
பாக்கியம் சங்கர்
தலைவர் படம் போட்ட, ஆள்காட்டிவிரலையே மறைக்கும் அளவுக்கு இருக்கும் கோல்டு கவரிங் மோதிரத்தை `பூகம்பம் பூமணி’ போட்டார். ஐந்து வருடத்துக்கு ஒருமுறை அந்த ட்ரங்க் பெட்டி திறக்கப்படும். இதைப் பார்த்த அடைமழை கதிரேசன், ``எடுத்துப் போட்டுட்டார்யா மோதிரத்த... போன தடவ எல்லா தொகுதியிலயும் டெபாசிட்போச்சு... இப்ப என்ன போகப்போதோ!” அடைமழை கதிரேசனின் அறைகூவலுக்கு ``டேய்... எங்களுக்காவது டெபாசிட்தான் போச்சு. ஆனா வெற்றித் தொகுதின்னு நின்னீங்களே... அதுல நீங்க வாங்கின ஓட்டு எவ்ளோன்னு ஞாபகம் இருக்கா... மொத்தம் முந்நூத்தி சொச்சம். பொத்திக்கிட்டுப் போங்கடா!” என்று பதிலளித்தார் பூகம்பம். ``இதுக்குத்தான் இந்தத் தடவ எங்க தலைவி, புது வியூகத்துல பிரசாரம் பண்ணப்போறாங்க. மவன அப்பனும் புள்ளையும் ஏதாவது ஒண்ணுன்னா... எங்கால்லதான் வந்து விழணும்” என்று ரோஸ் பவுடரை அடித்துக்கொண்டார் பச்சைக்கிளி.

``பாத்தியாடா அடமழை... நேத்து பேஞ்ச மழையில இன்னிக்கு மொளச்ச கட்சி இது. இந்தக் கட்சிக்கு இருக்கிற ஒரே ஒரு தொண்டர் உன் அம்மா... இதுங்களுக்கு என்னா பேச்சு...” பூகம்பம், மந்திரி வெள்ளைச்சட்டையை மாட்டிக்கொண்டார். தலைவரின் முகம் பதிந்த பேனாவை, சட்டைப்பையில் வைத்துக்கொண்டார். அடைமழை, வெள்ளுடை வேந்தனாகத் தயாரானான். பூகம்பம், நினைவுதெரிந்து அல்ல... தெரியாமல்கூட வேலைக்குச் சென்றதில்லை. பகுதித் தொகுதிகளைத் தெரிந்து வைத்துக்கொண்டு கரை வேட்டிகளோடு கரைந்துகொண்டிருக்கும் ஜீவன். பச்சைக்கிளியைத் தலைவர் மாலை எடுத்துக் கொடுக்க, கை பிடித்தவர். மூத்தவன் அடைமழை கதிரேசன் பிறந்த நேரம் தலைவர் நாற்காலியைப் பிடித்தார் என்பதால், கதிரேசனின் பிறந்த நாளை பகுதித் தொகுதிகளோடு செமயாகக் கொண்டாடினார். இளையவன்தான் ரொம்ப வருடம் கழித்து பிந்திப் பிறந்தவன். ஆரம்பத்தில் விவரம் தெரியும் வரை அடைமழை பூகம்பத்தோடுதான் அரசியல்வாசம் புரிந்தான். தன்னைப்போலவே அரசியலுக்கு பிள்ளையும் வந்தது பூகம்பத்துக்கு சந்தோஷம்தான்.

தனக்குப் பிறகு இந்த அரசியலையும் இந்த மக்களையும் யார்தான் காப்பாற்றுவார்கள் எனக் குழம்ப வேண்டாம். தன்னோட அரசியல் வாரிசு அடைமழை, இந்த மண்ணையும் மனிதர்களையும் குளிரவைப்பான் என்று திடமாக நம்பினார் பூகம்பம். ஆனால், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்ற பொன்னான வாக்கு, பூகம்பம் வாழ்வில் பலித்துப்போனது. கேட்பாரின் பேச்சைக் கேட்டு அடைமழை எதிரணிக்குப் போனான். அரசியல் எனும் போர்முனையில் பிள்ளையாவது தகப்பனாவது. அன்றிலிருந்து ஒரே குடைக்குள் பூகம்பமும் அடைமழையும் பச்சைக்கிளியும் வெவ்வேறு வண்ணங்களில் ஜொலித்தார்கள். இளையவனுக்கு ஓட்டு போடும் தகுதி வராததால், அவன் மட்டும் தனித்தொகுதியாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தான்.
