாம் ஆச்சர்யப்படுவாங்க’’ அவள் பேசப் பேச, கன்னத்தில் குழி விழுந்தது. சிறிய முகம்.

மழையை வரச் சொன்னால் வந்துவிடுமாம். எனக்கு சிரிப்பாக இருந்தது.

மீண்டும் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். திரும்பவும் கூப்பிட்டாள்.

``என்கிட்ட பேசுங்களேன்... எனக்கு போரடிக்குது.”

``ஓகே. சொந்த ஊர் எது, சென்னையா... பெங்களூரா?’’

``தஞ்சாவூர் பக்கம்'’ என்று விரும்பாமல் மழையைப் பார்த்துக்கொண்டு பதில் சொன்னாள். ``மழையைப் பத்தி உங்களுக்கு ஒண்ணு சொல்லட்டுமா?’’

இவள் என்னடா... விடாமல் மழையைப் பிடித்துத் தொங்குகிறாள். எனக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? இருட்டில் ஏகாந்தமாகத் தெரியும் வானத்தை ரசித்தபடி, ஊரைப் பார்த்தபடி வர வேண்டும். இப்படியான மழையில் ஆசுவாசமான பயணம் இப்போது எனக்கு அவசியம்கூட.

இன்று பயங்கர அலுப்பாகயிருக்கிறது. நாளை இறங்கியவுடனே பம்பரமாகச் சுற்ற வேண்டும். ஒவ்வொரு முறை பெங்களூரு வந்து செல்லும்போதும் இப்படித்தான், இருமடங்கு அலுப்புடன் அன்றைய வாரம் இழுத்துக்கொண்டுபோகும். வீட்டுக்கு வந்ததும் வராததுமாகப் பிள்ளைகளுக்குச் சமையல் செய்து அனுப்பி, வீட்டைச் சுத்தம் செய்ய வரும் சரசம்மாவுக்குத் தோதாகப் பாத்திரங்களை ஒழித்துப்போட்டு, `சரசக்கா, இங்க துடைங்க. அங்க அழுக்கு இருக்கு பாருங்க’ என்று கூடவே இருந்து வேலைவாங்கி, கணவருக்கு எல்லாம் தயார்செய்து, எனக்கும் தயார்செய்துகொண்டு, அவருடனே நானும் கிளம்பி அலுவலகம் வந்து சேர்ந்ததும் மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் மீட்டிங், அடுத்தடுத்து வேலை என மூளைக்குள்ளிருந்து சக்தியை மீட்டெடுக்க வேண்டும் என நினைத்தாலே, இப்போதே அலுப்பு வந்தது.

``உங்களுக்கு மழையைப் பார்த்தா ஏதாவது ஞாபகம் வருமா?’’ - மீண்டும் அவள் கேட்டாள்.

``உன் பெயர்என்ன?’’-அவளிடம் கேட்டேன்.

``அன்விதா...”

``அன்விதா, எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. ஸாரி, தப்பா நினைக்காதே. நான் தூங்கணும்’’ என்று சொல்லி என் இருக்கையை வாகாகப் பின்னிழுத்துச் சாய்ந்துகொண்டு, கண்களை மூடிக்கொண்டேன். `அவளிடம் முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டோமோ... பாவம், அவளுக்கு என்ன தெரியும்...’ என போர்வையை விலக்கிப் பார்த்தேன்.

அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந் தாள். நான் பார்த்ததும் சிரித்தாள்.

``எனக்குத் தெரியும்... நீங்க தூங்க மாட்டீங்கன்னு. ஏன்னா நான்தான் சொல்லி முடிக்கலையே’’ என்றாள்.

எனக்குச் சிரிப்பாக வந்தது. `என்ன பொண்ணு இவள், குழந்தைத்தனமாகப் பேசுகிறாள்’ எனச் சிரித்தபடியே ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு ``சரி சொல்லு’’ என்றேன். அவளும் என்னைப் பார்த்தபடி ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். நீல நிற வெளிச்சத்தில் பளீர் வெண்மையாகத் தெரிந்தாள்.

