
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: கே.ராஜசேகரன், ஓவியம்: பாலகிருஷ்ணன்
`வறுமையும் ஏழ்மையும் கற்பித்தலுக்குத் தடையல்ல’ - இந்த உண்மையை அழுத்தமாக மாணாக்கர்களுக்கு உணர்த்திய எத்தனையோ ஆசிரியப் பெருமக்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள்.

நம்முடைய பிரான்மலை வள்ளல் பாரி மேல்நிலைப் பள்ளியில் 1995-ஆம் ஆண்டில் ஒரு மாணவர் படித்தார். அவர் பெயர் டி.இராமகிருஷ்ணன். வீட்டில் வறுமை. தந்தை, குடும்பத்தைக் கைவிட்டுவிட்டுப் போய்விட்டார். அம்மா தையல் தொழிலாளி. மின்சார வசதிகூட இல்லாத வீடு. மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து, டாக்டர் ஆனார் டி.இராமகிருஷ்ணன். இந்த மாற்றம் நிகழ யார் காரணம்?
அப்போது அந்தப் பள்ளியில் போதுமான கட்டட வசதிகூட இல்லை. கோயில் தாழ்வாரத்திலும், கூரைக் கட்டடங்களிலும் வகுப்புகள் நடக்கும். மழைக்காலம் வந்தால், பள்ளிக்கு விடுப்பு விடவேண்டிய நிலைமை. ஆனாலும், அந்தப் பள்ளியில் பணியாற்றிய நாச்சிமுத்து, சென்னிமலை உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் இராமகிருஷ்ணனைப் போன்ற எத்தனையோ மாணவர்களைச் செதுக்கினார்கள். எந்தக் கல்லாக இருந்தாலும், உளிகள் சரியாகச் செயல்பட்டால் சிற்பமாக்கிவிட முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்தார்கள்.
வறுமையோடு போராடி, மருத்துவராக வெற்றிபெற்ற இராமகிருஷ்ணன், இன்றைக்கு இல்லை. உடல்நலக்குறைவால் எமனோடு போராடித் தோற்றுவிட்டார். கல்வியை அவருக்கு அள்ளிக்கொடுத்த இறைவன், ஆயுளைக் குறைத்துக் கொடுத்துவிட்டார்.
ஒரு காட்டில் விலங்குகளும் பறவைகளும் இணைந்து ஒரு பொதுவான, பரந்துபட்ட கல்வித் திட்டத்தோடு பள்ளிக்கூடம் நடத்த ஆசைப்பட்டன. பாடத்திட்டத்தில் பறத்தல், மரம் ஏறுதல், நீந்துதல், நிலத்தில் வளை தோண்டுதல் ஆகியவற்றையெல்லாம் சேர்ப்பது என முடிவெடுக்கப்பட்டது. பறவைகள் சிறப்பாகப் பறந்தன; ஆனால், வளை தோண்டுவதில் தோற்றுப்போயின. வளை தோண்டியதால் சிறகுகள் ஒடிந்து, பறக்க முடியாமல் தடுமாறின. மரம் ஏறுவதில் கெட்டிக்கார அணில், நீந்துவதில் தோற்றுப்போனது. நீந்துவதில் மிக வல்லமை படைத்த மீனால், மற்ற எந்தப் பயிற்சியிலும் கலந்துகொள்ள முடியவில்லை. நாயோ, `குரைத்தலைப் பாடத்திட்டத்தில் சேர்க்கவில்லையே...’ என்று தர்ணாவில் இறங்கியது. `கல்விக் கட்டணம் செலுத்த முடியாது’ என்று மறுத்தது. எல்லாவற்றையும் அரைகுறையாகக் கற்றுத்தேர்ந்த, மூளை வளர்ச்சி இல்லாத விலாங்கு மீன் மட்டும் அனைத்துப் பாடங்களிலும் சராசரி மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சிபெற்றது.

ஆக, பரந்துபட்ட கல்வி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? ஒவ்வொரு மாணவனின் தனித்துவத்தையும் அடையாளம் காட்டுவதாக இருக்க வேண்டும். நாம் பள்ளியில் கல்வி பயின்றபோது, ஆசிரியர்கள் மாணவர்களை நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் பள்ளிக்கு வரவில்லையென்றால், அடுத்த நாள் வகுப்பாசிரியர் நம் வீட்டிலிருப்பார்; அக்கறையோடு நலம் விசாரிப்பார். அப்படிப்பட்ட உணர்வும் உறவும் இன்றைக்குப் பள்ளிகளில் தேவைப்படுகின்றன.
