மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 21

இறையுதிர் காடு - 21
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 21

இறையுதிர் காடு - 21

இறையுதிர் காடு - 21

அன்று வேழரின் உடல் அசைவு, அவரின் மனைவியான மேகலாதேவியைப் படபடக்கச் செய்தது. சங்கன், தன் ஊசி மந்திரிப்பைத் தொடர்ந்தபடியே இருந்தான். கிண்ணத்துத் தண்ணீரும் மஞ்சளில் கரைத்ததுபோல் ஆகிவிட்டது. அது ஒரு விந்தையாகவும் விளங்கிக்கொள்ள இயலாத ஒன்றாகவும் மேகலாதேவிக்குத் தோன்றியது.

இறுதியில் அந்த மஞ்சள் நீரை வேழரின் தலைமாட்டில் வைத்து சிறியதோர் மயிற்பீலிக் கட்டினால் கால் முதல் தலை வரை மூன்று முறை இழுத்த சங்கன், அதுவரை தலையணை வைத்துப் படுத்திருந்த வேழரின் தலையணையை மெல்ல எடுத்து உடல் படுக்கையில் உயர்வுதாழ்வின்றி சமமாகக் கிடக்கும்வண்ணம் செய்துவிட்டு, அந்த மஞ்சள் நீரை மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் கொட்டிவிடச் சொன்னான்.

மேகலாதேவி பார்த்தபடியே இருந்தாள். புலிப்பாணிக்கு, சங்கன் செய்வதெல்லாமும் புரிந்தது. அது எதுவும் புரியாமல் மேகலாதேவி வெறிப்பதைக் கண்ட புலிப்பாணி, மேகலாதேவிக்கு விளக்கமளிக்கத் தொடங்கினான்.

``அரசியாரே, இனி நீங்கள் உங்கள் கணவர்குறித்துக் கவலைப்பட வேண்டாம். இவரின் காமாலை கட்டுக்குள் வந்துவிட்டது. இந்தக் காமாலை குறித்து சங்கனே விளக்குவான்’’ என்றான்.

சங்கனும் விளக்கத் தொடங்கினான். ``அரசியாரே, மாலை என்றால் மேலும் கீழுமான ஒரு வட்டச்சுழற்சி என்று பொருள். நம் உடலில் ரத்தமானது ஒரு மாலைபோல் மேலும் கீழுமாகத்தான் இடையறாது இயங்கியபடி உள்ளது. இந்த இடையறாத இயக்கத்துக்கு வெளியே இருக்கும் காற்றானது, நாசி வழியாக உள் சென்று உதவுகிறது. காற்றின் ஜீவ வாயுவை ரத்தமானது தனக்குள் ஏற்றுக்கொண்டு ஓடத் தொடங்குகிறது. இந்த ஜீவ வாயு ரத்தத்தோடு கலப்பதில் தடைகள் ஏற்படும்பட்சத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும். இதே ரத்தத்தில் உடலில் சுரக்கும் சுரப்பிகளின் சுரப்புநீர் கலப்பதில் குறைபாடு ஏற்பட்டாலும், இதுபோல் திணறல் ஏற்படும்.

இறையுதிர் காடு - 21

இவ்வேளையில் காற்றானது கலப்பதில் தடை உருவாவதால் காவாத்தன்மை காற்றுக்கு உண்டாகி, அதனால் ரத்த ஓட்டமாலையும் `காமாலை’ என்றாகிறது. உங்கள் கணவர் வரையில் பித்தநீர் கலப்புதான் பிரச்னை. பித்தநீர்க் குழாய்களில் கல்லடைப்பு ஏற்பட்டுள்ளது. நோய்த் தொற்றாலும் சுரப்பிகள் செயலிழக்கும். அடைப்பை நீக்க வேண்டும்.நோய்க்கிருமித் தொற்றை ஒழிக்க வேண்டும். கல் அடைப்பை நீக்கும் பஸ்பத்தை, சிமிழிப்புறா கொண்டு வரச் சென்றுள்ளது. இதனால் புறத்தில் ஒளியுடம்பும் குழம்பிவிட்டது. இதனால் ஒளியுடம்பில் ஏற்பட்ட சிடுக்கை, உலோக ஊசிகளாலும் சிலவகை மந்திரச்சொற்களின் அதிர்வுகளாலும் சீர்செய்ய வேண்டும். அதைச் செய்துவிட்டேன். இதை `மந்திரிப்பது’ என்பர். இது ஒரு வகை வித்தை!’’

சங்கன் அளித்த விளக்கம், மேகலாதேவியைப் பல கேள்விகளுக்குத் தூண்டியது. ``மருத்துவரே... தாங்கள் கூறுவது புரிகிறது. சில கேள்விகளும் எழுகின்றன. கேட்கட்டுமா?’’

``தாராளமாய்க் கேளுங்கள்.’’

