
இறையுதிர் காடு - 19
அன்று அந்த பிரம்ம முகூர்த்த வேளையில் அவரோடு சேர்ந்து தங்களையும் உபாசிக்கச் சொன்ன போகரை அஞ்சுகனும் புலிப்பாணியும் மகிழ்ச்சியுடனும் விம்மிதத்துடனும் பார்த்தனர். அந்த வேளையில் அஞ்சுகனுக்குள் ஒரு கேள்வியும் எழும்பியது.
``குருபிரானே!’’
``என்ன அஞ்சுகா?’’
``இந்த மனோன்மணித் தாயை தாங்கள் நம் கொட்டாரத்தில் வைத்து வழிபடாமல், இப்படித் தனித்த ஒரு மலையுச்சியில் வைத்து தியானித்திட பிரத்யேகக் காரணம் ஏதுமுண்டா?’’
``உண்டு. ஒரு காரணமல்ல... பல காரணங்களுண்டு!’’
``நாங்கள் அவற்றை அறியலாமா?’’

``தாராளமாக... எனக்குப் பிறகு வரும் காலத்தில் சித்தயோக நெறி தொடர வேண்டும் என்றால், தாங்கள் நான் அறிந்த சகலத்தையும் அறிந்தாக வேண்டும். அதன்பொருட்டு விளக்கமாகவே கூறுகிறேன். நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள். பூமியில் சமதளமான நிலப்பரப்புக்கும், சரிவான மலையக நிலப்பரப்புக்கும் நிறைந்த வேற்றுமை உண்டு. புவியீர்ப்பு விசைப்பாட்டிலும் இந்த இரு இடங்களிலும் மெல்லிய மாறுபாடுகள் உண்டு. குறிப்பாக, ஆகாயம் நோக்கிச் செல்லச் செல்ல குளிர்ந்ததன்மை அதிகமாகும். மலை உச்சிகளில் குளிர் நிலவக் காரணமும் அதுவே. குளிர்நிலை, மன ஒருமைக்கும் கட்டுப்பாட்டுக்கும் உதவிடும் ஒரு காரணி. ஒரு யோகியின் பலமே இந்த மன ஒருமைதான். எனவேதான் நாடு நகரங்களைவிடக் காடும் மலையும் யோகியர்க்கு ஏற்ற இடங்களாகின. குறிப்பாக இமயம்! அடுத்து கூரிய மலைமுகடுகளில் அபரிமிதமான ஒரு சக்தி எப்போதும் காந்த அலைபோல் உருவானபடி இருக்கும். அப்படி ஓர் இடத்தில் அசுரசக்திகள் சென்றுவிடக் கூடாது. எனவே, தேவசக்தியை நிலைநிறுத்தும்விதமாய் இறை மூர்த்தங்களை வைத்து வழிபாடுகள் புரியும்போது, சுற்றுச்சூழலில் இயற்கைச் சமன்பாடும்; மக்கள் வாழ்வில் அமைதியும் ஏற்படும். ஒரு தரைக்கோயிலைவிட மலைக்கோயில் என்பது நூறு மடங்கு சக்தி அதிகம் உடையது.

வழிபாடு செய்ய வருபவர்களும், மிகுந்த எத்தனப்பட்டாலே உச்சிக்கு வர முடியும். அப்படி முயன்று வரும் சமயம் உடம்பில் ஏழு ஆதாரப்புள்ளிகளும் அவர்கள் வரையில் ஒரு நேர்க்கோட்டில் மிகுந்த தூண்டலுடன் இருக்கும். மன ஒருமையோடு வழிபாடு நிகழ்த்தும்போது, காற்று வழியே அந்தச் சக்தி உடலில் பரவி, உடல் மனம் எனும் இரண்டும் மிகுந்த சக்தியை கிரகித்துக்கொள்ளும். இப்படி மலைமுகடுகளையொட்டித் தெரிந்துகொள்ள, அநேக காரணிகள் உள்ளன.
இந்த மனோன்மணித் தாயை நான் நம் கொட்டாரத்தில் வைத்து வழிபடாததற்கு, பெரிதான காரணம் ஏதுமில்லை. இவளை எவரும் எங்கும் வைத்து வழிபடலாம். தூய்மையான பக்தியே பிரதானம். இந்த மலைமுகட்டை நான் தெரிவு செய்யக் காரணம், இது ஓர் அசாதாரண நிலப்பரப்பு; சமதளத்தில் பூகோள மையமாகத் தில்லை எனும் தலம் உள்ளது. மலைமுகட்டில் பூமத்தியரேகையையொட்டியும் அதிக அளவு செவ்வாய் எனும் கோளின் கதிர்வீச்சை கிரகிக்கும் தன்மைகொண்டதாய் இப்பொதினி முகடே என் ஆய்வில் காணக்கிடைக்கிறது. என் யூகம் சரியாக இருக்குமானால், இந்த உலகில் பிறந்து வளரப்போகும் மானுடர்களில் ஏழில் ஒரு பகுதியினர், தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த மலை உச்சிக்கு வந்து செல்லும் விதிப்பாட்டை உடையவராக இருப்பார்கள். அவர்கள் தங்களையும் அறியாமல் தாங்கள் திரும்பிச் செல்லும் இடத்தில் இம்மலை உச்சியில் பெற்ற அருட்கதிர்களைப் பரப்புபவர்களாகவும் இருப்பர். இதனால் திருவருள், குருவருள் எனும் இரு வினைப்பாடு வரும் காலத்தில் ஓர் இடையறா இயக்கமாய் நாள்தோறும் நடந்தபடி இருக்கும். அது, பூவுலகில் அசுரசக்திகளின் வலிமையை எப்போதும் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.’’
