மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 30

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

நான்காம் சுவர் - 30

‘நேற்று நடந்தவற்றை, உங்களால் மாற்ற முடியாது. நாளை நடப்பதைத் தடுக்க முடியாது. இன்றைய பொழுதில், இந்தக் கணத்தில் வாழுங்கள். அதுதான் எல்லா துன்பங்களுக்கும் தீர்வு’ என்ற புத்தர் வரிகளை, குட்டக்கையன் மணவாளன் படித்திருப்பாரா எனத் தெரியவில்லை. ஆனால், பார்த்தவரையில் இந்த நிமிடத்தை, இந்தக் கணத்தை குட்டக்கையன் மணவாளனைப்போல் யாரும் அனுபவித்ததாய் எனக்குத் தெரியவில்லை.  

`கைமால்’ போடுவதில் குட்டக்கையனும் `லெஃப்ட்’ சங்கரும் பேட்டையில் பிரசித்தம். கைமால் என்றால் `ஒண்டிக்கு ஒண்டி’. ஒத்தைக்கு ஒத்த என்பதின் சுருக்கம். ``யக்கா... குட்டக்கையன் உன் பையன அடிச்சி மூஞ்சி ஒட்ச்சிட்டான்க்கா” என்று சொல்ல, ஆராயி அலறிக்கொண்டு வந்து பார்த்தால், அவளது மூத்த பையன் பல் உடைந்து முகம் சிதைந்து ஐஸ்கட்டியை முகத்தில் வைத்துக்கொண்டிருப்பான். 

நான்காம் சுவர் - 30

``அடிவாங்கிக்கினு உக்காந்துனுகிரியே... திருப்பி அடிக்க வேணா...” ஆராயி மட்டுமல்ல, அப்போது எல்லோரும் இப்படி சண்டைபோட்டுக்கொள்ளத்தான் சொன்னார்கள். `ரௌத்திரம் பழகு’ என்ற பாரதியின் சொல்லைத்தான் பேட்டை பழகி இருந்தது. யாரும் யாரையும் கத்தியால் வெட்டிக்கொள்ள மாட்டார்கள். கத்தியால் சண்டை செய்பவனை, கோழையாகத்தான் பார்த்தார்கள். ``கையில சண்ட செய்ய துப்பில்லாம... கத்திய எத்துக்கினு வந்திருக்குது பாரு” என்று முகத்துக்கு நேரே உமிழ்ந்துவிடுவார்கள் பெண்கள். கைமால் போடுபவனைத்தான் வீரனாகப் பார்த்தார்கள்.

குட்டக்கையனும் அப்படியான ஒரு வீரன்தான். குட்டக்கையன் வயிற்றில் இருந்தபோது, அம்மை மாம்பழத்தை நிறைய சாப்பிட்டதால், பிறந்தபோது மணவாளனின் கையில் கட்டி வந்திருக்கிறது. அதை அகற்றும்போது ஒரு கை குட்டையாக ஆனது என்பதே மணவாளன் குட்டக்கையனாக நாமம் பெற்ற கதை.

குழந்தையைக் காணாமல் பரிதவித்த தாயை, பொறுப்பாகக் கூட்டிச்சென்று மேரி மாதா சிலையைக் காட்டி ``இந்தம்மாதான் ரொம்ப நேரமா குழந்தய தூக்கி வச்சிக்கினு இருக்குது. கேட்டா தர மாட்டுது. நீயே கேட்டு வாங்கிக்கோ” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டார் குட்டக்கையன். அந்த அம்மாவின் கோபத்தை நினைத்துப்பாருங்கள். இப்படித்தான் எதையாவது வம்புக்கிழுப்பதில் சந்தோஷம்கொள்வான்.

