சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

செர்ரி மரம் - சிறுகதை

செர்ரி மரம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
செர்ரி மரம் - சிறுகதை

செர்ரி மரம் - சிறுகதை

ன்று காசு எண்ணும் நாள். என்னுடைய வருமானத்தையும், அப்பாவுக்குத் தோட்ட வேலையில் கிடைக்கும் காசையும் ஒன்றாகப் போட்டு எண்ணுவோம். பிறகு, அதை அப்பா வங்கிக்கு எடுத்துச் சென்று கடனைக் கட்டுவார். அப்போது என்னை ஒருவிதமாகப் பார்ப்பார். மனதைப் பிசைந்து ஏதோ செய்யும்.

நான் வாழ்க்கையில் ஒன்றையுமே பெரிதாகச் சாதித்தவள் அல்ல. என் பெயரைத் தெரிந்து ஒன்றுமே ஆகப்போவதில்லை. படிப்பிலோ அறிவிலோ அழகிலோ நான் ஒருவித மைல்கல்லையும் தொடவில்லை. பேசவேண்டியது என் தங்கைகளைப் பற்றித்தான். அவர்கள் என்னவாக ஆவார்கள் என்பது அவர்கள் உடம்புகளுக்குள்ளே அப்பவே இருந்தது. எனக்குத்தான் தெரியவில்லை. முதல் தங்கையின் பெயர் சமந்தா. அவள் செய்யும் வேலை, நிபுணத்துவம் வாய்ந்தது. பூமியில் அவள்போல் நூறு பேர் இருப்பார்களா என்பதும் சந்தேகம்தான்.

 இரண்டாவது தங்கையின் பெயர் பமீலா. உலகத்துச் சோம்பேறிகளை வரிசைப்படுத்தினால் முதலாவது நிரலில், இரண்டாவது வரிசையில் மூன்றாவதாக நிற்பாள். அழகு எனப் பார்த்தால் சாதாரணம்தான். புத்தகத்தைத் தொடும்போது ஒரு புழுவைத் தொடுவதுபோல் தயக்கம் இருக்கும். உடம்பைப் பின்புறம் வளைத்துப் பார்க்கவைக்கும் உயர்ந்த கட்டடங்கள்கொண்ட சிகாகோ நகரில், அதிபணக்காரர்களில் ஒருவரை மணமுடித்திருக்கிறாள். அவளுக்கு வேலையே கிடையாது. நாளுக்கு நான்கு தரம் உடை மாற்றுவாள். புதுப்புதுவிதமான ஆடைகளில் கணவனுக்கு மகிழ்ச்சியூட்டவேண்டியதுதான் அவளுடைய கடமை.

செர்ரி மரம் - சிறுகதை

கடைசித் தங்கையின் பெயர், ரெபெக்கா. விநாடியில் யாரையும் மயக்கிவிடும் சௌந்தர்யவதி. ரத்தம் வடிவதுபோல மெதுவாக அவள் சிரிப்பு மலரும். முகத்துக்கு வெளியே நீட்டும் இமைகள். அவள் கழுத்து சைஸும், இடை சைஸும் ஏறக்குறைய ஒன்றுதான். ஒரு நல்ல போர்வீரன் வாளைச் சுழற்றுவதுபோல இவள் தன் வசீகரத்தை நாலா பக்கமும் சுழற்றியபடியே இருப்பாள். என்னதான் இவள் அழகை மிகைப்படுத்திச் சொன்னாலும் அது குறைவாகத்தான் இருக்கும். சமீபத்தில்தான் அவளுக்கு மணமானது. தீவிரமான நான்கு காதலர்களில் ஒருவரைத் தேர்வுசெய்வதற்கு மிகவும் திணறிப்போனாள்.

