
பாக்கியம் சங்கர்
தாயம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பெரிய அலை ஒன்று, ஓடிக்கொண்டிருந்த நண்டை நனைத்து விளையாடியது. பிறகு, மணல் துளையில் தன்னை மூடிக்கொண்டு வெளியே எட்டிப்பார்த்தது நண்டு. அதன் பார்வையில் குட்டி அலை ஒன்று வந்துகொண்டிருந்தது. நண்டும் தனது துளையில் இருந்து வெளியே மண்ணும் மனமுமாய் வந்தது. குட்டி அலை, நண்டைக் குளிப்பாட்டியது. என்னதான் முழுவதும் நனைத்தாலும் அலையால் நண்டிலிருந்து மண்ணை முற்றிலுமாகப் பிரித்தெடுக்க முடியவில்லை.
``ஒரு மரணப் புள்ளிய கேளு” என்று தாயக்கட்டையை உருட்டினாள் வள்ளி. எல்லோரும் கைகள் தட்ட, வள்ளி கேட்டதுபோலவே தாயம் விழுந்தது. காய்களை நகர்த்தி வீடுபேறு அடைந்தாள் வள்ளி.

``ஏண்டி வள்ளி... உன் வூட்டுக்காரன, பாயி உட்டா ஆலி புட்சியாரச் சொல்லு... சாப்ட்டு ரொம்ப நாளாச்சு...” குப்பம்மாள் தாயக்கட்டையை உருட்டினாள்.
``இன்னாக்கா இடுப்புவலியா... மாமாவ வெளிய படுக்கச் சொல்லவேண்டியதுதான...” சரியாகப் பன்னிரண்டை உருட்டி எதிரிப் படையை வீழ்த்திச் சிரித்தாள் அகிலா.
``ஆமாண்டி... மாமாவ வெளிய உக்காரச் சொல்றன்... நீ தள்ளிக்கிட்டுப் போயிடு.” எல்லோரும் சிரிக்க...
``இந்த வயசுலயும் வஞ்சிரம் மீனு மாதிரி சும்மா கொழுகொழுன்னுதான இருக்குது மாமா. கசக்குமா என்ன!” வள்ளி சொல்ல, ஆட்டம் களைகட்டியது.
அந்திக்கருக்கலில் கடலுக்குள் சூரியன் புதைந்துபோனான். பொன்னிறத்தில் கடல் ஜொலித்துக்கொண்டிருந்தது. அப்போதுதான் குப்பம்மாள் பார்த்தாள். ``ஏண்டி, பாயி ஓடியார்து பாருங்கடி... அடுப்பப் பத்தவெச்சு ஒலய வைங்கடி...” என்று ஆட்டத்தைக் கலைத்து, அவரவர் குடிசைக்குள் நுழைந்தார்கள்.
குடிசை வெளியே இருந்து கடலைப் பார்த்தாள் வள்ளி. கடலும் வானமும் ஒன்றையொன்று தழுவிக்கொண்டிருந்தன. ஒருதடவை தேசப்பனிடம் வள்ளி இப்படிக் கேட்டாள் ``இங்கயிருந்து பாத்தா கடலும் வானமும் ஒட்டிக்குனு இருக்கிறா மாதிரி தெரியுது. நீங்க பாயி ஓட்டிக்கினு போனா முட்டாது?”
தேசப்பன், அவளின் குழந்தைத்தனமான இந்தக் கேள்விக்கு ``அது வானமும் கடலும்... அப்பப்போ முத்தம் குடுத்துக்கும்” என்று நெருங்கினான்.
``பாக்கும்போதுலாமா முத்தம் குடுத்துக்கும்!” என்றபோது தேசப்பன் வள்ளியை முத்தினான்.
செவ்வானத்தின் பொன்னிறத்தில் பத்துப் பாய்மரப்படகுகள் காற்றின் போக்குக்கு ஏற்றவாறு கரைக்கு வந்துகொண்டிருந்தன. படகின் பாயைக் கயிற்றால் இழுத்துப் பிடிக்க வேண்டும். காற்றின் போக்கைத் தனதாக்கிக்கொண்டு கரைக்குத் திரும்ப வேண்டும். காட்டுப்பள்ளி மீனவக் கிராமத்தில் தேசப்பன்தான் முழுக்காளி. மீன்களை போக்குக்காட்டி வலைக்குள் கொண்டுவருபவன். அப்போதெல்லாம் இருபது நாட்டிகல் போனாலே பாறையும் வஞ்சிரமும் துள்ளிக் குதித்து வலையில் விழும் என்று சொல்வார்கள். ஒரு நாட்டிகல் என்றால் ஒன்றரை கிலோமீட்டர்.

