
பாக்கியம் சங்கர்
திருவிழாக் காலங்களில்தான் சிலரைப் பார்க்கமுடிகிறது. குல்லா விற்பவர்களில் இருந்து குரங்கை பல்டி அடிக்க வைப்பவர்கள் வரை கடை விரித்துவிடுகிறார்கள். ஒரு கையில் வளையல்களைத் தினுசு தினுசாக மாட்டிக்கொண்டு வளைய வருகிறார்கள். ராட்டினங்களின் பற்சக்கரத்துக்கு கிரீஸ் தடவுகிறார்கள். சிறிய வட்டவடிவில் தண்டவாளங்களில் பொம்மை ரயிலில் குழந்தைகளைக் குதூகலப்படுத்துகிறார்கள். திடீரென தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த யாசகர்களும் ஆங்காங்கே உட்கார்ந்துகொண்டு கையேந்துகிறார்கள். கரகாட்டக்காரர்களும் மயிலாட்டக்காரர்களும் போன வருடம் பார்த்த அதே புத்துணர்ச்சியோடு ஆடிக்கொண்டிருக் கிறார்கள். ஜேப்படிக்காரர்கள், வேட்டையில் களம் புகுகிறார்கள். ஒரு பொம்மை நாய், போகிற வருகிறவர்களைப் பார்த்துக் குரைத்துக்கொண்டே இருக்கிறது. அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிய குழந்தை, அப்பாவைப் பார்த்து நாயை அமுக்குகிறது. `வவ்...வவ்’ என்று குரைப்பதைப் பார்த்து சந்தோஷம்கொள்கிறது குழந்தை.
``இந்த மூணு நாளு திருவிழாவுக்கு அப்புறம் இவங்க எல்லாரும் எங்கடா இருப்பாங்க?” மாறனிடம் கேட்டபோது, ``திருவிழா எங்க நடந்தாலும் அங்க கடைய போட்ருவாங்க மச்சி...” என்று சொன்னான். யோசித்துப்பார்த்தால், இவர்கள் இல்லையெனில் திருவிழாவை `திருவிழா’ என்று நம்மால் சொல்ல முடியாமல் போகும். பட்டுத்துணியில் தேர்போல நடந்து வரும் பெண்களுக்கு, ஒரு முதியவர் மருதாணி வைத்துவிடுகிறார். தாவணிகள் சூழ அவரது முகத்தை சீரியல் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் நீங்கள் பார்க்க வேண்டுமே... அவ்வளவு பிரகாச மாக ஜொலித்துக்கொண்டிருக்கும். காலம் காலமாக அந்த முதியவர் வைத்துக்கொண்டி ருக்கும் மருதாணியின் சிவப்பு, ரத்தத்தைப்போல கனிந்து வந்திருக்கிறது கைகளில். வருடம்தோறும் இந்த மூன்று நாள்கள் இவரை போகிற வருகிறபோது பார்ப்பேன். அவ்வளவுதான்.

மலைப்பாம்பைத் தோளில் போட்டுக்கொண்டு வரும் மனிதரைப் பார்ப்பதற்கு, தெருவே கண்களாகக் காத்திருக்கும். அந்தப் பாம்பு மனிதர், தெருவுக்குள் நுழைவார். ஒரு துண்டைப் போலச் சுற்றித் தோளில் போட்டிருப்பார். அவர் பின்னால், பாம்பைப் பார்த்தபடியே ஒருவித பயத்தோடு நடந்துகொண்டிருப்போம். அவரின் மேனி எனும் காட்டில், மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்துகொண்டிருக்கும். தன்னை அதிசயித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் மனிதர்களை அவ்வப்போது பார்த்துக்கொள்ளும். அந்தப் பாம்பு மனிதரிடம் ஒரு ரூபாய் கொடுத்தால், பாம்பை அவர் பிடித்துக்கொள்ள நாம் பாம்பைத் தொடலாம். அப்படித்தான் ஒருமுறை நானும் தொட்டுப்பார்த்தேன். வழவழப்பாக இருந்தது. பாம்பைப் தொடுகிறேன் என்பது எவ்வளவு ரசவாதமான அனுபவமாய் இருந்தது! நாக்கை மட்டும் நீட்டி, பிறகு உள்ளிழுத்துக்கொள்வதை மிக அருகில் பார்த்தபோது, அது திரும்பி என்னையும் பார்த்தது. என் நினைவில் இப்போதும் காடுள்ள மிருகச் சித்திரம் அது.
