மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 29

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர், ஓவியங்கள்: ஹாசிப்கான்

‘வாழும்போதே தேயாமல் இறந்துவிட வேண்டும்’ என கர்ட் கோபேன் சொல்வார். ஒரு தடவை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு விழா எடுத்தபோது ஜெயகாந்தனும் இப்படித்தான் சொன்னார். ``ஒருவேளை எழுதிக்கொண்டிருந்தபோதே நானும் இறந்திருந்தால்... எனக்கும் இந்த மாதிரியான விழாக்கள், கொண்டாட்டங்கள் நடந்திருக்கும்போல. கடவுளாக இருந்தால்கூட வெகுநேரம் காட்சி தந்தால் போரடித்துவிடும்” என்றார்.

உண்மைதான். கொடுத்துச் சிவந்த கரங்கள் என்று சிலர் இங்கே வாழ்ந்துகொண்டி ருக்கிறார்கள். அவர்களின் கதாபாத்திரங்கள் அப்படித்தான். ``சக்காத்து கொடுக்கிறதுல நம்ம யூசூப் பாய் மாதிரி யாருடே வருவா... எத்தன கொமருக்கு நிக்காஹ் பண்ணியிருக்காரு!” என்று யூசூப் பாயிடம் சொல்லும்போது ``நம்ம கையில என்னடே இருக்கு... அல்லா கொடுக்குறான்... நாம கருவிதான்டே!” என்று சிரித்தபடி கடந்துவிடுவார். நொடிந்துபோகும்போதும் கொடுத்துச் சிவந்தவர். கொடுப்பதை நிறுத்தும்போது, இந்த மனிதர்கள் மூச்சு விடுவதையும் நிறுத்திவிடுகிறார்கள்.

நான்காம் சுவர் - 29

பேட்டையில் ஒருகாலத்தில் எல்லா போஸ்டர்களிலும் `கொடைவள்ளல்’ சேகர் என்ற பெயரைப் போடாமல் எந்த நிகழ்வும் நடந்ததில்லை. கூழ் வார்த்தலாகட்டும், ஆயிரம் பேருக்கான அன்னதானமாகட்டும், பொதுநிகழ்ச்சியாகட்டும், ஏன்... மஞ்சள் நீராட்டுவிழா, கல்யாணச் சாவு எல்லாவற்றிலும் நமது கொடைவள்ளல் சேகரின் கைங்கரியம் இருக்கும். பளபளக்கும் பஜார் பிட் பேன்ட்டில் சில்க் சட்டையை குர்தா மாதிரி தைத்துப் போட்டிருப்பார். சில்க் பாக்கெட்டில் ஹீரோ பேனா குத்தியிருப்பார். வலதுகையில் குறைந்தது ஐந்து பவுனுக்கு செயின் போட்டிருப்பார். அவர் போட்டிருப்பது சில்க் சட்டை என்பதால், பாக்கெட்டில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகள் பளிச்செனத் தெரியும். பழைய என்பீல்டில் டுபு டுபு டுபுவென அவர் வருவதைப் பார்க்க, நிறைய வளையல் கரங்கள் காத்திருக்கும்.

கொடைவள்ளல், சூதாட்ட கிளப் நடத்தி வந்தார். மொட்டைமாடி முழுக்க ஓலைக்குடில் மாதிரி கட்டியிருக்கும் மனமகிழ் மன்றம் அது. கொடைவள்ளலுக்குக் கல்யாணம் ஆகாததால், வருகிற வருமானத்தில் பெரும்பகுதியை வாரிக் கொடுத்துவிடுவார். ஆகவே, பேட்டையே சேர்ந்து அவருக்கு வழங்கிய நாமம்தான் `கொடைவள்ளல்’ சேகர்.