``ஏங்க, கட்சி ஆபீஸ்லயிருந்து பொங்கலும் வடையும் வந்திருக்குது. சாப்பிட்டுட்டு, பிரசாரத்துக்குப் போங்க” பச்சைக்கிளி பரிவோடு கேட்டாள்.``எங்க கட்சியில இருக்கிறவனுங்க மானஸ்தனுங்க. எதிர்க்கட்சியில பொங்கல் வடைய வாங்கி சாப்பிடுற அளவுக்கு நாங்க ஒண்ணும் இல்லாதப்பட்ட கட்சி இல்லை. ஊர்ல பாதி, தலைவரு வளைச்சுப் போட்டிருக்காரு. உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க, பிரியாணியே போடச் சொல்றேன்” எப்போதுமே அரசியல்வாதியாக இருப்பது என்பது பூகம்பத்தால் மட்டும்தான் முடியும்.
``கதிரேசா... இவுங்க கட்சிதான் வாயிலயே வட சுடுவாங்கன்னு பாத்தா, உங்கப்பா பிரியாணியே கிண்டுறார்டா” பச்சைக்கிளி கலாய்த்துவிட்டு ``கதிரேசா, சின்னவன் ஸ்கூலுக்குப் போயிருக்கான். கிளம்பும்போது வூட்ட பூட்டிட்டு, சாவிய கெய்விகிட்ட குடுத்துடு... இன்னா..! இன்னிக்கு நூறு மகளிர் அணிய திரட்டணும். தலைக்கு இருநூறு... வர்றேன்டா... பூகம்பம் களத்துல சந்திப்போம்” என்று சிரித்தபடியே பச்சைக்கிளி கிளம்பினாள்.
``ஏன்டா, உங்களுக்கு எந்த ஏரியா?” அடைமழையைப் பார்த்துக் கேட்டார் பூகம்பம்.
``கொருக்குப்பேட்ட” என்றான்.
``ஏன்டா அடைமழ, நீங்க காட்டுக் கத்துக் கத்தி... கால்ல விழுந்து கதறினாலும் அங்க ஒரு ஓட்டு உங்க கட்சிக்கு விழாதுடா. ஏன்டா ஹார்டு ஒர்க் பண்றீங்க?” மகனை வம்புக்கிழுத்தார்.அடைமழை சிரித்தபடியே ``நேத்து ஏரியாக்குள்ள உங்கள வரவுடாம பொம்பளங்கலாம் செருப்பு எடுத்து அடிச்சுதுங்களாமே... நைனா, பொம்பளங்க சாபம் வாங்குனா எந்தக் கட்சியும் உருப்பட்டதா சரித்திரமே கெடையாது” அடைமழை புயலென விளாசினான்.
``டேய் இதெல்லாம் உங்க வேலைன்னு எங்களுக்குத் தெரியும்டா. ரிசல்ட்டுன்னு ஒண்ணு இருக்குல்ல... அப்ப இருக்குடா உங்களுக்கு” என்று சவால்விட்ட பூகம்பம், வீட்டைவிட்டு அரசியல் தொண்டாற்றக் கிளம்பினார்.
வீட்டுவாசலில் மூன்று பெயர்ப்பலகைகள் மாட்டப்பட்டிருந்தன. பூகம்பம் பூமணி / து /வ/ செ என்றும், அடைமழை கதிரேசன் / வட்டப் பிரதிநிதி என்றும், பச்சைக்கிளி / வட்ட மகளிரணி துணைத் தலைவி என்றும் வெவ்வேறு கட்சி நிறங்களில் மின்னிக்கொண்டிருந்தன. வெளியே வந்த பூகம்பம், பெயர்ப்பலகையில் இருக்கும் இன்-அவுட் எனும் கட்டையை இடதுபக்கம் திருப்பி அவுட் லுக் கொடுத்தார். அப்போது எதிர்க்கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவர் தாரைதப்பட்டைகளோடு இரு கைகளையும் பெவிகுயிக்கில் ஒட்டியதுபோல இளித்துக்கொண்டே வந்துகொண்டிருந்தார்.