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு கட்டுரையில் `A Letter to a Teacher - by the Schoolboys of Barbiana’ என்ற நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இத்தாலியின் டஸ்கேனி (Tuscany) பகுதியிலிருக்கும் அந்தப் பள்ளி, `முறைசார்’ கல்வி அமைப்பின் `முறையான’ பள்ளிகளால் ‘தேறாதவர்கள்’ எனக் கைவிடப்பட்டவர்களால் நடத்தப்படுவது. தங்களைத் தாங்களே கற்றுத் தேர்ந்துகொள்வதற்காகவும், தங்களைப்போன்ற பிற மாணவர்களுக் காகவும் அவர்கள் உருவாக்கிய பள்ளி. அவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பது, சிற்றுண்டிச் சாலைகளில் வேலை, கட்டடத் தொழில் எனப் பல வேலைகளைச் செய்பவர்கள். அவர்கள், `நீங்கள் தேர்ச்சி பெறவில்லை’ என இறக்கிவிட்ட முறைசார் கல்வி அமைப்பு ஆசிரியர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் அந்தப் புத்தகம்.
அந்தக் கடிதங்களில் அவர்கள், ஆசிரியர்களிடம் கேட்டிருந்த கேள்விகள் உலகத்தை உலுக்கிப் போட்டன. `எங்களைப் பற்றி நீங்கள் என்றேனும் கவலைப் பட்டிருக்கிறீர்களா? நீங்கள் வகுப்பறைக்குள் இருந்துகொண்டு உலகத்தைப் பார்க்கிறீர்கள். வெளியில் வந்து எங்களைப் பாருங்கள். உங்கள் வகுப்புக்கு வரும் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படும் நீங்கள், தேர்வில் தோல்வியுற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, அடுத்த வகுப்புக்குப் போக முடியாமற்போன எங்களை ஒரு நாளாவது தேடியிருக்கிறீர்களா?’ என நீள்கிற கேள்விகளுக்கு யாரிடமும் பதில்களில்லை
இது ஒரு சோவியத் சிறுகதை...
ஒரு குழந்தை வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகிற நாளில் கதறிக் கதறி அழுகிறது. அதுவரை அந்தக் குழந்தை தன் தாயிடம்தான் தான் பார்க்கிற, கேட்கிற எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டிருந்தது. அன்றைக்குக் குழந்தை, தாயைப் பிரிந்து பள்ளிக்குப் போகும்போது, தன் உயிரையே பிரிவதாக நினைக்கிறது.
பிறகு, பள்ளிக்கூடச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தைக்குப் பழகிப்போகிறது. அங்கே ஆசிரியை ஒருவர் குழந்தையின் பிரியத்துக்குரியவர் ஆகிறார்; இனிமையாகப் பேசிப் பழகுவதால், குழந்தையும் தாயிடம் பேசுவதைப்போல அவரிடம் பேசுகிறது. இப்போது அந்தக் குழந்தைக்கு இரு தாய்மார்கள் கிடைத்திருக்கிறார்கள். இன்றைய கல்விக் கூடங்கள் அப்படி இயங்குகின்றனவா?
நம் குன்றக்குடி மேல்நிலைப் பள்ளியில் `பெரிய தமிழய்யா’, ‘ஆதீனப் புலவர்’ என்றெல்லாம் அழைக்கப்பட்ட பூவாளூர் கதிரேசன் அய்யா தமிழாசிரியராக இருந்தார். அவரிடம் ஆர்வத்தோடு கற்பவர்கள், தமிழில் உயரத்தை அடைவார்கள். அவரிடம் குட்டுப்படாத தலைகள் இல்லை; கிள்ளப்படாத காதுகள் இல்லை. ஆனால், அதற்காக யாரும் கேள்வி கேட்டதில்லை. தமிழய்யா, எல்லா மாணவர்களையும் தன் சொந்தப் பிள்ளைகளாக நினைத்தார். வகுப்பறையில் மற்ற பிள்ளைகளைவிட, தன் மகன்மீது அதிகம் கண்டிப்பு காட்டுவார். அவர் பணி நிறைவு பெற்றபோது, மாணவர்களோடு பொதுமக்களும் சேர்ந்து, அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தினார்கள். குன்றக்குடியிலேயே குடியிருந்த அவர், தனக்கெனக் குன்றக்குடியில் ஒரு சொந்த வீடு கட்டிக்கொள்ளவில்லை. ஆனால், மாணவ மாணவியரின் மனங்களில் இப்போதும் கூடு கட்டிக்கொண்டு வாழ்கிறார். இன்றைய கல்வி முறையில் தேவைப்படுபவர்கள் கதிரேசன் அய்யா போன்ற ஆசிரியர்கள்தாம்.