``மழை வந்தால் நான் வேற மாதிரி மாறிடுவேன் தெரியுமா? என் ஃப்ரெண்ட்ஸ்கூட சொல்வாங்க’’ - மெதுவாக என்னிடம் சொன்னாள்.

`அடக்கடவுளே! ஏன் மழையைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறாள்? சரி, தூக்கம் வரும் வரை கேட்கலாம்’ என நினைத்துக்கொண்டேன்.

``என் வாழ்க்கையையே புரட்டிப்போடுற எல்லா விஷயங்களும் எனக்கு மழையிலதான் நடந்துச்சு’’ - அவள் குரல் சோகமாகப் புலம்பியது.

``அப்படியா...”

``மழையில் நடந்துபோயிருக்கீங்களா?’’

``என்ன கேள்வி இது?’’

``சொல்லுங்க, நடந்துபோயிருக்கீங்களா?’’

வெறுப்பாக `இல்லை’ எனத் தலையாட்டினேன்.

``நான் அப்படியே சொட்டச்சொட்ட நனைஞ்சுட்டே ஏழு கிலோமீட்டர் நடந்துபோயிருக்கேன், என் பாய் ஃப்ரெண்ட்னால.”

அவள் பெயர் மழை!

அவளைச் சட்டென உற்றுப்பார்த்தேன். 15 வருடங்களுக்கு முன் என்னைப் பார்த்த மாதிரி இருந்தது. இவள் ஏன் என்னைக் கிளறிக்கொண்டிருக்கிறாள்? மகேஷின் உறவை இனி எப்போதும் வேண்டாம் எனத் தூக்கியெறிந்துவிட்டு வந்து, இதேபோல ஒரு பேருந்தில் அழுதுகொண்டே ஊர் திரும்பியது ஞாபகம் வந்தது. நெஞ்சை அறுத்துக்கொண்டு வந்த மாதிரியான தருணம் அது. `தூக்கியெறிந்தேன்’ என்று எந்த ஆழமான உறவையும் சாதாரணமாகச் சொல்லிவிட முடிவதில்லை.

கிளறிய ரணம் எவ்வளவு வலிமிக்கது என்று உணர்ந்த நாள்கள். சுயசமாதானத்துக்குக்கூட வார்த்தையின்றி அழுது அழுது கடந்த நாள்கள் அவை. அத்தனை பெருங்காதலை அவன்மீது வைத்திருந்தேன். அவன் இல்லாமல் நான் இருப்பேனா என அவனைக் காதலிக்கும்போது அடிக்கடி நினைத்திருக்கிறேன். இதோ 15 வருடங்களைக் கடந்துவிட்டேன். நன்றாகத்தான் இருக்கிறேன். அப்படியே ஆறப்போட்டு, முடிவில் காயத்தின் தழும்புடன் அடுத்தகட்டத்தை நோக்கிச் சென்றுவிட்டிருந்தேன்.

அவள் என் நினைவுகளில் இடைமறித்தாள்.

``நான் ஒரு எம்.என்.சி-யில சிஸ்டம் அனலிஸ்டா இருந்தேன். ரொம்ப ஜாலியா போயிட்டிருந்துச்சு. அவனால்தான் வேலையை விட்டுட்டேன். நான் படிச்சது கம்ப்யூட்டர் சயின்ஸ். மொத்தம் ஆறு கோல்டு மெடல் வாங்கியிருக்கேன். அன்னிக்கு மெடல் வாங்கிட்டு வெளியே வர்றேன். `சோ...'ன்னு மழை. யாரையும் கவனிக்காம ரோட்டுல வானத்தைப் பார்த்துட்டே நின்னேன்.’’

காதலோ, மழையோ எதையாவது ஒன்றை அவள் உருப்படியாகச் சொல்லலாம். இப்படி நடுநடுவே மாறி மாறிச் சொல்வது எனக்கு எரிச்சலாக இருந்தது.

``மழையோடு அப்படி ஒரு ஸ்நேகம். ரொம்ப அழறப்போ, இல்ல மனசெல்லாம் சந்தோஷம் நிறைஞ்சிருக்கிறப்போ மழை வரும். இன்னிக்குகூட காலையில மனசு உடைஞ்சுபோய் அழுதேன்... இப்ப பாருங்க’’ என்று ஜன்னலை நோக்கி முகத்தைக் காண்பித்தாள்.