போகரின் நெடிய விளக்கம் இருவரையும் பிரமிப்பில் ஆழ்த்திவிட்டது.
``பிரானே, இந்த உலகில்தான் எத்தனை நுட்பமான சங்கதிகள்! தங்களால் நாங்களும் இதை அறியும் பேறு பெற்றவர்களாகிறோம். மலைமுகட்டுக்கும், குறிப்பாக இப்பொதினிக்கும் செவ்வாய்க்கோளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைத் தாங்கள் எவ்வாறு அறிந்தீர்கள் என நாங்கள் அறியலாமா?’’
``எல்லாம் என் குருநாதர்கள் எனக்கிட்ட பிச்சை! குறிப்பாக, இமயத்துச் சித்தர்கள். இன்று என் முன் நீங்கள் இருப்பதுபோல் ஒருநாள் அவர்கள் முன் நான் இருந்தேன். அவர்களே பிரபஞ்ச ஞானத்தை எனக்கு அருளியவர்கள்.’’
``நீங்கள் அவர்களோடு இமயத்தில் வசிக்காமல் இங்கே வரக் காரணம்?’’

``கேள்விகள் போதும். பிரம்மமுகூர்த்த காலம் பலம்மிக்கது. அதன் மூன்று நாழிகைக் காலம் அசாதாரணமானது. இவ்வேளையில் உள்ளங்கையில் உப்புடன் நாம் எதை வேட்கையோடு தியானிக்கிறோமோ, அது நம்மை நோக்கி வந்து நிற்கும். நீங்கள் பாஷாண விருப்பத்தோடு தியானியுங்கள். முதலில், உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதிலை நான் பின்வரப்போகிற சமயங்களில் நிச்சயம் சொல்லத்தான்போகிறேன். ஆனால், இப்போது உரையாடல் வேண்டாம்’’ என்று அவர்களை நெறிப்படுத்தியவர், அருகில் இருந்த சுனையில் நீராடிவிட்டு வந்து, கைகளை நீட்டச் சொல்லி, தன் ஆடை முனையில் கட்டி எடுத்து வந்திருந்த பழுப்பான உப்பை ஒரு கைக்கு ஒரு பிடி என்று நான்கு கரங்களுக்கும் நான்கு கைப்பிடி அளித்தார். தானும் அதுபோல் உள்ளங்கையில் உப்போடு தான் வழக்கமாய் அமர்ந்திரும் ஒரு பானை வயிறு போன்ற பாறை மேல் அமர்ந்து கண்கள் செருகிட விறைப்பானார்.
உடல் ஈரமும் மெல்லக் காயத் தொடங்கியது. அவர்கள் இருவரும்கூட அவ்வாறே ஆகினர். பிரம்மமுகூர்த்த காலம் குறித்து போகர் முன்பே விளக்கியிருக்கிறார். `உலகம் முழுக்க அவ்வேளையில் மனித இனமே ஒரே அளவிலான ஒன்பது அங்குலம் எனும் அளவில் சுவாச கதியோடு இருக்கும். காற்றுப்போக்கும் மேல் கீழ் என்றில்லாமல் படுத்திருப்பதால், இட வலம் என்றிருக்கும். உறக்கக் காலம் என்பதால், பலவிதமான எண்ண அலைகளுக்கும் அப்போது பெருவெளியில் இடமில்லை. எனவே, காற்றின் உட்கூறுகளில் ஜீவ அம்சம் மிகுந்தும் குளிர்ந்துமிருக்கும். இவ்வேளை எந்த வினை புரிந்தாலும் அது நூறு சதவிகிதச் சிறப்புடன் இருக்கும். உறக்கமும் ஆழ்ந்ததாக இருக்கும், விழிப்பும் ஆழ்ந்ததாக இருக்கும். எனவே, இந்த நேரத்தில் விழித்திருந்து வினையாற்றுபவர்கள் மிகக் கூர்மையானவர்களாக இருப்பார்கள்’’ - பிரம்மமுகூர்த்த காலம் குறித்து இப்படி போகர் பிரான் விளக்கியுள்ளபடியால், அவர்களும் அந்தக் காலகட்டத்தை அவர் விரும்பியதுபோல் தியானத்தில் மூழ்கிக் கழிக்கத் தொடங்கினர்.
