
சுற்றுச்சூழல் கதை: ஆயிரம் கைகள் ஆயிரம் கால்கள்!

காயத்ரி வாயாடிப் பெண். எதைப் பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் கேள்விகளால் துளைத்துவிடுவாள். அவளைக் கண்டாலே கேள்விகளுக்குப் பயந்து ஓடி ஒளிபவர்களும் உண்டு. அவள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதே கடினம்.
‘பத்து வயதேயான இந்தச் சிறுமியின் மூளையில் எப்படித்தான் இத்தனை கேள்விகள் உதிக்கிறதோ?’ என்று ஆசிரியர்கள் வியப்பார்கள். அவள் கேள்விகளுக்கான விடையைத் தேடித் தேடிப் பாடம் எடுப்பார்கள்.
காயத்ரி மனிதர்களிடம் மட்டும் கேள்வி கேட்பதில்லை. பறவைகளிடம், விலங்குகளிடம், அவ்வளவு ஏன்? பூச்சிகளைப் பார்த்தாலும் கேட்பாள்.
அப்படித்தான் அன்றும் நடந்தது. அன்றைய கேள்வி ஓடிக்கொண்டிருந்த ஓடையிடம். அது முண்டந்துறை மலையடிவாரத்தில் வீட்டுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்த ஓடை.

“ஏய் ஓடையே... நீ எங்கிருந்து வர்றே? ஏன் எப்பவும் சலசலன்னு சத்தம் போட்டுட்டே இருக்க?”- காயத்ரி
“அதோ தெரியுது பாரு மலை உச்சி. அங்கே அருவியா ஆரம்பிச்சு இங்கே ஓடையா ஓடறேன். முன்னாடி சந்தோசமா, சிரிச்சுட்டே இருந்தேன். இப்போ எந்நேரமும் வலிகளோடு வேதனையில் அழுதுட்டிருக்கேன்”- ஓடை

“நீ எதுக்கு அழணும்?’’ - காயத்ரி
“இங்கிருந்து ஆற்றுக்குப் போவேன். அங்கிருந்து கிளை ஆறுகளாகப் பிரிஞ்சு கொஞ்ச கொஞ்சமா கடலுக்குள் போயி.... ஐயோ...!”- ஓடை
“என்னாச்சு? ஏன் கத்தறே?”- காயத்ரி
“என் மேலே குப்பையைக் கொட்டுறாங்க. அந்தக் குப்பைகளின் துர்நாற்றம் தாங்கமுடியலே”- ஓடை
காயத்ரி சுற்றும் முற்றும் பார்த்தாள். அவர்கள் வாழும் ஊரில் யாரும் ஆற்றில் குப்பையைக் கொட்டுவதில்லை.
“யார் உன் மேலே குப்பையைக் கொட்டுறாங்க?”- காயத்ரி
“அது ரொம்ப தூரத்துல... 100 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம் கொட்டுறாங்க. அங்கேயும் நான்தானே இருக்கேன். ஒரே நேரத்துல என் உடல் உறுப்புகள் பல இடங்களில் பரவியிருக்கும். ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு கொடுமைகள் நடக்குது தெரியுமா?”- ஓடை
“என்ன சொல்றே? எனக்குப் புரியல!”- காயத்ரி.
“நீ என்னை ஓடைன்னு கூப்பிடறே. என் நிஜமான பெயர், ‘தண்ணீர்’. எனக்கு ஆயிரக்கணக்கான கை கால்கள் இருக்கு. எத்தனையோ தலைகள் இருக்கு. அந்தத் தலைகளை நீங்க அருவின்னு சொல்றீங்க. அது மலைகளில் இருக்கு. மலையில் என் மூளை இருக்கு. அந்த மூளை சொல்தை வெச்சு கடல் வரை இயங்கறேன்” என்றது ஓடை.

“அப்போ, உன் உயிரே மலைகளில்தான் இருக்கா?”- காயத்ரி
“இல்லே... என் உயிர் எல்லாப் பக்கமும் இருக்கு. நீ உட்கார்ந்திருக்கும் இந்த மண்ணுல இருக்கு. இந்த ஓடையில இருக்கு, இது போய் கலக்கும் ஆற்றில், அது போய் சேரும் கடலில், காற்றில், மேகத்தில் என எல்லாத்திலும் தண்ணீரின் உயிர் இருக்கு!” என்றது ஓடை என்கிற அந்தத் தண்ணீர்.
“ஓ... அதனாலதான் உனக்கு எங்கயோ கொட்டுன குப்பைக்கு இங்கே வாடை வீசுதா?”- காயத்ரி
“அது மட்டுமா? எத்தனையோ இடங்களில் நான் வாழவேண்டிய இடங்களில் தோண்டித் தோண்டி மண்ணை அள்ளுறாங்க. என் மூளையான மலையைக் குடைஞ்சு சுரங்கம் அமைக்கறாங்க. அழுக்கு, வேதிமம், விஷம் எல்லாத்தையும் கொண்டுவந்து கொட்டுறாங்க. இதெல்லாம் உனக்கு நடந்தா என்ன பண்ணுவே?”- தண்ணீர் கேட்டது.

“கதறி அழுவேன்” என வருத்தத்துடன் சொன்னாள் காயத்ரி.
“நானும் அப்படித்தான் அழறேன். நான் பொங்கி அழுதாலும் வெள்ளம், சுனாமின்னு என் மேலேயே குற்றம் சொல்லிடறாங்க!’’ என்றது தண்ணீர்.
காயத்ரி கண்ணீர் சிந்தத் தொடங்கிவிட்டாள். “நீரே... உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்தறோமா? அப்படியும் எங்களின் தாகம் தீர்க்கிறே. எங்க வாழ்க்கைக்குத் தேவையான உதவிகளைச் செய்யறியே...’’
“எனக்கு மனுசங்க மாதிரி சுரண்டத் தெரியாதே. உதவி செய்ய மட்டும்தானே தெரியும். இப்போதான் நீங்க இப்படிப் பண்றீங்க. முன்னாடி வாழ்ந்தவங்க என்னை எவ்வளோ மதிச்சாங்க தெரியுமா? நான் ஓடியாடி விளையாடப் போதுமான இடத்தைக் கொடுத்தாங்க. நீங்களும் அப்படியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!” என்று ஏங்கி அழுதது நீர்.
“தயவுசெஞ்சு அழாதே. ஒருநாள்கூட நீ இல்லாம எங்களால் இருக்க முடியாது. நீ அழாம இருக்க, உனக்கு வலிக்காம இருக்க, நான் என்ன செய்யணும்?’’ என்று கேட்டாள் காயத்ரி.
“உன்னை மாதிரி குழந்தைகளுக்காவது என் கஷ்டம் புரியுதே. தயவுசெஞ்சு என் மேலே குப்பைகளையும் விஷங்களையும் கொட்டாம இருங்க போதும். என்னையும் பாதுகாத்துட்டு உங்களுக்கும் உதவுவேன்’’ என்றது தண்ணீர்.
“இனி என்னை மாதிரி குழந்தைகள் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டோம். நீ ஆசைப்பட்ட மாதிரி உன்னை நல்லா பார்த்துப்போம். இதுக்கு நான் பொறுப்பு” என்று உறுதியளித்தாள் காயத்ரி.
இப்போது, உற்சாகமாகச் சத்தமிட்டவாறு சென்றது அந்த ஓடை!
-க.சுபகுணம்
ஓவியம்: ரமணன்