
சூப்பர் ஹீரோஸ் - புத்தக நாயகர் போலன் சர்கார்
‘உங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறது. கட்டுப்பாட்டுக்குள் வைக்க தினமும் சில கிலோமீட்டர் நடக்க வேண்டும்’ என்றார் மருத்துவர்.
‘‘மிகவும் வசதியாகப் போய்விட்டது’’ என்றபடி உற்சாகமானார் போலன் சர்கார். அவருக்குள் ஒரு திட்டம் உருவாகியிருந்தது. என்ன திட்டம்? யார் இவர்?
1921ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் (ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த இந்தியா) பிறந்தவர், போலன் சர்கார். ஏழ்மை நிறைந்த குடும்பம். ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்துபோனார். சொந்த ஊரில் பிழைக்க வழியில்லை. சர்காரின் தாய், பிள்ளைகளுடன் ராஜசாகி நகரத்துக்குக் குடிபெயர்ந்தார்.

ஆறாம் வகுப்புடன் சர்காரின் படிப்பு நின்றுபோனது. சர்காருக்கு நாடகங்கள் பார்ப்பதில் ஆர்வம். எனவே, மேடை நாடகக் குழு ஒன்றில் சேர்ந்தார். அங்கே கதை, இலக்கிய நூல்கள் படிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது.
வாசிப்பின் ருசி அவரை மயக்கியது. நூலகங்களை முழுமையாகப் பயன்படுத்த ஆரம்பித்தார். பழைய புத்தகங்களைக் குறைந்த விலைக்கு வாங்கியும் படித்தார். பள்ளிப் படிப்பில் பெறமுடியாத அறிவை, புத்தக வாசிப்பில் பெற்றார். புத்தகமே குருவாகவும் உயிர் நண்பனாகவும் மாறியது.
வங்க மொழியில் தேர்ந்த சர்கார், ஒப்பந்தப் பத்திரங்கள் எழுதுவது, அலுவலகக் கூட்டங்களில் அதிகாரிகள் பேச்சைக் குறிப்பெடுப்பது, வழக்குகளுக்கான கோப்புகளைத் தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டும் சம்பாதித்தார். அடிப்படைத் தேவைகளுக்குப் போக, மீதித் தொகையில் புத்தகங்கள் வாங்கிக் குவித்தார்.

அவருக்கு சௌகிதார் வேலை கிடைத்தது. அதாவது, ஊர் ஊராகச் சென்று மக்களிடம் வரி வசூலிக்கும் வேலை. அந்த வேலைக்காகப் பல ஊர் மக்களைச் சந்திப்பதும் பிடித்திருந்தது. அதன்மூலம் தன்னிடமுள்ள புத்தகங்களை மக்களுக்கு வழங்கி, வாசிப்புப் பழக்கத்தை உண்டாக்கலாம் என்று திட்டமிட்டார்.
அதன்படியே, வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்தார். ஒரே ஒரு நிபந்தனைதான். மீண்டும் அதே ஊருக்கு அவர் வரும்போது, புத்தகங்களைத் திருப்பித் தந்துவிட வேண்டும்.
புத்தகங்கள் ஒரே இடத்தில், ஒரே அலமாரியில் முடங்கிக் கிடந்தால் யாருக்கு பிரயோஜனம்? சர்கார் வழியே புத்தகங்கள் பல்வேறு கைகளிலும் சுற்றிவர ஆரம்பித்தன.

செல்லும் ஊர்களில் குழந்தைகளுக்குப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்தார். ஒவ்வொரு குழந்தையும் அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு இன்னொரு குழந்தைக்குக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கினார்.
‘ஒவ்வொரு புத்தகமும் நண்பன். நமக்கு நல்லது மட்டுமே செய்யும் நண்பன்’ என்று குழந்தைகளுக்குப் புத்தகங்கள் மீது நேசம் பெருகச் செய்தார்.
1965ஆம் ஆண்டில் சர்காருக்கு அவரின் தாத்தா சொத்து கொஞ்சம் வந்தது. அதனுடன் கொஞ்சம் பணத்தையும் சேர்த்து, ‘ஹாருன்-அர்- ரஸீத்’ என்ற பெயரில் உயர்நிலைப் பள்ளியை ஆரம்பித்து, பல குழந்தைகள் கல்வி கற்க வழிவகுத்தார்.
பள்ளியில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்குப் புத்தகங்களைப் பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்.
1992ஆம் ஆண்டில், சர்காருக்குச் சர்க்கரை வியாதி இருப்பதாகவும், தினமும் நடக்க வேண்டும் என்றும் சொன்னார் மருத்துவர். அதையும் தனக்கான நல்ல வாய்ப்பாக மாற்றிக்கொண்டார்.
ஒரு தோள்பை நிறைய புத்தகங்களை எடுத்துக்கொள்வார். கையில் சுமக்க முடிந்த அளவுக்கும் புத்தகங்கள் இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஊர். தெருத் தெருவாக நடந்தே செல்வார்.
மக்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்தார். ஏற்கெனவே கொடுத்த புத்தகங்களை வாங்கிக்கொண்டார். ‘‘எப்படி இருந்தது இந்தப் புத்தகம்?’’ என்று கருத்துகளையும் கேட்டார்.
புத்தகங்கள் மூலம் மக்களின் அன்பைச் சம்பாதித்த சர்காரை, வங்கதேசத்தின் ‘நடமாடும் நூலகம்’ என்று அழைத்தனர்.

அவரது சேவை மூலமாக ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் வாசிப்புப் பழக்கத்தின் ருசியை உணர்ந்தனர். தங்கள் அறிவை விசாலப்படுத்திக்கொண்டனர்.
மக்கள் அவரைச் செல்லமாக, ‘Alor ferry-wala’ என்றும் அழைத்தனர். அதற்கு ‘வழிகாட்டும் ஒளிவிளக்கு’ என்று அர்த்தம். 2011ஆம் ஆண்டில் சர்காரின் சமூக சேவையைப் பாராட்டி, வங்கதேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான எகுசே பதக்கம் வழங்கப்பட்டது.
2019 மார்ச் 1 அன்று, 98 வயதில் போலன் சர்கார் இந்த மண்ணைவிட்டு மறைந்தார். நடமாடும் நூலகம் தனது நடையை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டது.
வங்கதேசத்தில் மட்டும் அறியப்பட்டிருந்த அவர், இறப்புக்குப் பிறகு சர்வதேச அளவில் பேசப்பட்டார்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்பாகவே ராஜசாகி நகரத்தில் நூலகம் ஒன்றைக் கட்டினார் சர்கார். அங்கே லட்சக்கணக்கான புத்தகங்களைச் சேகரித்துவைத்துள்ளார். 2016ஆம் ஆண்டில் அவரைப் பேட்டி எடுத்தபோது சொன்ன வார்த்தைகள் இவை.
‘‘என்னால் நடக்க முடிந்தவரை புத்தகங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பேன். எப்போது என்னால் நடக்க முடியாமல் போனாலும், இந்த நூலகம் எனது பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும்.’’
ஆம்! சர்கார் அமைத்த அந்த நூலகம், வங்கதேசத்தின் மாபெரும் சொத்தாக பலருக்கும் அறிவை அளித்துக் கொண்டிருக்கிறது.