விடிந்துவிட்டது. அஞ்சுகனும் புலிப்பாணியும் கண்விழித்தபோது எதிரில் போகர் பிரான் இல்லை. அவர்கள் உள்ளங்கை உப்பும்கூடக் கொழுக்கட்டை பிடித்ததுபோல் கட்டிப்போயிருந்தது. எழுந்து தங்கள் கைகளைச் சுனைநீரில் கழுவிக்கொண்டு, அப்படியே முகத்தையும் கழுவிக்கொண்டனர்.
பெரிதாய் குளிர்த் தாக்கம் தெரியவில்லை. நேரம் கடந்ததையும் உணர முடியவில்லை. பகல் வெளிச்சத்தில் மனோன்மணி சொரூபம் பளிச்செனத் தெரிந்தது. தங்களையும் அறியாது இருவரும் கைகூப்பிவிட்டு அங்கிருந்து அகல முற்பட்டபோது ஓர் அதிசயக் காட்சியை அவர்கள் காண நேர்ந்தது.
சரிவிலிருந்து மேலே வந்து சமதள நிலப்பரப்பில் நின்றபோதுதான் அந்தக் காட்சியும் கண்ணில் பட்டது. எதிரில் அந்தச் சமதளப்பரப்பில் மலையுச்சியின் மையப்புள்ளி போன்ற பாகத்தில் ஒரு கழிக்கம்பு நடப்பட்டிருந்தது. அதன் கைப்பிடி பாகத்தில் மூன்று பன்னிரண்டு மணிகள் கயிறுகொண்டு கட்டப்பட்டிருந்தன.
அந்தக் கழியின் கீழே நாகம் ஒன்று படம் விரித்து நின்றபடி இருக்க, இட வலமாய் ஒரு புறம் தோகை விரித்த மயிலும், மறுபுறம் மிளிர்கொண்டைச் சேவலும் நின்றுகொண்டிருந்தன. இருவரும் அந்தக் காட்சியை, வைத்த விழியை எடுக்க இயலாதபடி பார்த்தனர்.
இது என்ன விசித்திரக் காட்சி! ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணப்பாடுகொண்ட ஜீவன்கள் இங்கே இந்தக் கைத்தடி முன் எதனால் இப்படி நின்றபடி இருக்கின்றன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. எதனாலோ அவர்கள் கரங்களும் கூம்பி வணங்கத் தொடங்கிட, முதலில் சர்ப்பம் விலகியது - பிறகு சேவல் பறந்து சென்றது - மயிலும் பெரும் அகவலுடன் பறந்து மறைந்தது.
இருவரும் அந்தக் கோலை நெருங்கினர். மங்கல நிகழ்வுகளுக்குப் பந்தல்கால் நடுவதுபோல அந்தக் கோல் நடப்பட்டிருந்தது. அதன் நுனியில் கட்டப்பட்டிருந்த சதங்கைகளும் காற்று வீச்சில் லேசாகச் சிணுங்கின. காற்றின் வீச்சலான சப்தம் நடுவே அந்தச் சலங்கைகளின் சப்தம் மிக இனிமையானதாய் இருந்தது.
அது ஒரு பிரத்யேக அனுபவம்!
கொட்டாரத்துக்குள் அவர்கள் நுழைந்தபோது தூமாட்டிக்கிழவன் வில் தராசு போன்ற தண்ணீர்ப்பானைத் தராசைச் சுமந்தபடி கொட்டார அடுமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். ஊழியக்காரர்களால் காது வளர்ந்த பாலாடுகளிடமிருந்து பீய்ச்சல் நிகழ்வு ஒருபுறமும், பசுக்களிடம் கோமியக் கலயங்களில் கோமியச் சேமிப்பு ஒருபுறமும் நிகழ்ந்துகொண்டிருந்தன.
துளி நிழலுமின்றி சூரிய ஒளி படும் தளங்களில் பல்வகை மருந்துப்பொருள்கள் காலை வெயில் கணக்கை உத்தேசித்துக் காயவைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலும் வேர்களே மிகுதியாக இருந்தன.
அவரவரும் அவரவர் பாடுகளில் இருந்த அவ்வேளையில் ஒரு சாரட்டுடன் இருவர் புரவிகளில் கொட்டார மையக்குடில் நோக்கி வந்துகொண்டிருந்தனர். இருவரின் ஆடை அமைப்பும், தலைப்பாகைக் கட்டும் அவர்கள் கன்னிவாடி சமஸ்தானத்தைச் சார்ந்தவர்கள் என்பதை உணர்த்தின. ஒருகட்டத்தில் புரவியை விட்டு இறங்கி, புரவியை அருகில் இருந்த நிலவேம்பு மரத்தண்டில் கட்டியவர்கள், சாரட்டுக்காரர்களை நிற்கச் சொல்லிவிட்டு மையக்குடில் முன் சென்று நின்று அங்குள்ள வெண்கல மணியை ஒருமுறை இசைத்தனர். கச்சிதமாய் அஞ்சுகனும் புலிப்பாணியும் அவர்கள் முன் வரவும், ஏறிட்டனர்.
