மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 20

இறையுதிர் காடு - 20
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 20

இறையுதிர் காடு - 20

இறையுதிர் காடு - 20

அன்று  கன்னிவாடி நோக்கி புலிப்பாணியும் சங்கனும் சென்றுவிட்ட நிலையில், போகர் பிரான் குடிலுக்குள் திரும்பிச் சென்றார். அதுவரை அமைதியாக இருந்த அஞ்சுகன், அவரைப் பின்தொடர்ந்து உள்ளே அவர் முன் சென்று நின்றான். போகர் நாள் தவறாமல் யோகப்பயிற்சி செய்வார். அதற்கு இசைவாக முக்கோணக் கச்சுடுத்திக்கொண்டவராகத் தரைமேல் அமர்ந்து தனுராசனம் செய்யத் தொடங்கினார். ஓர் அம்பு பூட்டிய வில்லைப்போல் ஒரு கால் மடித்து ஒரு கால் நீட்டி, நீட்டிய காலின் கட்டைவிரலைக் கைவிரலால் பிடித்தபடியே அஞ்சுகனைப் பார்த்தார். அவனும் பேசத் தொடங்கினான்.

``குருபிரானே...’’

``சொல்.’’

``எங்களை உச்சியில் விட்டுவிட்டு தாங்கள் தனியே திரும்பிவிட்டீர்களே?’’

``எவருடைய தியானமும் தானாய் இயல்பாகக் கலைய வேண்டும் - கலைக்கக் கூடாது என்று உங்களுக்கு நான் உபதேசித்திருப்பதை மறந்து விட்டாயா?’’

பேச்சோடு பேச்சாக அவரிடம் பயிற்சி ஒரு பக்கம் தொடர்ந்தது.

``அதை அறிவேன்... அதேசமயம் உதயவேளையில் நாங்கள் கண்ட ஓர் அதிசயக் காட்சி குறித்துக் கூறுவதே இப்போது என் நோக்கம்.’’

இறையுதிர் காடு - 20

``கூறு.’’

``அங்கே ஒரு தண்டக்கோல் நடப்பட்டிருந்த நிலையில், அதன் முன்னே சர்ப்பம் ஒன்றோடு இருபுறங்களிலும் மயிலும் சேவலும் அமர்ந்திருந்தன.  அவற்றை நாங்கள் அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை.’’

``ஓ... நீங்களும் அந்தக் காட்சியைக் கண்டீர்களா... மகிழ்ச்சி!’’

``என்றால் தாங்கள்..?’’

``நானும் அந்த அரிய காட்சியை அனுபவித்தவனே! அந்தத் தண்டக்கோலை நட்டதும் நானே.’’

``அப்படியானால், அங்கேதான் தங்களின் லட்சியமான தண்டபாணித் தெய்வத்தின் உருவம் கோயில் கொள்ளப்போகிறதா?’’

``ஆமாம். இது முன்னோட்டம்!’’

``அப்படியானால், அந்தச் சேவல், மயில், சர்ப்பம்..?’’

``அவை திருமுருகனின் வணக்கத்துக்குரிய துணை அம்சங்கள்.’’

``அவை எப்படி அங்கே?’’

``அதுதான் மனோன்மணியின் கருணை. சஷ்டி திதி வேளையில் நான் புரிந்த தியானத்துக்கான அருட்பயன். அவை மூன்றும்தான் அந்த இடத்தையே தேர்வுசெய்து அடையாளம் காட்டின!’’

``கேட்கக் கேட்க, எனக்குச் சிலிர்ப்பு ஏற்படுகிறது. முருகப்பெருமானோடு இம்மூன்றும் எந்த வகையில் சம்பந்தம்கொள்கின்றன என்று கூற முடியுமா?’’

``கூறுகிறேன். மயில் ஒரு வகையில் நம் மனம்போன்றது. நம் மனம், ஒரே சமயம் கற்பனையில் பல காட்சிகளைக் காணவல்லது. அதையே மயிலின் தோகைக் கண்கள் உணர்த்துகின்றன.  நம் மனம், புற அழகில் மயங்கக்கூடியது. மயக்கம் நீங்க, அகக்கண் திறந்து புறக்கண் மூடப்பட வேண்டும். மயில் தோகையும் விரிந்து மூடத்தக்கது. இந்த மனம் எனும் மயில், அகந்தைக்கு மட்டும் ஆட்படவே கூடாது. அழகுக்கெல்லாம் அழகான முருகனை இம்மனத்தில் அமர்த்திவிட்டால், அகந்தை பிறக்காது. எனவேதான் மயில், முருகனின் வாகனம் ஆனது.