அந்த மருதாணி முதியவர், திருவிழாக்கள் இல்லாத சமயங்களில் என்ன செய்துகொண்டி ருப்பார்? மலைப்பாம்பைத் துண்டுபோல் கழுத்தில் போட்டுக்கொண்டு வருபவர், பாம்பை எங்கு வைத்துவிட்டுத் தூங்குவார்... அதற்கு என்னவெல்லாம் சாப்பிடக் கொடுப்பார்... துர்த்தனமாய்க் காட்டில் அலைந்துகொண்டிருந்த மலைப்பாம்பை, எப்படி தன்னோடு பழக்கியி ருப்பார்..? எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்காகத்தான் என்றால், அது மலைப்பாம்புக்குத் தேவையே யில்லையே! இப்படியாக யோசித்துக்கொண்டி ருந்தபோது, காட்டு யானை ஒன்று ஒரு ரூபாய் நாணயத்தைத் தும்பிக்கையில் வாங்கி, காசு போட்டவனுக்கு ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தது.
இப்படித்தான் நம் வாழ்வில் அவ்வப்போது வந்து போகும் இந்த மனிதர்களைப்போல, திருவிழாவுக்கு அவர்களும் வந்திருந்தார்கள். `தொடர்ந்து மூன்று நாள்கள் தூங்காமல் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி’ என ஆட்டோவில் கோயில் நிர்வாகக் குழு அறிவித்துச் சென்றது. கோயில் வளாகத்தையொட்டி ஒரு மைதானத்தை அந்தக் குழுவுக்கு அமைத்துக் கொடுத்தார்கள்.
முதல் நாள், டிகோ பாயின் சைக்கிள்... டிகோ பாயிக்காகக் காத்துக்கொண்டிருந்தது. ஜனங்களோடு நானும் மாறனும் பார்த்துக்கொண்டிருந்தோம். முறுக்கிய தேகம் பாறாங்கற்களாய்த் திரண்டு இருந்தது. சைக்கிள் ஓட்டவிருந்த கால்கள் தூண்கள்போல் இருந்தன. மாங்கொட்டையைச் சப்பிப் போட்டதுபோல் இருந்த முகத்தில், சுருள் சுருளாய் அவரின் கேசம் காற்றில் அலையாடிக்கொண்டிருந்தது. கால்சாராயில் தொடையின் வளைவு நெளிவுகளில் டிகோ பாயின் தீராத வலிகளை எழுதிக்கொண்டிருந்தது அவரது வாழ்வு. மைதானத்தின் நட்டநடுவில் ஒரு கொம்பை நட்டுவைத்து அதில் ஒரு குழாய் ஸ்பீக்கரை மாட்டியிருந்தார்கள்.
ஒரு முதியவர் மைக்கை எடுத்தார். ``வணக்கம் சாமிமாரே... ஐயாமாரே... மண்ண நம்பி... மனுசங்கள நம்பி... வந்திருக்கிறோம் ஐயாமாரே... ஜான் டிக்சன் டால்ஸ்டாய் என்கிற டிகோ பாய்... மூணு நாள் சைக்கிள்லேருந்து மண்ல கால் படாம ஓட்டுவாரு. நம்ம குழுவுல இருக்கிற நாயகி டிகோ பாயின் காதல் மனைவி கிரிஜாவின் நடனமும் இருக்கிறது. எங்கள நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த கோயில் நிர்வாகத்துக்கு எங்க நன்றிய சொல்லிக்குறோம்...” என்றதும், ஜோகி டோலாக்கை வாசிக்க ஆரம்பித்தான்.