சத்தம் கேட்டு மையக்குடிலுக்குள் இருந்து போகரின் உதவியாளன் கம்பண்ணனும் வந்து பார்த்தான். அந்தப் புரவிக்காரர்கள் வணங்கத் தொடங்கினர்.
``வாழ்க போகர் பிரான் - வளர்க அவரது சித்த நெறி!’’
``தாங்கள்..?’’
``கன்னிவாடி சமஸ்தானக் காவல் ஊழியர்கள். என் பெயர் அதிவீரன், இவன் ஆனைமுடி.’’
``வந்த நோக்கம்?’’
``எங்கள் எஜமானர் கடும் ரோகத்தில் இருக்கிறார். எழுந்து அமரக்கூட சக்தி அவரிடமில்லை. காமாலை முற்றிவிட்டது - உயிர் பிழைப்பது அரிது எனக் கூறியதோடு, நோயைக் கட்டுப்படுத்த இயலாததால், அஞ்சி ஊரைவிட்டே வெளியேறிவிட்டார் எங்கள் பரம்பரை வைத்தியர். எங்கள் எஜமானிதான் தங்களை வேகமாய் அழைத்துவரப் பணித்தார்!’’ - கம்பண்ணன் கேட்டபடி இருக்கும்போதே போகர் பிரான் பின்னால் வந்து நின்றார். அதே வேகத்தில் புலிப்பாணியைப் பார்த்தவர் ``புலி... காலக்கதி எவ்வாறு உள்ளது எனக் கூறு பார்ப்போம்’’ என்றார்.
புலிப்பாணியும் நீர்க்கடிகையை நெருங்கிச் சென்று ஒரு பார்வை பார்த்தும், குடில் கொடிக்கம்ப நிழலை ஒரு பார்வை பார்த்தும் இரு கைகளின் 28 கண்ணிகளை வைத்து வேகமாய் ஒரு கணக்கைப் போட்டவன்,
``பிரானே, நிகழ்ந்துகொண்டிருப்பது குருஹோரைக்கான காலகதி. எதைச் செய்தாலும் நல்லவிதமாகவே முடிந்திடும்.’’
``என்றால் சங்கனை அழைத்துக்கொண்டு இவர்களோடு செல். சிமிழியையும் தோளில் வைத்து அழைத்துச் செல். சங்கன் நாடி பார்த்த நிலையில் என்னை தியானித்திட நான் இங்கிருந்தவாறே மருந்தைக் கூறிடுவேன். அவசியத்தின் பொருட்டு சிமிழியைப் பயன்படுத்த நவ சிம்புடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தங்க ஊசி, வெள்ளி ஊசி, உலோக ஊசிகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். பத்து நாழிகைக்குள் அனைத்தும் நலமாக, அந்த மனோன்மணியும் தண்டபாணியும் அருளட்டும்’’ என்றார்.
நவசம்புடம், சிறு ஊசிப்பெட்டி இவற்றோடு `சிமிழி’ என்கிற பெயர்கொண்ட பந்தயப்புறா ஒன்றும் கம்பண்ணன் பிடித்து வர, அது புலிப்பாணி தோளில் விடப்பட்ட நிலையில் சிறகை ஒருமுறை விசைத்துக் காட்டியது.
``இப்போதே பறக்க முனையாதே... சாரட்டைத் தொடர்ந்து நீ வந்தால் போதும்’’ எனும்போதே சங்கன் எனும் சீடன் தோளில் ஒரு மான் தோலால் ஆன பையுடன் போகர் பிரான் முன் வந்து வணங்கியவனாய் அந்தப் புரவிக்காரர்களின் சாரட்டில் ஏறிக்கொண்டான். புலிப்பாணியும் இன்னொரு புறம் ஏறிக்கொண்டான்.
``தாங்கள் வருவீர்கள் என்றே சாரட்டுடன் வந்தோம்’’ என்ற புரவிக்காரர்களைப் பார்த்த போகர் ``என் சீடர்கள் என்னைவிட கெட்டிக்காரர்கள் - சுணக்கம் வேண்டாம், எல்லாம் நலமாகும்’’ என்றிட, சாரட்டும் திரும்பியது. புரவிகள் விரையத் தொடங்கிட சிமிழிப்புறா, அந்தப் புரவிகளுக்கு நேர் மேலே அவர்களைப்போலவே கன்னிவாடி நோக்கிப் பறக்கத் தொடங்கியது!