``ஒளியுடம்பு என்றீரே, அப்படியானால் என்ன?’’

``நம் கண்களுக்குப் புலனாகும் உடம்புக்குப் புறத்தில் மூன்று அங்குலம் முதல் முப்பது அங்குலம் வரை நம் உடலைச் சுற்றி ஒளி அலைகளால் ஆன, ஓர் உடல் உள்ளது. அந்த ஒளி அலைகள் உடம்பின் உஷ்ணம், மனதின் சலனம், உடல் கிருமிகளின் ஆரோக்கியம் மற்றும் தாக்கம் இவற்றுக்கேற்ப இருக்கும். அதையே ஒளியுடம்பு என்கிறோம்.’’

``ஆனால், அதைப் பார்க்க முடியவில்லையே!’’

``நம்மிடம் உள்ள கண்களால் நேராக அதைக் காண இயலாது. நம் கண்கள் சூரிய ஒளிக்குப் பழகிவிட்டவை. அதன்பிறகு தீயின் ஒளிக்குப் பழகியுள்ளது. இந்த இரண்டோடும் சேராத வண்ண ஒளிகள்தான் ஒளியுடலில் உள்ளன. மஞ்சள், பச்சை, வெண்மை, கறுப்பு என மயிலிறகின் வண்ணங்கள் போன்றது அது. ஞானிகளின் ஒளியுடல் நல்ல வெண்ணிறமும் பொன்னிறமும் கலந்ததுபோல் இருக்கும். நோயுற்றோர் ஒளியுடல் சாம்பல் நிறமாகவும், ஏன் சில சமயங்களில் அடர்கறுப்பாகவும் இருக்கும். சராசரி மனிதர்களின் ஒளியுடல் பச்சை, மஞ்சள், சிவப்பு எனப் பன்னிறக் கலப்போடு இருக்கும்.’’

``அதை சாதாரண உலோக ஊசிகள் எவ்வாறு சரிசெய்கின்றன?’’

``உலோகத்துக்கு ஈர்ப்பு சக்தி உண்டு. தங்கம், அருள்கதிர்களை கிரகிப்பதில் நிகரில்லாதது. வெள்ளியும் அப்படியே. இரும்பு எதிர்மறைக் கதிர்களை ஈர்க்கும். செம்பு மின்காந்த அலைகளை வெகுவாய் ஈர்க்கும். ஐம்பொன்னோ ஈர்க்க வேண்டியதை ஈர்த்து, ஈர்க்கக் கூடாததை உமிழ்ந்துவிடும். இதனால்தான் ஆலயங்களில் ஐம்பொன்னால் இறை உருவங்கள் வார்க்கப்படுகின்றன. கோபுரக்கலசங்கள் தங்கத்தில் செய்யப்படுகின்றன.

பெண்மக்கள் காது, மூக்கு, கழுத்து, கைகால்களில் தங்க நகை அணியும்போது சத்த அதிர்வை, காது மடல் சீர்செய்யும். காற்றின் அசுத்தக் கலப்பை, மூக்குத்தி சீர்செய்யும். உணவின் கடப்பை, கழுத்துத் தங்கம் சீர்செய்யும். கையின் நாடித்துடிப்பை வளை தங்கம் சீர்செய்யும். காலிலும் வர்மப்புள்ளிகளால் உருவாகும் அழுத்தத்தை காற்சலங்கை உலோகம் சீர்செய்யும். இடுப்பின் அரைஞாண்கயிற்று உலோகமும்கூட வயிற்றுக்குள் உள்ள சுரப்பிகளின் செயில்பாட்டுக்குப் புறக்கதிர் பாதிப்பின்றிப் பார்த்துக்கொள்ளும்.’’

``அப்படியானால், நகைகள் என்ற பெயரில் ஒருவர் அணிவதெல்லாம் ஆடம்பரமானதல்ல... அதில் அறிவுபூர்வமும் உள்ளதா?’’
 
``நிச்சயமாக... இவற்றோடு நவரத்னக்கற்களும் சேரும்போது பயன் பன்மடங்காகும்.’’

``கற்களுக்கும் ஈர்க்கும் ஆற்றல் உண்டா?’’

``நிறையவே உண்டு. கடலுக்குள் விளையும் முத்தானது சந்திரத் திவலைகளை ஆகர்ஷிப்பதில் வல்லமையுடையது. அதேபோல செம்பவழத்துக்குச் செவ்வாயின் கதிர்களை ஈர்க்கும் வல்லமை உண்டு. இப்படி ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு சக்தி படைத்தது. இந்தக் கற்களை `ரத்தினக் கற்கள்’ என்போம். ரத்தமானது எப்படி இடையறாது மாலைபோல் ஓடியபடியே உள்ளதோ, இதன் ஆற்றலும் இதைச் சுற்றி ஓடியபடியே இருப்பதால் இவற்றை ரத்த இனமாய்க் கருதி `ரத்தினம்’ என்றும் அழைக்கிறோம்.