சேவல், ஆண்மையின் சின்னம்; அசுரனின் உருமாற்றம்; பாம்பு பிறப்பைக் குறிக்கும் குறியீடு. நம் சுக்கில சுரோணித மூலக்கூறு பாம்பைப் போன்றதே! இந்தப் பாம்பு, முருகனின் காலடியில் கிடப்பது என்பது, அவனே பிறப்பெனும் தொடர்ச்சியை அறுத்து ஆட்கொள்பவன் என்பதை உணர்த்தவே!

இறையுதிர் காடு - 20

இன்னொரு பொருளும் உண்டு. மயில் ஒளி வடிவம் - சேவல் ஒலி வடிவம். ஒளி ஒலியால் ஆனதே இந்த உலகு... அதை ஒடுக்க குண்டலியோகம் துணை செய்யும். அந்த யோகத்தில் நமக்குள் குண்டலினிச்சர்ப்பம் முதுகெலும்பைப் பற்றி எழுப்பி `உச்சந்தலை’ எனப்படும் சஹஸ்ராரத்தில் படம் விரித்து நிற்கும். அப்படி நிற்கும்போது பேரின்பம் கிட்டும். முருக வழிபாடும் அதுபோன்ற பேரின்பம் தரும்!’’

``மொத்தத்தில், முருகனின் தொடர்புடைய சகலத்திலும் மனித வாழ்வின் விமோசனம் ஒளிந்திருப்பதாய்க் கருதலாமா?’’

``சிறந்த கேள்வியை இப்போதுதான் கேட்டிருக்கிறாய். போ... போய்த் தனியே அமர்ந்து இன்னமும் யோசி. மேலும் பல புதிய கருத்துகள் தோன்றக் காண்பாய். முருகனாகிய குமரனுக்குள் சர்வமும் அடக்கம்! பஞ்சாட்சரம், அஷ்டாட்சரம், சஷ்டாட்சரம் மட்டுமல்ல... வள்ளி எனும் இடகலை, தேவானை (தெய்வானை) எனப்படும் பிங்கலை, ஆறுமுகம் எனும் ஆறு அறிவு, பன்னிருவிழிகள் எனும் உயிர் எழுத்துகள் என்று அவனைச் சிந்திக்கச் சிந்திக்க (மனம்) விரிந்துகொண்டேபோகும். மொத்தத்தில் அவனுள் எல்லாம் அடக்கம் என்பதும் தெரியவரும்.’’

``அதனால்தான் அவன் உருவத்தைச் சிலையாக்கி, கோயில் காண விரும்பினீர்களா?’’

``ஆம்... இப்போது இந்த விளக்கம் போதுமானது. நீ உன் காலை நேரக் கடமைகளைச் செய்துவிட்டு, பிறகு ஆகாரம் முடித்து வா. உனக்கென பிரத்யேகப் பணி ஒன்று காத்திருக்கிறது.’’

``உத்தரவு குருவே!’’ என்று அஞ்சுகனும் விலகிக்கொண்டான். போகர் தன் யோகப்பயிற்சியில் ஆழ்ந்து மூழ்கத் தொடங்கினார்.

கன்னிவாடி!

சாரட் வாகனம், சமஸ்தானக் கட்டடம் முன் தேங்கி நின்றது. ஊர் எல்லைக்குள் சாரட் நுழையவுமே சமஸ்தானத்துக்கு நாகரா ஒலி மூலம் செய்தி சென்றுவிட்டதில், சமஸ்தான சிற்றரசிக்கு ஒப்பான மேகலாதேவி என்பவள் வாயிற்புறம் வந்து காத்திருந்தாள். வானில் கதிரவன் உச்சிக்கு விரைந்துகொண்டிருக்கும் உச்சி முன் நாழிகைப்பொழுது!

சாரட்டை விட்டு புலிப்பாணியும் சங்கனும் இறங்கவும் மேகலாதேவியைத்தான் பார்த்தனர். கச்சிதமாய் அதுவரை பறந்து வந்த சிமிழிப்புறா, புலிப்பாணி தோளின்மேல் வந்து அமர்ந்துகொண்டது. அதைப் பார்த்த மாத்திரத்தில் அது தகவல் புறா என்பதை அதன் காலில் உள்ள தாயத்துபோன்ற குழலை வைத்துக் கண்டுகொண்டாள் மேகலாதேவி. அவர்களையும் கைகளைக் குவித்து வணங்கி வரவேற்றாள்.

``வரவேண்டும்... வரவேண்டும்...’’

``தாங்கள்?’’