‘`ஏன்டாப்பா பூமணி, வெத்தலபாக்குத் தீந்துப்போச்சுன்னு நேத்துலேர்ந்து சொல்லிக்கினே இருக்கன். யாரும் காது கொடுத்து கேக்க மாட்றீங்க. வர வர எந்த நாயும் என்ன மதிக்கிறதில்ல...” என்று பூகம்பத்தின் அம்மை சொல்லி முடிப்பதற்குள்ளாக அந்த இளித்துக்கொண்டு வந்த வேட்பாளப் பெருந்தகை அம்மையின் காலில் தொபக்கடீர் என விழுந்தார். விழுந்தவர், பக்கத்தில் இருக்கும் போட்டோ எடுப்பவனைப் பார்த்து `ம்’ என்றார். அவனும் பல்வேறு கோணங்களில் வேட்பாளர் காலை நக்கிக்கொண்டிருக்கும் காட்சியைப் படம்பிடித்தான். இந்தக் காட்சியைப் பார்த்த பூகம்பம், ``எந்த நாயும் மதிக்கலன்னு சொன்னல்ல... பிஸ்கட் இருந்தா போட்டு வுடு...” என்று உரக்கவே சொன்னார்.
கரைகளெல்லாம் கண்கள் சிவந்து முஷ்டிகளை முறுக்க, வேட்பாளப் பெருந்தகை ``என்ன பூகம்பம், நகைச்சுவையாப் பேசுறத இன்னும்விடலயா...” என்று சமாளித்தார்.

``அவன் கெடக்குறான் வுடு நைனா... என் ஓட்டு உனுக்குத்தான். நீ போய் வா நைனா” என்று அம்மை சொன்னதும் பூகம்பத்தைப் பார்த்து ``தாய்க்குலங்கள தாலாட்றவன்டா நானு... ஒழுங்கு மரியாதையா கட்சியில வந்து சேர்ந்து பொழச்சிக்கோ” என்று வேட்பாளர் பூகம்பத்தைக் கடந்தார்.
கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தார் பூகம்பம். போஸ்டர்களைப் பிரித்து எண்ணிக்கொண்டி ருந்தான் எலி. ``வா பூகம்பம்... டீ சாப்பிடுறீயா? நேத்து இன்னா நடந்ததுன்னு கேக்காமப் போயிட்டியே... பூண்டி தங்கம்மாள் தெருவுல கேன்வாசிங். தலைவருக்கு சுத்தி ஒடச்ச தேங்காவோட தண்ணியே முட்டி வரைக்கும் தேங்கிச்சு. வேட்டிய தூக்கிக் கட்டிக்கிட்டு தேங்காத்தண்ணியிலயே நடந்து போயிதான் ஓட்டு கேட்டோம்னா பாத்துக்கயேன்” இடைவிடாமல் சொல்லி முடித்த எலியைப்போல் ஒருவன் புளுகிவிட முடியாது.
டீக்கடைப் பையன், எல்லாருக்கும் தேநீரைக் கொடுத்துக்கொண்டிருந்தான். ``தலைவரே தொகுதி நம்ம கன்ட்ரோல்ல இருக்கு. எலெக்ஷன் அப்போ பூத்துகளைப் புடிக்கிறோம். கெத்துகளைக் காட்றோம். தலைவரே, எல்லாத்தியும் நான் பார்த்துக்கிறேன். அப்புறம்... கட்சி நிதியிலயிருந்து ஏதாவது அனுப்புனீங்கன்னா நல்லாருக்கும்” என்று சொன்னபோது, மாவட்டச் செயலாளர் போனை கட் செய்துவிட்டார். போனை வெறித்துப் பார்த்த வ.செ, பூகம்பம் பக்கம் திரும்பினார்.
``யோவ் பூகம்பம், இன்னாய்யா உன் பையன் பெரிய பேச்சாளனா... மழ மாதிரி பேசுறான்னு நம்ம கட்சிதான்யா அவனுக்கு `அடைமழை’ன்னு பட்டத்தைக் கொடுத்துச்சு. நம்ம கட்சியைக் கிழிச்சுத் தொங்க உட்றானாம். உனக்காகப் பார்க்குறேன். தேர்தல் முடியட்டும்” என்று வ.செ கொதித்தார். ‘`வுடு வட்டம்... இளங்கன்று அரசியல் தெரியாமப் பேசுது. அவுனுக்கு நானே பாடத்த கத்துத்தர்றேன்” என்றபோது வ.செ கொஞ்சம் சமாதானம் அடைந்தார்.
