மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 31

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர்

நான்காம் சுவர் - 31

‘டர்ணாக்.. ணாக்... ணாக்... ணாக்... டர்ணாக்... ணாக்... ணாக்... டண்டண்டன் டர்ணாக்... டண்டண்டன் டர்ணாக்...’ ஒத்த அடியில் வாசிக்கும்போதே குட்டக்கையன் மணவாளனின் கால்கள் அந்த வாத்தியத்தின் சுதிக்குத் தயாரானது. அப்போதுதான் அவனிடம் அந்தத் தகவலும் வந்து சேர்ந்தது, லாரன்சும் ஊர்வலத்திற்கு வந்திருப்பதாக. “இன்னொரு லோட்டா ஊத்துடா... இன்னிக்கு ஆட்ற ஆட்டம் சும்மா மல்ச்சமா இருக்கணும்...” லோட்டாவை இழுத்துக்கொண்டவன் நார்த்தங்கா ஊறுகாயை நக்கிக்கொண்டான்.

ஒரு காலத்தில் குட்டக்கையனும் லாரன்சும்தான் கைமால் போடுவதிலும்... சாவுக்குத்து ஆடுவதிலும் பிரபல்யம். அப்படியான நண்பர்கள் இருவரும். ‘சதுர் சூர்ய சார்ப்பட்டா’ பரம்பரையின் வாரிசுகள். “யாரா இருந்தாலும்... நின்னு சண்ட செய்யணும்... பயப்படக் கூடாது... பயந்தா டிச்சி சரியா உழாது புரியுதா...” குட்டக்கையன் எகிறி மண்டையால் டிச்சி அடித்தானென்றால் எதிராளி நாக்கவுட்தான். லாரன்ஸ் லெப்ட்டில் ஒரு பன்ச் வைத்தால் எப்பேர்ப்பட்ட ஜிம் பாடியும் சரிந்து விழும்.

“டேய் உனுக்கு இருக்குற பவருக்கு... மைக் டைசனையே நாக்அவுட் பண்ணிட்லாண்டா... போயும் போயும் சாவுக்கூத்து ஆடிக்கினு... சல்ப்பி அடிச்சிகினு... கைமால் போட்றதலாம் உட்டுட்டு... பாக்ஸிங் ப்ராக்டீஸ் பண்ணுங்கடா” என்று நலம் விரும்பிகள் சொல்வதையெல்லாம் அசட்டை செய்துவிட்டு, காசுக்காகக் கைமாலுக்குப் போக ஆரம்பித்தார்கள். ‘கைமால்’ என்பது ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்றாலும், எனக்கு பதில் இவன் சண்டை போடுவான் என்று கூட்டிப்போய் வென்றுவிடுவார்கள். நம் குட்டக்கையனுக்கு சண்டையில் ஜெயித்தோம் என்பதில் எந்தப் பெருமையும் வைத்துக்கொள்ள மாட்டான். பேசிய தொகை வந்தால்போதும், வாங்கிக்கொள்வான். “ரெண்டு பேருக்கும் ஆவாமப்போச்சு... கைமால்ல இவன அட்ச்சிப் போட்ட... அதோட முடிச்சிக்கணும்... வஞ்சத்த வச்சிகினு அலையக் கூடாது... ஏன்னா சண்டையில தோக்கறதும் இல்ல... ஜெயிக்கறதும் இல்ல... சண்ட செய்யறதுதான் முக்கியம்” என்று குட்டக்கையன் நிறைய தடவை சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

நான்காம் சுவர் - 31

குட்டக்கையன் நடப்பதுகூட நடனம் போலவே இருக்கும். எல்லோரும் உடலை வளைத்து நெளித்து நடனமாடுவார்கள். ஆனால், குட்டக்கையன் உடல் வருந்தாமல் முகத்திலேயே நடனமாடுவான். முகத்தின் அத்தனை சதைத் துணுக்குகளும் அவன் சொல்படி கேட்டு பாவனையோடு ஆடும். ஒருபக்கம் தாறுமாறாக ரோட்டுச் சண்டை போடுவதும், மறுபக்கம் பேட்டை துஷ்டிகளில் ஒத்த அடியில் வீடுகட்டுவதும் குட்டக்கைய னால்தான் முடியும். குட்டக்கையனும் லாரன்சும் சாவானாலும் சண்டையானாலும் முன்னால் நின்றனர்.

