
இறையுதிர் காடு - 18

அன்று போகர் அப்படி ஏறுவதை அஞ்சுகன் பார்க்க நேர்ந்தது. கூடவே புலிப்பாணியும் கவனித்தான்.
``நம் குருபிரான் இந்த வேளையில் எதற்காக மலைமேல் ஏறிச் செல்கிறார்?’’ என்று கேட்கவும் செய்தான்.
``மூலிகை எதுவும் பறிப்பதற்காக இருக்குமா?’’
``பௌர்ணமிக்குத்தானே இரவில் மூலிகை பறிக்கச் செல்வார். இன்று பஞ்சமி நாளாயிற்றே?’’
``நாம் வேண்டுமானால் பின்தொடர்ந்து சென்று கவனித்து வருவோமா?’’
``தூக்கமும் வரவில்லை... போய்ப் பார்க்கலாம்தான்! ஆனால்...’’
``என்ன ஆனால்? குருவையே கண்காணித்தோம் என்று அவப்பெயர் ஏற்பட்டுவிடுமோ?’’ - அவர்கள் பேச்சின் இடையே மலைமேல் ஏறியபடி இருந்த போகர் மறைந்துவிட்டார். சுத்தமாய் எதுவும் தெரியவில்லை. அடர் கறுப்பாய் பொதினி மலைக்குன்றும், சற்றே தழைந்த கறுப்பாய் வெளியும் கண்ணில்பட்டன.
``அவரைக் காணவில்லையே... என்னவானார்?’’
``இங்கே உன்னோடுதானே நானும் நிற்கிறேன். என்னைக் கேட்கிறாயே... போய்ப் பார்த்தால்தான் தெரியும்.’’
``சரி வா... போய்ப் பார்ப்போம். எது வந்தாலும் சரி...’’ - அஞ்சுகனும் புலிப்பாணியும் அங்கிருந்து நழுவி, அருகில் இருக்கும் பொதினிக் குன்றின் வடமேற்கு வாயவிய பாகம் வழியாக மேலேறத் தொடங்கினர். அசுரசிரசு போன்ற சதுரமற்ற உருண்ட பாறைகள், இடைப்பட்ட இடங்களில் தழைத்திருக்கும் ஆடாதோடை, பிரண்டை, குமிட்டி, நாயுருவிச் செடிகள். நெருப்பாக பாறை மேல் கால் பதித்துத் தாவிக்குதித்து அங்கங்கே இளைப்பாறி, மேலே மேலே அவர்கள் ஏறினர். அவர்களையொத்த சீடர்களை உறக்கம் தனதாக்கிக்கொண்டுவிட்டது.

மேலே குறிப்பிட்ட ஒரு பாறை மேல் நின்று கீழே கொட்டாரத்தைப் பார்த்தபோது காற்றோட்ட திசை காட்டும் காற்றாடி, தன்னந்தனியே வானில் வாலை ஆட்டிக்கொண்டு பறப்பது ஒரு பிசிராகத் தெரிந்தது. தீப்பந் தங்களைத் தூமாட்டிக்கிழவன் எண்ணெய்ச் சட்டிக்குள் முக்கி அணைத்துக்கொண்டிருந்தான்.
அரிய காட்சி!
பகலாக இருந்தால் ஒரு பறவைப் பார்வையில் நாலாபுறமும் பார்க்கலாம். பிரமிப்பு தட்டும். இரவில் மின்மினிகளோடு கொட்டாரக் கூம்புக் குடில்கள் கருத்தத் திட்டுக்களாய்த்தான் கண்களில் பட்டன! ஓர் அளவுக்குமேல் ஏறவும் முடியவில்லை. நெருஞ்சிமுள்கள் பாதம் முழுக்கத் தைத்துவிட்டன. அப்படியே அருகில் இருந்த பாறைமேல் சாய்ந்து `அம்மா...’ என்று அலறினான் அஞ்சுகன். புலிப்பாணி அடுத்து அலறினான். சத்தம், நிச்சயம் அந்தப் பாகம் முழுக்க எதிரொலித்திருக்கும்.
அதன் விளைவாக ``யாரங்கே?’’ என்ற போகரின் குரலும் ஒலித்தது. சில நொடிகளில் கையில் ஒரு சிறு தீப்பந்தமுடன் போகர் அவர்கள் முன் உள்ள பாறை மேல் தென்பட்டார். கீழே நாற்பத்தைந்து சரிவில் பாறை மேல் அமர்ந்த நிலையில், பாத நெருஞ்சியைப் பிடுங்கியபடி இருந்த அவர்களையும் கண்டார்.
அவர்களும் ஏறிட்டனர்!
``புலிப்பாணி... அஞ்சுகன்... நீங்கள்தானா?’’
``ஆம் குருபிரானே.’’
``இங்கே எங்கே வந்தீர்கள்?’’
``.....’’
``உங்களைத்தான் கேட்கிறேன். இந்த இரவில் இங்கு உங்களுக்கென்ன வேலை?’’