``பூகம்பம் ஆட்டோ ரெடி. அஞ்சாவது வட்டம் ரொம்ப வீக்கா இருக்குதுன்னு மாவட்டம் கவலபட்றாரு. ரெண்டு நாளு புல் கேன்வாசிங் அங்கதான். பேர்ல இருக்கக் கூடாது, பேச்சுல இருக்கணும் பூகம்பம்...” என்றதும் பூகம்பம் ஆட்டோவில் ஏறிக்கொண்டார். போஸ்டரைச் சுமந்தபடியே எலியும் கூடவே வந்து அமர்ந்துகொண்டான். ஆட்டோ, பிரசாரத்துக்குக் கிளம்பியது.
ஆம்ப்ளிபயரை ஷார்ப்பில் வைத்துக்கொண்டார் பூகம்பம். கனத்த குரலில் `ஹலோ... செக்... செக்...’ என்று சொல்லிக்கொண்டார். ``எனக்கு ஒரு யோசன பூகம்பம். இப்பிடி அஞ்சு வருஷத்துக்கு ஒரு தேர்தல் வராம... மூணு மாசத்துக்கு ஒரு தடவ வந்தாக்கா... நம்மள மாதிரி ஆளுங்களுக்கு நல்ல காசும் வரும்... நல்ல சோறும் வரும். நம்மளும் எத்தனை தேர்தலுக்கு வேலை பார்த்துட்டோம்... வீணா போனவனுங்களலாம் எம்.எல்.ஏ-வாவும் எம்.பி-யாவும் ஆக்குறோம். ஆனவுடனே நம்மளயே கண்டுக்க மாட்றானுங்க. தோ, இப்ப நிக்கிறானே நம்ப கட்சியில... அவன்லாம் ஜெயிச்சான்னு வையி... அவன்கூட அமைதியா இருப்பான். அவன் கூட இருக்குதுங்க பார்... அதுங்க ஆட்டம்... அத நினைச்சாத்தான்... ஈரக்குலயே நடுங்குது பூகம்பம். இவுனுங்களலாம் எத்தினி வருஷமா நம்மளும் `ஏழைப்பங்காளன்’னு மைக்ல சொல்லியிருக்கோம். ஒண்ணு மட்டும் புரியுது, நாம இப்பிடியே போஸ்டர் ஓட்டிக்கினு... மைக்ல பேசிக்கினு திரியவேண்டியதுதான்” எலிக்குள்ளிருக்கும் அத்தனையையும் பூகம்பத்திடம் கொட்டினான்.
அவன் மூச்சு வாங்கி சொன்ன எதையும் கண்டுகொள்ளாமல், மைக்கை ஆன்செய்து ``வாக்காளப் பெருமக்களே... நமது கட்சியில் இருக்கும் இந்த வேட்பாளர் யார்..? அவர் வேறு யாருமல்ல... உங்களில் ஒருவர். உங்கள் வீட்டுப் பிள்ளை என்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டி ருக்கிறேன். பண்பாளர்... ஏழைகளின் ஏந்தல்... பெண்களின் காவலர்” இந்த இடத்தில் பூகம்பத்தை எலி பார்க்க, பூகம்பம் எலியைக் கண்டும்காணாததுபோல் ``எப்போது வேண்டுமானாலும் நமது வெற்றி வேட்பாளரை நீங்கள் சந்திக்கலாம். அவரது அலுவலகக் கதவுகள் திறந்தே இருக்கும். சிறந்த சமூக சேவைக்காக அமெரிக்கா நமது வேட்பாளருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதைச் சொல்லிக்கொள்கிறேன். அமெரிக்காவே அங்கீகரித்த வேட்பாளரை நாம் அங்கீகரிக்க வேண்டாமா...” இதற்குமேல் பொறுமை காக்க முடியாமல் எலி ஆம்ப்ளிபயரை அணைத்தான்.
``பூகம்பம், இந்த கம்மினாட்டி அமிஞ்சகர தாண்டினது இல்ல... இது அமெரிக்காவுல டாக்டர் பட்டம் வாங்குச்சா...” ஆட்டோ ஓட்டுபவன் சிரித்தான்.