எங்கள் வீடு, இரண்டு அறைகள்கொண்டது. வீட்டின் வலதுபக்கத்துச் சுவர் பக்கத்து வீட்டுச் சுவருடன் இணைத்துக் கட்டப்பட்டிருந்ததால், அந்தச் சுவரில் யன்னல் கிடையாது. கார் தரிப்பிடப் பாதையின் முன்னால்தான் செர்ரி மரம் நின்றது. மிகப் பழைமையான மரம். ``100 வருடம் இருக்கும்’’ என்று அப்பா சொல்கிறார். பக்கத்து வீட்டுக்காரருக்கு அந்த மரம் பிடிக்காது. எந்த நேரமும் அது தன் வீட்டின் மேலே விழுந்து தன்னைக் கொன்றுவிடலாம் என நகராட்சிக்குத் தொடர்ந்து முறைப்பாடு செய்து, அவர்கள் முடிவுக்குக் காத்திருக்கிறார். நான் மார்ச் மாதத்துக்காகக் காத்திருக்கிறேன். அப்போதுதான் செர்ரி மரம் பூக்கும்.

முதல் தங்கையைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. அவள் தன் உதவியாளரையே மணமுடித்து, நியூயோர்க் நகரில் 30 மாடிக் கட்டடம் ஒன்றில் குடியிருக்கிறாள். மேல் மாடியில் அவள் வீடு. கீழ் மாடியில் அவளுடைய அலுவலகம். கணவரும் மனைவியும் தினமும் குறைந்தது 18 மணி நேரம் பல உதவியாளர்களுடன் வேலை செய்கிறார்கள். சமந்தாவை அவசரத்துக்குத் தொலைபேசியில் பிடிக்க முடியாது. வார்த்தைகள் வாயைத் தேய்த்துவிடும் என்பது அவள் கொள்கை. குறுஞ்செய்தியில் மட்டுமே தொடர்புகொள்ளலாம்.

உலகத்தில் மிகவும் பழைய, ஆனால் விலை மதிக்க முடியாத நூல்களை அவற்றின் தகைமைக்குக் கேடு வராமல் கலைநயத்துடன் மீள் உருவாக்கம் செய்வதுதான் அவள் வேலை. அநேகமாக ஆங்கில நூல்கள்தான் வரும். அவளுடைய கணவருக்கு ஹிப்ரு மொழி தெரியும் என்பதால், ஹிப்ரு மொழி நூல்களும் வருகின்றன. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு புராதன நூல் ஒன்று கிடைத்துள்ளது என்றால், உடனேயே சமந்தா அங்கே பறந்துபோவாள். இஸ்ரேலின் தேசிய நூலகத்தின் தலைமைப் பணிப்பாளர், `பண்டைய ஏடு ஒன்று அகப்பட்டிருக்கிறது’ என்று அறிவித்தால், அடுத்த நாள் அங்கே நிற்பாள். இரண்டு மணி நேர தூரத்தில் உள்ள அப்பாவையோ, என்னையோ வந்து அவள் பார்ப்பது கிடையாது.

வீட்டில் அப்பாவும் நானும்தான். நான் சிறுவயதிலேயே என் மூளையை அறிவினால் நிரப்பிவிட வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. வருமானவரிப் பரீட்சைக்கு நானாகவே படித்து அதில் சித்தியடைந்தேன். என்னைத் தேடி வாடிக்கையாளர்கள் வந்தார்கள். ஆரம்பத்தில் அவர்களுக்கு வருமானவரிக் கணக்குகளை ஒரு பயிற்சிக்காகச் செய்து கொடுத்தேன். இப்போது ஓர் அறையை அலுவலகமாக மாற்றி, அதையே என் தொழிலாக்கிவிட்டேன்.