``மன்னிக்கவேண்டும் குருபிரானே... யாரோ இந்தப் பக்கம் செல்வதுபோல் தெரிந்தது. அது யார் என்று அறியவே வந்தோம்.’’
``என்னைத்தானே யாரோ என்கிறீர்கள்?’’
``தங்களை... தங்களை...’’
``என் சீடன் மூடனாகக்கூட இருக்கலாம். ஆனால், பொய்யனாக மட்டும் இருக்கவே கூடாது. உண்மை பேசுங்கள்.’’
``ஆம் குருபிரானே... தங்களையே பின்தொடர்ந்தோம்.’’
``இப்படிச் செய்யலாமா... நான் உங்களை பின்தொடரச் சொல்லவில்லையே?’’
``உண்மைதான்... உறக்கம் வராத இரவு, பரபரப்பு தொற்றிக்கொண்ட தில் நியதிகளைச் சிந்திக்கத் தவறிவிட்டோம்.’’
``இனி ஒருக்காலும் இப்படி நடந்துகொள்ளக் கூடாது. குரு என்பவர் கடவுளைவிட மேலானவர். ஒரு மனிதனுக்கு நல்ல குரு வாய்த்துவிட்டால் போதும், இறையருள் பற்றி அவன் கவலைகொள்ளத் தேவையே இல்லை. எனக்கு அப்படி வாய்த்தவரே காலாங்கி நாதர். இவர் வரையில், நான் செய்த தவற்றையே நீங்களும் இன்று என் வரையில் செய்துள்ளீர்கள்’’ என்ற போகர் ``மேலேறி என் பின்னே வாருங்கள்...’’ என்றழைத்தார்.

சற்றே நெருஞ்சியால் ரத்தம் துளிர்த்துவிட்ட பாதங்களுடன் அவர்கள் எழுந்து நின்று நடக்கத் தயாராயினர். சில முள்கள் நீங்காமல் இருந்து அழுந்த உள்ளேறின. முகம் சுணங்கியது. அது இயற்கை தரும் தண்டனைப்போலவும் தோன்றியது.
``ம் வாருங்கள்... நீங்கள் தவறு செய்தவர்கள்தான் என்றாலும் ஓர் அழகிய தவற்றை இன்று செய்துள்ளீர்கள்...’’ என்று இரு பொருள்பட போகர் பேசியது அவர்கள் இருவருக்கும் புரியவில்லை.
ஒரு வழியாக மேலே வந்தவர்கள் முன், சற்றே தட்டையான நிலப்பரப்பு. உச்சி பாகம்போலவும் தோன்றியது. போகரின் தீப்பந்தச் சுடரொளியில் அங்கே பொசு பொசுவெனப் பசுமை.
``அதோ அந்தப் புற்பரப்பின் மேல் சிறு சிறு செடிகள் முளைத்திருக்கும் இடத்தில் நின்று, நூறு முறை நின்ற இடத்தில் ஓடுவதுபோல் குதியுங்கள்...’’ என்று போகர் கூறவும் இருவரிடமும் திகைப்பு.
`குருதி பெருகி நிற்கும் இந்தக் காலோடு குதிக்கச் சொல்கிறாரே?’ எனும் கேள்வியோடு தயங்கியபடி நடந்தனர்.
``உங்களை நான் தண்டிக்க வில்லை. உங்கள் நெருஞ்சி தைத்த கால்களுக்கு இங்கேயே இப்போதே மருந்தளிக்கவே குதிக்கச் சொன்னேன். சர்ப்ப யுத்தம் புரியும் கீரிப்பிள்ளை, தான்பட்ட விஷக்கடிக்கான மருந்தை இந்தக் குறுஞ்செடிகள் மேல் உருண்டுப் புரண்டு அதன் சாறுபடவும்தான் எழுந்து செல்லும். `அக்கார சஞ்சீவி’ என்பது இதன் பெயர். அக்காரச் சாற்றில் வாய்கொப்புளித்து பல்லைப் பிடுங்கினால் கிழங்குபோல் நெகிழ்ந்துவரும். வலியும் தெரியாது. இங்கே அக்கார சஞ்சீவி இருப்பதை இப்போதுதான் பார்த்தேன்’’ - அவர் சொல்லி முடிக்கும் முன்பே அஞ்சுகனும் புலிப்பாணியும் அந்தச் செடிகள் மேல் குதிக்க ஆரம்பித்தனர்.
``ஆ... விழுந்து வணங்காமல் குதிக்கலாமா? இது என்ன நெறி... தாவரங்கள் தேவர்களுக்கு இணையானவை. முதலில் வணக்கம். பிறகே உபயோகம்’’ என்று இடையிடவும் குதிப்பதை நிறுத்தி அந்தத் தரைமேல் அப்படியே விழுந்து வணங்கினர். பிறகு போகரையும் நெருங்கி வந்து ``எங்களை மன்னியுங்கள்’’ என்று வணங்கினர்.
