
இறையுதிர் காடு - 16

அன்று முப்பு பற்றிய விளக்கத்துடன் இதுவே காயகற்பம் உண்பதற்கு முன்பாக உண்ண வேண்டிய முதல் மருந்து என்றும் போகர் பிரான் கூறவும், அதை எழுத்தாணி கொண்டு எழுதியபடி இருந்த கார்மேகக் கோனார் எழுத்தாணியைக் கீழே வைத்துவிட்டு, கைவிரல்களை நீவி விட்டுச் சோம்பல் முறிக்கத் தொடங்கினார். அதைக் கண்ட போகரும்,
“என்ன கிழாரே... முப்பு குறித்துத் தாங்கள் முன்பே ஏதும் கேள்விப்பட்டிருக்கிறீரோ?” என்று கேட்டார். கார்மேகக்கிழார் முகத்தில் வியப்பு.
“போகர் பிரானுக்கு அஷ்டமா சித்தி கடந்து மனோவாசிப்பும் உண்டு போலும். நான் அதன் பொருட்டே எழுத்தாணியைக் கீழே வைத்தேன் என்பதைத் தாங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள் பிரானே?” - என்று கேள்வி எழுப்பினார்.

“இனி தெளிவாக விளங்கிக்கொள்ளாமல் எழுதக் கூடாது என்கிற எண்ணம் ஏற்பட்டாலே ஓர் எழுத்தாளன் தன் எழுத்தாணியைக் கீழே வைப்பான். அடுத்து எழுதும் பொருள் பற்றித் தனக்குத் தெரிந்திருந்தாலும் அவ்வாறுதான் நடப்பான். இதை மனோவாசிப்பு என்று நீர் கூறினால் மகிழ்ச்சியே..!”
“சரியாகச் சொன்னீர்... குதம்பை சித்தர் என்பவர் இந்த முப்பு குறித்துப் பதிவு செய்துள்ள பாடலொன்று நினைவுக்கு வந்தது. அதை நான் கூறலாமா?”
“தாராளமாக... சீடர்களே, கிழார் பேச்சைக் கூர்ந்து கவனியுங்கள்” என்று போகர் பிரான் சீடர்களையும் உசுப்பி விட்டார். சீடர்களில் அஞ்சுகன் மிகக்கூர்மையாகக் கிழாரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
கிழாரும் குதம்பையார் பாடலைக் கூறத் தொடங்கினார். ‘அப்பினைக் கொண்டந்த உப்பினைக் கட்டினால் முப்பூவாகுமடி, குதம்பாய் முப்பூவாகுமடி...’ என்பதுதான் அந்தப் பாடல் வரிகள். அதன்படி பார்த்தால் அப்பு எனில் தண்ணீரைக் குறிக்கும். தண்ணீரைக் கொண்டு உப்பினைக் கட்டினால் என்றால் கடல்நீரில் எடுக்கும் கல் உப்பையே அவர் குறிப்பிடுகிறார். இந்த உப்புதான் நம் அன்றாட வாழ்விலும் பயன்பட்டுவருகிறது. இதை, எதை வைத்து முப்பு என்றார்” என்று கேட்டு முடித்தார்.
“கிழாரே... நான் மூன்று வகை உப்பு என்று முன்பே கூறிவிட்டேன் - ஆனால் நீங்களோ கல் உப்பை மட்டும் குறிப்பிட்டு முப்பு என்றால் எப்படி சரியாகும்?”
“அப்படியானால் அந்த மூன்று உப்புகள்?”
“நீர், நெருப்பு, காற்று எனும் மூன்று பூதங்களின் கூட்டுதான் அந்த முப்பு... இப்போது சொல்லுங்கள் எது அது என்று...”

“நீருக்குக் கடல், நெருப்பெனில் வெடிக்குதவும் வெடியுப்போ?”
“என்னைக் கேட்காதீர்கள்... இந்த முப்பு சில நேரங்களில் மாறுபடக்கூடும். ஆயினும் மூன்று பூதச் சேர்க்கையில் இரண்டைச் சொன்ன நீங்கள் மூன்றாவதைக் கூறுங்கள் பார்ப்போம்.”
“பிரானே... நான் என்ன சித்தனா? ஒரு தமிழாளன். வயலாளன் - உழவன் - உங்களைப் போல் மனவாசிப்பெல்லாம் என் போன்றோர்க்கு ஏது?”
கார்மேகக்கிழார் குழைந்த குரலில் தன் கொக்கின் இறகுகளை ஒத்த தாடியைத் தடவியபடியே கேட்டார்.
