மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 33

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர்

ந்த உலகத்தில் இருக்கும் எல்லா ஜீவராசிகளும் சுகமான ஜீவிதத்தையே விரும்புகின்றன. அதிலும் மனிதன், கணம்தோறும் மகிழ்ச்சி யிலேயே இருந்துவிடத் துடிக்கிறான். மகிழ்ச்சி என்பது ஒரு நிறத்தினாலானது அல்ல; ஒவ்வொருவரின் அகத்துக்கேற்ப அதன் நிறம் மாறுபடும். மகிழ்ச்சியைப் பழகத் தேவையில்லை. ஆனால், துக்கங்களை நாம் பழகவேண்டியிருக்கிறது.

ஓர் இரவில் எல்லாவற்றையும் இழந்த சில மனிதர்களை எனக்குத் தெரியும். இனி என்ன இருக்கிறது என்று முடிந்துபோனவர்கள் உண்டு. இனியும் வாழ ஒரு வாழ்வு இருக்கிறது. அது மற்றவர்களுக்கானதாகவும் மாறிவிடுகிறது. மகிழ்ச்சியில் மட்டுமே பதுங்கிக்கொள்ளும் மனிதர்கள், துக்கத்தின் நிழலைக் கண்டதுமே மயங்கிவிடுவார்கள். அப்படியான ஒருவன்தான் நானும். என் பிள்ளை கண்ணம்மாவை மருத்துவ மனையில் சேர்த்தபோது, எல்லாம் ஒரு நொடியில் மாறிப்போயின. நாள்களின் அட்டவணை அப்படியே தலைகீழானது. என் வீடு, அவ்வப்போது அந்தரத்தில் மிதந்துகொண்டி ருந்தது. அதைக் கட்டி இழுத்துச் சமன்செய்ய, நான் துக்கங்களைப் பழகாமல் இருந்ததே காரணம் எனப் புரிந்த நாள்கள் அவை.

தனியார் மருத்துவமனைகள், சில சூட்சுமங்களை வைத்திருக்கின்றன; எப்படியாவது தம் பிள்ளையைக் காப்பாற்றிவிட வேண்டும் என வருபவர்களை ஆழம் பார்க்கிறது; உயிர்போகும் எனத் தெரிந்துவிட்டால், கவனமாக முழுத்தொகையையும் பிடுங்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு அந்த நோயுற்ற பிள்ளையைத் தாரைவார்த்துவிடுகிறது.

நான்காம் சுவர் - 33

``ஏழைங்களுக்கு வர்ற நோயா வந்திருக்குது!” என்று ஒரு முதியவர் புலம்பிக்கொண்டு போகிறார். நோய் என வந்துவிட்டால், பணக்காரரென்ன... ஏழையென்ன. ஆனால், எளியவர்களுக்கு வந்துவிடும் நோய்  என்பது, நோயைக்காட்டிலும் கொடூரமானது. ``அப்படின்னா இதுவரைக்கும் பண்ணீங்களே ட்ரீட்மென்ட், அதெல்லாம் என்ன சார்?’’ என்று இயலாமையில் கேட்டேன்.

என் மனைவி, கண்ணம்மாவைத் தோளில் வைத்துக்கொண்டு மருத்துவரைப் பார்த்தாள். வந்தபோது எப்படி அனலாகக் கொதித்ததோ அதேபோல்தான் இருந்தது. பத்து நாள் கழித்தும், கடன்களை வாங்கி அவர்களின் கல்லாவை நிறைத்தும் அந்த மருத்துவர் இப்படிச் சொன்னார், ``புரிஞ்சுக்கோங்க சார்... இங்க உங்க கொழந்தய பாக்குற அளவுக்கு வசதியில்ல. சில டெஸ்ட்லாம் கவர்மென்ட்லதான் எடுக்க முடியும். எல்லாம் இந்த லெட்டர்ல எழுதியிருக்கேன். என்கிட்ட பேசி டைம வேஸ்ட் பண்ணாதீங்க. கொழந்தய சீக்கிரம் கொண்டுபோங்க. ஆம்புலன்ஸை நானே ரெடி பண்றேன். அதுக்கு நீங்க காசு தர வேணாம்” என்று. அப்போது `எந்த வசதியும் இல்லைன்னு மொதல்லயே சொல்லவேண்டியதுதானே!’ எனக் கேட்கத் தோன்றியது. பிள்ளையைக் கூட்டிச் செல்வதே நல்லது என, அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் ஏற்றினோம்.

