மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 28

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர், ஓவியங்கள்: ஹாசிப்கான்

``நமசிவாயம் வாழ்க... நாதன் தாள் வாழ்க... சார், பதினோர் ரூபாவ வெத்தலபாக்குல வெச்சு மூணு சுத்து சுத்தி, தலமாட்டுல வை சார். இமைப்பொழுதும்... பாடி சரியுது பாரு, வரட்டிய அண்டக் குடு. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா... ஊதுவத்திய சாணியில குத்திட்டு, கையெடுத்துக் கும்புடு நைனா. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க...’’ `டாடி மம்மி வீட்டில் இல்லை... தடை போட யாருமில்லை... விளையாடுவோமா உள்ளே வில்லாளா...’ என்று, கொள்ளி போடுபவருக்கு உறுதுணையாக இருந்த நண்பருக்கு போன் ரிங்டோன் அடித்தது. பதறிப்போய் போனை அணைத்தார்.

``கோகழி ஆண்ட குருமணி தன் தாள்... வாக்கரிசி போடுறவங்கலாம் போடலாம் சார்... தட்சணைய எடுத்து கையில வெச்சுக்க சார். கோகழி ஆண்ட... டேய் பையா, பானையில தண்ணி வைடா!” மாசாணத்தின் கடைசிப் பையன் எரிமேடையின் அருகே இருக்கும் குழாயில் சிறிய பானை ஒன்றில் தண்ணீரை நிரப்பிக் கொண்டுவந்து வைத்தான்.

``முந்தித் தவம் கிடந்தது, முந்நூறு நாள் சுமந்து, அல்லும்பகலும் சிவனை ஆதரித்து... கொள்ளி போடுறது யாருப்பா?” ஓர் இளைஞன் முன்னால் வந்தான். ``மொட்டய போட்டுட்டு... சீக்கிரம் வா நைனா. முந்தி தவம் கிடந்தது முந்நூறு நாள் சுமந்து...’’ என்று பாடியபடி, பச்சரிசியோடு வந்து விழும் சில்லறைகளையும் பார்த்துக்கொண்டார் மாசாணம்.

நான்காம் சுவர் - 28

சிறிய மண்பானையில் தண்ணீரோடு குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தான் மகராஜன். கொள்ளி போடுபவன் வந்து உட்கார்ந்தான். தனது பாக்கெட்டிலிருந்து சவரக்கத்தியை எடுத்தான். பானைத் தண்ணீரில் உள்ளேவிட்டு கட்டைவிரலால் தேய்த்துக் கழுவினான். தனது லுங்கியால் சவரக்கத்தியைத் துடைத்துக் கொண்டான். பிறகு, பிளேடை எடுத்து மாட்டி உள்ளங்கையில் சாணை தீட்டுவதுபோல் தீட்டினான். சவரக்கத்தி பதத்துக்கு வந்ததாக உணர்ந்தான். பானைத் தண்ணீரில் கைவிட்டு தண்ணீரை அள்ளி, கொள்ளி போடுபவனின் உச்சந்தலையில் விட்டுப் பரபரவெனத் தேய்த்தான். தண்ணீர் நன்கு ஊறியதும் மழித்தான். கொள்ளி போடுபவனின் கண்களிலிருந்து தாயை இழந்த துக்கம் அடைத்து அணை உடைந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. மழித்துக்கொண்டிருந்தபோது உதிர்ந்துகொண்டிருந்த மயிர்களோடு மயிர்களாக, கண்ணீரும் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக்கொண்டு உதிர்ந்துகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் குலுங்கி அழ ஆரம்பித்தான்.

``வாத்யாரே தலைய ஆட்டாம அழு வாத்யாரே... பிளேடு பட்றப்போது...” என்றதும், அவன் குலுங்காமல் அழுதுகொண்டான். மொத்தமும் மழித்த பிறகு ஒரு தடவை தலையைத் திருப்பி, குனியவைத்துப் பார்த்துக்கொண்டான்.

உடன் வந்த நண்பன் ``தல, பின்னாடி பிசிரு இருக்குது பாரு... நல்லா பிளேடு போடு” என்றான்.

