மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 14

இறையுதிர் காடு - 14
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 14

இறையுதிர் காடு - 14

இறையுதிர் காடு - 14

அன்று கார்மேகக்கிழார் எழுத்தாணியோடு எழுதத் தயாராகவும், போகரும் காயகற்பம் பற்றிக் கூறத்

இறையுதிர் காடு - 14

தொடங்கினார்.

``கிழாரே, முதலில் நான் சொல்வதை நன்கு மனதில் வாங்கிக்கொள்ளும். பிறகு பாட்டாக அதைப் பதிவுசெய்யும். உரைநடைப் பதிவு இம்மட்டில் கூடாது’’ என்றார்.

``அதன் காரணம் நான் அறியலாமோ?’’ என்று கேட்டார் கிழார்.

``தாராளமாய்... பாடலாக எழுதும்போது இலக்கண உபகாரம் தேவைப்படும். சந்தங்கள் இதனால் உருவாகும். மொழியின் இனித்த தன்மை, கவிதையில் வெளிப்படும் அளவு உரைநடையில் வெளிப்படாது. எனவே, பாடல் எனும்போது இலக்கணக்கட்டு, சந்தம், இனிமை இவையெல்லாம் வந்துவிடுகின்றன. மிக முக்கியமாக, கூற வந்த கருத்தை இன்னொருவர் உள்புகுந்து திரித்து மாற்ற முடியாது’’ - போகரின் எச்சரிக்கை உணர்வு, கிழாரை அவர் தாடியை நீவிக்கொண்டு எழுத்தாணியை விரல் நுனியில் வட்டமாய்ச் சுழற்றிப்பார்க்கச் செய்தது.

``என்ன பார்க்கிறீர்... இப்போது உரைநடையில் ஒரு கருத்தைக் கூறிவிட்டு பிறகு பாடலாகவும் கூறுகிறேன். பிறகு அந்தக் கருத்துக்குள் புகுந்து நானே வேறு ஒரு கருத்தைப் புகுத்தி மாற்றியும் காட்டுகிறேன். உரைநடைக்குள் இது எளிதாகிவிடும். ஆனால் பாடல், நான் அவ்வாறு செயல்பட சுலபத்தில் அனுமதிக்காது. என் மருத்துவக் கருத்துகள் உரைநடையில் இருப்பதை நான் விரும்பவில்லை. அது பாடல் வடிவம்கொள்வதே சிறந்தது. உரைநடைக்குள் என் மாற்றங்களைப் பார்க்கிறீர்களா?’’

இறையுதிர் காடு - 14

``ஆகட்டும் பிரானே!’’ என்றார் கார்மேகக்கிழார்.

``முதலில் உரைநடை வடிவம். நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள். `காயம் என்றால், அது இந்த உடம்பைக் குறிக்கும். கற்பம் என்றால், அது அந்த உடம்பைக் கல்போல் ஆக்கும் மருந்தைக் குறிக்கும். அந்தக் கற்பமே நோய்நொடி வராது உடலைக் காத்து நிற்கும்!’ - இது நான் கூறியிருக்கும் ஒரு கருத்து. இதைப் பாடலாக எழுதும்போது எப்படி வடிவம்கொள்கிறது எனப் பாருங்கள்.

`தேகமே காயம், கல்லதும் கற்பம்
வேதமே என் ஈரடிச் சொல்லும்!
காயகற்பம் உள்ளே செல்ல
தேக காயம் நோய்நொடி வெல்லும்!’
- இது பாடலின் வடிவம். உரைநடை, பாடல் இரண்டிலும் ஒரே கருத்தையே கூறியுள்ளேன். ஆனால், உரைநடைக்குள் ஒருவர் எளிதில் புகுந்து என் கருத்தை மாற்ற இயலும். எப்படி எனப் பாருங்கள்.

`காயம் என்றால், அது கிழட்டு உடம்பைக் குறிக்கும். கற்பம் என்றால், அது கிழட்டு உடம்பை வைரக்கல்போல் ஆக்கும் மருந்தைக் குறிக்கும். அந்தக் கற்பமே நோய்நொடி வராது உடலைக் காத்து நிற்கும்!’ - பார்த்தீர்களா... உடம்பின் முன் `கிழட்டு’ என்கிற பதம் சேர்த்து கிழட்டு உடம்பாக்கி, கல்லின் முன் `வைரம்’ சேர்த்து வைரக்கல்போல் அதாவது மின்னும் உடல் என்னும் பொருள்கொள்ளும்படி கருத்து அப்படியே மாறிவிட்டது. அதாவது, காயகற்பம் வயதானவர்களைப் பளபளவென மாற்றிவிடும் என்கிற பொருளுக்குரியதாகிவிட்டது. பாடலில் இந்தக் கருத்தைக் கொண்டுவர, அதன் சந்தக்கட்டு அனுமதிக்காது. மீறித் திணித்தால் திணித்தது தெரியும். முயன்று காட்டட்டுமா?’’ - போகர் கேட்கவும் கிழார் மறுத்தார்.

