அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“செம்மொழிக்கான மதிப்பைக் குலைத்துவிட்டார்கள்!”

“செம்மொழிக்கான மதிப்பைக் குலைத்துவிட்டார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“செம்மொழிக்கான மதிப்பைக் குலைத்துவிட்டார்கள்!”

“செம்மொழிக்கான மதிப்பைக் குலைத்துவிட்டார்கள்!”

ன் அரை நூற்றாண்டு அரசுப் பணியில் ஔவை நடராசன் ஆற்றிய தமிழ் முன்னெடுப்புகள் முக்கியமானவை. தமிழ் வளர்ச்சிப் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவ்வை, 85-ம் அகவையை எட்டுகிறார்.

 ‘‘ கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய மூவரின் ஆட்சிக்காலத்திலும் தமிழ் வளர்ச்சித்துறைகளில் பணியாற்றினீர்கள். அந்த அனுபவங்களைச் சொல்லுங்களேன்...’’

‘‘எம்.ஜி.ஆருக்கு ஒரு பெருங்கனவு இருந்தது. ஒன்றுக்கொன்று தமிழோடு தொடர்புடைய மொழிபெயர்ப்புத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, அறநிலையத்துறை, நூலகத்துறை, ஆவணத் துறை, தொல்லியல்துறை, அருங்காட்சியகத் துறை உள்ளிட்ட தமிழ் சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட துறைகளையும் ஒரு தலைமையில் அதுவும் நிர்வாகம் தெரிந்த தமிழ் வல்லுநர் ஒருவரின் தலைமையில் கொண்டுவந்து தமிழுக்கான செயற்பாட்டைச் செழுமையாக வளர்த்தெடுக்க வேண்டும் என அவர் விரும்பினார். அது ஒரு சிறப்பான ஏற்பாடு. ஏனோ அதை அடுத்து வந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இப்படி தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை என்று ஒரு துறையை உருவாக்கிய பிறகுதான் வேறு மாநிலங்களில் இந்த விழிப்புணர்வு வந்தது.

“செம்மொழிக்கான மதிப்பைக் குலைத்துவிட்டார்கள்!”

செய்தி மக்கள் துறையில் பணியாற்றியபோது தமிழ்ச்சொற்களைச் சேர்த்து எழுத வேண்டாம் எனக் கோப்புகள் வந்தன. எல்லோரும் புரிந்துகொள்ளும்படியாக சிறு சிறு சொற்களாக இருக்க வேண்டும் என ஆணையிட்டார் எம்.ஜி.ஆர். எல்லா வார்த்தைகளையும் அப்படிப் பிரித்துப் போட்டால் சில சொற்களில் சுவை மாறிவிடும்... சிலவற்றில் அர்த்தம் வேறுபடும். முதலமைச்சரைச் சந்தித்து இதை எடுத்துச் சொல்வதற்குப் பலருக்கும் தயக்கம். நான் முதலமைச்சரைச் சந்தித்து இதைப் பற்றிப் பேசினேன். முதலமைச்சரை முதல் அமைச்சர் எனப் பிரித்தால், முதன்முதலாக அமைச்சரானவர் என அர்த்தம் வந்துவிடுமே என்றேன். அப்போதுதான் எளிமையாக, ‘அரசிளங்குமரி’, ‘படகோட்டி’ என்பதைப் பிரித்துச்சொன்னால் சொற்சுவை கெட்டுவிடும் என்றேன். உடனே அதை ஏற்றுக்கொண்டார். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் பெரியார் நூற்றாண்டு வந்தது.  அப்போதுதான் தமிழ் உள்ளளவும் நினைவிருக்கும் விதமாக பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த முன்வந்தார்.

கலைஞர் என்மீது பேரன்பு வைத்திருந்தார். தமிழுக்குச் செம்மொழித் தகைமைக்காகப் போராடியவர் அவர். ஆனால், அதன்பிறகு ஆறு இந்திய மொழிகளுக்குச் செம்மொழிப் பெருமையை வழங்கி, செம்மொழிக்கான பொருண்மைப் பொலிவையே நிலைகுலைத்துவிட்டார்கள். ஆனாலும் மற்ற செம்மொழிகளுக்கான ஆய்வு மையங்கள் அனைத்தும் மைசூரில் இருக்க, தமிழ்ச் செம்மொழி உயராய்வு மையம் தமிழகத்தில் செயல்பட அவர் எடுத்த முயற்சிக்கு ஈடில்லை. அதன் துணைத்தலைவராகப் பணியாற்றும் பொறுப்பைக் கலைஞர் எனக்குத் தந்தார்.’’