``நானே இக்கன்னிவாடி சிற்றரசி மேகலாதேவி! பாண்டிய நாட்டோடு ஒப்பந்தக் கப்பம்கொண்ட ஒரு குறுநிலம் இது. என் கணவர் திருமேனிவேழர்தான் நோய்ப்பட்டு, பீடைக்கு ஆளாகிவிட்டவர்.’’

``வீரர்கள் விவரமாய்க் கூறினர். வருந்த வேண்டாம். வரும் வழியெங்கும் சுபசகுனங்களையே கண்டோம். அதிலிருந்தே இன்றைய தினம் துக்கத்தை உணரும் அமைப்பில் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. முதலில் பீடைக்குரியவரை ஆராய வேண்டும்’’ - என்றபடியே சப்பரமஞ்சர அறைக்குள் பூந்துகில் கோபுரத்தின் உள்ளே விடைப்பாய்ப் படுத்திருந்த திருமேனிவேழரை நெருங்கினர்.

``கேட்கிறேன் என்று தவறாகக் கருதிவிடக் கூடாது. போகர் பிரான் ஏன் வரவில்லை?’’ - மேகலாதேவி வருத்தம் குழையக் கேட்டாள்.

``அவருக்கு பிரதான பணிகள் உள்ளன. ஆயினும், அவர் வழிகாட்டலில்தான் வைத்தியம் நிகழப்போகிறது.’’

``நீங்கள் இங்கு இருக்க, அவர் அங்கு இருக்க... அது எப்படிச் சாத்தியம்?’’

``பார்க்கத்தானேபோகிறீர்கள்...’’ - என்கிற பதிலோடு சங்கன் முதலில் நாடி பரிசோதனை செய்தான். பிறகு விழி வறட்சி, முகப்பொலிவு, நாவின் நிறம் ஆகியவற்றை அறிந்துகொண்டவன் பஞ்சுப்பொதியை நீரில் நனைத்து முகத்தைத் துடைக்கவும் அவர் உடலில் மெல்லிய அசைவை உணர முடிந்தது.

இறையுதிர் காடு - 20

``பன்னிரண்டு நாள்களாய் பீடைக்கு ஆளாகி, படுத்தபடுக்கையாகிவிட்டார். பெருகும் வியர்வைகூட மஞ்சள் நிறத்தைக் கக்குகிறது. ஆட்டுப்பாலுடன் கீழாநெல்லியைச் சேர்த்துக் கொடுத்தும் குணப்பாடு ஏற்படவில்லை’’ என்று பக்கவாட்டில் நின்றபடி மேகலாதேவி நடந்துமுடிந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஒருகட்டத்தில் அவளை அமைதியாக இருக்கச் சொன்ன சங்கன், `மலப்பிறை எங்குள்ளது?’ என்று கேட்டு, அங்கு சென்று பார்த்துவிட்டுத் திரும்பி வந்தான். பிறை மஞ்சள் திப்பிகளோடு இருந்தபோதிலும் மலத்துணுக்குகள் அதுபோல் இல்லை. அது அவன் முகத்தில் லேசான அதிர்வைக் கொடுத்தது.

கல்லீரலில் பெருகும் பித்தநீர்தான் ஜீரணத்துக்குக் காரணம். ஜீரணமான உணவே மலமாகி மஞ்சள் நிறம்கொள்ளும். மஞ்சள் நிறமில்லையெனில், பித்தநீர் இரைப்பைக்குச் செல்லவில்லை. இடையில் ஏதோ தடை... அநேகமாய் கற்கள் உருவாகி அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். கற்கள் உருவாகிட நிலத்தடிநீரும் அதோடு கலந்து வரும் உவர் மண் காரணமாய் இருக்கலாம். `இதை எப்படித் தெரிந்துகொள்வது?’ எனத் தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்ட சங்கன், அங்கே ஓரிடத்தில் தியானத்தில் அமர்ந்தவனாய் நாசியைத் தொட்டு காற்றின் ஓட்டம் இடமா வலமா என்பதறிந்து முதலில் பிராணாயாமம் செய்தான். பிறகு, சுவாச கதியைச் சீராக்கி போகர் பிரானைப் பூரணமாய் மனதில் எண்ணி ``பிரானே... தங்களின் எண்ண அலைகளை என் எண்ண அலைகள் அடைவதாக...’’ என்று பிம்பத்யானத்தில் மூழ்கினான். புலிப்பாணி அதைப் பார்த்தபடியே சிமிழிப்புறாவை வருடித்தந்திட, மேகலாதேவி சங்கனின் செயலால் குழப்பம்கொண்டாள்.
``என்ன இது... சில பரிசோதனைகளைச் செய்துவிட்டு இப்படி தியானத்தில் அமர்ந்துவிட்டாரே!’’

``ஆம்... தியானம்தான்! இதன் மூலமே எங்கள் குருவோடு தொடர்புகொள்ள முடியும்.’’