ஒரு நாள் கவுன்சிலர் அழைத்ததாக இருவரும் சென்றார்கள். அந்தக் கவுன்சிலரும் பேட்டையில் கைமால் போட்டவன்தான் என்றாலும், இப்போது அதிகார வர்க்கத்தின் நிழலில் இருப்பவன். அதிகாரத்தின் குரல் இருவரையும் அசைத்துப்பார்த்தது. “இப்படியே ரோட்ல கைமால் போட்டுகிட்டே இருந்தா போதுமா... அஞ்சுக்கும் பத்துக்கும் சண்ட போடக்கூடாது... சும்மா சும்மா சண்ட போடக்கூடாது... ஒரு சண்ட போட்டா ஊரே திரும்பிப் பாக்கணும்... யார்றா இவுனுங்கன்னு கேக்கணும்... அப்பிடி ஒண்ணு வர்றதுக்கு... காத்திருக்கணும்... கீழ போங்க, ஜோகி இருப்பான்... காசு வாங்கிக்குங்க... இனிமே எங்கயும் சண்ட போடக் கூடாது... நா சொல்றன், புரியுதா...” என்று கவுன்சிலர் சொன்னது இருவருக்கும் புரிந்தது. அன்றிலிருந்து சாவுக்குத்தைத் தவிர கைமாலுக்கெல்லாம் செல்வதில்லை.

ஆனாலும் குட்டக்கையனின் அம்மா அவன் பெரிய டான்சர் ஆகவேண்டுமென்றே ஆசைப்பட்டார். ஊரே சொல்கிறதேவென ஒருநாள் ஊர்வலம் போகும் பாதையில் குட்டக்கையனுக்குத் தெரியாமல் மறைந்திருந்து பார்த்திருக்கிறார் அவன் அம்மா. அவன் ஒத்தடியில் ஆரம்பித்து சிலம்பம் கட்டினான். குட்டக்கையனின் நளினமும் முக பாவனையும் அப்படியே நடிகர் சந்திரபாபுவைப் போலவே இருந்ததாக உணர்ந்தார் “ஏண்டிம்மா என்புள்ள சாவு டான்ஸு ஆட்றா மாதிரியா இருக்குது... வீணாப்போனவன் சாவுல ஆட்ற கூத்த... சினிமாவுல ஆடுனா... நாலு காசு வராது...” என்றபோது பக்கத்திலிருந்த பெண்மணி “பாம்பு டான்ஸு ஆட்றான் பாரு உன் புள்ள” என்று சொல்லப் பார்த்தார். நெளிந்து மண்ணில் ஊர்ந்து வரும் பாம்பாகவே அந்த உச்சி வெயிலில் தார் ரோட்டில் ஆடிக்கொண்டிருந்தான் குட்டக்கையன். மனிதர்கள் ஆடும் நடனம் என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒன்றுதான். ஆனால், அவன் ஆடுகிற மேடை என்னவாக இருக்கிறது என்பதில்தான் ஆடுகிறவனின் வாழ்வும் வளமும் இருக்கிறது. என்னதான் அற்புதமான நடனத்துக்குச் சொந்தக்காரனாக இருந்தாலும், செத்தவன் முன்னால் ஆடுவதால் அவனுக்குப் பெயர் ‘சவக்கூத்தாடி.’ உயிரோடிருக்கும் கலைவான்களுக்கு மத்தியில் அரங்கேறினால் அவன் பெயர் நடன சிகாமணி.

