Published:Updated:

ஷெர்லாக் ஹோம்ஸ் டு தெனாலிராமன்

ஷெர்லாக் ஹோம்ஸ் டு தெனாலிராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷெர்லாக் ஹோம்ஸ் டு தெனாலிராமன்

ஷெர்லாக் ஹோம்ஸ் டு தெனாலிராமன்

ஷெர்லாக் ஹோம்ஸ் வீடு...

‘‘நண்பா, வாட்சன் இன்னிக்கு என் வீட்டுலதான் உனக்கு டின்னர் ஓகே’’ என்று போனில் சொல்லிக்கொண்டிருந்தபோது, கரன்ட் கட்.

‘‘அடடா... வாட்சன்! உன் ராசியோ, என்னவோ கரன்ட் கட். அதனால், டின்னர் உன் வீட்டுல. இட்லி மாவு எடுத்துட்டு வந்துடறேன்’’ என்றார்.

ஷெர்லாக் ஹோம்ஸ் டு தெனாலிராமன்

‘‘சரி, சீக்கிரம் வா! என் மனைவி ஊருக்குப் போய்ட்டதால் சமையல் நாமதான்’’ - வாட்சன்.

‘‘நாம இல்லே நீ!’’

‘‘மொதல்ல வா, அப்புறம் நீயா நானானு பார்த்துக்கலாம்!’’

ஹோம்ஸ் உடனே கிளம்பி சின்சான் அண்ணாச்சி கடைக்குப் போறார். ஒரு கிலோ மாவு 30 ரூபாய்க்குப் பேரம் பேசி வாங்கியாச்சு. அதை எடுத்துக்கிட்டு வாட்சன் வீடு நோக்கி நடக்கறார்.

அப்போ, டோராமானின் கண்டுபிடிப்பு பொம்மை ஊர்தி, ஹோம்ஸ் மீது  மோதி, மாவு கீழே சிதறிடுது.

உடனே அங்கே வந்த டோராமானும் நோபிட்டா நோபீயும், மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தறாங்க. “தயவுசெஞ்சு எங்க வீட்டுக்கு வாங்க. நாம டைம் டிராவல் வழியா முன்னாடிபோய் உங்க மாவைத் திரும்ப வாங்கிப் பாதுகாத்துடலாம். ஏன்னா, எங்ககிட்ட பணமில்லே’’ என்றார்கள்.

டோரேமான், நோபிட்டா, ஹோம்ஸ் மூவரும் டைம் டிராவல் வழியாக 5 நிமிஷம் முன்னாடி போறாங்க.

இப்போது... ஹோம்ஸ் மறுபடியும் சின்சான் அண்ணாச்சி கடையில் நிற்கிறார். மாவு வாங்கினதும், ‘5 நிமிஷம் இங்கேயே இருந்துட்டு டோராமானின் வண்டி போனதும் கிளம்புவோம்’ன்னு நினைக்கிறார் ஹோம்ஸ்.

அப்போது காய்கறி வாங்க வருகிறாள்  டோரா. வாங்கிவிட்டு, ‘‘அண்ணாச்சி... கேரி பேக் (Carry Bag)’’ என்று கேட்கிறாள்.

ஷெர்லாக் ஹோம்ஸ் டு தெனாலிராமன்

‘‘என்னம்மா டோரா, ரொம்ப தூரம் வெளி மாநிலம், வெளிநாடுன்னு போயிருந்தியா? தமிழ்நாட்டில் கேரி பை தடை செஞ்சு  மாசக் கணக்காச்சு தெரியாதா?’’ என்றார் சின்சான்.

‘‘அப்போ இதை எப்படி எடுத்துப் போறது?’’

‘‘பை இருக்கா?’’

‘‘இருங்க, என் பாக் பாக்ல பார்க்கிறேன்’’ என்றபடி எடுத்தாள் டோரா. அதில், சின்சான் கடைக்குப் போட்டியா ஒரு கடையே போடற மாதிரி அவ்ளோ திங்ஸ் இருந்துச்சு.

 ‘‘பாக் பாக் உன்கிட்ட துணிப்பை இருக்கா?’’

பாக் பாக் தேடித் தந்ததும், காய்களை அதில் போட்டுக்கிட்டாள்.

‘‘ஹலோ டோரா, உன் வீட்டுல கரன்ட் இருக்கா?’’ எனக் கேட்டார் ஹோம்ஸ்.

‘‘இருக்கே’’ என்றபடி கிளம்பினாள் டோரா.

டோராமானின் வண்டி ரோட்டை கிராஸ் பண்ணினதும் யோசனையுடன் வாட்சன் வீட்டுக்குக் கிளம்பினார் ஹோம்ஸ்.

காலிங் பெல் அடிச்சதும் கதவை திறந்த வாட்சன், ‘‘என்ன ஹோம்ஸ் லேட்? மாவைக் கொடு தோசை சுடணும். பசிக்குது’’ என்றார்.