``அது எப்படி?’’

``அதைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், எங்கள் போகர் பிரானின் சீடராக தாங்கள் ஆக வேண்டும்.’’

``எல்லாமே வியப்பாக உள்ளன. என் கணவர் பிழைத்துவிடுவார் அல்லவா?’’

``கவலை வேண்டாம். உங்கள் கணவருக்கு நோயுறும் விதிப்பாட்டுக்கு இணையாக அதிலிருந்து மீண்டுவிடும் பலமும் உள்ளது. இல்லாவிட்டால், நாங்கள் இவ்வளவு தூரம் வந்திருப்போமா என்ன?’’ - புலிப்பாணி சொல்லிக்கொண்டிருக்கும்போதே கண்விழித்துவிட்ட சங்கன் எழுந்து வந்து, வயிற்றின் வலதுபுறம் கல்லீரல் உள்ள பாகத்தைத் தட்டிப்பார்த்தான். சத்தம் ஒரு மாதிரி `தொம் தொம்’ எனக் கேட்டது.

அப்படியே திரும்பி ``புலி, சிமிழியைக் கொட்டாரத்துக்கு அனுப்பி வை. பித்தப்பை நாளங்களில் கல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அடைப்பைக் கரைக்கும் பஸ்பத்தை நம் குரு சிமிழியிடம் கொடுத்துவிடுவதாகக் கூறினார். அதற்கு முன் திரேக சுத்தியை ஊசிகள்கொண்டு மந்திரித்துச் செய்யச் சொன்னார்’’ என்ற சங்கன், தான் கொண்டுவந்திருந்த ஊசிகளை எடுத்துக்கொண்டு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னான். பிறகு திருமேனிவேழர் உடம்பின் தலை முதல் கால் வரை அந்த ஊசியை மேலும் கீழும் கொண்டுசென்று மந்திரம் கூறி ஜபித்து, கிண்ணத்துத் தண்ணீரில் ஊசியைப் போடலானான். அந்தத் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் மஞ்சள் நிறமாகத் தொடங்கியது!

திருமேனிவேழர் உடலிலும் அசைவுகள் ஏற்படத் தொடங்கின. அவ்வேளை சிமிழிப்புறாவும் வானில் ஏறிய நிலையில் பொதினி நோக்கிப் பறக்கத் தொடங்கியது.

இன்று ஒருபுறம் சாருபாலா கூர்மையாகிட, மறுபுறம் சாந்த ப்ரகாஷிடம் மிகத் தெளிவான பேச்சு. அது தூக்கத்தில் உளறுவதுபோலவே இல்லை.

``தாத்தா, நான் அமெரிக்கா வந்தது தப்பா... ஏன் அப்படிச் சொல்றீங்க?’’ என்று எதிரில் நிற்கும் ஒருவருடன் பேசுவதுபோலவும் இருந்தது.

சாருவுக்குப் புரிந்துவிட்டது. தன் கனவில் வந்த பெரியவர் அவன் விரும்பியதுபோல அவன் கனவிலும் வந்துவிட்டார்.

அவள் ஊர்ஜிதம் செய்த நொடி சாந்த ப்ரகாஷ் கண்கள் இரண்டும் விழித்துக்கொண்டன. தூங்கிய கலக்கமே துளியும் இல்லாதபடி முகத்தில் ஒரு பரபரப்பு. அப்படியே எழுந்து அமர்ந்தவனிடம் இப்போது துளியும் போதையுமில்லை, தூக்கக்கலக்கமுமில்லை!

``என்ன சந்து... என்னாச்சு?’’

``....’’

``சந்து, டிட் யு ஹியர் மை வாய்ஸ்... வாட் ஹேப்பெண்ட்?’’

``சாரு, நான் இப்ப எங்க இருக்கேன்... நம்ப வீட்லயா?’’

``அதுகூடத் தெரியலியா? ஷெர்வுட் ஃபாரஸ்ட் உட் ஹவுஸ்ல  இருக்கோம். என்னாச்சு சந்து... ஏதாவது கனவு கண்டியா?’’

``கனவு... கனவு... தெரியல..!’’

இறையுதிர் காடு - 20

`` `தாத்தா நீங்களா?’ன்னு கேட்டே... ஏதோ பாஷாண லிங்கப் பூஜைன்னெல்லாம் சொன்னே!’’

``யெஸ்... யெஸ்... ரெண்டு நாள் முந்தி, நீ ஒரு விஷயம் சொன்னியே ஞாபகமிருக்கா?’’

``நல்லா ஞாபகமிருக்கு... என் கனவுல வந்த உங்க தாத்தா, உன் கனவுல வந்து சொல்லட்டும்னே... வந்துட்டாரா?’’