எனக்கு ஏதோ ஒன்று என் மார்புக்கூட்டை அழுத்திப் பிடித்த மாதிரி இருந்தது.

அவளே தொடர்ந்தாள்.

``ப்ரீத்தமுக்கும் எனக்கும் மூன்று வருடக் காதல். நான்தான் அவன்கிட்ட புரபோஸ் பண்ணினேன். ஹலோ... தூங்குறீங்களா?'' என, தலையை நிமிர்த்திக் கேட்டாள்.

``இல்லை... கேட்டுட்டுதான் இருக்கேன்.’’

``அவனை எனக்கு அவ்ளோ பிடிக்கும். ஒருநாள் அவன்கிட்ட பேசலைன்னாகூட மனசு பறிகொடுத்த மாதிரி இருக்கும். அவனுக்கு சென்னையில இருந்து பெங்களூரு புராஜெக்ட் கிடைச்சதும் இங்க வந்துட்டான். என்னால அவன் இல்லாம ஒரு மாசம்கூட இருக்க முடியலை. என் வேலையை விட்டுட்டேன். வீட்ல, எனக்கு பெங்களூர்ல புராஜெக்ட் கிடைச்சதா பொய் சொல்லிட்டு இங்க வந்தேன். நான் வேலை தேடுறப்போ எல்லாம் அவன் என்கூடவே இருந்ததால, எனக்கு வேற எதுவும் பெருசா தெரியலை. இந்த உலகமே எங்கள் விரல்களுக்கிடையில் இருந்த மாதிரி இருந்துச்சு.

சரி... நீங்க சொல்லுங்க. உங்க மேல ரொம்ப அன்பு காமிச்சவங்க திடீர்னு கண்டுக்காம இருந்தா, உங்க மனசு எப்படி வலிக்கும்?’’

``ம்ம்...'' - சுரத்தில்லாமல் சொன்னேன்.

``எப்போ எது மாறுச்சுன்னே தெரியலை. எங்களுக்குள் இருந்த இடைவெளியை மெள்ள ஃபீல் பண்ணினேன். எங்க என்னை விட்டுட்டுப் போயிடுவானோன்னு இன்செக்யூரா உணர்ந்தேன். இவன் என்னை அவாய்ட் பண்றானோன்னு மனசுக்குள்ள ஒரே போராட்டமா இருக்கும். இன்னொருபுறம் அவனது வேலைப்பளுவை நினைச்சு என்னை சமாதானம் செஞ்சுக்கிட்டேன்'' என்று நிறுத்திக்கொண்டாள். திடீரெனப் படுத்திருந்தவள் எழுந்து, தனது கைப்பையில் எதையோ எடுத்தாள்.

``இந்தாங்க சாப்பிடுங்க’’ என்று கையைக் காண்பித்தாள். லேசான வெளிச்சத்தில் உற்றுப்பார்த்தேன். பட்டாணி வைத்திருந்தாள்.

அவள் பெயர் மழை!

``இல்ல வேணாம். அப்புறம் என்னாச்சுன்னு சொல்லு.''

அவள் பட்டாணியை மென்று கொண்டே தொடர்ந்தாள். ``ஒருநாள் அமெரிக்காவுல நல்ல கம்பெனியில வேலை கிடைச்சதா சொன்னான். அதுவும் அவன் கிளம்புறதுக்குச் சரியா அஞ்சு நாள்கள் முன்னாடி. நான் யாரோ மாதிரி கடைசி நேரத்துல சொன்னான். அவனுக்காகத்தானே இங்கேயே வந்தேன்... அப்படி வந்த என்னை விட்டுட்டு அவன்பாட்டுக்குப் `போறேன்’னு சொன்னா, தப்பா... இல்லையா? அவன் போறதை, எப்படி என்னால டேக் இட் ஈஸியா எடுத்துக்க முடியும்? `இவனுக்காகவா வீட்டில் எல்லோரையும் விட்டுட்டு வந்திருக்கிறோம்?’னு புலம்பினேன். அவனைப் பார்த்துப் பேசினா சரியாபோயிடும்னு நினைச்சேன். அடுத்த நாள், `விதான் சௌதான் பக்கத்துல பார்க்கலாம்’னு சொன்னான்.''