‘‘கீழடி, ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதில் மைய அரசு காட்டும் தயக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘மைய அரசு அப்படித்தான் இருக்கும். மைய அரசின் ஆளுகையில் 29 மாநிலங்கள் இருக்கின்றன. அது தமிழுக்குத் தரும் வாய்ப்பு ஒன்றின் கீழ் இருபத்தொன்பது என்ற கணக்கில்தான் இருக்கும்.’’

‘‘தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து நீங்கள் செய்த முக்கிய சாதனை என்ன?’’

‘‘தமிழ்ப் பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருடைய ஆட்சியில் உருவானது. தமிழ் மொழி உயராய்வுக்கென வ.அய்.சுப்பிரமணியம் அவர்களைத் துணைவேந்தராகக் கொண்டு எண்ணற்ற திட்டங்களோடு செயல்படத் தொடங்கியது. மொழி, பண்பாடு தொடர்பான தொடர்ச்சியான ஆய்வுகள் அதில் நடத்தப்பட்டன. மொழியியல் சார்ந்து பல துறைகளைத் தொடங்கினார்கள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் உச்சியில் தஞ்சை மாவட்டம் முழுவதும் எதிரொலிக்கும் திருக்குறள் இசையொலியை விடியலில் ஒலிக்குமாறு செய்தேன். திங்கள்தோறும் திருக்குறள் வகுப்பினை, தஞ்சை மாவட்டமே திரண்டு வருகின்ற பேரவையாக நடத்தினேன்.’’

‘‘இன்றைய சூழலில் தமிழ் வளர்ச்சி எப்படி இருக்கிறது என நினைக்கிறீர்கள்?’’

“பொதுவாகவே தமிழர்களுக்குத் தமிழ் குறித்த பெருமிதம் எப்போதும் உண்டு. கடந்த 20 ஆண்டுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களால் பெறப்பட்ட புதிய புதிய அனுபவங்கள் தமிழோடு இணைக்கும் செயல்பாடுகள் மகிழ்வளிக்கின்றன.

ஆண்டுதோறும் எத்தனை திரைப்படங்கள் வெளியாகின. எத்தனை காட்சிகள் ஓடின. எத்தனை நடிகர்கள் என்னென்ன படங்களில் நடித்தார்கள் எனப் பட்டியல் இடுவதைப்போல தமிழ்ப்படைப்புகள் என்னென்ன வெளியாகின என்பதையும் ஆவணப்படுத்தி, புதிய கருத்து அலைகள் எப்படிப் பொங்கி வழிகின்றன என்ற ஆய்வு மாநாட்டை ஆண்டுதோறும் பல்கலைக்கழகமோ தமிழ் வளர்ச்சித் துறையோ நடத்தலாம் என்பது என் விருப்பம்.’’

‘‘அரசு நிறுவனம், தனிநபர்களின் மொழி குறித்த பங்களிப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

‘‘நான் துணைவேந்தராகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும்போது தமிழ் வளர்ச்சித்துறை மொத்தமாக ரூ.55 லட்சம் செலவிட்டு வந்தது. நான் துணைவேந்தர் பொறுப்பிலிருந்து 1995-96-ம் ஆண்டில் ஓய்வு பெற்றபோது ரூ.6.75 கோடியாக உயர்ந்து நின்றது. இப்போது ரூ.70 கோடி அளவுக்குத் தமிழ் வளர்ச்சித்துறை செலவிடுகிறது. ஆண்டுதோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அறிஞர்கள் பலர்  பாராட்டும் பரிசும் பெறுகிறார்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அன்றாடம் ஓர் அரங்கத்தை நடத்துவதோடு நூற்றுக்கணக்கான நினைவுச் சொற்பொழிவுகளையும் பெருமிதமாக நடத்துகின்றது. உலகத்தமிழ்ச் சங்கம் ஓங்கி உயர்ந்து வருகிறது. ஆனால், நிறுவனம் என்று வருகிறபோது அதில் பணியாற்றுகிறவர்களுக்கான சம்பள உயர்வு, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு என அலுவல்சார்ந்த படிநிலை களைக் களைய வேண்டிய இடர்களும் அடிக்கடி குறுக்கிடும். நிறுவன வெளியீடுகளை, பல்கலைக்கழகப் பதிப்புகளை வென்று நிமிர்ந்து நிற்கும் தகுதி தனியார் நூல்களிலும் பளிச்சிடுகின்றன.’’

-தமிழ்மகன்

படம்: ப.சரவணகுமார்