குளூக்கோஸ் பாட்டில் ஏறிக்கொண்டிருந்தபடி கண்ணம்மா என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையில்தான் துக்கத்தைப் பழக மனம் சொன்னது. `கண்ணம்மாவை உயிரோடு மீட்டு விட முடியும்’ என, துக்கத்தின் பழக்க வாசனை எனக்கு நம்பிக்கையூட்டியது. கண்களைத் துடைத்துக்கொண்டேன். ``பிள்ளையின் முன்னால் அழக் கூடாது’’ என்று மனைவியிடம் சொன்னேன். கண்ணம்மாவைப் பார்த்துச் சிரித்தேன். அப்போது ஆம்புலன்ஸ் அவசரசிகிச்சைப் பிரிவுக்குள் வந்து நின்றது.  ஆம்புலன்ஸிலிருந்து இறங்கினேன். எங்களைப்போலவே எல்லோரும் துக்கங்களைப் பழகத் தொடங்கியிருந்தார்கள். சிலர் வானத்தை வெறித்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரவில் எல்லோருக்குமாக நிலவு ஒளிர்ந்துகொண்டிருந்தது. இதே நிலவைத்தான் பத்து நாள்களுக்கு முன்னால் நான் கண்ணம்மாவுக்குக் காட்டியிருக்கிறேன். கண்ணம்மாவை மனைவி தூக்கிக்கொண்டாள். நான் குளூக்கோஸ் பாட்டிலோடு அவசர சிகிச்சைப் பிரிவின் உள்ளே சென்றேன். வழியில், ஒருவர் யாரிடமோ போன் போட்டு அழுது கொண்டிருக்கிறார். அவர் பக்கத்தில் ஒரு பெண் தன் பிள்ளைக்குச் சோறு ஊட்டுகிறார். அவ்வப்போது அழும் அவரைப் பார்த்தும் கொள்கிறார். இந்தச் சூழ்நிலை மனதில் என்னவோ செய்கிறது. துக்கம் தொண்டையை அடைக்கிறது. ஆனாலும் அழுதுவிடக் கூடாது.

அவசரப் பிரிவில் போதுமான படுக்கை வசதி இல்லாததால், சிலர் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு குழந்தைகளின் முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க்கை வைத்தபடி இருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் கையில் பிடித்தபடியே உட்கார்ந்திருந்தார்கள். எங்களை வெளியே போகச் சொன்னார்கள். கண்ணம்மா இப்போது அழத் தொடங்கினாள். உடல் வழக்கத்துக்கு மாறாக உப்பி இருந்தது. அம்மாவை மட்டும் இருக்கச் சொன்னார்கள். டாக்டர், நரம்புகளைத் தேடிக்கொண்டிருந்தார். எவ்வளவு முயன்றும் நரம்புகள் கிடைத்தபாடில்லை. வலியால் கண்ணம்மா `அம்மா...’வெனக் கத்துகிறாள். நரம்பு ஒன்று கிடைத்ததாக உணர்ந்த டாக்டர், நரம்பில் ஊசியைக் குத்தினார். பிறகுதான் அது நரம்பல்ல எனத் தெரியவருகிறது. பிறகு மீண்டும் நரம்புகளின் வேட்டை ஆரம்பமாகிறது. இப்போது மனைவி அழுதபடியே வெளியே வருகிறாள். நான் உள்ளே போகிறேன். பிள்ளை வலியால் துடித்துக்கொண்டிருக்கிறாள். துக்கத்திலிருந்து வரும் வலியை கண்ணம்மா பழகவேண்டியிருக்கிறது. என்னதான் பெற்ற பிள்ளையாக இருந்தாலும், வலியால் அது `அப்பா...’ எனக் கதறித் துடித்தாலும் ஒருவரின் வலியை மட்டும் நாம் வாங்கிக்கொள்ளவே முடியாது என்பதுதான் நிஜம். அவரவர் வலியை அவரவர்தான் அனுபவிக்க முடியும்.