இரண்டு பாயோடு இருபது நாட்டிகலுக்குச் சென்று வலையை ஒரு பக்கம் போடுவார்கள். தேசப்பன் நூறடிக்கு வலதுபக்கத்தில் தென்னை ஓலையைக் கடலில் போடுவான். அது மிதந்துகொண்டே இருக்க, கொஞ்ச நேரத்தில் பார்க்க வேண்டுமே, தென்னை ஓலையின் கீழே மீன்களும் விராலும் தவழ்ந்துகொண்டிருக்கும். தேசப்பன், மீன்களுக்குத் தெரியாதபடி கடலில் மூழ்குவான். நடுக்கடலில் தென்னை ஓலையின் கீழே இருக்கும் மீன்களைச் சுற்றி வந்து பார்ப்பான். அப்படியே அந்தத் தென்னை ஓலைகளை ஒரு கையால் பிடித்து வலை போடப்பட்டிருக்கும் படகுப் பக்கம் நீந்தியபடியே ஓலைகளை இழுத்து வருவான். இந்த விளையாட்டு மீன்களுக்கும் பிடித்துப்போக, அதுவும் தென்னை ஓலையின் நிழலில் நீந்திவரும்.
அவ்வப்போது வெளியே வந்து கொஞ்சமாய் சுவாசித்துக்கொள்வான் தேசப்பன். திரும்பவும் முழுக்காளியாக மாறுவான். உள்ளடியிலேயே மீன்களை வலைக்கு அருகில் கொண்டுவருவான். தென்னை ஓலையை வலைக்கு மேலே அனுப்பிவிட்டு, வலைக்குள்ளே தேசப்பன் நுழைந்துகொள்வான். இப்போது வலைக்கு மேலே தென்னை ஓலை இருப்பதால் மீன்களும் வலை எனத் தெரியாமல் தேசப்பனோடு வலைக்குள் வந்துவிடும். இப்போது தான் மிகக் கவனமாக வலைக்குள்ளிருந்து வெளியே வர வேண்டும். வெளியே வரும்போதே வலையை இழுக்க சிக்னல் கொடுக்க வேண்டும். இது முழுக்காளியால் மட்டும்தான் முடியும். கொஞ்சம் பிசகினாலும் வலைக்குள் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அப்படிச் சிக்கிக்கொண்டால், வலையைப் பத்துவதற்குள் இறந்துபோகவும் நேரிடலாம். மூழ்கும்போதே மீன்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுவிடுவான் தேசப்பன்.
நீலநிறப்பாயில் `வள்ளி’ என்ற பெயரைப் பார்த்தாள் வள்ளி. குடிசைக்குள் நுழைந்தாள். சுள்ளிகளை அடுப்பினுள் செருகினாள். வறட்டியில் கொஞ்சம் கிருஷ்ணாயில் ஊற்றிப் பற்றவைத்து அடுப்பில் வைத்தாள். செந்தனலாய் எரிந்த தீயைப் பார்த்துக் கும்பிட்டுக்கொண்டாள். உலைப் பானையை எடுத்து அடுப்பில் வைத்தாள். வெள்ளனவே பாட்டுக்குக் கிளம்பியவர்களுக்கு வந்தடையும்போது சுடுசோறும் நல்ல வெஞ்சனமும் வைக்க வேண்டும். கொண்டுவரும் மீனை ஆய்ந்து குழம்பை வைத்துவிட்டால், மறுநாள் கஞ்சிக்கு வயனமாக இருக்கும் என்று வள்ளி வக்கனையாகச் செய்து வைப்பாள்.
பாயைச் சுருட்டிப் படகில் கட்டியவன், அன்னக்கூடையில் துள்ளிக்கொண்டிருக்கும் மீன்களைத் தலையில் தூக்கிக்கொண்டு குடிசைக்கு வந்தான். வீட்டுக்குத் தேவையான மீன்களை எடுத்து வைத்துவிட்டு, மற்றதை சந்தையில் விற்றுவிடலாம்.