பேட்டை சாவு என்பது குட்டக்கையனும் லாரன்சும் ஆடாமல் மோட்சமடையாது. மகிழ்ந்து குளிர்ந்துபோய் அவர்களாகவே குழிக்குள் படுத்துக்கொள்வார்கள். “மச்சி கொஞ்ச நாளா கைமால் போடாம... கையெல்லாம் நமத்துப்போச்சுடா...” என்ற குட்டக்கையனைப் பார்த்து “கவுன்சிலர் சொன்னது ஞாபகம் இருக்குதுல்ல... வேல சொல்றன்னு சொல்லியிருக்காப்ல... வெயிட் பண்ணுவோம்... அப்புறம் பேரெடுப்போம்...” என்றான் லாரன்ஸ். அவன் குட்டக்கையனைப் போல இல்லை. எதையும் கொஞ்சம் யோசித்துச் செய்பவன்.  

நான்காம் சுவர் - 31

அப்படித்தான் ஒரு நாள் கவுன்சிலரிடமிருந்து இருவருக்கும் அழைப்பு வந்தது. மொட்டை மாடிக்கு வரச்சொன்னார். கவுன்சிலர் போத்தலில் மகிழ்ந்துகொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் மொக்கையாக ஒருவர் உட்கார்ந்து மிதமாக அருந்திக்கொண்டிருந்தார். “வாங்கடா உட்காருங்க” என்றதும் குட்டக்கையன் எந்த யோசனையுமின்றி உட்கார்ந்து கொண்டான். “இன்னா மேட்ருண்ணா...” என்றான். “எல்லாத்திலயும் அவசரம்... சொல்றன்டா சரக்க போடுங்க” என்று கவுன்சிலரே ஊற்றிக் கொடுத்தார். குட்டக்கையன் சரக்கை எடுத்து சியர்ஸ் சொல்லிவிட்டு பக்கத்திலிருக்கும் முறைப்பான ஆளுக்கு சியர்ஸ் சொன்னான். அவர் அதே முறைப்புடன் ‘ம்’ என்றார். நம்மைவிட கைமாலில் கித்தாப்புக்காரன்போல என்று குட்டக்கையன் நினைத்துக்கொண்டான்.

முதல் ரவுண்டில் மிகுந்த மரியாதையோடும், ரெண்டாவது ரவுண்டில் மரியாதையோடும், மூன்றாவது ரவுண்டில் “சொல்லு கவுன்சிலரே” என்றும் ஆனது. “அது ஒண்ணுமில்லடா... தோ உக்காந்துகினு இருக்கிறாப்லல... இவுரு பேரு பூமிநாதன்... இவுர மாடல் லைன் புள்ளிங்கோ குமுறு கஞ்சி காச்சிட்டானுங்கடா... எல்லாம் உள்ளடி...” என்றபோது குட்டக்கையன் பூமிநாதனைப் பார்த்தான். அவர் அதே முறைப்போடு இப்போதும் பார்க்க குட்டக்கை யனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “டேய் சிரிக்காதடா... நம்ம கட்சிக்காரரு... அடிவாங்கிட்டாப்லன்னு எதிர்க்கட்சிக்காரனுக்குத் தெரிஞ்சுதுன்னு வையி... போஸ்டர் அடிச்சு ஒட்டிருவான்... பூமி காட்டுப்பா” கவுன்சிலர் சொன்னதும் அதே முறைப்புடன் பூமிநாதன் சட்டையைத் தூக்கிக் காட்டினார். எட்டுத் தையல் போட்டிருந்த கீறல். “பட்னு போட்டானுங்கடா... எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல... அவனுங்களை பட்னு போட்ணும்னு சொல்றாப்ல... அதான் உங்கள வரச்சொன்னன்” குட்டக்கையன் இன்னொரு ரவுண்டை ஊற்றிக்கொண்டான்.       