நான்காம் சுவர் - 33

நரம்பின் தேடுதல் வேட்டையில் ஊசியைக் குத்தி பிளாஸ்திரி போட்டு சலைன் ஏற்றினார்கள். எங்களுக்கும் படுக்கை வசதி இல்லாததால், ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார்கள். இதயத் துடிப்புக்கான கருவிகளை மாட்டிவிட்டார்கள். மூச்சுக்கான ஆக்ஸிஜன் மாஸ்க்கைக் கையில் பிடித்துக் கொள்ளச் சொன்னார்கள். மனைவி உட்கார்ந்து கொண்டாள். கண்ணம்மாவின் முகத்தில் மாஸ்க்கை வைத்து அந்த பலூனை அழுத்திக் கொண்டிருந்தாள் மனைவி.

வெளியே வந்தேன். ``ஒண்ணும் ஆகாதுண்ணா... இங்கிருந்து வெளிய வந்து நார்மல் வார்டுக்கு அனுப்பிட்டா... சரியாயிடும்ணா” என்றான் சந்துரு. நோய்மையில் அவதிப்படும் தருணத்தில்தான் சகமனிதர்களின் ஒரு சொல் நமக்கு தேவ வார்த்தையாக மாறிப்போகும். ரிசப்ஷனில் 60 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், போகிற வருகிற நோயாளிகளின் குறிப்புகளைப் பதிவேற்றிக்கொள்கிறார். அழுகுரல்களும் அவஸ்தைகளும் வேதனைகளும் அவரை ஒன்றும் செய்யவில்லை. துக்கம் என்ற ஒன்றைப் பார்த்துப் பார்த்து, துக்கத்தைக் கடந்தவராக இருக்கிறார். சின்னச் சின்ன டப்பாவில் ரத்தத்தோடு வைஷ்ணவி கொண்டுவந்து கொடுத்தார். ``சார், இந்த பிளட்டை ஏ பிளாக்ல நாலாவது மாடியில கொடுத்து… இந்த பிளட்டை ஆப்போசிட்ல ஏழாவது மாடிக்குக் கொடுத்து ரிசல்ட்டை நின்னு வாங்கிட்டு வந்துருங்க’’ என்றார்.

கண்ணம்மாவின் ரத்தத்தைக் கையில் ஏந்தியபடி நாலாவது மாடி ஏறினேன். இருண்டு கிடக்கிற மாடிப்படிகளில் மருந்தின் கசந்த வாசனை. நம்மவர்கள் ஜன்னல் கம்பிகளில் உமிழ்ந்த வெற்றிலை, பான் மசாலாக்களின் கறைகள் காய்ந்து, பிறகு அதுவாக உதிர்ந்துகொண்டிருக்கும் காட்சிகள் என அந்தச் சூழல் நம் மனதை மேலும் இருண்டுவிடச் செய்வதாகவே இருந்தது. இருள் என்பது, குறைந்த ஒளிதான். ஆனால், துக்க வாசனையின்மேல் இருள் என்பது அடர்ந்த இருள்தான்.

என்னைப்போலவே அங்கே பலரும் அவர்களின் பிள்ளைகளுடைய ரத்தங்களைப் பரிசோதனைக்குக் கொடுத்துக் காத்திருக் கிறார்கள். ரத்த அணுக்கள் எண்ணிக்கையை வாங்கிக்கொண்டு திரும்பினேன். ஒரு முதியவரும் ரிசல்ட்டை வாங்கிக்கொண்டு என்னோடு நடந்தார். அவரால் நடக்க முடியவில்லை. ``முட்டி வலி தம்பி... நாலாவது மாடி ஏறவே முடியல. இதுல, ஏழாவது மாடிக்கு எப்படி ஏறப்போறேன்னு தெரியல” என்றார்.

அவரது பேத்திக்குக் காய்ச்சல் என்று சொன்னார்.  ``அவங்க அப்பா வரலயா?” என்று கேட்டேன்.