செர்ரி மரம் - சிறுகதை

எங்கள் வீட்டு முன் அறையில் ஒரேயொரு படம் பெரிதாக மாட்டப்பட்டிருக்கிறது. அதில் நாங்கள் நான்கு பேரும் காட்சியளிக்கிறோம். இதை அப்பா தன் கேமராவில் எடுத்தபோது, எனக்கு வயது 14. என் தங்கைக்கு 13. அடுத்தவளுக்கு 12. கடைசிக்கு 11. நாங்கள் நான்கு சகோதரிகளும் அப்போதே ஒரு முடிவுக்கு வந்திருந்தோம். நாங்கள் தனித்தனி முகப்புத்தகக் கணக்கு ஆரம்பித்தாலும் முகப்புப் படமாக இதையே வைத்துக்கொண்டோம். எக்காரணம்கொண்டும் அதை நீக்கக் கூடாது. தினமும் கேள்விகள் எனக்கு வரும், `நீங்கள் யார்?’, `இவரா, அவரா?’ என்று. நான் சொல்ல மாட்டேன். `இடதுபக்கம் கடைசியில் நிற்பது யார்?’ என்ற கேள்வி அதிகமாக வரும். அது ரெபக்காதான்.

அவளுக்கு முகநூலில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். முகத்தைப் பார்க்காமலேயே காதல்கொண்டார்கள். அவள் ஏதாவது குறிப்பு கொடுத்திருப்பாள். சொல்லமுடியாது. ஆண்கள் போற்றுவதை விரும்புபவள் அவள். `கவிதை எழுதுபவர்கள்தான் அதிகம்’ என்பாள். எல்லாமே திருடிய கவிதைகள். `நான் மூச்சை விட்டால், அவன் சுவாசப் பை நிரம்புகிறதாம்!’ இன்னொருத்தன் `100 நாரைகள் தரை இறங்குவதுபோல உன் வருகை அழகாக இருக்கிறது’ என்பான். `ராணுவம் ஊரைச் சுற்றி வளைப்பதுபோல, என்னைச் சுற்றிவளைத்து மூச்சு விட முடியாமல் இறுக்குவான். நிரப்பப்பட்ட மது கிளாஸ்’ என்று என்னை வர்ணிக்கிறான். ஆனால், பாலைவனத்து ஒட்டகம்போல மதுவை ஒரே மடக்கில் குடித்துவிடுகிறான்.

அப்போது ரெபெக்கா மணமுடித்திருக்கவில்லை. ஒருநாள் தன் புதுக்காதலனை வீட்டுக்கு அழைத்து வந்தாள். செல்பேசியை உள்ளங்கையில் வைத்து மூக்குக்குக் கிட்டப் பிடித்து முகர்வதுபோல் பேசுவாள். கண் சிமிட்டியபோது ஏதோ குறும்பு செய்யப்போகிறாள் எனப் புரிந்தது. அவளுடைய காதலனைப் பார்த்தேன். கூர்கூராக வளர்த்து வெட்டிய தலைமுடி. மெல்லிய மிருதுவான தோலில் செய்த மேலங்கி. பளபளக்கும் காலணி. வசீகரமான முகம். இரண்டு தரம் முகத்தைத் தேய்த்துவிட்டால் இன்னும் அழகாகிவிடுவான். சிப்பி ஓடு பிளந்திருப்பதுபோல் வாயால் ரெபெக்காவை விழுங்கிக்கொண்டிருந்தான். தேநீர்க் கோப்பையை அவன் உதட்டருகே கொண்டுபோகும்போது, சட்டென ஒரு காலைத் தூக்கி மறுகால் மேல் போட்டாள். தொடைகளால் எதையோ இறுக்கிக் கவ்விப் பிடிப்பதுபோல அந்த அசைவு இருந்தது. அவன் தடுமாறி தேநீரைத் தரையில் கொட்டிவிட்டான். அடுத்த அரை மணி நேரமாக அவன் முழங்காலில் உட்கார்ந்து நிலத்தைத் துடைத்தான்.

அப்பா வீட்டில் இருக்கும்போது ஏன் இன்னும் அவர் வேலைக்குப் போகவில்லை என்று எரிச்சலாக வரும். அவர் வெளியே போனதும் திரும்பி வர மாட்டாரா என மனம் ஏங்கத் தொடங்கும். ஒரு பதற்றம் தொற்றிவிடும். அன்று காலை ஒரு முட்டை பழுதாகிவிட்டது. அப்பா ஆற்ற முடியாத துயரத்தில் ஆழ்ந்துவிட்டார்.