``அஃப்கோர்ஸ்... அவரை நான் பார்த்ததேயில்லை. ஆனா, கனவுல தாடி மீசையோடு கோமணம் மட்டும் கட்டிக்கிட்டு உடம்பெல்லாம் விபூதி பூசிக்கிட்டு ஒருத்தர் வந்து `பல்லாவரத்துக்குப் புறப்படு... இங்க நீ நிம்மதியா வாழ முடியாது’ன்னு சொல்றாரு. `என்ன... உன் பையனும் அரவான் ஆயிட்டானா?’ன்னு கேட்டு வருத்தமா பார்த்தாரு.’’

``அவரேதான், நீங்க சொல்ற அடையாளம் உள்ள அவரேதான் என் கனவுலயும் வந்தார் சந்து. அப்புறம் வேற என்ன சொன்னார்?’’

``நான் பாஷாணலிங்கத்துக்குப் பூஜை செய்யணுமாம். ஒன்பது விருட்சங்கள் இருக்காம். அதையும் கும்பிடணுமாம்.’’

``அந்த விருட்சம் நவவிருட்சம்கிற பேர்ல நம்ப ஜமீன் தோட்டத்துலதான் இருக்கு. உங்கம்மா சொல்லியிருக்காங்க. நானும் பார்த்திருக்கேன். உனக்கு ஞாபகம் வரலை?’’

``ஊட்டி, டேராடூன், யு.எஸ்-னு வளர்ந்தவன் நான். அந்த பங்களா பக்கமே அவ்வளவா போனதில்லை. அங்க என் தாத்தா சமாதி இருக்கிறது மட்டும் தெரியும். எனக்குத் தலைமுடியே அங்கதானே எடுத்தாங்க?’’

``மொத்தத்துல, நான் சொன்ன மாதிரி நாம இந்தியா போய் இதையெல்லாம் செய்தா, சம்திங் ஒரு நல்ல ரிலீஃப் நமக்குக் கிடைக்கும்னு தாத்தா சொல்லாம சொல்றார். அப்படித்தானே?’’

``கிட்டத்தட்ட அப்படித்தான். ஐ’ யம் வெரி ஸாரி சாரு. நீ சொன்னப்ப நான் நம்பலை. இப்ப என்னால நம்பாம இருக்க முடியலை. இதெல்லாம் என்ன சாரு?’’

``என்னன்னா?’’

``இந்தக் கனவு... இந்த மிஸ்ட்ரி... இதைத்தான் சொல்றேன்.’’

``அதான் மிஸ்ட்ரின்னு சொல்லிட்டியே... அப்புறம் என்னைக் கேட்டா என்ன அர்த்தம்?’’

``அப்ப, நாம இண்டியா போகணுமா?’’

``இது என்ன கேள்வி... நமக்கு மருந்து அங்கதான் இருக்கு.’’

``மருந்து... மருந்து... ஆகாஷைப் பழையபடி நம்பளப்போல. ஒரு ஹ்யூமனா ஆக்க முடியும்னு நீ நம்புறியா?’’

``அது எனக்குத் தெரியலை. ஆனா, இங்க இருந்தா நிச்சயம் வருத்தம் அதிகமாகும்னு மட்டும் உறுதியா சொல்வேன்.’’

``ஆமா... ஆகாஷ் நம்மகூட வருவானா?’’

``நிச்சயம் வர மாட்டான்.’’

``நோ... அவன் வந்தாலும் நான் கூட்டிக்கிட்டுப் போக மாட்டேன் . நம்ப ரிலேட்டிவ்ஸ் யாருக்கும் அவன் இப்ப... அவன் இப்ப...’’ - சாந்த ப்ரகாஷால் அதற்குமேல் பேச முடியவில்லை. கண்கள் இரண்டும் நீரைப் பொங்கவைத்து உருட்டிவிட, தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு கன்னக்கதுப்புகள் துடிதுடித்தன. அப்படியே சாருமேல் சாய்ந்தான்.

இறையுதிர் காடு - 20

அவளும் பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டவளாய் ``சந்து, நாம கிளம்புவோம். உங்க தாத்தா ஒரு நார்மல் ஹ்யூமன் இல்லை. அவர் ஒரு சித்தரா வாழ்ந்தவர். நமக்கு அவர் நிச்சயம் வழிகாட்டுவார்... யெஸ்னு சொல்’’ - அவள், அவன் கன்னத்தை ஏந்திப் பிடித்தபடி கண்ணீர் உருண்டோடப் பேசிய பேச்சுக்கு அவனும் ``யெஸ்’’ என்றான் மிகச் சோர்வாய்.