``இதை எல்லோராலும் ஏன் தெரிந்துகொள்ள முடிவதில்லை?’’

``யோகியாக வாழ்ந்தால் தெரிந்துகொள்ள முடியும். போகியாகவும் ரோகியாகவுமல்லவா வாழ்கிறோம்.’’

``யோகிக்கும் போகிக்கும் அப்படி என்ன வித்தியாசம்?’’

``உடம்பைத் தன் மனக்கட்டுக்குள் வைத்திருப்பவன் யோகி! உடம்பை அதன் கட்டுக்குள் வைத்திருப்பவன் போகி. அந்தக் கட்டையும் இழந்துவிட்டவன் ரோகி.’’

``அடேயப்பா எவ்வளவு விஷயங்கள்... எத்தனை நுட்பங்கள்!’’

``எல்லாம் போகர் பிரான் எங்களுக்கிட்ட பிச்சை. நாங்கள் அறியவேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன.’’

``உங்களிடமே இவ்வளவு சங்கதிகள் இருந்தால், உங்கள் குருவான போகரிடம் எவ்வளவு இருக்கும்? நினைக்கவே மலைப்பாக உள்ளது!’’

``உண்மைதான்... எங்கள் குரு இந்த உலகத்துக்கே குருவாய் விளங்கும் தகுதி படைத்தவர். நினைத்த மாத்திரத்தில் பறவைபோல் பறந்து சதுர்வேதகிரிகளுக்கும் இமயத்துக்கும், அதற்கப்பால் சீனம் முதல் ரஷியம் (ரஷ்யா) ஆத்யம் (ஆப்பிரிக்கா) என்று எங்கும் சென்று வருபவர். இதனால் விரிந்த பார்வையும் தெளிந்த சிந்தனையும் உடையவர்!’’

இறையுதிர் காடு - 21

``பறவைபோல் மனிதனால் பறக்க இயலுமா?’’

`` `முயன்றால் இயலும்’ என்பார் எங்கள் குரு. மீனுக்குச் செதில், பறவைக்குச் சிறகு, ஆட்டுக்கு நெற்றி, மாட்டுக்குக் கொம்பு, பாம்புக்குப் பற்கள், கொடிய விலங்குக்கு நகங்கள், யானைக்குத் தும்பி, பூனைக்குக் கண்கள் என்று இருக்கும் இறை படைப்பில், மனிதனுக்கு மட்டும் ஆறாம் அறிவைக் கொடுத்து அதன் காரணமாக மனம் கொடுத்தான் இறைவன். இந்த மனதுக்கு மாபெரும் சக்தி உண்டு. `நாம் அதைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள்’ என்பார் எங்கள் குருவான போகர் பிரான். `இந்த மனம், ஒடுங்கும் போதுதான் சக்தி பெறுகிறது; விரியும்போது ஞானம் பெறுகிறது. சுருங்கும்போது சுயநலமாகிறது. இருளும்போது அச்சமடைகிறது’ என்றும் கூறுவார்!’’

``அற்புதம்... அற்புதம்..!’’

``இந்தக் கருத்துகளே உங்கள் வரையில் அற்புதம் என்றால், அறுவைசிகிச்சை செய்து, மூளைக்குள் சென்று தங்கிவிட்ட ஒரு தேரைக்குஞ்சை அகற்றியதால் தேரையர் என்கிற பெயர் பெற்றுவிட்ட தேரையர் இங்கு வந்திருந்தால், நீங்கள் பிரமித்துவிட்டிருப்பீர்கள்.’’

``அவர் இப்போது எங்கு இருக்கிறார்?’’

``அவர் அகத்திய மாமுனியின் சீடர். இமயத்தில் இப்போது அவர் வாசம்புரிவதாய் கேள்வி. எங்கள் போகர் பிரானுக்கு அவரும் ஒரு வழிகாட்டி...’’ 

இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சிமிழிப்புறா தன் கால் சம்புடத்தில் மருந்தோடு திரும்பி வந்து புலிப்பாணியின் தோள் மேல் அமர்ந்தது. உடனே அந்தச் சம்புடத்தைக் கழற்றித் தந்தான் புலிப்பாணி. சம்புடத்தின் உள்ளே பஸ்பமானது மூன்று சிட்டிகை எனும் அளவில் இருந்தது. அதில் ஒரு சிட்டிகை எடுத்து கீழாநெல்லிச்சாற்றில் கலந்து வேழரின் இதழ்க்கடையில் சங்கடையால் புகட்டப்பட்டது. அவர் விழுங்கச் சிரமப்பட்ட போது மூக்கடைப்பு செய்து அழுத்தம் உருவாக்கவும் கீழாநெல்லிச் சாறானது வேகமாய் அவரால் விழுங்கப்பட்டது.