என் வீட்டுக்குத் தெரியாமல் ஒரு நாள் கிளப்புக்குப் போனோம். வெளியேதான் ஓலைக்குடில். உள்ளே சொர்க்கம்போன்று இருந்தது; விதவிதமான விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்தது. விளக்கொளியின் கீற்றுகள் முழுக்க சிகரெட் புகை ஓர் ஓவியம்போல தானாகவே வரைந்து பிறகு மறைந்துபோயின. நாங்கள் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பார்த்த கொடைவள்ளல், எங்களை நோக்கி வந்தார். ``டேய்... எத்தன தடவ சொல்லியிருக்கேன்... இங்கல்லாம் வரக் கூடாதுன்னு... படிக்கிறத மட்டும் பார்க்கணும். கெளம்புங்கடா...” என்று அதட்டினார். செய்யும் தொழிலில் ஒரு தர்மம் இருக்க வேண்டும் என நினைப்பவர் கொடைவள்ளல்.

அவருக்கு, பேட்டையில் ஒரு காதலி இருந்தாள். அவர் கிளப்புக்கு எதிரே இருக்கும் வீட்டில்தான் மலர்விழி இருந்தாள். மலர்விழிக்காகக் காத்திருந்த கண்கள் ஏராளம். ஆனால், மலர்மீது கொடை வள்ளலுக்கும் ஒரு பார்வை இருந்ததுதான். ஆகவே, சமயங்களில் கிளப்பிலிருந்து பாடல்களை சத்தமாக வைப்பார். `என்னைப் பார்த்து ஒரு மேகம்... ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்... உன் வாசலில் என்னைக் கோலம் இடு... இல்லையென்றால் ஒரு சாபம் இடு. பொன்னாரமே...’ என்று ஜேசுதாஸ் உருகிக் கொண்டிருப்பார். நம்மவர் சில்க் சட்டையோடு மோகனைப் போலவே மலர்விழியாளைக் கொத்தித் தின்று கொண்டிருப்பார்.

நான்காம் சுவர் - 29

``இன்னாக்கா... ஏரியா புல்லா உங்க லவ்வப்பத்தித்தான் எல்லாரும் பேசிட்டு இருக்கானுங்கோ. புடிச்சாலும் புடிச்ச... புளியங்கொம்பா புடிச்சிட்டக்கா” என்று ஜாபர் கலாய்த்தான். மலர்விழி சிரித்தபடி போய்விடுவார்.

உதயாவின் யோசனைப்படி, பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடலாம் எனத் திட்டமிட்டோம். அடியேனும் ஐக்கியமாகி ஆன்மிக அனுபவத்தில் திளைக்கத் தயாரானேன். முதலில் டொனேஷன் புத்தகம் அச்சிட்டு வாங்கிக்கொண்டோம். முதலாம் ஆண்டு விழா என்பதால், ``சின்ன பிள்ளையாரை வைப்போம்!’’ என உதயா சொன்னதற்கு, சம்மதம் தெரிவித்தோம். யார் யாரிடம்... எந்தெந்தக் கடைகளில் வசூல் செய்யவேண்டும் என ஒரு லிஸ்ட் போட்டோம். விழாவில் நூறு பேருக்காவது அன்னதானம் போட வேண்டும் எனத் திட்டம். ஒவ்வொருவரும் சுமார் எவ்வளவு தருவார்கள் என்ற யூகத்தில் எங்கள் எல்லோர் எண்ணத்திலும் முதலில் வந்தவர் கொடை வள்ளல்தான். அவர் ஒருவர் கொடுக்கும் நிதியில் நிகழ்வை சுபயோகமாக நடத்திவிடலாம். மற்ற நிதிகளைப் பொதுவில் வைத்துப் பந்திபோடலாம் என்றும் பேசி, செயற்குழுக் கூட்டம் இனிதே நடந்தேறியது.

மறுநாள் காலையில் டொனேஷன் புக்குடன் உதயாவின் தலைமையில் நாங்கள் பேட்டையில் வேட்டைக்கு இறங்கினோம். முதலில் சில்லறை வசூலை முடித்துவிட்டு, கடைசியாகத் தலைவனின் காலில் விழுந்துவிடலாம் என ஒரு கடை விடாமல் உண்டியல் குலுக்கினோம். ``ஹரே கியாபா... காத்தாலேர்ந்து எத்தினி பேர்தான் வந்து கேப்பீங்கோ?” என்று கரம்சந்த் லால், ஒரு பிச்சைக்காரரைப்போல் கேட்டு நொந்தபடி பத்து ரூபாயைப் போட்டார்.