அடிவாரத்தில் இருந்த அந்த ஆஸ்பத்திரியில் முத்துலட்சுமி வரையில் ஒரு முழு பாட்டில் டிரிப்ஸ் இறங்கியதில், உடம்பில் ஒரு தெம்பு தெரிந்தது. தனியே அறையில் சாய்ந்து படுத்துக்கொண்டிருந்த அவள், கைப்பைக்குள் அப்போது கைப்பேசி அமட்ட ஆரம்பித்தது. ஒரு கையால் கைப்பையைத் திறந்து கைப்பேசியை எடுப்பதற்குள் அது நின்றுபோனது. அதற்குள் உதவியாளன் வந்து நின்று பார்த்தான்.

``போன் வந்து நின்னுடிச்சு. கொஞ்சம் போட்டுக் கொடுப்பா’’ என்றாள்.

அவன், அவள் போனை வாங்கிப் பார்த்தான். சாதாரண போன்! அதுவே ஆண்ட்ராய்டு போனை எல்லாம் அவளுக்கு இயக்கத் தெரியாததை அவனுக்கு உணர்த்திவிட்டது. அந்தப் போனை ஆன் செய்து மிஸ்டு காலைத் திரும்பத் தூண்டி முத்துலட்சுமியிடம் தந்தான். மறுபுறம் பாரதிதான் பேசினாள்.

``பாட்டி, இப்ப எப்படி இருக்கே?’’

``பரவால்லடா... ஆஸ்பத்திரியிலதான் இருக்கேன்.``

``சொன்னா கேட்கிறியா... இப்ப பாரு... இதுக்குத்தான் வேண்டாம்னேன்.’’

``தயவுசெய்து இப்படியெல்லாம் பேசாதே. ஒரு நல்லதைச் செய்ய முடியாத அளவு கெட்டது அவ்வளவு பலமா இருக்கு. நான் அந்த முருகனை தரிசனம் பண்ணாம வர மாட்டேன்.’’

``பண்ணிட்டா எல்லாம் சரியாயிடுமா... என்ன பேசறே நீ?’’

``நிச்சயம் சரியாகும்... உடனே ஆகலைன்னாலும் அதுக்கான தொடக்கம் உருவாகும்னு நான் நம்புறேன்.’’

``எல்லாக் கேள்விக்கும் ஒரு பதில் வெச்சிருக்கே.’’

``நீ எப்படிவேணா சொல்லிக்கோ, நீ இப்ப என்ன செய்யப்போறே?’’

``எனக்குத் தெரியல... நான் என்ன செய்யணும்னு நீயே சொல்.’’

``என் ராஜாத்தி இல்ல... கொஞ்சம் கிளம்பி வாயேன்.’’

``வர்றேன்... உனக்காக மட்டுமல்ல... அந்தத் திவ்ய ப்ரகாஷ்ஜிக்காகவும் வர்றேன். நீ ஒரு நல்ல ஹோட்டல்ல ரெஸ்ட்ல இரு. எங்க பத்திரிகை ரிப்போர்ட்டருக்குத் தகவல் தர்றேன். அவர் உனக்கு எல்லா உதவிகளையும் செய்வார். ஜி-யை அவர் போக்குல விட்டுடு. அவர் உன்கூட இருக்கிறதோ, இல்லை நீ அவர்கூட இருக்கிறதோ எனக்கு சரியா படலை. அந்த மனுஷன் உன் மனசைப் படிக்கிறேன்னு ஆரம்பிச்சா, அது அப்பா பண்ணுன தப்பையெல்லாம் காட்டிக்கொடுத்துடும். அதுலயும் இப்ப நான் அவரைச் சந்திச்சா பெட்டி, வாள், பாம்பு-ன்னு நான் எதுவும் சொல்லாம அவரே எல்லாத்தையும் சொல்லி என்னையும் ரொம்பவே குழப்பிடுவார்.’’

``நீ என்ன சொல்றே... பெட்டி, வாள், பாம்புன்னு ஏதேதோ சொல்றியே...’’

``உளறிட்டேனா... ஒண்ணுமில்ல! நான் எல்லாத்தையும் நேர்ல சொல்றேன். எங்க ரிப்போர்ட்டர் இனி உன்வரையில பொறுப்பெடுத்துக்குவார். அந்த ஜி-க்கு நன்றி சொல்லி, அவரைப் போகச் சொல்லிடு... திரும்பவும் சொல்றேன் அந்த திவ்ய ப்ரகாஷ்ஜிகிட்ட நம்ப குடும்ப விஷயம் எதையும் பேசாதே. அவர் நீ நினைக்கிற மாதிரி யோகா மாஸ்டர் மட்டுமல்ல... என் எடிட்டரே அவரைப் பார்த்து பயந்திருக்கார்னா பார்த்துக்கோ...’’ என்று எச்சரிக்கையோடு பேசி முடித்தாள்.