``மூன்று நாழிகைக்குள் இந்தச் சாறு வயிற்றிலிருந்து பிரிந்து ரத்த நாளங்களில் கலந்து மாலைபோல் சுற்றி வரத் தொடங்கி உடல் முழுக்கப் பயணித்திடும். இந்தவேளையில் கணையத்திலும் புகுந்து அதன் பித்தநீரோடு சேர்ந்து பயணிக்கையில் கல் அடைப்பு உள்ள இடத்தில் தடைப்படும். அதேசமயம் அந்தக் கல்லை நெகிழவைத்துக் கரைக்கும் ரசாயனம் பஸ்பத்தில் இருப்பதால், கல்லானது கரையும் - ரத்த ஓட்டமும் சீராகும். ஒரு முறைக்கு மூன்று முறை இவ்வாறு செய்யும்போது காவாமாலையான காமாலை, காக்கும் மாலையாகிவிடும். பித்தநீரும் சீராகச் சுரக்கும் - செரிமானமும் நடக்கத் தொடங்கும். இவ்வளவுதான் விஷயம்!’’  என்று மீதமுள்ள பஸ்பத்தை அரசிவசம் தந்த சங்கன்,

``நாங்கள் இப்போது தந்ததுபோல் இருமுறை தாருங்கள். இன்று இரவு ஒரு முறை. நாளைக் காலை ஒருமுறை. நாளை இவ்வேளை வேழர் எழுந்து அமர்ந்த நிலையில் உங்களோடு பேசப்போவது நிச்சயம்’’ என்றான்.

இறையுதிர் காடு - 21

அப்படியே ``பத்து நாள் பத்திய உணவும் முக்கியம். இப்போது பாலுணவு தேவையில்லை. பாலைச் செரிக்க பித்த ரசம் மிகவும் தேவை. இப்போது எளிதான உணவே முக்கியம். பழரசம், நீராகாரம், கூழ் மிக நல்லது. திட-திரவம் எனப்படும் எள்பிழி (நல்லெண்ணெய்) கடலைப் பிழி (கடலை எண்ணெய்) பால்பிழி (நெய்) ஒரு மண்டல காலத்துக்குக் கூடவே கூடாது. மனோரஞ்சித மலர்களை முகர்ந்தபடியே இருப்பது இதில் வேகத்தை உருவாக்கும். மலர்களுக்கும் மருத்துவத்தன்மை உண்டு. அவற்றின் நுட்பமான மகரந்தங்கள், சுவாச வழியாக ஜீவ வாயுவை நன்கு செயல்படவைக்கும். பெண்களின் கூந்தலில் மலர்களை அணியச்செய்வது இதன் பொருட்டும்கூட...’’  - சங்கன் சொல்லி முடித்தவனாய், தன் மான்தோல் பைக்குள் தன் மருத்துவப் பொருள்களை அள்ளிப் போட்டுக்கொண்டான்.

மேகலாதேவி சிலிர்த்துவிட்டிருந்தாள். சித்த வைத்தியத்தின் அர்த்தமுள்ள சங்கதிகள் அவளை பிரமிக்கவைத்திருந்தன. திருமேனி வேழரிடம்கூட விறைத்த தன்மை நீங்கி வழக்கமாய்ப் படுப்பவர்போல் சற்றே கால்களை இழுத்துக்கொண்டு ஒரு பக்கமாய்ப் படுக்கலானார். அதைக் கண்டவள் தன் கண்களில் வழிந்த ஆனந்தக்கண்ணீரைத் துடைத்தபடியே, ``நானும் என் கணவரும் குணமாகிவிட்ட நிலையில், தங்கள் கொட்டாரத்துக்கு வந்து எங்கள் நன்றிக்கடனை உரிய முறையில் செலுத்துவோம். இதை, தங்கள் குருவான போகர் பிரானிடம் கூறுங்கள்’’ என்றாள்.

``ஆகட்டும் அரசியாரே! நாங்கள் விடைபெற்றுக்கொள்கிறோம்.’’

``நல்லது... நான் சில காணிக்கைப் பொருள்களைத் தரலாம் அல்லவா?’’

``காணிக்கை... வேண்டாமே!’’

``அப்படிச் சொல்லக் கூடாது... மா, பலா, வாழை எனும் கனி வகைகளோடு எங்கள் கன்னிவாடியின் வெள்ளரி, வாழைப்பூ இவற்றோடு மூங்கில் அரிசியையும் ரதத்தில் ஏற்றச் சொல்லிவிட்டேன். இதுபோக, வரும் நாள்களில் நூறு கலம் நெல்லை குரு காணிக்கையாக வழங்கவும் விருப்பம்.’’ 

சங்கனும் புலிப்பாணியும், மேகலாதேவி குவித்த கைகளோடு கும்பிட்டபடி சொன்னதைக் கேட்டபடியே ரதமாகிய சாரட்டை நோக்கிச் சென்று ஏறி அமர்ந்தனர். புரவிகள் கனைத்திட, சாரட்டும் புறப்பட்டது. முன்னதாக, சிமிழி பறக்கத் தொடங்கிவிட்டது.