``அத ஏன் கேக்கிற... முகலிவாக்கத்துல கட்டடம் இடிஞ்சி உழுந்துதே...” நான் `ஆமாம்’ என்பதுபோல் தலையாட்டினேன். ``அதுல சிக்கிச் செத்துப்போயிட்டான் தம்பி. சித்தாளு வேல... இப்போ என் மருமவப் பொண்ணுதான் கூலிக்குப் போயி குடும்பத்தைக் காப்பாத்துது. நான் செக்யூரிட்டியா ஒரு கம்பெனியில இருக்கேன். வயித்த நிரப்பிக்கவே கஷ்டப்படணும். இதுல நோயோடு வேற போராடணும்னா, எப்டி தம்பி!”

ஏழாவது மாடியில் கண்ணம்மாவின் ரத்தத்தையும் முதியவரின் பேத்தி ரத்தத்தையும் கொடுத்துவிட்டு சீட்டோடு வந்தேன். முதியவர் சஸ்பூன் மூலையில் உட்கார்ந்துகொண்டு தனது முட்டியைத் தானே அமுக்கிக்கொண்டிருந்தார். அவரிடம் சீட்டைக் கொடுத்தேன். ``நாளைக்கு 10 மணிக்கு ரிசல்ட் வந்துரும்” என்றேன். இருவரும் நடந்தோம். ``என்னத்ததான் கண்டன் இந்த வாழ்க்கையில... வாழவேண்டிய வயசுல புள்ள போயி சேந்துட்டான். ஆசா பாசத்தல்லாம் அடக்கிவச்சிக்கினு... பாண்டு தூக்குற மருமவப் பொண்ண நினைச்சாத்தான் கஷ்டமா இருக்குது. எப்பிடியாவது பேத்தி உயிரோட வந்துட்டா போதும். என்னாலயும் முடியல... ஒரு அப்பனா நின்னு மருமவப் பொண்ணுக்கு ஒரு கல்யாணத்த பண்ணிட்டன்னா போதும்” பேத்தியின் சீட்டைக் கெட்டியாகப் பிடித்தபடி நடந்து வந்தார். நோய்மைக்கு மருத்துவம் பார்க்கப் பணம் இல்லை என்பது வேறு; நோய்மை என்ற ஒன்று வந்தால், அன்றாடமே ஆட்டம் கண்டுவிடும் என்பது வேறு.

எளிய மனிதர்களின் வாழ்வு என்பது, மனிதக் காட்டில் நாள் முழுவதும் வேட்டையாடிக் களைத்து அலுத்துப்போய்க் கொண்டுவரும் நெல் மணிகளில்தான் அன்றைய பொழுது அடுப்பு எரியும். ஒரு நாள் வேட்டைக்குச் செல்லவில்லை யெனில், வயிற்றில் பசி எரியும். சோற்றுக்கே போராடுகிற வாழ்வில் நோய்மையோடும் போராடும் சூழல் வந்துவிட்டாலும் முட்டியைப் பிடித்துக்கொண்டு நாலு மாடி ஏறுகிறார் ஒரு கிழவர். ஆஸ்பத்திரியில் கொடுக்கும் ரொட்டியையும் பாலையும் வரிசையில் நின்று வாங்கிக்கொள்கிறார் ஒரு மூதாட்டி. துக்கங்களைப் பழகியிருக்கிறார்கள். அதை எப்படியெல்லாம் அணைத்துக்கொண்டு வாழும் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். நமக்குத்தான் சிறிய கீறல் என்றாலே வாழ்வே முடிந்துவிட்டதாகச் சோர்ந்துவிடுகிறோம்.

நான்காம் சுவர் - 33

``சார், கொஞ்ச நேரம் நீங்க பாப்பாவ புடிச்சிக்கிட்டு உட்காருங்க... பயப்படுது சார்” என்றார் வைஷ்ணவி. மனைவியைக் கொஞ்ச நேரம் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, கண்ணம்மாவை மடியில் உட்கார வைத்தபடி ஆக்ஸிஜன் மாஸ்க்கை முகத்தில் வைத்தபடி இருந்தேன். பக்கத்தில் கண்ணம்மாவிடம் பேச்சுக் கொடுப்பதாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் வைஷ்ணவி. எல்லாவிதமான துக்கங்களையும் புரிந்துகொண்டு கூடவே நின்றுகொண்டிருக்கிறார். நமக்கான துக்கங்களில் உடன் இருப்பவர்கள்தாம் கடவுளர்கள். அவர்கள் எதுவும் செய்யவேண்டாம் உடன் இருந்தாலே போதும்.