அலையோடு விளையாடிக்கொண்டிருந்த பிள்ளையைப் பார்த்தான். அது ஓடிவந்து அப்பனின் மார்பில் விழுந்து புரண்டது. இரவில் நிலா வெளிச்சத்தில் தவழ்ந்து வந்த அலையும் கூதக்காற்றும் தேசப்பனின் மேனியில் பட்டுத் தெறித்தன. `வள்ளி மரவள்ளிக் கிழங்கைப்போலத்தான் இருக்கிறாள்!’ என்று அடிக்கடி வள்ளியிடம் சொல்வான்.
``வள்ளி... பாரையோட சினைய, புள்ளைக்கு மெளகுத் தூளு போட்டு வறுத்துக் குடு... நல்லா பெலமா இருக்கட்டும் புள்ள...”
அவள் தேசப்பனுக்கும் மீனின் சினையை வறுத்துக்கொண்டிருந்தாள். தட்டில் சுடுசோற்றைப் போட்டாள். அதிலிருந்து வந்த ஆவியின் இளஞ்சூடும், கடலினுள்ளிருந்து வரும் கூதக்காற்றும் அவர்களின் வாழ்வை ருசிகொண்டதாய் மாற்றின. வறுத்த மீனின் மசாலாவைப் பிசைந்தே ஒரு தட்டுச் சோற்றை முடித்துவிட்டு, தட்டை நீட்டினான். வள்ளி சிரித்தாள்.
தேசப்பனின் மார்பில் படுத்திருந்தவள், அவனின் நரைத்த முடிகளைத் தடவிக்கொண்டி ருந்தாள். ``இன்னிக்கு பாடு நல்லா இருக்கு வள்ளி... நாளைக்குச் சந்தையில வித்துட்டு... உனக்கு ஒரு மெட்டி வாங்கலாம்னு இருக்கேன். மரவள்ளிக் கிழங்குக்கு மெட்டி இல்லன்னா நல்லா இருக்காதுல்ல” தடவிக்கொண்டிருந்த அவளது கைகளைப் பற்றிக்கொண்டான்.
``எனக்கு எதுக்குய்யா இப்போ மெட்டி... புள்ளைக்கு ஷூ வேணுமாம். அத வாங்கலாம் சரியா” வள்ளி, தேசப்பனைப் பார்த்தாள்.
``உனக்குன்னு ஒண்ணும் வேணாமா?” அவள் அவனை உற்றுப் பார்த்துவிட்டு ``எனுக்குத்தான் வஞ்சிரம் கணக்கா நீ இருக்குற... ஜிலேபி மாதிரி புள்ள இருக்குது... கேக்கிறத குடுக்கிறதுக்கு நம்ம கடல் இருக்கு... இதைவிட எனக்கு என்ன வேணும்?” என்றாள். தேசப்பன், வள்ளி மரவள்ளிக்கிழங்கை இறுகக் கட்டிப்பிடித்தான். மீனின் மசாலா வாசனையில் அந்த இரவு உறங்கிப்போனது.

பதினைந்து வருடத்தைத் தாண்டிவிடலாம். தேசப்பனுக்கு, பாய்மரத்தைக் கடலில் தள்ளுவதற்கு உதவியாக இருந்தான் அவன் பிள்ளை. எவ்வளவோ முயற்சி செய்தும் பெரிதாகப் படிக்க விரும்பவில்லை தேசப்பனின் பிள்ளை ஜகா. அவனுக்குக் கடல் வேண்டும். கடலில் முக்குளித்து முத்தெடுக்க வேண்டும். கரையோரப் பாறைகளில் ஆலி பிடித்துக்கொண்டு வருவான். தேசப்பனைப்போலவே முழுக் காளியாகத்தான் வருவான் என்று வள்ளி அவ்வப்போது தேசப்பனிடம் சொல்வாள்.
கடலுக்குள் போக முடியாத அளவுக்கு மழை பெய்துகொண்டிருந்தது. காட்டுப்பள்ளிக் குப்பத்துப் பஞ்சாயத்து சபைக் கூட்டம் என்று தேசப்பன் குடும்பம் சென்றிருந்தது. தலைவர் தேசிங்குவிடம் கோட் சூட் அணிந்த நால்வர் குழு பேசிக்கொண்டிருந்தது.