பதிலுக்குச் சிரித்தபோகர் “தமிழாளன் எனும் வயலாளனே மேலாளன் கிழாரே! உலகைச் சுற்றி வந்தவன் என்ற முறையிலும் கண்டங்களை விண்டவன் என்ற முறையிலும் கூறுகிறேன். தமிழிற்கு இணையாய் ஒரு மொழியை நான் எங்கும் உணரவில்லை. பிற மொழிகள் பேசமட்டுமே பயன்படும் நிலையில் தமிழின் ‘ழ’கரம் கபாலத்தில் அமிர்தம் துளிர்க்கச் செய்யும் தசை நார் அசைவுகளைக் கொண்டிருப்பதை என்னென்று சொல்வேன்! இதன் இலக்கண வரைமுறைகளும், உடம்புக்குள் நாம் உயிரைப் பேணுவதைப்போல மொழிக்குள் ஓர் ஒழுக்கத்தைப் பேணுவதைக் கண்டு பிரமிக்கிறேன். பொருளும் அதன் சப்தமே சொல்லாயும் திகழ்வதையும் கண்டு நான் வியக்கிறேன். ‘மலை கலை சிலை நிலை’ எனும் சொற்களை உதாரணமாகக் கொண்டே சொல்கிறேனே... அடேயப்பா என மலைக்க வைப்பதால் மலை என்கிறோம். சிலிர்க்க வைப்பதால் சிலை என்கிறோம், மனக்கவலை கலைக்க வைப்பதால் கலை என்றும் நிற்கும் பாட்டை நிலை என்றும் சொல்லும் சொற்களில் முதல் எழுத்துதான் வேறு. பின் வரும் ‘லை’ எனும் எழுத்து ஒன்றே! இதில் இந்த முதல் எழுத்தை விரித்தாலே போதும் - பொருள் புலனாகிவிடும். நான் தமிழை வியக்கத் தொடங்கினால் என் வியப்பு இதுபோல் எல்லைகளின்றித் தொடர்ந்து விரியும். நாம் வியக்க நம் மொழிக்குள் அவ்வளவு சிறப்புகள் உள்ளன.
உச்சபட்சமாய் நான் கருதுவது நான் பெரிதும் வியந்து வணங்கும் தண்டபாணியான அந்த முருகன் உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமாய் விளங்குவதுபோல் தமிழ் மொழிக்கும் ஆதாரமாய் விளங்குகிறானே... அதுதான்! அவன் பன்னிரு கரங்களே உயிர் எழுத்தாய், பன்னிரு கரங்களுடன் ஆறு முகம் சேர்ந்திட உருவாகும் பதினெட்டே மெய்யெழுத்தாய், அவனது ஓம் எனும் பிரணவமே சப்தங்களுக்கெல்லாம் மூலமாய் விளங்குவதை என்னென்பேன்!”
- போகர் கார்மேகக் கிழாருக்கு பதில் சொல்லும் சாக்கில் தமிழின் சிறப்பைத் தொட்டுக் காட்டியதை, கிழார்கள் அவ்வளவு பேருமே வியந்து ரசித்தனர்.
“உண்மை பிரானே... பேருண்மை! தமிழ் பேசும் மனிதன் உடம்புக்கு இயற்கைக் கணக்குப்படி 120 வருடங்கள். ஆனால் அவன் பொருளோடு பேசியும் பேசியதை எழுதியும் வைத்துவிட்டால் அதற்கு இந்த உலகம் உள்ள வரை ஆயுள் என்பதே உண்மை!” - என்று அங்குள்ள கிழார்களில் அதுவரை எதுவுமே பேசியிராத வேல் மணிக்கிழார் என்பவர் கூறவும்,
“வேல் மணிக் கிழாரே உமது பெயரிலுள்ள வேலுக்கு ஒரு தனித்த சிறப்பு உண்டு, அதை நீர் அறிவீரா?” என்று கேட்டார் போகர்.

“ஐயன் முருகனின் திருக்கை ஆயுதம் அது! அதைத் தாங்கள் மனித உடலோடு குறிப்பாக உச்சி முதல் குதம் வரை பொருத்திப் பார்த்துச் சொன்ன அகப்பொருளை நான் அறிவேன். புறத்தில் இது பாய்ந்து சென்று தாக்கும் ஆயுதம் என்பதைத் தவிர வேறு எனக்குத் தெரியாது.”