``இன்னா சேட்டு, கடை நடத்துணுமா வேணாமா..?” உதயா கித்தாப்பு காட்டினான்.

``காத்தாலேர்ந்து வர்ற எல்லாரும் இதேதான்ப்பா சொல்றீங்கோ... நீயாவது மாத்திச் சொல்லுப்பா உதீ” என்று சேட்டு அவன் கித்தாப்பைக் காட்ட, பேசாமல் அங்கிருந்து நகர்ந்து அடுத்த கடைக்குப் போனோம். இவனைக்காட்டிலும் அந்த சேட்டே பரவாயில்லை என்பதுபோல கண்டமேனிக்குப் பேசிவிட்டான் இந்தக் கடைக்காரன். இப்படியான ஆன்மிகப் பணியில் இந்த மாதிரியான ஏச்சுகளும் பேச்சுகளும் வராமல் போனால் எப்படி மோட்சம் கிட்டும்?

இப்படி சில்லறை வசூலை முடித்து எண்ணிப்பார்த்ததில் ஐந்நூற்றிச்சொச்சம்தான் தேறியது. இதில் பிள்ளையாரின் எலியைக்கூட வாங்க முடியாது. ஆனாலும் எங்கள் குழு, கொடைவள்ளலை நம்பியே இருந்தது. திடீரென யோசித்தவன்போல ``மச்சி, இந்தக் காசவெச்சு... போஸ்டருக்கு ஆர்டர் குடுத்துடலாம்” என்றான் உதயா.

``கலக்‌ஷனே இன்னும் ஆவல... போஸ்டர்ல ஏதாவது அடிச்சி... நடத்த முடியாமப் போச்சுன்னா... பைவ்ஸ்டார் விநாயகர் குரூப் பசங்க, காரித்துப்ப மாட்டானுங்கோ?” என்றேன். நான் சொன்னதை, பலரும் ஆமோதித்தனர்.

``புள்ளையாருகூட கைவுட்டுடுவாரு... கொடைவள்ளல் கைவுட மாட்டாரு” என்று ஆழமாய் நம்பினான் உதயா.

வழக்கம்போல வசூல் மந்தகதியில்தான் போய்க்கொண்டிருந்தது. எதிர் அணி பைவ்ஸ்டார் உற்சாகமாக இருந்தது, கொஞ்சம் கலவரத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் முகத்தில் அதைக் காட்டிக்கொள்ளாமல் நாங்களும் உற்சாகமாகத்தான் இருக்கிறோம் எனக் காட்டிக்கொண்டோம்.

``மச்சி, போஸ்டர் ரெடியாகியிருக்கும். வழக்கமா டொனேஷன் புக்கோடுதானே கொடைவள்ளல்கிட்ட போவானுங்க. நாம போஸ்டரோடு போவோம்” என்று நடந்தான் உதயா. எல்லாம் நன்மைக்கேவென நாங்களும் நடந்தோம். ஒரேயொரு போஸ்டர் ரெடியாகியிருந்தது. போஸ்டரில் `வாழும் கர்ணனே... வடசென்னை மன்னனே... எங்கள் அண்ணனே... கொடைவள்ளல் சேகரே... வருக... வருக...’ என்று கொட்டை எழுத்தில் போட்டிருக்க, சிங்கம்போல கொடைவள்ளல் நடந்து வந்துகொண்டிருந்தார். அவர் கால்களுக்கு அடியில் `உங்கள் அடி பற்றி நடக்கும் தம்பிகள்’ என எங்கள் பெயர்கள் வரிசைக்கிரமமாக இருந்தன.

``மச்சி, நாம புள்ளையாருக்கு பங்ஷன் பண்றமா.... இல்ல கொடைவள்ளலுக்குப் பாராட்டு விழா நடத்துறமாடா... புள்ளையாரு படமாவது வைங்கடா” என்றான் மாறன். `சரி... சரி...’ என்பதாக பிள்ளையார் படம் போஸ்டரில் வைக்கப்பட்டது.