இன்று அவசரத்துக்கு பழநி மலை அடிவாரத்தில் கண்ணில்பட்ட அந்த ஆஸ்பத்திரியே போதுமானதாய் இருந்தது. சொதசொதவென ரத்தக்கசிவுகளோடு அரைமயக்க நிலையில் இருந்த முத்துலட்சுமியை திவ்ய ப்ரகாஷ் கைத்தாங்கலாய் அழைத்துச் சென்று முகப்பில் உள்ள மரபெஞ்சில் உட்காரவைத்தார். பெரிய படகு காரிலிருந்து இறங்கி வருகின்றனர் என்கிற ஹோதாவே, டாக்டரை அந்த மரபெஞ்சு அருகே வரவழைத்துவிட்டது. முத்துலட்சுமியின் நிலை எதையும் பெரிதாகக் கேட்க விடவில்லை.
``எப்படி இப்படி ஆச்சு?’’ என்று மட்டும் கேட்டார்.
``சிதறுதேங்காய் பட்டுத் தெறிச்சிடிச்சு டாக்டர். ஸ்டிச் பண்ற அளவு காயம். நிறைய பிளட் லாஸ்... அதனால ஃபர்ஸ்ட் எயிடோடு சலைன் கொடுக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன். பல்ஸ் எல்லாம் வெரி நார்மல்’’ என்றார் திவ்ய ப்ரகாஷ்.
அந்த டாக்டர், பதிலுக்கு அவரை வியப்போடு பார்த்தார். திவ்ய ப்ரகாஷின் தோற்றம் அவருக்குள் ஒரு மரியாதையை உருவாக்கியிருந்தது. அதற்குள் டாக்டரின் உதவியாளர் மிக வேகமாய் முத்துலட்சுமியின் ரத்தப்பெருக்கைப் பஞ்சுகொண்டு துடைத்து, காயத்தைச் சுத்தம்செய்யத் தொடங்கியிருந்தார்.
``நீங்க..?’’
``ஐ’யம் திவ்ய ப்ரகாஷ் - கர்மயோகி - மாஸ்டர் ஆஃப் இண்டியன் யோகாஸ்.’’
``ஓ... நீங்கதானா அவர்? ஒரு தமிழ் வீக்லியிலகூட உங்க இன்டர்வியூவைப் பார்த்தேன்.’’
``அந்த வீக்லியோட சப் எடிட்டரின் பாட்டிதான் இவங்க. இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லணும்னா எம்.பி ராஜா மகேந்திரனோட மதர்.’’

``ஓ... ஓ... ஓ... போத் ஆர் செலிபிரிட்டிஸ். இங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்.’’
``ஆனா, சந்தோஷமால்லாம் நாங்க வரல டாக்டர். நீங்க கொஞ்சம் பேஷன்ட்கிட்ட கான்சென்ட்ரேட் பண்ணுங்க. நான் ஒரு போன் பண்ணிட்டு வந்துடுறேன்.’’
திவ்ய ப்ரகாஷ் ஒதுங்கிச் சென்றார். வெளியே பிதுங்கி வழியும் டிராஃபிக்! திவ்ய ப்ரகாஷின் காரை ஒரு தோல்பைக்காரன் நெருங்கி, ஓர் உள்ளங்கை அளவு சிட்டையைக் கொடுத்து 50 ரூபாயை எடுக்கச் சொல்லிக்கொண்டிருந்தான். திவ்ய ப்ரகாஷின் டிரைவர் பதிலுக்கு ``தலையில குடுமியும், குடுமியில பூவுமா யாராவது வந்தா, அவங்க கிட்ட போய்க் கேளு’’ என்று சொன்னபடி இருக்க, திவ்ய ப்ரகாஷ் கார் கதவைத் திறந்துகொண்டு ஏறி அமர்ந்தார்.
அந்தத் தோல்பைக்காரனோ கார் முகப்பை பலமாய்த் தட்டி ``லட்சக்கணக்குல போட்டு கான்ட்ராக்ட் எடுத்திருக்கோம். ஏரோபிளேன் கணக்கா வந்துட்டு குடுமி பூவுன்னா நான் உட்ருவேனா?’’ என்று கத்தத் தொடங்கியிருந்தான். பதிலுக்கு, திவ்ய ப்ரகாஷ் தன் அகன்ற விழிகளால் அவனை உற்றுப் பார்த்தார். அவனும் பார்த்தான். சில நொடியிலேயே அமைதியானவன் ``சரிங்க, போயிடுறேங்க’’ என்றபடி விலகிக்கொண்டான்.
``இவன் மாதிரி லோஃபர்கிட்டல்லாம் வாயக் கொடுக்காதே. டேஷ்போர்டுல இருக்கிற பணத்தை எடுத்து முகத்துக்கு நேரா எறி, ஓடிடுவான்க’’ என்றபடியே போனில் பாரதியைப் பிடித்திருந்தார்.
``பாரதி...’’
``யெஸ் ப்ரகாஷ்ஜி!’’
``உன்கூட கொஞ்சம் பேசணும்மா.’’
``அதான் பேசிக்கிட்டே இருக்கீங்களே.’’
