
“யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு!”
இலக்கியம், கூர்மையான அரசியல் விமர்சனம், களப் பணி என எழுத்தாளர்களின் முன்னுதாரணமாகத் திகழ்பவர் அருந்ததிராய். சமீபத்தில் ‘மக்கள் அதிகாரம்’ மாநாட்டுக்காகத் திருச்சி வந்தவரிடம் உரையாடினேன்.
உங்களை வெளிப்படுத்திக்கொள்ள எழுத்தைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன?
“கலைஞர்கள் கலையைத் தேர்ந்தெடுக்கி றார்களா, கலை கலைஞர்களைத் தேர்ந்தெடுக் கிறதா என்று உறுதியாகச் சொல்ல முடியா தென்று நினைக்கிறேன். எழுத்தாளராகவோ, ஓவியராகவோ, கவிஞராகவோ மாறலாம். அதற்கான உறுதியான காரணத்தைக் கண்டுபிடித்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் எப்போதும் எழுத்தின் வழி என் அரசியலை வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.
எனக்கு நினைவிருக்கிறது. ஆஸ்திரேலிய மிஷனரியில் படித்துக்கொண்டிருந்தேன். என் கண்ணில் சாத்தானைப் பார்த்ததாக ஒரு ஆசிரியை என்னிடம் கூறினார். அந்தத் தாக்கத்தில் எனது முதல் எழுத்து அவரைப் பற்றிய வெறுப்பைக் கொண்டதாகவே இருந்தது. அவரது அந்தப் புறக்கணிப்பை, வன்மத்தை எதிர்த்ததுதான் எனது முதல் எழுத்து. எனக்காகப் பேசிய எனது எழுத்துதான் என்னுடைய ஆயுதமானது.”

உங்களுக்கான அடையாளம் எது, நீங்கள் உங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்?
“என் தந்தை ஒரு வங்காளி இந்து, தாய் மலையாள கிறித்துவர். நான் இந்தப் பிரதேச, மத அடையாளங்களை மட்டுமல்ல, எந்த அடையாளங்களைச் சார்ந்தும் இருக்கவில்லை. வெளியாளாக உணர்ந்ததுதான் என் அடையாளம். அதுதான் என் அடையாளத்தைப் புரிந்துகொள்ளத் தூண்டியது.”
உங்கள் எழுத்துக்கான வேரை, உண்மையை எங்கிருந்து பெறுகிறீர்கள். எந்த விதத்தில் அதைப் புனைவாக மாற்றுகிறீர்கள்?
“இதைக் கலையும் களமும்தாம் தீர்மானிக்கும் என்று கருதுகிறேன். புனைவு என்பது உண்மைக்கு மாறான ஒரு விஷயம் என நினைக்கிறோம், அதில் உண்மையில்லை. உண்மை என்று நாம் கருதுவது நம் ஒவ்வொருவரது கண்ணோட்டம்தான். என்னைப் பொறுத்தவரை புனைவு என்பது, நமது பார்வையை மேம்படுத்துவதற்கான வழிகாட்டி என நினைக்கிறேன்.”
பாலினம், தேசம் போன்ற எல்லைகளைக் கடக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறீர்கள். அத்தகைய முயற்சி சாத்தியமா?
“மிகச் சிலர் இந்த எல்லைகளைக் கடக்கிறார்கள். மற்றபடி, எல்லோரும் நடப்பில் இருப்பவற்றோடு அப்படியே பழகிவிடு கிறார்கள். அந்த எல்லைகளை உறுதியாக்கும் முயற்சிகளைச் செய்யவே நினைக்கிறார்கள்.”
எல்லைகளைக் கடந்த அசலான சுதந்திரத்தை உணர்வதுதான் மகிழ்ச்சி என்று சொல்கிறீர்கள். அதை சாத்தியமாக்கும் வழி எது?
“சுதந்திரம் என்பது எப்போதுமே கிளர்ச்சி யூட்டுவதாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. உலகில் தோன்றிய சர்வாதிகாரிகளின் காலத்தைவிட நாம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம். நாம் பெற்றிருக்கும் ஓரளவிற்கான சுதந்திரத்திற்கான பாதுகாப்பும் குறையும்போது, துப்பாக்கிச் சூடு போன்ற அச்சுறுத்தலால் சுதந்திரம் பாதிக்கப்படும்போது, கருத்துரிமையையும் சுதந்திரத்தையும் இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
மக்களுடைய சுதந்திரம் மட்டுமல்ல, மக்களுடைய சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் மனிதர்களின், அமைப்புகளின் சுதந்திரமும் காக்கப்பட வேண்டியது முக்கியம். சுற்றியிருப்பவர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்வதற்கு பதிலாக நிபுணர்களை நாடுகிறோம். காஷ்மீரைப் பற்றித் தெரிந்த நிபுணர், மாவோயிஸ்டுகளைப் பற்றித் தெரிந்த நிபுணர் என நிபுணர்களைச் சார்ந்து இருப்பது சோம்பேறித்தனம். பிரச்னைகளைக் களத்திற்குச் சென்று புரிந்துகொள்ள நினைக்கும்போது எனக்கு முத்திரை குத்துகிறார்கள். முத்திரை குத்துவதுதான் இந்த ஆட்சியின் ஒரே தனித்துவமான குணம்.”