இந்நேரம் கிளப்புக்கு வெளியில்தான் கொடைவள்ளல் உட்கார்ந்திருப்பார் என்று கையில் போஸ்டரோடு சென்றோம். ஒயர் பின்னல் நாற்காலியில் ஜிகினா சட்டை அணிந்து ஜிகுஜிகுவென அமர்ந்திருந்தார் கொடைவள்ளல். அவரைச் சுற்றி, பேட்டைவாழ் மக்கள் அமர்ந்தும் சிரித்தும் கேட்டும் கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்ததும் ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்தது ஒரு பெருசு. அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தலைவனிடம் பம்மினோம்.

``என்னடா... ஒரு குரூப்பா கெளம்பிட்டீங்க?” கொடைவள்ளல் கேட்டதும் ``செவன் ஸ்டார் விநாயகர் குழுன்னு ஒண்ணு ஆரம்பிச்சி ருக்கோம்ணே. புள்ளையார் சதுர்த்தி விழா கொண்டாடுறோம்ணே. உங்க தலைமையில 100 பேருக்கு அன்னதானம்ணே...” தெளிவாகச் சொன்னான் உதயா.

‘`அங்க பைவ் ஸ்டார்... இங்க செவன் ஸ்டாரா... உட்டா புள்ளையார நடிக்கவெச்சிடுவீங்கபோல” என்றார். நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். நமக்கு முன்னாலேயே பைவ் ஸ்டார் கம்மினாட்டிகள் வந்துவிட்டார்கள் எனப் புரிந்துகொண்டோம்.

நான்காம் சுவர் - 29

``அண்ணே, நீங்க விழாவுக்கு வந்தா போதும்ணே... அதுக்குத்தான் உங்கள கேக்காமலேயே போஸ்டர் அடிச்சிட்டோம்” என்று போஸ்டரைப் பிரித்துக் காட்டினான் உதயா. சிங்கம்போல நடந்து வந்துகொண்டிருந்த கொடைவள்ளல் சேகரை, கொடைவள்ளல் சேகர் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

``பின்னிட்டீங்கடா... மொத வருஷமே அந்தர் பண்ணிடுவீங்கபோல தெரியுதே!” என்று பேன்ட் பாக்கெட்டில் கையை நுழைத்தார். இன்றிரவு `இனாம்குளத்தூர் செவந்தகனி’ பிரியாணி நிச்சயம் உண்டு என நினைத்துக்கொண்டேன்.

நூறு ரூபாய்க் கட்டை எடுத்து உதயாவிடம் கொடுத்து, ``நூறு பேருக்கு அன்னதானம் இந்த சேகரு போட்டதா இருக்கணும். விழாவுக்கு நா வர்றேன்... ஜமாய்ச்சுடலாம்” என்றார். அவரைச் சுற்றி அவர் எது சொன்னாலும் சிரிப்பதற்கும் கேட்பதற்கும் அவ்வளவு மனிதர்கள் இருந்தார்கள்.

பெருசு, பணக்கட்டைப் பார்த்ததும் வாயைப் பிளந்தது. ``அண்ணே, நாளைக்கே போஸ்ட்டரை கிளப்பைச் சுத்தியும் எதிர் வூட்டுலயும் ஓட்டிர்றோம்ணே” என்றான் சமயோசிதமாய். கொடைவள்ளல் சிரித்தார். ``பத்தலனா சொல்லுங்கடா... பாத்துக்கலாம்” என்று எதிர் மாடியைப் பார்த்துக்கொண்டார்.