இன்று மருதமுத்துவைப் பார்த்த பாரதி விக்கித்தாள்... பானு குழம்பினாள்.

``என்ன மருதா, ஜம்பமா உன் வீட்டுக்குக் கொண்டு போனே... திரும்பக் கொண்டுவந்துட்டே?’’  என்று பானு கேட்கவும் செய்தாள். அவனோ, பெட்டியை முன்பு இருந்த முருகன் படத்துக்குக் கீழ் கொண்டு சென்று வைத்தான். அந்த அரேபிய ஜாடிக்குப் பக்கத்தில் கத்தியை முன்புபோலவே வைத்துவிட்டு, திரும்பி நேராக பாரதி முன் வந்து நின்றான். பாரதியின் கண்கள் இரண்டுமே `ஏன் இப்படி?’ என்று கேட்டன.

``ம்மா... இந்தக் கத்தியும் பொட்டியும் ஏதோ ஜாமான் இல்லம்மா! ரெண்டுமே சாமி மேட்டருங்க. போற வழியில ஒரு குடுகுடுப்பைக்காரன் இத்த பாத்துட்டு கன்னத்துல போட்டுக்கிட்டான். `இன்னாயா இத்தபோய் கும்புட்றே?’ன்னேன் . `சாமிய கும்பு டாம என்ன செய்வாங்க?’ன்னான். அப்புடியே `இத்த உன்னால வெச்சிக்க முடியாது’ன்னான். `எடுத்த இடத்துல வெச்சிடு’ன்னான். எனக்குப் புரியலை. ஊட்டுக்குப் போய் வெச்ச பொறவுதாம்மா ஃபீல் ஆச்சு... இங்க பார்த்த பாம்பு அங்க என் வீட்டுக்கே வந்திரிச்சி. அடேங்கப்பா... எம்மா நீளம். என்ன சத்தம்! என் பொஞ்சாதி நின்ன இடத்துலயே மூத்திரம் பேஞ்சுட்டாம்மா!’’ -மருதமுத்து சொல்லிக்கொண்டிருக்கும்போதே வெளியே புல்லட் பைக்கின் சத்தம்.

தலையில் இரும்புச் சட்டியோடு அரவிந்தன் இறங்கி வந்து கொண்டிருந்தான். மருதமுத்துவின் பேச்சு அவன் காதுகளில் விழுந்துவிட்டிருந்தது. பாரதியிடம் பேச்சே இல்லை. ஸ்தம்பிப்பு!

அரவிந்தன் மருதமுத்துவைப் பார்த்தவனாக ``சரி, நீ போய் உன் வேலையைப் பார்’’ என்றான்.

இடையில் பாரதியின் செல்போனில் அழைப்பொலி. காதைக்கொடுக்கவும், பழநி ரிப்போர்ட்டர் செந்தில் பேசினான். ``மேடம்... உங்க பாட்டியை ஹோட்டல்ல தங்கவெச்சிட்டேன்.  நல்லா சாப்ட்டாங்க. கொய்யாப்பழம் வெள்ரிக்காவெல்லாம் வாங்கிக்கிட்டாங்க.’’

``தூங்கிட்டாங்களா?’’

``தூங்கியிருப்பாங்கன்னுதான் நினைக்கிறேன்.’’

``மாத்திரை போட்டுக்க மறந்துடப்போறாங்க... போட்டுக்கச் சொல்லுங்க. நான் நாளைக்குக் காலையில அங்க இருப்பேன்... என் கார்லதான் வர்றேன்.’’

``சரிங்க மேடம்.. கவலப்படாம வாங்க. நான் பாத்துக்கிறேன்.’’

``ரொம்ப நன்றி செந்தில்.’’ - பாரதி, செல்போனை முடக்கியவளாக அரவிந்தனைப் பார்த்தாள்.

``கிளம்பலாமா?’’  என்றுதான் அவன் ஆரம்பித்தான். அவள் திரும்பி, பெட்டியைப் பார்த்தாள். பானுவையும் பார்த்தாள். பானு முகத்தில் ஒருவித சலனம்.

``இதைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல இல்ல?’’

``யெஸ் மேடம். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.’’

``நத்திங், எல்லாம் நல்லதுக்குதான்னு நினைப்போம்’’  - இடையிட்டான் அரவிந்தன்.

``எப்படி அரவிந்தன்?’’

இறையுதிர் காடு - 21

``கத்தியால உனக்கு மட்டும் எதுவும் ஆகல. பாம்பும் யாரையும் இதுவரை கடிக்கல. தப்பா இருந்தா உனக்கும் காயம் பட்டிருக்கும். பாம்பால சில உயிர்களும் போயிருக்கும் இல்லையா?’’  அவன் கேள்வியை அவர்கள் இருவராலும் மறுக்க முடியவில்லை. அவனே தொடர்ந்தான்.