``ம்ம்...''

``அடுத்த நாள் நல்ல மழை வேற. அன்னிக்கு மழைகிட்ட பேசற மூடே இல்லை. ஏன்னா, மழையைவிட அவனை ரொம்ப முக்கியமா நினைச்சேன். அந்தக் கோபமோ என்னவோ, மழை விடவே இல்லை. நடுங்கிட்டே சாரல்ல முழுக்க நனைஞ்சு அவனுக்காகக் காத்துட்டு இருந்தேன். அவன் வரலை. கால் பண்ணினா அவன் எடுக்கலை. அப்புறம் `மழையினால வர முடியலை’னு சின்னதா மெசேஜ் அனுப்பினான். அழுதுட்டே ரூமுக்குப் போனேன். ஏழு கிலோமீட்டர் தூரம். கொட்ற மழையில எப்படி அவ்ளோ தூரத்தைக் கடந்தேன்னே தெரியலை. என் முகத்தை எனக்கே பார்க்கப் பிடிக்கலை. அன்னிக்குக் கொஞ்சமும் தூங்காம, விடிய விடிய அழுதுட்டே இருந்தேன். மழையும் நிக்கல தெரியுமா?’’

இந்த மழை விஷயத்தை மட்டும் நம்புவதா... வேண்டாமா என மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது எனக்கு. அவள் தொடர்ந்தாள்.

``அப்புறம், அவன்மேல இருந்த கோபத்தால நான் அவனுக்கு மெசேஜ் பண்ணலை. அவன் கடைசியா அமெரிக்கா போறப்போகூட எனக்கு கால் பண்ணலை தெரியுமா?’’

``அப்புறம், நீ என்ன பண்ணின?’’

``நான் என்ன ஆம்பளையா... ஆசிட் ஊத்துறதுக்கும் அரிவாளால வெட்றதுக்கும்? அழுதுட்டே இருந்தேன். அவனுக்காக வந்த ஊர் இது. அவன் இல்லாம தனியா பல நாள்கள் லூஸு மாதிரி சுத்திக்கிட்டு இருந்தேன். அப்புறம் அந்த வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்தேன்...’’

அவள் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டேயிருந்தது. எறும்புப்புற்றைக் கலைத்தாற்போல மனம் குபுகுபுவென ஏதேதோ நினைத்தது. ஜன்னலைப் பார்த்தேன். இந்த மழை, எனக்குப் புதிதாக இருந்தது. மணிக்கணக்காகப் பொழிந்துகொண்டிருந்தது. காலையில்கூட மழை வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இவளுடைய மெல்லிய பேச்சும் அழுகையும் எனது தூக்கத்தை வெகுதூரம் போகச்செய்தன. இவளை நான் ஏன் சந்திக்க வேண்டும்? எதற்காக இவள் என்னிடம் இதெல்லாம் பேச வேண்டும்?

`` ஸாரி... உங்ககிட்ட இதெல்லாம் சொல்லி உங்களை வேதனைப்படுத்துறேனா?’’ என்று கேட்டாள்.

``அதெல்லாம் இல்லை. சொல்லு...''

``அவனை விட்டு வந்து என் மனசை கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டு இருக்கிறப்போதான் அடுத்த இடி. என் அம்மா இறந்துட்டாங்க. தூங்குறப்பவே ஹார்ட் அட்டாக். எனக்கு என் அம்மாதான் எல்லாமே. தினமும் அவங்க ஊட்டிவிட்டாதான் சாப்பிடுவேன். அவங்க இறந்துட்டாங்கன்னு ரொம்ப நேரம் நான் நம்பலை. அவங்க பக்கத்துல போய்ப் படுத்துக்கிட்டேன். அப்பவும் அப்படியொரு மழை. விடாத மழை. இப்ப வருதே இப்படித்தான். வீட்டுக்கு வெளியில மழைலேயே உட்காந்துட்டு இருந்தேன். `அப்படியே மழையோடு மழையா நானும் கரைஞ்சுபோயிடக் கூடாதா’ன்னு தோணுச்சு.