``இன்னா குட்டக்கையா... சண்டலாம் நல்லா போட்ற. ஆனா, ஒண்ணுக்குப் போறதுக்குத்தான் கை எட்ட மாட்டுதாமே!” என்று லெஃப்ட் கலாய்க்க, எல்லோரும் சிரித்துவிட்டார்கள். லெஃப்ட் பயங்கர கறுப்பு என்பதால், சற்றும் யோசிக்காமல் ``காக்கா... காக்கா இப்டி பேசுனா மாதிரியே... ஒரு பாட்டு பாடு காக்கா” என்று பதிலுக்கு அடித்ததும் எல்லோரும் லெஃப்டைப் பார்த்துச் சிரிப்பார்கள். யாராவது பளபளவென உடை அணிந்து ஃபேர் அண்ட் லவ்லியெல்லாம் போட்டுக்கொண்டு வந்தால் ``எஃப்.சி-க்குப் போயிட்டு வந்த வண்டி மாதிரியே இருக்கிறியே மச்சி!” என்று யோசிக்காமல் கேட்டுவிடுவான். ``நாங்கலாம் டிக்கெட் எடுத்துட்டோம். ரொம்ப நாளா நீயும் டிரைவரும்தான் டிக்கெட்டே எடுக்கல” என்ற வசனத்தை, போகிறபோக்கில் சொன்னது குட்டக்கையன்தான். இப்படியான குட்டகையனுக்கு சற்றும் எதிர்பாராத வேறொரு முகமும் உண்டு.

தண்டுமாரியம்மன் கோயிலின் பின்புறம், காலியான ஒரு மைதானம் உண்டு. அங்கு இருந்த பழைய பாழ்மண்டபம், சுமார் இருபது தொழுநோயாளிகளின் புகலிடமாக இருந்தது. அப்போதெல்லாம் அந்த மைதானத்துக்குள் போகவே கூடாது என அம்மா கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார். மைதானத்தைக் கடக்கும்போதெல்லாம் பார்த்திருக்கிறேன். சிலர் அடுப்பு மூட்டி சோறு பொங்கிக்கொண்டி ருப்பார்கள். சிலர் சுருண்டு படுத்திருப்பார்கள். காலையிலும் மாலையிலும் கோயில் வாசலில் கொஞ்சம் தள்ளி நின்றிருப்பார்கள். மழுங்கிய விரலில் எவர்சில்வர் தூக்கு டிபனை மாட்டியிருப்பார்கள். தூரத்திலிருந்து விழும் சில்லறைகளால் வயிற்றைத் துடைத்துக்கொள்பவர்கள். ஒருகாலத்தில் அல்ல, இப்போதும் அது பெருவியாதி என்றே பார்க்கப்படுகிறது. அவர்களோடு பேசினால்கூட மூச்சுக்காற்றில் பரவி நம்மோடு ஒட்டிக்கொள்ளும் என, பேச மறுப்பார்கள். கிட்டத்தட்ட இந்த உலகத்திலிருந்து முற்றிலும் சகமனிதர்களால் விலக்கப்பட்ட அல்லது விலகிக்கொண்ட ஜீவன்கள். எந்தப் பாவமும் செய்யாமல் அருவருப்பான பார்வைகளைத் தினம் தினம் கடந்துபோகும் `ரோகிகள்’ எனும் மனிதர்கள்.

பேட்டையில் யாராவது தன்னைத்தானே இறுக்கிக்கொண்டால் அல்லது எரித்துக்கொண்டால், குட்டக்கையனைத்தான் எல்லோரும் தேடுவார்கள். நிஜங்களை, அதன் தீவிரத்தோடு நாம் சந்தித்துவிட முடியாது. சில நிஜங்கள் அருவருப்பானவை. அதை அப்படியே காண்பதற்கு மனதின் அடுக்குகளில் பலமும் ஞானமும் வேண்டும். `கண்ணே, மணியே..!’ என்று கொஞ்சிய பிள்ளைதான் இப்போது கண்கள் வெளிவந்து நாக்கு தொங்கக் கிடக்கிறது. ஆனால், இந்த நிஜத்தை நம்மால் சந்தித்துவிட முடியாது. அந்தச் சித்திரம் வாழ்நாள் முழுவதும் நம்மோடே வந்துகொண்டிருக்கும் ரணம். ஆகவேதான் குட்டக்கையனைத் தேடிக்கொண்டு வருவார்கள். 