``பாட்டிக்கு அடிபட்டு அவங்க மலை ஏற முடியாததுலகூட நமக்கு ஒரு செய்தி இருக்கு. நீ அவங்ககூட போக மாட்டேன்னு இங்கேயே தங்கிட்டே. இப்ப போகப்போறோம். அப்படின்னா என்ன அர்த்தம்?’’

பாரதி வெறித்துப் பார்த்தாள்.

``அந்தக் குமாரசாமி மரணம், அதைத் தொடர்ந்து உங்க அப்பாவோட விபத்து, அதைத் தொடர்ந்து நீ அந்த யோகி திவ்ய ப்ரகாஷைச் சந்தித்தது. அப்ப ஆரம்பிச்சு பழநி பற்றிய பேச்சு, இப்பவரை போய்க்கிட்டே இருக்கிறது எல்லாமே ஒண்ணுக்கொண்ணு தொடர்புடைய விஷயங்களாகவே இருக்கு பாரதி. இடையில வந்த இந்த வாளும் பெட்டியும்கூட நிச்சயம் இது தொடர்புடையதாதான் இருக்கணும். நாம இதை விலகி நின்னு புரிஞ்சிக்க முடியாது. இன்ஃபாக்ட், இந்த விஷயத்தாலதான் நான்கூட உன் வீடு வரை வர நேரிட்டது. நமக்குள்ள ஒரு நட்பு பலமானது. சோ... எப்படிப் பார்த்தாலும் அமானுஷ்யமா இப்ப நடக்கிற விஷயங்களைச் சுத்தி நாம தெரிஞ்சிக்க, புரிஞ்சிக்க ஏதோ இருக்கு. நாம இதுக்கு உடன்படுற வரை இது விடாதுன்னுதான் நினைக்கிறேன்.’’

``இறுதியா உங்க முடிவு?’’

``வா. இறங்கு... திறந்த மனசோடு எந்தச் சார்புமில்லாம உண்மையை மட்டும் மதிச்சு இதுல இறங்குவோம். என்ன நடக்குதுன்னும் பார்த்துடுவோம்’’ - அரவிந்தன் சொன்னவிதம், பாரதியை இளக்கியது.

``ரைட் அரவிந்தன்... என் வரையில இது ஒரு அட்வென்சர். அந்த திவ்ய ப்ரகாஷ்கூட `கடல்ல இறங்காம அதோட ஆழத்தைத் தெரிஞ்சிக்க முடியாது’ன்னு சொன்னார். ஒண்ணு, இறங்கணும்... இல்ல இறங்கினவங்க சொல்றத நம்பணும். நான் யார் சொல்றதயும் நம்பத் தயாரா இல்லை. நானே இறங்குறேன். இந்த விஷயத்துல என்கூட எனக்கு உதவி செய்ய நீங்களும் இருக்கீங்க. இப்போதைக்கு இதுபோதும் எனக்கு.’’

``குட்... திஸ் ஈஸ் தி ஸ்பிரிட்...’’  - அரவிந்தன் சொன்னவிதத்தில் ஒரு கெழுமிய ஆண்மை. பானு அவனை விழுங்குவதுபோல் பார்த்தபடியே இருந்தாள். அதை பாரதியும் கவனித்தாள்.

``அரவிந்தன்... இவங்க பேர் பானு. உங்களோட விசிறியாம்’’  என்றாள்.

``ஓ... ரொம்ப சந்தோஷம்.’’

``இவங்க அப்பாவோட பி.ஏ-வும்கூட.’’

``அப்ப, இப்ப நிறைய வேலை இருக்குமே..?’’

``ஆமாம் சார்... ஹாஸ்பிடல், வீடுன்னு போயிட்டு போயிட்டு வர்றேன். அடுத்து ஏதாவது புதிய தொடர் எழுதப்போறீங்களா?’’

``நிச்சயமா... பாரதியோட தமிழ் வாணில ஒத்திகைங்கிற பேர்ல புதுத் தொடர் ஆரம்பம்.’’

``லவ் சப்ஜெக்டா?’’

``ஆமாம்...’’

``ரொம்ப ஆவலா வெயிட் பண்றேன் சார்.’’

``மேபி... இப்ப நடக்கிற விஷயங்களோட பாதிப்புல ஒரு அமானுஷ்ய கதையாகூட அது மாற வாய்ப்பு இருக்கு.’’

``எதுவா இருந்தாலும் சரி, நீங்க எது எழுதினாலும் எனக்கு அது கல்கண்டுதான் சார்.’’

``தேங்க்யூ...’’ அவன் நன்றி கூறவும், பாரதி பானுவை ஒரு பார்வை பார்த்தாள். பானுவும் இங்கிதமாய் விலகிக்கொண்டாள்.