``வேண்டாம் பிரானே! தாங்கள் கூறவந்தது விளங்கிவிட்டது. தங்கள் கருத்துகள் எத்தாலும் மாறிவிடக் கூடாது என்றால், பாடல் வடிவில் அவை இருப்பதே சரி. எனவே, பாடலாகவே பதிவுசெய்கிறேன். முதலில் கருத்தைக் கூறிவிடுங்கள்’’ என்றார் கார்மேகக்கிழார்.

போகரும் காயகற்பம் குறித்த கருத்தைக் கூறத் தொடங்கினார்.

``காயகற்பம் என்பது, உண்மையில் மருந்தல்ல; அது ஒரு கவசம். போர்க்களத்தில் கவசம் தரித்தவர்களை அம்புகள் துளைக்காது. வாழ்வெனும் களத்தில் கற்பம் எனும் கவசம் தரித்தவர்களை நோயும் நொடியும் தாக்காது. ஒருவேளை தாக்கினாலும் அது தோற்றுப்போகும். இந்தக் காயகற்பம் எனும் கவசத்தை உடம்பின் தன்மை அறிந்து உருவாக்க வேண்டும். உடம்பின் தன்மை அறிவதில்தான் வைத்தியனின் பட்டறிவும் நூலறிவும் நுண்ணறிவும் கலந்த பேரறிவும் உள்ளது. இந்தப் பேரறிவோடு பேரருளும் கூடும்பட்சத்தில் அந்த வைத்தியனால், பூலோக பிரம்மனாகி மலடிக்கும் பிள்ளை தர முடியும் - மடிந்தவனையும் தொட்டு எழுப்ப முடியும்!

இப்படிப்பட்ட ஒருவன், ஒரு மானிடனின் நாடியை வைத்தே தேகத்தின் தன்மையை முதலில் அறிந்து கொண்டுவிடுவான். வாத, பித்த, சிலேத்தும எனும் பிரிவில் அந்த மானிடன் எதைச் சேர்ந்தவன் என்பது தெரிந்துவிடும். நாடி துடிக்கும் விதத்தைவைத்து இதை உணரலாம். விட்டுவிட்டும், சரசரவென்றும், விடாமலும் இந்த மூன்றிலும் சேராமல் மந்தமாயும் துடிப்பதை ஸ்பரிசத்தால் அறிந்துகொள்வதே நாடிப்பரீட்சை!

இறையுதிர் காடு - 14

அடுத்து கண்களின் தீட்சண்யம், புருவத்தின் முடிக்கொத்து, நாசியின் அமைப்பு, பற்களின் வசீகரம், கட்கத்தின் நாற்றம், நகங்களின் பூ விழாத் தன்மை, நிமிர்ந்து நிற்கும் தன்மை, வாளாதிருக்கும் வேளையில் கைகளின் செயல்பாடு (முன்புறம் கட்டுதல், பின்புறம் கட்டுதல், பிசைந்தபடி இருத்தல்) போன்ற உடல்மொழிகளாலும் ஆரோக்கியம் அறிதல் அவசியம். இதில் புருவ முடிக்கொத்து முன்ஜென்மத் தொடர்பை உணர்த்திடும். ஊர்வது, பறப்பது, திரிவது, நீந்துவது எனும் நால்வகையில் நம் பிறப்பு எதுவாக இருந்தது என்பதைப் புருவமும் உணர்த்தும். இரு புருவ மையமே லலாடம் எனும் பாகம். லலாடம் எண்ணெய்ப் பூச்சு இன்றி பளிச்சென்று இருத்தல் சலனமில்லா மனதைக் குறிக்கும். இங்கே குங்குமம் தரிக்க, கண் நோய் வராததோடு, மூப்பின் தாக்கம் தள்ளிப்போகும். இங்கே விபூதி தரித்திட, நெற்றிக்கசடு நீங்கிடும்; திருஷ்டி தவிர்க்கப்படும். இங்கே சந்தனம் தரித்திட, கோபம் குறைவுபடும், திருமண் தரித்திட, பொலிவு கூடும்.

வைத்தியம் பார்ப்பவன் இவை சகலத்தையும் பார்ப்பதோடு இருளும் ஒளியுமான காலக்கதியில் எந்தத் திதியில், எந்தக் கிழமையில் பார்க்கிறோம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உண்மையில் நாள் என்றோ பொழுதென்றோ ஒன்றில்லை. பூமியின் ஓயாச் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களே எல்லாம். அந்த மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு அடையாளங்களை உருவாக்கினர் ரிஷிகள். அவையே நாள், நட்சத்திரம், திதி, யோகம் கரணங்களாகின.