அவனை ஏறிட்டு மகராஜன் பார்த்தான். கெட்ட போதையில் இருந்தான் அவன். ஏற்கெனவே மழித்து ஒட்டிக்கொண்டிருந்த மயிரை மழிப்பதுபோல் பாவனை செய்ததும் ``சூப்பர் தல!” என்றான்.
``அந்தக் குழாயில குளிச்சுட்டுப் போ வாத்யாரே” என்று கையை உதறிக்கொண்டு எழுந்தான். சாமக்கொளத்தை சேகண்டி ஊதிக்கொண்டிருந்தார்.

``முன்னை இட்ட தீ முப்புரத்திலே... பின்னை இட்ட தீ... மூணு சுத்து சுத்தணும். பின்னை இட்ட தீ...’’ சுத்தி வந்தவனின் பானையை அரிவாளால் ஒரு கொத்து கொத்தினார். அந்தப் பானையிலிருந்து பொத்துக்கொண்டு வந்த நீர், அவன் அம்மையைச் சுற்றி நீர்க்கோலம் போட்டுக்கொண்டிருந்தது. ``பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே...’’ இப்போது ரெண்டாவது அரிவாள் கொத்து. ``பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே...’’ இப்போது மூணாவது அரிவாள் கொத்து. நீரின் சுனை வற்றி கொஞ்சமாய்க் கொப்புளித்துக்கொண்டிருந்தது. ``அன்னை இட்ட தீ அடி வயிற்றினிலே... பானைய பின்னாடி போடு” பானை விழுந்து சுக்கு நூறாகிறது. ``அன்னை இட்ட தீ... கடைசியா மொகம் பார்க்கிறவங்கெல்லாம் பார்த்துக்கலாம்ப்பா” என்று மாசாணம் சொன்னதுமே, கொள்ளி போடும் இளைஞன் ``அம்மா...’’ என்று அழத் தொடங்கினான்.

இந்த வசனத்துக்குப் பிறகு, அம்மாவின் முகம் என்பது புகைப்படமாகத்தானே இருக்கும் என்பதால்தான், வராத அழுகைகள்கூட வந்துவிடுகின்றன. ``அன்னை இட்ட தீ... கற்பூரத்த கொளுத்து நைனா” என்றபடி, வறட்டியைக் கொண்டு முகத்தை மூடினார். அம்மையின் நெஞ்சாங்கூட்டில் இருந்த கற்பூரத்தைக் கொளுத்தினான். ``அன்னை இட்ட தீ அடிவயிற்றினிலே... யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.’’

ஜோதியில் கலந்த அம்மையை விட்டு எல்லோரும் வெளியே சென்றார்கள். பச்சரிசியிலிருந்து காசைத் தனியாகப் பிரித்து எடுத்துக்கொண்டிருந்தான் மாசாணத்தின் பிள்ளை. நெற்றிக்காசானாலும் நெல்மணிக் காசானாலும் பணத்துக்கு மட்டும்தான் இந்த உலகத்தில் மரணம் என்பதே கிடையாது.

நான்காம் சுவர் - 28

விடியற்காலையில் சுடுகாடு, நந்தவனம்போலவே காட்சியளிக்கும். அப்படி நந்தவனத்தைப்போல உருவாக்கியவர், வாத்தியார் சாண்டோ ராஜ். பேட்டைக்கு வாத்தியார். சதுர் சூரிய சார்பட்டாவின் பரம்பரை. செடிகுச்சி விளையாடுவதில் நிஜமாகவே சாண்டோ சார்பட்டாதான். விளையாட்டைக் கற்றுக்கொள்ளும் இடமாக, சுடுகாடே எங்களுக்கு மைதானமாக இருந்தது. நானும் பக்ருவும் பல்டி அடிக்கக் கற்றுக்கொண்டால், சினிமாவில் எப்படியாவது ஸ்டன்ட் மேனாகச் சேர்ந்துகொள்ளலாம் என்பது எங்களது எதிர்கால வைப்புத் திட்டம். ஆனால் முத்துக்கிருஷ்ணன், பாக்ஸிங் என்பதில் முனைப்பாக இருந்தான். நேஷனல் ஒன்று ஜெயித்தால் கவர்மென்ட் அப்பாயின்மென்ட் வாங்கி செட்டிலாகிவிடலாம் என்றே லட்சியம்கொண்டான். சாண்டோவுக்கு எல்லா விளையாட்டுகளும் அத்துப்படி. ஜூடோ, துக்கடோ, அக்கிடோ, கராத்தே, பானா சுற்றுவது, செடிகுச்சி விளையாடுவது, தட்டுவரிசை, படைவீச்சு என்று சொல்லிக்கொண்டே போகும்  அளவுக்கு விளையாட்டுப் பல்கலைக்கழக வாத்தியார் சாண்டோ.