“சரியாகச் சொன்னீர். புறத்தில் இது ஆயுதமே! ஆயினும் ஆயுதப் பெயர்களை மனிதர்கள் தங்கள் அடையாளமாக வைத்துக்கொள்வதில்லை. ‘கோளரி, வாள், கட்டாரி, கதை, தண்டக்கோல், கத்தி என்று எத்தனை எத்தனை ஆயுதங்கள்? ஆயினும் இவற்றை எவரும் பெயராக வைத்துக் கொள்வதில்லை. வேலையோ விரும்பி வைத்துக் கொள்வர். ‘ஆழம், அகலம், கூர்மை’ என்னும் வேலின் தன்மைகளும் ஒரு காரணம். இதையெல்லாம்விட மதிப்பு மிக்க இன்னொரு காரணம் ஒன்றும் உண்டு அறிவீரா?”
“அறிகிலேன் பிரானே!”
“இப்போது நான் கூறுகிறேன், அறிந்து கொள்ளுங்கள். முருகப் பெருமானைக் குலதெய்வமாகக் கொண்ட பழங்குடியர்கள் முருகன் மேல்கூட சத்தியம் செய்வர் - ஆனால் வேலின் மேல் அவன் சேவலின் மேல் சத்தியம் செய்யச் சொன்னால் செய்ய மாட்டார்கள். அவ்வளவு பயம்!
வேல் சக்தி ஆயுதம் மட்டுமல்ல - சத்திய ஆயுதமும்கூட!”
- போகரின் விளக்கத்தில் புதிது புதிதாய்ப் பல செய்திகள். தானொரு பிரபஞ்ச ஞானி என்பதை போகர் நொடிக்கு நொடி நிரூபிப்பது போலவும் இருந்தது.
“அற்புதமான விளக்கம் போகர் பிரானே! முப்பு பற்றித் தொடங்கிய நமது உரையாடல் வேல் வரை நீண்டுவிட்டது. முப்பைத் தொடர்வோமா?”
கார்மேகக் கோனார் பிடித்து இழுத்தார்.
“தாராளமாய்த் தொடர்வோம். பஞ்சபூதங்களில் நீர் நெருப்பு காற்று இம்மூன்றும் ஒன்றோடொன்று கலந்து செயல்படுபவை. காற்று நெருப்பில் அடங்கும், நெருப்பு நீரில் அடங்கும், நீர் மண்ணில் அடங்கும், மண்ணோ விண்ணில் அடங்கும்... உப்பு வரையில் விண்ணுக்கும் மண்ணுக்கும் நேரடிச் சம்பந்தமே இல்லை. மற்ற மூன்றாகிய நீர் நெருப்பு காற்றுடன் மட்டுமே சம்பந்தம் கொள்ளும் உப்பு காய்ச்சலால் பெறப்படுவதாம். அதனால் நெருப்புக்கும் நீருக்குமே இதில் பிரதான இடம். அதில் ‘கடல் நீர், பனி நீர், பூ நீர்’ என மூவகை நீரை முறைப்படி காய்ச்சிட அதன்மூலம் கிட்டும் உப்பை உப்பு என்று நேர் பொருளில் கூறாமல் குரு என்போம்.
கற்ப மூலிகை ரசத்தில் இந்த உப்பு எவ்வளவு சேர்க்கப்படவேண்டும் என்று ஒரு கணக்கும் உள்ளது.
“அடேயப்பா... உடம்பைப் பேணும் காய கற்ப விஷயத்துக்குப் பின் இத்தனை உள்ளதா என்ன?”
“பின் என்ன நினைத்தீர்? இந்தக் காயகற்பம் தன்னை உண்பவனை முதலில் முதுமையிலிருந்து விடுவிக்கிறது. பின் நோயிலிருந்து விடுவிக்கின்றது. நூறு கடந்தும் நூல் கோக்கலாம். ஒரு கவளம் உணவுண்டு ஒரு மண்டலம் உணவின்றி வாழலாம். மிக முக்கியமாய் பரகாயப் பிரவேசம் செய்திட கற்ப உடல்தான் உற்ற தோது.”
- போகர் பிரான் உப்பைத் தொட்டுச் சொன்ன செய்தியின் முடிவில் பரகாயப் பிரவேசம் என்னும் கூடு விட்டுக் கூடு பாயும் கட்டத்தைத் தொடவும் எல்லோரிடமும் பெரிதும் ஆர்வம்.
“பிரானே... தாங்கள் எங்கள் முன்னால் கூடு விட்டுக் கூடு பாய்ந்து காட்டுவீரா?” என்று அருணாசலக்கிழார் மட்டும் கேட்கவே செய்தார்.
“அதைப் பார்த்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று திருப்பிக் கேட்டார் போகர்.
“காணக்கிடைக்காத காட்சியல்லவா? அதனால்தான் கேட்டோம்.”