கண்ணம்மாவின் உடலில் உஷ்ணம் எரிந்துகொண்டிருந்தது. எத்தனையோ பிள்ளைகள் ஆபத்தான நிலையில் வருகிறார்கள். அதில் ஒரு பிள்ளையின் தாய் ``அய்யோ... என் புள்ளையே..!’’ என்று அழ ஆரம்பித்தார். எனக்கு என்னவோபோல் இருந்தது. அப்போது இளவயது டாக்டர் ஒருவர் ``அம்மா இங்கெலாம் இப்படிக் கத்திக்கிட்டு இருக்கக் கூடாது. வெளிய போம்மா” என்றார்.

``சார்... என் புள்ளைய காப்பாத்துங்க சார்” என்று அந்த அம்மா காலில் விழுகிறார். நோயுற்ற அந்தப் பிள்ளை தன் தாயை மிரட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ``அம்மா, இன்னும் அரை மணி நேரத்துல... உன் புள்ள செத்துப்போயிடும். நான் காப்பாத்தணும்னா வெளிய போங்க” என்றார் கண்டிப்பாக. அந்த அம்மா இந்த வார்த்தைகளால் துடிதுடித்துப்போனது. எனக்கு அந்த டாக்டரின் மீது பயங்கர கோபம் வந்தது. அந்தப் பிள்ளையைச் சுற்றி நின்றுகொண்டு என்னென்னவோ செய்தார்கள். பிறகு வரிசைப்படி என்னிடம் வந்து நின்றார். கண்ணம்மாவின் குதிகாலைப் பிடித்து அழுத்திப் பார்த்தார். ``சார்... வெளிய போங்கன்னு சொல்றது ஓகேதான். அதுக்காக, புள்ள செத்துப்போயிடும்னு சொல்றது தப்பில்லயா” என்று கேட்டேவிட்டேன்.

``நான் சொன்னது தப்புதான். ஆனா, அப்படிச் சொல்லி அவங்கள அனுப்பலைன்னா, அந்தக் கொழந்த முன்னாடி அழுதுக்கிட்டே இருப்பாங்க. குழந்தைக்கு பிரஷர் அதிகமாயிரும். பாசம்கிற பேர்ல கலவரப்படுத்திடுவாங்க. அவங்க என்ன வேணா நினைக்கட்டும், கொழந்த உயிரோடு போனா எல்லாத்தையும் மறந்துருவாங்க. இதெல்லாம் எங்களுக்குப் பழகிருச்சு” என்றார்.

``சார், கொழந்தைக்கு சரியாய்டும்ல?” கேட்டதற்கு ``எதையும் சொல்ல முடியாது சார்” என்று கடந்துவிட்டார் டாக்டர். உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கிறேன். கண்ணம்மாவுக்கு மூச்சு மேலும் கீழும் வாங்குகிறது.

அப்போது ஒரு குழந்தை மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் வந்தது. டாக்டர்கள், பயிற்சி மாணவ டாக்டர்கள் எல்லோரும் சிகிச்சையை ஆரம்பித்தார்கள். பக்கத்து பெட்டில் எட்டு வயதுடைய சிறுமி, மரணத்தோடு போராடிக்கொண்டிருந்தாள். அவளின் இதயத்துடிப்பு இறங்கிக்கொண்டே வந்தது. நான் கண்ணம்மாவை இறுகப் பிடித்துக்கொண்டேன். அந்தப் பெண்ணின் தகப்பன், பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார். அவர் அழுதபோது எனக்கு உடம்பெல்லாம் உதற ஆரம்பித்தது. ஒரு பெண்மருத்துவர் சிறுமியின் நெஞ்சில் கையை வைத்து `ஒன்ன ஒன்ன ஒன்... டூவ டூவ டூ... த்ரிய த்ரிய த்ரி...’ என்று பத்து வரை சொல்லி அமுக்குகிறார். மறுபடியும் இன்னொரு மருத்துவர் `ஒன்ன ஒன்ன ஒன்...’ என்று ஆரம்பிக்கிறார். சிறிய இடைவெளியில் அந்தச் சிறுமி மூச்சை அபாயகரமாக இழுத்துக்கொண்டிருந்தாள். நான் கண்ணம்மாவின் உயிரைப் பிடித்திருக்கிறேன். யாருக்காகவும் எதற்காகவும் அதை நான் விட்டுவிட மாட்டேன். மருத்துவர்களின் போராட்டம். அங்கு இருப்பவர்களின் இறைஞ்சுதல்கள் என, கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பிள்ளையின் இதயத்துடிப்பு சீராகிக்கொண்டு வந்தது.