பிறகு குதிக்கத் தொடங்கினர். அந்த அக்கார சஞ்சீவி நைந்து சாறு வெளிப்பட்டு பாதத்தில் படப்பட குதிக்கும்போது ஏற்பட்ட வலி மெள்ள நீங்கி, பாதப் பரப்பு உறுதிமிக்கதாய் மாறுவதை உணர்ந்தனர்.
போகர், அவர்கள் குதிப்பதை ரசித்தார். ``நள்ளிரவில் மலை மேல் இப்படிக் குதிக்க வேண்டும் என்னும் உங்கள் விதிப்பாட்டை நினைத்தால், எனக்கு சிரிப்புதான் வருகிறது. புலிப்பாணி, இதற்கான காரணத்தை இப்போது நடக்கும் காலத்தின் அடையாளத்தை வைத்து நீ சொல்வாயா?`` என்று கேட்டார்.
குதித்து முடித்த நிலையில், மூச்சு வாங்க அதற்கு பதில் கூறத் தொடங்கினான் புலிப்பாணி. ``எனக்கு இன்று சந்திராஷ்டமம் குருவே! என் வரையில் சனியை இதுநாள் வரை பார்த்துவந்த குரு, வக்ரகதிக்குச் சென்றுவிட்டார். எனவே, மனம் மற்றும் உடலில் சனியின் பகுதியான கால்களால் கஷ்டப்பட வேண்டும் என்னும் கணக்கு, சரியாகப் பொருந்துகிறது. அதேசமயம் என் கட்டத்தில் புதன் உச்சம் பெற்றவ னானதால், அவனே ஒளஷதக்காரகன் ஆகி உங்கள் மூலம் மருந்தைத் தந்து நிவாரணமும் கிடைத்துவிட்டது.’’
``உனக்குப் பொருந்திய இந்தக் காலக்கணக்கு அஞ்சுகனுக்கும் எப்படிப் பொருந்தும்... இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் நட்சத்திரகதியில் பிறந்தவர்கள் அல்லவா?’’
``அஞ்சுகன் ஜாதகம் தெரிந்தால் அரை நொடியில் காரணகாரியத்தைக் கூறிவிடுவேன்.’’
``அற்புதம்... அது என்னவென்று பொழுது விடியவும் நீ கணக்கிட்டுப் பார்த்துச் சொல்... இப்போது என்னைப் பின்தொடருங்கள்.’’
போகர்பிரான், தீப்பந்தத்தை அஞ்சுகன் வசம் தந்தபடி நடக்கத் தொடங்கினார். அந்தச் சமதளப் பரப்புக்கு அப்பால் சரிவில் இறங்கினார். சரிவில் ஓரிடத்தில் சந்தனமரம் ஒன்று சிறிய அளவில் வளர்ந்து இருந்தது. அருகிலேயே ஒரு சிறு ஊற்று பொங்கி நீர் பெருகி கீழ்நோக்கி வாய்க்கால்போல் சென்றுகொண்டிருந்தது. அந்த மரத்தின்கீழ் ஒண்ணரை அடியில் ஒரு தேவி சிலை! சிலை முன்னால் காற்றுத் தடுப்போடு இருபெரும் அகல்விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. சந்தனமரத்தில் பல தீப்பந்தங்கள் செருகப்பட்டிருந்தன. அஞ்சுகன், போகர் கூறாமலே அவற்றுக்கு தன் பந்தத்துத் தீயைக் காட்டவும் அவை பற்றிக்கொண்டன. வெளிச்சம் அதிகரித்த நிலையில், தேவி சிலைக்கு கீழே ஒரு சர்ப்பம் சுருண்டுப் படுத்திருப்பது தெரிந்தது. அது விடைப்போடு நிமிர்ந்தது. போகர் அந்தச் சர்ப்பத்தையும் தேவி சிலையையும் ஒருசேர வணங்கியவராய், ``தேவியின் காலடியிலேயே தஞ்சமடைந்துவிட்டீரே?’’ என்று ஏதோ ஒரு மனிதனிடம் பேசுவதுபோல் பேசவும், அது ஆமோதிப்பதுபோல் தலையசைத்தது.
``இன்று பஞ்சமி... இன்னும் சில நிமிடத்தில் சஷ்டி திதி தொடங்கிவிடும். சஷ்டிக்குரிய அந்த முருகப்பெருமான் ஆலயக் கோட்ட நிமித்தம் இந்த மனோன்மணியை பிரம்ம முகூர்த்த காலத்தில் பூஜிக்கவே வந்தேன். தங்களுக்கு ஏதும் தடையில்லையே!’’ என்று போகர் கேட்கவும், அந்தச் சர்ப்பம் அங்கிருந்து விலகத் தொடங்கியது. போகர் திரும்பி அஞ்சுகன் மற்றும் புலிப் பாணியைப் பார்த்தார். அவர்கள் இமைக்கக்கூட தோன்றாமல் பார்த்தபடி இருந்தனர்.