“அற்ப பரவச உணர்வுக்காக இதுபோல் விருப்பம் கொள்ளாதீர்கள். உடம்பிலிருந்து உயிரைப் பிரிப்பது என்பது ஒரு உடல் வரையில் ஒரு முறை மட்டுமே நிகழ வேண்டிய செயல்பாடு. ஒவ்வொரு முறை உடம்பைத் துறக்கும்போதும் அப்பிறப்பையும் துறக்கிறோம். எந்த உடலில் புகுகிறோமோ அவ்வுடலுக்குரிய கர்மத்தை அனுபவிக்க வேண்டியவர்களாகவும் ஆகின்றோம். இப்பிறப்பே போதும் என்னும் ஞானமே ஒருவனைச் சித்தனாக்குகிறது. அப்படி சித்தனாகுபவன் தான் அறிந்த பரகாயப் பிரவேசத்தை எக்காரணம் கொண்டும் விளையாட்டுக்குப் பயன்படுத்தித் தன் சித்த விசாலத்தை இழக்க மாட்டான்.
பூலோக மாயையை அறியாமல் சுந்தரன் என்னும் கைலாய ஊழியன் பூ உலகம் வருகையில், மூலன் என்னும் கீதாரியின் உடலில் புகுந்து பின் திருமூலனாகிப் பட்டபாட்டை, சித்தர்கள் உலகம் நன்கு அறியும். எனவே, என்னால் உங்களுக்கு அந்தப் பரவச அனுபவத்தைத் தர இயலாது” என்றார் போகர்.
“அப்படியானால் தாங்கள் எவ்வாறு கண்டம் விட்டுக் கண்டம் பறந்து செல்கிறீர்கள்... மனிதர்கள் பறப்பது என்பது புராணங்களில் கூட நாங்கள் கேட்டறியாத ஒன்றாயிற்றே” என்றார் கார்மேக கிழார்.
அதைக் கேட்டு, சிரித்த போகர், ‘`எதற்காக இருக்கிறது மேக மணிக்குளிகை எனும் ரசமணி?” என்று கேட்டது மட்டுமல்ல... ஒரு எலுமிச்சையளவு இருந்த அதை எடுத்து வந்து காட்டவும் செய்தார்.
பறப்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
இன்று ஓடிவந்த மருதமுத்துவிடம் பீதி நிறைந்த இளைப்பு. அதற்குள் சப்தம் கேட்டு வாட்ச்மேன் மணியும் ஓடி வந்தவனாக ‘`எங்கய்யா பாம்பு?” என்று கேட்க.
“தோட்டத்துல செம்பருத்திச் செடிக்குத் தண்ணி விட்டுக்கிட்டிருந்தேன். பக்கத்துல சப்போட்டா மரம்... அதுலதான் நல்லா படம் எடுத்து நின்னுகிட்டு என்னையே பார்த்துக்கிட்டிருந்துச்சு...”
“வாய்யா... ரெண்டுல ஒண்ணு பாப்போம்.” என்று மணி அழைக்க, இருவரும் ஓடினர். பானு பிரசாத கடிதங்களோடு தன் அலுவலக அறை நோக்கிச் சென்றாள்.

“மணி, அதை அடிக்கல்லாம் கூடாது. கேர்புல் - அவசரப்படாம செயல்படுங்க...” என்று பாரதி அவர்கள் பின்னால் செல்ல, ஹெல்மெட்டை அங்கு ஒரு இடத்தில் வைத்து விட்டு அரவிந்தனும் சென்றான்.
பங்களாவின் வடக்குப் பக்கமாய் இன்னொரு பங்களா கட்டலாம் என்னுமளவிற்கு விஸ்தாரமான இடம். அதில் புல்வெளி! பவுன்டைன் விசிறி வாழை, கொய்யா, சப்போட்டா என்கிற மரங்கள். அதுபோக பூச்செடிகள் - அங்கேயே ஒரு ஓரமாய் ஆஸ்பெஸ்டாஸ் கூரையால் ஆன ஷெட். அதன் முகப்பிலும் இண்டு இடுக்குகளிலும் பயன்பட்டு முடிந்த ராஜாமகேந்திரனின் ப்ளக்ஸ் பேனர்கள் - பலவித சைஸ்களில்..!
சப்போட்டா மரத்தை ஒட்டி நின்று மருதமுத்து பாம்பு படம் விரித்ததாகத் தெரிந்த இடத்தைக் காட்டியபோது அங்கே பாம்பு இல்லை.
“ஓடிடிச்சாட்டம் இருக்கு...”
“இத்தன வருசத்துல ஒரு தண்ணிப்பாம்புகூட இங்க வந்தது இல்லியேய்யா...”
“அப்ப நான் என்ன பொய்யா சொல்றேன்?”