எங்களின் தொடர் அலப்பறையைத் தாங்க முடியாமல் பைவ்ஸ்டார் விநாயகர் குழு கலைந்து போனது. ஆனால், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம் என்பதில் கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது. வழக்கம்போல இல்லாமல் இந்தமுறை ஆயிரம் பேருக்கு அன்னதானம் என முடிவெடுத்தோம். ஆபத்பாந்தவனை நம்பித்தான் இந்த ஏற்பாடு. `வாழும் கர்ணனே’ என்ற ரீதியில் போஸ்டர்கள் தயாராகின. சில்லறை வசூல் முடித்து வழக்கம்போல கொடைவள்ளலைப் பார்க்கத் தயாரானோம். இப்போது கிளப்பெல்லாம் வெளிப்படையாக நடத்த முடியாமல் இருந்தார் கொடைவள்ளல். ஆகவே, இதுதான் ஜாகை என்றில்லாமல் ஆங்காங்கே அறை எடுத்து தற்காலிக கிளப் நடத்திவந்தார். பேட்டையிலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு மாடி வீட்டில் கிளப் போய்க்கொண்டிருப்பதாகச் செய்தி வந்தது. பணம் என்ற ஒன்று வேண்டுமென்றால், அதைக் தருவதற்கு ஓர் ஆள் தயாராக இருக்கிறார் என்றால், அவர் ஏழு மலை, ஏழு கடல் தாண்டியும் இருந்தால், அவரைப் பார்க்கப் போவது என்பது அவ்வளவு உற்சாகம் தரும் பயணமாக இருக்கும்.

விநாயகர் சதுர்த்தி வரும்போதுதான் கொடைவள்ளல் நினைவுக்கு வருகிறார். தேவைகள் இருக்கும்போதே கொடுப்பவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். கொடுப்பவர்கள் எப்போதும் கொடுப்பவர்களாகவே இருப்பதால் அவர்கள் யாரையும் மறப்பதுமில்லை; ஒதுக்குவதுமில்லை. ``எப்படிடா இருக்கீங்க?” என்று கேட்டார் கொடைவள்ளல். எப்போதும் பளபளப்பாக இருப்பதைக் கொடைவள்ளலிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். சில்க் சட்டையில் ஜம்மென இருந்தார். டொனேஷன் புக்கையும் பத்திரிகையையும் காட்டினோம். பொறுமையாகப் படித்தார். எப்போதும்போல சிங்கமென நடக்கும் அவரது போஸ்டரைக் காண்பித்தோம். அவரைப் பார்த்து அவரே ரசித்துக்கொண்டார். ``என்னடா உதி... இந்த வாட்டி ஆயிரம் பேருக்கா... சிறப்புடா...” என்றவர், உதயாவைத் தனியாக அழைத்து ஏதோ சொன்னார். அவனும் பவ்யமாகக் கேட்டுக்கொண்டான்.

வரும் வழியில் விவரத்தைச் சொன்னான் உதயா. ``மச்சி, நாளிக்கு வரச் சொன்னாருடா.... இப்போ பேங்க்கு இல்லியாம். நாளிக்கு பேங்க்லருந்து எடுத்துக் கொடுத்துர்றேன்னு சொன்னாருடா” என்றான்.

`விநாயகனே, வினை தீர்ப்பவனே... வேழ முகத்தோனே... ஞான முதல்வனே...’ ஹார்ன் பெட்டி பாடிக்கொண்டிருக்க, பேட்டை வாசிகளுக்கு சுண்டல் வழங்கிக்கொண்டிருந்தான் உதயா. நானெல்லாம் இங்குமங்கும் ஏன்தான் நடக்கிறேன் என்று தெரியாமலேயே நடந்துகொண்டிருந்தேன். ``மதியம் சுமார் 1 மணியளவில் செவன் ஸ்டார் விநாயகர் குழு சார்பாக கொடைவள்ளல் சேகர் அண்ணனின் தலைமையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெறுகிறது. பேட்டைவாழ் பெருமக்கள் கலந்துகொண்டு விநாயகர் அருளைப் பெறவேண்டி, கேட்டுக்கொள்கிறோம்” - கரகரத்த குரலில் ஒரு பெருசு அறிவிப்பை வெளியிட, பந்தி பரிமாறப்பட்டது.