உங்கள் எழுத்தின் மீதான முத்திரை எதுவென்று நினைக்கிறீர்கள்?
“என்னைப் பற்றி எழுதும்போது சிலர், எழுத்தாளரும் செயற் பாட்டாளருமான அருந்ததிராய் என்று எழுதுகிறார்கள். நான் ஏன் வெறும் எழுத்தாளர் கிடையாது? ஏனென்றால், எழுத்தாளர்கள் என்பவர்கள் பாதுகாப்பான எல்லைகளுக்குள் நின்றுகொண்டு, தன்னுடைய நூல்களை நிறைய பிரதிகள் விற்பனை செய்யத் தெரிந்தவராக, எவரையும் தொந்தரவே செய்யாத எழுத்துகளுக்குச் சொந்தக் காரர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். செயற்பாட்டாளர்கள் என்பவர்கள் எழுத்தாளர்களல்லர், அவர்கள் ஒருவிதமான தனித்த வகையினர் என்னும் பொது மனநிலை இருக்கிறது. முத்திரை குத்துவதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு?”
நீங்கள் புனைவுகளின் எல்லைக்குள் நிற்காமல் அரசியல் கட்டுரைகள் எழுதுவதால்தான் இந்தச் சிக்கலா?
“இல்லை. God of small things என்ற என் புத்தகத்திற்காக, ஒழுக்கத்தைக் கெடுக்கிறேன் என்று என்மீது பத்தாண்டுக் காலம் கிரிமினல் வழக்கு நடந்தது. நான் அப்படி எதையும் திட்டமிடுவதில்லை. என்னுடைய அடுத்த நாவலில் காஷ்மீர் சிக்கலையும், இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் இணைத்து எழுத முயற்சி செய்திருக்கிறேன். புனைவின் எல்லைக்குள்தான் இது எளிதில் சாத்தியம். தலித்துகளையும் பிற்படுத்தப் பட்டவர்களையும் எதிர்த்துக் கல்வி நிறுவனங்களுக்குள் பிராமணிய நடவடிக்கைகள் அதிகமாகும் இந்தச் சூழ்நிலையில், வெவ்வேறு புள்ளிகளாக இருக்கும் பிரச்னைகளை ஒப்பிட்டு இணைப்பதன் மூலம் புரிதல் மேம்படும் என நினைக்கிறேன்.
இரண்டு சாதிகளுக்கிடையிலோ, இரண்டு பழங்குடிகளுக்கு இடையிலோ நடக்கிற சண்டையோ, இந்துத்துவச் சக்திகள் தூண்டிவிடும் சண்டையோ, வெறும் தண்ணீர் நெருக்கடியை மறைப்பதற்காகக்கூட இருக்கலாம். ஆகவே, புள்ளிகளை இணைத்துப் புரிந்து கொள்வது காலத்தின் தேவையாக இருக்கிறது. எந்தப் பிரச்னையையும் தனியாகப் புரிந்துகொள்ள முடியாது.”
சமீபத்திய போர்ச்சூழல் குறித்து உங்கள் கருத்து..?
“காஷ்மீரில் நடக்கும் எந்தவொரு நிகழ்வைக் குறித்தும் வெளிவருகிற செய்திகளைக் கொண்டு மட்டுமே அதன் முழுப் பரிணாமத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஏன் நடந்தது, ஏன் இப்போது நிகழ்ந்தது என்று எதையும் உறுதியாகக் கூறிவிட முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால், நடைமுறைப்படுத்தப்படும் தனியார்மயக் கொள்கைகளின் தாக்கத்தை மறைக்க இந்துத்துவ முழக்கங்களையும், அது சரிவராதபட்சத்தில் போரையும் ஆயுதமாகக் கையிலெடுப்பார்கள் என்று ஏற்கெனவே பலரும் பேசியிருக்கிறோம்.
ஆளும் மத்திய அரசுக்கு, மக்களுக்கு மறக்கவைக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தனியார்மயக் கொள்கைகள், பன்னாட்டு முதலாளித்துவத்துக்கு ஆதரவான நிலைப்பாடு, ரபேல் ஊழல் என நிறைய இருக்கின்றன. போர் முழக்கங்களின் மூலம் இவற்றை மறைக்க முயலலாம்.
தன்னுடைய 56 இன்ச் மார்பில் தனியார்மயம், தாராளமயம், சாதியம், மதவாதம் என அனைத்தையும் உள்ளடக்கிய பிரச்னையாக மோடி இருக்கிறார். அவருடைய முதுகில் இருக்கும் கரும்பலகையில், சமாதானம் விரும்பும் எல்லோரும் இணைந்து இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான பார்முலா எழுதும் நேரம் வந்துவிட்டது. நேரம் மிகக் குறைவாக இருக்கிறது.”
- குணவதி, படம்: சொ.பாலசுப்ரமணியன்
ஓவியம்: பிரேம் டாவின்ஸி