அவர்கள் தங்களுக்குள் முட்டிக்கொண்டனர். பாரதியோ அரவிந்தனைப் பார்த்தாள்.
“ஐ ஆம் வெரி சாரி... உங்கள வாங்கன்னு கூப்பிடக்கூட இல்ல. அதுக்குள்ள பார்த்தீங்களா..? இதான் இப்ப என்னோட குழப்பமான நிலை” என்றாள்.
“பரவால்ல பாரதி. எனக்குதான் பாம்பப் பாக்கற பாக்யம் இல்லை. பை த பை தோட்டம் நல்லா இருக்கு...”
- மிக லகுவாய்ப் பேசின அரவிந்தனுக்கு ஒரு சிரிப்பை பதிலாய் உதிர்த்தவள் மணியைப் பார்த்து ‘`மணி... நல்லா தேடிப்பாருங்க. கண்ல பட்டா பயர்சர்வீஸுக்கு போன் பண்ணணும்” என்றாள்.
“ஐயோம்மா... இதுக்கெல்லாமா அவங்கள கூப்பிட்றது. நீங்க போங்கம்மா - நாங்க பாத்துக்கறோம்.”
“நோ... பாம்பைப் பார்த்தாலே அதை அடிச்சுக் கொல்ற அந்தக் காட்டுமிராண்டித்தனம்லாம் கூடாது. அதுவும் ஒரு ஜீவன். நமக்கிருக்கிற எல்லா உரிமையும் அதுக்கு இருக்கு...”
“அதுக்காக அது கடிச்சு யாராச்சும் செத்தா அதைப் புடிச்சு கோர்ட்ல நிறுத்தி `கடிச்சியா’ன்னா கேப்பாங்க. போங்கம்மா, நாங்க பாத்துக்கறோம்.”

“நோ மணி... இந்தக் கிண்டலெல்லாம் டூ மச்! ஐ ஆம் வெரிசீரியஸ்.”
-பாரதி முகம் ஷணத்தில் மாறியது. மணியும் முக பாவத்தில் சற்று பயத்தையும் பணிவையும் காட்டிட, பாரதி அரவிந்தனோடு திரும்பி, பேசிய படியே நடந்தாள்.
“என்ன சார், டூ வீலர்லயே வந்துட்டீங்களா?”
“ஆமாம் பாரதி. இரும்புக்குதிரைதான் சென்னை ட்ராபிக்குக்கு ஆப்ட்!”
“ஆனாலும் ஹெல்மெட்டோட கிளம்பும் போது ஏதோ யுத்தத்துக்குப் போற மாதிரி இல்ல?”
“உண்மைதான்... இன்னிக்கு ஒரு இண்டியன் ஹார்ட் கிட்னி இல்லாமகூட இருப்பான். டூ வீலர், செல்போன் இல்லாம இருக்க மாட்டான். உங்க பத்திரிகையே கூட அவங்க விளம்பரங்களால தான சர்வைவ் ஆகிட்டிருக்கு..?”
- அதற்குள் போர்ட்டிகோ கடந்து வாசல் வந்துவிட, அழகாய் ஷூக்களைக் கழற்றி விட்டவனாய் ஓரமாய் வைத்த ஹெல்மெட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு பாரதியைத் தொடர்ந்து உள் நுழைந்தான்.
அழகான ஹால்! பாரதியின் ரசனைக்கேற்ற ஓவியங்கள், கலைப்பொருள்கள். குறிப்பாய் ஒரு டிஸ்ப்ளேயில் கோலிகுண்டு கிட்டிப்புள், பம்பரம், பல்லாங்குழி, கவண்கல்...
“ஹேய்ய்..! இன்ட்ரஸ்ட்டிங் கலெக்ஷன்ஸ்...” என்று அவனிடம் ஒரு சன்னமான கூவல்.
“முதல்ல உக்காருங்க அரவிந்தன் சார். உடனே திரும்பிப் போகணும்கிற நெருக்கடியெல்லாம் இல்லையே?”
“இல்ல... இன்பாக்ட் டின்னர்க்கு நாம எங்கேயாவது வெளிய போறதிருந்தா கூட போலாம்.”
“ரொம்ப சந்தோஷம்... இப்ப டீ சாப்பிடலாமா?”
“கிரீன் டீ கிடைக்குமா?”
“ஷ்யூர்.. அடைக்கலம்மா...”
“காதுல விழுந்திச்சிம்மா... அஞ்சே நிமிஷம்.”