``அந்தச் சர்ப்பம் நீங்கள் நினைப்பதுபோல் முட்டை பொரிய கர்மத்தால் ஜனித்த சர்பமல்ல. உடல்தான் சர்ப்பமுடையது. உள்ளிருப்பது நாகமுனி எனும் சித்தரின் ஆன்மா. உலக உயிரினங்களில் நாகர்கள் மனிதர்கள்போல் ஒரு ரகம். அந்த இனத்தில் வந்தவர் நாகமுனி. மனிதப்பிறப்பெடுத்துவிட்டபோதிலும் இறந்த ஒரு நாகத்தின் உடலில் புகுந்து வந்து நாக வடிவில் வழிபாடு புரிபவர்.
உலகின் இச்சைக்குரிய எதுவும் நாகங்களுக்குக் கிடையாது. குறிப்பாக சத்தம்! அதிர்வை வைத்து அவை ஜீவிப்பவை. மனித மனம் கட்டுக்கடங்க, காலமாகும். சர்ப்பமாக மாறும்பட்சத்தில் நொடியில் அடங்கிவிடும். எனவே, இவ்விதத்தில் வழிபடுகிறார். எனக்கு வழிவிட்டு சென்று விட்டார். நாம் சென்றபிறகு திரும்ப வந்து விடுவார்’’ என்று போகர் ஒரு நெடிய விளக்கம் அளித்தார்.
``எங்களால் நம்ப முடியவில்லை குருவே. ஒரு மனிதன் சர்ப்பமாக முடியும் என்பதை இப்போதே உணர்கிறோம்’’ என்றான் அஞ்சுகன்.
``பரகாயம் அறிந்தவர்க்கு பிக்காயமும் பெரிதில்லை. அதை விட்டுத்தள்ளுங்கள். இதோ இவள் மனோன்மணி! காசிக்குச் சென்ற இடத்தில் உபாசகர் ஒருவரிடம் இருந்து பெற்று வந்து இங்கே வைத்து சந்தன விருட்சத்தையும் நட்டேன். சந்தன நிழல் மனோன்மணிக்கு மிக இதமானது. எந்த ஒரு காரியம் சித்திக்கவும் பராசக்தி அருள் பிரதானம். அதிலும் சித்தனுக்கு அருளவென்றே அவள் மனோன்மணியாய்த் திகழ்கிறாள். இவளை பிரம்ம முகூர்த்த காலத்தில் எந்த திதியில் வணங்குகிறோமோ அந்தத் திதிக்குரிய யாவும் காலத்தால் வசியமாகும். அதோ ஊற்று! இவள் இங்கு அமரவும் ஊற்று தானாய்ப் பொங்கியது. அதுவே இவள் சக்தியைச் சொல்லாமல் சொல்லி விட்டது. நான் இதில் குளித்து தியானத்தில் மூழ்கப்போகிறேன். என்னோடு நீங்களும் அமர்ந்து தியானியுங்கள். குறிப்பாக, தோஷமில்லா பாஷாணம் கிடைக்க வேண்டும் என்பது உங்கள் வேண்டுதலாக இருக்கட்டும்’’ என்றார்!
இன்று பாரதி அதிர்வில் இருந்து விடுபடாமல் அரவிந்தனையே பார்த்தபடி இருக்க ``பாரதி... நான்பாட்டுப் பேசிக்கிட்டிருக்கேன். நீ எதுவும் சொல்லாம நிக்கிறியே?`` என்று மறுமுனையில் முத்துலட்சுமி கேட்டாள். பாரதியும் கலைந்தாள்.
``என்ன பாட்டி சொன்னே?’’
``அப்பா... பேசிட்டியா! ஆமா நான் சொன்னது எதுவும் உன் காதுலயே ஏறலையா?’’
``ஏறிச்சு... ஏறிச்சு... இப்ப அதுக்கென்ன?’’
``அதுக்கென்னவா? உனக்கு அப்படி யோகா மாஸ்டருக்கு நன்றி சொல்லணும்னு தோணலையா?’’
``நன்றி... நன்றி... சரி ரொம்ப நன்றி.’’
``என்ன எனக்குச் சொல்றே, அவருக்குச் சொல்... இந்தாங்க மாஸ்டர்.’’
மறுபக்கம் அந்தக் கைபேசி மாறுவதும் ``ஹலோ பாரதி... வணக்கம்’’ எனும் திவ்ய ப்ரகாஷின் குரலும் ஒருசேர ஒலித்தது.
``வணக்கம்.. வணக்கம்... ஜி!’’
``என்ன பாரதி... இப்படி நான் திரும்ப உன்கூடப் பேசவேண்டிவரும்னு நீ எதிர்பார்க்கல இல்லை?’’ - மிக இதமாய்க் கேட்டார்.

``அஃப்கோர்ஸ்... ஆனாலும் இதெல்லாம் சகஜம்தானே!’’ - பாரதியும் அழகாய்ச் சமாளித்தாள்.