``சரி பாரதி, நாம கொஞ்சம் திட்டம் போட்டுக்குவோமா?’’  - அரவிந்தன் அடுத்த நொடியே வேகமெடுத்தான்.

``திட்டம் மீன்ஸ்..?’’

``முதல்ல இந்தக் கத்தி, பெட்டிகிட்ட இருந்து ஆரம்பிக்கலான்னு நினைக்கிறேன்.’’

``அங்க பாட்டி பழநியில காத்துக்கிட்டிருக்காங்க.’’

``தெரியும், போற வழியில இந்த வேலையைப் பார்ப்போம்.’’

``யூ மீன் - நாம அந்தத் துரியானந்தத்தைப் பாக்கப் போறோமா?’’

``இதை அவன்கிட்ட இருந்துதானே வாங்கினே?’’

இறையுதிர் காடு - 21

``ஆமா...’’

``அப்ப அவனைப் பார்த்தே தீரணும்.’’

``புரியுது... அவனுக்கு இது எப்படி வந்ததுன்னு தெரியணுமா?’’

``ஆமாம்...’’

``அவன்தான் சொன்னானே, ஏதோ ஒரு ஜமீன் பங்களாவுல இருந்துன்னு.’’

``அப்ப ஜமீன் பங்களாதான் நம்ம டார்கெட். அந்த பங்களா எங்க இருக்குன்னு தெரியணும்.’’

``அதை வந்து பார்த்துக்கலாமே!’’

``அதுவும் சரி... பழநி முருகனோட தரிசனம் ஏதாவது திருப்பம் தருதான்னு பாப்போம்.’’

``ஓ... உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு இல்ல! மறந்துட்டேன்.’’

``நம்பிக்கை உண்டுங்கிறதவிட, நான் நாத்திகன் இல்லைங்கிறதுதான் முக்கியம். முன்னயே சொல்லியிருக்கேன் - நான் ஒரு நியூட்ரல்னு.’’

``அப்ப நாத்திகனா இருக்கிறது தவறா?’’

``அது ஒரு நிலை... தப்பு-சரிக்கெல்லாம் அங்க இடமில்லை...’’  என்றவன் ``போற வழியில உங்க அப்பாவையும் ஒரு பார்வை பார்த்துடலாமா?’’  என்றும் கேட்டான்.

``நிச்சயமா... அப்பா கண் முழிச்சிப் பேச ஆரம்பிச்சு நான் இன்னும் போய்ப் பார்க்கலை...’’

``அவ்வளவு பிஸியா?’’

``அப்படித்தான் சொல்லணும்... இந்தப் பாட்டி மட்டும் பழநி போறேன்னு சொல்லாம இருந்தி ருந்தா என் டார்கெட் அந்த வேங்கையன்தான். அவன்கிட்ட இருந்து போலிப் பத்திரங்களை வாங்கிக் கிழிச்சுப்போடணும்கிறதுதான் என் வரையில பிரையாரிட்டி அரவிந்தன்.’’

``பாரேன்... நாம எவ்வளவு திட்டமிட்டாலும் எப்பவும் நடக்கிறதுதான் நடக்குது.’’

அவனுடைய அந்தக் கருத்துக்கு, அவள் பதில் சொல்லவில்லை. அவன் அப்படிச் சொன்னதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அது அவனுக்கும் புரிந்தது. அவள், ஒரு ஓலா காருக்கு தன் செல்போன் மூலம் முயலத்தொடங்கினாள். அதில் ஏறி தாம்பரம் சென்றுதான் காரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஐந்து நிமிடத்தில் ஓலா வந்துவிடும் அறிகுறிகள் திரையில் தெரிந்தன!

இறையுதிர் காடு - 21

ஹாஸ்பிடல்!

சொல்லிவைத்ததுபோல ராஜாமகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், அந்த வேங்கையன் மூன்று பேரும் ஒரே இடத்தில் அட்மிட் ஆகி, அதில் ரவிக்குமாருக்கு அறுவைசிகிச்சை முடிந்திருந்தது. வேங்கையனுக்கு நடந்துகொண்டிருந்தது.

நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், யாரையும் எளிதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. வேங்கையனின் இரண்டு மனைவிகளும் வெளியே ஆளுக்கொரு பக்கமாய் காரில் அமர்ந்துகொண்டு போனில் யார் யாருடனெல்லாமோ பேசியபடி இருந்தனர். சத்தமான பேச்சு! பார்க்கிங் வாட்ச்மேன் அவ்வப்போது வந்து ``கொஞ்சம் அமைதியா பேசுங்கம்மா’’ என்று தணித்தபடியே இருந்தான். வேங்கையனின் அடியாள் ஒருவன் காரின் பேனட்மேல் சிக்கன் பிரியாணியைப் பிரித்து வைத்து மிகுந்த ரசனையோடு சாப்பிட்டுக் கொண்டிருக்க, சிலர் புகைபிடிக்க, அங்கே கொஞ்சம் ரணகளம் கண்ணில்பட்டது.