சுடுகாட்டுக்குள் நுழைந்தோம். ஈர வெள்ளை வேட்டியில் ஒருவர், கையில் இருக்கும் அஸ்தியை கடலில் கரைப்பதற்கு எடுத்துச் சென்றார். கொஞ்சம் தாமதமாகச் சென்றோம். சிலர் பானா சுற்றிக்கொண்டிருந்தார்கள். வாத்தியாரைப் பார்த்து சலாம் வைத்துவிட்டு உடற்பயிற்சியில் இறங்கினோம்.

ஒருவர் செடிகுச்சியில் வீடு கட்டிக் கொண்டிருந்தார். அவர் அருகே சென்ற வாத்தியார், குச்சியை வாங்கினார். செடிகுச்சி என்பது, இரண்டு கொம்புகளை லாகவமாகச் சுழற்றிச் சண்டைபோடுவது. உதாரணமாக, ஒரு படையையே செடிகுச்சியால் ஓடவிடலாம். அதைத்தான் `படை வீச்சு’ என்பார்கள். அதிலும் வாத்தியார் செடிகுச்சி சுற்றுவதைப் பார்க்க, கண் கோடி வேண்டும். ஒரு நாட்டிய பாவனையில் காலை முன்னும் பின்னுமாக வரிசை வைத்து வாத்தியார் சுழற்றுகிறபோது காற்றிலிருந்து வரும் இசை நாதமாகக் கேட்கும்.

எங்கள் பயிற்சிகளுக்கு மத்தியில் ஒரு கல்லறை மேல் மாசாணமும் மகராஜனும் காலைக்கடனாக ஒரு போத்தலை மேலும் கீழும் தட்டினார்கள். வாத்தியார் பார்த்தார் ``யப்பா மகராசா... காலையில இப்படிக் குடிக்கிறதுக்கு... வந்து பானா சுத்தலாம்ல” வாத்தியார் கேட்டதற்கு ``நீ வேற வாத்தியாரே... ரெண்டு நாளா வியாபாரமே இல்ல.. பானா சுத்துனா சோறு வந்துருமா?” சரக்கை லோட்டாவில் ஊற்றிக் கொடுத்தான் மாசாணம்.

``அடப்பாவிங்களா நா வேணா வந்து படுத்துடட்டா” என்றார் வாத்தியார்.

``நீ கொஞ்ச நாள் உயிரோட இரு வாத்தியாரே... எங்களமாரி இல்லாம, உன்னால நல்லா இருக்குதுங்கோ புள்ளைங்க.” மாசாணம் லோட்டாவைக் கையில் எடுத்து ஒரு நான்கு சொட்டை, சுடுகாட்டுக்குத் தெளித்தான்.

``குடிக்கிறதுதான் குடிக்கிறீங்க... வவுத்துக்கு ஏதாவது சாப்புடுங்க புரியுதா?” இந்த உலகத்தின் எல்லா நல்லவற்றுக்கும் சாண்டோ வாத்தியாராக இருந்தார்.

வாத்தியாருக்குக் கல்யாணமாகவில்லை. நான் விளையாட ஆரம்பிக்கும்போதே, அவர் 50-ஐத் தாண்டியிருப்பார். பாறைகளை அடுக்கி வைத்தது போன்ற உடல்வாகு வாத்தியாருக்கு இப்போதும் உண்டு. வெட்டி வைத்த கேக்கைப்போல வயிறு இருப்பதே தெரியாது. ஆளும் தோளுமாக பலம்கொண்ட காட்டுயானையைப் போன்றே பேட்டையில் வலம்வருவார்.

இப்போதிருக்கும் நிறைய விளையாட்டு வீரர்களை அவரே கண்டடைந்தார். திரையில் பல்டி அடிக்கும் அநேகர், அவருடைய சிஷ்யகோடிகள்தாம். ``நா கல்யாணம் பண்ணலைனு என் அம்மாவுக்கு ரொம்ப வருத்தம்டா. என்ன பண்றது, வெளையாட்டுதான் உசுருன்னு வாழ்ந்துட்டேன். எனக்குன்னு யாருமே இல்லைன்னு சொல்லிச் சொல்லி செத்துப்போச்சு. ஆனா, சிஷ்யபுள்ளைங்களா இத்தன பேரு இருக்கீங்களே, அது போதாதா!’’ என்று ஒருதடவை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார் வாத்தியார்.

