சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஓவியம்: செந்தில்

வன்மம் கொள்ளுதல்

என்னை நானே வன்மம் கொள்ள
நான் என்ன செய்திருக்க முடியும்
வெறுமனே சிறு நேசத்தோடு இருப்பதைத் தவிர

பெருந்தீயாய் எரிந்துகொண்டிருக்கும்
இவ்வாழ்வின் உமிழ்நீர் சதை பற்றிக்கொண்டிருக்கிறது

மூர்க்க கனவுகளை ஒருமுறைகூட
என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை
ஆனால் வெட்டப்பட்ட என் தலையைப் போல
அவசரமாகத் துடிதுடித்து எல்லாம் சரிந்துகொண்டிருக்கிறது

இன்னும் நீண்ட தூரம் போகவேண்டியிருக்கிறது
போகும் தூரங்களில்
ஒரு மலைமுகட்டிலோ
ஒரு தேசிய நெடுஞ்சாலையிலோ
ஒரு ரயில் தண்டவாளத்திலோ
யாருக்கும் கேட்காத என் குரலில்
என் மன்றாடுதலின் நியாயங்கள்
என் வீழ்ச்சியின் புரிதலாக
என் உடைதலின் வருத்தங்களாக
என் துகள்களின் சதைகளாக
என் காத்திரங்களைச் சொல்லிக்கொண்டிருக்கும்
என் விருப்பத்தையும் மீறி

- கோபி சேகுவேரா

சொல்வனம்

ஒப்பந்தம்

வானம் மட்டும்
வரைந்துவிட்டு
தூங்கிப்போனது
குழந்தை
இரவில் தான்
இருப்பதாகவும்
பகலில் தான்
வருவதாகவும்
ஒப்பந்தம் செய்து
கொள்கின்றன சந்திரனும்
சூரியனும்.

- கு.வைரச்சந்திரன்

விசை

நள்ளிரவு மதுபான அரங்க மேடையில்
பழைய பியானோவிற்கு முன் அமர்ந்திருப்பவளுக்கு
சரீரம் முழுவதும் இசைக்குறிப்புகள்

வாசித்துக்கொண்டிருக்கும் விழிகளிலிருந்தெல்லாம்
கசிந்துகொண்டிருக்கும் காமத்தின் இசை
செவிகளுக்குப் புலப்படாத
அத்தனை அர்த்தஜாம முனகல்களையும்
பதிவுசெய்கிறாள் நடனமாடும் தன் கை விரல்களில்

துடித்துக்கொண்டிருக்கும் இதயங்களின்
ரத்த அழுத்தம் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும்
இரவு பகலாக கறுப்பு வெள்ளைப் பித்தான்கள்.

- வலங்கைமான் நூர்தீன்