ஆறாம் அறிவின் மேலான செயல்பாடு இது. காலமும் ஆறும் ஒன்று. ஆற்றில் நாம் விட்ட நீரை திரும்பப் பெறவே முடியாது. ஆனால், காலத்தில் நாம் விட்ட காலத்தைப் பெறும் முனைப்பே காலக்கணிதம். மண்ணில் பிறக்கும் ஒரு மகவு, தாய்வழி சுவாசிப்பு முடிந்து தொப்புள் கொடி துறந்து இந்தப் பூமியில் விடத் தொடங்கும் முதல் மூச்சே, அதன் பிறப்பின் தொடக்கம். அறுபது வயதின் முடிவில் இதே புள்ளி காலத்தால் திரும்ப வரும். அதை உணர்வது ஞானம். இது, பிறப்பின் முதல் சுற்றாகும். மானுட உடம்பு இருமுறை இந்தப் புள்ளியைக் காணும் உயிர்ப்பை உடையது. இதை மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என ஆக்கிக்கொள்ள காயகற்பம் எனும் கவசம் உதவும்!

கவசம் தரிக்கும் முன், சுவாசம் குறித்த தெளிவும் ஞானமும் அவசியம். தென்றல், கோதல், மாருதம் என்று அடக்கமாகவும், சூழல், சுறாவளி, புயல் என்று பெருக்கமாகவும் புறத்தில் உணரப்படும் காற்றுக்கு, `வாயு’ எனும் பெயருமுண்டு. இந்த வாயு, கூரிய நாசிவழி இடகலை பிங்கலையாக அல்லது சந்திரகலை சூரியகலையாக ஓடி உள் சென்று, தசவாயுவாக, பத்து வகை தன்மைகொண்டு செயலாற்றுகிறது. அபானன், பிராணன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்ஜெயன் என்பது அந்தப் பத்து வகை தன்மைக்கான பெயர்கள்.

இறையுதிர் காடு - 14

வாயு ஒன்றே. ஆனால், ஒரே மனிதன் தாய்க்குப் பிள்ளையாக, சகோதரிக்குச் சகோதரனாக, பிள்ளைக்குத் தகப்பனாக, மனைவிக்குக் கணவனாக எப்படி உறவுப்பாட்டுக்கு ஆளாகிறானோ அப்படியே இந்த வாயுவும். மலஜலம் கழிக்கையில் அபான உந்து சக்தியாய் வாயுவும், மலஜலம் தசைகளை இயக்கும்போது வியான உந்து சக்தியாய், வயிற்றின் இயக்கச் சக்தியில் சமான வாயுவாய், கண் சிமிட்டுகையில் நாகனாய், பேசுகையில் பார்க்கையில் கூர்மனாய், தும்மல், இருமலின்போது கிருகரனாய், கோபத்தின்போது தேவதத்தனாய்ச் செயலாற்றுகிறது. இறப்புக்குப் பின்னும் உடம்பை விட்டு வெளியேறாத வாயுவாய் உடம்பு ஊதிப்பெருக்கும் வினைக்குக் காரணமாய்த் திகழ்வதும் தேவதத்த வாயுவே!

கூடு விட்டுக் கூடு பாய்பவர், இதன் வழியாகவே மற்ற வாயுக்களை உருவாக்கிச் செயல்படச் செய்து செத்தவனை சத்தவனாக்குவர்; உயிர்த்து எழுப்புவர். அப்படிப்பட்ட இந்த வாயு எனும் காற்றை, ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை எனும் கணக்கில் சுவாசிக்கிறான். இந்த சுவாசக் கணக்குக்கு உள்ளேதான் ஆயுள் கணக்கு ஒளித்து வைக்கப்பட்டுள்ளது. 21,600-ஐக் கடந்து கூடுதலாய் சுவாசிக்க, அளிக்கப்பட்ட ஆயுள் குறையும், 21,600-ஐக் குறைத்து சுவாசிக்க, அளிக்கப்பட்ட ஆயுள் விரியும். சுவாசம் என்பது `பூரகம், கும்பகம், ரேசகம், பூரணம்’ எனும் தன்மைகளோடு மனிதனின் நுரையீரலை ஆட்சிசெய்கிறது. உள்ளிழுப்பது பூரகம், இழுத்த மூச்சை உள்ளேயே நிறுத்துவது கும்பகம், வெளிவிடுவது ரேசகம். இது சீராக ஒரு நாசி வழி நடப்பதைப் பூரணம் என்போம்.

ஒருவன் 12 அங்குல நீளம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளியிட்டுப் பழகுவானாகில், இவன் ஆயுள் 120 வருடம்! இப்படி ஒருவனுக்குக் காயகற்பம் அளிக்கப்பட்டால், குறைந்தது 300 வருடம் இவன் உயிர் வாழ்வான். இவனுக்கு அஷ்டமா சித்துகள் எளிதில் வசப்படும். உடம்பை உதிர்த்துவிட்டு ஆத்மாவைப் பிரித்து வெளியேறிச் சென்றுவிட்டு, திரும்ப உடம்பில் புகுவது இவனுக்கு ஒரு சாதாரண சாகசம்!’’ - போகர் இவ்வாறு கூறி முடித்திட, கார்மேகக்கிழாரும் புன்னகையோடு ``பிரானே... அப்படித்தான் தாங்கள் இமயத்துக்கும், சீனத்துக்கும், பொதிகைக்கும், சதுரகிரிக்கும் சென்று வருகிறீர்களா?’’ என்று கேட்டார்.