``அது வெறும் முட்டைதானே!’’ என்றேன்.

``வெறும் முட்டையா? ஒரு வெள்ளைக் கரு, ஒரு மஞ்சள் கரு.’’ கண்ணிலே நீர் கசிந்துவிடும்போல் இருந்தது. முன்பெல்லாம் தொட்டதுக்கும் சுருக்கெனச் சீறி விழுவார். இப்போது எந்தச் சிறு சம்பவத்தையும் துக்கமாக மாற்றிவிடுகிறார். மாலையில் வழக்கமாகக் களைத்து விழுந்து திரும்பும் அப்பா, அன்று உற்சாகமாகக் காணப்பட்டார். பழைய கம்பெனி அடையாள அட்டை அவர் கழுத்தில் தொங்கியது. அவர் மத்தியானம் குடித்த சூப் என்ன என்பதை அவருடைய தடித்த தோட்ட உடுப்பின் முன்பகுதியைப் பார்த்தால் தெரிந்துவிடும்.

``ரிறில்லியம் பூவை இன்று பார்த்தேன்’’ என்றார்.

``அது என்ன?’’

``மூன்று இதழ்களுடன் வெள்ளை வெளேரென இருக்கும். அந்தப் பூவைப் பிடுங்கினால் தாவரம் இறந்துவிடும். சில நாடுகளில் அது சட்டவிரோதமான செயல். விதிவிலக்குப் பூ. ஆனால், மிக அழகானது’’ என்றார். திடீரென ஏதோ நினைத்து மௌனமாகி, அவருடைய உற்சாகம் வடிந்துவிட்டது. என்னை நேரே பார்க்காமல் ``உனக்கு நான் நல்ல அப்பாவாக இருக்கிறேனா?’’ என்றார்.

``இது என்ன சந்தேகம் அப்பா?’’

``உன் தங்கைமார் எல்லோரும் மணமுடித்துக்கொண்டார்கள். அந்தத் துயரம் உனக்கு ஒன்றுமே இல்லையா?’’

``என்ன துயரம் அப்பா? `உலகம் விதிவிலக்குகளால் நிரப்பப்பட்டிருக்கிறது’ என்று நீங்கள்தானே சொன்னீர்கள். பூமிக்கு வெகுசமீபத்தில் இருக்கும் வெள்ளிக்கிரகம் மற்ற கிரகங்கள்போல் அல்லாமல் எதிர்ப்பக்கமாகத்தானே சுழல்கிறது.’’

வருமானவரி விண்ணப்பம் தயாரிக்கும் மாதங்களில் நிறைய வாடிக்கையாளர்கள் என்னைத் தேடி வருவார்கள். அவர்கள் வேலையை உடனுக்குடன் செய்து கொடுப்பேன். பணமும் தருவார்கள். புதிதாக ஒருவன் என்னைப் பார்க்க வந்தான். கீழ் உதடும் மேல் உதடும் ஒரே பருமன். அதுவும் ஒரு கவர்ச்சிதான். பத்துப்பேர் அறையில் கூடிவிட்டதுபோல ஆழமான குரல். அவனுடைய வருமானவரிக் கணக்கைச் செய்தேன். அடுத்த வருடத்தில் எப்படி வரியைக் குறைக்கலாம் என்ற நுட்பத்தையும் சொல்லித்தந்தேன். காசைத் தரும்போது மோகனமாகப் பார்த்தான். கனிவாகச் சிரித்தான். டெலிபோனில் அழைப்பதாகவும் சொன்னான். காத்திருந்தேன். அடுத்த வருட வருமானவரிக் கணக்கை முடிக்க அவன் வரவேயில்லை.