முத்துலட்சுமிக்கு, பாரதி என்ன சொல்ல வருகிறாள் என்றே புரியவில்லை. ஆனால், அவள் `கிளம்பி வருகிறேன்’ என்று சொன்னது மட்டும் லேசாய் இனித்தது. அப்படியே கணேச பாண்டியனுக்கும் உடனே உதவியாளர் உதவியோடு போன் செய்தவள் ``ராஜா எப்படி இருக்கான்... பேசறானா?’’ என்று கேட்டாள்.

``நல்லா பேசறாருங்கம்மா... நீங்க எங்க, பழநிக்குப் போயிட்டீங்களா?’’

``ஆமா... யார் சொன்னா?’’

``பானு சொன்னுச்சி. சாமி தரிசனம் ஆச்சா?’’

``இன்னும் இல்லை. வந்த இடத்துல சூரைத்தேங்கா தலையில பட்டு காயம்பட்டுருச்சி. இப்ப ஆஸ்பத்திரியில இருக்கேன். பாரதி கிளம்பி வர்றேன்னு சொல்லியிருக்கா...’’

``கடவுளே... இது என்ன குடும்பமே ஆஸ்பத்திரியில போய்ப் படுத்திடுவீங்கபோல இருக்கே!’’

``படுத்தாச்சு பாண்டி... படுத்தாச்சு. ஆனா, நீ இதையெல்லாம் ராஜாகிட்ட சொல்லாதே. இப்படி ஆனதுலயும் ஒரு நல்லது நடந்திருக்கு. இல்லாட்டி பாரதி `பழநி வருவேன்’னு சொல்வாளா?’’

``அதுவும் சரிதான். ஒண்ணு மட்டும் உறுதிம்மா. இனி அந்த முருகன் கையிலதான் உங்க எல்லார் வாழ்வும் இருக்குது. நல்லா கும்புட்டுக்கிட்டு வாங்க.’’

``ராஜாகிட்டயே இரு. நீ இருக்கிற தைரியத்துலதான் நான் பழநிக்கே வந்தேன். நீ சொன்ன மாதிரி அந்த முருகன் கையிலதான் எல்லாம் இருக்கு’’ என்று போனை முடக்கவும் திவ்ய ப்ரகாஷ் அங்கே வரவும் சரியாக இருந்தது.

இறையுதிர் காடு - 20

``என்னம்மா, இப்ப பரவால்லியா?’’

``பரவால்லீங்க. பாரதியும் பேசிட்டா. அவ வேலை பார்க்கிற பத்திரிகையோட ரிப்போர்ட்டர் என்னை இனி கவனிச்சிக்குவாராம். உங்கள உங்க வழியில போகச் சொன்னா.’’

``ஏம்மா நான் உதவி செய்யறது பிடிக்கலையா?’’

``அதெல்லாம் இல்லை. இதுவரை செய்த உதவியே ரொம்ப அதிகம். அதுக்கே நாங்க ரொம்ப கடமைப்பட்டிருக்கோம். உங்களுக்கும் பல வேலைகள் இருக்கும். எங்களால அது கெட வேண்டாமே?’’ - முத்துலட்சுமி அழகாகச் சமாளித்தாள். அதேசமயம் அவளை உற்று நோக்கியவருக்குள் கத்தி, பெட்டி, பாம்பு என்று பாரதி சொன்னது உள்ளுக்குள் எதிரொலித்தது. கூடுதலாய் பல்லாவரம் பிரமாண்டராஜன் ஜமீன் பங்களாவும் ஜீவசமாதியும் சர்ப்பமும்கூட ஏதோ ஒரு ஃப்ளாஷ்கார்டு போலத் தோன்றி மறைந்தது. குறிப்பாக, போகரின் ஜீவசமாதி முன் ஆழ்ந்து தியானம் செய்துவிட்டு வந்ததில், ஒரு பெரும் கூர்மை உருவாகியிருந்தது. அந்தக் கூர்மை `தூர இருந்து, அடுத்தடுத்து நடக்கவிருப்பதை கவனி!’ என்று அவருக்குள் ஒரு கருத்தையும் உருவாக்கிய அந்த நொடி, ஒரு வாலிபன் முதுகில் ஒரு கிட்பேக்குடன் கழுத்தில் தொங்கும் `தமிழ்வாணி’ வார இதழின் அடையாள அட்டை சகிதம் அந்த ஆஸ்பத்திரிக்குள் நுழைந்திருந்தான்.