போகர் பிரான் முகத்தில் பதிலுக்கு, பொலிந்த ஒரு புன்னகை!

இன்று   சத்தம் கேட்டு பாரதி ஓடிப்போய்ப் பார்த்தாள். கையில், அரவிந்தனோடு தொடர்பில் இருக்கும் கைப்பேசி. பாரதியின் பார்வை ரத்தம் சொட்ட நிற்கும் பானுமேல் செல்ல, வேலைக்காரன் மருதமுத்துவும் வாளை பாரதி எதிரில் ஒரு பாம்பைப் பிடித்துவிட்டதுபோல் கருதி ஓர் உதறு உதறினான்.

`டணங்’ எனும் உலோக சத்தத்தோடு அது கீழே போய் விழுந்தது. பானு புடைவைத் தலைப்பால், கிழிபட்ட வயிற்றுப் பரப்பை மூடிக்கொண்டு பரிதாபமாய் பாரதியைப் பார்த்தாள்.

பாரதிக்குப் புரிந்துவிட்டது.

``நீ எதுக்கு இப்ப இந்தக் கத்தியை எடுத்தே?’’ என்றபடியே மருதமுத்துவைப் பார்த்தாள்.

``புதுசா இருக்கவும் ஒரு ஆசையில உருவிப் பார்த்தேம்மா. அப்ப பார்த்து இவங்க க்ராஸ் பண்ணாங்க. விசுக்குன்னு வவுத்துல பட்டுக் கிழிச்சிடுச்சிம்மா... ஸாரிம்மா!’’

``மண்ணாங்கட்டி... போ... போய் முதல்ல பர்ஸ்ட் எய்டு பாக்ஸை எடுத்துக்கிட்டு வா...’’ - அலறினாள் பாரதி.

அப்படியே பானுவை நெருங்கி புடைவைத் தலைப்பை விலக்கி, காயத்தைப் பார்த்தாள். நல்லவேளை... பெரிய வெட்டுக்காயம் இல்லை!

``போ பானு, முதல்ல டெட்டால்ல துடைச்சு டிஞ்சர் போடு. அப்புறம் ஒரு டி.டி கட்டாயம் போட்டுக்கணும். போ...’’ என்றவள் குனிந்து தரையில் கிடந்த வாளை எடுத்தாள். அதற்குத் தோதாக, கைப்பேசியை அருகில் சோபாவில் வைத்தாள். முன்போல் வாளை ஒரு கலைப்பொருளாக இப்போது பார்க்க முடியவில்லை. அது ஒரு கொலைப்பொருளாகக் காட்சிதந்தது. விசுக் விசுக்கென அந்தச் சுடலைமாடசாமியே எதிரில் நின்று வீசிக்காட்டுவதுபோல் ஒரு பிரமையும் ஏற்பட்டுக் கலைந்தது.

வாள்நுனியில் பானுவின் ரத்தப்படிமங்கள். அதோடு வாஷ்பேசின் நோக்கி நடந்தவள் பைப்பைத் திறந்துவிட்டு ரத்தப்படிமத்தைக் கழுவினாள். பிறகு, திரும்ப ஒருமுறை வாளை வீரமங்கைபோல் பிடித்துப் பார்த்தாள்.
அப்படியே நடந்து வந்து தனியே கிடந்த உறைக்குள் எடுத்து அதைச் செருகினாள். திரும்ப உருவிப்பார்க்க எண்ணினாள். ஏனோ `வேண்டாம்’ எனத் தோன்றியது.

ஒரு ஜடப்பொருள் அவளை முடமாக்குவதுபோல் ஓர் எண்ணம் தோன்றவும் `நோ’ என்கிற முணுமுணுப்போடு அந்த வாளைத் திரும்ப வெளியே உருவி எடுத்தாள். ஆனால், இம்முறை அது காயப்படுத்தவில்லை. உற்றுப்பார்த்தாள். பிறகு திரும்ப உறைக்குள் செருகினாள். பிறகு திரும்ப உருவினாள். திரும்பச் செருகினாள்! அப்படியே அதை எடுத்துச் சென்று பாரசீக நாட்டு ஜாடிக்கு அருகில் படுக்கைவாக்கில் வைத்தாள்.

திரும்பவும், பானு கட்டு போட்டவளாய் வந்துகொண்டிருந்தாள். அவள் கூடவே கையில் பர்ஸ்ட் எய்டு பாக்ஸோடு மருதமுத்து.

``என்ன பானு, மருந்து போட்டுட்டியா?’’

``யெஸ் மேடம்.’’

``எதுக்கும் டாக்டரைப் பார்த்து ஒரு இன்ஜெக்‌ஷன் போட்டுக்கிட்டு வந்துடு.’’

``தேவையில்ல மேடம்... சின்னக் காயம்தான்.’’