நான்காம் சுவர் - 30

கதவை உடைத்துக்கொண்டு போவான். எந்தவித சலனமுமின்றி பிரேதத்தை இறக்குவான். தொங்கிக்கொண்டிருந்த நாக்கை மடித்து வாயில் முடிந்த மட்டும் நுழைத்துவிட முயல்வான். முகத்தை சமனாக்குவதற்கு அவ்வளவு சிரமப்படுவான். நெருங்கியவர்களின் கடைசிச் சித்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பது ஞானவான்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஒற்றை ஆளாய்த் தூக்கி வருவான். எரிந்து பொசுங்கியவர்களை, போர்வையால் மூடி குட்டக்கையன் தூக்குவதை ஒருநாள் பார்த்துவிட்டேன். எத்தனையோ இரவுகள் அந்தக் காட்சி மனதுக்குள் வந்து நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது.

குட்டக்கையன், பார்ப்பதற்கு அழகாக இருப்பான். சுருள் முடியில் பேரல் பேகி பேன்ட்டைப் போட்டுக்கொண்டு மார்ட்டின் சட்டையை டக்-இன் பண்ணி நடந்தால், பத்மா மட்டுமல்ல பல தாவணிக் கண்கள் அவனை மொய்க்கும். இப்படியான துர்மரணங்களைத் தூக்குவதால் வீட்டில் குட்டக்கையனைச் சேர்த்துக்கொள்ள மறுத்தார்கள்.

``கண்ட பொணத்தத் தூக்கிப் போட்டுட்டு... வீட்டுக்கு நீ பாட்டுக்கு வந்துர்ற... உன்கூடவே வர்ற ஆவிங்க சேஷ்ட எங்களுக்கு வேணுமா? நீ வூட்டுக்கு வராத... மூத்தபுள்ள ஒண்ணு இல்லன்னு நினைச்சிக்குறேன்” அம்மா அழுதுகொண்டே துரத்திவிடுவாள். குட்டக்கையனுக்கு இடமா இல்லை. எங்கு வேண்டுமானாலும் படுத்துக்கொள்வான். வீட்டைவிட்டு துரத்திய அம்மாதான் சோற்றை எடுத்துக்கொண்டு குட்டக்கையனைத் தேடவும்செய்வாள் என்பது, தனிக்கதை.

ஏதாவது பிரச்னையென்றால் கைமாலில் இறங்கிவிடும் குட்டகையன்தான் இப்படியான சேவைகளையும் செய்வான். இந்த நகரத்தில் ஒதுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட யாவருக்கும் குட்டக்கையன்தான் காப்பாளன். பேட்டைவாழ் பெருமக்கள் எல்லோரும் மைதானத்தை மூக்கைப் பிடித்துக்கொண்டு தாண்டியபோது, அந்த மனிதர்களை அவர்களின் வாழ்விடத்தில் போய்ச் சந்தித்தவன் குட்டகையன்.

``அம்மா, ரெண்டு நாளா குட்டண்ணன் மைதானம் பக்கம் வரலம்மா. லெட்டர் எழுதணும். வந்தா வரச் சொல்லுங்கம்மா” தூரத்தில் நின்று சொல்லிவிட்டுப் போனார் பரமேஸ்வரன் ரோகி. அவர் போனதும் அவர் நின்ற இடத்தைக் கழுவிக்கொண்டே ``பொணத்தத் தூக்குறது... குஷ்டரோகிகளோடு பழகுறதுன்னு இருக்கிறானே... இவனை என்னதான் செய்றது?” என்று புலம்பிக்கொள்வார் அவரின் அம்மா.

தெருவில் கோலி விளையாடிக்கொண்டிருந்த ஒரு நாளில், ஆட்டோவில் எங்களைக் கடந்து சென்றார் குட்டக்கையன். திடீரென நின்ற ஆட்டோவிலிருந்து என்னையும் ராஜாவையும் கூப்பிட்டார். கோலியை பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். என்னோடு வந்த ராஜாவுக்கு, `உருளைக்கிழங்கு’ என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. பார்ப்பதற்கு உருண்டு திரண்டு உருளைக்கிழங்குபோலவே இருப்பான்.

