கட்டுரைகள்
Published:Updated:

என் செல்ல டிராகனே

என் செல்ல டிராகனே
பிரீமியம் ஸ்டோரி
News
என் செல்ல டிராகனே

ஓவியம்: அரஸ்

ந்தப் பையன் பேரு மிதுன். அவன் அப்பா காட்டிலாக்கா அதிகாரி. அதனால், காட்டுக்குப் பக்கத்துல வீடு. அவனோட செல்ல நாய்க்குட்டியின் பெயர் டிராகன்.

என் செல்ல டிராகனே

ஒரு லீவு நாளுல வழக்கம்போல டிராகனோடு விளையாடிட்டு இருந்தப்போ, அது காட்டுக்குள்ளே ‘குடுகுடு’ன்னு ஓடிச்சு. அதைத் துரத்திட்டே ஓடினான் மிதுன். ஒரு வழியா பிடிச்சுட்டான். நிமிர்ந்து பார்த்தால், காட்டுக்கு நடுவுல இருக்கிறதா தோணுச்சு.  திடீர்னு பெரிய உறுமல் சத்தம் கேட்டுச்சு.

அது சிங்கமோ, புலியோ உறுமற மாதிரி இல்லே. லட்சம் புலிகளும் சிங்கங்களும் சேர்ந்து உறுமுற மாதிரி இருந்துச்சு. மிதுன் பயத்தோடு ஒரு மரத்து மேலே டிராகனோடு ஏறிட்டான். அப்போதான் அதைப் பார்த்தான்.

பெரிய்ய்ய்ய வாலு, ரெண்டு பக்கமும் றெக்கையுடன் ஒரு டிராகன்! ஆமா ஃப்ரெண்ட்ஸ்... மிதுன் கையில், பெயர் மட்டுமே டிராகனாக இருக்கும் ‘நாய்க்குட்டி டிராகன்’ இல்லே. நிஜமான டிராகன். மிதுன் பயத்தில், ‘அம்மா ஆஆஆ’ன்னு அலற ஆரம்பிச்சான்.

சட்டுன்னு திரும்பிப் பார்த்த அந்த டிராகன், ‘‘ஏய் தம்பி... ஏன்ப்பா கத்தறே? பயந்தே போயிட்டேன்’’னு சொல்லிச்சு.

என் செல்ல டிராகனே

மிதுனுக்கு ஆச்சர்யம். ‘‘என்னது நீ பயந்துட்டியா? உன்னைப் பார்த்துதானே எல்லோரும் பயப்படுவாங்க?’’ன்னு கேட்டான்.

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லே. நானும் பயப்படுவேன். முக்கியமா, மனுசங்களைப் பார்த்தால் ரொம்பவே பயப்படுவேன். அவங்கதான் என்னை ஒரு வில்லனாகவே இமேஜ் பண்ணிவெச்சுட்டாங்க. ஆனா, உன்னைப் பார்த்தால் நல்லவன் மாதிரி தெரியுது. இங்கே எப்படி வந்தே?’’ எனக் கேட்டுச்சு டிராகன்.

விஷயத்தைச் சொன்னான் மிதுன். ‘‘ஓஹோ... சரி, உனக்கு நான் ஹெல்ப் பண்றேன். உன்னை வீட்டுல சேர்க்கறேன். அதுக்கு நீ ஒரு சத்தியம் செய்யணும். என்னை இங்கே பார்த்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லக் கூடாது. டீல் ஓகேவா?’’ன்னு கேட்டுச்சு.

மிதுனும் சம்மதிக்க, அவனை வாலினால் தூக்கி முதுகில் வெச்சுட்டு ஒரே தாவுதான்... வீட்டுக்குக் கொஞ்சம் முன்னாடி வந்து நின்னுச்சு. மிதுன் இறங்கி நன்றி சொன்னான். ‘‘சொன்னதை மறந்துடாதே’’ன்னு கிளம்பிருச்சு டிராகன்.

அது சரி, இவ்வளவு நேரம் மிதுனின் ‘செல்ல டிராகன்’ என்ன பண்ணிட்டு இருந்துச்சு?

நிஜமான டிராகனைப் பார்த்த அதிர்ச்சியில் முழி பிதுங்கி இருந்துச்சு. அதனோட முழியைப் பார்த்து வீட்டுல கண்டுபிடிக்காமல் இருந்தால் சரிதான்!