`எங்கே முத்துலட்சுமி?’ என்று தேடவும் செய்தான். ஆனால், அவனைப் பார்க்காமலே ``பாரதி அனுப்பிய அந்த ரிப்போர்ட்டர் வந்துட்டாரு. நீங்க அவர்கூட போய் ஹோட்டல்ல நல்லா ரெஸ்ட் எடுங்க. பாரதி வந்த பிறகு அவளோடு சேர்ந்து மலைக்குப் போங்க. இனி நடக்கிறதெல்லாம் உங்களுக்கு நல்லதாவே இருக்கட்டும்’’ என்றார் திவ்ய ப்ரகாஷ்.

முத்துலட்சுமி அவரை ஆச்சர்யமாக `ரிப்போர்ட்டர் எங்கே?’ என்பதுபோல பார்க்க, கச்சிதமாக அந்த ரிப்போர்ட்டரும் டாக்டரின் உதவியாளருடன் அறைக்குள் வர ``இதோ இவர்தான், பேர் செந்தில்’’ என்றார்.

``எப்படி பேரெல்லாம் தெரியும் உங்களுக்கு... பாரதி சொன்னாளா?’’ என்று முத்துலட்சுமி கேட்க, அடையாள அட்டையைக் காட்டியபடியே ``அப்ப நான் வர்றேன்...’’ என்று கை எடுத்துக் கும்பிட்டார்.

அந்த நொடியில் அவரிடம் வெளிப்பட்ட சிறிய அளவிலான அமானுடம் முத்துலட்சுமிக்குள் ஒரு பிரமிப்போடு சற்று பயத்தையும் ஏற்படுத்தியது. பாரதி சொன்னதும் ஞாபகம் வந்தது.

``போயிட்டு வாங்க... ரொம்ப நன்றி’’ என்றாள் பிரமிப்பும் பயமும் விலகாமல்.

பழநிக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தாள் பாரதி.

``கூப்ட்டீங்களா மேடம்?’’ என்று வந்த பானுவிடம் ``பாட்டியைக் கூட்டிக்கிட்டு வர, கார் அனுப்பச் சொல்லியிருந்தேன்தானே?’’ என்று கேட்டாள்.

``அனுப்பிட்டேன் மேடம்... அநேகமா கார் இப்ப தாம்பரம் தாண்டியிருக்கும்’’ என்றாள் பானு.

``உடனே போன் பண்ணி அங்க அப்படியே வெயிட் பண்ணச் சொல். நானும் அரவிந்தன் சாரும் நேர்ல போகப்போறோம். இங்க இருந்து ஒரு கேப்ல போய் நாங்க அங்க ஏறிக்கிறோம். சரியான ஒரு லேண்ட் மார்க் கிட்ட வெயிட் பண்ணட்டும். என்கிட்ட பேசச் சொல்...’’ - பாரதி அப்படிச் சொன்னது, பானு வரையில் ஆச்சர்யமாக இருந்தது. குறிப்பாக, அரவிந்தனோடு சேர்ந்து போகப் போவதாய்ச் சொன்னதில் ஒரு கூடுதல் ஆச்சர்யம்.

``மேடம்...’’

``என்ன?’’

``நான், சாரோட பெரிய ஃபேன்.’’

``அப்படியா... அப்ப அவர் வந்தப்ப சொல்லியிருக்கலாமே?’’

``நீங்க ரொம்பப் பரபரப்பா இருந்தீங்க. அதனால சொல்லத் தோணல.’’

``ஆமாம் பானு... கொஞ்ச நாளா என்னைச் சுத்தி நம்ப முடியாதபடி பல விஷயங்கள் நடக்குது. இப்ப பழநிக்கு நான் போகப்போறேனே... இதுவும் அதுல ஒண்ணு.’’

``புரியுது மேடம்... எனக்கேகூட நடக்கிறதை நினைச்சா ஆச்சர்யமாதான் இருக்கு. அந்தக் கத்தி, பெட்டி அப்புறம் பாம்பு இதெல்லாம் ஒரு உலுக்கு உலுக்கிடுச்சி.’’

``வேண்டாம்... அதை ஞாபகப்படுத்தாதே - முதல்ல டிரைவருக்கு போன் பண்ணு. நேரமாகுது பார்...’’ - பாரதி பானுவைத் தூண்டவும், அவளும் போன் செய்யத் தொடங்கினாள். அப்போது, எடுத்துச் சென்ற பெட்டியோடும் வாளோடும் பங்களாவினுள் திரும்ப நுழைந்துகொண்டிருந்தான் வேலைக்காரன் மருதமுத்து.

-இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியங்கள்: ஸ்யாம்