``மூஞ்ச சிரிச்சா மாதிரி வெச்சிக்கினு இருந்தாலே... நம்மாளுங்க ஓட்டு போட்ருவானுங்க. இதுல அமெரிக்கா, ஆப்பிரிக்கான்னு சொன்னோம்னு வையி... இன்னா ஏதுன்னே தெரியாம கன்னாபின்னானு குத்திடுவானுங்க ஓட்ட. நாம போஸ்ட்ரு ஒட்டினாலும் சரி, மைக்லயே கத்திக் காலத்தக் கழிச்சாலும் சரி... தலைவரு இன்னா சொல்றாறோ அதைச் செய்யணும்... அதான் அரசியல்... புரியுதா” பூகம்பம் திரும்பவும் மைக்கை ஆன் செய்ய, எதிர்முனையில் அடைமழை ஆட்டோவில் மழையாய்ப் பொழிந்துகொண்டு வந்தான்.
``மக்களின் சொத்தாம்... உங்கள் வீட்டுத் தங்கமாம்... எங்கள் கட்சி சிங்கமாம் அண்ணனுக்கே வாக்களிப்பீர்... தமிழர்களின் பிரச்னைக்காக ஐ.நா-வில் குரல்கொடுத்தவர். ஐ.நா-வுக்கே பிரச்னை என்றால்... சைனா வரை போய்ப் பேசுபவர். உலகத் தமிழனுக்கே உங்கள் ஓட்டு... மறந்தும் இருந்துவிடாதீர்கள்... இருந்தும் மறந்துவிடாதீர்கள்” என்று அடைமழை பிரித்துக்கட்ட, எலி மிரண்டுபோனான். ``யோவ் பூகம்பம், உன் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்யா... மக்கள் எதுவுமே கேக்க மாட்டாங்கன்ற தைரியத்துல, சும்மா அவுத்துவுடுறீங்க” என்றான்.

``டேய் எலி, எதிர்க்கட்சியில இருந்தாலும்... நம்ம அடமழ பேசுறத கேட்டா... நானே அவுனுங்களுக்கு ஓட்டு போட்ருவன்போல இருக்குதுடா. இன்னாமா பேசுறான்ல” தன் மகனை மெச்சிக்கொண்டார்.
ஆட்டோ, ஒரு தேநீர்க் கடையில் நின்றது. மசால்வடையை எடுத்து ஒரு கடி கடித்துக்கொண்டு தேநீரைக் குடித்துக்கொண்டான் எலி. பூகம்பம், கொத்துமல்லி-இஞ்சி போட்ட மோரைக் குடித்தார். ``எலி, அரசியலுக்கு வந்து எத்தனை வருஷம் இருக்கும்?” மோரைக் குடித்து வைத்தார் பூகம்பம். ``தலைவரு தனியா வந்து கட்சி ஆரம்பிச்சதுலர்ந்து இருக்கிறன்பா” மசால்வடையை முடித்துவிட்டான் எலி.
``இந்த இருவது வருஷத்துல... இன்னாதான்டா சம்பாரிச்சிருப்ப?”
``நீ இன்னா சம்பாரிச்சயோ... அதையேதான் நானும் சம்பாரிச்சிருப்பன்...” தேநீரை முடித்துக்கொண்டான் எலி.
``உண்மதான்டா, அரசியல்ல என்னன்னவோ இருந்தாலும்... நீயும் நானும் யார் தெரியுமா... கொடி புடிக்கிற... போஸ்டர் ஒட்டுற தொண்டன். தேர்தல் வந்தா ட்ரங்க் பெட்டிய தொறந்து வெள்ள வேட்டிய கட்டிக்கிட்டு... அலப்பர கொடுக்கிற தொண்டன்” ஆட்டோ கிளம்பியது. ஆம்ப்ளிபயரை ஆன் செய்தார் பூகம்பம்.