``டேய் உருள... நம்ம கவுன்சிலர் வூட்ல பர்த்டே பங்சனாம்... பிரியாணி மீந்துச்சாம். அதான் கூப்டாப்ல... இந்த ரெண்டு தூக்குல எடுத்துக்கினு போயி டிஸ்ட்ரிபியூட் பண்ணிட்லாம்” என்று சொன்னார். பிரியாணி என்றதும் பயணம் இனிமையாக மாறியது எங்களுக்கு. கவுன்சிலர் வீடு வந்ததும் எங்களைப் பார்த்து ``சிஷ்யனுங்களா... ஒண்ணு பண்ணுங்கோ. நீங்க இங்கியே துண்டுறுங்கோ. அப்றமா பார்சல் கட்டிக்கலாம்” என்று எங்களை டேபிளில் அமரவைத்துவிட்டு தூக்குவாளியோடு பிரியாணி டபராவை நோக்கிச் சென்றார். நானும் உருளைக்கிழங்கும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். நாளையோடு இந்த உலகம் அழிந்துவிடப்போகிறது என்பதாய் பிரியாணியை சட்டிச்சட்டியாய்ச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் உருளை.

உண்ட களைப்பில் ஆட்டோவில் திமிறிக்கொண்டிருந்தான் உருளை. மைதானத்தில் நுழைந்தது ஆட்டோ. இதுவரை போகிறபோதும் வருகிறபோதும் தூரத்தில் பார்த்த இவர்களை, இவர்களின் இடத்தில் பார்க்கப்போகிறோம் என்றாலும் உள்ளூர பயம்தான் இருந்தது. ``யண்ணா... இங்க வந்தன்னு தெரிஞ்சா வூட்ல சேக்க மாட்டாங்கண்ணா. வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கோம். நீ குத்துட்டு வந்துருணா” உருளை சொல்ல, அதை நானும் ஆமோதித்தேன்.

``ச்சீ வாய மூடுங்கடா... படிக்கிற புள்ளைங்கதானடா நீங்க. இவங்களோடு பழகுனா குஷ்டம் வந்துருமா? நான் ரெண்டு வருஷமா இவுங்களோடு பழகுறேன். எங்க அம்மா வூட்டவுட்டு தொரத்தும்போதுலாம்... இங்க வந்து படுத்திருக்கேன். ஏன் எனுக்கு குஷ்டம் வந்துச்சா... ஆங்... மூடிக்கினு வாங்கடா” இனிமேலும் உள்ளே போகவில்லையென்றால் குட்டகையன் கைமாலில் இறங்கிவிடுவான் என்பதால் பொத்திக்கொண்டு உள்ளே போனோம்.  

நான்காம் சுவர் - 30

பாழ்மண்டபத்தில் பத்து பேராவது இருந்தார்கள். மைதானத்தின் பக்கவாட்டில் இவர்களுக்கு என ஒரு குளியலறையை, விளம்பரப் பதாகையால் கட்டிக்கொண்டார்கள். அந்தப் பதாகையில் எம்.ஜி.ஆர் `நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்...’ என்ற பாடலுக்கு சாட்டையை எடுத்து விளாசுவாரே அப்படி விளாசுவதாய் நின்றுகொண்டிருந்தார். குட்டக்கையனின் வருகை என்பது அவர்களுக்கு இனிமையான ஒன்றாக இருந்தது. பிரியாணி வாளியை ஆட்டோவிலிருந்து இறக்கி வைத்தோம். என்னதான் இருந்தாலும் என்னவோபோல்தான் இருந்தது. ஒட்டுமொத்தமான அங்க ஹீனத்தை அருகில் மிக அருகில் பார்ப்பது என்பது, எனக்கும் உருளைக்கும் குமட்டுகிற விஷயமாகத்தான் இருந்தது. பட்டும்படாமலும் அங்கே நின்றிருந்தோம்.

``குட்டண்ணே, இன்னிக்கு வேற பிரியாணின்னு சொல்ட்டியா... ராபினு காத்தாலர்ந்து சாப்புடாம வெயிட்டிங்ல இருக்கான்” பாட்டிலின் ரப்பர் மூடியைத் திறந்து நீல மருந்தை முனை மழுங்கிய கால்வாசி விரல் ரணத்துக்குத் தடவிக்கொண்டார் சம்சுதின். குட்டக்கையன் சிரித்தபடியே பிரியாணி வாளியைத் திறந்தான். மசாலா வாசனை பாழ்மண்டபமெங்கும் காற்றோடு கலந்தது. தட்டை முதலில் நீட்டியவன் ராபின்தான். கல்யாணம்கூட ஆகவில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. காடுகள்போல இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அவனது விரல்கள் ரோகத்தால் மக்கிக்கொண்டிருக்கிறது.

