
வ.ஆரவ்
அந்த ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய காய்கறித் தோட்டம் இருந்துச்சாம். அந்தத் தோட்டத்துல நிறைய்ய்ய்ய்ய்ய காய்கறிகள் இருந்துச்சாம். அதில், பர்பிள் நிற கத்தரிக்காய்களும் முளைச்சிருந்துச்சாம். அதுல மூணு கத்தரிக்காய்கள் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். செடியில், அடுத்தடுத்து இருந்த மூணும் ஊஞ்சல் மாதிரி ஆடி விளையாடுமாம்.
டெய்லியும் காலையில ஷவர்ல குளிக்கிறது, மண்ல இருக்கிற சத்துகளைச் சாப்பிடறது, சூரிய ஒளியில காயுறதுனு ரொம்ப என்ஜாய் பண்ணிட்டிருந்துச்சுங்க.
பக்கத்து ஊர் விவசாயிக்கு பர்பிள் கத்தரிக்காயைத் தன் தோட்டத்துல விளைவிக்க ரொம்ப நாளா ஆசை. அந்தக் கத்தரிக்காய் வெளைஞ்ச ஊரைத் தேடி வந்தாராம். இதைத் தெரிஞ்சுகிட்ட மூணு பர்பிள் கத்தரிக்காயும் பயந்துபோச்சாம்.

‘‘இந்த மனுசங்க ரொம்ப மோசம்பா. நம்மள கொழம்புல தூக்கிப்போட்டு சாப்ட்ருவாங்க. அந்த விவசாயிக்கு நம்ம விதை வேணுமாம். நம்மளை காயப்போடுவாங்களாம். வாங்க, நாம மூணு பேரும் தப்பிச்சு ஓடிருவோம்''னு ஒரு கத்தரிக்காய் சொல்லவும், மத்த ரெண்டும் ‘சரி'னு சொல்லிச்சுங்களாம்.
அந்தச் செடியிலிருந்து கட் பண்ணிட்டு குதிச்சு, கண்ணுமண்ணு தெரியாத அளவுக்கு ஓட்டம் பிடிச்சதுங்க.
வயல், ரோடு தாண்டி, காட்டுக்குள்ளே ஓடறப்போ, ஏதோ பெரிய கல் தடுக்க, மூணும் பறந்துபோய் விழுந்துச்சுங்களாம். திரும்பிப் பார்த்தா, அது கல் இல்லே... காட்டு ராஜா சிங்கம்.
‘‘யாருடா என் மேலே இடிச்சது?''ன்னு கோபத்தோடு கத்தரிக்காய்களைத் தொரத்துச்சாம் சிங்கம்.
‘‘ஆஹா.. மனுசங்ககிட்ட தப்பிக்க நெனைச்சு சிங்கத்துகிட்ட மாட்டிகிட்டோம்டா... ஸ்பீடா ஓடுங்க... இல்லே சட்னிதான்'னு ஓடுச்சுங்க.
சிங்கத்தைப் பார்த்துக்கிட்டே ஓடினதில், தூங்கிட்டிருந்த சிறுத்தையின் மூக்கு மேலே விழுந்துச்சுங்க.
‘ஹாச்ச்ச்சு'னு தும்மி முழிச்ச சிறுத்தையும் கத்தரிக்காய்களைத் துரத்த ஆரம்பிச்சது. ‘‘ஆஹா... நாம இன்னிக்கு நிஜமாவே சட்னிதான்'னு இன்னும் வேகமா ஓடின மூணு கத்தரிக்காய்களும் வழியில இருந்த ஒரு பள்ளத்தில் இறங்கிடுச்சுங்க.
‘‘அச்சோ... முடியலப்பா! மனுசங்ககிட்டேயிருந்து தப்பிக்க நினைச்சு, சிங்கம், சிறுத்தைனு சிக்கி, இப்போ பள்ளத்துல கெடக்கோமே... பேசாம தோட்டத்துக்கே போயிடலாம்டா... நேரத்துக்குத் தண்ணீ, வெயில், சாப்பாடுனு இருந்தோம். இப்படியே ஓடிட்டிருந்தா, ஒல்லிப்பிச்சானா மாறிடுவோம்'’னு ஒரு கத்தரிக்காய் சொல்லிச்சு.
‘‘சரி, நம்மளை தொரத்தின சிங்கமும் சிறுத்தையும் என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்'’னு வெளியே தலையை நீட்டிச்சு இன்னொரு கத்தரிக்காய்.

சிங்கமும் சிறுத்தையும் கோபமா நின்னுட்டிருந்துச்சுங்க.
‘‘இப்போ மேலே போனா அவ்வளவுதான். கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்ப்போம். ரெண்டும் அலுத்துப்போய் கிளம்பினதும் தோட்டத்துக்குப் போவோம்’’னு சொல்லிச்சு மூணாவது கத்தரிக்காய்.
அப்புறமென்ன... சிங்கமும் சிறுத்தையும் காத்திருந்து காத்திருந்து தூங்கினதும், மெதுவாக மேலே வந்துச்சுங்க.
மறுபடியும் காடு, ரோடு, வயல் என ஓடி தோட்டத்துக்கே வந்து சேர்ந்தப்போ, நடுராத்திரி ஆகிடுச்சாம்.
கத்தரிக்காய்களுக்கு ஒரே களைப்பு. தங்கள் செடியிடம் போய், ‘‘செடியே... செடியே... எங்களை மறுபடியும் உன்னோடு சேர்த்துக்க’’ன்னு கெஞ்சிக் கூத்தாடிப்பார்த்தாங்க....
‘‘என்ன விளையாடறீங்களா? நினைச்சா கிளம்பறதுக்கும் நினைச்சா ஒட்டிக்கிறதுக்கும் இது என்ன பொம்மை விளையாட்டா? இயற்கை விஷயம் கண்ணுங்களா. தோட்டக்காரர் வந்து தேவையான கத்தரிக்காய்களைப் பறிச்சுட்டுப் போய்ட்டார். இனி உங்களை என்னால ஒட்டவெச்சுக்க முடியாது ஸாரி''ன்னு சொல்லிடுச்சு செடி.
மூணு கத்தரிக்காய்களுக்கும் ரொம்ப வருத்தமாப் போச்சு. ‘என்ன செய்யறது?’ன்னு நைட் ஃபுல்லா அழுதுட்டே தூங்கிடுச்சுங்க.
மறுநாள்... ‘அவங்க அவங்களுக்குன்னு ஒரு கடமை இருக்குப்பா. அதுக்காகத்தான் இயற்கை படைக்குது. அதை நாம செஞ்சுதான் ஆகணும். விதையைக் கொடுக்க பயந்துதானே ஓடினீங்க. இப்படியே இருங்க. காய்ஞ்சு போய் மண்ணுக்குள்ளே போவீங்க. மறுபடியும் செடியா மொளைச்சு நீங்க மூணு பேரும் இன்னும் பல கத்தரிக்காய்களா மாறுவீங்க. பலருக்கும் உபயோகமா இருப்பீங்க’’ன்னு செடி சொல்லிச்சாம்.
அந்தக் கத்தரிக்காய்கள் அதே மாதிரி மண்ணுக்குள் புதைஞ்சுதுங்களாம். கொஞ்ச நாளில் அங்கே ஒரு செடி துளிர்க்க ஆரம்பிச்சது. அதன் ஒவ்வொரு இலையும் சந்தோஷமா சிரிக்க ஆரம்பிச்சது.
ஓவியம்: சு.விக்னேஷ்குமார்