- அரவிந்தன் பார்வை நாலாபுறமும் உட்கார்ந்தபடியே பார்த்தது. ஏதோ ஒரு அரண்மனைக்குள் இருப்பதுபோல் ஓர் உணர்வு தட்டியது. அப்படியே விபூதி வாசம் அப்போதுதான் அவன் மூக்கை உரசவும் செய்தது.
“ஆமா என்ன ஒரு விபூதி வாசனை... பூஜை ரூம் பக்கத்துல இருக்கா?” - அவன் அப்படிக் கேட்ட மறுவிநாடி பாரதியின் முகத்தில் சலனமும் பார்வை ஹாலின் ஒரு பகுதியில் முருகன் படத்துக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த அந்த மரப்பெட்டியின் மேல்தான் சென்று நின்றது.
அதைப் பார்த்தபடியே எழுந்தவள், ``வாங்க சார்... வாசனைக்குக் காரணத்தை கிட்டயே போய்த் தெரிஞ்சிக்கலாம்’’ என்றபடியே நடந்து பெட்டியை சமீபித்து நின்றாள். அரவிந்தனும் நெருங்கினான். இப்போது பக்கத்தில் பாரசீக ஜாடிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அந்த வாளும் கண்ணில் பட்டது.
அரவிந்தனிடம் பரபரப்பின் பல்ஸ் எகிற ஆரம்பித்தது.
“பாரதி, நீங்க சொன்ன வாள் இதுதானா?”
- அவளிடம் ஆமோதிப்பாய் இமைத்துடிப்பு.
“பெட்டியா இப்படி வாசனை அடிக்குது..?”
மீண்டும் இமைத்துடிப்பு.
“இதைப் பத்தி எதுவும் சொல்லலியே..?”
“இது வந்தே சிலமணி நேரம்தான் ஆகுது.”
“இதை எதுக்கு வாங்கினீங்க..?”
“ஏன்... பழைய பொருள்கள் கடைல இத நீங்க பார்த்தா வாங்க மாட்டீங்களா?”
“ஓ... ஹேபிட்!”
“அது சாதாரண வார்த்தை சார்... என் விருப்பம்கிறது அதுக்கும் மேல...”
“சிலருக்கு முன்னோக்கிப் போறதுல ஒரு பரவசம். சிலருக்குப் பின்னோக்கிப் போறதுல ஒரு பரவசம். நீங்க இதுல பின்ன போல இருக்கு.”
- என்றபடியே வாளின் கைப்பிடியில் தன் கையை வைத்து வளைத்துப் பிடித்து அப்படியே உறையோடு நிமிர்த்தியும் பிடித்தான் அரவிந்தன்.
பாரதியிடம் ஹார்ட் பீட் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது.
“நான் இப்ப ஒரு ராஜா மாதிரி இருக்கேனா!’’ என்று கத்தியைப் பிடித்தபடியே விளையாட்டாகக் கேட்டான். பாரதி பதில் கூறாமல் அவனையே பார்த்தாள். அடுத்து அவன் வாளை உருவி வெளியே எடுக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன் உறையோடு ஒரு முறை விசிறிப் பார்த்து, அது பாரமாக இருப்பதை உணர்ந்து உறையை விட்டு வாளை வெளியே எடுக்க முனைந்தான். பாரதி சட்டென்று நாலாபுறமும் பார்த்தாள். அடைக்கலம்மா டீ தயாரித்து எடுத்து வந்தபடி இருக்க, அவளை, பார்வையாலேயே கிட்டே வராதே என்று தடுத்து நிறுத்தியவள் முன், அரவிந்தனும் வாளை உருவ முனைய, அவன் மார்புப் பக்கம் சட்டென்று செல்போன் ஒலித்து அவன் முனைப்பைத் தடுத்தது. ப்ச்ச்!
அந்தக் கத்தியை ஒரு கையில் பிடித்தபடியே செல்போனுக்குத் தன் வலது காது மடலைக் கொடுத்தான்.
“எழுத்தாளர் அரவிந்தன் சார்தானே?”
“ஆமாம், நீங்க?”
“சார், நான் உங்களோட வெரி பிக் பேன் சார். என் பேர் மூர்த்திசார்...”
“சந்தோஷம் மிஸ்டர் மூர்த்தி. நான் இப்ப ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன். நானே உங்கள கூப்பிட்டு அப்புறமா பேசறேன். பை...” என்று கட் செய்தவன் செல்போனை பாக்கெட்டில் போட்டபடியே “பாரதி இந்தக் கத்திதானே அந்த ரத்தம் குடிக்கற கத்தி?” என்று கேட்டு அதே வேகத்தில் உறையிலிருந்து வாளை உருவினான். விசுக்கென்று வெளிப்பட்ட அது பாரதி மேல் படப்பார்த்து அவள் மின்னல் வேகத்தில் ஒதுங்கிக்கொண்டாள்.