டிகோ பாய், சைக்கிளில் ஏறுவதற்காக எழுந்தார். ``சைக்கிள் மேனுக்கு உங்க கைத்தட்டல கொடுங்க சாமி...” என்று மைக்கில் முதியவர் சொன்னார். ஜோகி, டோலக்கை உற்சாகத்துடன் வாசிக்க ஆரம்பித்தான். அப்போது மைதானத்தின் கூடாரத்திலிருந்து வெளிப்பட்டாள் கிரிஜா. பச்சை நிறத்தில் குட்டையான பாவாடை `ஜிகு ஜிகு’வென்றிருந்தது. மேல்சட்டையும் பளபளவென இருந்தது. கிளம்பலாம் என்றிருந்த சிலர், கிரிஜாவைப் பார்த்ததும் கலையை ரசிப்பதுபோலவே திரும்பவும் நின்றிருந்தார்கள். முழு ஒப்பனையில் இருந்தாலும் கன்னக் கதுப்புகளில் ரோஸ் நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தன வண்ணங்கள். சுற்றி இருந்த ஒவ்வொருவரின் கண்களிலும் கிரிஜாவின் ரோஸ் நிற வண்ணங்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

சைக்கிளில் ஏறப்போகும் முன்பு டிகோ பாய், தன் மனைவி கிரிஜாவைப் பார்த்தான். அவள் கை அசைத்துச் சிரித்தாள். அவனும் சிரித்தான். இப்போது கூடாரத்திலிருந்து அவன் பிள்ளை தூக்கக்கலக்கத்தில் வெளியே வந்தது. குழந்தை, டிகோவைப் பார்த்தான். மெல்லிதாய்ச் சிரித்தான். ``பப்பு...’’ என்றான். டிகோ, சைக்கிள் மீது ஏறுவதற்கு முன்னால் சைக்கிளைத் தொட்டு வணங்கினான். பிறகு, பெடல் மீது கால்களை வைத்து ஒரு ஜம்ப், சைக்கிளில் உட்கார்ந்தான். இப்போதிலிருந்து அவனைப் பொறுத்தவரை அது சைக்கிள் கிடையாது. அடுத்த மூன்று நாளுக்கான அவனது வீடு என்றுதான் சொல்ல வேண்டும். சைக்கிளில் சுற்ற ஆரம்பித்தான். ஜோகி, டோலக்கை வாசித்தான். ஓட்டிக்கொண்டிருக்கும்போதே டிகோ பாய் ஒரு காலால் ஓட்டுவது, வயிற்றை மட்டும் சீட்டில் வைத்து ஓட்டுவது என விதவிதமாக ஓட்டிக்கொண்டிருந்தான். எப்போதாவது சிலர் தட்டும் கைத்தட்டல்களில் அவனின் முகம் கொஞ்சம் உற்சாகமடைந்தது. ஆனாலும், நெடுநேரம் டிகோ பாயின் சைக்கிள் வித்தையை மட்டும் வைத்துக்கொண்டு கூட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. அதனால்தான் கிரிஜாவையும் ஜோகியையும் அவ்வப்போது களத்தில் இறக்குவார் முதியவர், கருணைப் பிரகாசம்.
மைக்கில் கருணைப் பிரகாசம் ``கட்டான கட்டழகி... வட்டப் பொட்டழகி... சங்குக் கழுத்தழகி... கிறங்கடிக்கும் கிரிஜாவின் நடனம் இப்போது ஆரம்பமாகிறது” என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கைத்தட்டல்கள் பிரித்துக்கட்டின. சைக்கிளில் வலம் வந்துகொண்டிருக்கும் டிகோ பாயை எவரும் கண்டுகொண்டாரில்லை. ஒவ்வொருவரின் கண்களும் கிரிஜாவின் அசைவுகளைப் பார்க்கத் துடித்துக்கொண்டிருந்தன. `எலந்தபயம்... எலந்தபயம்... ஆங் செக்கச் செவந்த பயம்... இது தேனாட்டம் இனிக்கும் பயம்...’ என்று எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு ஏற்ப கிரிஜா அசைந்து அசைந்து ஆட, எல்லோரும் கடவுளைக் கண்ட பக்தர்கள்போல வெலவெலத்து நின்றனர். உட்காரும் சீட்டில் தனது வயிற்றை வைத்துக் கொண்டு சைக்கிளில் வலம் வந்துகொண்டிருந்த டிகோ பாய், அரைக் கோணத்தில் மனைவியின் நடனத்தைக் கண்டு ரசித்தான். பாடல் முடிந்ததும் ``மச்சி பின்றாடா...” என்று வழிந்த ஜீராவைத் துடைத்துக்கொண்டான் மாறன். இந்த இடைவெளியில் கூடாரத்துக்குள் நுழைந்து பால்புட்டியை எடுத்துத் தன் குழந்தையிடம் கொடுத்தாள். அவன் கருத்தாக வாங்கிக்கொண்டு வாயில் வைத்துக்கொண்டான்.