செர்ரி மரம் - சிறுகதை

அன்று காசு எண்ணும் நாள். திடீரென என் இரண்டாவது தங்கை பமீலா, என்னைப் பார்க்க வந்தாள். அவள் சும்மா வர மாட்டாள். போனதடவை நிதி மந்திரி விருந்துக்கு அழைத்ததைச் சொல்வதற்காக வந்தாள். இவளுக்காகத்தான் அப்பா நிறைய கடன்பட்டுப் படிக்கவைத்தார். இவள் படிக்கவேயில்லை. பையன்களோடு சுற்றித் திரிந்தாள். அப்பா காசு அனுப்பப் பிந்தினால், வீட்டுக்கு வந்து சத்தம்போடுவாள். அன்றைக்கு செங்கல் நிற கார் ஒன்றில் சத்தமே இல்லாமல் வந்து இறங்கினாள். வீட்டின் உள்ளே நுழையும்போதே ஏதோ கெட்டவாடை வீசுவதுபோல மூக்கைச் சுருக்கினாள். அவள் 16 வருடம் வாழ்ந்த வீட்டை, புதுசாகப் பார்ப்பதுபோல் நூதனமாகப் பார்த்தாள். இரவு விருந்துக்குப் புறப்பட்டதுபோல அடிக்கடி தோள்மூட்டு நழுவும் சாம்பல் நிற நீண்ட ஆடையை அணிந்திருந்தாள். அவள், கண்களின் நிறத்தை மிகைப்படுத்தும் வர்ணத்தில் உடைகளைத் தெரிவுசெய்வதில் தேர்ந்தவள். சிகை, ஒப்பனை நிபுணருக்கு இரண்டு மணி நேரம் எடுத்திருக்கக்கூடிய தலை அலங்காரம். கால்களைக் கவ்விப் பிடிக்கும் குதிவைத்த சாம்பல் நிறக் காலணிகள். அவள் அமரவில்லை. சுழல் கதவுபோல உள்ளேயும் வராமல், வெளியேயும் போகாமல் அசைந்தவாறு நின்றாள். பிறகு, வந்ததுபோலவே சட்டென விடைபெற்றுப் போனாள்.

அவள் காரை நோக்கிப் போன பிறகுதான் எனக்கு யோசனை வந்தது, `எதற்காக வந்தாள்?’ கருணை பெருகி என்னையோ, அப்பாவையோ வந்து பார்ப்பவள் அல்ல. போகும்போது கார் பாதையில் நின்று செல்பேசியை இயக்கினாள். கார் தானாகவே பின்பக்கமாக நகர்ந்து அவள் பக்கத்தில் வந்து அசங்காமல் நின்றது. திரும்பிப் பாராமல் காரினுள் ஏறி அதை ஓட்டிக்கொண்டு புறப்பட்டாள். அவள் போன பிறகுதான் தன்னுடைய புது ரெஸ்லா காரைக் காட்ட வந்திருக்கிறாள் என எனக்குப்பட்டது. அப்பா திரும்பியபோது, நான் பமீலா வந்ததைச் சொல்லவில்லை. என் வருமானக் காசைக் கொடுத்தேன். அமைதியாக அதை எண்ணி வங்கிக்குக் கட்டப் போனார்.

தோட்டவேலை இல்லாத நாள்களில் அப்பா யார் யாரோவுடைய பழைய திருமண அழைப்பிதழ்களை எல்லாம் எடுத்து ஆராய்வார். நூற்றுக்கு மேலே சேகரித்து வைத்திருக்கிறார். கடினமான தோட்டவேலை செய்வதால், மணிக்கட்டுகள் எந்நேரமும் வீங்கி இருக்கும். இரண்டு கைகளிலும் ஐஸ் பைகளைக் கட்டிக்கொண்டு தனக்குத்தானே சதுரங்கம் விளையாடுவார். அன்று கறுப்பு ராஜாவை B6 கட்டத்துக்கு நகர்த்திவிட்டு எதிராளியைப் பார்ப்பதுபோல் பார்த்தார். முன்தலை மயிர் பின்னோக்கி நகர்ந்து நெற்றி அகலமாக மினுங்கியது. இரக்கம் உண்டாக்கும் உருவம். இவரையும் நான்கு பிள்ளைகளையும் விட்டுவிட்டு அம்மா எப்படி இன்னொருவருடன் ஓடிப்போனார். அந்தக் காதல் எவ்வளவு தீவிரமானதாக இருந்திருக்கும். ஒருநாள் அம்மாவின் பிடரியில் அப்பா முத்தமிட்டதை, நான் கண்டிருக்கிறேன்.