``அப்படி விட்டுடக் கூடாது. நம்ப கார்லயே போய் நம்ப பேமிலி டாக்டரைப் பார். நான் போன்ல சொல்றேன்’’ என்று, சோபா மேல் வைத்த கைப்பேசியைத் தேடிச் சென்று எடுத்தாள். அரவிந்தன் இணைப்பைத் துண்டிக்காமல் தொடர்பிலேயே இருந்தான்.

``அரவிந்தன் சார்...’’

``யெஸ் பாரதி... எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். நீங்க ஒரு தடவை தனியா விளக்க வேண்டாம். நீங்க இப்ப எந்த மாதிரி மனநிலையில இருப்பீங்கன்னு நல்லா புரியுது. வாழ்க்கை எல்லாருக்கும் எப்பவும் ஒரே மாதிரி போறதில்ல. சில நேரம் சிலர் வரையில அது ரொம்ப விசித்திரமா போகும். எந்த லாஜிக்குக்குள்ளயும் அதை அடைச்சுப் பார்க்கவும் முடியாது. உங்க வாழ்க்கையில உங்க வரையில அப்படி ஒரு தருணத்துல நீங்க இருக்கிறதா எனக்குத் தோணுது. எனக்கு இப்ப அந்தக் கத்தியைப் பார்க்கணும்னு தோணுது. நான் உங்க வீட்டுக்கு வரலாமா?’’

``சார்ர்... என்ன இது கேள்வி... பை ஆல்வேஸ்!’’

``அப்ப வெயிட்பண்ணுங்க. கிளம்பி வர்றேன்...’’ என்று தொடர்பைத் துண்டித்தான். பாரதிக்கு, அவன் வருகிறேன் என்று சொன்னதில் ஒரு மகிழ்ச்சி!

முகத்துக்கு நேராகப் பேசும்போது நிச்சயம் பல விஷயங்கள் புலனாகக்கூடும். அவள் சிந்தனையோடு கைப்பேசியைப் பிடித்திருந்த அந்தத் தருணத்தில் வாட்ச்மேன் மணி மெயின்டோர் அருகே வந்து நின்றவனாய் ``அம்மா...’’ என்று குரல்கொடுக்க ``யாரு?’’ என்ற கேள்வியோடு பார்த்தாள் பாரதி. வாட்ச்மேன் மணி தெரிந்தான்.

இறையுதிர் காடு - 14

``என்ன மணி?’’

``யாரோ ஒருத்தன், டிரை சைக்கிள்ள ஒரு பெட்டியோடு வந்திருக்கான்மா! நீங்க அந்தப் பெட்டியை வாங்கறதா சொல்லியிருந்தீங்களாம்.’’

``நானா... நான் அப்படி யார்கிட்டயும் சொல்லலையே!’’

``அப்ப திரும்பிப் போகச் சொல்லிடட்டுங்களா?’’

``தப்பா வந்திருப்பாங்க. பக்கத்து பங்களாவா இருக்கப்போகுது.’’

``இல்லம்மா... உங்க பேரை சரியா சொல்லிக் கேட்கிறான். பெட்டியும் அந்தக்காலப் பெட்டி! விபூதி வாசம் சும்மா அப்படி அடிக்குது. எனக்குகூட கொஞ்சம் கிறக்கமா உடம்பு ஒரு மாதிரி இருந்துச்சு. பெட்டிய பார்க்கவுமே கிறக்கம்லாம் பறந்துடுச்சி! இந்தப் பழைய ஜாமானெல்லாம் விக்கிறவனாட்டம் தெரியுது’’ - மணியின் விளக்கம், பாரதியை மெயின் கேட் நோக்கிச் செலுத்தியது. கேட்டுக்கு வெளியே டிரை சைக்கிளில் குமரேசன் தெரிந்தான். சைக்கிள் ஸ்பேஸில் பெட்டி, ஹார்மோனியம், ஒரு ரோமாபுரி வீரன் சிலை என, பல அயிட்டங்கள். பெட்டி நாற்புறமும் பித்தளைப் பூண் போடப்பட்ட நிலையில் முகப்பில் துவாரப்புள்ளிகளோடு அதற்குக் கீழே `திருப்புளி சங்கரம்’ என்று செதுக்கப்பட்ட எழுத்துகளுடன் விபூதி வாசத்துடன் பாரதியின் கண்ணில் பட்டது.