`ஆடவரெல்லாம் ஆட வரலாம்... ஆடவரெல்லாம்... ஆட வரலாம்... பேசும் விழிகள் பேச வரலாம்... ஆசை நதியில் நீந்த வரலாம்...’ என்ற பாடல் ஒலிக்கவிட்டு இடையில் நிறுத்தப்பட்டது. ``இந்தப் பாடல்போலே... கிறங்கடிக்கும் கிரிஜாவோடு நீங்களும் ஆட வரலாம்... தலைக்கு 25 ரூபாய்... ஒரு பாட்டுக்கு ஒருவர்தான் அனுமதி சாமி... முதலில் யார் வர்றாங்கோன்னு பாக்கலாம்” என்றதும் துள்ளிக் குதித்து பெருமாள் இறங்கினார். தொப்புளுக்கு மேல் கஞ்சி என்பார்கள். பெருமாளுக்கு, உட்கார்ந்து சாப்பிட்டாலே ஏழு தலைமுறைக்கு வரக்கூடிய அளவுக்கு சொத்து உண்டு. பெருமாளைப் பொறுத்தவரை பேட்டையின் ஜிகினாக்காரன். 25 ரூபாயை, கருணைப் பிரகாசத்திடம் கொடுத்துவிட்டு களத்தில் நின்றான். ``மச்சி என்னதான் சொல்லு... பெருமாள் வாழ்றான்ல” மாறன் தனது இயலாமையைக் கொப்புளித்தான்.
`குங்குமப்பூவே... கொஞ்சும் புறாவே... தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே...’ சந்திரபாபு பாடிக்கொண்டிருந்தார். சாவித்திரியைப்போல முகபாவங்களோடு கிரிஜா ஆடிக்கொண்டிருந்தாள். நம்மவர் பெருமாள், சந்திரபாபுவைப்போல் ஆடுவதாக எண்ணிக் கொண்டு தேங்காய் சீனிவாசனைப்போல் ஆடிக்கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் `ஓ’வெனக் கத்தி பெருமாளைக் கலவரப்படுத்தினார்கள். பெருமாள் அப்போதும் விடாமல் தேங்காயின் ரியாக்ஷனில் கிரிஜாவோடு ஆடிக்கொண்டிருந்தான். அடுத்து கனி இறங்கினான். ஒரு கேசட்டைக் கொடுத்து கருணைப் பிரகாசத்திடம் போடச் சொன்னான். `பியாரி, நிம்மள் மேலே நம்கி மஜா... மேரா பியாரி நிம்மள் மேலே நம்கி மஜா...’ என்ற `தூக்கு தூக்கி’ படப் பாடலை குழாய் ஸ்பீக்கர் பாட, கனி கேசட்டைப்போல ஆட ஆரம்பித்தான். சுற்றி இருந்தவர்கள் ``அரே சேட்ஜி... நிம்மிள் கீ... நம்மிள் மஜா” என்று கத்த ``சேட்டு பண்றான் குஷி.... சேட்டு பண்றான் குஷி...” என்று குழாய் பாட, பெருமாள், கிரிஜாவை வலம் வந்து வளைந்து வளைந்து ஆட, கிரிஜாவும் வெட்கப்பட்டு ஆடிக்கொண்டிருந்தாள்.
இப்போது அரை பெடலில் இருந்த டிகோ பாய், தன் மனைவியும் பெருமாளும் ஆடும் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தான். ``சேட்டு பண்றான் குஷி...” என்று பெருமாள் சொல்ல பாடல் முடிந்தது. கிரிஜாவுக்குக் கொஞ்சம் ஓய்வுகொடுக்கவேண்டி ``இப்போது எங்கள் குழுவில் இருக்கும் இரும்பு மனிதன் ஜோகியின் சாகசங்களைப் பாருங்கள் சாமிகளே...” என்று மைக்கில் கருணைப் பிரகாசம் சொல்ல, சிலர் அங்கிருந்து கிளம்பினார்கள். கிரிஜா என்கிற மனுஷி தொடர்ந்து இடுப்பை வளைத்து நெளித்து ஆடிக்கொண்டேயிருக்க வேண்டும். பார்த்துக்கொண்டிருப்பவர்கள் நேரமாகிச் செல்லும்போது வேண்டுமானால் கிரிஜா தனது ஆட்டத்தை நிறுத்திக்கொள்ளலாம்.