``பாக்ஸிங்ல டிஸ்ட்ரிக் கோல்டு அடிச்சன்டா... `வடசென்னையில குப்பத்துல இருக்கிற இவன்லாம் விளையாட வந்துட்டா... எவ்ளோ பெரிய அசிங்கம்’னு... என்னை வேணும்னே காலிபண்ணானுங்கடா... விளையாடத் தெரிஞ்ச எனக்கு, இவனுங்களோட விளையாட்ட புரிஞ்சுக்கத் தெர்ல... அதான் என்ன மாதிரி யாரும் ஆவக் கூடாதுன்னு எல்லாரையும் விளையாட்டுக்காரனா மாத்துறேன். எத்தன பேர அவன் ஒதுக்க முடியும்? இன்னிக்குப் பார்த்தல்ல, என் ரூபத்துல என் புள்ளைங்க விளையாடுறத” முகத்தில் அத்தனை பூரிப்புடன் இன்னொரு சமயம் வாத்தியார் சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

நான்காம் சுவர் - 28

அப்போதுதான் அந்த இனிய செய்தி, வாத்தியாருக்கு வந்தது. முத்துக்கிருஷ்ணன் நேஷனல் அடித்ததால், ரயில்வே அப்பாயின்மென்ட் கிடைத்தது, பேட்டைக்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது. அதுவரை யாரும் வாத்தியாரைப் பெரிதாக மதிக்கவில்லைதான். ``பல்டி அடிக்கிறேன்... குஸ்தி கத்துத்தர்றேன்னு... புள்ளைங்கள வேலைக்குப் போகவிடாம பண்றதே இந்த வாத்தியாருக்குப் பொழப்பாப்போச்சு” என்று பேட்டைப் பெருசுகள் பேசியதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், விளையாடித்தான் முத்துக்கிருஷ்ணன் மெரிட்டில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். அதற்காக வழக்கம்போல நடந்த கொண்டாட்டத்தில் எங்கள் எல்லோருக்குமாக சாண்டோ வாத்தியாரே பிரியாணி சமைத்தார். அவர் நல்ல சமையல் கலைஞர் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். மாட்டுக்கறி பிரியாணியைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள் வாத்தியாரின் சிஷ்யர்கள். ``நல்லா கறிய மென்னு சாப்புடுடா... அப்பத்தான் பன்ச் பண்ணும்போது கை நிக்கும்” என்று குறிப்பாக என்னைப் பார்த்தே சொன்னார்.

சாப்பிட்டு முடித்து வட்டமாய் உட்கார்ந்துகொண்டோம். ``இன்னிக்கு முத்து அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கான். நாளைக்கு நீங்க எல்லாரும் வாங்கணும். அதுக்கு, நிறைய பிராக்டீஸ் பண்ணணும்டா. உழைச்சு உன்னைத் தகுதி பண்ணிக்காம, உனக்கு எல்லாம் கிடைக்கணும்னு எப்பவும் நினைக்கக் கூடாது. நாம விளையாடுறதை யாராலும் தடுக்க முடியாதுன்னு இருக்கணும். வடசென்னைன்னாலே ரெளடிப்பசங்க, திருட்டுப்பசங்கதானா! கில்லி மாதிரி வாழணும். சொற்ப சந்தோஷத்துக்கு எடம் கொடுக்கக் கூடாது. புரியுதா” வாத்தியார் பேசப் பேச, எனக்குள்ளும் `ஏதாவது செய்ய வேண்டும்’ எனத் தோன்றியது. அதன் நிமித்தம்தான் இப்போது எழுத்தாளனாக இருக்கிறேன்போல. இப்போது வாத்தியார் இருந்தார் என்றால், என்னை உச்சிமோந்து கொண்டாடியிருப்பார்.

ஒரு ஜனத்திரளை எந்தப் பக்கமும் திருப்பாமல் நல்வழிப்படுத்திய ஆயன், எங்கள் வாத்தியார். வெறும் பாடத்தைச் சொல்லிக்கொடுப்பவரை நான் `வாத்தியார்’ என்று சொல்ல மாட்டேன். வாழ்வையும் அதன் தரிசனத்தையும் எவர் சொல்லிக்கொடுக்கிறாரோ அவர்தான் `வாத்தியார்.’ பிரபஞ்சன் சொல்வதைப்போல, தேவையான நேரம் அளவாகப் பெய்த மழையாகவே அவர் இருந்தார்.