‘‘ஒரு கேஸ் பத்தி டிஸ்கஷன் பண்ணணும். அப்புறம் சாப்பிட்டுக்கலாம் கிளம்பு கிளம்பு’’ என்று பரபரப்பானார் ஹோம்ஸ்.

‘‘கைக்கு எட்டினதை வாய்க்கு எட்டாம செய்யறியே’’ என்று அலுத்துக்கிட்டே கிளம்பினார் வாட்சன்.

ஹோம்ஸ் வீட்டுக் கதவுக்குப் பக்கத்துல வந்தாச்சு, ‘‘ஸ்டாப்! ஸ்டாப்! உள்ளே ஏதோ சத்தம்’’ என்றார் ஹோம்ஸ்.

அதிரடியாக உள்ளே நுழைந்தால் அங்கே மூன்று திருடர்கள். ஹோம்ஸும் வாட்சனும் சின்னதா ஒரு பைட் பண்ணி அவங்களைப் புடிச்சுக் கட்டினாங்க.

கான்ஃப்ரன்ஸ் கால் மூலம் பீர்பால் மற்றும் தெனாலிராமனுடன் பேசினார் ஹோம்ஸ்.

ஹோம்ஸ்: ‘‘பீர்பால், நீங்க சொன்ன மாதிரியே என் வீட்டுக்குத் திருடர்கள் வந்து சிக்கிட்டாங்க. தெனாலி, உங்க வீட்டுக்கு வந்த அதே திருடர்கள்தான். நீங்களும் வாங்க.’’

ஷெர்லாக் ஹோம்ஸ் டு தெனாலிராமன்

தெனாலி: ‘‘நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துட்டேன்.’’

நிமிர்ந்து பார்த்தால் தெனாலி உள்ளே  நுழையறார். கொஞ்ச நேரத்தில், பீர்பால் காவலர்களுடன் வந்து திருடர்களை அரெஸ்ட் செய்தார். எதுவும் புரியாமல் முழிச்சார்  வாட்சன்.

மீண்டும் வாட்சனின் வீட்டுக்கு வந்து,  தோசை சுட்டுச் சாப்பிட்டவாறே விளக்க ஆரம்பிச்சார் ஹோம்ஸ்.

‘‘ஒரு வாரம் முன்னாடி தெனாலி வீடு உள்ள ஏரியாவில் கரன்ட் கட். அவர் வீட்டு மாடில ஏதோ சத்தம். சிசிடிவியில் பார்த்தால் மூணு திருடர்கள். உடனே தெனாலி மனைவிகிட்ட சத்தமா, ‘கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, தங்கம், வைரம், ஆதார் கார்டு எல்லாத்தையும் பார்சல் பண்ணி வீட்டு தண்ணி டேங்க்ல போட்டுடலாம். திருடர்கள் தொல்லை அதிகமாயிடிச்சு’ன்னு சொன்னார்.

அவர் மனைவியும் காலி அட்டை பாக்ஸில், பழைய ஸ்பூன், தட்டுகளைப் போட்டு, ஒரு பெரிய டிராவல் பேக்ல போட்டு கொடுத்தாங்க.அதைத் தண்ணீர் டேங்ல போட்டுட்டு கீழே வந்து, வாட்ஸ்அப்ல ராஜாவுக்கு மெசேஜ் பண்ணினாரு. ஆனா, சந்தேகம் வந்துட்ட திருடர்கள் காவலர்கள் வர்றதுக்குள்ளே எஸ்கேப். அதனால, எல்லா அரசு ஊழியர்களுக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்துச்சு. உங்கள் ஏரியாவில் கரன்ட் கட் ஆச்சுன்னா ஜாக்கிரதையாக இருங்க என்பதுதான் அது.

என்னையும் பீர்பாலையும் இது விஷயமா ஆராயச் சொன்னார். பீர்பால் என்கிட்ட, ‘ஹோம்ஸ், உங்க கதையை வெச்சு படம் எடுத்ததால் நிறைய பேருக்கு உங்களை தெரியும். திருடர்களின் அடுத்த குறி உங்க வீடாகவும் இருக்கலாம்’ன்னு சொன்னார்.

அதை வெச்சுதான் கரன்ட் கட் ஆனதும், முன்யோசனையோடு உன் வீட்டுக்கு வர்றதா போனில் சத்தமா சொன்னேன். திருடங்க உள்ளே நுழையதுக்கு அவகாசம் கொடுத்துட்டு, இப்படி அதிரடியா நுழைஞ்சு மடக்கினோம்’’ என்று முடித்தார் ஷெர்லாக் ஹோம்ஸ்.

‘‘பின்னிட்டே ஹோம்ஸ்... இன்னொரு தோசை சாப்பிடு’’ என்றவாறு சுட்டுப் போட்டார் வாட்சன்.

ஓவியம்: சு.விக்னேஷ்குமார்