கருணைப் பிரகாசம், டோலக்கை வாசிக்கத் தொடங்கினார். பால்புட்டியை மண்ணில் போட்டுப் புரட்டிக்கொண்டிருந்த மகனை வாரி எடுத்துக்கொண்டாள். கூடாரத்துக்குள் சென்றாள். ஜோகி முதலில் டியூப்லைட்டை எடுத்து எல்லோருக்கும் காண்பித்தான். பிறகு, டியூப்லைட்டைக் கீழே வைத்துவிட்டு பல்டி அடித்தவாறே வந்து தனது மார்பில் லைட்டை உடைத்தான். `டம்’மென்ற சத்தத்தோடு வெண்புகை மண்ணிலிருந்து மெல்ல எழுந்து வந்தது. ஜோகியின் மார்பில் சிறு சிறு ரத்தத்துளிகள் தெறித்திருப்பதைப் பார்த்தேன். இதேபோல் ஐந்து, ஆறு டியூப்லைட்டுகளை மார்பில் உடைத்தான். ஒரு டியூப்லைட்டின் பாதியைக் கடித்து மென்று தின்றான். ஜனம், கைகளைத் தட்டின. நியாயமாக, அந்த மனிதனை நிறுத்தி `இப்படியெல்லாம் செய்ய வேண்டாம்!’ என்றுதான் சொல்ல வேண்டும். நமது சமூகம் இப்படித்தான். `வேடிக்கை பார்ப்பதற்கு ஒருவன் மரணக் கிணற்றில் இறங்குகிறானே!’ என்றெல்லாம் நினைக்க மாட்டோம். `நான் கொடுக்கும் அற்பத்தொகைக்கு, மரணம் வரை சென்று அவன் திரும்ப வேண்டும்’ என நினைப்பவர்கள் நாம்.

இப்போது பித்தளைக் குடத்தில் தளும்பத் தளும்ப தண்ணீர் வைத்திருந்தார்கள். ``இரும்பு மனிதன் ஜோகி... இந்தப் பித்தளைக் குடத்தைத் தண்ணீரோடு பல்லாலேயே தூக்கிக் காட்டுவார் சாமிகளே...” மைக்கைப் பக்கத்தில் வைத்துவிட்டு, திரும்பவும் டோலக்கை வாசித்தார்.
பித்தளைக் குடத்தின் வாய்ப்பகுதியில் பற்களைப் பதித்தான் ஜோகி. சுற்றி இருந்தவர்கள் அமைதியானார்கள். இரு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு, அப்படியே ஜோகி தூக்கத் தூக்க ``ஒரு சாண் வயித்துக்குத்தான் சாமீ... மகராசனா ஏதாவது போடு சாமீ” என்று மைக்கில் சொன்னார் கருணைப் பிரகாசம். பற்களால் குடத்தைத் தூக்கிய ஜோகி, அப்படியே தன் தலையில் ஊற்றிக்கொண்டான். கருணைப் பிரகாசம், புரியாமல் ஜோகியைப் பார்த்தார்.
``நைனா, அர்ஜென்ட்டா ஒண்ணுக்கு வந்துடுச்சு நைனா... அடக்க முடியல... நா என்ன பண்ணுவேன்? அதான் பல்லால தூக்கின குடத்த அப்படியே மேல ஊத்திக்கிட்டேன். ஆனா கவனிச்சியா, கொஞ்சம் கொஞ்சமா ஊத்திக்கிட்டு இருந்தேன்.”
இரவுகளின் குளிர்மை, கூடாரத்தைத் தாலாட்டிக்கொண்டிருந்தது. ``ஜோகி நீ பண்ண அயிட்டத்துக்கு இன்னிக்கு நல்ல கைத்தட்டல்டா... நான்கூட ஏதோ புது அயிட்டம்னுதான் நினைச்சேன்!” - கருணைப் பிரகாசம் ஆச்சர்யத்தில் சொன்னார்.
