சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

கூடவே வளரும் கழுதை

கூடவே வளருகிற
ஒரு கழுதைக்கு
விதி என்று பெயர் சூட்டியுள்ளேன்.

என்னால் சுமக்க முடியாததை 
ஆட்சேபிக்காத
அதன்மீது ஏற்றுகிறேன். 

என் இயலாமை, பாரம், 
தோல்வி, வலி,
உடையும் கனவுச்சில்லுகள்
அனைத்தையும் மூட்டை கட்டி
மறுப்பு தெரிவிக்காத 
அதன்மீது கட்டுகிறேன்.

என் கண்ணீரை
என் வியர்வையை
என் காயத்தின் ரத்தத்தை
அதன்மீது துடைக்கிறேன்  
அது வருந்துவதில்லை.

என் எதிர்மறைகளின் 
எதிர்வினைகளுக்கு
அதைக் காரணப்படுத்துகிறேன்
அது இயல்பாகவே இருக்கிறது.

கயிற்றின் ஒருமுனையை
அதன் கழுத்திலும்
மறுமுனையை
என் கழுத்திலும் கட்டியுள்ளேன்.
 
சிலநேரம் அதை நான்
இழுத்துச்செல்கிறேன்
சிலநேரம் அது என்னை
இழுத்துச்செல்கிறது.

- வீ.விஷ்ணுகுமார்

நிம்மதியில் உறங்கும் அம்மன்...

கோயிலுக்குப்
பாத்தியப்பட்டவர்களின்
பிள்ளைகளில் ஒருவன்
சாதிவிட்டுக் கல்யாணம் கட்டிக்கிட்டதால்
வருடந்தவறாமல் நடந்தேறும்
அம்மன் கோயில் திருவிழா
கடந்த நான்கு வருடமா
நடக்கவேயில்லை.
காதல் ஜோடிகளைத்
தள்ளி வைத்துவிட்ட
திருப்தியில்
ஊர் இருக்க...
ஊரையே ஒதுக்கி வைத்த
நிம்மதியில் உறங்குகிறாள்
ஆத்தா...

- சாமி கிரிஷ்

கீர்த்தனை

நகரச்சந்தடியின் எந்தப் பரபரப்பையும்
உள்வாங்கிக்கொள்ளாமல்
நெரிசல்மிகுந்த ரோட்டைக் கடக்கிறான்
பார்வையற்றவன்.
உழவர் சந்தையின் முன்முகப்பில்
குழந்தைகள் விளையாட்டுப்
பொருள்களை விற்பனை செய்கின்ற அவன்
விற்கின்ற பொருள்களின் கவனம் ஈர்க்க
ரோஸ் நிறத்திலான பிளாஸ்டிக் விசிலை
சதா ஊதிக்கொண்டேயிருப்பான்
இந்த முறை ரோட்டைக் கடக்க
விசிலுக்குப் பதிலாக
தேவனின் கீர்த்தனைகளை
இசைக்கத் தொடங்கினான்
பார்வையற்றோர் பள்ளியின்
பிரார்த்தனைக் கூடத்தில் அவன்
பலமுறை பாடிய பாடல் அது
கையிலிருக்கிற துணைக்கம்பின் சத்தமே
அவனது பாடலுக்கான சந்தம்
தான் இசைத்துக்கொண்டிருக்கிற
கீர்த்தனைகளின் வழியாக
தனது வழிப்பாதையை வகுத்துக் கொண்டான்
அவனது மஞ்சள்பையில்
திணித்து வைக்கப்பட்டிருக்கிற
பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு
இதுபோன்று எப்போதாவதுதான்
அவனுடைய கீர்த்தனைகளைக் 
கேட்கின்ற வாய்ப்புகள் கிட்டுவதுண்டு.
அவனது நல்லிசையின் சிலிர்ப்பில்
அவை ஒன்றோடொன்று
உரசிக்கொள்வதுண்டு
வாசம் உணர்ந்து தன் இருப்பிடமடைந்து
இசைப்பதை நிறுத்திக்கொள்கிற
அந்த கணத்தில்
அவன் முன்னே விரிகிறது
ஓர் கடல்
ஓர் ஆகாயம்
நிறைவாக ஓர் அண்டவெளி

- வே.முத்துக்குமார்