``விஷயம் இதுதான்... நம்ம குப்பத்துக்குப் பக்கத்துல கடல் தண்ணிய நல்ல தண்ணியா மாத்துற ஃபேக்டரி கட்டப்போறாங்களாம். நமக்கும் நம்ம புள்ளைங்களுக்கும் வேல தர்றேன்னு சொல்றாங்க. நல்ல சம்பளத்துல ஜம்முன்னு இருக்கலாம். இந்த இடத்தை கம்பெனி கேக்குறாங்க. நமக்கு சடையாங்குப்பத்துல கம்பெனியே வூடு கட்டித் தரும்னு சொல்றாங்க. எதுன்னாலும் உங்கள கேக்காம நா ஒரு முடிவும் எடுக்க முடியாது. என்ன சொல்றீங்க?”
தலைவர் இப்படிச் சொன்னதும் கூட்டம் கொஞ்சம் சலசலத்தது. ``தலைவரே, திடீர்னு வந்து எடத்த காலிபண்ணு, வேல தரேன்... வூடு தரன்னு சொல்றத எப்படி எடுத்துக்கிறதுன்னே புரியல...” கூட்டத்தில் ஒருவர் சொன்னார்.
``யோவ்... மழ புயல்னு வந்தா பசியும் பஞ்சமும்தான் மிஞ்சுது. எவனாவது வந்து பாக்கிறானா... சும்மாவா கேக்குறாங்க... வேல தர்றேன்... வூடு கட்டித் தர்றேன்னுதான சொல்றாங்க. லுங்கி கட்டிக்கினு சுத்துறதவிட பேன்ட் போட்டுக்கினு வேலைக்குப் போறது கெளரவம்தான்...” இப்படியாகப் பல்வேறு விவாதங்கள்.
நடந்து முடிந்து கடைசியில், லுங்கி கட்டிக்கொண்டு இப்படியே போவதற்கு, தன் பிள்ளைகளாவது நல்ல வெளுத்த உடையில் பேன்ட் ஷர்ட்டோடு ஒரு வேலைக்குச் செல்லட்டும் என்று, அந்தப் பெருமுதலாளிகளின் ஒப்பந்தத்தில் கடல் மைந்தர்கள் கைநாட்டு வைத்தனர்.
கடலோடும் காற்றோடும் அலையோடும் விளையாடிக்கொண்டிருந்தவர்களைப் பெயர்த்தெடுத்து வேறொரு நிலத்தைத் தந்தது நிறுவனம். அதுவும் கடலோரம்தான். ஆனால், கடலுக்கு இரண்டு நாட்டிகல் நடக்கவேண்டி யிருந்தது. எதுவாக இருந்தால் என்ன, பிள்ளைகள் நன்றாக இருந்தால் போதும் என நினைத்தார்கள். அவர்கள் இருந்த சடையாங்குப்பத்தையும் சேர்த்துக் கடற்கரையோரம் நன்றாகக் காலூன்றினான் பெருமுதலாளி.
``மீன் பட்டுதுன்னா சோறு... இல்லன்னா கால் வயிறுன்னு இருக்குறோமேன்னுட்டு புள்ளைங் களாவது பேன்ட் போடும்னு ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக... எங்க வாழ்வாதாரத்தையே தொலைச்சுட்டு நிக்கிறது இப்பதான் புரியுதுப்பா... எங்க புள்ளைங்கள சும்மனாங்காட்டியும் வேலைக்குச் சேத்திருக்கான்பா... சும்மானாலும் கம்பெனிக்குப் போயி உக்காந்துட்டு வரவேண்டிய துதான் வேல... வலையப் போட்டு இழுத்து உழைச்சிச் சாப்பிட்ட பசங்க... இப்போ சோறு துன்னவே மாட்டுதுங்க... உழைக்கலைன்னா சோறு எறங்காது ராஜா... அப்பதான் கம்பெனிக்காரன் இன்னொண்ணு பண்ணுனான். எங்க ஈரக்குலையே நடுங்கிச்சு” வள்ளியின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
சடையாங்குப்பத்திலிருந்து நேராகச் சென்றால் இரண்டு நாட்டிகல்தான். ஆனால், கம்பெனிக்காரன் குறுக்கே பெரிய பாறாங்கற்களால் ஆன தடுப்புச் சுவரை எழுப்பினான். கடலுக்குச் செல்ல பதினைந்து நாட்டிகல் சுற்றிப் போனால் அங்கே ஒரு வழி வைத்திருப்பதாகவும், அங்கே போக அனுமதி உண்டென்றும் கட்டளையிட்டான்.