மருத்துவர்களின் தொடர் முயற்சியால் அந்தப் பிள்ளை உயிர்த்தெழுந்தாள். தகப்பன் அந்த மருத்துவரின் காலில் விழுந்தார். ``சார், என் கடவுள் சார் நீங்க!” என்றார். ஓர் உயிரின் மதிப்பை அன்றே உணர்ந்தேன். கண்ணம்மா எனது கரத்தைப் பிடித்துக்கொண்டாள். உயிர்த்தெழுந்த அந்தச் சிறுமியின் முகத்தைப் பார்த்தேன். தெளிவாக இருந்தது. பிள்ளையின் தகப்பன்,  கைகளைப் பிடித்து அழத்தொடங்கினார். ``தயவுசெய்து வெளிய போங்க சார்...” என்று டாக்டர் கண்டிப்புடன் சொன்னார். இப்போது எனக்கு டாக்டர் மேல் கோபம் வரவில்லை.

நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டோம். கண்ணம்மாவைத் தூக்கிக்கொண்டு நானும் மனைவியும் ஏழாவது மாடிக்கு அந்த நள்ளிரவில் சென்றோம். வார்டுக்குள் நுழைந்தோம். படுக்கைகள் நிறைந்து அவரவர்கள் குழந்தைகளை மடியிலும் தோளிலும் தூங்கவைத்துக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் போர்வையை விரித்து மனைவியையும் பிள்ளையையும் உட்காரவைத்தேன். பக்கத்தில் இருந்த பெண்மணி ``நல்லா உக்காந்துக்கம்மா... நாளைக்கு 10 கேஸ் டிஸ்சார்ஜ் ஆவுது. அப்ப பெட்டு கெடச்சுடும்” என்றார்.

வார்டிலிருந்து வெளியே வந்தேன். கொசுக்கடியைச் சொறிந்துகொண்டே தூங்கப் பழகிக்கொண்டவர்கள் நம் மனிதர்கள். நானும் ஓரிடத்தைத் தேர்வுசெய்து படுத்தேன். பக்கத்தில் இருந்த மனிதர், பீடி குடித்துக்கொண்டிருந்தார். ``தூங்கல்லாம் முடியாது... கொசு நம்மள கடிக்கும். நாத்தம் மூக்கக் கடிக்கும். இன்னா... பாப்பாவ சேத்துருக்கியா?” என்று கேட்டார். ``ஆமாம்’’ என்றேன். ``இங்க ஒரு உயிருக்கும் மரியாத இல்ல தம்பி. ஒரு நாடுன்னா, மருத்துவத்தையும் படிப்பையும் தரமா குடுக்கணும்னு சொல்வாங்க. காசு வெச்சிருக்கிறவன் ஏசி வார்டுல வைத்தியம் பாக்குறான். இங்கதான் தண்ணியவே காசுக்கு விக்கிறானுங்களே. நமக்கும் இப்டியே புலம்பிப் புலம்பிப் பழகிப்போயிடுச்சி” என்று அவர்பாட்டுக்கு நிறைய பேசிக்கொண்டே போனார். உண்மைதான். துக்கங்கள் நமக்குப் பழகித்தான்போயிருக்கின்றன. காலம்காலமாக நமக்கு மட்டும்தான் பழகிக்கொண்டிருக்கின்றன.

- மனிதர்கள் வருவார்கள்...

ஓவியங்கள்: ஹாசிப்கான்