``என் சிஷ்யனுங்கதான்டா என் புள்ளைங்க!’’ என்று சொன்னவரின் சாவு, ஒரு கல்யாணச் சாவைப்போல்தான் நடந்தது. பேரன், பேத்தி எடுத்து ஆண்டு அனுபவித்துப் போகிற கட்டையை, குளிரக் குளிரக் கொண்டாடி எடுத்துப் போடுவதற்குப் பெயர்தான் `கல்யாணச் சாவு.’

சிங்காரவேலர் மனமகிழ் மன்றத்தில் எங்கள் வாத்தியார் ஜம்மென உட்காரவைக்கப் பட்டிருந்தார். கழுத்தில் பாக்ஸிங் கிளவுஸ் மாட்டப்பட்டிருந்தது. ஊரில் இருக்கும் அனைத்து வித்தைக்காரர்களும் வாத்தியாருக்கு மரியாதை செய்தார்கள். மாசாணம், சாமக் கொளத்தை ஊதினான். பேண்டு வாத்தியங்கள், தவில் செட்டப்புகள், கானா ஏற்பாடுகள், பேட்டை வாத்தியாரைக் கொஞ்சிக்கொண்டிருந்தன. ஊர்வலம் புறப்பட்டது.

வாத்தியாருக்கு முன்னால் அவரின் சிஷ்யர்கள் பத்துப் பத்துப் பேர் குழுவாகப் பிரிந்து, அதில் ஒரு குழு பானா சுற்றிக்கொண்டே போனார்கள். இன்னொரு குழு, பாக்ஸிங் போட்டபடி நடந்தது. செடிகுச்சி சுற்றிக்கொண்டு லாகவமாக ஆடிக்கொண்டு வந்தார்கள். ஜூடோ, அக்கிடோ போட்டபடி போனார்கள். அடுத்த வரிசையில் பல்டியும் சமர்சால்ட்டும் அடித்துக்கொண்டே சுடுகாடு வரை வந்தார்கள். இப்படியான விளையாட்டுகளை ரசித்துக்கொண்டே ஜபர்தஸ்தாக வாத்தியார் சிஷ்யர்களோடு சிங்காரமாக வந்துகொண்டிருந்தார்.

``வாத்தியாரு பிரம்மச்சாரி... கொள்ளி யாருப்பா போடுறது?” மாசாணம் கேட்டபோது, நூறு பேராவது ``நா வாத்தியாரோட புள்ள. நா போடுறண்ணா...” என்று முண்டியடித்துக்கொண்டு வந்தார்கள். மாசாணம் கலங்கி நின்றான். மகராஜன் முன்னால் முத்துக்கிருஷ்ணன் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தான். முதல் சிரைப்பில் முத்துவின் கண்ணீர் முடிகளோடு உதிர்ந்துகொண்டிருந்தது. அவன் குலுங்கி ஒருகட்டத்தில் அழுதான். மகராஜன் அவன் அழுது முடிக்கும் வரை காத்திருந்தான்.

``நமசிவாயம் வாழ்க... நாதன் தாள் வாழ்க.. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...” மாசாணம் பாடிக்கொண்டிருந்தான். ``கடைசியா மொகம் பார்க்கிறவங்கள்லாம் பார்த்துக்கங்கப்பா...” என்று மாசாணம் சொல்லிவிட்டு, அவரே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். வெடித்து அழுத சிஷ்யர்கள் எல்லோரும் ஒரு தகப்பனை, ஓர் ஆயனை, ஒரு நண்பனை இழந்ததாய்த் தேம்பிக்கொண்டிருந்தார்கள். நானும் கடைசியாக வாத்தியாரின் முகத்தைப் பார்த்தேன். ஒன்றுதான் புரிந்தது. தனக்கு மட்டுமே வாழ்கிற ஒருவன் மரித்த பிறகு, அவனது முகம் கறுத்துப்போகிறது. ஆனால், வாத்தியாரின் முகம் சர்வலட்சணம் பொருந்தி, பிரகாசமாய் மின்னியது.

- மனிதர்கள் வருவார்கள்...