அதுவரை கைமால் எனப்படுகிற கையால் மட்டுமே சண்டை போட்டுக்கொண்டிருந்த குட்டக்கையனிடம் கவுன்சிலர் பட்டன் கத்தியைக் கொடுத்தார். கத்தியால் சண்டை போடுவதென்பது கோழைத்தனம் என்றாலும் இது ஒரு விதமான வேலை என்று கவுன்சிலர் இருவரின் மூளையையும் கழுவினார். பூமிநாதனுக்கு எட்டுத்தையல் விழுந்ததுபோல் எதிர்க்கட்சியினரின் வயிற்றில் பதினாறு விழ வேண்டும் என்பதே அரசியல் தர்மமென குட்டக்கையனுக்கு போதித்தார். இதன்பொருட்டு இருவருக்குமான தொகையும் போத்தல்களும் அவர்களின் முன்னால் வைக்கப்பட்டது. மனிதனை மிருகமாக்குவதற்கு அவனது ஆதாரமான இச்சையை எப்படித் தூண்ட வேண்டுமென அதிகாரத்திற்குத் தெரிந்திருக்கிறது. இந்த ஆடுபுலி ஆட்டத்தில் நாம் ஆடாகவும் சில நேரம் புலியாகவும் இருக்க நேர்ந்துவிடும். இல்லையெனில் வெறும் அற்பத்தனமான போத்தல்களையும் சொற்பக் காசுகளையும் நமக்குப் புல்லாகப் போட்டுவிட்டு நம்மைப் புலி போல இந்த மனிதக் காட்டுக்குள் அதிகாரம் அனுப்பிவிடும். முதலில் நமக்கும் நாம் புலியென்றுதான் தோன்ற வைக்கும். நாள்பட நாள்படத்தான் நாம் புலி அல்ல, அற்பப் புற்களுக்காக ஆசைப்பட்டு இறங்கிய ஆடு என்று புரியவரும். அப்போது நமக்கான திறமைகள் எல்லாம் மழுங்கிப்போய் வயதும் ஆகிவிடும். நாள்பட்டுப் புரியும் எந்த அன்பும் எந்தப் புரிதலும் வாழ்க்கைக்கு உதவாது என்பது புரிய வரும்.

இப்போது குட்டக்கையன் எனும் நடனக்காரன் அற்பப் புற்களுக்காக பட்டன் கத்தியை எடுக்கிறான். அவனுக்கு உதவியாக, லெப்டில் அடித்தானென்றால் மலையின் ஒரு துண்டையே தூளாக்கிவிடும் லாரன்சும் புற்களை ருசிக்க ஆரம்பிக்கிறான். இந்த மரிகளுக்கு நல்ல ஆயன் கிடைத்திருந்தால் குட்டக்கையன் திரும்பவும் கால் நரம்புகள் எல்லாம் அறுந்த நிலையில் மீண்டும் சாவுக்கு ஆடியிருக்கத் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.

“இனிமே நீ போட்ற  ஒவ்வொரு சண்டைக்கும்... காசு இருக்குது... மத்தத நா பாத்துக்கறன்...” என்று கவுன்சிலர் சொன்னபோது குட்டக்கையனுக்கு மனதில் மமதை உண்டானது. அது அதிகாரம் நம்மோடு இருக்கிறது எனும் மமதை. எதை வேண்டுமானாலும் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிற மமதை அது. காசையும் போத்தலையும் எடுத்துக்கொண்டு வந்த குட்டக்கையன் அன்றிலிருந்து சண்டைக்காரன் என்கிற தகுதியான சொல்லிலிருந்து ‘ரவுடி’ என்ற சொல்லிற்கு மாறினான். பூமிநாதனின் எதிரியின் வயிற்றைக் கீறி, பதினாறு தையலைப் போடவைத்தான்.  

இனிமே அப்படித்தான் என்பதுபோல் பேட்டையில் அவனுக்கான பயம் மரியாதையாக மாறியது. மனிதனைப் பார்த்து இன்னொரு மனிதன் பயப்படுவதைத்தவிர இந்த உலகத்தில் மனிதனுக்கு வேறொரு போதை தேவைப்படு வதில்லை. ராஜபோதை அது. ஆனால், ராஜபோதையிலேயே இருந்துவிடலாம் என நினைப்பதிலிருந்துதான் நமக்கான அநீதிகளை நாம் கொண்டாடத் தொடங்குகிறோம்.