``ஹ்ஹ்ம்ம்...'' - எனக்கும் சோகம் வழிந்தது.

அவள் சத்தமே இல்லாமல் அழுது குலுங்கினாள். தூரத்தில் இடி இடித்தது. பேரன்பைப் பொழிகிறவர்கள் எல்லாம் பைத்தியங்களாகத்தான் இருக்கிறார்கள் போலும். சில நிமிடங்களில் அப்படியே அவள் உறங்கிப்போனாள். எனக்கும் தூக்கம் அழுத்த, தூங்கிவிட்டேன்.

ஏதேதோ கனவுகள்... வீடு, அலுவலகம், நகரும் பேருந்து, பறக்கும் பறவை, சடசடவென மழை பெய்துகொண்டிருந்த வானம்... திடுக்கிட்டு விழித்தேன். அவள் இருந்த இருக்கை காலியாக இருந்தது. கண்களை நன்றாகத் திறந்து பார்த்தேன். அவளைக் காணோம். அர்த்தராத்திரியில் ஓடும் பஸ்ஸிலிருந்து எங்கே போயிருப்பாள்? எழுந்து சுற்றிலும் பார்த்தேன். எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

நான் முன்னே சென்று ஓட்டுநர் பகுதியின் கதவைத் திறந்தேன். மெல்லிய பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

`` என்னா மேடம்... பாத்ரூம் போகணுமா?’’ என்று ஓட்டுநரின் உதவியாளர் கேட்டார்.

``இல்லை... என் பக்கத்துல உட்கார்ந்து இருந்த பொண்ணைக் காணோம்.''

அவர் புரியாமல் முழித்தார். ``எந்த சீட்?’’ என்றபடி எழுந்து என்னுடன் வந்து பார்த்தார். நான் என் இருக்கையில் அமர்ந்துகொண்டேன். அவர் பின்னாடி வரை பார்த்துவிட்டு, ``கடைசியில் அவங்க ஃபேமிலிகூட படுத்திருக்காங்க'' என்று சொல்லிவிட்டுப் போனார்.

`ஃபேமிலியா! அப்போ ஏன் அவர்களை விட்டு என் அருகில் அமர்ந்தாள்?' என யோசித்துவிட்டு, சில நிமிடங்கள் கழித்து தூங்கிப்போனேன். கனவில், மழை பெய்துகொண்டேயிருந்தது.

ஏதேதோ பேச்சுக்குரலில் எழுந்தபோது நன்றாக விடிந்திருந்தது. கோயம்பேடு... நான் பின்னிருக்கைகளில் அவளைத் தேடினேன். இறங்கிவிட்டாள்போலும். என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே. கீழே பார்க்கலாம் என, தலையையும் உடையையும் சரிசெய்துகொண்டு இறங்கினேன்.

குளிர்ந்து இருந்தன நிலமும் காற்றும். சற்று தூரத்தில் அவள் நின்றுகொண்டிருந்தாள். அவள் அருகில் பெரியவர் ஒருவர் இருந்தார். என்னிடம் பேசிய சுவடே தெரியவில்லை அவள் முகத்தில்.

``ஹாய் அன்விதா...''

``ஹாய்'' என்று சொல்லிவிட்டு லக்கேஜுகளை எண்ணிக்கொண்டிருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. `நேற்று அவ்ளோ பேசினாளே!’ எனக் குழம்பியபோது, இரட்டை சரீரம்கொண்ட ஓர் அம்மா என் அருகில் வந்தார்.

``என்ன வேணுங்க?’’ - என்னையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தார்.

``இல்லை... நைட் என் பக்கத்துலதான் உட்காந்திருந்தா. அப்புறம் காணோம். பை சொல்லலாம்னுதான்''  - மேற்கொண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல் இழுத்தேன்.

``உங்ககிட்ட இவ ஏதாவது தப்பா பேசிருந்தா மன்னிச்சுடுங்க.’’