``இங்க நான் உன் பாட்டியைச் சந்திச்சது சகஜமா இருக்கலாம். அதுக்காக உன் வாழ்க்கையில நடக்கிற, நடந்துக்கிட்டிருக்கிற எல்லாத்தையும் அப்படியே நினைச்சிடாதே.’’
``நீங்க என்ன சொல்ல வர்றீங்க?’’
``இப்பகூட நீ ரொம்ப குழப்பத்துலதான் இருக்கே. பழநிக்கு வா! முருகன் முன்னால நில்லு. அப்படியே போகரோட ஜீவசமாதி முன்னால கை கட்டி அஞ்சு நிமிஷம் நில்லு. உன் எல்லா குழப்பத்துக்கும் கேள்விகளுக்கும் விடை கிடைச்சிடும்.’’
``நான் குழப்பத்துல இருக்கேன்னு யார் சொன்னது? நான் நல்லா தெளிவாத்தான் இருக்கேன்.’’
``பாரதி, எதுக்கு இப்படி என்னைச் சமாளிக்கிறதா நினைச்சு உன்னை நீயே ஏமாத்திக்கிறே? இப்ப உன் எதிர்ல ஒரு இளைஞன் இருக்கணுமே! அவன் இனி உன்னோடதான் தொடரப்போறான். எல்லாமே ஒரு கணக்கு. கணக்குதான் இந்த உலக வாழ்க்கையே’’ - திவ்ய ப்ரகாஷ் ஏதோ வீடியோவில் பார்த்தபடியே பேசுவதுபோல் பேசிய பேச்சு, பாரதியைக் கலக்கிவிட்டது.
``சரிஜி... நான் அப்புறம் பேசறேன். பாட்டி வரையில நீங்க செய்த உதவிக்கு நன்றி. இப்பவே நான் கேப் சர்வீஸுக்கு போன் பண்ணி பழநிக்கு ஒரு காரை அனுப்பிவைக்கிறேன். பாட்டி தரிசனம் முடிஞ்சு அதுல திரும்பி வரட்டும். தேங்க்யூ’’ என்று வேகமாய் கட் செய்தாள். அவள் பேசியதை வைத்து அரவிந்தனும் ஓரளவு புரிந்துகொண்டான். பாரதியோ எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள்.
``என்ன பாரதி... பாட்டிக்கு ஏதாவது பிரச்னையா?’’
``ஆமாம் அரவிந்த்... கார் பிரேக்டவுனாகியிருக்கு. அப்ப பார்த்து அந்த யோகி திவ்ய ப்ரகாஷ் அங்கே வந்து, பாட்டி இப்ப அவரோட பழநி போயிட்டிருக்காங்க!’’
``யோகி திவ்ய ப்ரகாஷ்... யார் அது?’’
``நான் உங்ககிட்ட அவரைப் பத்திச் சொல்லியிருக்கேன் அரவிந்த். ஃபேஸ் ரீடிங்ல எக்ஸ்பெர்டா இருக்கிறவர்.’’
``ஏ... அந்த மனுஷனா? அங்க இப்படி ஒரு கோ இன்சிடென்ஸா?’’
``பை த பை, இப்ப நான் உங்ககூடப் பேசிக்கிட்டிருக்கிறதை யும் அப்படியே சொல்லிட்டாரு!’’
``அட... பயங்கர கில்லாடியா இருப்பார்போல இருக்கே!’’
``ஏன் இப்படி எல்லாம் நடக்குது... எப்படி இப்படி நடக்க முடியும்?’’
``எது?’’
``என்னைச் சுத்தி நடக்கிற எல்லாம்தான். `பழநிக்கு வா முருகன் முன்னால நில் - போகர் முன்னால நில் பதில் கிடைக்கும்’னு அட்வைஸ் வேற பண்றார் அவர்.’’
``அப்ப வேற எங்கேயும் பதில் இல்லைன்னு சொல்லாமச் சொல்லிட்டார்னு எடுத்துக்க லாமா?’’
``என்ன சொல்றீங்க?’’
``எதுக்கு டாக்ஸியை அனுப்பிக்கிட்டு... வா, நானும் வர்றேன்! பழநிக்குப் போவோம். அவர் சொன்ன மாதிரி முருகன் முன்னால போகர் முன்னால போய் நிப்போம் - என்னாகுதுன்னும் பார்ப்போம்.’’
``நோ, ஐ கான்ட்... ஐ கான்ட்!’’

``ஹூம்... நீ வளர்ந்தவிதம் உன்னை இப்படிச் சொல்லவைக்குது. அப்புறம் உன் இஷ்டம்.’’
``என்ன வளர்ந்தவிதம்னு நீங்களும் பொடிவைக்கிறீங்க?’’
``வேற என்ன சொல்ல... உன் வாழ்க்கைக்கு பக்தி தேவைப்படலை. நீ பார்க்க பக்தி செலுத்துறவங்களும் உன்னை பெருசா அட்ராக்ட் பண்ணலை. அப்ப, நீ இப்படியெல்லாம்தானே பேசுவே?’’