``டேய் உருள, முட்டைய எடுத்து எல்லாருக்கும் வைடா” கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னார். முட்டையை அவரவர் தட்டுகளில் எங்கள் கை விரல்கள் பட்டுவிடாதவாறு வைத்தோம். இல்லை... இல்லை... போட்டோம். எப்படியிருந்தாலும் சரி, ராபின் அப்படிச் சாப்பிட்டான். அவ்வப்போது மழுங்கிய விரலைச் சுவைத்துக்கொண்டான். வானத்துக்குக் கீழிருக்கும் அத்தனை உயிர்களுக்கும் ஒரேயொரு மொழிதான் இருக்கிறது. அது பசி. முதல் பசி வயிற்றிலிருந்து தொடங்குகிறது. அப்புறம்தான் மற்ற பசிகளெல்லாம்.

சாட்டையைச் சுழற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் பரமேஸ்வரன். குளித்து முடித்து வாசனையோடு இருந்தார். மண்டபத்துக்குள் வந்தவர் ``குட்டண்ணே... நீங்க சாப்பிட்டீங்களாண்ணே...” துணி மூட்டையிலிருந்து வேட்டியை எடுத்து உடுத்திக்கொண்டார். பத்து விரல்களும் நேருக்கு மாறாக மழுங்கி இருந்தாலும் வேட்டியின் முனையைப் பற்றி லாகவமாக அவரால் கட்ட முடிந்தது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. புதிய பிளாஸ்திரியை நீல மருந்தை வைத்து ரணத்தில் அவரே கட்டுப் போட்டுக்கொண்டார். அவரது முகம் புருவங்கள் எல்லாம் இழந்து நெற்றியும் மூக்கும் மேலே இழுத்தபடி வேறுவிதமாய் காணப்பட்டன.

மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ரேடியோவை ராபின் போட்டான். `ஆகாசவாணி, செய்திகள் வாசித்துக்கொண்டிருப்பது சரோஜ் நாராயண்சாமி...’ என்று செய்திகள் தொடர்ந்தன.  பரமேஸ்வரனும் பேப்பரும் பேனாவுமாக வந்து அமர்ந்துகொண்டார். `யாழ்ப்பாண பொது நூலகம், எரிக்கப்பட்டது’ எனும் செய்தி ரேடியோவில் வந்துகொண்டிருக்க, பரமேஸ்வரன் கொதிப்பானார். ``தனி ஈழம் நமக்குன்னு அமையும்ணே... அப்போ இருக்கு இவனுங்களுக்கு” பேப்பரை குட்டக்கையனிடம் கொடுத்தார்.

``தமிழனுக்கு ஒரு நாடு வேணும்னு நினைக்கிற உங்க மனசுக்காகவே தமிழ் ஈழம் அமையும்ணே. அப்பிடி அமைஞ்சதுன்னா அப்பவாவது உங்கள மாதிரியா னவங்களுக்குன்னு ஒரு வீடாவது இருக்கணும்னு தோணுதுண்ணே” - குட்டக்கையன் சொன்னபோது, ராபின் அவன் ரணத்தின்மேல் உட்கார்ந்து ஈவுஇரக்கமின்றி ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டி ருக்கும் ஒரு ஈயைத் துரத்திக்கொண்டிருந்தான்.

இப்போது ரேடியோவில் இளையராஜா உருகிக்கொண்டிருந்தார். பரமேஸ்வரன் கடிதத்தைச் சொல்லச் சொல்ல, குட்டக்கையன் எழுத ஆயத்தமானார்.

