
யவனிகா ஸ்ரீராம், ஓவியம்: செந்தில்

மனிதருக்கான சிறப்புச் செய்தி வந்த நாளில்
கடைவீதியில்
ஒருநகவெட்டிக்காக அலைந்துகொண்டிருந்தேன்
இயங்கும்பொம்மை ஒன்றின் பாட்டரியும்
தீர்ந்துபோயிருந்தது
கடற்கரையில் விடுமுறைநாள் கூட்டம்
சிதறிக் கிடக்க
துண்டு துண்டாகப் பழங்களைத் தோல்நீக்கி நறுக்கி குவளைகளில்
அடுக்குபவனை விசாரித்தேன்
அதுமுடிந்து நானூறு வருடமாயிற்று என்றவன் தனக்குப் பின்னாலான
பெட்ரோல் பங்கினைக் காட்டினான்
விமானம் ஒன்று
சாலையைக் குறுக்காகக் கடக்க
ரெக்ரியேஷன் க்ளப் வாசல்
சுவரின் மீது ஒருவன்
கண்முன்பாக இரண்டு காலி
பீர்போத்தல்களை வீசி உடைத்தான்
ஒருநகவெட்டி இருபது ரூபா
அந்தச் செய்தியும் இறுதி வருமானம்
இருபது ரூபா என்றது
நல்லவேடிக்கை
நகரத்தின் இருபுறமும்
அந்நியர்கள் அழகியலை வழங்குகிறார்கள்
அது சாகாவரம் பெற்ற இளமையை என்றுமாய்ப் பரிந்துரைக்கிறது
பெரும் வணிக வளாக
நுழைவாயிலில் அலறும் கண்காணிப்பு இயந்திரத்தின் அவசம் தாளாமல் நகவெட்டியை
குப்பைத் தொட்டியில் எறிந்தேன்
அவ்வளவு அழகான இளம்பெண் அதை எவ்வளவு நளினமாக ஆமோதிக்கிறார்
நல்லது.