``வணக்கம்மா. நான் பழைய புத்தகக் கடை துரியானந்தம் மவன்மா. அப்பா இந்தப் பொட்டி பத்தி உங்க கையில சொல்லிவெச்சிருந்தாராம். அதான் இட்டாந்துட்டேன். மினிஸ்டர் வர்றாருன்னு பிளாட்பாரத்தைக் காலிபண்ணச் சொல்லி ஒரே கலீஜிம்மா. அதான் எடுத்தாந்ததை ஊட்டுக்குத் திரும்பக் கொண்டுபோவாம உங்க ஊட்டுக்கே கொண்டாந்துட்டேன்’’ - குமரேசன் காரண காரியங்களோடு பேசவும், பாரதியிடம் சற்றே அமைதி. பெட்டிமேல் அப்போது காம்பவுண்ட் சுவரையொட்டி வளர்ந்திருந்த பன்னீர் மரப் புஷ்பம் ஒன்று, அர்ச்சனைப் புஷ்பம்போல் வந்து விழுந்தது. தெருவில் போய்க்கொண்டிருந்த சாம்பிராணி ராவுத்தரின் புகை, பெட்டிக்கே காட்டப்பட்டதுபோல் குவிந்து அடங்கிக் கலைந்தது. அதே பன்னீர்மரம் மேல் குயில் ஒன்று வந்து அமர்ந்து கூவ ஆரம்பித்தது.

எல்லாமே தற்செயலான சம்பவங்கள்தான். ஆனால், திட்டமிட்ட செயல்பாடுபோல் ஓர் ஒற்றுமை.

``அந்தக்காலப் பொட்டிம்மா... நானும் கஜகர்ணம் அடிச்சிப்பார்த்துட்டேன் - தொறக்க முடியல! விபூதி வாசன வேற உட்டு தூக்குது. நான்கூட `நாமளே வெச்சுக்கலாம் நைனா’ன்னேன். ஆனா, ஊட்ல எடமில்லம்மா. சின்ன ஊடு எங்க ஊடு’’ - குமரேசன் வெறித்தபடி நிற்கும் பாரதிக்கு, பின்னுரை வாசித்தான்.

``சரி சரி... உள்ற வா! எல்லாமே விக்கிறதுதானே?’’

``ஆமாம்மா... இந்த வீரன் சிலை, மவுன்ட்ரோடு கிராப்ட் பஜார் ஷாப்புல முப்பதாயிரம்மா.’’

``அப்ப, அங்க போய் வண்டியோடு நின்னுடவேண்டியதுதானே?’’ என்று, வாட்ச்மேன் மணி அடுத்த நொடியே குமரேசனை மடக்கினான்.

வியாபாரப் பீற்றலுக்கெல்லாம் இங்கே இடமில்லை என்பதும் அப்போதே குமரேசனுக்குத் தெரிந்துவிட்டது. டிரை சைக்கிள் வண்டியும் சுண்டெலிக் குரலின் கதறல்களோடு போர்ட்டிகோ வரை வந்து நின்றது.

``வாய்யா வந்து ஒரு கை பிடி...’’ என்று பெட்டியைத் தூக்க உதவி கோரினான் குமரேசன். மணியும் தூக்கிவிட, வீட்டினுள் நுழைந்தனர்.

தோளில் சுமந்தபடியே உள்ளே இறக்குவதற்கு இடம் தேடிய குமரேசனுக்கு, மணியே ஓர் இடத்தைக் காட்டினான். அங்கே மிகச்சரியாக ஒரு பழநி முருகன் படம் சுவரில் மாட்டப்பட்டு, அதற்கு மாலையும் போடப்பட்டிருந்தது. பெட்டியைக் கீழே வைத்த நொடி, மாலை அறுந்து பெட்டி மேல் சொத்தென விழுந்தது.

குமரேசனையே அந்தக் காட்சி என்னவோ செய்துவிட்டது. பாரதியும் பார்த்தாள். பக்கத்தில் அவள் வைத்திருந்த அந்த வாள். அதைப் பார்த்த குமரேசன் ``பார்றா... நம்ம கடைக் கத்தி! மேடம் நம்மகிட்ட வாங்குனதுதானே?’’ என்று உற்சாகமாய்க் கேட்டான். ஆமோதிப்பாய்த் தலையை அசைத்தாள் பாரதி.

இறையுதிர் காடு - 14

``பார்த்து மேடம்... இது சாமி கத்தி. உருவுனாலே ரத்தம் பார்த்துடுது. சாமி இதுகூடவே இருக்கும்போல...’’ என்று யதார்த்தமாய்தான் சொன்னான். ஆனால், பாரதியை அது உலுக்கிவிட்டது. சாமி கூடவே இருக்குமா?

``பெட்டியும் சாமிபொட்டி மாதிரிதான் தெரியுது மேடம். பிரமாண்ட உடையார் பங்களாவுல ஏலம் எடுக்கப் போனப்ப கிடைச்சிச்சு. உங்களுக்கு இனி யோகம்தான் மேடம்’’ மிக பாசிட்டிவாக அதே சமயம் பொய்யின்றிப் பேசினான் குமரேசன். பாரதியோ பெட்டியையே வெறித்தபடி இருந்தாள்.