``அரவிந்த்... உங்க ஆரம்பம் ரொம்ப நல்லா இருந்தது! எல்லாமே ஜஸ்ட் கோ இன்சிடென்ஸ்னு பேசிட்டு, இப்ப அப்படியே தலைகீழா மாறி பேசறீங்க?’’
``உண்மைதான்... நாம பயணிக்கிற பாதையில யுடர்ன் வந்தா நாமளும் திரும்பித்தானே தீரணும். அது எப்படி நாம திரும்பிப் போறதா அர்த்தமாகும்?’’ - அரவிந்த் சொன்ன உதாரணமும் அந்தக் கேள்வியும் அவளைக் கட்டிப்போட்டன. சட்டென ஒரு பதிலைச் சொல்ல முடியவில்லை. திணறத்தொடங்கினாள்.
``பை த பை, இந்தப் பொடி வாள் இது எல்லாத்தையும்கூட விட்டுத்தள்ளு... இதெல்லாம் உன் வரையில ஆன்டிக்சா மட்டுமே இருக்கலாம். பாம்புகூட தற்செயலா வந்துட்டுப் போயிருக்கலாம். ஆனா, இந்தப் பழநி விஷயம் அப்படி எனக்குத் தெரியலை. யோசி, நீ போக முடிவுசெய்தா, நானும் கூட வர்றேன்! நீ எப்படியோ? நான் ஒரு ரைட்டரா இந்த அனுபவங்களை என்ஜாய் பண்ணத் தொடங் கிட்டேன். ஒரு எழுத்தாளனோட பெரிய கொள்முதலே அனுபவம்தானே?’’ என்றவன் புறப்பட்டுவிட்டவன்போல எழுந்தான். அவளுக்கு, அவன் விலகுவது சற்று ஏமாற்றமாக இருந்தது.
``என்ன அரவிந்த், டின்ன ருக்குக்கூட வெளியே போகலாம்னு சொன்னீங்க... கிளம்பிட்டீங்க?’’
``அஃப்கோர்ஸ்... உனக்கு கொஞ்சம் இப்ப தனிமை தேவைன்னு எனக்குத் தோணுது. அதான் நான் கிளம்பிட்டேன்.’’
``இல்ல அர்விந்த்... நீங்களும் போயிட்டா நான் இன்னும் குழம்பித்தான்போவேன்... பேசுவோம் - பேசப் பேச ஒரு க்ளாரிட்டி கிடைக்கலாமில்லியா?’’
``க்ளாரிட்டி எப்பவோ கிடைச்சாச்சு பாரதி. அதை உன்னாலதான் ஏத்துக்க முடியலை. ஏன்னா, நீ வளர்ந்தவிதம் அப்படி... அதைத்தான் நானும் சொன்னேன்.’’
``நான் வளர்ந்தவிதம்னா?’’
``அதை நீயே யோசி... அம்மா கிடையாது - அப்பாவும் கூடவே இருந்தாலும் கிடையாதுதான். பணத்துக்குப் பஞ்சமில்லை. ஆசைப்பட்ட எல்லாமே வாங்க முடிஞ்சவை. தான் பங்களாவாசிங்கிறதால சமூக நெருக்கம் அதிகமில்லாத ஒரு அமைப்பு. இதனால மனித வாழ்க்கையோட நசுக்கங்கள் எப்படி இருக்கும்னே தெரியாத ஒரு போக்கு. குறிப்பா, எங்கேயும் உனக்கு பிறர் உதவி தேவையேபடலை. பிறர் உதவியே தேவைப்படாதப்ப கடவுள் உதவி மட்டும் எப்படித் தேவைப்பட முடியும்? அதனால, கடவுளை நினைக்கவே உனக்குத் தோணலை... இதெல்லாம்தான் நீ வளர்ந்தவிதம்னு நான் நினைக்கிறேன்.’’
``எல்லாம் சரி... கடைசியா ஏன் கடவுள்கிட்ட வந்து முடிக்கிறீங்க?’’
``உன்னைச் சுத்தி நடக்கிற அமானுஷ்யத்துக்கு விடை கடவுள்கிட்டதானே இருக்கு.’’
``இது எல்லாம் அமானுஷ்யம்தானான்னே ஒரு கேள்வி எனக்குள்ள இருக்கு அர்விந்த்.’’
``எதிர்பாராதது நடப்பதுதான் வாழ்க்கை. அதை எதிர்கொண்டு வாழறதுலதான் சுவாரஸ்யமும் இருக்கு. நீ அடுத்து என்ன செய்யப்போறே... இதுதான் இப்ப என் கேள்வி?’’