நாம், ஆசிரியப் பணியை ஆத்மார்த்தமாக நேசித்தோம். இளமைக்காலத்தில் ஆசிரியராக வேண்டும் என்ற கனவும் நமக்கு இருந்தது. 1990-ஆம் ஆண்டு... தொலைதூரக் கல்விவழியில் கல்வியியல் கற்பதற்கு ஒரு சான்றிதழ் தேவைப்பட்டது. அதைப் பெறுவதற்காக குன்றக்குடி தருமைக் கயிலை குருமணி மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தோம். அது என்னவோ... ஒரு நாள் முழுக்கக் காத்திருந்தும் சான்றிதழைப் பெற முடியவில்லை; ஏமாற்றத்தோடு திரும்பினோம். காலம் உருண்டோடியது. நாம் குருமகாசந்நிதானமாகப் பொறுப்பேற்றோம். பரிபூரணம் அடைந்த நமது குருமகாசந்நிதானம் பெயரில், 2009-ஆம் ஆண்டு குன்றக்குடியில் ‘தவத்திரு குன்றக்குடி அடிகளார் மகளிர் கல்வியியல் கல்லூரி’யைத் தொடங்குகிற நல்வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. குன்றக்குடியில், எந்த வளாகத்தில் நாம் கல்வியியல் படிப்பதற்கான சான்றிதழ் மறுக்கப்பட்டதோ, அதே வளாகத்தில் மாணவிகளுக்கு நம் கையாலேயே கல்வியியல் பட்டம் வழங்கினோம். அங்கே படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை மாணவிகள்; வங்கி நிதி உதவியைப் பெற்று, அரசு நிர்ணயித்ததைவிடக் குறைவான கட்டணத்தில் கல்வியியல் பட்டம் படிப்பவர்கள். நமக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு, பல மாணவிகளுக்குக் `கல்வியியல் பட்டம்’ என்ற வரமாகக் கிடைக்கக் காரணமாக அமைந்துவிட்டது. மாணவிகளுக்குப் பட்டம் வழங்குகிறபோதெல்லாம் கடவுளுக்கும் நமது குருமகாசந்நிதானத்துக்கும் மனதார நன்றி சொல்வோம்.
`ஆயிஷா’ என்ற சிறுகதை நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம். எல்லாவற்றையும் கேள்வி கேட்கிற ஒரு மாணவி... அதற்காகப் பள்ளியிலிருக்கும் ஆசிரியைகளிடம் ஏச்சுப் பேச்சையும் அடியையும் பரிசாகப் பெறுபவள். அந்த மாணவியின் புத்திக்கூர்மையை அடையாளம் கண்டுகொள்கிறார் அறிவியல் பாடம் நடத்தும் ஒரு நல் ஆசிரியை. மாணவியை அரவணைத்துக்கொள்கிறார். ஒரு சின்ன விஷயத்தில்கூட அவளுக்கிருக்கும் தர்க்க ஞானத்தையும், புதிய சிந்தனையையும் எண்ணி எண்ணி வியக்கிறார். ஆனாலும், அந்த ஆசிரியையைத் தவிர, குடும்பத்தினர் உட்பட வேறு யாரிடமிருந்தும் உரிய அங்கீகாரம் பெற முடியாத அந்த மாணவி, தன் உயிரையே பறிகொடுக்கவேண்டிய நிலை உருவாகிறது. அந்த மாணவியைப் பற்றி, தான் எழுதும் ஓர் அறிவியல் புத்தகத்தின் முன்னுரையில் பதிவு செய்கிறார் அந்த ஆசிரியை. இதுதான் அந்தச் சிறுகதையின் உள்ளடக்கம். இரா.நடராசன் எழுதியிருக்கும் `ஆயிஷா’ சிறுகதை இன்றைய இயந்திரத்தனமான கல்விமுறையின் லட்சணத்தைத் தோலுரித்துக் காட்டியது. இந்தக் கதை ஒவ்வோர் ஆசிரியரும் அவசியம் படிக்கவேண்டிய ஒன்று.
கதைப்படி, ஆயிஷா இல்லாமல் போய்விட்டாள். சுடர்விட்டு எரியவேண்டிய அந்த ஒளிவிளக்கை, அறிவு ஒளியைப் பிரம்புகளால் அணைத்துவிட்டார்கள். ஆயிஷா போன்ற எத்தனை குழந்தைகள் வகுப்பறையில் நடக்கும் வன்முறைகளால் காணாமற் போகிறார்கள் என்று எண்ணிப் பார்க்கவேண்டியிருக்கிறது.
குழந்தைகள் மலர்கள்,
அவர்களைக் கசக்கிவிடாதீர்கள்.
குழந்தைகள் ஓவியங்கள்,
அவர்களைக் கலைத்துவிடாதீர்கள்.
குழந்தைகள் கவிதைகள்,
அவர்களை வாசிக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் கண்ணாடிகள்,
அவர்களை உடைத்துவிடாதீர்கள்.