``அம்மா.. இவன் என்னென்னவோ சொல்றான். இதெல்லாம் நமக்கெதுக்கும்மா? ஆனா, பூ விழுவதையும் சாம்பிராணி பரவுனதையும், குயில் கூவினதையும், மாலை விழுந்ததையும் வெச்சுப் பார்த்தா, நல்ல விஷயமா காவல் தெய்வம் ஒண்ணு தேடி வந்துட்ட மாதிரிதாம்மா தோணுது’’ -வாட்ச்மேன் மணியின் யதார்த்தமான பேச்சில் `காவல் தெய்வம் ஒண்ணு தேடி வந்துட்ட மாதிரி’ என்கிற கருத்து, பாரதியின் பொட்டில் அடித்தது. சட்டென அந்தப் பழநியைப் பற்றிய பழைய புத்தகமும் அதில் அவள் பார்த்த சரவண மனோசக்கரமும் அதன் பலனாய் தனக்கும் பாட்டிக்கும் வந்த `தெய்வம் தேடி வரும்’ என்ற வாசகமும் நினைவுக்கு வந்து, அவள் முகத்தில் வியர்வைபூக்க ஆரம்பித்தது.

மணியும் குமரேசனும் அதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியாமல் சற்றுக் குழம்பி நிற்கவும், பாரதி நெருங்கிச் சென்று பொட்டியைத் தொட்டுப் பார்த்தாள். அடுத்த நொடி `ஹரஹர சிவசிவ மகாதேவ சிவசிவ ஹரஹர மகாதேவ...’ எனும் சினிமா பக்திப் பாடலின் உணர்ச்சிப் பிழம்பான முழக்கம். வாட்ச்மேன் மணியின் கைப்பேசி ரிங்டோன் அது.

மிகவேகமாய் அதை எடுத்து ஒதுங்கிச் சென்று பேச ஆரம்பித்தான் மணி. பாரதியிடம் திகைப்பும் குழப்பமும் அதிகரிக்கவே செய்தது. இருந்தும் சுதாரித்தவளாக ``இதுக்கெல்லாம் நான் எவ்ளோ தரணும்?’’ என்று குமரேசனைப் பார்த்துக் கேட்டாள்.

``பாத்து போட்டுத்தாங்கம்மா. நைனா உங்ககிட்ட பேரம் பேசக் கூடாதுன்னுட்டாரு. நீங்க ஸ்பெஷல் கஸ்டமராம்ல!’’ என்றான்.

``பரவால்ல சொல்லு... எவ்வளவு?’’

``மேடம், அது வந்து...’’

``சொல்லுப்பா...’’

``பாத்து போட்டுக்கொடுங்க மேடம், சாமி அயிட்டம்!’’

``பைவ் தெளசண்ட்!’’

``ஆங்..!’

``அஞ்சாயிரம் தரட்டுமா?’’ - பாரதி அஞ்சாயிரம் எனவும் அதைத்தான் அவனும் மனதில் நினைத்திருந்தான். எனவே, அடுத்த நொடி ``உங்க இஷ்டம்தாம்மா... கொடுங்கம்மா’’ என்று முகம் நிறைய சிரிப்பானான்.

பணம் எடுத்து வர பாரதியும் விலகிட, மணி திரும்ப வந்தவனாய் ``இந்தப் பொட்டிக்கு அஞ்சாயிரமா... ஏய்யா உனக்கு இது செரிக்குமா?’’ என்று கிண்டலாய்க் கேட்டான்.

``சாமிபொட்டி... அசால்ட்டா நினைக்காதே - அப்பால...’’ என்றவன், தன் வலக்கையை பாம்பு வடிவில் காட்டி ``போட்ரும்’’ என்றான்.

அதே வேளையில் பங்களா தோட்டத்துப் புல்வெளியில் அந்த 12 அடி நீளப் பாம்பு நெளிந்தபடியே தான் ஒதுங்க ஓர் இடத்தைத் தேடிச் சென்றுகொண்டிருந்தது!

மெரிக்க பேடன் ரூஜ்!

ஜான்சன்ஸ் டிரைவில் உள்ள சாந்த ப்ரகாஷின் வீட்டு முன் டிரெய்லரோடுகூடிய சிவப்பு நிற டொயோட்டோ கார் தேங்கி நின்றது. டிரெய்லர் கேரேஜ் ஒரு ஏ.சி அறைபோல் மேக் அப் பிளாக் சகிதம் போம் பெட்டுடன் இருந்தது. அதில் பிங்க் நிற உடையணிந்த சிலர் அமர்ந்திருக்க, அதனுள் இருந்து இறங்கினான் ஆகாஷ்.

``சீ யூ இன் த மார்னிங் தூவா...’’ என்று ப்ளையிங் கிஸ்ஸோடு ஒருவன் விடைகொடுக்க, விலகி வந்தவன் திரும்ப நெருங்கிச் சென்று கேரேஜ் டோரைத் திறந்தபடி நின்றிருந்த அவனவளின் உதட்டோடு தன் உதட்டை உக்கிரமாய் உரசவிட்டு ``சீ யூ டூ...’’ என்றான். உள்ளிருந்தபடியே கண்ணாடி ஜன்னல் வழியாகத் திரைச்சிலையை விலக்கிப் பார்த்துக்கொண்டே இருந்தாள் சாருபாலா.

அந்த டொயோட்டோவும் திரும்பப் புறப்பட்டது.