``கடலோடு பொறந்து கடலோடு வாழ்ந்த எங்களத் தடுக்க நீ யாருடா?” என்று தேசப்பனும் வள்ளியும் தடுப்புச்சுவரை மக்களோடு சேர்த்து இடித்தார்கள். பெருமுதலாளிகளின் சேவகர்கள் அதிகாரத்தின் துணையோடு ``இது அவர்களின் கடல். நீங்கள் சுற்றிப் போய்தான் ஆகவேண்டும்’’ என்று சொன்னார்கள். இதற்கும் சேர்த்துதான் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருப்பதாகக் காண்பித்தார்கள்.
ஏதுமறியாத கடல் மைந்தர்கள், செய்வதறியாது பதறிப்போனார்கள். அதிகாரத்தின் துணை கொண்டு மீண்டும் சுவர் எழும்பியது. ``வூடு என்னுது இல்ல... இந்த நாடு என்னுது இல்லன் னாலும் போடான்னு உட்டுடலாம். ஆனா, கடல் என்னுது இல்லன்னா எப்பிடி உடுறது? இது என்னோட கடலு... நம்மளோட கடலு... இந்த கம்பெனிக்காரனுங்களுக்கு விட்டுட்டு எங்க போறது?” வள்ளிதான் இப்படி வெடித்தார். இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்.
பத்து வருடத்தைத் தாண்டிவிடலாம். காட்டுப்பள்ளியிலிருந்து சடையாங்குப்பத்துக்கு மாற்றப்பட்டவர்கள் இப்போது இன்னொரு பெருமுதலாளியின் கைங்கர்யத்தால் காட்டுப் பள்ளிக் குப்பத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். கடலும் மண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களிடமிருந்து உதிர்ந்துகொண்டேயிருந்தன. நிலக்கரியின் எச்சங்களால் மண்வளம் குன்றி, மனிதர்கள் வாழத்தகுதியற்ற பூமியாக நமக்கு மிக அருகிலேயே ஒரு நிலம் அழிந்துகொண்டுவருகிறது. அப்போதுதான் இயற்கைப் பற்றாளர் நண்பர் வானவன், மின்சாரக் கூண்டின் மேல் கட்டியிருக்கும் ஒரு கூட்டைக் காட்டினார்.
``நண்பா அதுதான் கடல் கழுகு... மண் எப்போ வாழத் தகுதியில்லாமப்போகுதோ... அப்போ இந்தக் கடல் கழுகு இனமும் அழிஞ்சிபோகும்... இப்போ இது ஒண்ணுதான் உயிரோடு இருக்குது. இந்த கம்பெனியோட நிலக்கரி எச்சம் கொசஸ்தலை ஆத்துல கலந்து ஆத்தோட மீன்வளம் பாதிக்கப் படுது. இன்னும் கொஞ்சநாள்ல கொசஸ்தலை ஆறு நச்சுத்தன்மையா மாறிடும். இப்போ இந்தக் கம்பெனியைச் சுத்தி பெருசா எந்த ஊரும் இல்லை. அப்படித்தான் கடல் மனுசங்ககிட்ட இருந்து கடலைப் பிடுங்கி இந்த ஊரையும் நாசமாக்கிற வேலையும் நடந்துட்டிருக்கு” என்று வானவன் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.
காட்டுப்பள்ளிக் குப்பத்தில் வந்திறங்கினோம். வள்ளி இப்போது வள்ளியம்மாள் ஆனார். வரவேற்று அமரவைத்தார்கள். தூரத்திலிருந்து கடலின் சத்தம் வந்துகொண்டிருந்தது. கம்பெனிக் காரன் எழுப்பிய தடுப்புச்சுவரால் கடல் எங்களுக்குத் தெரியவில்லை.
``மொதல்ல ஒருத்தன் வந்தான். வெளிச்சம் தர்றேன்னு ஆத்துத் தண்ணிய கெடுத்து நஞ்சாக்கிட்டான். அந்த நஞ்சு முகத்துவாரத்துல கலந்து கடலும் நஞ்சாவப்போது... எங்களுக்கு பேன்ட் - சட்டை கொடுத்துட்டு... கோவணத்த உருவிட்டான். ரெண்டாவது ஒருத்தன் வந்து, கல்லு வூடு போட்டு கில்நெட்டுன்னு ஆசயத் தூண்டிவுட்டான். நம்மாளுங்களுக்கு சும்மா வந்தா கசக்குமா... அவன் கடல கறுப்பா ஆக்கிட்டான். இப்போ ஒருத்தன் வந்திருக்குறான்...” மோர் வந்தது. எடுத்துக்கொண்டோம். ``இப்பவாவது நின்னு போராட்டம் பண்ணமுன்னா, ஏதாவது நல்லது நடக்கும்ல...” வானவன் அவரது தரப்புக் கருத்தைச் சொன்னார்.