இந்நிலையில்தான் பாரதியின் கார் அரவிந்தனோடு உள் நுழைந்தது. ஒரு நெடும் பயண நிமித்தம் சௌகர்யமாய் பேன்ட்-டிஷர்ட், போனிடைல் என மிக சிம்பிளாக இருந்தாள் பாரதி. உடன், சிம்பிளான பேன்ட் ஜிப்பாவில் அரவிந்தன்.

இருவரும் இறங்கி உள்ளே நடக்கும்போது அவர்களைப் பார்த்துவிட்ட வேங்கையனின் ஆள்களில் ஒருவன் ``யக்கா... யக்கா... தா போகுது பார். அதான் அண்ணன்கிட்ட வந்து ரவுஸ் உட்டுச்சி’’ என்றான்.

``யாருடா... அந்தக் குதிரைவால் கொண்டக்காரியா?’’

``ஆங்க்கா...’’

``இங்க எங்கடா வந்துக்கிறா..?’’

``அவ எம்.பி-யோட பொண்ணுக்கா. அப்பனைப் பாக்க வந்துக்கிறா.’’

``அப்பன் தில்லாலங்கடி - பொண்ணு மகாத்மாவா?’’

``யாருக்குக்கா தெரியும். அது ஏதோ பத்திரிகையில வேல பாக்குதாட்டம் இருக்குது. பத்திரிகைகாரங்களே அப்புடிதாங்கக்கா...’’ 

உள்ளே ராஜாமகேந்திரன் வார்டு முன் வரிசையாய் நாற்காலிகள். அதில் ஒரு வட இந்தியர் வெள்ளைப் பஞ்சகச்சம், ஜிப்பா. அதற்குமேல் ஒரு கறுப்பு வெஸ்ட் அணிந்த மார்போடு கைநிறைய கல்லுகல்லாய் மோதிரங்களோடு அமர்ந்திருந்தார். கணேச பாண்டியன் உள்ளுக்கும் வெளிக்குமாய் அல்லாடிக்கொண்டிருந்தார். பாரதி அரவிந்தனைப் பார்க்கவும், ஓடி வந்தார்...

``பாப்பா...’’

``அப்பா இப்ப எப்படி இருக்கார்ணே..?’’

``இருக்காரும்மா..!’’ - சொன்னவிதத்தில் துளியும் உயிரில்லை.

``ஏண்ணே டாக்டர் ஏதாவது தப்பா சொல்லிட்டாரா?’’

``என்னத்தம்மா... இனி காலமெல்லாம் படுத்தேதான் கிடக்கணும்னா கேக்க சகிக்குமா?’’

``அப்படியா?’’

``இவர் மட்டுமில்லம்மா... அந்தக் குமாரசாமி வி‌ஷயத்துல அவர் வாய்ல விழுந்த மத்த ரெண்டு பேருக்குமே இப்ப கிட்டத்தட்ட அதான் நிலை!’’

``நிஜமாவா?’’

``சொல்லிவெச்ச மாதிரி இந்த ஆஸ்பத்திரிக்கேவா அவங்களும் வந்து படுக்கணும்?’’ - கணேச பாண்டியனின் கேள்வி, பாரதியை நெம்பியது.

அப்போது அரவிந்தன் அந்த வடநாட்டுக் காரரைப் பார்த்துவிட்டு கணேச பாண்டியனிடம் கேட்டான்,

``ஆமாம்... இது யார்?’’

``இவருங்களா... இவரு டெல்லியில பெரிய ஜோசியராம். நம்ப அய்யாவுக்கு இப்படியெல்லாம் ஆகும்னு முன்னாலயே சொல்லியிருந்தாராம். ஆகவும் வந்துட்டாரு! இப்ப இவர் சொல்றதுதான் எனக்கே ஆச்சர்யமா இருக்குது.’’

``என்ன சொல்றாரு?’’

``அய்யா எழுந்து நடப்பாரு... அதுவும் ரெண்டு மாசத்துல நடப்பாரு. ஆனா, என் பேச்ச கேக்கணும்னு சொல்றாரு.’’

``அவர் பேச்சைக் கேக்கணும்னா?’’

``அது என்னன்னு எனக்குத் தெரியாது. அய்யாவுக்கு மட்டும்தான் தெரியும். என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறாரு.’’

``சரி, எதுக்காக இன்னும் உட்கார்ந்திருக்காரு?’’

``அய்யாவோட பதிலுக்காகத்தான்!’’  - கணேச பாண்டியனின் விளக்கத்தைத் தொடர்ந்து, பாரதி அந்த வடநாட்டு ஜோதிடரைக் கூர்மையாகப் பார்த்தாள். மெல்ல நெருங்கினாள்.

- தொடரும்

-இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியங்கள்: ஸ்யாம்