உள்ளிருக்கும் பிங்க் ஆடை மனிதர்கள் அத்தனை பேரும் முரண்பட்ட உறவு உடையவர்கள். தங்கள் அடையாளமாக பிங்க் நிறத்தைத் தேர்வு செய்துகொண்டுவிட்டவர்கள். எந்தச் சாதி மதத்தில் பிறந்திருந்தாலும் அவர்கள் தங்களை `லெஸ்பி’ என்றும், `பிங்க்கி’ என்றுமே அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்.

அமெரிக்கச் சமூகத்தில் அவர்களுக்குப் பெரிதாய் எந்த எதிர்ப்புமில்லை. அதேசமயம், அவர்களால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை.

வீட்டினுள் நுழைந்திருந்த ஆகாஷ் இறுக்கமாய் பேன்ட்-ஷர்ட் அணிந்திருந்தபோதிலும் உள்ளே பனியனுக்குப் பதிலாய் பிரேசியர் அணிந்து, அதைச் சட்டையால் மூடியிருந்தான். விரல் நகங்களில் பிங்க் வண்ண சாயப்பூச்சு. அவன் கன்னத்திலும் ஜிகினா மின்னும் ரோஸ் மில்க் நிறப் பளபளப்பு.

ஹாலில் உள்ள கண்ணாடி முன் தன்னை கொஞ்சம் வெட்கத்தோடு பார்த்துக்கொண்டவன் திரும்பவும், அவன் எதிரில் சோகமாய் வந்து நின்றாள் சாருபாலா!

``ஹாய் மாம்...’’

``...’’

``ஆர் யூ நாட் வெல்?’’

``....’’

``ஐ அண்டர்ஸ்டுட்! டிட் யூ திங்க் எபவுட் மை பிசிகல் சேஞ்சஸ்..? ஐ’ம் ஸாரி மா, ஐ வான்ட் டு பீ எ வுமன்... ஈச் அண்ட் எவ்ரி இன்ச் ஆப் மை பாடி வான்ட் டு டூ தட்’’ - அவன் ஒரு பெண்ணைப்போல் குழைந்து நெளிந்துகொண்டே சொன்னதெல்லாம் அவள் கண்களில் கண்ணீராய் மாறி வழியத் தொடங்கியிருந்தன.

``டோன்ட் க்ரை... ஐ’ யம் ஆல் ரைட்...’’ என்றபடியே அவன்(ள்) உள்சென்றுவிட, அப்போது ஹாலின் டிவி பேனலும் பளிச்சென்று ஒளிர்ந்திட அதில் சாந்தப்ரகாஷ் முகமும் தெரிந்தது.

``சாரு...’’

``சொல்லு சந்து...’’

``ஐ’ யம் லுக்கிங். எல்லாத்தையும் இங்க இருந்து பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.’’

``கேண்டிட் கேமரா இதுக்கா பயன்படணும்?’’

``ஆமா... அந்த டிரெய்லர் வேன்ல இருந்தவங்கதான் நீ சொன்ன தூவாசா?’’

``அப்படித்தான் நினைக்கிறேன். எந்த எதிக்ஸும் கிடையாது. ஆட்டம், பாட்டம், செக்ஸ்... தட்ஸ் ஆல்! டெம்ப்ட் இம்புரூவ் பண்ண டிரக்ஸ் எடுத்துக்கிறாங்க. அவ்வளவும் மெக்ஸிகன் டிரக்ஸ்!’’

``சரி... என்ன செய்யலாம் சொல்லு.’’

``எவ்வளவு தடவை சந்து சொல்லட்டும். நமக்கு இந்த ஊர் வேண்டாம். உங்க தலைமுறையில திரும்பவும் தப்பு நடக்க ஆரம்பிச்சிடிச்சு. இனி ஆகாஷை நாம எதுவும் பண்ண முடியாது. இங்க அவன் அந்த பிங்க்கிகளோடு சந்தோஷமாத்தான் இருக்கான். இதுவே நம்ப ஊரா இருந்திருந்தா நீங்க அடிமாடாக்கியிருக்க மாட்டீங்க?!’’ என்ற சாருபாலாவின் கேள்வி முன் சாந்த ப்ரகாஷ் மனக்கண்கள் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்தன.

சாந்த ப்ரகாஷின் முன்னோர்களில் பலர் அடிமாடாகக் கருதப்பட்டு, தூங்கும்போதே தலையணையால் அமுக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இங்கே ஆகாஷ் அவர்களின் தொடர்ச்சி! இங்கே இப்படியே விட்டுவிடுவதற்கு இவனையும் அதுபோல்..? சாந்த ப்ரகாஷ், தானே களத்தில் இறங்கத் தயாரானான். கண்கள் கலங்க ஸ்கின் கலர் கிளவுஸை எடுத்து அவன் அணிவதைப் பார்த்த சாருபாலாவுக்கு உடல் நடுங்கத் தொடங்கிவிட்டது.

- தொடரும்.

இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியங்கள்: ஸ்யாம்