``படிப்பு வேணும் தம்பி... மொதல்ல வந்து வேல தர்றேன்... வூடு தர்றேன்னு சொன்னப்பவே... இவன் ஏன் இதெல்லாம் தரணும்னு யோசிச்சிருக் கணும். இலவசமா நமக்கு ஒருத்தன் தர்றான்னா... அவன் நம்மள விக்கப்போறதா அர்த்தம்னு இப்போ புரியுது. அப்போ புரிஞ்சு அவன கால வைக்காமப் போராடியிருந்தா... நம்ம மேல அவனுக்கு பயம் இருக்கும்” வள்ளியம்மாள் மோரைக் குடித்து வைத்தார்.
``அப்போ போராடாம இருக்க முடியுமா?” வானவன் கேட்டார்.
``எல்லா ஊர்லயும் ஏதாவது ஒரு விஷயத்துக்கு மக்கள் போராடிக்கிட்டேதான் இருக்காங்க தம்பி. நான் என் போராட்டத்தை நிறுத்தப்போறதில்ல. ஆனா, இப்போ வரானே இந்தக் கம்பெனிக்காரனை மட்டும் உட்டுட்டா... அஞ்சு வருஷத்துல சென்னையே தண்ணி இல்லாம விக்கிக்கிட்டுச் சாவவேண்டியதுதான்” வள்ளியம்மாளின் முகம் இப்போது தீவிரத்தன்மைக்குள் வந்தது.
``ஏற்கெனவே கொசஸ்தல ஆத்த சுத்தி வாழத்தகுதியில்லாத பூமியா மாத்திட்டானுங்க. இப்போ இந்தக் கம்பெனிக்காரன் கடல்லயே ஆயிரம் ஏக்கருக்கு நிலத்த அமைக்கப்போறானாம். அதுக்கு, காட்டுப்பள்ளிக் குப்பத்த காலிபண்ணி கிட்டுப் போகணுமாம். அவனே வேற இடத்துல வீடு கட்டிக் கொடுத்து... புள்ளைங்களுக்கு வேலையும் தருவானாம்.”
அப்போது வானவன் இடைமறித்து, ``இது மறுபடியும் மொதல்ல இருந்து வருதே” என்றார்.
``ஆசய காட்றதுதானே அவங்க ஆயுதமே... ஃபுட்பால் மாதிரி எங்கள சுழட்டிச் சுழட்டி அடிச்சு நாங்க பழகிட்டோம் தம்பி. இப்போ அது இல்ல விஷயம்... கடல்ல ஆயிரம் ஏக்கர் நிலம்னா... பூமியில எவ்ளோ மண்ண தோண்டி எடுப்பானுங்க... அப்படி ஏற்கெனவே தோண்டித் தோண்டி எல்லாத்தையும் சுடுகாடா ஆக்கிட்டானுங்க. இப்போ மட்டும் இந்தக் கம்பெனிக்காரன வுட்டோம்னு வையி... பூமியில இருந்து கல்லு மண்ணு மசுருன்னு கடல்ல கொட்டி... பூமிய வாழத்தகுதியில்லாம ஆக்கிடுவான். கடல சீரழிச்சு, தேசம்மா கோபத்த சுனாமியா நம்மளாண்ட காட்டும். இது எங்க பிரச்னை இல்ல தம்பி... நம்ம பிரச்னை...” வள்ளியம்மாளின் முகம் கலவரமாய் இருந்தது.
தன் நிலத்தை விட்டுத் திரும்பவும் பெயர்க்கப் போகிறார்கள் என்கிற கவலையைவிட, தன் பூமி வாழத்தகுதியில்லாமல் போய்விடக் கூடாது என நினைக்கும் இந்த ஜீவன்களால்தான் போராட்டங்கள் இன்னமும் இருக்கின்றன. இந்தப் பெருமுதலாளிகளின் பேரழிவைக்கொண்ட முன்னேற்றங்கள், ரொம்பத் தொலைவில் இல்லை. சென்னைக்கு மிக அருகில்... ஆம், மிக அருகில்!
- முற்றும்
ஓவியங்கள்: ஹாசிப்கான்