``அட நீ வேற நைனா... நா போன ஒண்ணுக்குக்குத்தான் எல்லோரும் கைதட்டினாங்க” என்று சிரித்தான். கருணைப் பிரகாசமும் சிரித்துக்கொண்டே கம்பளியைப் போத்திக்கொண்டார்.
நடுநிசியில் மைதானத்தின் நடுவே இருக்கும் கம்பத்தில் முட்டுக்கொடுத்தபடி கண்களைக் கொஞ்சம் மூடியிருந்தான் டிகோ பாய். அது முழுமையான தூக்கமல்ல. யாராவது பார்த்துவிட்டால் பெரிய பிரச்னையாகிவிடும். மூன்று நாளும் இடைவிடாது டிகோ பாய் சைக்கிளில் வலம் வரவேண்டும். எவனாவது பார்த்துவிட்டால் பிறகு என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். இந்தத் தொழிலில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை, டிகோ பாய் மதிக்காமல் இருந்ததில்லை. இருந்தாலும் கண்களின் இமைகள் தன்னையறியாது மூடிக்கொள்வதைத் தடுக்க முடியவில்லை.
கூடாரம், காற்றில் சலசலத்துக்கொண்டிருந்தது. குழந்தையை அணைத்தவாறு கிரிஜா தூங்கிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் அம்மா படுத்திருந்தாள். பெருமாள், முழுப்போத்தலை முழுங்கிய கண்களோடு கூடாரத்துக்குள் நுழைந்தான். காலையில் கிரிஜாவோடு ஆடும்போதே அங்கே இங்கே கைகளை வைக்க முயன்றவன். கிரிஜாவின் பக்கத்தில் படுத்துக்கொண்டான். கூடாரத்தின் திரைச்சீலை விலக, கம்பத்தின் துணையோடு சைக்கிளில் டிகோ பாய் படுத்திருந்தான். கைகளை மெதுவாகப் போட்டான். கிரிஜா பதறி எழுந்தாள்.
கைகால்களைக் கட்டிப்போட்டபடி பெருமாள் உள்ளாடையோடு கூடாரத்துக்குள் இருந்தான். ``ஆடுற பொம்பளைங்கன்னா உடனே படுத்துருவாளுங்கன்னு நினைச்சியா... இப்பவே உன்னைக் கூறு கூறா வெட்டி இங்கியே பொதச்சுடுவேன்...” ஜோகி வெறியோடு பேசினான்.
``சாமி, இது அசிங்கம்... நாங்க மனுசங்கள நம்பித்தான் இருக்குறோம் சாமி... இது வேணா சாமி... அதோ சைக்கிள்ல தூங்குறானே மருமவன்... அவனும் எம் பொண்ணும் உசுருக்கு உசுறா வாழ்றாங்க. கூடாரத்துக்கு வெளிய நாங்க ஆடுறது எங்க பொழப்பு... கூடாரத்துக்குள்ள வந்து ஆடணும்னு நினைக்காத சாமி. அது அசிங்கம். எம் மருமவனுக்குத் தெரிஞ்சுதுன்னா கொன்னுருவான்... இப்பிடியே ஓடிரு சாமி” என்று சொல்ல, வேட்டிசட்டையை மாட்டிக் கொண்டவன், கூடாரத்திலிருந்து வெளியேறினான்.
கருணைப் பிரகாசம் அவனைக் கூப்பிட்டார். ``சாமி, நாளைக்கும் வாங்க சாமி... 25 ரூபா கொடுங்க... எம் பொண்ணோட ஆடுங்க... அது கல... எங்க பொழப்பு... கூடாரத்துக்குள்ள வரணும்னு நினைக்காத சாமி...” என்றார். பெருமாள், மிகுந்த குற்ற உணர்ச்சியில் நடந்து வந்தான். கம்பத்தில் முட்டுக்கொடுத்துப் படுத்துக்கொண்டிருந்த டிகோ பாயின் காதுகளுக்கு யாரோ நடந்து வருவதுபோல் ஒலி கேட்க, உடனே பதறிக்கொண்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.
- மனிதர்கள் வருவார்கள்...
ஓவியங்கள்: ஹாசிப்கான்