``என் வரையில உன்கிட்ட ஒரு அவேர்னஸ் இருக்கு. அவேர்னஸ் ரெண்டுவிதம். ஒண்ணு, பாசிட்டிவ். இன்னொண்ணு நெகட்டிவ்! என் வரையில உன்கிட்ட இருக்கிறது நெகட்டிவ். ஐடோன்ட் மைண்ட் தட். நான் இப்ப சொல்லப்போறத கவனமா கேட்டுக்கோ’’ என்று பீடிகை போட்டவர், முத்துலட்சுமி காயம்பட்டு ட்ரீட்மென்ட்டில் இருப்பது வரை சொல்லிவிட்டு ``இப்ப நான் ஆஸ்பத்திரி வாசல்ல இருந்துதான் பேசறேன். அவங்களுக்கு இப்ப நல்ல ரெஸ்ட் தேவை. ஒரு நல்ல ஹோட்டல்ல ரூம் போட்டு நான் பார்த்துக்கிறேன். உன்னால இங்க வர முடியுமா?’’ என்று முடித்தார்.
மறுமுனையில் பாரதியிடம் ஓர் அடர்வான மௌனம்.
``பாரதி... நான் பேசறது கேட்குதா?’’
``யெஸ் ஜி, ஆனா...’’
``நீ இப்ப என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரியும். உன்னைச் சுத்தி இப்ப நடக்கிற எல்லாமே ரொம்ப மிஸ்டிக்கா இருக்கிறதா நினைக்கிறே. இது எதுவுமே உனக்குப் பிடிக்கலை. என்னையே நீ கிட்டத்தட்ட ஒரு டுபாக்கூர் மாதிரிதான் நினைக்கிறே. அதனால, என் பேச்சை நீ எவ்வளவு தூரம் எடுத்துப்பேன்னு தெரியலை. உனக்கு இங்க வர இஷ்டமில்லைன்னா நான் உன் பாட்டிக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து இப்பவே திருப்பி அனுப்பிடுறேன். நான் என்ன செய்யட்டும்?’’
``நான் இப்ப என் பாட்டிகூட பேச முடியுமா?’’
``இப்ப கஷ்டம்... அரை மணி நேரம் கழிச்சுப் பேசலாம். சலைன் இறங்க இறங்க தெம்பு வந்துடும்.’’
``உங்களோடு தொடர்ந்து வந்து சாமி கும்பிட முடியாதா?’’
``அது அவங்க ஆன்மபலத்தைப் பொறுத்த விஷயம். ஆனா, இப்படி நடந்ததுக்குப் பின்னால ஒரு சக்தி அவங்கள தடுக்கிற ஒரு விஷயம் இருக்கு.’’
``ரொம்பத் தற்செயலான ஒரு விஷயத்தை எப்படி இப்படி உங்களால மொழிபெயர்க்க முடியுது?’’
``பாரதி... நான் இப்ப உனக்கு உதவி செய்துகிட்டிருக்கேன். காலம் என்னைச் செய்யவெச்சுக்கிட்டிருக்கு. இப்ப இதுக்குமேல நான் எதுவும் சொல்ல விரும்பலை. உன்னைச் சுத்தி நடக்கிற விஷயத்துல எனக்கு ஒரு பங்கு இருக்குன்னு நீ என்னை முதன்முதலா சந்திச்சப்பவே நான் சொன்னதை ஞாபகப்படுத்திக்கோ. எல்லாத்துக்கும் சரியான காரணகாரியம் இருக்கு.

காரண காரியம் இல்லாத ஒரு விஷயமும் இந்த உலகத்துல கிடையாது. சிலசமயம் அது பளிச்்னு தெரியும். சிலசமயம் போகப்போகத் தெரியும். சிலசமயம் தெரியாமலேகூடப் போகும். ஆனா, நிச்சயம் காரண காரியம் இருக்கு. நான் அதை நம்புறதால அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நடந்துகிட்டு நான் போய்க்கிட்டே இருக்கேன். நீ நம்பாததுதான் பிரச்னையே!’’
``என்னால எவ்வளவு முயற்சிசெய்தும் நம்ப முடியலஜி. நான் என்ன செய்வேன்?’’
``உனக்கு இந்த நிலையில ஒரு பதில்தான் சொல்வேன். நீ உன்னைச் சுத்தி நடக்கிற அமானுஷ்ய அனுபவங்களை நினைச்சு பயப்படுறே, பயப்படாதே! உன்னையும் மாத்திக்காதே... தைரியமா இறங்கி இதை ஃபேஸ் பண்ணு.
கடலோட ஆழம் தெரியணும்னா, ஒண்ணு அதுல இறங்கி மூழ்கிப் பார்த்துத் தெரிஞ்சுக்கணும். இல்லை, இறங்கிப் பார்த்தவங்க சொல்றத நம்பணும். நீயே முடிவுபண்ணு! அரை மணி நேரம் கழிச்சு போன் பண்ணு. உன் பாட்டிகூடவும் பேசு. இப்ப கட் பண்ணிக்கிறேன்’’ - பேசிவிட்டு காரைவிட்டு இறங்கினார். ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார். டாக்டர் முத்துலட்சுமிக்குக் கட்டுபோட்டு முடித்திருந்தார். ஒரு சலைன் பாட்டில் பொருத்தப்பட்டிருந்தது. முத்துலட்சுமி, திவ்ய ப்ரகாஷை சற்று நைந்த பார்வை பார்த்தாள்.