``ஒரு விஷயத்துல நான் தெளிவா இருக்கேன். என் அப்பா தப்புப் பண்ணிட்டாரு. அதுக்கு நான் பரிகாரம் செய்தே தீரணும்னு நினைக்கிறேன். தட்ஸ் ஆல்! இந்த யோகா மாஸ்டர் - அவரோட அளப்புகள் அப்புறம் இப்ப பொட்டி, வாள் - எல்லாம் சுத்த ஹம்பக். முதல்ல நீங்க சொன்னீங்களே... அந்த மாதிரி இதைத் தூக்கிப்போட்டுட்டு நம்ம வேலைய பார்த்தா?’’ - ஒரு மாதிரி ஆரம்பித்து ஆவேசமாக முடித்தாள் பாரதி. அர்விந்த் உற்றுப் பார்த்தான்.
``என்ன பார்க்கிறீங்க?’’
``ஒண்ணுமில்லை. அறிவுக்கு சவால்விடுற விஷயங்கள்கிட்ட நீ பணிய மறுக்கிறதை நான் ரொம்பவே ரசிக்கிறேன். அப்படியே செய் பாரதி. இதெல்லாம் என்னாகுதுன்னும் நான் பார்க்கிறேன்’’ - அரவிந்தன் அப்படிச் சொன்ன மறுநொடி, மருதமுத்துவை அழைத்தாள். அவனும் ஓடிவந்து நின்றான். ``இந்தப் பெட்டி அப்புறம் இந்தக் கத்தி இரண்டையும் அந்தப் பழைய சாமான் விக்கிறவன்கிட்டையே கொடுத்துட்டு வந்துடுங்க. கமான் குயிக்!’’
``ஏம்மா..?’’
``சொன்னதைச் செய்... காரணமெல்லாம் கேட்காதே!’’
``அவன் பணத்தைத் திருப்பித் தர மூக்கால அழுவாம்மா.’’
``பணமே வேண்டாம். இது இங்க இருந்து போனா போதும் எனக்கு.’’
``அப்ப இது இங்க இருக்கக் கூடாது... அவ்வளவுதானம்மா?’’
``நான் என் வீட்ல கொண்டுபோய் வெச்சுக்கிறேன்.’’
``என்னமோ செய்... உனக்கு அஞ்சு நிமிஷம்தான் டைம். அது இங்க இருந்து போயிடணும்’’ - பாரதி கட்டளையிட்டு விட்டு அரவிந்தைப் பார்த்தாள். அவன் முகத்தில் மிகச் சன்னமாய் ஒரு சிரிப்பு.
``இந்தச் சிரிப்பு கேலிச்சிரிப்பா, இல்ல..?’’

அவள் கேட்க வாய்விட்டுச் சிரித்தவன் ``பாட்டிக்கு கேப் சொல்லிடு. அப்புறம் அந்த திவ்ய ப்ரகாஷ் தன் கார்லயே கூட்டிக்கிட்டு இங்க நேரா வந்துடப்போறாரு.’’
``என் காரை நான் அனுப்பிடுறேன். கேப்கூட சொதப்பினாலும் சொதப்பிடும்’’ எனும்போதே பானு உள் நுழைந்துகொண்டிருந்தாள்.
``பானு, ஒரு டிரைவர் அரேஞ்ச் பண்ணி பாட்டி நம்பரைக் கொடுத்து உடனே பழநிக்கு அனுப்பு. பாட்டி கார், பிரேக் டவுன் ஆயிடிச்சாம்.’’
``ஓகே. மேடம்.’’
``லுக்... பாட்டி நம்ப கார்லதான் வரணும். மீறி வந்தா நீ இங்க வேலையில இருக்க மாட்டே.’’
பாரதி சொன்னவிதமே சற்று மிரட்டலாக இருந்தது. அப்போது பெட்டி, வாள் இரண்டையும் மருதமுத்து தூக்கிச் செல்வதைப் பார்த்தவள் சற்று திகைத்தாள். மெள்ள நழுவி அவனை நோக்கிச் சென்றவள் ``யோவ் இதையெல்லாம் எங்க எடுத்துட்டுப் போறே?’’ என்று படபடத்தாள்.
``அம்மா, இதை என்ன எடுத்துக்கச் சொல்லிட்டாங்க.’’
``யோவ், என்னய்யா சொல்றே?’’
``அதான் சொல்றேன்ல... சும்மா நம்பாம கேட்டா என்ன அர்த்தம்?’’ என்றபடியே மெயின் கேட்டைக் கடந்து மறைந்தும்போனான்!
அதே சமயம் பானு குழப்பத்தோடு நின்ற இடத்துக்கு நேர்மேலே பிரமிட் வடிவக் கூரை! - கூரைச் சரிவில் காற்றும் வெளிச்சமும் நுழையும்விதத்தில் வடிவமைக்கப்பட்ட ஓடு ஒன்றின் உட்புறத்தில் அந்தச் சர்ப்பம்!
ஹாஸ்பிடல்!
படுக்கையில் சற்றே சாய்ந்து அமர்ந்த தோற்றத்தில் ராஜாமகேந்திரன் இருக்க, சீஃப் டாக்டரில் இருந்து ஒரு கூட்டமே அவரோடு பேசவேண்டியதைப் பேசிவிட்டு நகர்ந்து கொண்டது.