ரௌத்திரம் பழகியவர்கள் கத்தியைப் பழகியதும் இதிலிருந்துதான் தொடங்குகிறது. நமக்கெது தர்மமாக இருக்கிறது என்பதே ரவுடிகளின் உலகமாக மாறியது. பேட்டையில் ஆங்காங்கே சாதாரணமாக கைமால் போட்டுக் கொண்டிருப்பார்கள். பெண்கள் விலக்கிக் கொண்டு போவார்கள். போன வாரம் கைமால் போட்டுக்கொண்டவர்கள் இந்த வாரம் சேர்ந்து பாடுகளுக்குக் கடலுக்குள் செல்வார்கள். பத்தில் எட்டுப்பேர் பாக்ஸராகத்தானிருந்தார்கள். ஆடுபவனும் பாடுபவனும் ஓடுபவனுமாகத்தானி ருந்தார்கள்.  அதிகாரத்தின் இந்த ஆடுபுலி ஆட்டத்தில் மாட்டிக்கொள்ளாத என்னைப்போல அநேகம் பேர் இப்போது ஒவ்வொரு துறையிலும் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள். ஆசைக்கு ஆசைப்படுபவன் ஆட்டத்தில் மாட்டிக் கொண்டார்கள்.

நான்காம் சுவர் - 31

ரவுடியிசம் என்று சொல்லப்படுகிற வார்த்தை தொடங்கியதிலிருந்து அதை அருகிலிருந்து நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இன்னதுதான் காரணம் என்று தெரியாமலேயே கத்தியைத் தூக்கியவன் என்னவெல்லாம் ஆகிப்போகிறான் என்பதும் தெரியும். இப்படித்தான் எப்போதும் உட்கார்ந்து பேசும் சாம்பிராணி கம்பெனி மணலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். திடீரென குட்டக்கையனும் லாரன்சும் வியர்த்தபடி வந்து உட்கார்ந்தார்கள். மேலும் கீழும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. “குள்ளபொண்ணு குமார போட்டண்டா... மிஸ்ஸாயிட்டான்...” மூச்சு வாங்கியபடியே குட்டக்கையன் சொன்னது. சூடான சம்பவத்தை நிகழ்த்திவிட்டு நம்மோடு வந்து உட்கார்வது எங்களுக்கெல்லாம் பகீரென்று இருந்தது. “சிஷ்யா, மணி சைக்கிள் கடைல... ஒரு சைக்கிள் எடுத்துகினு வாடா” லாரன்ஸ் சொன்னதும் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தான் மாறன். லாரன்ஸ் மிதிக்க குட்டக்கையன் பின்னால் ஏறிப் போனது. இப்படி இந்த ஆட்டத்தில் புலியாகவும், எந்தப் புலி நம்மைக் கவ்விவிடும் என்று நொடிக்கு நொடி பதறுகிற ஆடாகவும் மாறிப்போனது குட்டக்கையன். “எம்மோவ் சும்மா அழுவாத... கல்யாணம் பண்ணிக்கினு... இன்னா பண்ணச் சொல்ற... எந்நேரமும் கழுத்த குறி பாத்துகினு ஒரு கத்தி இருந்துகினே இருக்குது... எப்பவேணா போட்ருவானுங்கோ... ஒரு பொண்ணு வாழ்க்கய கெடுக்கச் சொல்றீயா” குட்டக்கையன் மட்டுமல்ல, பெரும்பாலான, ரவுடிகள் என்று சொல்லப்படுகிற மனிதர்கள் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். 