`அன்பு பூனக்குட்டி பாரதிக்கு... எப்பிடிம்மா இருக்க? அப்பா நல்லா இருக்காம்மா... அம்மா எப்படியிருக்கு... அண்ணன் வேலைக்குப் போறானா... அவன சிகரெட்டை கம்மிபண்ணச் சொல்லு. என்ன பத்தி நீங்க யாரும் கவலைப்படவேணாம் புரியுதா... நான் இங்க நல்லாதான் இருக்கேன்...’ எழுதிக்கொண்டிருந்த குட்டக்கையன், நிமிர்ந்து பரமேஸ்வரனைப் பார்த்தார். அவர் இந்த மண்டபத்தில் இல்லை. அவர் மனம் முழுவதும் அவரது மகள் பாரதியே இருக்கிறாள்.

`உனக்குப் பிடிச்ச வாழ்க்கைய நீ தேர்ந்தெடுத்துக்கோ பாரதி. அமுதன் உனக்கு சரியானவன்னு தோணுச்சுன்னா, கல்யாணம் பண்ணிக்கம்மா. எதுவானாலும் உன் அம்மாகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கோ. நமக்காகக் கஷ்டப்பட்டுதைத் தவிர அவ வேற ஒண்ணுத்தையும் அனுபவிக்கல. என்ன மன்னிச்சுரு பாரதிம்மா. நீ எவ்ளோ சொல்லியும் நான் உன்னைவிட்டுட்டு வந்துட்டேன். எனக்கு இந்த நோயி வந்திருக்கக் கூடாதும்மா. அழகான மொகத்தோடு அப்பாவ பார்த்த நீ, இந்தக் கோலத்துல நீ பார்க்கவே கூடாதுடா’ பரமேஸ்வரனை இப்போது நான் பார்த்தேன். அவரது கண்களிலிருந்து நீர் துளிர்த்து வழிந்தோடி அவரது ரணங்களை ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தது. மனிதர்களுக்கு, வாழ்வு என்பதும் அன்பு என்பதும் ஒன்றுதான்.

`அப்பா காணாமப்போனதாவே இருக்கட்டும்மா... இப்படியொரு அப்பனுக்குப் பொறந்தா... ஒனக்கு பிற்காலத்துல நோய் வந்துரும்னு நினைப்பானுங்க... என் பூனக்குட்டிக்கு எல்லா சந்தோஷங்களும் கிடைக்கணும். அப்பல்லாம் நான் வீட்டுக்கு வரும்போது... `அப்பா...’ன்னு சிரிச்சுக்கிட்டே ஓடிவந்து கட்டிப்புடிச்சுப்பல்ல... அந்த பாரதிம்மாவோட மொகமே எனக்குப் போதும்மா. அம்மாவைப் பார்த்துக்கோ. இதான் மொதலும் கடைசியுமான கடிதம். அப்பாவால இதுக்குமேல எழுத முடியலம்மா. நல்லாயிருக்கணும் நீ. இப்படிக்கு உன் அப்பா’ என்று எழுதி முடித்தபோது குட்டக்கையன் முகவரியைக் கேட்டு எழுதிக்கொண்டார்.

பரமேஸ்வரனைப் பார்த்தேன். அன்பு எனும் வாழ்வு கிடைக்கும்போதைவிட, கிடைக்காமல் போகிறபோதுதான் பெருவலி உண்டாகிறது. இவர்களின் ஒட்டுமொத்த வாழ்வும் வலியும் குட்டக்கையனுக்குத் தெரிந்திருக்கிறது. இந்தக் காரணத்தை வலியோடு உணரும் குட்டக்கையன் அடுத்த நொடி பகடியால் வேறொரு கணத்தையும் அடைந்துவிடுவார். முதலும் கடைசியுமான கடிதத்தை, தனது குருதியால் எழுதிய தகப்பனை என்னால் பார்க்க முடியவில்லை.

காலச்சக்கரத்தைச் சுழற்றுகிறேன். அந்தக் காட்சி வருகிறது. பொலிவான முகத்தோடு வீட்டுக்குள் பரமேஸ்வரன் நுழைகிறார். `அப்பா...’ என ஓடிவந்து பாரதி கட்டிப்பிடித்து முத்தம் கொஞ்சுகிறது... முத்தம் கொஞ்சுகிறது. அதுபோதும்!

- மனிதர்கள் வருவார்கள்...