``டோன்ட் ஒர்ரி... இப்பதான் பாரதிகிட்ட பேசினேன்.’’
``கிளம்பி வர்றேன்னு சொன்னாளா சார்?’’
``ஐ திங்க், அவ வருவான்னுதான் நான் நினைக்கிறேன்.’’
``டவுட்டா சொல்றீங்களே... இங்க உங்கள நான் கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கேன். வெரி ஸாரி.’’
``நிச்சயமா இல்லை... எதெல்லாம் நடக்கணுமோ அதெல்லாம்தான் நடந்துகிட்டிருக்கு. நீங்க அநாவசியமா கவலைப்படாதீங்க.’’

``முதல் படியில கால வைக்கவுமே இப்படி அடிபட்டா என்ன அர்த்தம் சார்? என்னைப் பார்க்க வராதேன்னு அந்த முருகன் சொல்றானோ?’’
``முருகன் என்ன நம்மை மாதிரி மனுஷனா... மனுஷங்களுக்குத்தான் மூணுவித குணங்கள். அதம, மத்திம, உத்தமன்னு அதை விரிச்சுச் சொல்வாங்க... குணப்பாடுள்ளவங்கதான் கோப தாபங்களோடவும் செயல்படுவாங்க. முருகன் நிர்குணன்! அதாவது குணங்களைக் கடந்தவன். தெய்வம்னாலே குணம் கடந்ததம்மா. அதை எப்பவும் மனிதர்களைப்போல நினைச்சுடாதீங்க.’’
``அப்ப எதனால எனக்கு இப்படி நடந்தது?’’
``அந்த ஆராய்ச்சி இப்ப வேண்டாம். நீங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும். உங்களால இப்ப இருக்கிற நிலையில மலை ஏறி வர முடியாதுன்னு நினைக்கிறேன்.’’
``கொஞ்சம் கிறுகிறுப்பாதான் இருக்கு. ஆனா, நான் முருகனைக் கும்பிடாம மட்டும் போக மாட்டேன்.’’
டாக்டரும் அப்போது இடையிட்டார். ``கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறது நல்லது. எப்பவுமே தலையில அடின்னா ரொம்பக் கவனமா இருக்கணும். ஊருக்குப் போய் எதுக்கும் ஒரு ஸ்கேன் பண்ணிப் பார்த்துடுங்க... ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணாதீங்க’’ என்றார்.
``தேங்க்யூ டாக்டர்! நான் இவங்களோடு இப்ப மலைக்குப் போக முடியாது. இது என் சர்ப்ரைஸ் விசிட்! எப்பவும் இப்படித்தான் வந்துட்டுப் போவேன். எனக்கு முருக தரிசனத்தைவிட போகரோட தரிசனம்தான் எப்பவும் பெருசு. இப்பகூட போகர் ஜீவசமாதியில உட்கார்ந்து தியானம் பண்ற எண்ணத்துலதான் வந்தேன். நான் போயிட்டு ஒன் அவர்ல திரும்பி வர்றேன். நடுவுல இவங்க பேத்தி இவங்களோடு பேசலாம். மற்ற விஷயங்களை நான் வந்து பேசறேன்’’ - திவ்ய ப்ரகாஷின் போகர் பற்றிய விளக்கம், அந்த டாக்டரை முகம் மலரவைத்துவிட்டது.
``ஓ... நீங்க போகர் சுவாமியோட பக்தரா?’’
``ஆமாம். அவர தரிசனம் பண்றதுதான் இந்தப் பிறப்புல என் லட்சியம்.’’
``அதான் பண்ணப்போறீங்களே?’’
``அது அவர் ஜீவசமாதியை... ஆனா, நான் குறிப்பிட்டது அவரையே.’’
``என்ன... அவரையா?’’
``யெஸ்... அவரையேதான்!’’
``இப்பவும் அவர் நடமாடுறார்னு ஒரு கருத்து இந்தப் பழநியில பல பக்தர்கள்கிட்ட இருக்கு. ஆனா, அது ஒரு பக்தி மிகுதியில சொல்லப்படுற ஒண்ணாத்தான் நான் நினைக்கிறேன்!’’
``நீங்க உங்க விருப்பப்படியே நினையுங்க. ஆனா, நான் அப்படி நினைக்கலை. நான் போயிட்டு வந்துடுறேன். அம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க. வந்துடுறேன்’’ என்று திவ்ய ப்ரகாஷ் கம்பீரமாக அங்கிருந்து புறப்பட்டார். முத்துலட்சுமி, அவரை ஆச்சர்யத்தோடு பார்த்தாள். அவளுக்குள்ளேயும் ‘போகர் இப்போதும் இருக்கிறாரா’ என்று ஒரு கேள்வி!