நல்ல வேளை... நல்ல வேளையேதான்!
இந்த முறை ரத்தக் காயம் எதுவுமில்லை..!
அவளிடம் பெருமூச்சு...
“நத்திங் டு ஹேப்பன்ட்... இல்ல?” - அவனிடம் கேள்வி. அவளிடமும் ஆமோதிப்பு. அப்படியே வாளைக் கையில் பிடித்த படியே சோபா நோக்கித் திரும்பினான். அதன்மேல் பொறிக்கப்பட்ட எழுத்துகளையும் படித்தான். அலுவலக அறையிலிருந்து பானு அவ்வப்போது எட்டி எட்டிப் பார்த்தாள்.
அரவிந்தனோ வாளை முன்னால் உள்ள மோடா மேல் வைத்தான்.
அடைக்கலம்மாவும் அருகில் இருவருக்குமான டீயோடு வந்து நின்றாள். உறை அங்கே பெட்டிக்குப் பக்கத்தில் ஜாடி அருகில் இருந்தது.
“எடுத்துக்குங்க சார்...”
“தேங்க்யூ...” என்றபடி எடுத்துக்கொண்டவன் முன் அவளும் எடுத்துக்கொண்டாள். அவனுக்கு நேர் எதிர் சோபாவில் டீயை சூப்பியபடியே அமர்ந்தாள். கூர்ந்து பார்த்தாள். இருவருக்கும் நடுவில் அந்த வாள்.
“என்ன பாரதி... ரொம்ப டெம்ப்ட்டாயிட்டீங்களோ?”
“ஆமாம் சார்... நான் கவனமா இல்லாமப்போயிருந்தா இந்தக் கத்தி இப்பவும் ரத்தம் பார்த்திருக்கும்.”
“என்ன... சம்திங் மிஸ்டீரியஸ்னு ஆழமா நினைக்க ஆரம்பிச்சிட்டீங்களா?”
“நினைக்க வைக்குது சிச்சுவேஷன். ஆனா நான் மறுக்கிறேன் அரவிந்தன் சார்.”
“இந்த சார் வேண்டாமே...”
“ஓ.கே. நீங்க என்ன நினைக்கறீங்க?”
“நினைக்க இதுல என்ன இருக்கு. எல்லாமே என்வரைல நார்மலா இருக்கற மாதிரிதான் தெரியுது...”
“ரியலி?”
“ம்... இப்ப என்ன பெருசா அமானுஷ்யமா நடந்திடிச்சு? எல்லாமே ஜஸ்ட் கோ இன்சிடென்ஸ்... என்ன இந்த கோ இன்சிடென்ஸ் உங்க வரைல கொஞ்சம் அதிகமா நடந்துட்டதால ஒரு கற்பனை... அதன் காரணமா பயம்னுவேணா சொல்லலாம்.”
“நீங்க இப்படிச் சொல்றது எனக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கு சார்...”
“இப்பதானே இந்த சார் மோரெல்லாம் வேண்டாம்னேன்...”
“சட்னு வர மாட்டேங்குது.”
“எல்லாம் வரும். என்ன உங்க காலேஜ் மேட்டா கற்பனை செய்துக்குங்க.”
“காலேஜ்மேட்னா வாங்க போங்கன்னும் சொல்ல முடியாதே?”
“வேண்டாம்... என்ன உங்க வயசு?”
“எதுக்கு இந்தக் கேள்வி?”
“நயன்தாராவே சொல்லிட்டாங்க. கமான்.”
“இருபத்தொன்பது...”
“எனக்கு முப்பத்து மூணு... ஜஸ்ட் போர் இயர்ஸ்தான் வித்யாசம். நாம வா போ நீன்னே பேசிக்கலாம்...”
- அரவிந்தன் பேச்சு அவள் முகத்தில் பன்னீரைத் தெளித்தாற்போல் உணரச்செய்து வெறிக்கச் செய்தது. பானு அப்போது சில கவர்களோடு வெளியே புறப்பட்டுச் சென்றாள். செல்லும்போது அரவிந்தனை விழுங்குவதுபோல் பார்க்கத் தவறவில்லை.
“கமான் பாரதி... பார்மலான இடைவெளி இனி வேண்டாம்னு நினைக்கறேன். எவ்வளவு எழுதியிருப்பேன்? இப்ப பேசிக்கிட்டிருக்கேன்... தட்ஸ் ஆல்!” - அவன் தூண்டினான்.
“தேங்க்யூ அரவிந்தன்... நான் இப்ப ரொம்ப ப்ரீயா பீல் பண்றேன்...”