``அம்மா உங்களைக் காதலிக்கவில்லையா அப்பா?’’ என்றேன்.

``காதல், சோப்கட்டிபோல் தேய்ந்து தேய்ந்து இறுதியில் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும்’’ - அப்பா பலகையைத் திருப்பி வெள்ளை ராஜாவுக்காக விளையாட ஆரம்பித்தார். விளையாட்டு முடிந்த பிறகு ``இன்று யார் வென்றார்கள்?’’ என்று கேட்டேன்.

``நான்தான்’’ என்றார்.

``யார் தோற்றது?’’ என்றேன்.

அதற்கும் பதில் ``நான்தான்’’ என்று சொன்னார், கிட்டத்தட்ட அவர் வாழ்க்கையைப்போல.

அதுதான் அவர் கடைசியாக விளையாடிய சதுரங்க ஆட்டம் என நினைக்கிறேன். அவர் தன் உடம்புக்குள் மறைந்துகொண்டிருந்தார். சில நாள்களில் வேலைக்குப் போக மறந்தார். ஏதாவது கேட்டால் பதில் சொல்லாமல் வெறித்தார். அவர் பார்வை என்னைத் தாண்டிப்போனது.

ஒருநாள் ``அப்பா, உங்கள் பெயர் என்ன?’’ என்று கேட்டேன்.

அவர் திடுக்கிட்டு, ஏழாம் வாய்பாட்டைத் தலைகீழாகச் சொல்லச் சொன்னதுபோல் பார்த்தார். பிறகு, கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையைத் தூக்கி நேராகப் பிடித்து, பெயரைப் படித்து எனக்குச் சொன்னார். எனக்கு திக்கென்றது.

ன்று என்னை வந்து சந்திப்பதாகச் சொன்ன முகநூல் நண்பன், படத்தில் அழகாகவே இருந்தான். அழகுக்கு நான் எப்போதும் முதல் இடம் தந்தது கிடையாது. என்னை வசீகரிக்கக்கூடியவிதமாகத் தொலைபேசியில் பேசினான். படத்தில் எத்தனையாவதாக நான் நிற்கிறேன் என்று என்னைப் பலதடவை கெஞ்சிக் கேட்டான். நான் சொல்லவில்லை. ஆனால், யூகித்துவிட்டதாகச் சொன்னான். ``எப்படி?’’ என்று கேட்டேன். என் குரலுக்கும் உருவத்துக்கும் உள்ள ஒற்றுமை என்றான். ``இது பத்து வருடத்துக்கு முன்பு எடுத்த படம். என் முகம் இப்போது எப்படி இருக்கும் என ஊகிக்க முடியுமா?’’ என்று கேட்டேன்.

``முடியும்’’ என்றான்.

என்னைச் சந்திக்க வரப்போவதாகப் பலமுறை பயமுறுத்தினான். நான் நாள்களைக் கடத்தினேன். ஆனால், தொடர்ந்து தொந்தரவு செய்வதை அவன் நிறுத்தவில்லை. ஒரு வாரத்துக்கு முன்பு தொலைபேசியில் ஒரு தகவல் விட்டிருந்தான். தொலைபேசி, `11-ஐ அழுத்தவும்’ என்றது. அழுத்தினேன். என்னை வந்து பார்க்க வேண்டுமாம். தேதி கேட்டிருந்தான். தன்னை ஒரு வருமானவரி வாடிக்கையாளர்போல் பாவனை செய்யச் சொன்னான். தொலைபேசி, பதில் சொல்வதென்றால் 8-ஐ அழுத்தச் சொன்னது. சேமிப்பதற்கு 9-ஐ அழுத்தச் சொன்னது. அழிப்பதற்கு 7-ஐ அழுத்தச் சொன்னது. நான் 7-ஐ அழுத்தினேன்.