இப்போது முக்கூட்டுத் தெருவில் நான்கைந்து ஆட்டோக்கள் அலறிக்கொண்டிருந்தன. பூகம்பம், வேட்பாளரின் குணநலன்களைப் புகழ்ந்துதள்ளி வாக்குச் சேகரித்துக்கொண்டிருந்தார். இத்தனை வருடங்கள் செய்யாததை, ஆனால் வருடம்தோறும் செய்வதாக வாக்குறுதித் திட்டங்களை பூகம்பம் முழங்கிக்கொண்டிருந்தார். எலி, முக்கூட்டுத் தெருவில் போஸ்ட்டர்களை ஒட்டிக்கொண்டிருந்தான். போஸ்ட்டரில் கைகூப்பி வேட்பாளர் சிரித்துக்கொண்டிருந்தார். எலி, பசையை எடுத்து போஸ்டரில் தடவி ஒட்டும்போது, அவனது கைகளில் பல வண்ணங்கள் பசையாக ஒட்டிக்கொண்டிருந்தன. அதைப் பார்த்தான். இருபது வருடங்களில் இப்படியாக எத்தனை வண்ணங்களை எலி ஒட்டியிருக்கிறான். எத்தனை தலைவர்களை இவன் ஒட்டிய போஸ்டர்களால் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறான். ஓட்டுப் பதிவு முடிந்த அடுத்த கணமே இவன் கைகளில் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் போய், கிரகங்களின் எந்தப் பார்வையும் படாத ரேகைகள் இவன் கண்களுக்குத் தென்படும். ஆட்டோ, இப்போது முக்கூட்டுத் தெருவிலிருந்து மற்றொரு தெருவுக்குப் போனது. எதிரே நூறு மகளிர் அணியோடு அணியாக பச்சைக்கிளி கோஷங்களை எழுப்பி வந்தார். வேட்பாளர், வானத்துக்கும் பூமிக்குமாக வணக்கம் வைத்துக்கொண்டிருந்தார். அவரைக் கடந்து செல்லும் எந்த உயிரினத்துக்கும் அவர் மரியாதை செலுத்தி அவரது பண்பை வெளிப்படுத்தினார். நல்லவேளை மற்ற ஜீவராசிகளுக்கு ஓட்டு இல்லை என்பதால், நாய், பூனை இவற்றிடமெல்லாம் அவர் வணங்கவேண்டிய அவசியமற்றுப்போனது.
இப்போது பூகம்பம் எதிர் பிரசாரத்தில் வீறுகொண்டு எழுந்தார். கண்டமேனிக்கு எதிர் வேட்பாளரின் பரம்பரையையே பாடலில் விட்டு ஒரு ஆட்டு ஆட்டிவிட்டார் மனிதர். அதையும் சிரித்தார்போல் ஏற்றுக்கொண்டு கடந்தார் வேட்பாளர். இவரது ஆட்டோவைக் கடந்த பச்சைக்கிளியை, காதலோடு பார்த்துக் கடந்தார். ஏதோ தீராப்பகையைத் தீர்த்ததுபோல் பூகம்பம் மைக்கை ஆப் செய்தார். எலிதான் பச்சைக்கிளி வருவதைப் பார்த்தான். கையில் பொட்டலத்தோடு ஓடிவந்தாள்.
``இந்தா, சின்னவன் வந்திருப்பான்... இந்தப் பிரியாணிய அவனாண்ட குத்துடு. உனுக்கு வரும்போது பிரியாணிய எடுத்துக்கினு வர்றேன் சரியா” என்று சிரித்தபடி கோஷங்களை எழுப்பிக்கொண்டே மகளிர் அணியோடு நடக்க ஆரம்பித்தாள். ஆசையோடு பிரியாணியை வாங்கி வைத்துக்கொண்டு, ஆம்ப்ளிபயரை ஆன் செய்தார் பூகம்பம்.
``பிரியாணி ஆசைகாட்டி உங்கள் ஓட்டுகளை வாங்க நினைப்பார்கள்... மக்களே மயங்கிவிடாதீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வாரம்தோறும் வீட்டுக்கு வீடு ரேஷன் கார்டுக்கு ஒரு பொட்டலம் என பிரியாணி வழங்குவோம் என்று உறுதி கூறுகிறோம்” என்று முழங்கினார் பூகம்பம்.
எலி பார்த்தான்.
``ஏன், தலைவருங்க சொன்னதெல்லாம் செஞ்சிட்டாங்களா... இல்ல அவங்கள போயிதான் யாராவது கேட்டமா... அந்த மாதிரிதான் இதுவும்” என்று சிரித்தார் பூகம்பம். அவரது ஆட்டோ இன்னொரு தெருவுக்குள் நுழைந்தது. அவரது கனத்த குரல், காற்றில் ஒலித்தது. ``பேரன்புமிக்க வாக்காளப் பெருமக்களே...”
- மனிதர்கள் வருவார்கள்...
ஓவியங்கள்: ஹாசிப்கான்