தொடர்ந்த வழக்குகளால் போலீஸ் குட்டக்கையன் கால் நரம்பை வெட்டி விட்டார்கள். இப்போது காலும் குட்டையாகிப் போனது. தாங்கித் தாங்கி நடக்கும்படியாய் ஆனது. வயதும் கூடிவிட்டது. சுதந்திரமாய்ச் சுற்றித்திரிந்தது காலொடித்துக் கூட்டில் இருந்தது. நானும் மாறனும் பார்க்கப் போனோம். ரோகி பரமேஸ்வரன் அவரோடு பேசிக்கொண்டிருந்தார். குட்டக்கையனைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. “வாத்யாரே லட்டரு யாராவது எழுதணும்னா... இட்டுகினு வா, சும்மாதான் இருக்குறன்... இனிமே என்ன எவனும் போட மாட்டான்... நம்ம ராபின் செத்துப் போயிட்டானாமே... சத்தியமா காலு நல்லாயிருந்தா ஆடிப் பாடி சந்தோஷமா எடுத்துப் போட்ருக்கலாம்...” என்றது. எங்களைப் பார்த்து “இன்னாங்கடா பாக்குறீங்கோ... கால கசக்கி பக்கடா போட்டுட்டானுங்கடா தொப்பிக்காரனுங்கோ” என்று சிரித்தது. அந்தச் சிரிப்பிற்குப் பிறகு இப்போது இந்தச் சாவில்தான் குட்டக்கையனைப் பார்க்கிறேன்.

லாரன்சுக்கும் வயதாகிப்போனது. மரக்காணத்தில் போய் வாழ்வதாகச் சொன்னார்கள். லாரன்சைப் பார்த்தேன். கப்பலில் வந்த கறுப்பினத்தவருக்கும் லாரன்சுக்கும் பெட்டிங் கைமால் நடந்தது. லெப்டில் ஒரே பன்ச்தான், கறுப்பர் நாக்கவுட் ஆனார். வாழ்வை நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும், இல்லையெனில் அது நம்மைக் கைவிட்டுவிடும். “இன்னாடா சிஷ்யா எப்டியிருக்குற” ஞாபகமாய்க் கேட்டது. “ஊர்ல பெரிய சாவு... வராம இருக்க முடியுமா... எங்கடா குட்டக்கையன்” லாரன்ஸ் தேடிப்போனது. வெகுநாள் கழித்து நரம்பறுந்த காலை வைத்துக் கொண்டு குட்டக்கையன் ஒத்தடியில் புலிவேஷம் கட்டியது. லாரன்ஸ் அதற்கேற்றாற்போல் ஆட்டைப்போல பயந்து நடுங்கி ஆடியது. அவ்வப்போது நொண்டிய புலி முகத்தைக் கொண்டு சீறியது. பயந்த ஆடு பம்மிக்கொண்டே ஆடியது. இருவரும் ஆடுபுலி ஆட்டத்தை ஒத்தடியில் ஆடிக்கொண்டிருந்தபோது அந்தக் கலைஞர்களின் நடன அசைவுகள் காற்றில் வரிகளாக மாறி அவர்களின் வாழ்வை எழுத ஆரம்பித்தது.

தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தவர்களின் முகங்கள் எந்தப் புகார்களுமற்று வாழ்வை ரசித்துக்கொண்டிருந்தது. ‘குளோசப்பில் பார்க்கும்போது வாழ்க்கை ஒரு துயரம். ஆனால், லாங் ஷாட்டில் பார்க்கும்போது அதுவொரு நகைச்சுவை’ என்று சொன்ன சார்லி சாப்ளினின் வார்த்தைகள் எவ்வளவு மகத்துவமானவை! மீண்டும் ஒத்த அடி ஆரம்பித்தார்கள். குட்டக்கையனும் லாரன்சும் புலியாகவும் ஆடாகவும் ஆட ஆரம்பித்தார்கள். ‘டர்ணாக்.. ணாக்... ணாக்... ணாக்...’

- மனிதர்கள் வருவார்கள்...

- ஓவியங்கள்: ஹாசிப்கான்