செர்ரி மரம் - சிறுகதை

இரண்டு நாள் கழித்து, அவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. `உன் வீட்டுச் செர்ரி மரம் அழகாகப் பூத்திருக்கிறது.’ எனக்குத் திகைப்பாக இருந்தது. `எப்படித் தெரியும்?’ `கூகுளில் பார்த்தேன்.’ இயற்கை விரும்பியா இவன்? நல்லவனாகத்தான் இருப்பான். என் முகத்தைப் பார்த்தது கிடையாது. வருமானவரிக் கணக்குகள் செய்பவள் என்று மட்டுமே அறிவான். இவனை நம்பலாமா? `மார்ச் 27-ம் தேதி சந்திக்க, சம்மதம்’ என்று சொன்னேன். தேதியின் முக்கியத்துவம் பற்றி அவனுக்குப் புரிந்திருக்குமோ தெரியாது.

இன்றுதான் அவன் வரும் நாள்.

காலை 10.30-க்கு வருவதாகச் சொல்லியிருந்தான். அன்று முழு நாளும், வேறு வருமானவரி வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள். அப்படி ஏற்பாடு செய்திருந்தேன். மேசையிலே வருமானவரிக் கணக்குக் கோப்புகள் அடுக்கி இருந்தன. அவற்றை நேராக்கினேன். கதிரையில் காயப்போட்ட நீண்ட காலுறைகளை மறைத்தேன். என்னைப் பற்றிய எல்லாத் தகவல்களையும், ஏறக்குறைய அவனுக்குச் சொல்லியிருந்தேன். ஒன்றிரண்டு தவறியிருக்கலாம். அதுதானே சுவாரஸ்யம். நான் தயாராக இருந்தேன். அலுவலக ஆடைதான். ஒருவித அலங்காரமும் கிடையாது. கண் மை பூசி, கொஞ்சம் அழுத்தமாக உதட்டுச் சாயம். அவனுக்காக நான் அலங்கரித்தேன் என்று அவன் உணரவே கூடாது.

சரியாக மணி 10.28. கார் ஒன்று வந்து நிற்கும் ஓசை கேட்டது. நான் யன்னல் திரையை மெள்ள நீக்கிப் பார்த்தேன். கார்க் கதவைச் சாத்தினான். காரின் உள் விளக்கு எரிந்தது. அது அணையும் வரை நின்றான். மேலே பார்த்தான். என் மனம் திக்கென அடிக்கத் தொடங்கியது. பனிக்காலம் முடிந்து, சுற்றி உள்ள மரங்களில் முதல் இலைகள் துளிர்த்திருந்தன. செர்ரி மரம் மட்டும் வெளிர் ஊதாப் பூக்களால் நிறைந்திருந்தது. ஓர் இலைகூட இல்லை. மார்ச்-27, செர்ரி மரங்களுக்கு உச்சமான தேதி. மரத்தை மறைத்து பூக்கள். இனிமேல்தான் இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும். விதிவிலக்கு மரம். அவன் மேலே அண்ணாந்து ஒரு முழு நிமிட நேரம் பூக்களை அனுபவித்தவாறே நின்றான்.

டக்டக் என்று படி ஏறும் சத்தம். சில விநாடிகள் கழித்து அழைப்பு மணி ஒலித்தது. நான் அவசரமாக மறுபடியும் என் ஆடையைச் சரிசெய்தேன். கால் இடறாமல் இருக்க, சுவாசக்குழாயை நேராக்கினேன். கதவை நோக்கி நகர்ந்தேன். சில்லு வைத்த பிராணவாயு சிலிண்டரும், விசுவாசமான நாய்க்குட்டிபோல என் பின்னால் வந்தது. ஒருமுறை ஆசுவாசப்படுத்தி, நின்று நிதானித்து அடுத்த ஒரு நிமிடத்தில் நடக்கப்போவதை நினைத்துப் பார்த்தேன். இடதுகையை கதவுக் கைப்பிடியில் வைத்துத் திறந்தேன்.

- சிறுகதை: அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ஸ்யாம்