அமெரிக்காவின் பேடன் ரூஜ் நகரம்! பிசிசிபி நதியோரமாய் அடர்ந்த ஒரு வனம். வனத்தில் மரங்களின் மேல் கட்டமைக்கப்பட்டிருந்த `உட் ஹவுஸ்’ எனப்படும் வீடொன்றின் பால்கனியில் மழிக்கப்படாத நான்கு நாள் தாடை முடிகளோடு அமர்ந்திருந்தான் சாந்த ப்ரகாஷ்! உள்ளே ஆரஞ்சுப் பழச்சாற்றில் அவனுக்கே தெரியாமல் தூக்க மாத்திரைகளைக் கலந்துகொண்டிருந்தாள் சாரு.
பிசிசிபி நதிமேல் ஒரு சரக்குக்கப்பல் நிதானமான ஒரு வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. பால்கனியில் இருந்து அந்த மரத்தின் கிளைகளின் இடைவெளி வழியாக நன்றாகப் பார்க்க முடிந்தது. எதார்த்தமாய் கீழே பார்த்தபோது அலிகேட்டர் வகைப்பட்ட இரு முதலைகள் அந்த ஆறு போதும் என்பதுபோல் கரை ஏறி கீழே மரத்தடியில் தங்களுக்கு மிகப் பிடித்தமான காட்டு நாய்களைத் தேடிக்கொண்டிருந்தன. இதுபோல் வரம்பு கடந்து வரும் முதலைகளை அங்கே தாராளமாய்ச் சுடலாம். அவையும் துப்பாக்கிச் சத்தம் கேட்டாலே போதும், தங்கள் தட்டைக்கால்களைப் போட்டுக்கொண்டு அப்படி ஓர் ஓட்டம் ஓடும்.
சாந்த ப்ரகாஷ் அந்த முதலைகளைப் பார்த்தபடி இருக்க, பழச்சாற்றுடன் வந்து நின்றாள் சாரு.
``என்ன சாரு?’’
``ஜூஸ்...’’
``ஐ நீட் விஸ்கி.’’
``இங்க வந்ததுல இருந்து ஏழு பெக் அதைத்தான் குடிச்சிருக்கே. இப்ப இந்த ஜூஸைக் குடி.’’
``வேண்டாம் - நீ குடிச்சுக்கோ.’’
``ரிலாக்ஸ் பண்ண வந்த இடத்துல இப்படி இருந்தா எப்படி? இந்த ஜூஸைக் குடி.’’
``ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்... முடியலை சாரு. கண்ணைத் திறந்தா மூடினா அவன்தான் தெரியுறான்.’’
``நீ கொடுத்தவன் மட்டும்தான் - சுமந்து வளர்த்தவ நான். எனக்கு எப்படி இருக்கும்னும் கொஞ்சம் யோசிச்சுப்பார்...’’ - பேச்சோடு அருகில் அமர்ந்தவளாய் அவன் வாயருகே ஜூஸ் கிளாஸைக் கொண்டுசென்றாள். அவனுக்கும் அவள் எப்படி எனத் தெரியும். குடிக்காமல் விட மாட்டாள். எனவே, அவளுக்காகக் குடித்தான்.
இனி சில நிமிடத்தில் தூங்கிவிடுவான். பத்து மணி நேரத்துக்கு எழுந்திருக்க மாட்டான். அவன் சமீபமாய் சரியாகத் தூங்கவேயில்லை. பிசினஸ் பார்ட்னர் ராய் சௌத்ரி பலமுறை போன் செய்து `சம்திங் ராங்’ என்று கூறிவிட்டான். எல்லாம் சேர்ந்துதான் சாருவை அவன் வரையில் இப்படி நடக்கவைத்தன.
அவனும் தூங்க ஆரம்பித்தான். எங்கோ சில பெலிகான் பறவைகள் கத்தும் சப்தம் கேட்டது. சாரு மெல்ல தன் கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துவிட்டுக்கொண்டாள். டேப்பை எடுத்து வந்து சேமித்துவைத்திருந்த ஆகாஷின் இளவயது வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினாள். குழந்தையில் அவன்தான் எவ்வளவு அழகு? கண்களில் கண்ணீர் வழிய வழிய, அந்த அசையும் பிம்பங்களையே அவள் பார்த்துக்கொண்டிருந்தபோது உறங்கிவிட்ட சாந்த ப்ரகாஷிடம் தூக்கத்தை மீறிய முணுமுணுப்பு.
`தாத்தா நீங்களா... நான் வரணுமா? பாஷாணலிங்க பூஜை செய்யணுமா? அது எங்க இருக்குன்னே தெரியாதே!’ - அவன் முணுமுணுப்பில் துண்டு துண்டாய் பிரத்யேகமான செய்திகள். சாருபாலா கூர்மையாகத் தொடங்கினாள்.
- தொடரும்
-இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியங்கள்: ஸ்யாம்