அப்போது அம்பாசிடர் காரில் கொடை வள்ளல் ஏரியாவில் நுழைந்தார். ``அண்ணன் கொடைவள்ளல் சேகர் அவர்களை விழாக் குழுவின் சார்பாக வருக வருகவென வரவேற்கிறோம்.’’ அதே கரகரத்த குரல் மைக்கில் சொல்லியது. பளபளப்பாக காரிலிருந்து இறங்கினார் கொடைவள்ளல். அவர் மட்டுமே வந்திருந்தார். அவருடன் யாரும் வராதது எனக்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது. அவர் கடந்து போகிறபோது வரும் சென்ட் வாசனை இப்போதும் வந்தது. அன்னக்குத்தியால் சோற்றை ஒருவருக்குப் போட, போட்டோ எடுக்கப்பட்டது. எவ்வளவோ சொல்லியும் அண்ணன் வழக்கம்போல சாப்பிடவில்லை. சரியென அவர் டிரைவரையாவது சாப்பிடச் சொல்லலாம் எனச் சென்றேன். கொடைவள்ளல், நாற்காலியில் ஜம்மென உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

வேப்பமரத்தின் அடியில் காரோடு நின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார் டிரைவர். ``அண்ணே சாப்புட வாண்ணே...” என்றேன்.

``இல்லப்பா ஒரு மணி நேரம்தான் பங்ஷன்னு கூட்டிட்டு வந்திருக்காப்ல... எங்க ஓனரோட பொண்ண ஸ்கூல்லேர்ந்து கூட்டியாரணும்... இப்ப டைம் இல்ல... சேகரண்ணனை கொஞ்சம் சீக்கிரம் வரச் சொல்றீயா” என்றார்.

``அவருக்கு ஏதுண்ணே பொண்ணு?”

``ஓ... உனக்கு விஷயம் தெரியாதா... அவரு காரெல்லாம் வித்து ரெண்டு வருஷம் ஆச்சு தம்பி. போலீஸ் கெடுபிடியில நிறைய நஷ்டம். `கொடைவள்ளல்’னு அவரைக் கூப்புட்டதுனாலயோ என்னமோ, யாரு வந்து என்ன கேட்டாலும் குடுத்துடுறாரு. அவரால முடியலைன்னா வட்டிக்கு வாங்கியாவது குடுத்துடுறாரு. குடுத்தே கடன்காரன் ஆனதுதான் மிச்சம். எங்க ஓனருகிட்ட இந்த மாதிரி ஏதாவது பங்ஷனுக்கு காரு மட்டும் கேப்பாப்ல. கொஞ்சம் சீக்கிரம் வரச்சொல்லுப்பா” என்று சிகரெட்டை இழுத்துக்கொண்டார்.

திரும்பி நடந்தேன். கொடைவள்ளல் உற்சாகமாய்ச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். முன்பெல்லாம் அவரைச் சுற்றி நிரம்பிவழிந்த கூட்டம், இப்போது கண்டும்காணாமலும் ஆகிப்போனது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் யாரிடமும் வாங்கவில்லை. அவர்தான் கொடுத்திருக்கிறார். ஆனால், இந்தச் சமூகத்தில் கொடுத்துக்கொண்டே இருந்தால்தான் வருகிறார்கள். நிறுத்தினால் அநேகம் பேர் காணாமல்போய்விடுகிறார்கள். வாழ்ந்து கெட்டவன் தன்னை ஒருபோதும் இல்லாதவனாய்க் காட்டிக்கொள்வதே இல்லை. கொடுத்துப் பழகியவர்கள் யாரைப்பற்றியும் புகார்கள் கூறுவதில்லை. ஒன்றுமே இல்லையெனத் தெரிந்துவிட்டால் அவன் எப்படிப்பட்ட ஒரு வாழ்வை வாழ்ந்தாலும் அவனை தாட்சண்யமின்றி நிராகரித்துவிடுகிறது இந்தச் சமூகம். கொடைவள்ளலைப் பார்த்தேன். எனக்கொன்று தோன்றியது, `வாழ்ந்து இப்படித் தேய்வதைவிட, இப்போது சிரித்துக்கொண்டிருப்பதைப்போலவே அவர் முடிந்தும்விடலாம்’ என.

கிளம்பினார் கொடைவள்ளல். காரில் ஏறியவர் என்ன யோசித்தாரோ தெரியவில்லை, எங்களிடம் திரும்பி ``ஏதாவது பத்தலன்னா சொல்லிவிடுங்கடா... பாத்துக்கலாம்” என்றார். கெட்டாலும் இப்படிச் சொல்வதனால்தான் அவர் `கொடைவள்ளல்.’

- மனிதர்கள் வருவார்கள்...