குழந்தைகள் கற்கவேண்டிய புத்தகங்கள்,
அவர்களைக் கிழித்துவிடாதீர்கள்.
நமக்கு, வன்முறை இல்லாத வகுப்பறைகள் தேவை. மாணவர்களை நல்வழிப்படுத்தி வழிநடத்தும் ஆசிரியர்கள் தேவை. முக்கியமாக, வாசிக்கக் கற்றுத்தரும் ஆசிரியர்களைவிட, மனித மனங்களைக் கற்றுக்கொள்ள உதவும் ஆசிரியர்களே இன்றைய தேவை.
- புரிவோம்...
‘ரியல் ஹீரோ’
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சுமார் எண்பது லட்சம் பேர் வசிக்கிறார்கள். அங்கிருக்கும் இளைஞர்களும் சிறார்களும் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளாக இருப்பார்கள் அல்லது பீடி சுற்றும் வேலையைச் செய்வார்கள். முர்ஷிதாபாத்தின் சிறு நகரமான பெல்டாங்காவில் (Beldanga) வசிப்பவர் பாபர் அலி. அவருடைய ஒன்பதாவது வயதில், பள்ளிக்குச் செல்லும்போது அவர் வயதையொத்த சில சிறுவர்கள் குப்பை பொறுக்குவதைப் பார்த்தார். அவர்களில் சிலர் அவருக்கு நண்பர்கள். `இவர்களால் ஏன் நம்மைப்போல் பள்ளிக்கூடம் போக முடியவில்லை... படிக்காமல்போனால் இவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்?’ என்ற கேள்வி அந்தப் பிஞ்சு மனதில் எழுந்தது. `இதற்காக ஏதாவது செய்ய வேண்டுமே’ என்று யோசித்தார் பாபர் அலி.
அந்தச் சிறுவர்களுக்குத் தானே ஆசிரியராவது என முடிவெடுத்தார். அவர்களை அழைத்துப் பேசினார். தன் வீட்டின் புழக்கடையைப் பள்ளிக்கூடமாக்கினார். அந்தச் சிறுவர்களெல்லாம் காலையில் வேலைக்குச் செல்வார்கள் என்பதால், பின் மதியப் பொழுதைப் பள்ளி நேரமாக்கினார். ஒரு கொய்யா மரத்தடியில், வெறும் எட்டு மாணவர்களோடு ஆரம்பமான அந்தப் பள்ளி, தினமும் மூன்று மணி நேரம் செயல்பட்டது. பள்ளி என்றால் கரும்பலகை வேண்டும்; அதில் எழுத சாக்பீஸ் வேண்டுமே! தான் படிக்கும் பள்ளியில் பயன்படுத்தி வீசியெறியப்பட்ட சாக்பீஸ்களைப் பொறுக்கி வந்து பயன்படுத்தினார் பாபர் அலி. ஆரம்பத்தில் அவர்மீது சந்தேகப்பட்டார்கள் ஆசிரியர்கள். பிறகு அவருடைய சேவையை அறிந்ததும், பள்ளியிலிருந்தே வாரத்துக்கு ஒரு பெட்டி சாக்பீஸைக் கொடுத்தனுப்பினார்கள். பாபர் அலியோடு படிக்கும் நண்பர்களும் அவருக்கு உதவினார்கள். இன்று எத்தனையோ ஏழை மாணவர்களை அரவணைத்து, கல்வி கற்றுத் தரும் ஆலயமாக உயர்ந்திருக்கிறது அவருடைய பள்ளி; எங்கெங்கிருந்தோ அந்தப் பள்ளிக்கு உதவிகளும் குவிகின்றன.
பிபிசி நிறுவனம், `உலகின் இளம் வயது தலைமையாசிரியர்’ என்ற விருதை வழங்கி பாபர் அலியைப் பெருமைப்படுத்தியது. சிஎன்என் தொலைக்காட்சி, அவருக்கு ‘ரியல் ஹீரோ’ என்ற பட்டத்தை வழங்கியது. என்டிடிவி `ஆண்டின் மிகச்சிறந்த இந்தியன்’ என்று கௌரவப்படுத்தியது. நம் ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவில் அவரை அழைத்துப் பாராட்டி, பெருமைப்படுத்தினார் ஸ்டாலின் குணசேகரன். கற்றலும் கற்பித்தலும் மனிதம் சார்ந்தது; அன்பு சார்ந்தது. அதைத் தன் வாழ்க்கையில் உண்மை என நிரூபித்திருக்கிறார் பாபர் அலி. அவர் நடத்தும் பள்ளியின் பெயர், `ஆனந்த சிக்ஷா நிகேதன்.’ அதன் பொருள், `மகிழ்ச்சியான கற்றலுக்கான வீடு.’ உண்மைதானே!