``இல்லை. அவ ரொம்ப நல்லாதானே பேசிட்டு வந்தா. அதான் பேச வந்தேன்.”

``இல்லங்க. அவளுக்குக் கொஞ்சம் புத்தி சரியில்லை. ட்ரீட்மென்ட் கொடுத்துட்டிருக்கோம்.”

``எனக்கு அப்படி ஒண்ணும் தெரியலையே. தெளிவாத்தானே பேசிட்டு வந்தா?” என்று கேட்டபடி அவளைப் பார்த்தேன். நேற்றிரவு என்னிடம் பேசிய எந்த அறிகுறியும் அவளிடம் இல்லை.

``நல்லதாம்மா பேசுவா. திடீர்னு மாறுவா. அவகூட இருந்து பார்த்தா தெரியும். ரொம்ப அறிவாளிம்மா. எங்க குடும்பத்துலேயே இவதான் டாப். ஸ்கூல், காலேஜ்ல எல்லாம் இவதான் ஃபர்ஸ்ட் மார்க். என்ன நேரமோ... திடீர்னு புத்தி பேதலிச்சிடுச்சு. டாக்டர், மூளையில ஏதோ நரம்புக் கோளாறுன்னு சொன்னாங்க. ட்ரீட்மென்ட் எடுத்தும் குணமாகலை. இருந்தாலும் ஆபீஸுக்கு எல்லாம் போயிட்டுதான் இருந்தாள். அப்புறம் இவ நடந்துக்கிற விதத்தைப் பார்த்துட்டு அவங்களே வேலையிலிருந்து அனுப்பிட்டாங்க. என்னமோ விதி! யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செஞ்சுட்டுதான் வர்றோம். இப்பகூட தொட்டபேலாபூர்னு ஓர் ஊர்ல பரிகாரம் பண்ணிட்டுதான் திரும்பி வர்றோம்’’ என்று சோகமாகச் சொன்னார் அந்த அம்மா.

நான் அவள் முகத்தைப் பார்த்தேன். இரவில் பார்த்த அதே குழந்தைமுகம். ஜீவனில்லாமல் என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தாள். `ஒருவேளை, காதல் தோல்வியும் அம்மாவின் இறப்பும் சேர்ந்து இப்படியாக்கிவிட்டதோ’ என நினைத்தேன்.

``நீங்க இவளுக்கு யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?’’ - அவரிடம் கேட்டேன்.

``அம்மா. என் பொண்ணுதாங்க இவ.”

``ஓஹ்’’ என்று என் வாய் தனிச்சையாகச் சொன்னது.

அப்படியென்றால், ப்ரீத்தம் என்பவன் யார்? உண்மையானவனா... கற்பனையானவனா? இப்போது இதைப் பற்றி இவரிடம் கேட்பது அநாவசியம்.

அன்விதாவின் தோளைத் தொட்டு, ``பத்திரமா இரு. உடம்பைப் பார்த்துக்கோ’’ என்று கூறிவிட்டு ஆட்டோவைத் தேடிப் போனேன்.

ஆட்டோவில் ஏறுவதற்கு முன் அவளை இன்னொரு முறை பார்க்கத் தோன்றியது. திரும்பிப் பார்த்தேன். அங்கு இருந்தவர்களிடம் தொற்றிக்கொண்டிருந்த காலையின் பரபரப்பு எதுவும் அவள் முகத்தில் இல்லை. பளிங்குபோல் தூய்மையாக இருந்தது அவள் முகம்.

மேலே வானத்தைப் பார்த்தபடி மெலிதாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். மழை திடீரெனத் தூறலிட ஆரம்பித்தது. இனி எப்போது மழை என்றாலும் அவள் முகம் கண்முன் வருவதைத் தவிர்க்க இயலாது. மேலும், அவள் அழுதுகொண்டிருக்கக்கூடும் அல்லது சிரித்துக்கொண்டிருக்கக்கூடும் என்கிற சிறு யோசனையோடு, அந்தத் தருணங்களை இனி கடக்கப் பழக வேண்டும்.

-  ஹேமி க்ருஷ் 

ஓவியம் : கோ.ராமமூர்த்தி