எல்லோரும் சென்றுவிட வெளிறிப்போன முகத்தோடு ராஜாமகேந்திரன் அருகில் இருந்த ரத்த அழுத்தமானியைப் பார்த்தார். அதில் ஓர் ஒளிப்புள்ளி மிக்கிமவுஸ்போல் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது.
மேலே நிழல் படவும் திரும்பினார், உதவியாளர் கணேச பாண்டியன்.
``என்னய்யா இப்படிச் சொல்லிட்டாங்க டாக்டருங்க?’’ என்று கணேச பாண்டியன் கேட்கவும், ராஜா மகேந்திரன் கண்களில் நீர் திரள்வது நன்கு தெரிந்தது.
அந்தக் கண்கள் இரண்டும் அதற்கு முன்பு வரை எப்போதும் எதற்காகவும் அழுததேயில்லை.
``அய்யா நீங்களா அழுவுறீங்க?’’
``இனி எப்பவும் எழுந்து நிக்கவே முடியாதுன்னா, அது புருனே சுல்தானாவாவே இருந்தாலும் அழுகை வந்துடும் பாண்டி.’’
``சிங்கப்பூரு மலேசியான்னு போய் காசை இரைச்சா சரியாகாதுங்களா?’’
``வந்துட்டு போன டாக்டர்ல ஒருத்தர் சிங்கப்பூர், ஒருத்தர் மலேசியா.’’
``சரிங்க விடுங்க... உசுரு பொழைச்சீங்களே அதை நினைச்சு சந்தோஷப்படுங்க.’’
``பாண்டி... இதுக்கு சாவு ஆயிரம் மடங்கு மேல்யா...’’ அப்போது அவன் கைபேசியில் `மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ என்கிற டி.எம்.எஸ்-ஸின் அழைப்பொலி - ஒதுங்கிச் சென்று காதைக் கொடுத்துவிட்டு திரும்பி வந்த கணேச பாண்டி முகத்தில், கோரமாய் மை பூசியதுபோல் ஒரு பீதி!
``யார் பாண்டி?’’
``அய்யா வேங்கைய்யனை அவன் விரோதிங்க மாறு கால் மாறு கை வாங்கிட்டாங்களாம்!’’
``யாரு... வே... வேங்கைய்யனையா?’’
``ஆமாம்யா... சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் அய்யாவும் உங்களப்போலவே காலு போய் இப்ப ஆஸ்பத்திரியில கிடக்காருய்யா.’’
``நிஜமாவா... இதை ஏன் நீ முதல்லயே சொல்லல?’’
``என்னத்தய்யா சொல்ல... அந்தக் குமாரசாமி இடத்துக்கு நீங்க ஆசைப்பட்டிருக்கக் கூடாதுய்யா.’’
``நீ என்ன சொல்றே?’’
ராஜாமகேந்திரன் கேள்விக்கு, பாரதியின் எதிர்வினை தொட்டு சகலத்தையும் கூறி முடித்தார் கணேச பாண்டியன். ராஜா மகேந்திரனிடம் ஒரு ஸ்தம்பிப்பு.
``சொல்லிவெச்ச மாதிரி அந்தக் குமாரசாமிக்கு துரோகம் செஞ்ச நீங்க மூணு பேருமே, இப்ப நடமாட வழியில்லாம சாகவும் முடியாம ஆஸ்பத்திரியில கிடக்கிறீங்க. நல்ல மனுஷன் சாபத்துக்கு சக்தி உண்டுங்கிறது மெய்தான்போல!’’ - கணேசபாண்டியன் முத்தாய்ப்பில் ராஜாமகேந்திரன் இதயத்தில் ஒரு யானை மிதி!
பழநி அடிவாரத்தில் காரில் இருந்து இறங்கினாள் முத்துலட்சுமி. கூடவே அந்த யோகி திவ்ய ப்ரகாஷிம் இறங்கினார்.
``நடந்து மலை ஏற ஆசைப்படுற உங்க பிரார்த்தனை, ரொம்ப உயர்ந்தது. நிதானமா ஏறுவோம். ஒண்ணும் அவசரமில்ல’’ என்றபடியே உதவியாளர் தந்த தேங்காயை வாங்கி அடிவாரத்தில் சிதறுகாய் போட்டார். பின்னாலேயே இன்னொருவர் ஒன்றுக்கு மூன்று காய்களை மலைக்கே ஆரத்தி காட்டுவதுபோல் காட்டிவிட்டு, ஓங்கி உடைத்தார். அதில் ஒன்று துளியும் உடையாமல் பந்துபோல் எகிறி தோட்டாபோல் முத்துலட்சுமியின் நெற்றிப்பொட்டு நோக்கிச் சென்று தாக்கியது.
அடுத்த நொடி ரத்தப்பெருக்கோடு அப்படியே முதல்படி மேல் சரிந்து விழத் தொடங்கினாள் முத்துலட்சுமி!
- தொடரும்
-இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியங்கள்: ஸ்யாம்