“குட்... இந்த அரவிந்தன்லகூட கொஞ்சம் டிஸ்டன்ஸ் தெரியுது. அர்விந்த்னு கூப்பிடு. ஒரு நல்ல குளோஸ் ப்ரெண்ட்ஷிப்பை பீல் பண்ணலாம்.”
“ஷ்யூர்...”
“பத்திரிகைத் துறைல இருக்கே - அப்பா ஒரு செலிபிரிட்டி வேற. நிச்சயம் மனம் விட்டுப் பழக நட்பு அமையறது சிரமமா இருக்கும். அதனால இண்டிவியூஜுவலா செயல்பட்றது அதிகமா இருக்கும். அம்மா ஸ்கூல் டேஸ்லயே இறந்துட்டாங்க இல்லியா?”
“ஆமாம்...”
“அதுவும் ஒரு காரணம். வீட்ல நிறைய வேலைக்காரங்க வேற. அதனால கமாண்டாவே இருப்பது பழகியிருப்பே. அப்பாவைக்கூட டைனிங்டேபிள்ள பார்த்தாதான் உண்டு இல்லையா?”
“ஸ்கேன் பண்ணிப் பார்த்த மாதிரி இருக்கு உங்க பேச்சு.”
“உன் பேச்சு... உன் பேச்சு! கம்குளோஸ்டு மீ! பயப்படாதே... எக்காரணத்த கொண்டும் ஐ லவ் யூன்னுல்லாம் சொல்லிட மாட்டேன். நான் இப்ப உன் நண்பன். நீ என் தோழி. தமிழ் சினிமாவோட எந்த பாதிப்புகளும் நமக்குக் கிடையாது. ஓ.கே...”

- அரவிந்தன் அத்தனை வேகமாய் நெருங்கி வந்து பேசுவான் என்பதை பாரதி துளிகூட கற்பனை செய்திருக்கவில்லை. அதிலும் அந்த ஐ லவ்யூவை நினைக்கக்கூட இல்லை. அவள் வரையில் பல அமானுடங்களுக்கு நடுவில் அதே வேகத்தில் ஒரு மானுடமும் செயல்படுவதுபோல் தோன்றியது.
“என்ன பாரதி, எதுவும் பேசமாட்டேங்கிறே?”
“என்ன பேசறதுன்னே தெரியல அரவிந்த்...”
“தெரியலியா... உனக்கா? சரிதான்...”
அவன் கேலியாகச் சிரித்தான்.
“நிஜம்மா அரவிந்த்...”
“இட்ஸ் ஓ.கே. இனி இந்த வாளைப் பார்த்து வித்யாசமா நினைக்க மாட்டேதானே?”
“ஷ்யூர்!”
“அந்த விபூதிப் பெட்டி இங்க வேண்டாம். ஒரு மடத்துக்குள்ள இருக்கற மாதிரி இருக்கு. பின்னால உங்க அப்பாவோட ப்ளக்ஸ் இருக்கிற குடோன்ல போட்டுடு.”
“ஓ.கே...”
“சரி நாம கொஞ்சம் வேற விஷயம் பேசுவோமா?”
“வேற விஷயம்னா?”
“என் ஒத்திகை தொடர் பத்தி...”
“ம்... பேசலாமே!”
“கறாரா சப் எடிட்டராவே பேசு. முதல் அத்தியாயம் எப்படி இருந்தது?”
“ஐ ஆம் சாரி... கான்சன்ட்ரேட் பண்ணியே நான் படிக்கல...”
“நோ பிராப்ளம். இப்பகூட உன் மெயிலைத் திறந்து படிச்சிட்டுப் பேசலாமே...”
“அப்ப மாடில என் ரூமுக்குப் போயிடுவோமா?”
“அவசியமில்ல... இந்த தர்பார்லயே நம்ப விவாதம் நடக்கட்டும். பாக்கறவங்களுக்கும் ஒரு நார்மல் பீல் வரட்டும்.”
- அரவிந்தன் ஒரு முடிவோடும் தெளிவோடும் தான் அப்படிச் சொன்னான். அவ்வேளையில் `ஸ்ஸ்ஸ்ஸ்’ என்கிற ஒரு மெல்லிய சப்தம்தான் முதலில் கேட்டது. முதல்முறை ஒலித்த அது அடுத்தமுறை பலமாய் ஒலிக்கவும் சப்தம் வந்த பக்கம் திரும்பினான் அரவிந்த். பெட்டிமேல் அந்தப் பன்னிரண்டு அடி நீள நாகம், கம்பீரமாய்..!
- தொடரும்.
இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்